Advertisement

நர்ஸ் வந்து அவளை பரிசோதித்து விட்டு டாக்டர் வந்து பார்த்ததும் வீட்டுக்குச் செல்லலாம் என்று சொல்லி விட்டு அனைவரையும் வெளியே போகச் சொல்ல “அபி இங்க வாயேன்”, என்று அழைத்தாள் பவித்ரா.

அபி அவள் பக்கத்தில் சென்று அமர அவர்களை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே அங்கிருந்து சென்றான் ரவி.

அபி முகம் ஒரு மாதிரி இருக்கவும் “அதான் ஒண்ணும் இல்லைன்னு சொல்றேன்ல டா? அந்த ஆட்டோல இருந்த ஏதோ ஒரு கம்பி தான் கிழிச்சிருச்சு போல? நீ இப்படி இருக்காத டா. எனக்கு கஷ்டமா இருக்கு”, என்றாள் பவித்ரா.

“சாரி பவி”

“சாரியா? எதுக்கு டா? என்ன ஆச்சு அபி?”

“இது எல்லாம் என்னால தான்”

“புரியலை”

“உன்னைக் கொல்ல முயற்சி நடந்தது. அதை செஞ்சது எங்க அம்மா தான். இது மூணாவது தடவை”, என்று அவன் சொல்ல அதிர்ச்சியாக இருந்தது அவளுக்கு.

“அபி”

“ஆமா டி, இப்பவும் ஏன் சொல்றேன்னா நீயும் கவனமா இருக்கணும்னு தான். என்னால தான் உனக்கு இந்த கஷ்டம்”

“அப்படி எல்லாம் இல்லை. விடு டா. ஆனாலும் இப்படி எல்லாமா நடக்கும்? படம் பாக்குற மாதிரி இருக்கு. எனக்கு எல்லாம் எதிரியா?”

“நடக்கும் டி, நம்ம வாழ்க்கைல நிறைய நடக்குது. அந்த வீணாவை ஆபீஸ் விட்டு எதுக்கு வெளிய அனுப்புனேன்னு கேட்டியே? அவளும் அவங்க வச்ச ஆளு தான். என்னை வேவு பார்க்க நாம எங்க போறோம்னு எல்லாம் தகவல் சொல்ல தான் வந்திருக்கா. அதைக் கண்டு பிடிச்சு தான் அனுப்பினேன்”

“உண்மையாவா டா? அந்த அளவுக்கு நம்ம ரெண்டு பேரும் வி. ஐ.பி யா டா?”, என்று சிரிக்க “ஏய் உனக்கு பயமா இல்லையா டி?”, என்று ஆச்சர்யமாக கேட்டான்.

“அதான் நீ இருக்கியே? மூணு தடவை என்னை காப்பாத்தினவன் இனியும் காப்பாத்த மாட்டியா?”

“கண்டிப்பா காப்பாத்துவேன்”, என்றவன் “என் உயிரைக் கொடுத்தாவது”, என்று மனதில் எண்ணிக் கொண்டான்.

“இதை வேற யார் கிட்டயும் சொல்ல வேண்டாம் அபி. எங்க வீட்ல உள்ளவங்க பயந்துருவாங்க”, என்றாள். ஆனால் உண்மையிலே வீட்டில் உள்ளவர்களிடம் சொன்னால் அவர்கள் அபியை தவறாக நினைப்பார்களோ என்று எண்ணி தான் அப்படிச் சொன்னாள் என்று அவனுக்கு புரிந்தது.

“அபி நீ உங்க அம்மா கிட்ட பேசு டா. பவி ஒரு பிள்ளை பூச்சி அவங்க நினைக்கிற அளவுக்கு நான் டெரர் இல்லைன்னு சொல்லு டா”

“கண்டிப்பா பேச தான் போறேன் பவி. இனி அவங்களால உனக்கு எந்த ஆபத்தும் வராது”, என்று சொன்னவனின் குரலில் அந்த அளவுக்கு தீவிரம் இருந்தது. ஆனால் அவன் பேசுவதற்குள் பல விசங்களை செய்திருந்தாள் வடிவு.

மருத்துவமனையில் இருந்து பவித்ராவை அழைத்துக் கொண்டு கிளம்பினான் அபி. கிருஷ்ணன், ரிஷி, ரவி மூவரும் வண்டியில் வந்திருந்ததால் பவித்ரா அபியுடன் காரில் வீட்டுக்கு கிளம்பினாள்.

