Advertisement

சாரல் 1:

V.K பொறியியல் கல்லூரி – சேர்மன்(Chairman) அறை:

இந்த பூனையும் பால் குடிக்குமா என்ற முகபாவனையுடன் ஒரு மாணவன் நின்றுக் கொண்டிருக்க அவனை கிழி கிழி என்று கிழித்துக் கொண்டிருந்தார் சேர்மன் வீரபத்ரன். [தனது பெயரின் முதல் எழுத்தான ‘V’ மற்றும் தனது மனைவி பெயரின்(காமாட்சி) முதல் எழுத்தான ‘K’ கொண்டு ‘V.K’ என்று தனது பொறியியல் கல்லூரிக்கு பெயர் சூட்டியுள்ளார்.]

“கல்லூரியின் விதிமுறைகள் தெரியாதா?

படிக்க வரியா கூத்தடிக்க வரியா? 

கலைக் கல்லூரி மாணவன் போல் நடந்துக் கொள்ளாதே.. ஒரு தொழில்முறை கல்லூரி மாணவன் போல் நடந்துக்கொள்..

இது தான் உனக்கு கடைசி எச்சரிக்கை… இன்னொருமுறை இப்படி செய்தால் உன் பெற்றோர்களை அழைத்துவிடுவேன்.. புரிந்ததா?” என்று அவர் ஆங்கிலத்தில் திட்டிய அனைத்திற்கும் பூம்பூம் மாடு போல் தன் தலையை ஆட்டிவிட்டு வெளியே சென்றான் அந்த மாணவன்.

அப்படி என்ன தப்பு பண்ணான் என்று யோசிக்கிறீங்களா?

பெருசா ஒன்றும் இல்லைங்க, அவனுடன் படிக்கும் சக மாணவி ஒருத்தியுடன் சிரித்து பேசி விட்டானாம்! அதற்கு தான் இந்த காட்டு கத்தல்..

இப்படித் தாங்க,

‘பசங்க பொண்ணுங்க பேசிக்க கூடாது,

ராகிங் பண்ண கூடாது,

கல்லூரிக்கு கைபேசி கொண்டு வர கூடாது,

கல்லூரி 8 மணிக்கு துவங்குகிறது என்றால் மாணவர்கள் 7.45 மணிக்கே கல்லூரிக்கு வந்திருக்க வேண்டும்,

வகுப்பு நேரங்களில் வெளியே சுத்த கூடாது,

ID-Card எப்பொழுதும் அணிய வேண்டும்,

பசங்க ஷேவ் செய்து தலை முடியை ஒழுங்காக வெட்டியிருக்க வேண்டும், சட்டையை ஒழுங்காக டக்-இன் பண்ணியிருக்க வேண்டும்,

பொண்ணுங்க தலை முடியை குதிரை வால் போடவோ விரித்து விடவோ கூடாது, துப்பட்டாவை இரண்டு பக்கமும் பின் குத்தியிருக்க வேண்டும்,

பசங்க பொண்ணுங்க சாக்ஸ் போட்டு சூ அணிந்திருக்க வேண்டும்..’ என்று பல விதிமுறைகளை நியமித்திருந்தார் ‘ஹிட்லர்’ என்று அழைக்கப்படும் சேர்மன் வீரபத்ரன். இவற்றை தவறினால் ஒவ்வொரு விதமான தண்டனைகள் வழங்கப்படும். இவற்றை கண்காணிக்க சேர்மனின் நேரடி கண் பார்வையில் தனி உளவு படையே இயங்குகிறது.

இவை எல்லாவற்றையும் கூட ஓரளவுக்கு மாணவர்கள் ஏற்றுக் கொண்டனர், அதாவது மாட்டிக் கொள்ளாமல் இருக்க கற்றுக் கொண்டனர். ஆனால் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத இரண்டு விதிமுறைகள்:

* Internal -Test மதிப்பெண்கள் அறிவிப்பு பலகையில் போடப்படும், வீட்டிற்கு அனுப்ப படும், அதில் பெற்றோர் கையெழுத்து வாங்கி வர வேண்டும்.

* வண்ணத்து பூச்சிகளாய் சிறகடிக்க நினைத்த மாணவர்களின் ஆசையில் மண் விழுந்தது – “சீருடை”(Uniform) தான் அணிய வேண்டும் என்ற விதிமுறையால்.

யப்பாபாபா.. கேட்கவே நமக்கு கண்ண கெட்டுதே! இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் நிலைமையை யோசித்துப் பாருங்க!

‘ஹிட்லர்’ பற்றி பார்த்துவிட்டோம், அடுத்து, 

‘கூஜா, டம்மி பீஸ், தலையாட்டி பொம்மை, காக்கா’ என்று பலவிதமாக மாணவர்களால் அழைக்கப்படும் இந்த கல்லூரியின் பிரின்சிபால் சுவாமிநாதன் பற்றி பார்ப்போம்..

பிரின்சிபால் அறை:

“Miss.அனிதா! நான் கேட்ட விவரங்கள் என்ன ஆச்சு? நேத்தே கேட்டேனே! நீங்களே இப்படி பொறுப்பில்லாம இருந்தால் உங்களிடம் படிக்கும் மாணவர்கள் எப்படி இருப்பாங்க? மீண்டும் ஒருமுறை இப்படி செய்யாதீங்க.. இப்ப உடனே எனக்கு அந்த விவரங்கள் வேண்டும்.. போங்க போய் சீக்கிரம் எடுத்துட்டு வாங்க.. ஹ்ம்ம்.. போங்க” என்று ஆங்கிலம் கலந்த தமிழில் கத்திக் கொண்டிருந்தார்.

அந்த ஆசிரியை விட்டா போதுமென்று அறையிலிருந்து வெளியேறினார்.

சற்று நேரத்தில் இண்டர்காம் ஒலி எழுப்பியது. அழைத்தது சேர்மன். வீரபத்ரன் பேச பேச சுவாமிநாதன், தன் தலையை பலமாக ஆட்டி ஆட்டி, ‘எஸ் சார்’, ‘ஓகே சார்’ என்று மாறி மாறி பதில் கூறினார், இடையில்‘ யு ஆர் கிரேட் சார்.. நீங்க சொன்னா கரெக்ட் டா தான் சார் இருக்கும்.’ என்றும் கூறினார்.

‘பாயும் புலி’ எப்படி ‘தலையாட்டி பொம்மை, கூஜா, டம்மி பீஸ், காக்கா’ வாக மாறியது என்று பார்த்தீங்களா!

இப்படிப் பட்ட கலூரியில் படிக்க வரும் முதலாமாண்டு மாணவ செல்வங்களே(அதிலும் CSE மற்றும் IT) நமது கதையின் ஹீரோஸ், ஹீரோயின்ஸ், காமெடியன்ஸ், வில்லன்ஸ், வில்லீஸ். வாங்க போய் பார்ப்போம்……..

