Advertisement

மழைச்சாரலாய் என்னுள்ளே நீ
  அத்தியாயம்  –  12
 
நாட்கள் அதன் போக்கில் செல்ல திருமணம் நடந்து ஒன்றரை மாதம் முடிந்திருந்தது.. திடிரென திருமணம் நடந்ததால் சூர்யாவுக்கு முடிக்க வேண்டிய வேலைகள் அதிகமாக இருக்க ஸ்ரீயுடன் அதிக நேரம் செலவிட முடியவில்லை..
 
 காலை ஐந்து மணிக்கே எழுந்து கொள்பவன் வேலைநடக்கும் எல்லா இடங்களையும் பார்த்துவிட்டு மதியம் பனிரெண்டு மணிக்குத்தான் வருவான்.. ஸ்ரீயும் எவ்வளவோ முயற்சிசெய்தும் அவன் செல்வதற்குள் எழ முடியவில்லை.. அலாரம்கூட வைத்து பார்த்துவிட்டாள்.. இவள் எழும்போது தூக்க கலக்கத்தில் அலாரத்தை நிறுத்தி சோபாவுக்கு கீழ் தள்ளியிருப்பாள்..
 
மதிய நேரம் மட்டும்தான் ஸ்ரீயுடன் பேசமுடியும்.. மறுபடி தந்தை, தாத்தாவோடு செல்பவன் இரவு பத்துமணிக்கு மேல்தான் வருவான்.. அதற்குள் ஸ்ரீ தூங்கி இருப்பாள்..இவளுக்கு சுபத்ராவோடும் ப்ரியாவோடும்தான் மீதி பொழுது செல்லும்..
 
ஸ்ரீயோடு பேசிப் பழக அவனுக்கும் மனம் முழுதும் ஆசையிருந்தாலும் வேலை விசயத்தில் சூர்யா  கொஞ்சம் கெடுபிடி, சிறு தவறு நேர்ந்தாலும் அதை சரி செய்யும்வரை வேலையாட்களை வீட்டிற்கு அனுப்ப மாட்டான்..எப்போதும் கராராக இருப்பவன்.. சொன்ன நேரத்தில் வேலையை முடித்து கொடுக்க வேண்டும் என்பதில் கொஞ்சம் கடுமையாகவே இருப்பான்..பல இடங்களில் வேலை நடப்பதால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மூலையில் இருக்க போக்குவரத்து தூரமே அதிகமாக இருந்தது..
 
 அது போக தன் பழைய மரக்கடையையும் பார்க்க வேண்டியிருந்தது.. தாத்தாவும் அப்பாவும் தங்கள் அலுவலகத்திலேயே இருந்து மற்ற வேலைகளை பார்த்துக் கொள்வார்கள்.. காலை, மதியம் இருவேளையும் சுபத்ரா சாப்பாட்டை அவன் வேலை பார்க்கும் இடத்திற்கு போன் செய்து கேட்டு அனுப்பி வைத்துவிடுவார்.. இரவு உணவிற்கு வீட்டிற்கு வந்துவிடுவான்.. சாப்பிடும் நேரம்கூட இருவராலும் பார்த்துக் கொள்ள முடியவில்லை..
 
அன்று மதியம் வீட்டிற்கு வந்தவன் சோபாவில் அமர்ந்து சுபத்ராவும் ஸ்ரீயும் பேசிக் கொண்டிருக்க, தன் தாய்க்கும் மனைவிக்கும் நடுவில் அமர்ந்தவன் இருவர் தோளிலும் கைப்போட்டு, மாமியாரும் மருமகளும் என்ன பேசிட்டு இருக்கிங்க…?”
 