கார் ஒட்டிக் கொண்டிருந்தவனின் முகம் அந்த அளவுக்கு இறுகி இருந்தது. ஏதோ தீவிர சிந்தனையில் இருந்தான். அவளிடம் ஒன்றுமே பேச வில்லை. அவளும் ஏதும் பேசாததால் ஒரு வித அழுத்தமே அங்கே நிலவியது. இருவர் மனதிலும் பல குழப்பம். இதற்கு அடுத்து என்ன என்றும் புரியாத நிலை.

அப்போது ஒரு லாரி அவர்களை இடிப்பது போல வந்தது. அதை முதலில் கவனித்தது அவள் தான். “அபி அங்க பாரேன். அந்த டிரைவர் ஓவர் ஸ்பீட்ல வரான்”, என்று சொன்னது தான் அவனும் கவனித்தான்.

அந்த லாரி வேகமாக அவர்களை மோத தான் வந்தது. லாரி அவர்கள் காரில் மோதும் நேரத்தில் லாரி திசை மாறி அப்படியே வேறு பக்கம் கவிழ்ந்தது. மயிரிழையில் உயிர் தப்பினார்கள் பவித்ராவும் அபிமன்யுவும்.

“பவி உனக்கு ஒண்ணும் ஆகலை தானே?”, என்று கேட்டவன் அவள் இல்லை என்று தலையசைத்ததும் அவளை கோழிக் குஞ்சு போல தனக்குள் இறுக்கி அனைத்து வைத்துக் கொண்டான்.

அவன் பதட்டதில் இருக்க அவளோ வியர்த்து போய் இருந்தாள். அவள் கைகள் அவன் கையை இறுக்கிப் பற்றிக் கொண்டது. அவளது கையை ஆறுதலாக அழுத்திக் கொடுத்தவனுக்கும் இன்னுமே பதட்டம் குறைய வில்லை. அவனது ஆறுதல் இப்போதைக்கு தேவையாக இருக்க இன்னுமே அவனுடன் ஒட்டிக் கொண்டாள்.

அவன் நெஞ்சில் முகத்தை புதைத்துக் கொண்டு “எனக்கு பயமா இருக்கு அபி”, என்று சொன்னவளின் உடல் நடுங்கியது.

“நான் இருக்கேன்ல? ஒண்ணும் ஆகாது டா. உனக்கு ஒண்ணும் ஆக விட மாட்டேன்”, என்றவனின் முகம் கோபத்தில் சிவந்தது. அவனுக்கு நன்கு தெரியும் இது யாரோ வேண்டும் என்றே செய்த கொலை முயற்சி என்று. அப்போதும் அதை செய்தது அருந்ததி என்று தான் எண்ணினான். ஒரு அன்னை பெற்ற மகனையும் கொலை செய்வாளா என்று யோசிக்க தவறினான்.

சிறிது நேரம் கழித்து அவளை நேராக அமர வைத்தவன் காரை எடுத்தான். இருவரும் எதுவும் பேச வில்லை. வீட்டுக்கு வந்த பிறகு கோதை பவித்ராவுக்கு ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அனுப்பி வைத்தாள். பவித்ரா ஓய்வு எடுக்கச் செல்ல அபியும் கிளம்பினான்.

அவன் காரை எடுக்கப் போக “ஒரு நிமிஷம்”, என்று அழைத்தான் ரவி.

அபி கேள்வியாக அவனைப் பார்க்க “வரும் போது என்ன நடந்துச்சு?”, என்று கேட்டான். அபி அவனை அதிர்ச்சியாக பாக்க “ஆஸ்பத்திரில இருக்கும் போது பவி நார்மலா தான் இருந்தா. ஆனா அவ இப்ப அப்படி இல்லை. அது மட்டுமில்லாம உன்னோட கார் எங்கயோ மோதிருக்கு. உன் முகமும் சரி இல்லை. என்ன தான் நடக்குது? சும்மா ரோட்ல போகும் போது ஏன் பவித்ராவுக்கு அடி படணும்?”, என்று கேட்டான்.

இதற்கு மேல் அவனிடம் மறைப்பது அபிக்கு சரியாக பட வில்லை என்பதால் நடந்ததைச் சொன்னான் அபி. ரவிக்கு கோபமாக வந்தது. ஆனால் பவித்ராவுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தி இருக்கும் அபியை என்ன சொல்ல என்று தெரிய வில்லை.

ஆனாலும் “இப்ப உனக்கு சந்தோஷமா? அமைதியா இருந்த எங்க குடும்பத்தை பிரச்சனையில் இழுத்து விட்டுட்டியே?”, என்று கேட்டான் ரவி.

