Advertisement

பிருந்தா ஏதோ கேட்க வாய் திறக்கும் முன் நந்தினி கறாரான குரலில், “சாப்பிடு பிருந்தா.. அப்பறம் பேசலாம்” என்றவள், “மாலு உனக்கும் சேர்ந்து தான் சொல்றேன்”
மாலினி, “ஹ்ம்ம்..” என்று கூறி உண்ணத் தொடங்கினாள்.
பிருந்தாவிற்கு தான் விஷயம் என்னவென்று தெரியாமல் தலை வெடித்துவிடும் போல் இருந்தது, உணவு உள்ளே இறங்கவே இல்லை. தன்னை ஒருவாறு சமாளித்துவிட்டு நிமிர்ந்த மாலினி பிருந்தாவின் இந்த அவஸ்த்தையை பார்த்து சிரித்துவிட்டாள்.
பிருந்தா கெஞ்சலாக, “இப்போ எதுக்கு டி சிரிக்கிற? இதையாது சொல்”
மாலினி சிரிப்புடன், “ஹ்ம்ம்.. நீ சாப்பிட்டதுக்கு அப்பறம் சொல்றேன்”
பிருந்தா மாலினியை முறைக்க, நந்தினி மாலினியிடம், “எப்படி டி! இபப்டி டக்குனு ரிலாக்ஸ் ஆகுற?”
மாலினி சிறு புன்னகையுடன், “அப்பா கொடுத்த ட்ரைனிங்” என்றாள்.
பிருந்தா, “ஹே இப்போ என்ன விஷயம் னு சொல்ல போறியா இல்லையா?”
மாலினி, “சொல்லலைனா என்ன மேடம் செய்றதா ஐடியா?”
“உன் முதுகுல ரெண்டு போடுவேன்”
“ரெண்டு தானே.. தாராளமா ரெண்டு னு எழுதிக்கோ”
“எப்பா.. உன் கடி தாங்கலை”
“ஓகே.. ஓகே.. விஷயத்தை சொல்றேன்….” என்று கூறி நடந்ததை சொன்னாள்.
பிருந்தா, “அது ஒரு ஜென்மம் னு நீ நின்னு வேற விளக்கம் குடுத்தியாக்கும்” என்றவள் நந்தினி பக்கம் திரும்பி, “நீ என்ன பண்ணிட்டு இருந்த? இவளை இழுத்துட்டு வரவேண்டியது தானே”   
“சரி விடு” என்று அவளை சமாதானம் செய்து உணவை முடித்துக் கொண்டு வகுப்பிற்கு சென்றனர்.
மாலையில்  அருணாசலத்திற்காக மாலினி கல்லூரி  வாசல்  அருகே இருந்த மரத்தடியில்  தனியாக நின்று காத்துக் கொண்டிருந்த போது, பின்னால் இருந்து யாரோ ‘மாலினி’ என்று அழைக்கவும் திரும்பி பார்த்தவளின் முகம் கோபத்தில் சிவந்தது.
யாரு னு யோசிக்கிறீங்க? ஸ்ரீராம் னு தானே! அது தான் இல்லை, அழைத்தது சீனியர் கிருஷ்ணன்.
கிருஷ்ணன் மாலினி அருகே வந்து, குற்ற-உணர்வில் எழும்பாத குரலில் அவள் முகத்தை பார்க்கும் துணிவின்றி தரையை பார்த்து, “அம் டெரிபிலி சாரி மாலினி..” என்றான்.
மாலினி ஆச்சரியமாக பார்த்தாள், அதே நேரத்தில் அவள் மனத்தில் ‘நடிக்கிறானோ!’ என்ற சிறு சந்தேகமும் இருந்தது.
