Advertisement

இதற்கிடையில் வீணா மனதில் மெல்ல நுழைந்தான் அபி. அவனை ஒரு தலையாக காதலிக்க ஆரம்பித்தாள். ஆனால் பவித்ராவை தவிர மற்ற யாரிடமும் அபி சிரித்து கூட பேச மாட்டான். அதனாலே அவனைக் கண்டு எட்டடி தள்ளியே நிற்பாள். 

“நம்மளைப் பாத்து சிரிக்கிறானா பாரு? அவளைக் கண்டா மட்டும் அப்படியே புன்னகை அரசனா மாறிருவான்?”, என்று பவித்ரா மேல் வன்மமும் வளர்ந்தது. 

இப்படியே நாட்கள் செல்ல பவித்ரா படிப்பும் முடிந்தது. அன்று பவித்ராவுக்கு ரிசல்ட் வரும் என்ற தகவல் கிடைத்ததும் அவளை விட ஆர்வமாக இருந்தது அபி தான். அவளது மார்க்கை முதலில் பார்த்தவன் சந்தோஷமாக கேக் சுவீட் எல்லாம் வாங்கிக் கொண்டு அவளது வீட்டுக்குச் சென்றான். அங்கே ஏற்கனவே மணியம்மை ரவி அனைவரும் இருக்க அனைவருக்கும் கொடுத்தவன் பவித்ராவுக்கு வாழ்த்துச் சொன்னான். 

அவனது சந்தோஷம் ரவிக்கு உவப்பானதாக இல்லை. ஏனோ அடி மனதில் ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது. அதனால் மணியம்மையிடம் சொல்லி பவித்ரா திருமணம் பற்றி கிருஷ்ணன் மற்றும் கோதையிடம் பேசச் சொன்னான். 

அதைக் கேட்ட கிருஷ்ணனோ “இப்ப தானே அத்தை பவி படிச்சு முடிச்சிருக்கா. ஒரு ரெண்டு வருஷம் வேலைக்கு போகட்டும். அப்புறம் கல்யாணம் பண்ணலாம்”, என்று முடித்து விட்டார். அதைக் கேட்டு ரவிக்கு பெருத்த கவலை தான். ஆனால் எதுவும் செய்ய முடிய வில்லை. 

இப்படி இருக்க அபிக்கு ஒரு பெரிய புராஜெக்ட் கிடைத்தது. ரிஷியின் புரபஸர் தான் அந்த வீடு கட்டும் புராஜெக்ட்டை அவனுக்கு கொடுத்தார். அவன் அதில் பிசியாகி விட ரிஷிக்கு அதே கல்லூரியில் அசோசியேட் புரபஸராக பதவி உயர்வு கிடைத்தது. பவித்ராவுக்கும் அதே கல்லூரியில் வேலைக்கு கேட்டிருந்தான். அங்கே எந்த வேகண்ட்டும் இல்லாததால் பவித்ரா முழு நேரமாக அபி அலுவலகத்திற்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தாள். 

அபி கட்டும் பில்டிங் அனைத்துக்கும் இண்டீரியர் டெக்கரேசன் செய்வது பவித்ரா தான். இருவரின் உழைப்பிலே இரு வருடங்களில் அந்த நிறுவனம் நல்ல முறையில் வளர்ச்சி அடைந்தது. அவனுக்கு பக்க பலமாக இருந்தது அவள் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. 

வீணாவும் இங்கே நடப்பதை வடிவுவிடம் சொல்லிக் கொண்டு தான் இருந்தாள். பவித்ரா புகைப்படத்தையும் வடிவு மற்றும் ரோஹினி இருவரும் பார்த்தார்கள். ஆனால் அவள் அழகு அருந்ததியை மாற்றி விடக் கூடும் என்று பயந்து அருந்ததியிடம் மட்டும் காட்டவே இல்லை. அருந்ததியும் பவித்ரா மேல் வெறுப்பை வளர்த்துக் கொண்டதால் அவளைப் பார்க்க விரும்பவில்லை. 

வடிவுக்கு தான் நாள் ஆக ஆக தலை வேதனையாக இருந்தது. வீணா மூலம் அபி முழுக்க முழுக்க பவித்ராவுடன் நேரத்தை செலவழிக்கிறான் என்று தெரிந்து உள்ளுக்குள் இடிந்து போனாள். இந்த பவித்ரா குடும்பத்துக்குள் வந்தால் வடிவுக்கும் அவளது பிள்ளைகளுக்கும் ஒன்றும் கிடைக்காதே என்று பயமாக இருந்தது.  