V.K பொறியியல் கல்லூரிக்கு சற்று தொலைவில் இருந்த மரத்தடியில் இரண்டாம் ஆண்டு மாணவன் கிருஷ்ணன் நின்று கொண்டு சாலையை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தான். 

அப்பொழுது அங்கு வந்த ராஜீவ், “டேய் மச்சான்! இங்க என்னடா பண்ணிட்டு இருக்க?”

“கண்ல பிரஷர் ஜாஸ்தியாகி சூடாகிருச்சு.. அதனால கண்ணை கூல் டோவ்ன் பண்ண சொல்லி அய்(eye) டாக்டர் சொன்னார்”

“யாருடா அந்த டாக்டர்?”

“தெரிஞ்சு என்ன பண்ணபோற?”

“அதானே! இப்ப அதை விட முக்கியமான வேலை இருக்கிறதே!” என்று புன்னகைத்தான். 

கிருஷ்ணன் கடுப்புடன், “என்ன வேலை?”

“அதே கூல் டோவ்ன் பண்ற வேலை தான்” என்று சிரித்தான். பின், “ஒரு வாரம் காலேஜ் கலர்புல்லா இருக்கும்” என்றான்.

[அது என்ன ஒரு வார கணக்குனு யோசிக்கிறீங்களா! முதலாம் ஆண்டு மாணவர்கள் முதல் வாரம் வண்ண உடைகளில் வருவார்கள். அப்பறம் சீருடை தான்]

“டேய் கிருஷ்ணா! அங்க பாருடா.. தேவதை போல் ஒருத்தி நடந்து வரா.. டக்கரா இருக்கா!”

அந்த தேவதை பேருந்திலிருந்து இறங்கும் பொழுதே பார்த்துவிட்ட கிருஷ்ணன் மனதினுள், ‘இவனும் அவளை பார்த்து தொலைக்கணுமா! என்னை விட ஸ்மார்ட்டா வேற இருந்து தொலைக்கிறான்.. சை.. இதுக்கு தான் இவனை விட்டுட்டு தனியா வந்து நின்றேன்.. இவ்வளவு நேரம் மொக்க பீஸ்ஸா வந்துதுங்க, இவன் வந்ததுக்கு அப்பறமா இப்படி ஒரு ரம்பை வரணும்’ என்று நொந்து கொண்டவன் எரிச்சலுடன், “நானும் அவளை தான் பார்த்துட்டு இருக்கிறேன்” என்றான்.

அவள் இவர்கள் அருகில் வரவும் ராஜீவ் தலை முடியை வாரிக்கொண்டு அவள் அருகில் சென்றான்.

“ஹாய்! பியூட்டி! மே ஐ நொ யுவர் ஸ்வீட் நேம்?”

அவள் முறைத்துவிட்டு நடையை தொடர, ராஜீவ் அவசரமாக, “நான் யாரோ னு பேசாம போறீங்க குட்.. நானும் இந்த காலேஜ் தான்.. 2nd இயர் IT”

இப்போதும் அவள் ஒன்றும் பேசவில்லை.

“சீனியருக்கு ஒரு ஹல்லோ சொல்லக் கூடாதா!”

“இப்ப உங்களுக்கு என்ன வேணும்?” 

அவள் பேசிவிட்ட சந்தோசத்தில், “யுவர் வாய்ஸ் இஸ் ஸோஓஓ ஸ்வீட்.. அப்படியே உங்க ஸ்வீட் நேம் சொல்லிடுங்க”

“தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க?”

“பேர் எதுக்கு கேட்பாங்க? கூப்பிட தான்” என்று புன்னகைத்தான்.

அவள் கடுமையான முகபாவனையுடன், “தேவை இல்லை” என்றாள்.

அசராமல் ராஜீவ் வழிந்தான்.

“ஓகே.. அட்லீஸ்ட் டைம்மாது சொல்லுங்க”

“ஏன் அண்ணா! உங்க வாட்ச் ஓடலையா?” 

அவள் ‘அண்ணா’ சொன்ன அதிர்ச்சியில் ராஜீவ் நிற்க, அதை பயன்படுத்திக் கொண்டு அவள் விலகி நடந்தாள்.

ராஜீவ் அருகில் வந்த கிருஷ்ணன் மனதினுள் குதுகலமடைந்தாலும் வெளியே முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு, “கடைசி வரைக்கும் உன் தங்கச்சி பேர் தெரியாம போச்சே மச்சான்!” என்றான். ராஜீவ் பல்லை கடித்துக் கொண்டு முறைத்தான்.

இவற்றை அறியாத ஒரு பெண், “மாலினி” என்று அந்த தேவதையை பார்த்து பின்னாலிருந்து கத்தினாள். இதை கேட்ட கிருஷ்ணனின் மனம் சந்தோசப்பட்டது. 

தன் பெயர் அந்த சீனியருக்கு தெரிந்து விட்டதே என்ற எரிச்சலில் மாலினி திரும்பி பார்க்காமல், நடையை வேகப் படுத்தினாள். ஆனால் அந்த பெண் விடுவதாக இல்லை, “மாலினி.. ஹே மாலினி.. நில்லுடி” என்று கத்தவும் எரிச்சலுடன் நின்றாள் மாலினி, ஆனால் திரும்பி பார்க்கவில்லை. திரும்பி பார்க்கும் அவசியம் இல்லாமலேயே அந்த குரலுக்கு சொந்தக்காரி தனது உயிர்த்தோழி ‘மோகனா’ என்று அவளுக்கு தெரியுமே!

மாலினியின் அருகே வந்த மோகனா, “ஏன்டி கூப்பிட கூப்பிட நிற்காம போற?”

“ஆமா நீ ஊருக்கே என் பெயரை பறைசாற்றி அழைப்ப அதுக்கு நான் நிற்கனுமா? உனக்கு அறிவு எப்ப தான் வருமோ! இப்படியாடி பொது இடத்தில் பெயர் சொல்லி கத்தி கூப்பிடுவாங்க?”

“ஏன்டி கோபப் படுற?” என்று வருத்தமாக கேட்டாள் மோகனா.

‘இவளை வைத்துக்கொண்டு என்ன பண்ண’ என்று தன் தலையில் ஒரு தட்டு தட்டினாள் மாலினி.

“ஏன்டி நொந்துக்கிற? நான் ஏதும் தப்பு பண்ணிட்டேனா?”

மோகனாவின் முகத்தை பார்த்ததும் மாலினியின் மனம் இளகியது ஆனால் மனதினுள், ‘ஹ்ம்ம்கும்.. இப்படியே விட்டு விட்டு தான் இவ திருந்தவே இல்லை.. காலேஜ் வந்தும் இப்படியே இருந்தா எப்படி?’ என்று நினைத்துக் கொண்டு.. 

“இப்ப தான் சீனியர் ஒருத்தன் பெயர் கேட்டு வழிஞ்சான்.. பெயர் சொல்லாம ‘அண்ணா’ னு சொல்லி ஒரு அதிர்ச்சி குடுத்துட்டு தப்பிச்சு வந்தா நீ ஊரே என் பெயரை கேட்கிற மாதிரி கத்தி கூப்புடுற” என்று கோபமாக பேசி முகத்தை திருப்பினாள் மாலினி. 

