Advertisement

அருணாசலம் வெற்றிவேல் சொன்னதை கூறினார். பிறகு கிருஷ்ணமூர்த்தியிடம் புன்னகையுடன், “வேகமும் விவேகமுமாக நல்ல சிந்திக்கிற” 
கிருஷ்ணமூர்த்தி சிறு புன்னகையுடன், “எனக்கு கூட பிறந்த அக்காவும் தங்கையும் இருக்காங்க பா” என்றான்.
“இருந்தாலும் டென்ஷனில் கரெக்ட் ஆ யோசிக்கணுமே!”
கிருஷ்ணமூர்த்தி புன்னகைத்தான்.
அருணாசலம் நண்பரிடம், “நாம போய் அவங்களின் நிலைமையை பார்த்துட்டு கூட்டிட்டு வருவோம்” என்று கூறி எழுந்தார்.
ராஜசேகர், “நாங்களும் கூட வரட்டா பா?”
அருணாசலம், “நீங்க இங்கேயே வாசலில் வெயிட் பண்ணுங்க.. நாங்க போய் காரை எடுத்துட்டு வரோம்” என்று கூறி நண்பருடன் வெளியே செல்ல கிருஷ்ணமூர்த்தியும் ராஜசேகரும் வெளியே சென்று நின்றனர்.
மோகனாவின் அன்னை மோகனா உறக்கத்தில் இருக்கிறாள் என்பதை உறுதி செய்து கொண்டு மாலினி இருந்த அறைக்கு சென்றார்.
அருணாசலமும் மோகனும் சென்ற போது, மூவரும் மயக்கம் தெளிந்திருந்த போதும் சிறு போதையில் தான் இருந்தனர்.
அவர்கள் மூவரும் பின் சீட்டில் இருக்க, அருணாசலம் ஓட்டுனர் இடத்தில் அமர, அவர் அருகில் மோகன் அமர்ந்திருந்தார்.
கிருஷ்ணன், “ஹே.. நீங்க யாரு? என்ன பண்றீங்க?”
அருணாசலம், “உங்களில் கிருஷ்ணன் யாரு?”
கிருஷ்ணனின் நண்பன் திமிராக, “முதல்ல நீ யாரு சொல்லு?”
அருணாசலம், “நான் மாலினியின் அப்பா, இப்போ போலீஸ் ஸ்டேஷனுக்கு தான் போக போறோம்” என்றதும் மூவரும் பீதியுடன் ஒருவரை ஒருவர் பார்த்தனர். அதிர்ச்சியில் போதை இறங்கியது..
மூவரும் ஒருங்கே, “சார்.. சார்.. நாங்க ஏதோ தெரியாம பண்ணிட்டோம்.. இனி மாலினி பக்கமே போக மாட்டோம்.. ப்ளீஸ் சார் எங்களை விட்டுருங்க” என்று கூற, அதை பொருட் படுத்தாமல் அருணாசலம் வண்டியை கிளப்ப, மூவரும், “சார் சார்.. ப்ளீஸ் சார்.. எங்களை விட்டுருங்க” என்று அழாத குறையாக கெஞ்ச,
அருணாசலம் காரை மோகனாவின் வீட்டு முன் நிறுத்தி, “ஹ்ம்ம்.. சத்தம் போடாம இறங்கி உள்ள வாங்க” என்று கூற, மூவரும் ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
அருணாசலம், “ஓட ட்ரை பண்ணாதீங்க.. அது உங்களுக்கு தான் பிரச்சனை” என்று மிரட்டிவிட, வேறு வழியில்லாமல் உள்ளே சென்றனர்.
