Advertisement

அத்தியாயம் 8 

கரையைத் தொட நினைக்கும் 

அலையின் விடாமுயற்சியைப் 

போல தான் எந்தன் காதலும்!!!

அபி அலுவலகத்தில் வேலைக்கு சேர்த்திருந்த ஒரு பெண் திருமணம் என்ற காரணத்தைச் சொல்லி வேலையில் இருந்து செல்ல அந்த பதவிக்கு பேப்பரில் விளம்பரம் கொடுத்தான் அபி. அங்கே தான் பிரச்சனை ஆரம்பித்தது. 

ரோஹினி படித்து முடித்து விட்டு சென்னையில் வேலை தேடிக் கொண்டிருந்தாள். அப்போது தான் அபியின் கம்பெனி விவரம் அவளுக்கு தெரிந்தது. அவளது படிப்புக்கு அவனது அலுவலகத்தில் வேலை இல்லை தான். ஆனாலும் அவளால் அதை சாதாரணமாக எடுக்க முடிய வில்லை. 

“அம்மா இங்க வாயேன்”, என்று அழைத்தாள். 

“என்ன டி?”, என்ற படி வந்தாள் வடிவு. 

“இங்க பாரு”

“என்னது இது? எம்.ஏ.பி(MAP) ன்னு இருக்கு”

“நம்ம அபி சென்னைல ஒரு கம்பெனி ஆரம்பிச்சிருக்கான் மா. அதுக்கு ஆள் வேணும்னு விளம்பரம் போட்டுருக்கான் பாரு”

“என்ன உளறுற? அபி கம்பெனி ஆரம்பிச்சா நம்ம கிட்ட எப்படி சொல்லாம இருப்பான்? இது வேற யாராவது இருக்கும்”

“நானும் வேற யாரோன்னு தான் முதல்ல நினைச்சேன். ஆனா இதோ அவனோட போட்டோவே இருக்கு பாரு”, என்று சொல்லி அவனது புகைப்படத்தைக் காட்டினாள். 

“ஆமா இது அவன் தான். என்ன டி இது?”

“என்னைக் கேட்டா? அவன் சும்மாவே திமிர் பிடிச்சவன். இப்ப ஒரு கம்பெனிக்கு ஓனர் வேற? அதுக்கு தான் அவ்வளவு பணம் வாங்கிருக்கான். இனி இந்த ஊர் பக்கமே வர மாட்டான் மா. உன் கனவு எல்லாம் அவ்வளவு தான். அவன் எனக்கு வேணும் மா”

“இரு டி புலம்பாத. என்ன செய்யலாம்னு பாப்போம்”

“முதல்ல அவனுக்கு கால் பண்ணி ஏன் எங்க கிட்ட சொல்லலைன்னு கேளு மா”

“அப்படி கேட்டா என்னை கேள்வி கேக்க நீங்க யாருன்னு கேப்பான் டி. கேக்குற ஆள் கிட்ட சொல்லி கேக்கணும்”

“யாரு மா?”

“வேற யாரு? உன் அத்தை தான். அவ கேட்டா தான் அவன் இன்னும் காண்டாவன்”, என்று சொன்ன வடிவு “அண்ணி”, என்று அழைத்த படி அருந்ததியைத் தேடிச் சென்றாள். 

“சொல்லு வடிவு”

“என்னன்னு சொல்றது? கொஞ்சம் பெரிய விஷயம் தான் அண்ணி. நல்ல விஷயம் தான். ஆனா கொஞ்சம் பயமா இருக்கு”

“என்னன்னு சொல்லு வடிவு. யாரைப் பத்தி பேசுற? என்ன விஷயம்?”

“நம்ம அபி பத்தி தான்”

“அபிக்கு என்ன?”, என்று சிறு பதட்டத்துடன் கேட்டாள் அருந்ததி. 

“பதறாதீங்க. அவன் சென்னைல ஒரு கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி ஆரம்பிச்சிருக்கான். அது நல்ல விஷயம் தான். ஆனா நம்ம கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலையே?”

“நீ உண்மையாவா சொல்ற வடிவு? நம்ம அபியா?”

“ஆமா”

“அவன் கம்பெனி ஆரம்பிச்சது நல்ல விஷயம் தான். நம்ம கிட்ட சொல்லிருந்தா இன்னும் பெரிய அளவுல பண்ணிக் கொடுத்துருக்கலாம். ஆனா என்னை ஒதுக்கி வச்சிட்டான்ல?”,. என்று வேதனையுடன் சொல்ல “அது நீ பண்ணின வேலையால”, என்று மனதில் எண்ணிக் கொண்டாள் வடிவு. 

“என்னன்னு அவனுக்கு கால் பண்ணிக் கேளுங்க அண்ணி”, என்று சொல்ல தயக்கத்துடன் அவனுக்கு அழைத்தாள் அருந்ததி. 