அப்போது அபிக்கு ஒரு சம்பந்தம் வர வடிவை அழைத்த அருந்ததி “வடிவு அபி எப்படி இருக்கான்? நீ பேசுனியா? அந்த வீணா பொண்ணு ஏதாவது தகவல் சொல்லுச்சா?”, என்று கேட்டாள்.  

“அவனுக்கு என்ன நல்லா தான் இருக்கான்?”

“அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு யோசிக்கிறேன். ஒரு நல்ல சம்பந்தம் வந்திருக்கு”, என்று அருந்ததி சொல்ல “இவளுக்கும் என் மகளுங்களைக் கண்ணு தெரியாது போல? இவ நினைச்சா முடிஞ்சிருமா? இவ மகன் அங்க பவி புராணம் பாடுறானே”, என்று எண்ணிக் கொண்டு “நல்ல விஷயம் அண்ணி. அபி கிட்ட பேசுங்க”, என்றாள். 

“என்னை பேச விட்டா தான் அதிசயம். நீயே பேசு வடிவு”

“அண்ணி உங்களுக்கு இன்னும் நிலைமை புரியலை. அபி வாழ்க்கை நம்ம கையில இல்லை. அது முழுக்க முழுக்க அந்த பவித்ரா பொண்ணு கிட்ட தான்”

“இன்னுமா அந்த பொண்ணு கூட சுத்திக்கிட்டு இருக்கான்”

“அவன் விட்டாலும் அவ விடணுமே? புளியங்கொம்பை பிடிச்சிருக்காளே?”

“அவளை எப்படியாவது விரட்டனும் வடிவு. ஏதாவது செய்”, என்று சொல்ல “நான் பாத்துக்குறேன் அண்ணி”, என்று சொன்ன வடிவு முகம் ஒளிர்ந்தது. 

தன்னை பெரிய ஆபத்து நெருங்க இருக்கிறது என்று அறியாத பவித்ரா அவள் உண்டு அவளது வேலை உண்டு என்று இருந்தாள். அப்படி இருந்தாலும் அவளுக்கு தெரிய வந்த விஷயம் வீணாவின் பார்வை அபி மேல் விழுவது தான். 

அதைக் கண்டு அவளுக்கு பொறாமை எல்லாம் வரவே இல்லை. அபிக்கு வீணா சரியாக இருப்பாளா என்ற எண்ணம் மட்டுமே அவளுக்கு வந்தது. அழகாக இருக்கிறாள். ஜோவியலாக பேசுகிறாள். நல்ல திறமைசாலி. கூடவே அபியையும் ஒருதலையாக காதலிக்கிறாள். அதனால் அவள் அபிக்கு பொருத்தமாக இருப்பாள் என்று தோன்றியது. ஆனால் அவள் பக்கம் அபியின் பார்வை செல்லவே செல்லாது என்று அவளுக்கு தெரியுமே?

ஒரு நாள் ஆதங்கத்தில் “ஏன் டா இப்படி மண்ணு மாதிரி இருக்குற?”, என்று கேட்டாள் பவித்ரா. 

“நான் என்ன டி செஞ்சேன்?”

“உனக்கு ஒரு பீலிங்கும் வராதா. இங்க எத்தனை பொண்ணுங்க இருக்காங்க. ஒருத்தரையாவது சைட் அடிக்கிறியா?”

“அவங்க எல்லாம் என் ஸ்டாப்”

“இல்லாட்டி மட்டும் பாத்து கிழிச்சிருவ”

“நீ மட்டும் எப்படியோ?”

“நான் அம்மா அப்பா பாக்குற பையனைக் கல்யாணம் பண்ணணும்னு இருக்கேன். ஷோ சைட் அடிக்க தோணலை. ஆனா நீ அடிக்கலாம்ல? அட்லீஸ்ட் உன்னைப் பாக்குற பொண்ணையாவது பாக்கலாம்ல?”

“யார் என்னை பாக்குறாங்களாம்?”

“அந்த வீணா உன்னை ஆர்வமா பாக்குறா டா. அவளுக்கு உன்னைப் பிடிச்சிருக்கு போல? ஆளும் அழகா தானே இருக்கா? உனக்கு ஓகே வா?”

“என்னைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டே கேக்குற?”, என்று வேதனையாக கேட்க அவன் குணம் அறிந்த பவித்ராவுக்கு அவன் வாழ்வு எப்படி ஆகுமோ என்று கஷ்டமாக இருந்தது. இது வரை பார்த்தே அறியாத அவனது தாயின் மீது கோபம் கூட வந்தது.