கிருஷ்ணன், “பசங்க ஏத்திவிட்டதுல தான்.. ச்ச்.. எனிவே தப்பு தப்பு தான்.. அங்கிளுக்கு ரொம்ப தேங்க்ஸ் சொன்னேன் னு சொல்லிடு.. இனி என்னால் உனக்கு கண்டிப்பா தொந்தரவு இருக்காது.. ஒன்ஸ் அகேன்  சாரி மாலினி.. ஏதாவது உதவி தேவைபட்டால் உனக்கு விருப்பம் இருந்தால் தயங்காம கேள்” என்று கூறி மாலினியின் பதிலை எதிர் பாராமல் சென்றுவிட்டான்.
எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்தது என்று தானே யோசிக்கிறீங்க! எப்படி என்று கொஞ்சம் டார்டாயிஸ் காயில் சுத்திப் பார்ப்போம் வாங்க…………..
முன்தினம் இரவு வெற்றிவேல் மிரட்டலுக்கு பிறகு கிருஷ்ணன் வீட்டிற்கு தான் மூவரும் சென்றனர்.
அவர்கள் செல்லவும் கிருஷ்ணனின் நண்பன் ராஜீவ் எதிரே வந்தான்.
(ராஜீவ்-இரண்டாம் ஆண்டு IT மாணவன் – கல்லூரியின் முதல் நாள் பார்த்தோமே!
மாலினி ‘அண்ணன்’ என்று அழைத்து பல்பு கொடுத்தாளே!) 
கிருஷ்ணனின் தோற்றத்தை பார்த்த ராஜீவ் அவசரமாக அவன் அருகே சென்று, “டேய்.. என்னாச்சு?”
கிருஷ்ணன், “நீ எங்க இங்க?”
“உன்னை பார்க்க தான் வந்தேன். நீ இல்லைனதும் வீட்டுக்கு கிளம்புனேன்.. உனக்கு என்ன ஆச்சு?”
கிருஷ்ணன் பதில் சொல்ல முடியாமல் தலை குனிய, ராஜீவ், “கிருஷ்ணா என்ன ஆச்சு?”
“வீடுக்குள்ள போய் பேசலாம் டா”
“ஹ்ம்ம்.. சரி வா”
கிருஷ்ணன் நடந்ததை சொல்லி முடித்ததும் ராஜீவ் கோபமாக, “என்ன காரியம் பண்ணியிருக்க கிருஷ்ணா! இந்த விஷயம் உன் அப்பா அம்மாவுக்கு தெரிந்தால் எவ்வளவு வருத்தப்படுவாங்க னு யோசிச்சியா? மாலினி அப்பா போலீஸ் கம்ப்ளைன்ட் குடுத்து இருந்தால் இந்நேரம் நீ ஜெயிலில் தான் இருக்கணும்.. உன் எதிர் காலமே அவுட்.. இவன்க தான் கிறுக்குத் தனமா ஏதோ சொன்னான்க  னா உனக்கு அறிவு இல்லை?”
மற்ற இருவரும், “டேய்.. அவளை சும்மா விட சொல்றியா?”
ராஜீவ் அவர்களை முறைத்தான், பிறகு கிருஷ்ணனை பார்த்து, “கிருஷ்ணா கிளம்பு” என்றான்.
கிருஷ்ணன் அவனை பார்க்கவும், ராஜீவ், “நீ இந்த நிலமையில் தனியா இருக்க வேண்டாம். என் வீட்டிற்கு வா”
அந்த இருவரில் ஒருவன், “நாங்க தான் இருக்கோமே டா”
ராஜீவ், “அது தான் என் பயமே! கிருஷ்ணா நீ கிளம்பு” என்றவன், “இரு இரு.. முதலில் உன் காயத்திற்கு மருந்து போடுறேன்.. டெட்டால் ஆர் சவ்லான் இருக்கா?”
கிருஷ்ணன், “ஹ்ம்ம்.. அந்த ஸெல்ப்” என்று கூறி ஒரு இடத்தை காட்டினான்.
ராஜீவ் அதை எடுத்து வந்து மூவரின் காயங்களுக்கும் தடவினான். பிறகு, “கிருஷ்ணா என் பைக் இங்கேயே இருக்கட்டும்.. உன் காரிலேயே போய்டலாம்.. நான் ஓட்டுறேன்..” என்றவன் அந்த இருவர் பக்கம் திரும்பி, “உங்களை எங்கே ட்ராப் பண்ணனும்?”
