Advertisement

மழைச்சாரலாய் என்னுள்ளே நீ
  அத்தியாயம்  –  15
 
இரண்டு நாட்கள் கழித்து அன்று மாலை ஹரிஷ் சுபாவையும் அவள் குடும்பத்தையும் தன் கடைக்கு வரச் சொல்லியிருந்தான்… ஆடி தள்ளுபடிக்கு நிறைய புது ரகங்கள் வந்திருப்பதாக சொல்லவும் ஸ்ரீயும் சுபாவும் தன் தம்பியோடு கிளம்பிவிட்டனர்..தாத்தாவும் அம்மாவும் வரவில்லை என்று சொன்னதால் ஹரிஷ் தன் காரில் அழைத்து வந்திருந்தான்..
 
ஸ்ரீ ப்ரியாவிற்கு போன் செய்து நேரடியாக கடைக்கு வரச் சொல்லியிருந்தாள்.. மறுநாள் தாலி பெருக்கி போடுவதால் துணிஎடுத்தவுடன் இரவு ஸ்ரீயோடு தங்கி கொள்ளலாம் என முடிவு செய்திருந்தார்கள்..
 
ஹரிஷ் தனியாக எடுத்து வைத்திருந்த ரகங்களிலிருந்து ஸ்ரீயும் ப்ரியாவும் தங்களுக்கு பொருத்தமானதை தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்க, தருணும் அஜயும் ஒன்று சேர்ந்து கடையை ஒவ்வொரு தளமாக சுற்ற ஆரம்பித்து விட்டார்கள்.
 
ஹரிஷ் தன் மனைவியோடு அவர்களுக்கென தனியாக இருக்கும் அறையில் பேசிக் கொண்டிருக்க, ஸ்ரீ ப்ரியாவுக்கு காலேஜ்க்கு போட்டுச் செல்ல புதியரக சுடிதார்களை தேர்ந்தெடுத்து கொண்டிருந்தாள்..
 
கடைக்கு வந்து ஒரு அரைமணி நேரம் சென்றிருக்கும்.. தன் முதுகில் யாருடைய மூச்சு காற்றோ பட சட்டென விலகியவள், கோபத்துடன் யாரென்று திரும்பி பார்க்க சூர்யா…!!!! ஆச்சர்யத்துடன் கண்ணை விரித்தவளை பார்த்து கண்ணடித்தவன்,
ஹாய் பொண்டாட்டி..!!”
 
தன் பக்கத்தில் ப்ரியா இருக்கிறாளா என பார்க்க ப்ரியா எடுத்த சுடிதாரை போட்டு பார்க்க டிரையல் ரூமிற்குள் சென்றிருந்தாள். கிசுகிசுப்பான குரலில்,” நீங்க எப்படி இங்க..??” அவனை பார்த்து சிரித்தவளின் ஹஸ்கி வாய்ஸ் அவனை மாயம் செய்ய,
அவளை பார்த்து ஒரு மயக்கும் புன்னகை சிந்தியவன் ,”ஒரு பட்சி வந்து சொன்னுச்சு நீங்க இங்க டிரஸ் வாங்குறிங்கன்னு அதான் நானும் வந்தேன்..”
 
இவர்கள் தனியாக ஒரு அறையில் இருந்ததால் மற்றவர்கள் டிஸ்டர்ப் பண்ணுவார்கள் என்ற எண்ணம் இல்லாமல் தன் கணவன் அருகில் இன்னும் நெருங்கி நின்றவள் ,
இதுல எந்த கலர் எனக்கு பொருத்தமா இருக்கும்..!!” கையிலிருந்த இரண்டு சுடிதார்களை அவனிடம் காட்டி கேட்கவும் அதில் இருந்த ஒன்றை தேர்ந்தெடுத்தவன்,
 இதை போட்டு காட்டு பார்ப்போம்..” ப்ரியா வெளியில் வரவும் இவள் அந்த டிரையல் ரூமிற்குள் நுழைந்திருந்தாள்..
 
ப்ரியா தான் எடுத்ததை தன் அண்ணனிடம் எடுத்து காட்டிக் கொண்டிருக்க அதில் ப்ரியாவுக்கு பொருத்தமாக தோன்றுவதை எடுத்து கொடுத்தவன் ,அதில் ஸ்ரீக்கு பொருத்தமாக இருப்பதையும் தேர்ந்தெடுத்தான்.. இன்னும் நிறைய சுடிதார்களை தன் தங்கைக்காக தேர்ந்தெடுத்து கொடுத்து கொண்டிருந்தான்..
 
