Advertisement

அத்தியாயம் 9 

சிக்கு விழுந்த நூல் 

கண்டு போல தான் 

காதல் கொண்ட மனமும்!!!

அபி அமைதியாக காரை ஓட்ட பவித்ரா வெளியே வேடிக்கை பார்த்த படி வந்தாள். போகும் வழி முழுவதும் அபிக்கு வீணா தங்களைப் பற்றி யாரிடம் பேசி இருப்பாள் என்ற யோசனை தான். அவனுக்கு அருந்ததி மீது இருந்த வெறுப்பு “ஒரு வேளை அம்மா கிட்ட தான் பேசுறாளோ? ஆமா அவங்களா தான் இருக்கும். அவங்களை தவிர வேற யார் என்னை வேவு பாக்கப் போறாங்க?”, என்று அவனை எண்ண வைத்தது. வடிவு மீது அவனுக்கு எந்த சந்தேகமும் வரவில்லை. அப்படியே வந்தாலும் வடிவைச் செய்ய சொன்னது அருந்ததி என்று தான் நம்பி இருப்பான்.

ஆனால் தான் கண்காணிக்கப் படுகிறோம் என்ற எண்ணம் அவனுக்கு உவப்பானதாக இல்லை. எரிச்சலாக வந்தது. இனி வீணாவை இங்கே விட்டு வைப்பது அவனுக்கு நல்லதாக பட வில்லை. அதையும் விட வீணாவை வேலையை விட்டு அனுப்பினால் அடுத்து அருந்ததி என்ன செய்வாள் என்று குழப்பமாக இருந்தது.

“என்ன ஆச்சு அபி? எதுக்கு இவ்வளவு டென்ஷன்?”, என்ற பவித்ராவின் குரலில் நடப்புக்கு வந்தான்.

“இந்த வீணாவைப் பத்தி தான் யோசிச்சிட்டு வரேன் பவி”

“ஏன் அவளுக்கு என்ன? உன் கிட்ட புரோபோஸ் பண்ணிட்டாளா?”, என்று கேட்க சடன் பிரேக் போட்டு காரை நிறுத்தியவன் “உனக்கு எப்படி தெரியும்?”, என்று கேட்டான்.

“நேத்தே என் கிட்ட பேசினா”

“நீயும் புரோபோஸ் பண்ணுன்னு அவ கிட்ட சொன்னியாக்கும்?”

“சே சே, ஆல் தீ பெஸ்ட் மட்டும் தான் சொன்னேன். ஆனாலும் சக்ஸஸ் ஆகாதுன்னு நேத்தே தோணுச்சு”, என்று சொல்லி சிரித்தாள்.

அவன் உதடுகளும் புன்னகையால் மலர்ந்தது. “உன்னை”, என்ற படி அவள் தலையில் வலிக்காமல் குட்டியவன் காரை எடுத்தான். ஏனோ இது வரை இருந்த டென்ஷன் பவித்ராவின் அருகாமையில் குறைவது போல இருந்தது.

சிறிது நேரம் ஊர் சுற்றி விட்டு மதிய உணவையும் உண்டு விட்டே இருவரும் அலுவலகம் வந்தார்கள். அவர்கள் வந்ததும் வீணா தன்னுடைய போனை எடுத்து யாருக்கோ தகவல் சொல்வது கண்ணில் பட்டது அபிக்கு. ஆனாலும் கண்டு கொள்ளாமல் தன்னுடைய அறைக்குச் சென்றான்.

அன்று மாலை அனைவரும் வேலை முடிந்து கிளம்பினார்கள். பவித்ராவும் கோதை கோவிலுக்கு அழைத்ததால் அபியிடம் சொல்லி விட்டுச் சென்று விட்டாள். வீணாவும் கிளம்ப போக அபி அவளை அழைத்தான்.

“சார்”, என்ற படி அறைக்குள் வந்தாள். அவள் வந்ததும் அவன் அவளை முறைத்துப் பார்க்க அந்த பார்வையில் பயந்தவள் “கிரிட்டிங்க் கார்ட் கொடுத்தது தப்பு தான் சார். இனி இப்படி பண்ண மாட்டேன். வேலையை விட்டு மட்டும் தூக்கிறாதீங்க”, என்று அவசரமாக சொன்னாள் வீணா. ஏனென்றால் அவள் வேலையை விட்டு நின்றால் வீட்டுக்கு பதில் சொல்ல வேண்டும். அதை விட அவளை வடிவு உண்டு இல்லையென்று ஆக்கி விடுவாளே.