ஹாலில்  மூவர் அமரும் சோபாவில் சீனியர் கிருஷ்ணனும் அவனது நண்பர்களும் பேச்சின்றி சிறு பயத்துடன் அமர்ந்திருக்க அவர்கள் எதிரில் மற்றவர்கள் அமர்ந்திருக்க ராஜசேகர் மட்டும் அவர்களை முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
கிருஷ்ணமூர்த்தியின் கைபேசி ஒலிக்க, அருணாச்சலத்திடம், “வெற்றி அண்ணா தான்” என்று உதட்டசைவில் கூறிவிட்டு, “ஹலோ” என்று பேசியபடி வெளியே செல்ல, அருணாசலம் நண்பரை ஒரு பார்வை பார்த்துவிட்டு கிருஷ்ணமூர்த்தியை தொடர்ந்தார்.
கிருஷ்ணமூர்த்தி, “கரெக்ட் தான் (அண்)ணா.. நான் வெளிய தான் வந்துட்டு இருக்கிறேன்” என்று கூறியபடி அழைப்பை துண்டித்தான்.
கிருஷ்ணமூர்த்தியும் அருணாசலமும் வெளியே செல்ல, பைக்கில் இருந்து இறங்கிய வெற்றிவேல் அருணாச்சலத்துடன் கை குலுக்கி, “ஹலோ சார்.. அம் ACP வெற்றிவேல்”
அருணாசலம், “ஹலோ.. உள்ள வாங்க சார்” என்று அழைத்து சென்றார்.
வீட்டின் வராண்டாவிற்கு சென்றதும் வெற்றிவேல், “ஒரு நிமிஷம் சார்” என்று கூறி, டக்-இன் பண்ணாமல் இருந்த சட்டையை கலட்டினார், கையில் இருந்த கவரில் இருந்து தொப்பியை எடுத்து அணிந்தார். 
[காக்கி சட்டையின் மேலேயே சாதாரண சட்டையை அணிந்திருந்தார்]
வெற்றிவேல்,“இப்ப போகலாம்”
அருணாசலம் மனதினுள் வெற்றிவேலை மிகவும் பாராட்டினார்.
வெற்றிவேலை பார்த்ததும், மூவரும் பெரிதும் அதிர்ந்தனர். வாய் திறந்து கெஞ்ச நினைத்தாலும் பயத்தில் பேச்சே வரவில்லை.
வெற்றிவேல், “நீங்க எல்லாரும் கொஞ்ச நேரம் உள்ள இருங்க” என்றதும் மற்றவர்கள் உள்ளே சென்றனர்.
வெற்றிவேல் கம்பீரமான குரலில், “என்ன டா! செய்றதை செஞ்சுட்டு திரு திரு னு முழிக்குறீங்க?”
மூவரும், “சார்” என்று சொல்ல நினைத்தாலும் வெறும் காற்று தான் வெளியே வந்தது.
வெற்றிவேல் மூவரையும் இரண்டு தட்டு தட்டி, “இந்த வயசுலேயே கடத்தல்.. உள்ள போட்டேன்……………..”
“சார் சார்.. வேணாம் சார்.. தெரியாம பண்ணிட்டோம்.. இனி இப்படி பண்ணா மாட்டோம்..”
“ஆமா.. சார்.. இனி மாலினி சிஸ்டர் பக்கமே போக மாட்டோம்”
“ப்ளீஸ் சார்.. எங்களை விட்டுருங்க சார்” என்று மூவரும் வித விதமாக கெஞ்சினர்.
“யாருடா கிருஷ்ணன்?”
“இவன் தான் சார்” என்று மற்ற இருவரும் கிருஷ்ணனை சுட்டிக் காட்ட, கிருஷ்ணன்,
“சாரி சார்.. இனி மாலினி  சிஸ்டர்  பக்கமே போக மாட்டேன்.. மாலினி என்ன பொண்ணுங்க பக்கமே போக மாட்டேன் சார்.. ப்ளீஸ் சார் என்னை விட்டுருங்க சார்”
வெற்றிவேல் கடுமையாக முகத்தை வைத்துக் கொண்டு, “உங்களுக்கு எதிரா பக்காவா எவிடன்ஸ் இருக்கே”
கிருஷ்ணன், “ப்ளீஸ் சார்.. மாலினி அப்பா கிட்ட நாங்க பேசுறோம் சார்.. ப்ளீஸ் சார்” என்று காலில் விழாத குறையாக கெஞ்சினான்.