‘எப்படி வழிஞ்சான்னு கண்டு பிடிச்ச? ‘அண்ணா’ னு சொன்னா எதுக்கு அதிர்ச்சி ஆகணும்?’ என்ற கேள்விகள் மோகனாவின் மனதினுள் எழுந்தாலும் மாலினியின் கோபமே பெரிதாக பட்டது, எங்கே தன் கேள்விகளால் மாலினிக்கு அதிகம் கோபம் வந்துவிடுமோ என்ற பயத்தில் தன் சந்தேகத்தை விட்டுவிட்டு, “சாரி மாலு.. சாரி.. ப்ளீஸ்டி பேசுடி ப்ளீஸ்..” என்று கெஞ்சினாள் மோகனா. 

மோகனாவின் வாடிய முகத்தை பார்த்ததும் மாலினியின் எண்ணம் மாறியது, கோபம் பறந்தது, ஆனாலும் சிரிக்காமல் தீவிரமான குரலிலேயே பேசினாள், “சரி.. இனி இப்படி பண்ணாத”

“ஹ்ம்ம்”

“சிரியேன்டி .. அதான் பேசிட்டேன்ல” 

“கோபம் போயிடுச்சா?”

மாலினி மெல்லிய புன்னகையுடன், “ஹ்ம்ம்.. போய்டுச்சு” என்றாள். மோகனாவின் முகம் கதிரவனை கண்ட சூரியகாந்தியை போல் பிரகாசமானது.

‘என்ன ஒருகுழந்தை மனம் இவளுக்கு’ என்று எப்பொழுதும் போல் நினைத்துக் கொண்டாள் மாலினி.

[மாலினி மோகனா இருவரும் பள்ளித் தோழிகள். 

மாலினி – பால் நிறத்தில் ஒல்லியாகவும் இல்லாமல் குண்டாகவும் இல்லாமல் சரியான உடலமைப்புடன் பார்பவர்களை முதல் பார்வையிலேயே கவரும் அழகுடன் இருப்பவள். அந்த அழகின் மேல் சிறு துளி கூட கர்வம் இல்லாதவள். சொல்லபோனால் இந்த அழகால் ஏற்படும் தொந்தரவுகளால் ‘ஏன் கடவுளே என்னை அழகா படைத்த?’ என்று வருந்துபவள். புத்திக் கூர்மையுடன் இருக்கும் இவள் மென்மையானவளே, இயல்பானவர்களுடன் எளிதில் தோழியாகும் குணம் உடையவள். இவள் இருக்கும் இடத்தில் சிரிப்பிற்கு பஞ்சம் இருக்காது.

மோகனா– மாலினி அளவிற்கு அழகில்லை என்றாலும் இவளிடத்து அமைதியான தனி அழகு உண்டு. இவளது நிறம் – புது நிறத்திற்கும் பால் நிறத்திற்கும் இடையில் இருக்கும். வெகுளி பெண். ‘வெளுத்ததெல்லாம் பால்’ என்று நினைக்கும் குழைந்தை குணம் கொண்டவள். இதுநாள் வரைக்கும் மாலினியின் பாதுகாப்பில் இருந்தாள், ஆனால் இப்போதோ அது முடியாது. +2வில் சிறிது மதிப்பெண் குறைந்ததால் மோகனாவுக்கு மாலினி தேர்ந்தெடுத்த கம்ப்யூட்டர் சயின்ஸ் கிளையில் இடம் கிடைக்கவில்லை. Information Technologyயில் தான் இடம் கிடைத்திருக்கிறது]

தோழிகள் இருவரும் பேசிக்கொண்டே கல்லூரியின் உள்ளே செல்ல, அவர்களின் பின் ஒலியை எழுப்பியபடி வந்த இருசக்கர வண்டி கல்லூரியின் உள்வாசலில் இருந்த ஸ்பீட்-பிரேக்கரில் ஏறி-இறங்கியதும் சற்று தடுமாறி சரிந்தது. வண்டியுடன் சரிந்த இரு பெண்கள் எழும்ப மாலினியும் மோகனாவும் உதவினர். 

[வண்டியை ஓட்டிய பெண் – பிருந்தா, பின்னால் அமர்ந்திருந்த பெண் நந்தினி. இருவரும் பள்ளித் தோழிகள். 

பிருந்தா – மாநிறத்தில் சிறிது பருமலான உடலமைப்பை கொண்டவள். கலகலப்பான பெண். 

நந்தினி – ஒல்லியாக மாநிறத்திற்கும் கம்பியான நிறம் தான் என்றாலும் முகலச்சனத்துடன் இருப்பாள். அதிகம் பேச மாட்டாள். பசங்களிடமிருந்து எட்டடி தள்ளியே நிற்பாள். எந்த விஷயத்திலும் ‘சின்சியர் சிகாமணி’.]

நந்தினி, “ஏன்டி இப்படி ஓட்டுற?”

“நீ தானே வேகமா போக சொன்ன?”

நந்தினி முறைக்கவும், பிருந்தா, “சரி.. வேகமா போக சொல்லலை ஆனா லேட் ஆகிருச்சுன்னு திட்டுனியே!”

“ஹ்ம்ம்.. ஒழுங்கா சீக்கிரம் கிளம்பனும்”

“நான் என்ன வேணும்னா பண்றேன்” என்றதும் நந்தினி மீண்டும் முறைத்தாள்.

“ஓகே.. ஓகே.. கூல் கேர்ள்ஸ்.. நான் மாலினி.. 1st இயர் கம்ப்யூட்டர் சயின்ஸ்.. நீங்க” என்று நிலைமையை சமாளித்தாள் மாலினி.

நந்தினியை முந்திக் கொண்டு பிருந்தா மாலினியிடம் கை குலுக்கி, “ஹாய்.. நான் பிருந்தா.. நானும் 1st இயர் கம்ப்யூட்டர் சயின்ஸ்” என்று புன்னகைத்தாள்.

அமைதியாக நின்றிருந்த நந்தினியிடம், “ஏன் உங்க பிரெண்ட் பிருந்தா கூட மட்டும் தான் பேசுவீங்களா? எங்களை பிரெண்ட்டா ஏத்துக்க மாட்டீங்களா?” என்று புன்னகைத்தாள் மாலினி.

பொதுவாக பள்ளி காலத்தில் பால் நிறத்தில் இருப்பவர்களிடமிருந்து விலகலையும் ஏளன பார்வைக்குமே பழக்கப்பட்ட நந்தினிக்கு மாலினியின் சிரிப்பிலும் இயல்பான பேச்சிலும் கவரப்பட்டு தனது தாழ்வுணர்ச்சியிலிருந்து சிறிது வெளிவந்து, ஒரு சிநேக புன்னகையுடன், “அப்படிலாம் இல்லை. நான் நந்தினி.. நானும் கம்ப்யூட்டர் சயின்ஸ் தான்.. ஐ லைக் யூ வெரி மச்” என்றாள்.