ஸ்ரீயை அந்த சுடிதாரை அவனிடம் காட்டுவதற்காக வெளியில் வந்தவள்,” ஏங்க பாருங்க நல்லாயிருக்கா..??”
 
ஸ்லீவ்லெஸ் சுடிதாரில் இருந்தவளை பார்த்தவன்,” ப்ரியா தருணும் எடுத்திட்டா போகலாமான்னு கேட்டுட்டு வா..!! நாங்க அதுக்குள்ள இங்க உள்ளத பார்த்து முடிச்சிருறோம். அங்க இருகிறதுல வேற உனக்கு பிடிச்சிருந்தாலும் செலக்ட் பண்ணுடா..” தன் தங்கையை வெளியில் அனுப்பி வைத்தவன் மனைவியிடம் சென்றிருந்தான்…
 
அந்த அறையில் சுற்றிலும் கண்ணாடி இருக்க தன் மனைவியை பின்னிருந்து அணைத்து அந்த கண்ணாடியில் தன் மனைவியை பார்த்தவனுக்கு அவளை விட்டு கண்ணை திருப்ப முடியவில்லை..அவன் அகன்ற தோளிற்குள் அவள் பாந்தமாக அடங்கியிருக்க அவள் தோளிலிருந்து கையை மெதுவாக வருடியவன்  
 
ஏய் இந்த டிரஸ் சூப்பரா இருக்குடி..??” கையில்லாத அந்த சுடிதாரில் அவன் முன் நிற்க கூச்சப்பட்டவள் அங்கிருந்த ஷாலை எடுத்து போடப் போக அதை தடுத்தவன்,
ஏய் டிரஸ் நல்லாயிருக்கான்னு பார்த்துக்கிட்டுதானே இருக்கேன்..!! அதுக்குள்ள என்ன அவசரம்..??”
 
அவனை நோக்கி திரும்பியவள்,” நீங்க என்னோட டிரஸ்ஸ பார்க்கிறிங்களா..? சுத்தி பாருங்க நம்மள சுத்தி கண்ணாடி இருக்கு ,நீங்க என்ன பார்க்கிறிங்கன்னு அது எனக்கு சொல்லுது..??” அவனை முறைக்க முயன்றவள் அவன் பார்வையில் தெரிந்த அப்பட்டமான தாபத்தை காணவும் அந்த பார்வையை சந்திக்க முடியாமல் எட்டி அவன் கண்ணை மூடப்போக,
 
அவள் இடுப்பில் கைகொடுத்து தன்னை நோக்கி இழுத்தவன் அவள் மாம்பழ கன்னத்தில் பச்சக் என முத்தமிட்டு,” இந்த கண்ணாடியெல்லாம் உன்கிட்ட என்னடா சொல்லுச்சு..??” அவள் தோளில் தன் இரு கையையும் வைத்து கேட்டவனின் கைக்குள் தன் கையையும் கோர்த்தவள்..
 
ம்ம்ம் உங்க வீட்டுக்காரர் ரொம்ப பேட் பாய் அவர் கண்ணு வேற எங்கெங்கயோ போகுது பார்வை சரியில்லைன்னு சொல்லுது…!!!”
 
அப்படியா அப்ப ஓகே நான் கண்ணை மூடிக்கிறேன்… கண்ணை மூடிக் கொண்டவன் தன் இதழால் அவள் உடலெங்கும் கோலமிட,
 ஆத்தி இதென்ன வேலை போங்க முதல்ல வெளியில.. ப்ரியாவேற வந்திருவா ..!!” அவன் முதுகில் கைவைத்து வெளியே தள்ளப்போனவளை,
 ஏய் ப்ளிஸ்டி அன்னைக்கு மாதிரி லிப்கிஸ் ஒன்னே ஒன்னு குடுத்திருறேன்…??”
ஐயோ அங்க பாருங்க கேமரா இருக்கு.. போங்க வெளியில..??”
அதுக்குதாண்டி டிரையல் ரூம்லயே கொடுக்கிறேன்னு சொல்றேன்…
அதெல்லாம் ஒன்னும் தேவையில்ல நீங்க முதல்ல வெளியில இருங்க நான் டிரஸ மாத்திட்டு வர்றேன்…
 