வெற்றிவேல் அருணாச்சலத்தை அழைக்கவும், வெளியே  வந்தவர், “குற்றத்தை ஒத்துக் கொண்டு இனி மாலினி பக்கம் போக மாட்டோம் னு எழுதி தந்தா விட்டுரலாம் சார்” என்று  கறாராக  கூறவும், மூவரும் ஒருங்கே, “இப்பவே எழுதி தறோம் சார்” என்று வெற்றிவேலிடம் கூறினார்.
சொன்னபடி எழுதி மூவரும் கையெழுத்து போட்டதும், வெற்றிவேல், “இனி மாலினி பக்கம் போனீங்க………”
மூவரும், “நோ சார்.. எந்த பிரச்சனையும் பண்ண மாட்டோம்”
வெற்றிவேல், “ஹ்ம்ம்.. இனி மாலினிக்கு சின்ன பிரச்சனை வந்தாலும் முதல்ல உங்களை தான் பிடிப்பேன்.. ஜாக்கிரதை” என்று மிரட்டவும் மூவரும் மந்திரிச்சு விட்ட ஆடு போல் தலையாட்டினர்.
வெற்றிவேல், “ஹ்ம்ம்.. இப்போ கிளம்புங்க” என்று கூறவும் விட்டா போதும் என்று மூவரும் ஓடினர்.
வெற்றிவேல் ஐந்து நிமிடங்கள் பேசிவிட்டு கிளம்பினதும் அருணாசலம் அவரை வெகுவாக பாராட்டினார். இறுதியாக கிருஷ்ணமூர்த்தியிடம், “நீ சொன்னதும் உடனே வரேன் னு சொன்னாலும் என்னிடம் பேசி உறுதி பண்ணிக்கிட்டார், வேகமும் விவேகமும் நேர்மையும் நிறைந்த போலீஸ் ஆபீசர்.. வெரி நைஸ் பெர்சன்..”
கிருஷ்ணமூர்த்தி, “ஆமா பா.. அதான் அவர் கிட்ட ஹெல்ப் கேட்டேன்”
ராஜசேகர் அமைதியாகவே இருக்கவும் அருணாசலம், “என்ன சேகர்! அவங்களை மிரட்டிட்டு மட்டும் விட்டது மனசு ஒத்துக்கலையா?”
“அது வந்து பா”
அருணாசலம் புன்னகையுடன், “இந்த பருவம் முக்கியமான பருவம் பா.. நல்ல கைடன்ஸ் அண்ட் நல்ல நண்பர்கள் அமைவது முக்கியம்.. இல்லை இவனை போல் தப்பான வழில போய்டுவாங்க.. ஒரு வாய்ப்பு குடுத்து பார்க்கலாம் னு விட்டுட்டேன்.. எனக்கு தெரிந்து கிருஷ்ணனை, அவனுடன் இருந்த பசங்க தான் ஏத்தி விட்டுருக்கனும்.. அவன் மாலினியை வரம்பு மீறி பார்த்தது இல்லை, தன்மையாக தான் ப்ரொபோஸ் பண்ணான்.. பட் அவனுக்கு மாலினி மேல் காதல் இல்லை.. அது வெறும் இனக்கவர்ச்சி..  இது காலேஜ் லைப்-பில் சகஜம் தான்..
(ராஜசேகரும் கிருஷ்ணமூர்த்தியும் அவரை ஆச்சரியமாக பார்க்கவும் அவர் சிறு புன்னகையுடன்)
என் மகள் என்னிடம் எதையும் மறைத்ததில்லை.. டெய்லி ரன்னிங் கமெண்ட்ரி வந்துரும்..” என்றவர் கிருஷ்ணமூர்த்தியை பார்த்து,
“உன்னை பற்றி அதிகம் சொன்னதில்லை” என்றார்.