ஒன்னும் இல்லைடா சும்மாதான் பேசிட்டு இருக்கோம்.. ஸ்ரீ பதில் சொல்லவில்லை. அவளுக்கு சற்று கோபம்தான் இவங்க என்ன பெரிய விஐபியா பார்க்கவே காத்துகிடக்க வேண்டியிருக்கு, மதியம் வர்றாங்க அதுவும் இருபது நிமிசம், இல்லாட்டா அரைமணி நேரம் அப்புறம் ஆள் அட்ரஸே காணாம போயிருறாங்க ரொம்பத்தான் ஓவர்…!!
 
தன் மகனின் களைத்த முகத்தை பார்த்தவர் உள்ளிருந்து ஜூஸ் கொண்டு வர செல்ல, தன் மனைவியை இன்னும் அருகில் இழுத்தவன்,” என்னடி பேசாம உட்கார்ந்திருக்க…?”
 
அவள் அதற்கும் பதில் சொல்லாமல் இருக்க,” என்னடா இது இவ நம்ம பொண்டாட்டிதானா இல்லை !!வேற ஆளா எதுக்கும் டெஸ்ட் பண்ணிப்பார்ப்போம்..?” அவள் கன்னத்தில் மெதுவாக முத்தமிட்டு அவள் தோளில் கைபோட, அவனை தள்ளிவிட்டவள் சோபாவின் மறுமூலைக்கு சென்று அமர்ந்தாள்..
 
அவள் அருகில் செல்லப் போனவன் தன் தாயை பார்க்கவும் அப்படியே அமர்ந்து, அப்பத்தா எங்கம்மா இப்பல்லாம் பார்க்கவே முடியல, கமலி சிந்தியா யாரையுமே காணோம்..??”
 
டேய் போடா..!! அப்பத்தா வீட்லதான் இருக்காங்க. உன்னைத்தான் பார்க்க முடியலைன்னு அவங்க சொல்லிட்டு இருந்தாங்க. போய் பார்த்துட்டு போ..முன்ன மாதிரி அவங்களால முடியல.. ஸ்ரீ இப்பதான் அவங்களுக்கு சுகர் மாத்திரை கொடுத்திட்டு காலுக்கு மருந்து தேச்சுவிட்டுட்டு வந்தா…!! கமலியும் சிந்தியாவும் அவங்க வீட்டுக்கு போயிருக்காங்க…
 புதுசா கல்யாணம் ஆனவன் பொண்டாட்டியோட எங்கயாவது வெளியில போகாம எப்ப பார்த்தாலும் வேலை வேலைன்னு திரியுற.. ஸ்ரீயை பாரு பொழுது போகாம வீட்டை வீட்டை சுத்தி வந்திட்டு இருக்கா..!! நம்ம ப்ரியா இருந்தாலும் பரவாயில்ல அவளுக்கும் காலேஜ் ஓபன் ஆயிருச்சு…”
 
ம்மா…!! உங்களுக்கே தெரியும் இந்த ஆனிமாசம் இன்னையோட முடிய போகுது ஆடி மாசம் முடிஞ்சதும் ஆவணி முதல் முகூர்த்தில நாம முடிச்சு குடுக்கவேண்டிய ரெண்டுமூனு வீடு, ஒரு காம்பளக்ஸ், அபார்ட்மெண்ட் எல்லாம் இருக்கு அதுக்குள்ள எப்படிடா வேலைய முடிக்கிறதுன்னு நானே மண்டைய போட்டு உடைச்சிக்கிட்டு இருக்கேன்…
 
ரிசப்ஷன் வேலை கொஞ்சம் நிறைய இருந்ததால இந்த வேலையெல்லாம் தேங்கிருச்சு.. இன்னும் கொஞ்சம் பினிசிங் டச் வேலைங்க நிறைய இருக்கு.. பெயிண்டிங் வேலை, ஆசாரி வேலை வேற போய்க்கிட்டு இருக்கு.. அதான்மா இந்த ஒரு மாசம் அப்படித்தான் வேலை இருக்கும்.. அப்புறம் கொஞ்சம் ப்ரி ஆக பார்க்கிறேன்..!!”
 