ஒருவன் கோபத்துடன் “ராஜீவ் நீ பண்றது சரி இல்லை”
ராஜீவ், “எது சரி எது தப்பு னு  எனக்கு தெரியும்.. ஐயோ பாவம் னு தான்  ட்ராப் பண்றேன் னு சொன்னேன்.. ரொம்ப பேசுன எப்படியோ போ னு கிளம்பிட்டே இருப்பேன்”
மற்றொருவன், “டேய்.. ஓவரா பேசாத.. டேய் கிருஷ்ணா உனக்காக தானே நாங்க வந்தோம்.. இவன் என்னவோ பேசுறான் நீயும் அமைதியா இருக்க?” என்று கிருஷ்ணனிடம் பாய, 
கிருஷ்ணன் பதில் சொல்லும் முன் ராஜீவ், “நீங்க எதுக்காக வந்தீங்க னு எனக்கு தெரியும் டா.. கிருஷ்ணன் என்னோடு வரான். உன்னால் முடிஞ்சதை பார்த்துக்கோ போடா”
மற்றொருவன் ராஜீவ் சட்டை பிடிக்க கிருஷ்ணன், “போதும் டா.. பட்டது போதும் டா.. கிளம்புங்க”
மற்றொருவன், “கிருஷ்ணா நீ பின்னாடி பீல் பண்ணுவ”
கிருஷ்ணன் சிறு விரக்த்தியுடன்  உதட்டை சுளித்தான். அந்த இருவரும் ராஜீவை முறைத்துவிட்டு கிளம்பினார்கள்.
கிருஷ்ணன், “அதான் அவன்க கிளம்பிட்டாங்களே  நான் இங்கேயே இருந்துக்கிறேன் ராஜ்”
“டிரஸ் மாத்திட்டு வா.. கிளம்பலாம்”
கிருஷ்ணன் அப்படியே அமர்ந்திருக்கவும் ராஜீவ் அவன் அருகில் சென்று அமர்ந்து அவன் கைகளை பற்றி, “கிருஷ்ணா.. நடந்ததையே யோசிச்சிட்டு இருக்காத.. அதை விட்டு வெளியே வா.. ஏதோ கெட்ட நேரம்.. தப்பான சகவாசம்.. விடு டா..”
கிருஷ்ணன் அமைதியாகவே இருந்தான்.
ராஜீவ், “என்ன நினைக்கிற டா..”
“..”
“கிருஷ்ணா.. ஸ்பீக்  அவுட்..”
கிருஷ்ணன் கண்கள் கலங்க, “என் அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சா.. ச.. எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன் டா.. அவங்க மட்டும் போலீஸ் கம்ப்ளைன்ட் குடுத்து இருந்தா”
“தப்பை உணர்ந்துட்ட தானே.. விடு டா”
“நாளைக்கு காலேஜில் தெரிய வந்தா”
“தெரியாது”
“எப்படி சொல்ற? இவன்க சும்மா இருப்பான்களா?”
 “இந்த விஷயம் லீக் ஆச்சுனா அவன்க பெயரும் தான் வெளியே வரும் ஸோ அமைதியா தான் இருப்பான்க”
“எனக்கு அப்படி தோணலை.. அங்கேயே என்னை மாட்டிவிட்டுட்டு அவன்க எஸ்கேப் ஆக தான் ரெடியா இருந்தானுங்க”
“ஹ்ம்ம்.. பார்க்கலாம்.. மாலினி அப்பா, போலீஸ் னு இன்வால்வ் ஆகியிருக்கிறதால் அமைதியா தான் இருப்பான்க னு நினைக்கிறேன் “
“ஹ்ம்ம்.. அவன்க சொல்லும் போது கரெக்ட் னு தான் தோனுச்சு டா.. பட் இப்போ தான் எவ்ளோ பெரிய தப்பு பண்ணியிருக்கேன் னு புரிது டா.. 