கிருஷ்ணமூர்த்தி, “நாங்க இதுவரை பேசினது இல்லை”
“தெரியும்.. நீ பெண்களிடம் அதிகம் பேச மாட்ட னு சொன்னா”
“அப்படிலாம் இல்லை பா.. சென்னை கேர்ல்ஸ் கொஞ்சம் அனலைஸ் பண்ணிட்டு களத்துல இறங்கலாம் னு நினைச்சேன்” என்றதும் அவர் புன்னகைத்தார்.
ராஜசேகர், “இவனை ரொம்ப நல்லவன் ரேஞ்க்கு பார்க்காதீங்க பா.. சார் பெயருக்கு ஏத்தபடி கிருஷ்ணன் தான்.. ஊரில் நிறைய மாமா பொண்ணுங்க.. எல்லாரும் இவனை தான் சுத்தி சுத்தி வருவாங்க.. அதான் சார் ரெண்டு நாள் காலேஜ் வரலை”

“என்ன கிருஷ்ணா.. மாமா பொண்ணுங்கள எதுவும் செட் ஆகியிருக்கா?”
கிருஷ்ணமூர்த்தி ஆச்சரியமும் சிறு அதிர்ச்சியுமாக அவரை பார்க்க, மோகன் புன்னகையுடன், “நீ பயப்படாத, இவன் இப்படி தான் பேசுவான்.. பொண்ணு னு பார்க்காம மாலினி கிட்டயே இப்படி தான் பேசுவான்”
“டேய் புஷ்பா இல்லாத குறையை தீர்க்கிறியாக்கும்”
ராஜசேகரும் கிருஷ்ணமூர்த்தியும் அருணாசலத்தை பார்க்க அவர், “அது ஒன்னுமில்லை பா.. நானும் மாலினியும் இப்படி பேசிகிட்டா அவ அம்மா புஷ்பா ‘பொண்ணு கிட்ட பேசுற பேச்சா’ னு முறைப்பா, அதையே தான் இவனும் சொல்றான்.. அது இருக்கட்டும்.. கிருஷ்ணா.. நீ நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு” என்று விட்ட இடத்தை பிடித்தார்.
“அப்படிலாம் ஒன்னும் இல்ல பா.. இவன் சும்மா ஓட்டுறான்.. ஊரிலிருந்து கிளம்புற அன்னைக்கு கொஞ்சம் காய்ச்சல், உடனே அம்மா ரெண்டு நாள் லீவ் போட வச்சுட்டாங்க”
அருணாசலம், “அப்பறம் சேகர் உன் லவ் எந்த லெவலில் இருக்குது? ஜெனிஷா என்ன சொல்றா?”
ராஜசேகர் சிறு கூச்சத்துடன், “அதே நிலைமையில் தான் பா இருக்கிறது” என்றான்.
மோகனாவின் அன்னை பழசாறு அருந்த கொடுத்தார். பிறகு மோகனாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, மாலினி இருந்த அறைக்கு சென்றுவிட்டார். 
ஆண்கள் நால்வரும் சிறிது நேரம் சிரித்து பேசினார்கள். 
ராஜசேகர், “சிஸ்டர் எல்லோரிடமும் முக மலர்ச்சியுடன் இயல்பா பழகுறதின் ரகசியம் இன்னைக்கு தான் பா புரியூது.. யூ ஆர் சச் அ நைஸ் பெர்சன் அண்ட் வெரி குட் பாதர் பா”
அருணாசலம் புன்னகைத்தார்,
மோகன், “புஷ்பாவிடம் என்ன சொல்லிட்டு வந்த?”