அதை வேண்ட வெறுப்பாக எடுத்த அபி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க “என் கிட்ட பேச உனக்கு பிடிக்காதுன்னு தெரியும் அபி. ஆனா பேச வேண்டிய விஷயம் வந்ததால தான் பேசுறேன்”, என்றாள் அருந்ததி, 

“என்ன?”, என்று பட்டென்று கேட்டான். 

“நீ சென்னைல கம்பெனி ஆரம்பிச்சிருக்கியா? அதுக்கு தேவையான பணம்…..”, என்று ஆரம்பித்து எவ்வளவு வேண்டும் என்றாலும் தருகிறேன் என்று தான் சொல்ல வந்தாள். 

ஆனால் அதை காது கொடுத்துக் கேட்காமல் “என்ன நீங்க வேவு பாக்க வச்ச ஆள் எல்லாம் சொல்லிட்டானா? இத்தனை மாசம் கழிச்சு சொல்லிருக்கான். ஆமா ஆரம்பிச்சிருக்கேன் தான். அதுக்கான பணம் நீங்க தான் கொடுத்தீங்க? ஆனா நான் அதை வட்டியோட திருப்பிக் கொடுத்துருவேன்”, என்றான். 

“நான் அதைக் கேக்கலை அபி. எங்க கிட்ட ஒரு வார்த்தை ஏன் சொல்லலை?”

“ஏன் சொல்லணும்? என்னைக் கேள்வி கேக்குற வேலை எல்லாம் வச்சிக்காதீங்க. அதுக்கு யாருக்கும் உரிமை இல்லை. உங்க பணத்தை நான் கடனா தான் வாங்கிருக்கேன். கண்டிப்பா அடைச்சிருவேன்”, என்று கத்தியவன் போனை வைத்து விட்டான். 

அருந்ததி முகம் சுருங்கிப் போய் நிற்க அதை சந்தோஷமாக பார்த்த வடிவு முகத்தை மாற்றிக் கொண்டு “என்ன ஆச்சு அண்ணி? என்ன சொன்னான்?”, என்று கேட்டாள். 

“என்ன சொல்லுவான்? வழக்கம் போல திட்டிட்டு வச்சிட்டான். இப்ப என்ன செய்யுறது?”

“அவனை அப்படியே விடக் கூடாது அண்ணி”

“ஆமா வடிவு. என்ன செய்ய? ஏதாவது சொல்லேன்”

“நியாயமா பாத்தா நமக்கு தெரிஞ்ச ஆளை அவன் கிட்ட வேலைக்கு சேக்கணும். நம்ம ஆள் அவன் கிட்ட இருந்தா தான் அவன் சரியா இருக்கானா இல்லையான்னு தெரியும்”

“அப்புறம் என்ன? செஞ்சிற வேண்டியது தானே? நம்ம ஆஃபிஸ்ல வேலை பாக்குறவங்களோட ரிலேசன் யாராவது சிவில் இன்ஜினியரிங் முடிச்சிருந்தா அந்த விளம்பரம் பாத்து வேலைக்கு சேருற மாதிரி சேரச் சொல்லணும். நான் உங்க அண்ணா கிட்ட கேக்குறேன். நீயும் விசாரி”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள். 

“ஆடு சிக்கிருச்சு. அம்மாவுக்கும் மகனுக்கும் இடைல நிரந்தரமா பிரிவினையை உண்டாக்கிற வேண்டியது தான்”, என்று எண்ணி கொண்ட வடிவு அடுத்த இரண்டு நாளில் வீணா என்ற பெண்ணைப் பிடித்து அருந்ததி அனுமதியுடன் அபியின் அலுவலகத்தில் வேலைக்கு சேர்த்து விட்டாள். 

அபியும் வீணாவின் படிப்பை வைத்து வேலைக்கு தேர்வு செய்ய அவளும் திறமையானவளாக இருந்ததால் அவனும் வேறு எதுவும் யோசிக்க வில்லை. ஆனால் அவனுக்கு தெரியாமல் அங்கே நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும்ம் வடிவுக்கு சொல்லி விடுவாள் வீணா. அதற்காக அருந்ததியிடம் இருந்து தனி சம்பளம் அவளுக்கு சென்றது. 

வீணா வேலைக்கு சேர்ந்த இரண்டே நாளில் பவித்ராவைப் பற்றியும் அவளது குடும்பத்தைப் பற்றியும் வடிவுக்கு சொல்லி விட்டாள். அந்த அலுவலகமே பவித்ராவுக்கு கொடுக்கும் முக்கியத்துவமும் அபி பவி பவி என்று தாங்குவதும் வீணாவுக்கு உவப்பானதாக இல்லை. அதனால் பவித்ரா பற்றி கொஞ்சம் அதிகமாகவே சொல்லி வைத்தாள். 

அதைக் கேட்ட வடிவு “அடுத்த எதிரியா”, என்று மனதில் எண்ணிக் கொண்டு அருந்ததியிடம் “நம்ம அபி நமக்கு இனி கிடைக்கிறது சந்தேகம் தான் அண்ணி”, என்றாள். 