மாலினி சேர்மன் கிட்ட பேசும் போது என்னை மாட்டிவிடுறது போல் கூட பேசலை டா.. ஜஸ்ட் நான் ப்ரொபோஸ் பண்ணேன் அவ ரிஜெக்ட் பண்ணா னு டிசென்ட்டா சொல்லிட்டு விட்டுட்டா டா.. குடிச்சுட்டு இவன்க பேச்சை கேட்டு.. சை..” 
“விடு கிருஷ்ணா.. அவன்க குணம் அது”
“காரில் வரும் போது கூட ஏதோ சொன்னான்க பட் போலீஸ் ஷாக்-கில் இருந்ததால் அதை கவனிக்கலை.. எப்படி டா அவன்க கிட்ட இருந்து விலகுறது னு யோசிச்சுட்டு இருந்தேன் டா.. தேங்க்ஸ் டா” என்று கூறி ராஜீவை அணைத்துக் கொண்டான் கிருஷ்ணன்.
ராஜீவ் கிருஷ்ணனின் தோளை ஆதரவாக தட்டிக் கொடுத்தான்.
எப்பொழுதும் விளையாட்டுத் தனமாக இருக்கும் ராஜீவின் மறுபக்கத்தை பார்த்த கிருஷ்ணன் அன்று தான் ராஜீவின் நட்பை முழுமையாக புரிந்து கொண்டான். 
இந்த கிருஷ்ணன் இயல்பில் நல்லவன் தான் ஆனால் தவறான சகவாசத்தால் தவறான பாதையில் செல்ல இருந்தான், ராஜீவின் நட்பு அவனை மீண்டும் நல்வழி படுத்தியது. 
ஹ்ம்ம்.. இந்த கல்லூரி பருவத்தில் நல்ல நட்பும், பெற்றோரின் கவனிப்பும் ரொம்ப முக்கியம்.. தவறான சகவாசத்தால், ஒரே ஒரு செயலால், ஒருவனின் வாழ்க்கையே மாறிவிடும் என்பதற்கு இந்த கிருஷ்ணன் ஒரு உதாரணம். 
இவனது நல்ல காலம், இவன் தப்பி விட்டான் ஆனால் இன்றும் எத்தனையோ மாணவர்கள்/மாணவிகள் தவறான சகவாசத்தால் தவறான வழியில் சென்று, நல்வழி திரும்பும் வாய்ப்பையும் தவறவிட்டுவிட்டு  பின்னாளில் வருந்துகிறார்கள். தங்களை வருத்துவதோடு தங்கள் பெற்றோர்களையும் வருத்தி, தலை குனிய செய்கிறார்கள்.
என்ன பா.. ஓவரா கருத்து சொல்லிட்டேனா! ஓகே வாங்க நாம நிகழ் காலத்திற்கு செல்வோம்…………….
சீனியர் கிருஷ்ணன் செல்லவும், அங்கே அவசரமாக வந்த கிருஷ்ணமூர்த்தி, “என்ன மாலினி.. எதுவும் பிரச்சனையா?” என்று கேட்டான்.
மாலினி முகம் திருப்ப, கிருஷ்ணமூர்த்தி, “கோபத்தை அப்பறம் காட்டிக்கலாம்.. இப்ப அவன் என்ன சொன்னான் னு சொல்லு”
மாலினி கிருஷ்ணமூர்த்தியை பார்த்தாள் .
“நான்  காரணம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டேன் னு நம்புறியா? இல்லையா?”
மாலினி உணர்ச்சியற்ற குரலில், “அவன் எதுவும் பிரச்சனை பண்ணலை.. சாரி சொன்னான்.. அவனால் இனி பிரச்சனை இருக்காது னு சொன்னான்.. என் அப்பா கிட்ட தேங்க்ஸ் சொல்ல சொன்னான்.. ஏதாவது உதவி தேவைனா கேளு னு சொல்லிட்டு போய்ட்டான்”
கிருஷ்ணமூர்த்தி சிறு யோசனையுடன் “ஹ்ம்ம்.. ஓகே.. எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாவே இரு”
“ஹ்ம்ம்..”