“கிருஷ்ணா போன் பண்ணதை மாலினி பண்ணியதாகவும், அவளை கூட்டிட்டு வரேன் னு சொல்லிட்டு வந்தேன்”
“புஷ்பா தேடுவா.. போன் பண்ணி பேசலையா?”
“மாலினி எந்திரிக்கட்டும் னு பார்த்தேன்..” என்றவர் சிறிது யோசித்துவிட்டு,  “சரி இப்பவே பேசிடுறேன்.. டேய் பசங்களா கொஞ்சம் கண்டுகாதீங்க” என்று கூறிவிட்டு மனைவியை அழைத்தார்.
புஷ்பா, “சொல்லுங்க”
“புஷ்.. நானும் மோகனும் பழைய கதை பேசினதில் நேரம் போய்டுச்சு.. இப்ப சாப்டுட்டு தான் போகணும் னு அமுதா சொல்றா..” என்று இழுக்கவும்,
புஷ்பா, “அதான் நீங்களும் உங்க பொண்ணும் முடிவு பண்ணிடீங்களே! அப்பறம் என்ன பெர்மிஷன் மாதிரி இழுக்குறீங்க?”
“ஹி..ஹி..ஹீ..” என்று அசடுவழியவும், புஷ்பா, “இளிச்சது போதும்.. சீக்கிரம் கிளம்பி வர வழிய பாருங்க”
“ஓகே டா” என்று கூறி அழைப்பை துண்டித்தார்.
கிருஷ்ணமூர்த்தி, “என்ன பா! கண்டுக்காதீங்க னு சொன்னதை வச்சு ஏதோ ரோமன்ஸ் தான் பண்ண போறீங்க னு பார்த்தா இப்படி ஏமாத்திடீங்களே!” 
அருணாசலம் சிரித்துக் கொண்டே, “சேகர் நீ சொன்னதை இப்போ நம்புறேன்..”
கிருஷ்ணமூர்த்தி, “என்ன பா இப்படி கவுத்துட்டீங்களே!”
அனைவரும் சிரித்தனர்.
கிருஷ்ணமூர்த்தியும் ராஜசேகரும் “கிளம்புறோம்” என்றதும் மோகன் இரவு உணவை முடித்துவிட்டு தான் கிளம்பனும் என்று அன்பு கட்டளையிட, இரவு உணவை முடித்துவிட்டு கிளம்பினார்கள்.
அவர்கள் கிளம்பும்  போது அருணாசலம், “ஒரு நாள் கண்டிப்பா வீட்டுக்கு வாங்கப்பா.. அந்த மௌனகுருவையும் அழைச்சுட்டு வாங்க”
சிறிது யோசித்த இருவரும் சிரிப்புடன், “ஓ புழாவை சொல்றீங்களா பா.. கண்டிப்பா கூட்டிட்டு வரோம்” என்றனர்.
அருணாசலம், “கிருஷ்ணா அண்ட் சேகர், ஒன்ஸ் அகேன் தேங்க்ஸ் பா.. சீனியர் கிருஷ்ணாவால் இனி பிரச்சனை வராது இருந்தாலு……………………”
இருவரும் ஒன்றாக, “நாங்க பார்த்துக்குறோம் பா.. கவலை படாதீங்க” என்று கூறி விடை பெற்றனர். 
9.20க்கு கண் விழித்த மாலினி கலவரத்துடன் அறையை சுற்றி பார்க்க, அவள் அருகில் அமர்ந்திருந்த அருணாசலம், “மாலு.. அப்பா இங்க தான் டா இருக்கிறேன்” என்றதும், “அப்பா” என்று அழைத்தபடி எழுந்தமர்ந்து தந்தையை கட்டிக் கொண்டு அழுதாள்.
அருணாசலம் மாலினியின் முதுகை வருடியபடி, “ஒன்னும் இல்லை டா..” என்று தேற்றினார்.
மாலினியின் அழுகை மெல்ல நின்றது.
