Advertisement

வீணாவின் இடத்துக்கு பல்லவி என்ற பெண் வேலைக்கு சேர்ந்தாள். எல்லாவற்றையும் தெளிவாக விசாரித்து தான் அவளை வேலைக்கு சேர்த்தான்.

ஒரு மாதம் அமைதியாக கழிய வேலையில் பல்லவி ஒரு தவறைச் செய்து விட்டாள். அது பெரிய அளவில் அபி கன்ஸ்ட்ரக்சனை பாதிக்கும் என்பதால் பல்லவியை பவித்ரா கடிந்து கொண்டாள்.

தன்னைப் போல வேலை செய்யும் ஒரு பெண் தன்னைக் கடிந்து கொள்வதா என்று எண்ணிய பல்லவி “நீ என்ன பெரிய இவளா? நீயும் இங்க ஒரு ஸ்டாப் தான். என்னை அரட்டுற வேலை எல்லாம் வச்சிக்காத. எதுன்னாலும் அபி சார் சொல்லட்டும்”, என்று மரியாதை இல்லாமல் பேச பவித்ரா கடுப்புடன் அங்கிருந்து சென்று விட்டாள்.

மற்றவர்கள் மூலம் விஷயம் கேள்விப் பட்ட அபி பல்லவியை உண்டு இல்லை என்று ஆக்கி விட்டான். “யாரை மரியாதை இல்லாம பேசுற? அவ இங்க ஒண்ணும் ஸ்டாப் கிடையாது. மேப் கன்ஸ்ட்ரக்சன்ல அந்த பி என்ற எழுத்துக்கு அர்த்தம் என்னன்னு தெரியுமா? பவித்ரா தான். அப்படின்னா அவளும் இங்க ஒரு பார்ட்னர் தான் புரியுதா? உன் தப்பை ஒத்துக்காம அவளை மரியாதை இல்லாம பேசின நீ இனி இங்க இருக்க கூடாது. கெட் அவுட்”, என்று அனைவர் முன்னிலையிலும் அவளை கடிந்து கொண்டவன் அன்றே அவளை வேலையை விட்டு நீக்கினான்.

பவித்ராவுக்கு பல்லவி வேலையை விட்டுச் சென்றது தெரியும். ஆனால் அபி அவளை கடிந்து கொண்டது எல்லாம் தெரியாது.

ஆனாலும் அங்கு வேலை செய்யும் பெண்கள் பவித்ராவிடம் அபி பேசியதையும் அவன் கோபத்தையும் சொல்ல பவித்ராவுக்கே இந்த தகவல் புதியது தான்.

அவனைத் தேடிச் சென்றவள் “உண்மையிலே என் பேரையும் சேத்து தான் கம்பெனிக்கு பேர் வச்சிருக்கியா அபி?”, என்று கேட்டாள்.

“ஆமா, இத்தனை நாள் உனக்கு இது தெரியாதா? முருகானந்தம்(M) அபிமன்யு(A) பவித்ரா(P) அதான் அந்த பேருக்கு அர்த்தம். அன்னைக்கு உன் கிட்ட எதுக்கு சைன் வாங்கினேன்னு நினைச்ச? உன் பேர்ல சேர் போட தான். மாசம் மாசம் உன் அக்கவுண்டுக்கு போட்டுட்டு தான் இருக்கேன். நமக்கு வர புராபிட்ல முப்பத்திமூனு பெர்ஸெண்ட் உன்னோட அக்கவுண்ட்ல தான் ஏறிக்கிட்டு இருக்கு”, என்றான் சாதாரணமாக.

“என்ன டா சொல்ற?”, என்று அதிர்ந்தவள் தன்னுடைய போனை எடுத்து அதில் தன்னுடைய பேங்க் அக்கவுண்டை பார்த்தாள். அதில் அறுபத்தி இரண்டு லட்சம் கிடக்க உண்மையிலே அதிர்ந்து தான் போனாள்.

“ஏன் அபி இப்படி?”

“இப்படின்னா? என்ன கேக்குற?”

“நான் உனக்கு வெறும் ஃபிரண்ட் மட்டும் தான் அபி. அது மட்டும் இல்லாம உன் கம்பெனில எம்ப்லாயி. அதுக்கு சம்பளமும் தர. அப்புறம் இது எதுக்கு”

“என்னது வெறும் பிரண்டா? நீ என்னோட ஃபிரண்ட் டி. எனக்கு எல்லாமும் நீ தான்.  நீ தான் எனக்கு சிரிக்க கத்துக் கொடுத்த. என்னோட மொத்த சந்தோஷமும் நீ தான். நியாயமா பாத்தா உனக்கு அம்பது பெர்சண்ட் கொடுக்கணும். ஆனா ஒரு அண்ணனா எனக்கும் சஞ்சுவுக்கு செய்ய வேண்டிய கடமை இருக்கு. அவளுக்கு கொடுக்க வேண்டியதை தான் அப்பா பேர்ல போட்டுருக்கேன். என் பேர்ல இருக்குற பணம் அடுத்த புராஜேக்ட்க்கான முதலீட்டுக்காக. எனக்கு ஏதாவது ஆனா கூட என்னோட பங்கும் உனக்கு தான் போகும்”, என்று சொல்ல பவித்ராவுக்கு என்ன சொல்ல என்று தெரிய வில்லை.