என்னமோ போடா..!! அப்புறம் ஸ்ரீயோட அம்மாவும் தாத்தாவும் வந்தாங்க..”
 
ஓஓஓஓ…!!! வீட்டாளுகள பார்க்கவும்தான் இந்தம்மா மூட் அப்செட் போல தன் மனைவியை பார்க்க, அவளும் அவனை பார்த்து உதட்டை சுழித்திருந்தாள்..அவள் இதழை பார்த்தவன் அடிப்பாவி மேல வா இருக்கு உனக்கு  கண்ணாலே ஜாடை செய்ய
போய்யா..” என்று வாயசைத்திருந்தாள்..
 
இருவரும் கண்ணால் பேசிக் கொண்டிருக்க அதை கவனிக்காத சுபத்ரா, நாளைக்கு ஆடி பிறக்கிறதால ஸ்ரீயையும் சுபாவையும் நாளைக்கு ஆடிக்கு அழைச்சிட்டு போறேன் சொல்லியிருக்காங்க.. ரெண்டு பேருக்கும் தாலி பிரிச்சு கோர்த்திட்டு அவங்க குலதெய்வ கோவில்ல பொங்கல் வைக்கனுமாம் அதையும் முடிச்சிட்டு  வரலாம்னு சொல்றாங்க
நாமளும் குலதெய்வ கோவிலுக்கு போயிட்டு வரணும் சூர்யா…!!கல்யாணம் முடிஞ்சு ஒன்றரை மாசம் ஆகப்போகுது, இன்னேரம் போயிட்டு வந்திருக்கனும்..நீதான் வேலை வேலைன்னு திரியுற நீ என்ன சொல்ற சூர்யா..??”
 
பார்த்துட்டு சொல்றேன்மா.. அப்ப ஸ்ரீ நம்ம ரெண்டுபேரும் உங்க வீட்டுக்கு நாளைக்கு சாயங்காலம் போய்ட்டு நாளை மறுநாள் வந்திரலாமா…??” அவளை பார்த்து கேட்க,
 
சுபத்ரா நீ எங்கடா போற ?அவங்க தாத்தா வந்து கூட்டிட்டு போறேன்னு சொல்லியிருக்காங்க நாம தாலி பிரிச்சு கோர்க்கும் போது போனா போதும்.. ஆடி மாசம் முழுசும் ஸ்ரீ அங்கதான்..!!!”
 
என்னது அவங்க வீட்டுக்கு போறாளா…!!! கோபமானவன்,” ம்மா எந்த காலத்தில நீங்க எல்லாரும் இருக்கிங்க..? இந்த காலத்திலயுமா ஆடி ஆவணின்னு அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை..? அவ எங்கயும் போக வேண்டாம்..!! தாலி பிரிச்சு கோர்க்கிற அன்னைக்கு மட்டும் போனா போதும் அவங்ககிட்ட சொல்லிருங்க…”
 
அதெல்லாம் தாத்தா நாளைக்கு அனுப்புறேன்னு சொல்லிட்டாங்க நீ சும்மா இரு…”
 
ம்மா …!!”இன்னும் சத்தமிட்டவன்,” இவளுக்கு நான்தானே தாலி கட்டியிருக்கேன் … அதென்ன எல்லா முடிவையும் தாத்தாவே எடுக்கிறாங்க… இப்ப தாத்தா எங்க. தாத்தா….??” என சத்தமிட,
 
அறைக்குள்ளிருந்து அவனை நோக்கி வந்தவர் ,”ஏண்டா இப்ப கத்தி ஊரைக்கூட்டுற என்னமா ஸ்ரீ எதுக்கு இவன் இந்த குதி குதிக்கிறான்..??”
அவனை பார்த்து முறைத்தவள் ,”தெரியலையே தாத்தா அவங்க ஆடிக்கு எங்க தாத்தாவும் அம்மாவும் அழைச்சிட்டு போனாங்கள்ள அதுக்குத்தான் ஏதோ கோபம் போல…!!”
 