“சரி அவளை விடு, ஏன் அபி என்னை உனக்கு பிடிக்கும் தானே?”, என்று கேட்டு பேச்சை மாற்றினாள். 

“உன்னை மட்டும் தான் டி பிடிக்கும்”

“அப்படின்னா உனக்கு நான் பொண்ணு பாக்கட்டுமா டா?”

“ஆஹான், என்ன ஒரு ஆசை. தாராளமா பாரேன்”, என்று சிரித்தான். 

“தேங்க்ஸ் டா. சரி பொண்ணு எப்படி இருக்கணும்?”, என்று கேட்க அவளை நக்கலாக பார்த்தவன் முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு “நீ பாக்குற பொண்ணு என் வளர்த்திக்கு கொஞ்சம் குறைவா இருக்கணும். நல்ல கலரா இருக்கணும். கண்ணு குண்டு குண்டா இருக்கணும். மூக்கு சின்னதா இருக்கணும். கன்னம் மாம்பழம் மாதிரி சாஃப்டா இருக்கணும். தலைமுடி உன்னை மாதிரி இடுப்பைத் தாண்டி நீளமா இருக்கணும். ஒள்ளியும் இல்லாம குண்டும் இல்லாம இருக்கணும். அப்புறம் முக்கியமான விஷயம் அவளுக்கு பாஸ்ட் லவ் இருக்க கூடாது”, என்று சொல்ல அவனை முறைத்துப் பார்த்தாள் பவித்ரா. 

“என்ன டி முறைக்கிற?”

“நீ சொல்றது எல்லாம் எப்படி ஒரே ஆள் கிட்ட இருக்கும்?”

“எல்லாம் இருக்குற மாதிரி கண்டு பிடி. நான் கட்டிக்கிறேன். பேச்சு எல்லாம் மாற மாட்டேன்”, என்றான் அவன். 

தலையை சுற்றி பார்த்தவள் ரோட்டில் சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணைக் காட்டி “இந்த பொண்ணு ஓகே யான்னு பாரு?”, என்று கேட்டாள். 

திரும்பிப் பார்த்தவன் “மூக்கு கொஞ்சம் பெருசா இருக்குற மாதிரி இருக்கு. வேற பாரேன்”, என்றான் அசால்ட்டாக. 

“நீ வேணுக்குன்னு பண்ணுற அபி”

“அதான் தெரியுதே? அப்புறம் என்ன? விடு. இனி பொண்ணு பாக்காத”

“அப்ப உன் கல்யாணம்?”

“எனக்கு அதுல எல்லாம் விருப்பம் இல்லை டி. பொண்ணுங்கன்னாலே பிடிக்கலை. அவங்களும் எங்க அம்மா மாதிரி இருந்தா?”

“அம்மாவோட சூழ்நிலை என்னன்னு தெரியாம”, என்று அவள் ஆரம்பிக்க “அந்த பேச்சு வேண்டாம் பவி. பிளீஸ். கொஞ்சம் சந்தோஷமா இருக்கேன் உன்னால. அதைக் கெடுத்துறாத”, என்று கேட்க அதற்கு மேல் அவள் என்ன பேசவாம்?

“ஓகே ஓகே உடனே பொங்கிட்டு வந்துருவியே? ஆமா இந்த பொண்ணு மூக்கைப் பத்தி குறை சொல்றியே? உன் மூக்கு மட்டும் என்ன சின்னதாவா இருக்கு? எவ்வளவு பெருசா இருக்கு?”, என்று வம்பிழுத்தவள் அவன் மூக்கை திருகி வைத்தாள். 

“ஆ வலிக்குது டி ராட்சசி. என் மூக்கு பெருசு தான். அதனால தான் சின்ன மூக்கு உள்ள பொண்ணு வேணும்னு கேக்குறேன்”, என்றவனை அவளால் முறைக்க மட்டுமே முடிந்தது. 

அன்று அபி பவித்ரா இருவரும் புன்னகையுடன் அலுவலகம் நுழைய அதைக் கண்ட வீணா முகம் கருத்தது. மதிய உணவு இடைவெளியில் பவித்ராவைக் காண வந்தாள் வீணா. 

“என்ன வீணா? என்னைப் பாக்க வந்துருக்கீங்க?”, என்று கேட்டாள் பவித்ரா. 

“எனக்கு ஒரு விஷயம் உங்க கிட்ட கேக்கணும் பவி”

“கேளுங்க”

“நீங்களும் அபியும் விரும்புறீங்களா?”