“இப்ப கிரிட்டிங்க் கார்ட் கொடுத்ததுக்கு விசாரிக்க உன்னை வரச் சொன்னேன்னு யார் சொன்னா? எனக்கு வேற ஒரு விஷயம் தெரியனுமே?”, என்று கேட்ட அபி அவளையே கூர்மையாக பார்த்தான். அவன் பார்வையில் அவளுக்கு உள்ளுக்குள் பயபந்து உருண்டது.

“சார்”, என்று தயக்கமாக அழைக்க “சொல்லு யார் அது?”, என்று கேட்டான்.

“எனக்கு புரியலை சார்”, என்று அவள் தடுமாற்றத்துடன் சொல்ல “புரியலையா? சரி நேரடியா கேக்குறேன். என்னை வேவு பார்க்க உன்னை இங்க அனுப்பினது யாரு?”, என்று கேட்டான்.

“சார்”

“சொல்லப் போறியா இல்லை விசாரிக்கிற விதத்துல விசாரிக்கட்டுமா?”

“அது வந்து…”

“சொல்லு யாரு?”, என்று அவன் அழுத்தி கேட்க வடிவு சொன்னது அவளுக்கு நினைவில் வந்தது.

“இங்க பாரு வீணா, எக்காரணம் கொண்டும் நீ என்னோட ஆளுன்னு அபிக்கு சந்தேகம் வந்துரவே கூடாது. அப்படி ஒருவேளை வந்துருச்சுன்னு வச்சிக்கோ எந்த யோசனையும் இல்லாமல் அருந்ததி பேரைச் சொல்லிரு. அபி அவ கிட்ட கேக்க மாட்டான். அப்படி இல்லாம என் பேரைச் சொன்ன நீயும் சேந்து கம்பி எண்ணனும்”, என்று வடிவு சொல்லி இருந்தாள்.

“சொல்லு வீணா, உன்னை இங்க அனுப்பினது யார்? இப்ப நான் வந்ததும் நீ கால் பண்ணி யாருக்கோ சொன்ன தானே? உண்மையைச் சொல்லு. இல்லைன்னா உன்னை போலீஸ்ல ஒப்படைக்கவா வேண்டாமான்னாவது சொல்லு….. ”

“சார் வேண்டாம் சார். நான் உண்மையைச் சொல்றேன். உங்களைப் பத்தின தகவலைச் சொல்ல சொன்னது உங்க அம்மா அருந்ததி மேடம் தான் சார். அதுக்கு தனியா சம்பளமும் தராங்க”, என்று சொல்ல அந்த பதில் அபிக்கு அவ்வளவு பெரிய அதிர்ச்சியை எல்லாம் தரவில்லை.

அவனுக்கு தான் இது ஏற்கனவே தெரியுமே.                            “ஓஹோ, ஓகே நீ போகலாம்”, என்றான் நிதானமாக.

“சாரி சார்”

“நீ சாரி சொல்ல தேவை இல்லை. ஏன்னா இனி நீ இங்க வொர்க் பண்ணப் போறதே இல்லை. நீ போகலாம்”, என்று சொல்ல “சார்”, என்று அதிர்வாக அழைத்தாள்.

“உன்னை போகச் சொன்னேன்”, என்று சொன்னவன் தன்னுடைய வேலையைப் பார்க்க வீணாவுக்கு வெளியே செல்வதை தவிர வேறு வழி இருக்க வில்லை.

அவள் வாசல் வரை சென்றதும் “ஒரு நிமிஷம்”, என்று அழைத்த அபி அவள் திரும்பிப் பார்க்கவும் “உனக்கு வேலை போன விசயத்தையும் உங்க மேடம் கிட்ட சொல்லு. ரொம்ப சந்தோஷப் படுவாங்க. இந்த அபியை அவங்க ரொம்ப ஈஸியா எடை போட்டுட்டாங்க”, என்றான்.

அவள் கிளம்பிச் சென்றதும் அருந்ததியை தான் அழைத்தான். “அபி”, என்று ஆனந்த அதிர்வாக அழைக்க அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் “வீணா யாரு?”, என்றான்.

“அபி”

“என்னை வேவு பார்க்க ஆள் வச்சிருக்கீங்க? அதுவும் என் ஆபீஸ்ல? சபாஷ்”

“அது அபி”

“செ யெஸ் ஆர் நோ”

“ஆமா அபி, நான் தான் வீணாவை அனுப்பினேன். எனக்கு உன் வாழ்க்கை முக்கியம் அபி”

“ஏன் என் வாழ்க்கைக்கு என்ன?”