மாலினி, “தங் யூ.. மீ டூ லைக் யூ போத்” என்றாள்.

மோகனா, “என்ன விட்டுட்டியே மாலு” என்று சிணுங்கினாள்.

மாலினி சிறு புன்னகையுடன், “இவ மோகனா.. என் பெஸ்ட் பிரெண்ட்…………”

மோகனா, “இரு இரு.. நானே சொல்வேன்.. (ஒரு குழந்தையின் ஆரவாரத்துடன் பேசினாள்) நான் மோகனா.. 1st இயர் Information Technology.. எனக்கும் உங்களை ரொம்ப பிடிச்சிருக்குது” என்று அழகாக சிரித்தாள்.

இந்த குழந்தை குணத்தை யாருக்கு தான் பிடிக்காது?

அப்பொழுது கல்லோரியினுள் நுழைந்த ஷங்கர் மோகனாவின் சிரிப்பிலும், பேச்சிலும் கவரப்பட்டான், அன்னையை தவிர வேறு பெண்களுடன் அதிகம் பேசி பழகிராத அவனுக்கு ஏனோ, ‘ஹாய்.. நான் ஷங்கர்.. நானும் 1st இயர் Information Technology’ என்று தன்னை மோகனாவிடம் அறிமுக படுத்திக் கொள்ள ஆசை வந்தது, இருப்பினும் அந்த மகளிர் கூட்டணியை கண்டு விலகிச் சென்றான்.

[ஷங்கர் – ஆறடி உயரத்தில் மாநிறத்தில் இருப்பவன். உயரத்திற்கு ஏற்ற எடையில் சூட்டிகையாக இருப்பவன். ஆண்கள் பள்ளியில் படித்ததாலோ என்னமோ பெண்களிடம் அதிகம் பேச மாட்டான்.]

பிருந்தா வண்டியை நிறுத்திவிட்டு வந்ததும் அவர்கள் நால்வரும் உள்ளே சென்றனர்.

நெஞ்சில் பல கனவுகளுடனும் லட்சியத்துடனும் கல்லோரியினுள் நுழைந்தான் கிருஷ்ணமூர்த்தி. அதே நேரத்தில் எந்த ஒரு லட்சியமும் இல்லாமல் தனது மிதிவண்டியில் நுழைந்தான் ஸ்ரீராமன்.

[கிருஷ்ணமூர்த்தி – கிராமத்தில் இருந்து வருபவன். ஆறடிக்கு சற்று குறைவாக மாநிறத்திற்கு சற்று அதிகமான நிறத்தில், உயரத்திற்கு ஏற்ற இடையில் கம்பீரமான தோற்றத்தில் இருப்பவன். புத்திக் கூர்மை அதிகம் உடையவன். பாடத்தில் தன் சந்தேகத்தின் மூலம் ஆசிரியர்களை திணறடிப்பவன்.  கிராமத்து மைந்தனுக்கே உரிய பாசமும், தைரியமும் உடையவன். ‘தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்’ என்று வாதிடும் குணமும் கொண்டவன், அதனாலேயே இவனுடன் பழகும் நண்பர்கள் இவனை சமாளிக்க திணறுவார்கள், இவனுக்கு அஞ்சுவார்கள்.

ஸ்ரீராமன் – ‘கிருஷ்ணன்’ என்று பெயர் வைத்திருக்க வேண்டும், தவறாக ‘ஸ்ரீராமன்’ என்று வைத்து விட்டார் இவனது தந்தை. ஒருவேளை பெயரிலாது ‘ஸ்ரீராமன்’ வரட்டுமே என்று வைத்தாரோ என்னவோ! ஆனால் ஒன்று! – ஆறடிக்கு சற்று அதிகமான உயரத்தில் கோதுமை நிறத்தில் பார்க்க நன்றாக இருந்தாலும், இவன் என்ன தான் கிருஷ்ண-லீலை புரிய நினைத்தாலும் இறுதியில் ‘பல்பு’ வாங்கிவிடுவான். பெரிதாக எந்த ஒரு குறிக்கோளும் கிடையாது. B.E படித்தால் மதிப்பு கூடும் என்ற எண்ணத்தில் படிக்க வந்திருப்பவன். ‘தான்’, ‘தனக்கு’, ‘பிரச்சனை என்று வந்தால் தான் மட்டும் தப்பித்தால் போதும்’ என்ற சுயநலம் பெரிதும் உடையவன்.]

கிருஷ்ணமூர்த்தி பின் ஸ்ரீராமன் செல்ல, இவர்கள் பின் வந்த ஒரு மாணவன், “எக்ஸ்கியுஸ் மீ.. 1st இயர் கம்ப்யூட்டர் சயின்ஸ் கிளாஸ் எங்க னு தெரியுமா?” என்று தயக்கத்துடன் வினவினான்.

கிருஷ்ணமூர்த்தி, “நானும் 1st இயர் கம்ப்யூட்டர் சயின்ஸ் தான்.. வாங்க சேர்ந்தே தேடலாம்” என்று கூற, 

ஸ்ரீராமன், “வெல்.. மீ டூ சர்ச்சிங் தட் ஒன்லி யா”(இரு மாணவிகள் செல்வதை பார்த்து ஆங்கிலத்தில் பீட்டர் விட தொடங்கினான்)

ஆனால் அந்த மாணவிகளில் ஒருத்தி, “நேத்து சாப்பிட்ட பிஸ்ஸா ல வெஜிடபில்ஸ் வேகவே இல்லைலடி” என்று கூறி சென்றாள். 

கிருஷ்ணமூர்த்தியும் புதிய மாணவனும் தங்களுக்குள் நகைத்துக் கொண்டனர். ஸ்ரீராமன் அசடு வழிந்தான்.

கிருஷ்ணமூர்த்தி புதிய மாணவனுடன் கை குலுக்கி, “நான் கிருஷ்ணமூர்த்தி.. என் ஊர் திருநெல்வேலி பக்கத்துல ‘திசையன்விளை’ என்ற கிராமம்.”

“என் ஊர் திருநெல்வேலி.. பெயர் புழமுத்து குமாரசுவாமி” என்றதும், 

ஸ்ரீராமன், “என்னது! புழு.. முத்தம்.. என்ன சொன்ன?” என்று சிரித்தான்.

ஸ்ரீராமனின் செய்கையில் கிருஷ்ணமூர்த்தி கோபமடைய பெயருக்கு சொந்தகாரனோ, “புழ முத்து குமார சுவாமி” என்று அமைதியாக தெளிவாக கூறினான்.