சிறுபிள்ளை போல காலை உதறியவனை கஷ்டப்பட்டு வெளியில் தள்ளி கதவை அடைத்தவளுக்கும் அவன் நேற்று தனக்கு தந்த அந்த உதட்டு முத்தம் நினைவுக்கு வந்தது.. கதவில் சாய்ந்து ஆழ்ந்த மூச்சை எடுத்து தன்னை நிலைப்படுத்தியவள் தன் பழைய உடைக்கு மாறி வெளியில் வர அனைவரும் வந்திருந்தனர்..
 
ஹரிஷ் ஸ்ரீயை பார்த்தவன்,” என்ன ஸ்ரீ நீங்க இங்க வந்திருக்கிங்கன்னு இப்பத்தான் போன்ல சொன்னேன் அடுத்த அஞ்சு நிமிசத்தில சூர்யா இங்க வந்திட்டாரு…!!”
 
 சூர்யா,” இல்ல ஹரிஷ் இங்கதான் பக்கத்தில ஒரு வேலையா வந்தேன் ..அதான் உடனே வரமுடிஞ்சிச்சு..ஆமா இதென்ன இந்த ரூம் குடோனா இல்ல கடையா டிரையல் ரூமெல்லாம் இருக்கு..??”
 
இதுதான் நாங்க முதல்ல ஆரம்பிச்ச முதல்கடை.. இப்ப கடையை விரிவு படுத்தவும் இதை குடோனா மாத்தலாமான்னு யோசனையில இருக்கோம்.. சரி வாங்க எல்லாரும் ஹோட்டலுக்கு போய் ஏதாவது சாப்பிடுவோம்..
 
துணிகளுக்கு பில் போட்டு வாங்கியவன் தருண் எடுத்ததிற்கும் தானே பணம் கொடுக்க ஹரிஷ் எந்த துணிக்கும் பணத்தை வாங்கி கொள்ள மறுத்து விட்டான் .. பரவாயில்லை என அழுத்தி சொல்லி பணத்தை கட்டியவன் எல்லாத் துணிகளையும் காரில் வைத்துவிட்டுவர அனைவரும் கடைக்கு பக்கத்தில் இருந்த கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு பக்கத்தில் உள்ள ஹோட்டலுக்குள் நுழைந்திருந்தார்கள்..
 
ப்ரியா, தருண் ,அஜய் மூவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்க..ஹரிஷ் சூர்யா அருகில் சென்று,”என்ன சூர்யா நீங்களும் தாத்தாக்கிட்ட கேட்டிங்க போல நாளைக்கே ஸ்ரீய கூட்டிட்டு போறேன்னு என்ன சொன்னாங்க..??”
 
சிரித்தவன்,” உங்ககிட்ட என்ன சொன்னாங்களோ அதையேதான் என்கிட்டயும் சொன்னாங்க ஹரிஷ்… ஆடி முடிஞ்சுதான் கூட்டிட்டு போகனும்னு…
 
ஹரிஷ்,” வொய் பிளட் சேம் பிளட்..!!”
அதே அதே… உங்களுக்கென்ன ஹரிஷ் நீங்க கடைதிறக்கிறதுக்குள்ள டெய்லியும் வீட்டம்மாவ ஒரு தரம் பார்த்திட்டு போறிங்க என்னலதான் முடியல… பாருங்க பதினைஞ்சு நாளைக்கப்பறமா முந்தாநாள்தான் பார்த்தேன்.. இடம் தேடி அமர்ந்தவர்கள் அக்காவும் தங்கையும் மெனுகார்டில் கவனமாக இருக்க,
 
சூர்யாவின் காதருகில் குனிந்த ஹரிஷ்,” டெய்லியும் போய் பார்த்து என்ன பண்ண சூர்யா அவ இன்னும் சரியான குட்டி பேபி..!!! இப்பத்தான் கொஞ்சமா வழிக்கு கொண்டு வந்திருக்கேன்.. அவ படிப்பு முடிய இன்னும் மூனு மாசம் இருக்கு அதுக்குள்ள அவள என்னை லவ் பண்ண வைச்சிருவேன்… லவ் பண்ற பீலிங்கும் ரொம்ப நல்லாத்தான் இருக்கு..
 
