Advertisement

அவன் அமைதியைக் கண்டு கொள்ளாமல் “நான் மணிக் கணக்குல தான் டா வேலை செய்ய முடியும்? அதனால ஒவ்வொரு மணிக்கும் இவ்வளவுன்னு சம்பளம் கொடு”, என்று சொல்ல சரி என்று தலையசைத்தான்.

அலுவலகம் சென்றதும் அங்கு வேலை செய்யும் அனைவரும் அவளைக் கண்டு புன்னகைத்தார்கள். அவர்களிடம் பேசப் போன பவித்ராவை கை பிடித்து தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்றவன் “இங்க உக்காரு”, என்று சொல்லி ஒரு சீட்டைக் காண்பித்தான்.

அதில் அமர்ந்தவள் அவனையே பார்க்க தன்னுடைய சிஸ்டமில் ஏதோ செய்தவன் ஒரு பேப்பரை பிரிண்ட் எடுத்து அவள் முன் நீட்டி “இந்தா இதுல கையெழுத்துப் போடு”, என்றான்.

என்ன ஏது என்று எதுவும் கேட்காமல் “பேனா கொடு”, என்று கேட்டாள் பவித்ரா. “படிச்சு பாரு டி”, என்று அவன் சொல்ல அதைக் கேட்காமல் அவன் பாக்கெட்டில் இருந்தே பேனாவை எடுத்தவள் அவன் சொன்ன இடத்தில் கையெழுத்தைப் போட்டு விட்டு பேனாவை அவன் சட்டைப் பையில் வைத்தாள்.

“என்ன டி இது?”

“எது?”

“என்ன ஏதுன்னு கேக்காம கையெழுத்து போட்டுட்ட?”

“காரணம் இல்லாம நீ கேக்க மாட்டியே?”

“நான் உன்னை ஏமாத்திட்டா?”

“நீ செய்ய மாட்ட? அப்படி செஞ்சா அதுலயும் ஒரு அர்த்தம் இருக்கும்”, என்றவள் மீண்டும் பேனாவை வாங்கி அங்கிருந்த ஒரு வெற்று பேப்பரிலும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தாள் விளையாட்டாய். அந்த ஒற்றைக் கையெழுத்தை வைத்து அவன் ஒரு பெரிய விஷயத்தை செய்யப் போவதை அவள் அப்போது அறிய வில்லை. அறிந்த பிறகும் அதற்கு அவள் மறுப்பு சொல்ல வில்லை.

அவள் செய்கையில் பிரம்மித்துப் போய் நின்றது அவன் தான். அவளது நட்பின் மேலும் அவள் மேலும் மிகப் பெரிய மரியாதையே வந்தது. அவனுக்கும் அவள் உயிர் தோழி தான் அதற்காக அவள் வந்து ஒரு பேப்பரை நீட்டினால் இப்படி எல்லாம் படிக்காமல் கையெழுத்திட மாட்டானே?”

“நான் உன் அளவுக்கு எல்லாம் இல்லை டி. நீ இப்ப ஒரு பேப்பரைக் கட்டினா நான் கையெழுத்து போடுவேனான்னு தெரியலை. நீ எப்பவும் கிரேட் தான் பவி”, என்று பெருமையாகச் சொன்னான்.

“ஏன்னா நீ அபி, நான் பவித்ரா. எல்லா விரலும் ஒரே மாதிரி இருக்காது. அதே போல தான் மனுசங்களும். நீயும் நானும் ஒரே மாதிரி யோசிக்க முடியாது. சரி எனக்கு ஒரு டேரி மில்க் சாக்லேட் வாங்கித் தரியா? ரொம்ப நாள் ஆச்சு சாப்பிட்டு. அதுவும் நம்மளா வாங்கிச் சாப்பிடுறதை விட யாராவது ஓசில வாங்கிக் கொடுத்து சாப்பிட்டா சுவை டபுலா இருக்கும்”

“இப்ப தான் பெரிய பொண்ணு மாதிரி பேசுறேன்னு நினைச்சேன்? அதுக்குள்ள குழந்தை மாதிரி பிகேவ் பண்ணுற?”

“வாங்கித் தருவியா மாட்டியா?”

“வா”, என்று அழைத்துச் சென்றவன் வாங்கிக் கொடுத்தான். பின் அவனது ஊழியர்களிடம் பவித்ரா அங்கே வேலை செய்யப் போவதையும் அறிவித்தான். அன்றில் இருந்து அங்கே பவித்ராவும் ஒரு எம்ப்ளாயி தான். அவளுக்கு என்று அடையாள அட்டை கூட அன்றே அவள் கையில் கிடைத்தது.

அன்று மாலை வேலை முடிந்து அவனே அவளை வீட்டில் கொண்டு விட்டான். அடுத்த இரண்டு நாளில் அந்த மாதம் முடிவடைய எல்லாருக்கும் சம்பளம் அக்கவுண்டில் கிரடிட் ஆகியது. பவித்ராவுக்கும் மூன்று நாளுக்கான சம்பளம் ஏறியது. அதைக் கண்டு வியந்து போனாள். மற்றவர்களை விட அவளுக்கு கொஞ்சம் சம்பளம் அதிகம் தான். ஆனாலும் அவள் வேலைக்கு அது சரியாகவும் இருந்தது. அவனை எண்ணி புன்னகைத்துக் கொண்டாள்.

அதே நேரம் ரவி ஒரு மாதிரி குழப்பமாகவே சுற்றிக் கொண்டிருக்க “என்ன டா ஒரு மார்கமா சுத்திக்கிட்டு இருக்க? ஏதாவது பேய் கீய் அடிச்சிருச்சா?”, என்று கேட்டார் மணியம்மை.