[புழமுத்து குமாரசுவாமி – மாநிறத்திற்கு சற்று அதிகமான நிறத்தில் ஐந்தேமுக்கால் உயரத்தில் ஆணழகுடன் இருப்பவன். அமைதியானவன், பெண்களிடம் மட்டுமில்லை ஆண்களுடனும் அதிகம் பேச மாட்டான். ‘பெண்ணாய் பிறந்திருக்க வேண்டியவன் தப்பா ஆணா பிறந்துட்டான்’ என்று நண்பர்கள் கூறுமளவிற்கு அமைதியாகவும் அடக்கமாகவும் இருப்பவன்]

கிருஷ்ணமூர்த்தி, “அழகிய தமிழ் பெயர் உங்களது” என்று புன்னகைத்தான்.

புழமுத்து குமாரசுவாமியும் சிநேகமாக சிரித்தான்.

தனது பள்ளி தோழன் ஒருவன் வரவும் ஸ்ரீராமன் இவர்களிடமிருந்து விலகி சென்றான்.

கிருஷ்ணமூர்த்தி, “உங்க பெயர் அழகா இருந்தாலும் கொஞ்சம் பெருசா இருக்குது ஸோ நான் அதை சுருக்கி ‘புழா’ னு கூப்பிடலாமா?”

புழமுத்து குமாரசுவாமி ஒரு சிநேக புன்னகையுடனும் தலை அசைப்புடன் அதை அங்கீகரித்தான்.

கிருஷ்ணமூர்த்தி, “உங்களை பார்த்ததும் என்னவோ ரொம்ப நாள் பழகிய தோழனை போல் தோன்றுகிறது.. புது இடத்தில் ஒரே ஊர் என்பதாலோ என்னமோ!”

“எனக்கும் தான்”

“ஒரே ஊரு.. ஒரே கிளாஸ்.. ஒருமையிலேயே பேசலாமே!”

புழமுத்து குமாரசுவாமியிடமிருந்து ஒப்புதலாக அதே சிநேக புன்னகையும் தலை ஆட்டலும்.

“நான் இப்போதைக்கு சொந்தகாரங்க வீட்டில் இருக்கிறேன்.. இனி தான் ரூம் பார்க்கணும்.. நீ?”

“நானும் தான்”

“ரெண்டே வார்த்தை தான் பேசுவியா?”

“கிளாஸ் எங்க னு பெருசா பேசுனேனே!”

கிருஷ்ணமூர்த்தி, “எப்பா எவ்வளோஓஓஓ பெரிய வாக்கியம் பேசின.. மறந்துட்டேனே!” என்று புன்னகைக்க, புழமுத்து குமாரசுவாமி மென்மையாக சிரித்தான்.

பேசியபடியே இருவரும் வகுப்பிற்கு வந்தனர்.

மாலினி பெண்களுக்குரிய அணிவரிசையில் முதல் வரிசையில் அமர போக, பிருந்தா, “ஏய்! 1st ரோ வேண்டாம்.. 2nd ரோவில் உட்காரலாம்” என்றாள்.

“எனக்கு 1st ரோவில் உட்கார்ந்து தான் பழக்கம்”

“இந்த பழக்கத்தை மாற்றுவது ஒன்னும் கொலை குற்றம் இல்லை”

“ஏன் நீ மாத்துனா என்ன?”

பிருந்தா நந்தினியை சுட்டிக் காட்டி, “நீ இந்த அமைதி சுரபி போல் சின்சியரா கிளாஸ் கவனிப்ப.. நான் அப்படியா! எனக்கு கொஞ்சமெ கொஞ்சம் கிளாஸ் கவனிக்கணும், கொஞ்சம் தூங்கனும், கொஞ்சம் கமெண்ட் அடிக்கணும், கொஞ்சம் வாயில் எதையாது அரைக்கணும்.. அதனால் 1st ரோ ஒத்து வராது.”

மாலினி புன்னகையுடன் இரண்டாவது வரிசையில் அமர்ந்தாள். நந்தினி தலையில் அடித்துக் கொண்டாலும் அவர்களுடன் இரண்டாவது வரிசையில் அமர்ந்தாள்.  மாலினி வெளிப்பக்கம் அமர, நந்தினி இரண்டாவது அமர, பிருந்தா மூன்றவதாக அமர்ந்தாள். 

இந்த உரையாடலை கேட்டபடியே கிருஷ்ணமூர்த்தியும் புழாவும் சிறு புன்னகையுடன் ஆண்கள் அணிவரிசையில் இரண்டாவது வரிசையில் அமர்ந்தனர். கிருஷ்ணமூர்த்தி வெளிப்பக்கம் அமர புழா இரண்டாவதாக அமர்ந்தான்.

மாலினியின் அழகை ரசித்தபடியே உள்ளே வந்த ஸ்ரீராமன் மூன்றாவது வரிசையில் வெளிப்பக்கம் அமர்ந்தவன், ‘எப்படி! என்னனு இவ கிட்ட பேச ஆராம்பிக்கிறது’ என்று யோசிக்க ஆரம்பித்தான்.

அப்போது மாலினி தண்ணீர் அருந்தவும், ஸ்ரீராமன் மூலையில் மணி அடித்தது. அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு, “எக்ஸ்கியுஸ் மீ.. குடிக்க தண்ணி கொஞ்சம் தர முடியுமா?” என்று கேட்டான்.

திரும்பி பார்த்த மாலினி தண்ணீரை குடுத்தாள். அதை பருகிய ஸ்ரீராமன் அமிர்தத்தை பருகியதை போல் உணர்ந்தான்.

“தேங்க்ஸ்” என்று கூறி பாட்டிலை திருப்பி குடுத்தான். மாலினி ஏதும் பேசாமல் வாங்கிக் கொண்டாள்.

ஸ்ரீராமனுடன் ஏதும் பேசாமல் அதே நேரத்தில் தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் (ஸ்ரீராமன் பொய்யாக கேட்டாலும் அவளை பொறுத்த வரை தாகத்திற்கு தண்ணீர் கொடுத்தாள்) என்ற நல்ல எண்ணம் கொண்ட மாலினியின் மேல் கிருஷ்ணமூர்த்திக்கும் புழாவிற்கும் நல்ல அபிப்ராயம் பிறந்தது.

‘ச.. பேசலையே! பேசுனா பெயரை தெரிந்துக்கலாம் னு நினைத்தேன்.. ச.. சரி.. அடுத்து என்ன பேசுறது!’ என்று யோசித்துக் கொண்டிருந்தான் ஸ்ரீராமன்.

மாலினி ஏதோ யோசனையில் இருப்பதை பார்த்த பிருந்தா மாலியின் முகத்திற்கு முன் சொடக்கு போட்டு, “என்ன யோசனை?” என்று வினவினாள்.

மாலினி சிறு புன்னகையுடன், “மோகனா என்ன பண்றாளோ னு யோச்சிட்டு இருந்தேன்.. புது இடம்.. என்ன பண்றாளோ?”