“ரவி”

“பேசாத, அவ பச்சை மண்ணு டா. அவளை இந்த நிலைக்கு ஆளாக்கிட்டிட்யே?”

“எனக்கே இப்படி எல்லாம் நடக்கும்னு தெரியாது ரவி”

“ஆனா இதெல்லாம் உன்னால தானே? உன்னை யாரு எங்க குடும்பத்துக்குள்ள வரச் சொன்னா? நீ வந்ததுல இருந்து பிரச்சனை தான். தயவு செஞ்சு பவித்ரா வாழ்க்கைல இருந்து ஒதுங்கிப் போ. நீ அவ வாழ்க்கையை விட்டுப் போனா தான் அவளுக்கு இருக்குற ஆபத்து போகும்?”

“ரவி”

“இங்க பாரு, பவித்ரா எங்களுக்கு ரொம்ப முக்கியம். உன் குடும்பத்தால அவளுக்கு பிரச்சனைன்னா நீ அவளை விட்டு விலகிப் போய்த் தான் ஆகணும்”, என்று சொல்ல அபிக்கு இதுவரை இருந்த குற்ற உணர்வு மறைந்து கோபம் வந்தது.

“இவன் எப்படி என்னை பவித்ராவை விட்டு போகச் சொல்லலாம்?”, என்று எண்ணி அவன் ரவியை முறைத்துப் பார்க்க “இங்க பாரு அபி, எனக்கு பவித்ராவை ரொம்ப பிடிக்கும். நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். எனக்கு அவ வாழ்க்கை ரொம்ப முக்கியம். பவி உன் கிட்ட நட்பா தான் பழகுறா. உன்னோட தோழி நல்லா இருக்கணும்னு நினைச்சா அவ வாழ்க்கைல இருந்து நீ விலகி தான் ஆகணும். இல்லன்னா உன் குடும்பம் அவளை அழிச்சிருவாங்க. எனக்கு பவி வேணும். அவளுக்கு ஒண்ணு ஆச்சுன்னா உன் குடும்பத்தை சும்மா விட மாட்டேன். உன்னையும் தான்”, என்று சொல்லி விட்டு ரவி செல்ல அபியும் போகும் அவனை முறைத்து விட்டு காரைக் கிளப்பினான்.

உடனே ஊருக்குச் சென்று அருந்ததியை உண்டு இல்லை என்று ஆக்க வேண்டும் என்ற யோசனையில் தான் இருந்தான். ஆனால் டிரைவ் செய்ய அவனது உடல் ஒத்துழைக்காதது போல இருக்க அடுத்த நாள் ஊருக்குச் செல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டு உணவைக் கூட மறந்து கட்டிலில் படுத்தான். மனது அவனுக்கு சோர்வாக இருந்தது. இப்படி இருக்கும் போதெல்லாம் அவனைத் தேற்றியது பவித்ரா தான். ஆனால் இன்று அவள் அவனிடம் பேச நினைத்தாலும் கோதை விட வில்லை.

தனிமையில் இருந்த அபிக்கு பழைய விசயங்களும் நினைவில் வந்து அவனை சோர்வடைய வைத்தது. அதையும் விட ரவி பேசியது நினைவில் வந்து அவனைக் கோபம் கொள்ள வைத்தது.

ரவி பவியை விரும்புவது அவனுக்கு முன்பே தெரியும் தான். ஆனால் அதை அபியால் ஏற்றுக் கொள்ள தான் முடிய வில்லை. ஏனோ மனது முரண்டியது. பவித்ராவை ரவியின் மனைவியாக அவனால் கற்பனை செய்து கூட பார்க்க முடிய வில்லை. அதே நேரம் அவளை திருமணம் செய்ய வேண்டும் என்றெல்லாம் அவன் நினைக்கவே இல்லை. ஒரு மாதிரி குழப்பமான மன நிலையில் இருந்தவன் அன்றைய தூக்கத்தை தொலைத்தான். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் அவனுக்கு புரிய வில்லை.

அதிகாலை நான்கு மணிக்கு தான் தூங்கவே ஆரம்பித்தான். ஆனால் ஐந்து மணிக்கு வீட்டின் காலிங் பெல் அடிக்க கதவைத் திறந்த அபி திகைத்தான். ஏனென்றால் அந்த காலையில் ரிஷி அவனைக் காண வந்திருந்தான். அவன் முகம் இறுகி போய் இருந்தது.

காதல் தொடரும்….

Advertisement