அப்படியா..?? அப்ப சரி நீ போய் வீட்டுக்கு போக டிரஸ் எடுத்து வைம்மா உங்க தாத்தா காலையில எட்டுமணிக்கு வந்திருவான்..”
 
எழுந்தவள்,” சரி தாத்தா என்றபடி அவனை பார்த்துக் கொண்டே மாடியேறினாள்.. போய்யா போ என்னமோ இவங்ககிட்ட பேச நாங்க தவமா தவமிருக்கனுமாம் !!! அங்க போனா எங்க அம்மா, தாத்தா, தம்பி ,தங்கச்சி எல்லாரும் இருக்காங்க… அவளுக்கு அவனுடம் பேச பழக ஆசையிருக்க, அது முடியாமல் அவளுடைய ஏமாற்றம் செல்ல கோபமாக மாறியிருந்தது..
 
சூர்யாவை நோக்கி திரும்பியவர், இப்ப சொல்லு உனக்கு என்ன பிரச்சனை நான் என்ன பண்ணினாலும் நீ ஏன் இந்த குதி குதிக்கிற அந்த பொண்ணப்பாரு..? எவ்வளவு நல்ல பொண்ணா இருக்கு..! இன்னும் நான்தான் கல்யாணம் பண்ணிவைச்சேன்னு எதுக்கெடுத்தாலும் சும்மா சத்தம் போடக்கூடாது.. இந்த பொண்ணவிட ஒரு நல்ல பொண்ணு உனக்கு பொண்டாட்டியா அமையுமாடா மகாலெட்சுமி மாதிரி இருக்கு..!!
 
அப்புறம் அவங்க ஒன்னும் ஆடிக்கு உன்னை வரச் சொல்லல. அவங்க பேத்தியத்தான் கூட்டிட்டு போறேன்னு சொன்னாங்க..!! நாம தாலிபிரிச்சு கோர்க்கிற அன்னைக்கு மட்டும் போனா போதும்..
 
ரிசப்ஷன்ல ரெண்டுபேரும் ஒன்னா பேசிக்கிட்டு இருந்தத பார்த்து நான்கூட அந்த பொண்ண கொஞ்சம் மனசுவந்து ஏத்துக்கிட்டியோன்னு நினைச்சேன்… அந்த பொண்ண ஏதாச்சும் திட்டிகிட்டி வைச்ச, அப்புறம் நான் பொல்லாதவன் ஆகிருவேன் பார்த்துக்க..?? போடா போ நீ போய் உன் வேலையை மட்டும் பார்த்திட்டு இரு..??”
 
சூர்யா.. ஐயோ தாத்தா நிறுத்துங்க…!!! எல்லாம் என் நேரம் ..! நான் என்ன சொல்றேன் நீங்க என்ன புரிஞ்சிருக்கிங்க..??” அதற்குள் அவனுக்கு அவசர வேலையாக ஒருசைட்டுக்கு வரச் சொல்லி போன் வர, விசயத்தை கேட்காதவன் இது வேற இம்சை டேய் வைங்கடா வர்றேன்..??” கடவுளே நான் இப்படி வேலை வேலைன்னு திரிஞ்சே சன்னியாசம் வாங்கிருவேன் போல தனக்குள் முனங்கியவன்,
 
 தன் தாய் தன்னை பார்த்து சிரிப்பதை பார்த்து, ம்மா நீங்களுமா என் நிலைமையை பார்த்து சிரிக்கிறிங்க..!! தன் தாத்தாவிடம் சென்று அவரை கட்டி அணைத்தபடி அவர் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு,
 