“என் லிட்டில் டார்லிங் ப்ரேவ் கேர்ள் ஆச்சே! இப்படி அழ மாட்டாளே!”
“ஹ்ம்ம்.. நான் ஒன்னும் பயப்படலை.. அதிர்ச்சியில் இருந்தேன்.. உன்னை பார்த்ததும் அதிர்ச்சி மகிழ்ச்சி எல்லாம் சேர்த்து தான்.”
அருணாசலம் புன்னகைத்தார். பிறகு, “மாலினி லிஸ்ஸின்.. இதை பத்தி நினைத்து பயப்படக் கூடாது.. இனி அவன் உன் பக்கமே வரமாட்டான்.. அப்பா செய்ய வேண்டியதை செஞ்சுட்டேன்.. நீ எப்பவும் போல் தைரியமா இருக்கணும்”
“ஹ்ம்ம்”
“ஓகே டா.. சாப்டுட்டு கிளம்பலாம்”
“அப்பா அம்மாக்கு……..”
“போய் சொல்லிக்கலாம்”
“நீங்க எப்படி…………” 
“சொல்றேன் டா.. முதல்ல சாப்பிடலாம்.. “ என்று கூறி உணவை ஊட்டிவிட்டார், பிறகு மோகனாவின் பெற்றோரிடம் விடை பெற்று கிளம்பினார்கள். கிளம்பும் போது புஷ்பாவிற்கு போன் செய்து, “இப்போ தான் கிளம்புறோம்” என்று கூறினார்.
மருந்தின் வேகத்தால் மோகனா அப்பொழுதும் உறக்கத்தில் தான் இருந்தாள்.
காரில் செல்லும் போது அருணாசலம் அனைத்தையும் சொல்லி முடித்தார்.
மாலினியின் நெற்றி காயத்தை பார்த்ததும் புஷ்பா, “மாலு என்ன ஆச்சு? எபப்டி அடி பட்டது?” என்று சிறிது பதற, அருணாசலம், “மாலினி நீ போய் தூங்கு.. நான் அம்மா கிட்ட சொல்லிக்கிறேன்” என்றார்.
மாலினி, “குட் நைட் மா.. குட் நைட் பா” என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்றவள் மணியை பார்த்தாள். மணி 10.10, 
‘நாளைக்கு காலைல பேசிக்கலாம்’ என்று தனக்குத் தானே கூறிவிட்டு உறங்கினாள்.
அருணாசலம் சொன்ன அனைத்தையும் கேட்ட புஷ்பா கண்ணில் இருந்து கண்ணீர் வடிந்தது. அருணாசலம் கண்ணீரை  துடைத்தபடி, “என்ன புஷ்பா நீ.. மாலினியே தைரியமா இருக்கா.. நீ சின்ன குழந்தையாட்டும் அழுற”
“மாலினியை காலேஜ் மாத்திரலாமா?”
“அந்த பையனால இனி பிரச்சனை வராது மா.. பயப்படாத.. ஆல்சோ கிருஷ்ணாவும் சேகரும் மாலினியை பார்த்துப்பாங்க.. நீ கவலைப் படாம தூங்கு”
புஷ்பா எழுந்து மாலினியின் அறைக்கு சென்றார். உறங்கி கொண்டிருந்த மகளின் முகத்தை பார்த்தபடி, அவளது தலையை வருடியபடி நின்றார். அருணாசலம் மனைவியின் தோள்களை ஆதரவாக பற்றினார். புஷ்பாவின் கண்கள் மீண்டும் கலங்கியது. அருணாசலம் புஷ்பாவை மெல்ல வெளியே அழைத்து சென்றார்.
அருணாசலம் புஷ்பாவை பலவாறு தேற்றி உறங்க செய்தார். பிறகு மகளின் அறைக்கு சென்று ஒரு பார்வை பார்த்துவிட்டு வந்து அவரும் உறங்கினார்.
மழை தொடரும்….

Advertisement