“எனக்கு தெரிஞ்சவரை நீ ஒருவரை கரெக்ட்-டா தான் ஜட்ஜ் பண்ணுவ.. நீ என்ன நினைக்கிற?”
“ஹ்ம்ம்.. நடந்ததுக்கு பீல் பண்றது போல் தான் தெரியுது.. குற்ற-உணர்வவில் பேசினது போல் தான் தெரிஞ்சுது.. பார்க்கலாம்”
“தேங்க்ஸ்”
“உன்னை நம்புறேன் னு சொல்லாம சொன்னதுக்கா? ஆனா என் கோபம் அப்படியே தான் இருக்குது”
கிருஷ்ணமூர்த்தி மெலிதாக புன்னகைத்தான். மாலினி முறைத்தாள்.
கிருஷ்ணமூர்த்தி, “விட்டா எரிச்சுடுவ போல.. சரி.. மார்னிங் என்ன கேட்க வந்த?”
“ஏன்? அது தெரிஞ்சு தான் முகத்தை திருப்புனியாக்கும்?”
கிருஷ்ணமூர்த்தி சிறு புன்னகையுடன், “என் காயத்தை பற்றி கேட்க தானே வந்த?”
மாலினி ஆச்சரியமாக பார்க்க, கிருஷ்ணமூர்த்தி விரிந்த புன்னகயுடன், “என்ன மேடம் சரியா சொல்லிட்டேனா?”
“அதுக்கு எதுக்கு திரும்புன?”
“தனியா கேட்டிருந்தா சொல்லியிருப்பேன்.. கிளாஸ்ஸில் அத்தனை பேர் முன்னாடி கேட்கிற! நாமோ இதுவரை பேசினது கூட இல்லை.. ஸோ…. என் காயத்தை பற்றி உனக்கு எப்படி தெரியும்? என்ன நடந்துது? என்ன நடக்குது? னு பசங்க கேட்டா? யோசிக்க வேண்டாமா?”
“ஓ “
“என்ன ஓ?”
“யோசிக்க வேண்டிய விஷயம் தான்.. சாரி”
“சரி விடு..”
“ஆனா ஒன்னு”
“என்ன?”
“இந்த விஷயத்தில் என்ன நடந்தது னு மற்றவர்களை பேச விட கூடாது தான் ஆனா பொதுவா என்ன நடக்குது னு பேசுவாங்களோ னு பயந்து போலியா இருக்க என்னால் முடியாது.. நான் நானா தான் இருப்பேன்.. நமக்குள் இருக்கும் நட்பை ஒவ்வொருத்தர் கிட்ட போய் விளக்கம் குடுக்கணும்……………”
“அவசியம் இல்லை தான்..” என்று கிருஷ்ணமூர்த்தி முடிக்கவும் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தவளின் முகம் புன்னகையில் மலர்ந்தது. அவனும் புன்னகைத்தான்.
மாலினி, “மௌனகுரு எங்க? நீ மட்டும் தனியா வர?”
“அவனும் நானும் தான் வந்துட்டு இருந்தோம்.. கிருஷ்ணனை பார்த்ததும் நான் அவசரமா வந்தேன்..” என்று கூறி திரும்பி பார்க்க, புழா இவர்கள் அருகே வந்து கொண்டிருந்தான்.
மாலினி, “ஹ்ம்ம்.. தேங்க்ஸ் சொல்ல மாட்டேன்.. இது உன் கடமை..”
“நான் கேட்கலையே!”
“கேட்டாலும் கிடைக்காது”
கிருஷ்ணமூர்த்தி புன்னகைத்தான். புழா இவர்கள் அருகே வந்திருந்தான்.