தாத்தா நீங்க ரொம்ப நல்லா காரியம் பண்ணி வைச்சிருக்கிங்க..!! உங்க பிரண்டோட பேத்தியை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு…அதுக்கு நான் ஒன்னும் சத்தம் போடலை … இப்ப நீங்க என்ன பண்றிங்க உங்க பிரண்ட்கிட்ட சொல்லி அவங்க பேத்தி ஆடிக்கு வரலை இங்கேயே இருக்கட்டும்னு சொல்லிருங்க..!!”
 மறுகன்னத்திலும் முத்தமிட்டு,” என் செல்ல தாத்தாவுல ப்ளிஸ் ப்ளிஸ் எனக்கு அவசரமா ஒரு வேலை வந்திருச்சு நான் கிளம்புறேன்… ம்மா உங்க மருமகள போய் பாருங்க அவபாட்டுக்கு அவங்க வீட்டுக்கு போக டிரஸ் எடுத்து வைச்சிராம.!!” மாடியை பார்த்தவன் ஸ்ரீயிடம் ஒருவார்த்தைகூட பேசமுடியாத வருத்தத்தில் ராத்திரியாவது கொஞ்சம் சீக்கிரமா வரப்பார்க்கனும்..!!
 
தாத்தா அவனை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருக்க, தன் தாயையும் கட்டி அணைத்தவன் வேகமாக வெளியில் சென்றிருந்தான்…
 
தன் மருமகளை பார்த்தவர் ,”என்னமா நடக்குது இங்க..??”
மாமா உங்க பேரன் ஸ்ரீயை பொண்டாட்டியா ஏத்துக்கிட்டு ரொம்ப நாளாச்சு.. அவங்க ரெண்டு பேரும் இப்ப நல்லா பேசிக்கிறாங்க..”
 
ரொம்ப சந்தோசம்மா எங்க என் நண்பனுக்கு என்னால நல்லது செய்ய முடியாம போயிருமோன்னு கொஞ்சம் பயமாவே இருந்துச்சு இப்பத்தான் நிம்மதியா இருக்கு..”
 
அதெல்லாம் சரியாகிடும் மாமா.. ரெண்டுபேரும்தான் ஒருத்தருக்கு ஒருத்தர் பொருத்தம்..!! கடவுளுக்கு தெரியும் மாமா யாருக்கு யாரோட ஜோடி சேர்க்கனும்னு நாமளா தேடி போயிருந்தாக்கூட இப்படி ஒரு தங்கமான பொண்ண பார்க்க முடியாது..”
 
அங்கு வேலை செய்யும் இடத்தில் ஒருவருக்கு அடிப்பட்டிருக்க அவரை ஹாஸ்பிட்டலில் சேர்த்து எல்லா உதவியும் செய்து கொடுத்தவன் ,லேசான காயம் பட்டதால் எந்த பிரச்சனையும் இல்லை.. அவர்கள் குடும்பத்தினருக்கு தேவையான பணத்தையும் கொடுத்துவிட்டு வந்தான்..
 
எல்லா இடத்தையும் பார்வையிட்டவன் புதிதாக ஒரே மாதிரி ஐந்து வீடுகள் கட்டித் தரச் சொல்லி ஒருவர் கேட்டிருக்க அதற்கும் அக்ரிமென்ட் போட்டு கொட்டேஷன் ரெடி பண்ணியிருந்தான்..
 
சூர்யாவுக்கே தெரிந்தது இந்த வேலையும் கையில் எடுத்தால் இன்னும் அதிக வேலை இருக்கும் என்ன செய்வது என்ற யோசனையிலேயே வீட்டிற்கு வர மணி பதினொன்றுக்கு மேலாகி இருந்தது..
 
சுபத்ரா தன் மகனுக்காக விழித்திருக்க தன் தாயை பார்த்தவன்,” நீங்க ஏம்மா வெயிட் பண்றிங்க..??நான் வெளியில சாப்பிடுறேன்னு சொன்னாலும் கண்டிப்பா வீட்டுக்கு வந்துதான் சாப்பிடனும்னு ஆர்டர்வேற போட்டிருக்கிங்க எனக்கு வேலை முடிய முன்னபின்ன ஆகும்..”
 