அவனது அன்பு அவளுக்குள் பேரதிர்வை உண்டாக்கியது மட்டும் உண்மை. நண்பர்கள் என்றால் உணவு உடையை பரிமாறிக் கொள்வார்கள். அதிக பட்சமாக கடனுதவி செய்வார்கள். ஆனால் இந்த அளவுக்கு ஒருவன் செய்வானா என்று அவளுக்கு வியப்பாக இருந்தது. அவனிடம் அடுத்து எதுவும் பேச வில்லை என்றாலும் அவனை முறைத்துப் பார்த்தாள்.

“என்ன டி?”

“நீ இப்படி பண்ணினா நான் உன் கிட்ட பணத்துக்காக பழகுறேன்னு இந்த உலகம் பேசும் அபி. எனக்கு கஷ்டமா இருக்கு”

“இந்த உலகம் என்ன வேணும்னாலும் பேசலாம். ஆனா என்னோட உலகம் நீ மட்டும் தான் பவி”, என்று சொல்ல அதற்கு மேல் அவளால் என்ன சொல்ல முடியும்? அதை வீட்டினரிடம் கூட பவித்ரா சொல்ல வில்லை. சொன்னால் நிச்சயம் கிருஷ்ணன் அபியை கண்டிப்பார். இல்லையென்றால் அவளை திட்டுவார் என்பதால் மனதுக்குள்ளே புதைத்துக் கொண்டாள். ஆனால் அதில் இருந்து ஒரு பைசா எடுக்க கூடாது என்பதில் அவ்வளவு தெளிவாக இருந்தாள்.

அதற்கு அடுத்த மாதத்தில் பவித்ராவுக்கு அவர்கள் படித்த கல்லூரியில் அசிஸ்டண்ட் புரபசராக வேலை கிடைத்தது. பகலில் கல்லூரிக்கு செல்பவள் மாலை வீட்டுக்கு வந்து டீ குடித்து விட்டு அவனது அலுவலகத்திற்கும் வேலைக்கு செல்வாள். இரவு ஒன்பது இல்லையென்றால் பத்து மணிக்கு வீட்டுக்கு வருவாள்.

எப்போதும் அவளைச் சுற்றி அபிமன்யுவின் கண் இருந்து கொண்டே இருந்தது. அவளுக்கு ஆபத்து வந்ததில் இருந்து கவனமாக இருந்தான். ஆனால் அதைச் சொன்னால் அவள் பயந்து விடுவாள் என்பதால் அதைச் சொல்ல வில்லை. ஆனாலும் அவனுக்கு அருந்ததி மேல் அவ்வளவு கோபம் இருந்தது.

பவித்ராவைப் பாதுகாக்க அதிபன் என்ற போலீஸ் ஆபிசரை நியமித்தான். அதற்கு என்று அவனுக்கு அதிகம் செலவு ஆனது. ஆனால் அவளுக்காக செய்தான். அதிபன் பவித்ராவை நிழல் போல தொடர்ந்தான்.

சில நாட்கள் அமைதியாக இருந்த வடிவு மீண்டும் தன்னுடைய கை வரிசையைக் காட்டினாள். பவித்ராவை காலி பண்ண மீண்டும் ஆள் அனுப்பினாள். அன்று அபியும் அசால்ட்டாக இருக்க அதிபனும் இத்தனை நாள் ஒன்றும் நடக்க வில்லை என்று சாதாரணமாக இருந்தான்.

அன்று பவித்ரா கல்லூரி பேருந்தில் இருந்து இறங்கி வீட்டை நோக்கி ரோட் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தாள். அதிபனும் கொஞ்சம் தள்ளி ஓரிடத்தில் நின்று கொண்டு தான் இருந்தான்.

அப்போது ஒரு ஆட்டோ அவளை நெருங்கி வந்தது. அவள் அதை கவனிக்க வில்லை. அதில் இருந்த முகமூடி அணிந்திருந்த ஒருவன் பவித்ரா கழுத்தை கத்தியால் கீற போக அவள் எதற்கோ கையை தூக்க அந்த கீறல் அவளது வலது கையில் விழுந்தது.