கல்யாணம்தான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாம நடந்திச்சு.. ஆனா என்னோட வாழ்க்கையை நான் ஆரம்பிக்கும் போது ஒரு புரிதலோடதான் ஆரம்பிக்கனும்னு நினைக்கிறேன்… அந்த புரிதல் எங்களுக்குள்ள உருவாக ஆரம்பிச்சிருச்சு ..””
 
சாப்பாடு மேஜைக்கு வர அதோடு பேச்சை நிறுத்தியவர்கள் சாப்பிட ஆரம்பித்திருந்தனர்… சுபா தன் கணவனுக்கு தான் வாங்கியதில் பாதியை எடுத்து வைத்துவிட்டு அவனிடத்தில் இருந்ததில் பாதியை எடுத்துக் கொண்டாள்.. ஆளாளுக்கு ஒன்றை ஆர்டர் கொடுத்திருந்தார்கள்..
 
ஹரிஷ் எப்போதும் ஒரு தெளிவோடு இருப்பதை உணர்ந்தவன் தன் மனைவியை திரும்பி பார்க்க் அவள் தன்னிடம் இருந்த தாளித்த இடியாப்பத்தை சட்னியோடு ப்ரியாவுக்கும் அவனுக்கும் பாதி பாதி எடுத்து வைத்திருந்தாள்…
 
ஏண்டி உன் தம்பிக்கு பாதி கொடுக்கலையா..??”
அவனுக்கு இடியாப்பம் பிடிக்காதுங்க…அஜய்க்கும் வேணாமாம் நீங்க சாப்பிடுங்க..” அவனை சாப்பிட சொல்லியவளின் குணம் எப்போதும் போல அப்போதும் அவனை ஈர்த்தது.. அங்கு அஜயும் தருணும் தங்களுக்குள் உள்ள உலகத்தில் இருந்தனர் .. சுற்றி உள்ளவர்களை கவனத்தில் கொள்ளவில்லை..
அண்ணி இந்தாங்க சில்லி புரோட்டா..??” தன்னிடம் உள்ளதை ப்ரியா பகிர்ந்து கொடுக்க இருவரும் பேசியபடி சாப்பிட ஆரம்பித்தனர்…
 
சூர்யா தான் சாப்பிட்டுக் கொண்டே தன்னுடைய பிரைடு ரைஸை தன் மனைவிக்கும் தங்கைக்கும் ஊட்டிவிட ஆரம்பித்தான்.. அனைவரும் சாப்பிட்டு வீட்டிற்கு கிளம்பினர் நாளை காலை ஸ்ரீயின் தாய்வீட்டு குலதெய்வ கோவிலில்தான் தாலி பெருக்கி போடுவதாக முடிவு செய்திருந்தார்கள் ஆடி பதினெட்டு என்பதால் அங்கு சிறப்பு பூஜை நடைபெறும்…
 
ஹரிஷை கடைக்கு செல்ல சொன்னவன் தானே அனைவரையும் வீட்டில் விடுவதாக சொல்லி தன்னுடைய காரிலேயே அழைத்துச் சென்றான்..
 
மறுநாள்காலை ஐந்து மணிக்கு அனைவரும் குலதெய்வ கோவிலுக்கு செல்ல ஒரு வேனை ஏற்பாடு செய்திருந்தனர்.. காமாட்சி அப்பத்தா தன் மகள் இருவர் குடும்பத்திற்கும் தகவல் சொல்லி வரச் சொல்ல அவர்கள் வேலை இருப்பதாக சொல்லி வர மறுத்துவிட்டார்கள்..
 
கோவில் சற்று ஊரை விட்டு தள்ளி ஒரு காட்டுப்பகுதியில் இருந்தது.. நிறைய பேருக்கு அது குலதெய்வ கோவிலாக இருந்ததால் அந்த நேரத்திலேயே கூட்டம் அதிகமாக இருந்தது…
ஆண்கள் தங்கள் பாரம்பரிய வேட்டி சட்டையிலும், பெண்கள் பட்டு புடவையிலும் ஜொலிக்க குழந்தைகள், இளைஞர்கள், இளம்பெண்கள் என அந்த இடமே கலகலப்பாக இருந்தது..
 