பரவாயில்ல சூர்யா, நீ ராத்திரி ஒரு நேரமாச்சும் வீட்ல என்னோட சாப்பிடு.. எல்லா வேலையும் நீயே இழுத்துப்போட்டு செய்யாம வேலைக்கு ஆள் வைச்சிக்க வேண்டியது தானேப்பா..??”
 
 எல்லாத்துக்கும் ஆள் இருக்காங்கம்மா.. நான் சும்மா மேற்பார்வை பார்க்கிறதுதான் கடைசிநேரத்துல ஏதாவது தப்பாயிட்டா அப்புறம் நம்ம பேர் கெட்டுப்போயிரும்..  இத்தனை நாள் உழைப்பும் வீணாப்போயிரும்மா அதான் நான் நின்னு பார்க்க வேண்டியதா இருக்கு.. ஸ்ரீயோட தாத்தாக்கிட்ட பேசிட்டிங்களாம்மா..?”
 
ம்ம் தாத்தா கேட்டாங்கப்பா அது சரிவராதாம் அங்க கண்டிப்பா வந்துதான் ஆகனும்னு சொல்லிட்டாங்க..
 
ம்மா… நீங்க கொஞ்சம் சொல்லக்கூடாதா ..??”தன் தாயை பாவமாக பார்க்க அவன் தலையை கோதியவர்,
 
நான் என்ன சொல்ல முடியும் சூர்யா? நீ இந்த ஒரு மாசத்துக்குள்ளயாவது சீக்கிரமா வேலைகளை முடிச்சிட்டு ஸ்ரீயோட எங்கயாவது பத்து நாளைக்கு வெளியில போய்ட்டு வா, அந்த பொண்ணும் தனிமையிலே இருக்கு,,,
 
அந்த காலத்தில சாஸ்திர சம்பிரதாயம் எல்லாம் ஒரு காரணத்தோடதான் வைச்சிருப்பாங்கன்னு அவங்க தாத்தா சொல்லும்போது நாம ஒன்னும் சொல்ல முடியல. அதோட அவங்க சொல்றதும் நியாயம்தான் இந்த மாசத்தில குழந்தை உண்டானா சித்திரை மாசத்தில ரொம்ப வெயில் கடுமையா இருக்கும்னு சொல்வாங்க… ஒரு மாசம்தானே ஓடிரும் சூர்யா ..!!”
 
அதோடு ஸ்ரீயின் தாத்தா திருமணப் பொருத்தம் பார்க்காமல் தன் பேத்திகள் இருவருக்கும் திடிரென திருமணம் நடந்ததால் ஒரு பரிகார பூஜைக்கும் ஏற்பாடு செய்திருந்தார்.. அதற்கு ஸ்ரீயும் சுபாவும் விரதம் இருக்கவேண்டும் அது அங்கிருந்தால் சரிவராது… அந்த பூஜை முடிந்ததும் அவரவர் வாழ்க்கையை துவங்கினால் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என அவர்கள் குடும்ப ஜோசியர் சொன்னதாக சொல்லவும்தான் ஸ்ரீயை அங்கு அனுப்பவே சூர்யாவின் தாத்தா ஒத்துக் கொண்டார்..
 
சூர்யாவோ தோசையை வாய்க்குள் தினித்தவன் ,”ம்கூம் இன்னும் அவளை நல்லாக்கூட லிப்கிஸ் பண்ணலை!! அதுக்குள்ள அம்மா குழந்தைக்கு போயிட்டாங்க!! அப்படி குழந்தை பிறந்தாதான் என்ன..?நாமதான் ஏசி போட்டிருக்கமே..!! தன் மனதிற்குள் பேசியவன்,
 
டேய் சூர்யா எல்லாம் உன்னாலதாண்டா நீ மட்டும் நேரத்துக்கு வந்து அவளோட பேசி பழகியிருந்தா அவளே அங்க வரலைன்னு சொல்லியிருப்பா நாம பேசாம இருக்கவும்தான் அவ அங்க கிளம்பிட்டா போல ,’வேகமாக சாப்பிட்டு தன் அறைக்குச் சென்றான்..
 