பிரிந்தா, “ஏன் உனக்கும் புது இடம் தானே.. நீ எங்க கூட செட் ஆகல.. அதை போல் அவளும் யாருடனும் செட் ஆகியிருப்பாள்”

“ச்ச்.. உனக்கு அவளை பற்றி தெரியாது பிருந்தா.. அவ ஒரு குழந்தை.. தப்பான சகவாசதுல மாட்டிக்கக் கூடாது”

மாலினியின் பேச்சை கேட்க காதை தீட்டி கவனித்துக் கொண்டிருந்த ஸ்ரீராமன் மனதிற்குள் ‘இவ சொன்னது போல் அந்த பிருந்தா இவ பெயரை சொல்லிருக்க கூடாதா!’ என்ற அவனது கவலையை போக்கினாள் மோகனா.

வகுப்பு வாசலில் இருந்து, “ஹே மாலினி.. நானும் உன் கிளாஸ் தான்” என்று மானை போல் துள்ளி குதித்து ஓடி வந்தாள் மோகனா.

மோகனாவின் குரலை கேட்டு மகிழ்ந்த மாலினி அவளது செய்கையில் சிறு கோபம் கொண்டு மோகனாவிடம் பேசாமல் அமைதியாக அவளை முறைத்தாள்.

மாலினியின் அருகே வந்த மோகனா, “ஏன் மாலினி ஒன்னும் பேச மாட்டிக்கிற? எனக்கு எவளோ சந்தோசமா இருக்குது தெரியுமா! பேசுடி” என்றாள்.

ஸ்ரீராமனின் உதடுகள் ‘மாலினி.. நல்ல பெயர்’ என்று முணுமுணுத்தது. மனதினுள் மோகனாவிற்கு நன்றி கூறினான். 

ஸ்ரீராமன் மாலினியின் உரையாடலை ஆவலுடன் கேட்க, மோகனா பின் வந்த ஷங்கர் மோகனாவின் செயல்களை ஆர்வமாக கவனித்துக் கொண்டிருந்தான்.

கிருஷ்ணமூர்த்தியும் புழாவும் இவர்கள் பேச்சை ஆர்வத்துடன் கேட்கவில்லை என்றாலும் அமைதியான வகுப்பில் இவர்களின் பேச்சு தெளிவாக கேட்டது அவர்களுக்கு.

பிருந்தா, “ஏன் மாலினி பேச மாட்டிக்கிற.. இவ்ளோ நேரம் இவளை பற்றி தானே கவலை பட்டுட்டு இருந்த?”

மாலினி, “உனக்கு தெரியாது.. நீ சும்மா இரு” என்று கூறி மோகனாவை முறைத்தாள். மோகனாவின் முகம் வாடியது, அதை பொருட்படுத்தாமல் முறைத்துக் கொண்டிருந்தாள் மாலினி.

சிறிது யோசித்த மோகனா, “காலைல நீ சொன்னத மறந்து இப்போ உன் பெயரை சத்தமா சொல்லிட்டேன்.. அதுக்கா கோபமா இருக்க மாலு? சாரி டி.. இனி கண்டிப்பா இப்படி செய்ய மாட்டேன்..”

மாலினி, “நீ அதை மட்டுமா செஞ்ச? எத்தனை முறை தான் உனக்கு சொல்றது! நீ இன்னும் சின்ன குழந்தையா? இப்படியா எல்லார் முன்னாடியும் குத்திச்சு வருவ?”

மோகனா வகுப்பை சுற்றி பார்த்தாள். வாசல் அருகே நின்று கொண்டிருந்த ஷங்கர் சிறிது புன்னகைத்தான். ஏற்கனவே மாடியில் இருந்த வகுப்பறையில் பார்த்த நினைவில் இவளும் புன்னகைத்தாள். அதை கவனித்த மாலினி, ‘இவள என்ன தான் செய்றது.. இப்படியா ஒருத்தன் சிரிச்சதும் சிரிப்பா.. எப்படி புரிய வைக்குறது இவளுக்கு?’ என்று மனதினுள் புலம்பினாள்.

அதே புன்னகையுடன் மோகனா மாலினியை பார்க்க அவளோ கோபமாக முறைத்தாள். மோகனாவின் சிரிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்தது.

“ஏன்டி கோபப் படுற! இனி இப்படி குதிக்க மாட்டேன்.. சாரிடி.. ப்ளீஸ் பேசு மாலு” என்று கெஞ்சிய மோகனாவின் கண்கள் சிறிது கலங்கியது.

மோகனாவின் கலங்கிய கண்களை பார்த்த ஷங்கருக்கு எங்கிருந்து தைரியம் வந்ததோ! சிறு கோபத்துடன் மாலினியிடம், “ஏங்க இப்படி கோபப் படுறீங்க? பாவம் உங்க பிரெண்ட்.. குழந்தையின் ஆரவாரத்துடன் இருந்தவங்களை இப்படி அழ வச்சிட்டீங்களே! நீங்க சொல்றதை கொஞ்சம் சிரிச்ச முகமா அன்பா சொல்லலாமே!” என்றான்.

[இதற்கு எதற்கு தைரியம் வரணும் என்று யோசிக்கிறீங்களா! பெண்களுடன் பேசுவதையே தவிர்க்கும் ஷங்கர் மாலினியுடன் முதல் முறை பேசும் எண்ணமே இல்லாமல் இவ்வளவு நீளமா கோபமா அதுவும் ஒரு பெண்ணிற்காக பேசிவிட்டானே! இதற்கு கண்டிப்பா தைரியம் தேவை தானே!]

ஷங்கர் என்னவோ மோகனாவை காப்பாற்றும் எண்ணத்தில் பேசிவிட்டான் ஆனால் மோகனாவின் நிலைமை தான் திண்டாட்டத்தில் இருந்தது. ‘தனக்காக பேசும் புது நபருக்காக பேசுவதா கோபமாக இருக்கும் தன் தோழியை சமாதான படுத்துவதா’ என்று ஒன்றும் புரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள்.

ஏற்கனவே ஷங்கரின் சிரிப்பிற்கு மோகனா சிரித்ததில் எரிச்சல் அடைந்த மாலினியின் கோபம் ஷங்கர் மீது திரும்பியது, “ஹலோ மிஸ்டர்.. இது எனக்கும் என் தோழிக்கும் இடையே நடக்கும் விஷயம்.. இதில் நீங்கள் தலையிட தேவை இல்லை”

“நான்….” என்று ஷங்கர் ஏதோ சொல்ல தொடங்கவும், ஸ்ரீராமன், “அதானே! நீ ஏன் இதில் தலையிடுற?” என்றான். 

தன் செய்கையால் மாலினியின் பாராட்டு கிடைக்கும் என்று எதிர் பார்த்த ஸ்ரீராமனுக்கு ஏமாற்றமே!

மாலினி இப்போது ஸ்ரீராமனிடம், “நீங்க மட்டும் இதில் தலையிட யார்? எனக்கும் என் தோழிக்கும் இடையே வரும் இவர் 3rd பெர்சன் என்றால் இவருக்கும் எனக்கும் இடையே வரும் உங்களை என்னவென்று சொல்வது?”