மைக்செட்டில் சாமி பாடல் ஒலித்துக் கொண்டிருக்க சூர்யாவுக்கும் ஹரிஷ்க்கும் இது புதுமையாக இருந்தது.. இவர்களின் குலதெய்வ கோவில்கள் ஊருக்குள்ளேயே இருக்க எப்போது வேண்டும் என்றாலும் சென்று சாமி கும்பிட்டு வரலாம்…
 
பெண்கள் அனைவரும் செங்கலை அடுப்பாக வைத்து பொங்கல் வைப்பதற்கான ஆயத்த வேலையில் இருக்க ஸ்ரீயும் சுபாவும் தன் தாயோடு சேர்ந்து அந்த வேலைகளில் ஈடுபட்டனர்..
 
ஸ்ரீ அந்த இடத்தை கூட்டி அழகான கலர் கோலமிட நடுவில் மூன்று கல்லை வைத்து பொங்கல் பானையை சாமியை வேண்டி அவர் தாத்தா அடுப்பில் அடுத்து வைத்து விறகின் மேலிருந்த சூடத்தை பற்ற வைத்தார்..
 
பால் பொங்கி வரவும் குலவையிட்டவர்கள் பொங்கல் வைத்து முடிக்கவும் அங்கிருந்த காளிக்கும் கருப்பனுக்கும் அபிசேகம் செய்யப்பட்டது… அனைவரும் அமைதியாக அமர்ந்து அபிசேகத்தை பார்த்து கடவுளை வணங்கினார்கள்..
 
 அபிசேகம் முடியவும் வயது முதிர்ந்த பழுத்த சுமங்கலிகளில் ஒரு ஒன்பது பேர் அந்த கோவில் குளக்கரையிலிருந்து மண்ணெடுத்து வந்து ஏழு கன்னிப்பெண்களாக பிடித்து வைத்து அதன் பக்கத்தில் மஞ்சளை பிள்ளையாராக பிடித்து வைத்திருந்தனர்…
 
அந்த கன்னிப்பெண்களாக பிடித்திருந்த மண்ணிற்கு சந்தனமிட்டு பொட்டுவைத்து பூப்போட்டு அலங்கரிக்க அந்த கன்னி தெய்வங்களுக்கு முன்னால் தலைவாழையிலை பெரிய இலைபோட்டு காதோலை கருகமணி ஏழு தெய்வத்திற்கும் வைத்து தேங்காய்கள் வாழைப்பழங்கள் அனைத்து வகையான பழங்கள் கிராமங்களில் கிடைக்கும் பழங்களான நாவற்பழங்கள், ஈச்சம்பழம், நொங்கு முதற்கொண்டு அனைத்தையும் படைத்தனர்..
 
 மஞ்சள், குங்குமம், அங்கிருந்த கன்னிப் பெண்களுக்கு நிறைய கண்ணாடி வளையல்கள் , தாலிகயிறுகள்  வாங்கி அதை அந்த இலைகளில் பரப்பி வைத்தனர்… கொழுக்கட்டைகள், பெரிய தூக்குவாளிகளில் பாயாசம், பச்சரிசியில் வெல்லம் கலந்து வைத்து ஒரு ஆரத்தி குடத்தில் குத்துவிளக்கின் மேல் பகுதியை மட்டும் வைத்து அதற்கு எண்ணெய் ஊற்றி பற்றவைத்தனர்
 
 ஒவ்வொரு கன்னி தெய்வத்திற்கும் புடவை, சட்டைதுணி, வளையல்கள் , தாலிகயிறு , மஞ்சள் ,குங்குமம், வெற்றிலை பாக்கு, ரொட்டி, மிட்டாய்கள் தனிதனியாக வைத்து கூடவே ஒரு ரூபாய் நாணயத்தையும் வைக்க, அதற்குள் சாமிக்கு அலங்காரம் முடிந்து தீபாராதனை காட்டவும் கடவுளை வணங்கினார்கள்…
 
சாமி கும்பிடவும் கன்னி தெய்வத்தையும் வணங்கியவர்கள் அங்கு வாளியில் இருந்த தண்ணீரை இரு கையால் அள்ளி அதை மூன்று முறை சுற்றிவந்து அந்த நீரை படையலுக்கு முன்னால் ஊற்றினார்கள்..
 