ஆ என்ற அலறலுடன் கையைப் பார்க்க ரத்தம் கொப்பளித்தது. ரத்தத்தைக் கண்டு மயங்கிச் சரிந்தாள். உடனே அங்கே கூட்டம் கூட அதிபனும் அங்கே வந்தான். அங்கிருந்தவர்களின் உதவியோடு அவளை தன்னுடைய காரில் ஏற்றி அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தான்.

மருத்துவமனையில் தான் ஒரு போலீஸ் என்று சொல்லி அடையாள அட்டையைக் காண்பித்து அவளுக்கு ராஜ வைத்தியம் பார்க்க வைத்தான் அதிபன். பவித்ராவின் விவரங்களை ரிசப்ஷனில் சொல்லி அவர்கள் வீட்டுக்கு தகவல் சொல்லச் சொன்னவன் அபிக்கு பதட்டத்துடன் அழைத்தான்.

“சொல்லுங்க அதிபன், பவி வீட்டுக்கு போய்ட்டாளா?”

“சார் சாரி”

“என்ன ஆச்சு அதிபன்?”, என்று கேட்டவனின் குரலில் அவ்வளவு கலக்கம்.

“எதுவும் நடக்காதுன்னு கொஞ்சம் அசால்ட்டா இருந்துட்டேன். ஆனா மேடத்தை”

“பவிக்கு என்ன ஆச்சு அதிபன்? அவளுக்கு ஒண்ணுன்னா…”, என்று பதறிப் போனான்.

“கழுத்தை எய்ம் பண்ணி கீறிருக்காங்க. ஆனா கைல பட்டுருச்சு. உடனே ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணிட்டேன். காயம் கையில அப்படிங்குறதுனால ஆபத்து இல்லை. ஆனா கொஞ்சம் பிளட் லாஸ் அதிகம். மேடம் ஸ்பாட்லே மயங்கிட்டாங்க”

“எவ்வளவு படிச்சு படிச்சு சொன்னேன் அதிபன், கேர்புல்லா இருங்கன்னு”, என்று சொன்னவனுக்கு அவ்வளவு கோபம். ஆனாலும் ஒரு அதிகாரியிடம் காட்ட முடியாதே.

“சாரி சார், தப்பு என் மேல தான்”, என்று அதிபன் மன்னிப்பு கேட்க அபியால் வேறு என்ன சொல்ல முடியும்?

“பவிக்கு பெருசா ஒண்ணும் இல்லை தானே?”

“நிஜமா ஒண்ணும் இல்லை, சார். ஆனா நாம இன்னும் கவனமா இருக்கணும். ஏன்னா கையில விழுந்த கீறல் கழுத்தில விழுந்திருந்தா…..”

“புரியுது அதிபன். அவளுக்கு நிஜமா ஒண்ணும் இல்லை தானே?”

“ஒண்ணும் இல்லை சார், நீங்க வாங்க. அவங்க வீட்டுக்கும் தகவல் சொல்லிட்டேன்”

“சரி, அப்புறம் உங்களை பத்தி என்னைப் பத்தி எதுவும் அவங்க குடும்பத்துக்கு தெரிய வேண்டாம். பயந்துருவாங்க”

“சரி சார்”, என்று சொல்லி போனை வைத்த அதிபன் கிருஷ்ணனும் கோதையும் அங்கே வருவது தெரிந்ததும் மறைந்து கொண்டான்.

பவித்ரா மயக்கத்தில் இருந்து கண் விழித்ததும் தான் பெற்றவர்களுக்கு நிம்மதியாக இருந்தது. மணியம்மையும் ரவியும் அவளைப் பார்க்க வந்து விட்டார்கள். ரிஷி கல்லூரியில் இருந்து அப்போது தான் மருத்துவமனைக்கு வந்தான். அப்போது அபியும் அங்கே வர அபிக்கு பவித்ரா சொல்லி இருப்பாள் என்று எண்ணி “வா அபி, பவியைப் போய் பார்க்கலாம்”, என்று அழைத்துச் சென்றான் ரிஷி.

அபி ரிஷியுடன் வந்ததால் ரிஷி தான் அவனுக்கு சொல்லி இருப்பான் என்று அனைவரும் எண்ணிக் கொண்டார்கள்.

“வா பேராண்டி, பாத்தியா என் பேத்தியை”, என்று மணியம்மை அபியை வரவேற்க ஆவலாக திரும்பிப் பார்த்தாள் பவித்ரா.

அவன் கண்கள் அவளிடமே இருந்தது. அவன் கண்களில் இருந்த கலக்கத்தைக் கண்டவள் “எனக்கு ஒண்ணும் இல்ல அபி. எனக்கு வலிக்க கூட இல்லை”, என்று அவனுக்கு ஆறுதல் சொன்னாள். ஏனோ அவன் கண்களில் இருந்த வலி அவளை அதிகம் பாதித்தது.

Advertisement