அங்கு சோபாவில் ஸ்ரீ தூக்கத்தில் இருக்க தினமும் இரவு வரும்போது எப்படியாவது ஸ்ரீயிடம் இரண்டு வார்த்தை பேசவேண்டும் அவளை கட்டிலில் தன்னோடு அழைத்து படுக்கச் சொல்ல வேண்டும் என நினைத்திருக்க அது முடியாமலேயே போயிருந்தது…
 
அவளும் அவனுக்காக காத்திருந்தாள் போல உட்கார்ந்த நிலையிலேயே உறங்கியிருந்தாள்.. கால்கள் இரண்டும் தரையில் இருக்க, சோபாவில் கழுத்தை சாய்த்து படுத்திருந்தவளை நேராக படுக்கச் செய்தவன் அவள் கால்கள் இரண்டையும் சோபாவில் தூக்கி வைத்தான்…
 
அவளையே பார்த்தவன் ,”ஸ்லீப்பிங் பியூட்டி என்று முனுமுனுத்தபடி அவள் நெற்றியில் முத்தமிட்டு தன் கட்டிலுக்கு வர அவள் உடையெல்லாம் பேக்கில் தயாராக இருந்தது ..
 
அவளிடம் இன்னும் மனதுவிட்டு பேச வேண்டும்..  தன்னைப்பற்றி சொல்ல வேண்டும் என்றும் நினைத்திருக்க, எங்கே மதியம் பார்க்கும்போது அவள் அவனிடம் பேசும் கண்களையும் இதழையும் பார்வையிடவே அவனுக்கு நேரம் போதவில்லையே!! அம்மா சொன்னது போல இவள எங்கேயாச்சும் கூட்டிட்டு போகவேண்டியதுதான்,
 
இப்பவே இவகிட்ட பேச முடியலையே நாளைக்கு அங்க போயிட்டா என்ன பண்றது சற்று யோசித்து அவளிடம் சென்று சோபாவில் படுத்திருந்தவளை தன் கையால் அள்ளிக் கொண்டவன் கட்டிலில் படுக்க வைத்து அவள் அருகில் படுத்துக் கொண்டான்..
 
அவள் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்டவன் அவள் புறங்கையில் முத்தமிட அவன் பக்கம் திரும்பி படுத்தவள் அவனை இன்னும் நெருங்கியிருந்தாள்… அவளை அப்போதே கொள்ளையிட ஆசையிருந்தாலும் தூங்கும் அவளை தொல்லை செய்யாமல் அவளை இன்னும் அணைத்து படுத்துக் கொண்டான்…
 
அதிகாலை பொழுது விடிய நல்ல வெளிச்சம் அவள் முகத்தில் பட்டது.. கண்விழிக்கும்போதே இன்று தன் தாய் வீட்டிற்கு செல்வது நியாபகத்திற்கு வர, ஒரு ஏமாற்றத்தை உணர்ந்தவள் இன்னேரம் அவங்க வெளிய கிளம்பி போயிருப்பாங்க.. மதியம் அவங்க வர்றதுக்குள்ள நாம அங்க போயிருப்போம்…
 
திரும்பி மணியை பார்த்தவள் மணி ஏழு.. எட்டு மணிக்கு தாத்தா வர்றேன்னு சொல்லியிருக்காங்க.. மெதுவாக எழ அப்போதுதான் உணர்ந்தாள் தான் கட்டிலில் படுத்திருப்பதையும் தன் மேல் கைப்போட்டு தன் கணவன் படுத்திருப்பதையும் குப்பென சந்தோசம் தன் மனதில் பரவ தன் கண்களை நன்கு கசக்கிவிட்டு பார்த்தாள் இது உண்மைதானா என்று…!!!
 
                                              இனி……………..???

Advertisement