ஸ்ரீராமன் என்ன சொல்வதென்று தெரியாமல் அசடு வழிந்தான். மூக்கறுபட்டு சோகமாக தன் இடத்திற்கு சென்று அமர்ந்தான். 

கிருஷ்ணமூர்த்தி மற்றும் புழா மனதில் மாலினி மீதான மதிப்பு கூடியது. 

மாலினி ஷங்கரை முறைத்துக் கொண்டு நிற்க, ஷங்கர், “சாரி.. நான் உங்களுக்கும் உங்கள் தோழிக்கும் இடையே வரவில்லை.. உங்கள் தோழியின் கண் கலங்கியதை பார்க்க முடியாமல் என் மனதில் பட்டதை கூறினேன்.. தட்ஸ் ஆல்” என்று தோளை குலுக்கினான்.

“நீ…………”

“நீங்கள் யார் என் தோழியின் கண் கலங்குவதை கண்டு வருந்த? னு தானே கேட்க போறீங்க.. அம்மா தாயே தெரியாமல் பேசிவிட்டேன் மன்னித்து விட்டுங்க..” என்று கைகளை தலைக்கு மேல் தூக்கி வணங்கினான்.

‘இதுக்கு தான் நான் பெண்களிடமே பேசுவதில்லை.. இன்னைக்கு என்ன ஆட்சோ எனக்கு!’ என்று முணங்கி தன் பின்தலையில் ஒரு தட்டு தட்டி இடத்தை விட்டு அகன்றவன் புழா அருகே அமர்ந்தான்.

‘பெருசா சப்போர்ட் பண்ண வந்துட்டான்.. இவன் பெண்களிடமே பேச மாட்டானாம்! இதை நான் நம்பனுமா! இவன் போதாதுன்னு இன்னொருத்தன் வேற வக்காலத்துக்கு வரான். பொண்ணுங்களுக்கே தங்கள் பிரச்னையை சமாளிக்க தெரியாதா என்ன! இவன்க எதுக்கு வரான்க.. ச்ச்.. காலைல இருந்தே எனக்கு நேரம் சரியில்லை’ என்று மனதினுள் கூறி அலுத்துக் கொண்டாள் மாலினி.

ஷங்கரின் செய்கையில் பிருந்தா சிரித்துக் கொண்டிருக்க, மாலினி, “என்னடி இளிப்பு உனக்கு?” என்று பொரிந்தாள். பிருந்தாவியன் சிரிப்பு அதிகரித்தது. 

“கூல்… மாலினி.. கூல்” என்ற நந்தினியின் பேச்சில் இளகாத மாலினி, “ப்ளீஸ் மாலு.. ப்ளீஸ்.. சிரிடி.. கோபப் படாத.. நீ சிரிச்சா இன்னும் அழகா இருப்ப.. எங்க சிரி பார்ப்போம் சிரி.. நான் சொல்லி தறவா.. ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ ” என்ற மோகனாவின் செய்கையிலும் பேச்சிலும் சிரித்தாள் மாலினி.

மோகனா,“ஐ.. மாலு சிரிச்சுடா.. ஐ” என்று கைதட்டினாள்.

‘இவளை திருத்த முடியாது’ என்று நினைத்துக் கொண்ட மாலினி செல்லமாக மோகனாவை இரண்டு தட்டு தட்டினாள். மோகனாவின் சிரிப்பை பார்த்த ஷங்கர் தன் எரிச்சல் மறந்து புன்னகைத்தான்.

மோகனாவிற்கு மனதில் புது பிரச்சனை தோன்றியது, முகம் சுருங்கியது. அதை கண்ட மாலினி, “என்னடி ஆச்சு?” என்று வினவ, மோகனா சோகமாக, “நான் எங்க உட்கார?” என்று வினவினாள்.

பிருந்தா, “இத்தனை ஷேர்(Chair) இருக்கே! இதுவா உன் பிரச்சனை?” என்று வினவ, மோகனாவின் மனதை நன்றாக புரிந்துக் கொள்ளும் மாலினி, “பிருந்தா நீ கொஞ்சம் அடுத்த ஷேரில் உட்காரேன் ப்ளீஸ்.. நந்தினி நீயும் ப்ளீஸ்” என்றாள்.

மறுபேச்சின்றி பிருந்தாவும் நந்தினியும் நகர்ந்து அமர மாலினியும் நகர்ந்து அமர்ந்து வெளிப்பக்க நாற்காலியில் மோகனாவை அமர செய்தாள்.

மோகனா மாலினியை கட்டிக் கொண்டு “தங் யூ மாலு” என்றாள். மாலினி புன்னகைத்தாள். பின் பிருந்தாவிடவும் நந்தினியிடமும் நன்றி கூற, அவர்கள் புன்னகைத்தார்கள். தங்களையும் ஒதுக்காமல் தன் பள்ளி தோழியின் மனமும் வாடாமல் செயல் பட்ட மாலினியின் இந்த செயல் நந்தினிக்கு மிகவும் பிடித்தது.

மாலினியின் செயலில் மற்றொரு உள்ளமும் மகிழ்ந்தது. நான் சொல்லாமலேயே அது ஷங்கரின் உள்ளமென்று உங்களுக்கே தெரியும். முதலில் மோகனாவிற்கு நன்றி சொல்லிய ஸ்ரீராமன் மாலினியின் முகத்தை சரியாக பார்க்க முடியாததினால் இப்பொழுது மோகனாவை திட்டி தீர்த்தான்.

ஷங்கர் தன்னை கிருஷ்ணமூர்த்தி மற்றும் புழாவிடம் அறிமுக படுத்திக் கொண்டான். அவர்கள் நண்பர்களானர்.

பிருந்தா, “எப்படி மோகனா நீ எங்க கிளாஸ் வந்த?”

“படி வழியா தான்.. ஏன் கேட்கிற?”

பிருந்தா, “அம்மா பரதேவதையே இருந்தாலும் நீ இவ்வளவு குழந்தையா இருக்க கூடாதுமா.. பிற்காலத்தில் யார் கஷ்டப் பட போறானோ?”

“ஏன் கஷ்ட படனும்? யார் கஷ்ட படனும்?” என்று மீண்டும் தனது குழந்தைத்தனத்தை நிருபித்தாள் மோகனா.

பிருந்தா, நந்தினி, மாலினி சிரிக்கவும், மோகனா, “ஏன்டி சிரிக்கிறீங்க? இவ என்ன சொல்றா மாலு?” என்று சிணுங்கவும், 

மாலினி சிரிப்பை அடக்கிக் கொண்டு, “அது ஒன்னுமில்லை.. நீ IT கிளாஸ்ஸில் தானே இருக்கணும்.. எப்படி இங்க வந்த?”