“நீ தப்பான பாதைல போற அபி. அந்த பவித்ரா கூட உனக்கு இருக்குற தொடர்பை நிறுத்திக்கோ. அவ உனக்கு வேண்டாம் அபி. அவ உன்னை மயக்க பாக்குறா?”

“ஓஹோ, அந்த அளவுக்கு விசாரிச்சாச்சா?”

“ஆமா, பவி பவின்னு அவளே கதின்னு கிடக்குறியாம். அவ உன்னோட பணத்துக்காக தான் உன் கூட இருக்குறா? அவ குணம் சரி இல்லை டா. அம்மா மேல உள்ள கோபத்துல தப்பான ஆளைக் கிட்ட வச்சிருக்க அபி”

“உங்களை விட இந்த உலகத்துல எல்லாரும் எனக்கு நல்லவங்க தான்“

“அபி”

“நான் அடிச்சு சொல்லுவேன். உங்களை விட இந்த உலகத்துல எல்லாருமே நல்லவங்க தான்”

“நான் தப்பானவ தான் அபி. ஆனா அந்த பவித்ராவை உன் வாழ்க்கையை விட்டு அனுப்பு. அது தான் உனக்கு நல்லது”

“முடியாது. அவ தான் என்னோட உலகம். அவ இல்லைனா… இந்த அபி ஒண்ணுமே இல்லை”

“எனக்கு என் மகன் வாழ்க்கை முக்கியம்”

“ஸோ”

“அதை கெடுக்குற எதா இருந்தாலும் அதை உன் கிட்ட இருந்து தள்ளி நிறுத்துவேன்”

“அப்ப பவியை என்னை விட்டு விலக்கி வைப்பீங்கன்னு சொல்றீங்க?”

“கண்டிப்பா”

“முடிஞ்சா பண்ணுங்க மிஸ்டர் அருந்ததி மேடம்”

“அபி”

“எப்ப என் பவி மேல உங்க பார்வை தப்பான விதத்துல போச்சோ அப்பவே எனக்கும் உங்களுக்கும் ஒண்ணுமே இல்லை. உங்களால என்ன முடியுமோ அதைச் செய்ங்க. என் பவியை பாதுகாக்க வேண்டியது என்னோட பொறுப்பு”, என்று சொல்லி போனை வைத்து விட்டான்.

அடுத்த நொடி “வடிவு”, என்று அழைத்தாள் அருந்ததி.

“அண்ணி”

“அபிக்கு நாம அனுப்பின வீணாவைப் பத்தி தெரிஞ்சுருச்சு. கொஞ்சம் ஆறப் போட்டு அந்த பவித்ராவை அவன் வாழ்க்கையை விட்டு அனுப்புவோம். நமக்கு அபி முக்கியம். இப்ப எதுவும் செய்ய வேண்டாம்”, என்று அருந்ததி சொல்ல அதைக் கேட்ட வடிவு சரி என்று தலையாட்டினாலும் உடனே பவித்ராவைக் கொல்ல ஆள் அனுப்பி வைத்தாள். அவர்கள் மாட்டினால் அருந்ததி பெயரைச் சொல்ல வேண்டும் என்றும் சொல்லி வைத்தாள்.

அவர்களும் பவித்ராவை ஆக்ஸிடெண்ட் செய்ய வர அபி அவளைக் காப்பாற்றினான். ஆனாலும் அவனுக்கு அதை செய்தது யார் என்று சந்தேகம் எல்லாம் வரவில்லை. ஏனென்றால் அதைச் செய்தது அருந்ததி தான் என்று நூறு சதவீதம் நம்பினான். அதனால் அவளுக்கு காவலாக இருந்தான்.

அடுத்த இரண்டு நாள் கழித்து “ஏய் அபி கேக்கணும்னு நினைச்சேன். அந்த வீணாவை எங்க ஆளைக் காணும்? லீவ்ல போயிருக்காளா?”, என்று கேட்டாள் பவித்ரா.

“அவ வேலையை விட்டு போயிட்டா“

“அடப்பாவி உன் கிட்ட புரோபோஸ் பண்ணா வேலையை விட்டே தூக்கிருவியா?”, என்று கேட்க ஆம் என்று சொன்னான். ஆனால் அவளிடம் உண்மைக் காரணத்தை சொல்லி அவளை பயமுறைத்த அவன் நினைக்க வில்லை.

Advertisement