மாலினி புன்னகயுடன், “ஹாய் புழா” என்றாள் .
புழா சிறு புன்னகையுடன் , “ஹாய்”
மாலினி, “ஒழுங்கா சிரிச்சா குறைந்திர மாட்ட.. ஸோ முழுசா சிரி”
புழா மென்மையாக புன்னகைத்தான். 
மாலினி கிருஷ்ணமூர்த்தியிடம், “உன்னிடமாவது பேசுவானா?”
“நான் பத்து வார்த்தை பேசுனா ரெண்டு வார்த்தை பேசுவான்”
“கஷ்ட காலம்”
புழா கிருஷ்ணமூர்த்தியை பார்க்க, அவன் மாலினியிடம், “ஓகே மாலினி நாளைக்கு பார்க்கலாம்..”
“ஹ்ம்ம்.. ஓகே..” என்று கிளம்பியவள், “மூர்த்தி” என்று அழைத்தாள்.
இருவரும் திரும்பி பார்க்க, மாலினி, “ஆயின்மென்ட் ஒழுங்கா போடு”
கிருஷ்ணமூர்த்தி புன்னகைத்தான்.
“டேய்.. சிரிக்காத.. ஒழுங்கா போடு”
“டேய் யா”
“ஹ்ம்ம்.. அருணாவையே டேய் சொல்லுவேன்..”
“கஷ்ட காலம்”
“எனக்கு தானே! உன்னை சாமளிக்குறது தானே!”  
“நான் அப்பாவை சொன்னேன்”
“அப்பா அப்படி ஒன்றும் சொல்லமாட்டார்” என்று கூறி மாலினி அழகு காட்டினாள்.
அப்பொழுது அருணாசலம் காரில் வந்தார். 
அருணாசலம், “ஹாய் மூர்த்தி! ஹாய் புழா!”
நேற்று தன்னை ‘கிருஷ்ணா’ என்று அழைத்தவர் இன்று ‘மூர்த்தி’ என்று அழைப்பதை கவனித்த கிருஷ்ணமூர்த்தி மாலினி மேல் அவர் கொண்ட பாசத்தை மேலும் புரிந்துக் கொண்டான்.
கிருஷ்ணமூர்த்தி புன்னகையுடன், “ஹாய் பா” என்று கூறி, புழாவிடம், “மாலினி அப்பா” என்றான்.
புழா புன்னகையுடன், “ஹாய் பா” என்றான்.
மாலினி, “இன்னைக்கு புயல் தான் வரபோகுது”
மூவரும் மாலினியை யோசனையுடன் பார்க்க அவள் தந்தையை பார்த்து, “புழா ஒழுங்கா சிரிச்சுடானே! அப்போ புயல் மழை தானே வரும்”
மூவரும் சிரித்தனர்.
மாலினி, “ஐயோ! புயல் நிச்சயம்… அப்பா நாம சீக்கிரம் வீட்டுக்கு போய்டலாம்”
அருணாசலம், “பாவம்.. விட்டுரு டா”
“நீங்க சொல்றதால் இன்னைக்கு விடுறேன்”
கிருஷ்ணமூர்த்தி, “ஓகே பா.. நாங்க கிளம்புறோம்”
அருணாசலம், “ஓகே பா” என்று கூற, மாலினி, “பாய் மூர்த்தி.. பாய் மௌனகுரு” என்று கூறி காரில் ஏறினாள்.
காரில் செல்லும் போது அருணாசலம், “எப்படி டா மூர்த்திக்கு இன்னும் நிக் நேம் வைக்காம இருக்க?”
“ஷங்கருக்கு கூட தான் வைக்கலை.. பட் வைக்கணும்..”
“அதானே பார்த்தேன்”
இருவரும் புன்னகைத்தனர்.
அருணாசலம், “மோகன் வீட்டுக்கு தானே போகணும்?”
“என் செல்ல அருணா” என்று கூறி தந்தை தோளில் சாய்ந்தாள் மாலினி.
மழை தொடரும்….

Advertisement