எப்போதும் கன்னிப்பெண்களாக கலந்து கொள்ளும் ஸ்ரீயும் சுபாவும் இந்த முறை மணமான பெண்களாக கலந்து கொண்டார்கள்…ப்ரியாவுக்கும் சுபத்ராவுக்கும் ஒவ்வொன்றையும் சொல்லிக் கொடுத்து அதன்படி செய்ய சொல்ல சுபா தன் மாமியாரோடு இணைந்திருந்தாள்…
 
 அங்கிருந்த சுமங்கலி பெண்களிடமும் அப்பத்தாவிடம் ஸ்ரீயின் தாய் தாலிசெயினையும் அதில் கோர்க்கும் லெட்சுமி பொட்டு மாங்காய் மணிகளையும் கொடுக்க அதை அவர்கள் கோர்த்து அந்த கடவுளின் காலடியில் வைத்து எடுத்து தர சூர்யாவும் ஹரிஷ்ம் தத்தம் மனைவிக்கு கடவுளை வேண்டிக் கொண்டு அதை அணிவித்திருந்தனர்..
 
சூர்யாவின் திருமணத்தை பார்க்காத சுபத்ராவும் அப்பத்தாவும் கண்குளிர  பார்த்து மகிழ இவர்களை போல இருந்த புதுமண தம்பதிகளுக்கும் தாலி பெருக்கி போடப்பட்டது… அந்த சுமங்கலிகள் அனைவரும் ஒரிடத்தில் சென்று அமர அனைத்து பெண்களும் , குழந்தைகளும், கன்னிப்பெண்களும் அவர்களிடம் சென்று அவர்கள் கையால் நோன்புகயிறை தங்கள் கழுத்தில் கட்டிக் கொண்டனர்…
 
அந்த இடமே அவ்வளவு சந்தோசமாக அனைவரிடமும் கட்டிக் கொண்டவர்கள் ஒவ்வொருவரின் கழுத்திலும் நிறைய நோம்பு கயிறுகள், ஆண்கள் தங்களின் கைகளில் கட்டிக் கொள்ள மூன்று நாட்கள் அதை கட்டி விரதமாக இருந்து மூன்று நாட்கள் கழித்து அந்த கயிறை கிணற்றிலோ ஆற்றிலோ போடும்படி சொல்லியிருந்தார்கள்..
 
சூர்யாவோ ஹரிஷிடம்,” அந்த காலத்தில ஒவ்வொரு சாஸ்திர சம்பிரதாயம் பின்னாடியும் ஏதாவது ஒரு காரணம் வைச்சிருக்காங்க.. இந்த கோவில்ல இருந்து ஒரு பாஸிட்டிவ் வைப்ரேஷன் நமக்கு கிடைக்கிறமாதிரி இருக்குதுதானே ஹரிஷ்..
 
கண்டிப்பா சூர்யா எல்லாரையும் பாருங்க ஒவ்வொருத்தர் முகத்திலயும் எவ்வளவு சந்தோசம் , வேலைவேலைன்னு அதுபின்னாடி இருக்கிறவங்களுக்கு இந்த மாதிரி பங்ஷன் எல்லாம் ஒரு நல்லெண்ணத்தையும் ஒரு ரிலாக்கஷேனையும் தரும் …
 
முக்கியமா பெரியவங்கள மதிக்கனும்னு ஒரு நல்லெண்ணத்தையும் அது விதைக்கிது அங்க பாருங்க அந்த குழந்தைய..!!!” ஒரு குழந்தையை கைகாட்ட அந்த மூன்று வயது குழந்தை அங்கு வயதானவர்களின் காலில் விழுந்து வணங்கும் ஒவ்வொருவரின் முன்நின்றும் அவர்களை உற்றுபார்த்து அவர்கள் செய்வதை தானும் செய்து கொண்டிருந்தது…
 
பணத்தை செலவு செஞ்சு வீட்ல இந்த பங்சஷ நாம செஞ்சிருந்தாக்கூட இந்த அளவுக்கு ஒரு சந்தோசமும் நிம்மதியும் கிடைச்சிருக்காது ஹரிஷ்…
கண்டிப்பா சூர்யா சுபாவோட தாத்தா இந்த மாதிரி சாஸ்திர சம்பிரதாய விசயங்களில் ரொம்ப கண்டிப்பா இருக்காங்கன்னு நான் நினைச்சேன்.. ஆனா இதுலயும் ஒரு நன்மையே இருக்கு..
 