“இந்த கேள்வியை வேற யாராவது கேட்டா அப்படியே நினைச்சிக்கோங்கன்னு சொல்லிக்கிட்டு போய்க்கிட்டே இருப்பேன். ஆனா உங்க கிட்ட அப்படி சொல்ல முடியலை. ஏன்னா நீங்க அபியை விரும்புறீங்க ரைட்?”

“ஆமா பவி. ஐ லவ் ஹிம்”

“நல்ல விஷயம் தான். ஆனா அபி…”

“அவரை நான் பாத்துக்குறேன். என்னால அவரை சரி கட்ட முடியும்”, என்று வீணா சொல்ல அவளை அடப்பாவமே என்று தான் பார்த்தாள் பவித்ரா. 

“ஆல் தீ பெஸ்ட்”, என்று பவித்ரா சொல்ல சந்தோஷமாக அங்கிருந்து சென்ற வீணா அடுத்த நாளே அபிமன்யுவிடம் காதல் வார்த்தைகள் கொண்ட ஒரு கிரீட்டிங்கை கொடுத்தாள். 

“என்ன இது?”, என்று கேட்ட அபி அவளை ஒரு பார்வை பார்த்தான். 

“ஐ லவ் யு சார். எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு”, என்று சொல்ல “பவி எந்த பொண்ணு மேலயும் கை வைக்க கூடாதுன்னு சொல்லிருக்கா. அதனால பொறுமையா இருக்கேன். இல்லைன்னா என்ன நடக்கும்னு தெரியாது. நீ இங்க வேலை பாக்க வந்தியா இல்லை காதலை வளக்க வந்தியா? ஒழுங்கா வேலையை மட்டும் பாக்குறதா இருந்தா பாரு. இல்லைன்னா சீட்டைக் கிழிச்சு அனுப்பிருவேன்”, என்றான். 

“சாரி சார்”, என்று சொன்ன வீணா முகம் தொங்கிப் போய் அங்கிருந்து சென்றாள். 

அபியோ அவள் சென்ற பிறகும் எரிச்சலில் தான் இருந்தான். அவனுக்கு அது வரை அவளது உழைப்பில் இருந்த நல்ல எண்ணம் இப்போது அவள் மேல் அவனுக்கு இல்லாமல் போனது. 

அவன் எரிச்சலுடன் அமர்ந்திருக்க அப்போது தான் அலுவலகம் வந்த பவித்ரா எப்போதும் போல் முதலில் அவனைக் காண வந்தாள். 

“வா பவி”, என்றவன் முகம் ஒரு மாதிரி இருக்க “என்ன டா ஒரு மாதிரி இருக்க?”, என்று கேட்டாள். 

“ஒரு சின்ன டென்ஷன் அதான்”

“என்ன டென்ஷன்?”

“கொஞ்சம் வெளிய போகலாமா? இங்க இருக்க மூச்சு முட்டுற மாதிரி இருக்கு”, என்று அவன் சொல்ல வேறு எதுவும் கேட்காமல் “சரி வா, போகலாம்”, என்றாள். 

அவனும் அவளுடன் கிளம்பி விட்டான். இருவரும் போவதை வேதனையாக பார்த்த படி அமர்ந்திருந்தாள் வீணா. அப்போது வடிவு அவளை அழைத்தாள். 

“சொல்லுங்க மேடம்”, என்ற படி அவள் பேச ஆரம்பிக்க “கார் சாவி மறந்துட்டேன் பவி. இரு எடுத்துட்டு வரேன்”, என்று சொல்லி மீண்டும் உள்ளே வந்தான் அபி. அவன் உடனே வருவான் என்று யாரும் எதிர் பார்க்க வில்லை. 

மற்றவர்கள் தங்கள் வேலையைப் பார்க்க வீணா மட்டும் வடிவு உடன் போன் பேசிக் கொண்டிருந்தாள். அவன் உள்ளே வரும் போது “அபி சாரும் பவித்ராவும் இப்ப தான் வெளிய போனாங்க மேடம். அந்த பவித்ரா தான் வந்து அபி சாரைக் கூட்டிட்டு போனா”, என்றாள். அதைக் கேட்டு அதிர்ந்து போய் நின்றான் அபி. 

“சரி மேடம் அவங்க ரெண்டு பேரும் வந்தா சொல்றேன்”, என்று அவள் பேசுவது கேட்டது அபிக்கு. ஆனால் அதை கேட்காதது போல சாவியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டான். 

காதல் தொடரும்…..

Advertisement