“ஓ.. அதுவா. திடீர்னு ஒரு மேடம் வந்து நீங்க CSE கிளாஸ் ஜாயின் பண்ணிக்கோங்க னு சொல்லிட்டு போய்ட்டாங்க.. அதான் நாங்க இங்க வந்தோம்”

பிருந்தா, “நாங்களா.. ஓ உனக்கு சப்போர்ட் பண்ண அந்த ஹீரோ வா?”

மாலினி, “பிருந்தா.. சும்மா இரு” என்று அதட்ட,

பிருந்தா கிண்டல் செய்ததை புரியாத மோகனா, “சப்போர்ட் பண்ணா ஹீரோ வா! அப்போ மாலினிக்கு சப்போர்ட் பண்ண அந்த பையனும் ஹீரோ தானா?” என்று வினவ,

 

மாலினி, “உளறாத மோகனா” என்று கடுமையாக கூறினாள். 

நல்லவேளையாக மோகனாவின் இந்த உரையாடலை ஸ்ரீராமன் கேட்கவில்லை.

மோகனா, “இவ தானே சொன்னா.. என்ன ஏன் திட்டுற.. இன்னைக்கு நீ என்ன திட்டிட்டே இருக்க மாலு.. உன் பேச்சு கா..” என்று முகத்தை திருப்பினாள். 

பிருந்தாவை முறைத்த மாலினி, “இவ தான் உளறினால் நீயும் அப்படியே பேசலாமா மோனி! இனி அப்படி பேசாத.. அது தப்பு.. கிளாஸ்மேட்ஸ் யாரையும் ஹீரோ னு சொல்ல கூடாது. ஓகே!”

மோகனா புன்னகையுடன், “ஓகே” என்று தலையை அழகாக ஆட்டினாள்.

“நல்ல பிரெண்ட்ஸ்” என்று நந்தினி கூற, பிருந்தா மோகனாவிற்கு திருஷ்டிகழித்து, “ஸோஓஓ நைஸ்” என்றாள். மோகனா ஏதோ பதக்கம் பெற்றதை போல் புன்னகைத்தாள். 

அதன் பின் வகுப்பிற்குள் மற்ற மாணவர்களும் வந்தனர். அவரவர் கூட்டணியுடன் பேசிக்கொண்டிருந்தனர். பெண்கள் அணிவரிசையில் முதல் வரிசையில் CSE சேர்ந்த தாரிகா மற்றும் அவளது பள்ளி தோழிகள் அமர, ஆண்கள் அணிவரிசையில் முதல் வரிசையில் CSE சேர்ந்த சக்திவேல் மற்றும் அனீஸ் அமர்ந்தனர்.

[தாரிகா – சிறிது தலைகனம் கொண்டவள். பார்க்க அழகாக இல்லை என்றாலும் மோசமாகவும் இருக்கமாட்டாள். சுமாராக இருப்பாள் என்று வைத்துக் கொள்வோமே! நான்றாக படிப்பாள். அவளுக்கென்று மூன்று தோழிகள், அந்த கூட்டத்திற்கு அவள் தான் தலைவி.

சக்திவேல் – பால் நிறத்தில் குண்டான உடலமைப்பில் இருப்பவன். படிப்பு – எப்பொழுதும் பார்டர்-லைன்

அனீஸ் – ஐந்தடியில் ஒல்லியாக மாநிறத்திற்கும் கம்மியான நிறத்தில் இருப்பவன். படிப்பு – ‘மதில் மேல் பூனை’ என்ற நிலை.. அதாவது அவன் எப்பொழுது தேர்ச்சி பெறுவான்  எப்பொழுது தோல்வி அடைவான் என்று அவனுக்கே தெரியாது]

இறுதியாக மாப்பிள்ளை பெஞ்சை(அதாங்க லாஸ்ட் பெஞ்ச்) சேர்ந்த சிவகுரு, செல்வராஜ் மற்றும் ராகேஷ் வந்தனர். 

[சிவகுரு – 10th படிக்கும் மாணவனை போல் இருப்பான். லொள்ளு கொஞ்சம் ஜாஸ்தி தான்.

செல்வராஜ் பால் நிறத்தில் உயரத்திற்கு ஏற்ற இடையில் ஆணழகுடன் இருப்பான். தெனாவட்டு அதிகம். சுமாராக படிப்பான்.

ராகேஷ் – பணபலம் உடையவன். இந்நேரம் B.E படித்து முடித்திருக்க வேண்டியவன், B.Sc கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து, பல அரியர்களுடன் அந்த பட்டத்தை பெறாமல், ஓராண்டு இடைவெளிக்கு பின் B.E கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க வந்திருப்பவன். பண திமிர் சிறிதும் கிடையாது, நண்பர்களுக்கு உதவும் உள்ளம் கொண்டவன், சொல்பேச்சு கேட்காத அடாவடித்தனம் கொண்டவன். தந்தைக்கு மட்டுமே அடங்குவான்.]

இன்னும் மூன்று நபர்கள் கல்லூரிக்கு இரெண்டாவது நாள் தான் வரவிருப்பதால் அவர்களை பற்றி அவர்கள் வரும் போது பார்ப்போம்.

[குறிப்பு – இன்னும் சில மாணவர்கள் இரெண்டாம் ஆண்டு வந்து சேர்வார்கள். டிப்லோமா முடிந்து வருபவர்கள் நேரடியாக இரெண்டாம் ஆண்டில் தானே சேர்வார்கள்

மாணவர்களை பற்றி பார்த்து விட்டோம், இவர்கள் கொஞ்சம் செட்டில் ஆகட்டும். நம்ம ‘டம்மி பீஸ்’ எதுக்கோ கத்திட்டு இருக்கார். இவர்கள் செட்டில் ஆவதற்குள் அது என்னவென்று போய் பார்த்துட்டு வந்துருவோம், வாங்க.. 

பிரின்சிபால் அறை:

CSE, IT, ECE, EEE துறையை சேர்ந்த H.O.D அனைவரும் கை கட்டாத குறையாக அமைதியாக நின்று கொண்டிருக்க, நம்ம கூஜா, “எப்பவே நோட்டீஸ் போர்டு மாத்த சொன்னேன்! CSE-IT ஸ்டுடென்ட்ஸ் ஒரே கிளாஸ்ஸில் இருக்கட்டும், EEE-ECE ஸ்டுடென்ட்ஸ் ஒரே கிளாஸ்ஸில் இருக்கட்டும் னு சொன்னேனா இல்லையா?

வேலை செய்ய வரீங்களா கதை பேச வரீங்களா? ஏதாவது ஒரு வேலையை ஒழுங்கா செய்றீங்களா? யாராது ஒருத்தர் ஒருத்த்த்தர் உருப்பிடியா இருக்கீங்களா? உங்களலாம் வச்சுட்டு நான் என்னத்தை கிழிக்க.. நீங்களே இப்படி இருந்தா உங்க staffs எப்படி இருப்பாங்க? மாணவர்கள் எப்படி இருப்பாங்க? போங்க இனியாது ஒழுங்கா வேலைய போய் பாருங்க” என்று கத்திகொண்டிருந்தார். 

Advertisement