நாம இனி ஒவ்வொரு வருசமும் இந்த நாள்ல இங்க வந்திரனும் ஹரிஷ்.. என்ன வேலை இருந்தாலும் பரவாயில்ல..!!”சுபாவும் ஸ்ரீயும் தங்கள் கணவர்களிடம்வர அவர்கள் கன்னம், நெற்றி எல்லாம் மஞ்சள் பூசப்பட்டிருந்தது.. நெற்றியில் நிறையபேர் வைத்த குங்குமம் ஒரு ஒழுங்கில்லாமல் அது தனி அழகை சேர்த்திருந்தது..
 
தாங்கள் போட்டிருந்த புத்தம்புது தாலி செயினோடு நிறைய மஞ்சள் நோம்பு கயிறுகள் இவர்கள் இருவரையும் பார்த்தால் இப்போதுதான் மணம்முடித்த புதுப் பெண்கள் போல இருந்தார்கள் அவர்களுக்கும் தங்கள் கணவனை பார்க்க புதுவெட்கம் வந்திருந்தது..
 
மதிய சாப்பாட்டிற்கு அங்கேயே ஏற்பாடு செய்திருக்க அனைவரும் சாப்பிட்டு அங்கிருந்த பெரிய ஆலமரத்தடியில் ஒய்வெடுத்து கிளம்பவே மணி மூன்றாயிற்று.. அனைவரும் தங்கள் வேனில் ஏறியிருக்க அந்த கன்னி தெய்வங்களுக்கு படைத்த புடவைசெட்டை இருவருக்கும் கொடுத்து அடுத்த முறை குழந்தையோடு வரவேண்டும் என அங்கிருந்த பெண்கள் ஆசிர்வாதம் செய்தார்கள்..
 
வேனில் ஏறிய சற்று நேரத்திலேயே அனைவரும் உறக்கத்திற்கு செல்ல தன்மேல் தூங்கி வழிந்த ஸ்ரீயின் நெற்றியில் இருந்த அதிகமான பொட்டையும் கன்னத்தில் இருந்த மஞ்சளையும் தன் கர்சிப் கொண்டு ஒழுங்கு படுத்தியவன் அவள் கலைந்திருந்த தலையை சரிசெய்ய அவன் கையை பிடித்தவள்,” மாமா நாம மூனுநாளைக்கு விரதம் நீங்க இப்படியெல்லாம் பண்ணக்கூடாது ..!!!”அரைக்கண்ணை மூடியபடி சொல்ல,
 
மாமா என்ற அழைப்பு அவன் நெஞ்சில் ஜில்லென்று இறங்கவும்,” எனக்கு தெரியும்டா பேபி விரதம்னு..!! நீ தூங்குடா..??” தன் மடியில் அவளை படுக்க வைத்தவன் அவள் தோளை தட்டிக் கொடுத்தபடி,” அதென்னடி மாமான்னு கூப்பிடுற..?”
 
அம்மாதான் அப்படி கூப்பிடனும்னு சொன்னாங்க, ஏன் மாமா கூப்பிட வேண்டாமா..??”
 
இல்லடா நீ அப்படியே கூப்பிடு..?” சூர்யாவிற்கு மனம் நிறைந்திருந்தது… தன் திருமணத்தின் போது மனமில்லாமல்தான் அவள் கழுத்தில் தாலி கட்டினான்.. ஆனால் இன்று அந்த தாலிசெயினை போடும்போது அவளை முழுமனதோடு ஏற்று என்றும் இருவரும் சந்தோசமாக இருக்கவேண்டும் என கடவுளை வேண்டியபடிதான் செயினை போட்டான்..
 
ஸ்ரீ ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருக்க இன்னும் ஊருக்கு செல்ல ஒருமணி நேரமாவது ஆகும்.. ஸ்ரீயையே பார்த்துக்கொண்டிருந்தவனுக்கும் உறக்கம் வர அவளை அணைத்தபடி தானும் உறங்க ஆரம்பித்தான்..
 
                                                 இனி………..???????

Advertisement