“என்ன வடிவு சொல்ற?”

“ஆமா அண்ணி, ஒரு மோஹினி பேய் அவனைப் பிடிச்சு வச்சிருக்கு” 

“மோஹினி பேயா?”

“ஆமா அண்ணி. பவித்ரான்னு ஒரு பொண்ணு அபியை மட்டும் இல்லை. அவன் ஆஃபிசையே கைக்குள்ள வச்சிருக்கா. நம்ம பையனும் பவி பவின்னு அவ பின்னாடி தான் அலையுறானாம். அதுக்கு அவ குடும்பமும் கூட்டாம். இத்தனை நாள் ஒரு குடும்பமே நம்ம சொத்தை உறிஞ்சிருக்கு. அதான் அபி அவ்வளவு பணம் கேட்டுருக்கான். இப்ப நம்ம அபி உழைப்பையும் தின்னுட்டு இருக்காங்க அண்ணி. ஏதாவது செய்யணும்”

“கொஞ்சம் தெளிவா சொல்லு வடிவு”

“பவித்ரான்னு ஓரு பொண்ணு அபிக்கு ரொம்ப நெருக்கமாம். அவள் குடும்பமும் அப்படி தானாம்? தினமும் வந்துருவாங்களாம். அதுவும் அந்த பொண்ணு அபி கூட அவ்வளவு குளோசாம். ரெண்டு பேரும் லவ்வர்ஸ்ன்னு வேற பேசிக்கிறாங்களாம். அபி கம்பெனியை திறந்து வச்சதே அந்த பொண்ணோட பாட்டி தானாம். நம்மளை ஒதுக்கிட்டு அவ குடும்பத்தையே உள்ளே விட்டுருக்கான். எனக்கு என்னமோ அபி நம்ம கையை விட்டு ஒரெடியா போய்ட்டான்னு தோணுது. எதை காமிச்சு அந்த பொண்ணு அவனை மயக்கி வச்சிருக்காளோ தெரியலை. இந்த அபிக்கு அவ கூட கல்யாணம் முடிஞ்சாலும் நமக்கு தெரிய வராது போல?”, என்று வடிவு சொல்ல அருந்ததிக்கு திக்கென்று இருந்தது. 

“அந்த பொண்ணு எப்படி என்னன்னு விசாரிச்சியா வடிவு?”

“விசாரிக்காம இருப்பேனா அண்ணி? நம்ம அபி கூட பழகுறவங்க யாரு என்னன்னு நமக்கு தெரியணும் தானே? ஆனா நான் விசாரிச்ச வரைக்கும் அந்த பொண்ணைப் பத்தி யாரும் நல்லதா சொல்லலை”

“என்ன சொல்ற வடிவு?”

“ஆமா அண்ணி, அந்த பொண்ணுக்கு நிறைய பசங்க கூட பழக்கம் இருக்கும் போல? அவ குடும்பமும் சரி இல்லை. அந்த பொண்ணு நம்ம அபி கூட பழகுறதை நல்ல குடும்பமா இருந்தா கண்டிச்சிருப்பாங்க தானே? ஆனா அவங்க வீட்ல எதுவுமே சொல்ல மாட்டாங்களாம். அந்த பொண்ணோட அண்ணனே வந்து அவளை அபி இருக்குற இடத்துல வந்து டிராப் பண்ணிட்டு போவானாம். அன்னைக்கு வீணா ஒரு கையெழுத்து வாங்க அபி வீட்டுக்கு போயிருக்கா. அங்க கதவை திறந்ததே அந்த பொண்ணு தானாம் அண்ணி. ஒரு கல்யாணம் ஆகாத பையன் வீட்டுக்கு அவ எதுக்கு போகணும்? நம்ம பொண்ணுங்களை நாம அப்படி அனுப்புவோமா?”

“இப்ப என்ன செய்ய வடிவு,. எனக்கு என் மகன் வேணும். அவன் வாழ்க்கை தப்பா போகக் கூடாது”

“அப்படின்னா அந்த பொண்ணை அபி வாழ்க்கைல இருந்து விரட்டனும் அண்ணி. ஆனா அவளை மிரட்டினா அபிக்கு தெரிஞ்சிரும். நம்மளை தான் தப்பா நினைப்பான். அதனால என்ன செய்யலாம்னு கொஞ்சம் பொறுமையா இருக்கலாம் அண்ணி. ஏன்னா அந்த பொண்ணு படிக்க தான் போகப் போறாளாம். எப்பவாது தான் கம்பெனிக்கு வருவா போல?”, என்று சொல்ல அருந்ததி சரி என்று சொன்னாள். வடிவும் பவித்ராவை ஒழித்துக் கட்ட நல்ல சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தாள்.

இப்படியே நாட்கள் நகர்ந்தது. பவித்ரா கல்லூரியில் சேர்ந்தாள். படிக்கும் நேரம் போக மற்ற நேரம் அபியின் அலுவலகத்தில் தான் இருப்பாள். 

Advertisement