“என்னை அடிக்க பேய் தனியா வரணுமா? நீ ஒருத்தி போதாதாம்மா?”

“வர வர உன் பேச்சு எதுவும் சரி இல்லை. ஒரு நல்ல பொண்ணா பாத்து உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது தான்”, என்று சொல்ல அன்னையை முறைத்தான்.

“என்ன டா முறைக்கிற? கல்யாணம் பண்ணாம சந்நியாசம் போகப் போறியா?”

“உன்னை அடிச்சே கொல்லப் போறேன் பாரு மா. நான் எப்ப கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன்?”

“அப்புறம் ஏன் டா முறைக்கிற?”

“முறைக்காம உன்னை கொஞ்சுவாங்களா? இத்தனை நாள் என் பேத்தி தான் இந்த வீட்டு மருமகன்னு சொல்லிட்டு இப்ப வேற நல்ல பொண்ணா பாக்கப் போறேன்னு சொல்ற?”, என்று கேட்க மகனின் மனது புரிந்தது. மணியம்மைக்கும் ஆசை தான்.

“நான் உன் அக்கா கிட்டயும் மாமா கிட்டயும் பேசவா டா? அதான் பவி படிச்சு முடிச்சிட்டாளே?”, என்று கேட்டார்.

அவன் அப்போதே சரி என்று சொல்லி இருந்தால் கடவுள் பவிக்கும் அபிக்கும் முடிச்சு போட்டிருக்க மாட்டாரோ என்னவோ?”

“என்ன மா இப்படிச் சொல்ற? அவ எம்.ஈ படிச்சு முடிக்கட்டும். பேசலாம்”, என்று சொன்னான் ரவி. மணியம்மையும் வேறு எதுவும் சொல்ல வில்லை.

இப்படி எல்லாம் நல்ல படியாக போய்க் கொண்டு இருந்த சமயத்தில் தான் வடிவுக்கு அபி தன்னை அழைக்கவே இல்லையே என்று தோன்றியது. அதனால் அவளே அவனை அழைத்தாள்.

அதை எடுத்து “சொல்லுங்க”, என்றான்.

“என்ன அபி கூப்பிடவே இல்லை”

“கொஞ்சம் பிசியா இருந்தேன். என்ன விஷயம்?”, என்று கத்தரிப்பது போல வந்தது அவனது கேள்வி.

“படிப்பு முடிஞ்சு நாலஞ்சு மாசம் ஆகுது. நீ வீட்டுக்கும் வரலை. வந்து பிஸ்னஸ் பாத்துக்கலாம்ல? இனியும் அருந்ததி கிட்ட பொறுப்பை விட்டு வச்சா அவளும் அண்ணனும் சேந்து எல்லா சொத்தையும் என்ன பண்ணுவாங்களோ தெரியலை. நீ வந்து கையகப் படுத்திக்கோ அபி. எப்ப வர?”

“இல்லை என்னால அங்க வர முடியாது”

“ஏன்? ஏதாவது வேலைக்கு போறியா?”

“ஆமா. இனி நான் அங்க வரதா இல்லை. அவங்க பணமும் வேண்டாம். அவங்க என்னமும் செய்யட்டும்”, என்று சொல்ல “ஐயையோ, இவன் ஒதுங்கிட்டா சொத்து எல்லாம் இல்லாதவங்களுக்கு தான் போகும்”, என்று அதிர்ந்து போனாள்.  வடிவுக்கு பணம் வேண்டும். எல்லா சொத்தும் வேண்டும். அதற்கு அபி வேண்டும்.

பணம் வேண்டும் என்று நேரடியாக கேட்டால் அருந்ததி கணக்கு கேட்காமல் கொடுக்க மாட்டாள். அதனால் அபி மூலமாக தான் அவள் கரக்க முடியும். அதனால் “என்ன அபி இப்படிச் சொல்ற?”, என்று கேட்டாள்.

“சரியா தான் சொல்றேன். இனி எனக்கும் அந்த வீட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தெளிவா உங்க அண்ணி கிட்ட சொல்லிருங்க”, என்று சொல்லி போனை வைத்து விட்டான்.

அபி அப்படிச் சொன்னது வடிவை நிம்மதி இழக்க வைத்தது. அன்று முழுவதும் யோசித்தவள் என்ன செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்து அடுத்த நாள் அருந்ததியை தேடிச் சென்றாள்.

“அண்ணி”

“சொல்லு வடிவு”

‘இந்த அபி நாலஞ்சு மாசமாவே எனக்கு கால் பண்ணலை. அவன் படிப்பும் முடிஞ்சிருச்சு. என்ன செய்யுறான் ஏது செய்யுறான்னு ஒண்ணுமே புரியலை”

“எனக்கும் தெரியலை வடிவு. அவன் எல்லாம் நம்ம கிட்ட சொல்லிட்டா செய்யுறான்?”, என்று சொன்ன அருந்ததியின் குரலில் கவலை மண்டிக் கிடந்தது.

“நான் யாரையாவது அனுப்பி அவன் என்ன செய்யுறான்னு பாக்கட்டுமா?”

“வேண்டாம் வடிவு, போன தடவையே ஏதோ நான் வேவு பாக்குறேன்னு சொல்லி சண்டை போட்டான். அவன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. அவனா என்னைக்கு வரான்னு பாப்போம்”, என்று சொல்லி முடித்து விட்டாள்.

ஆனால் வடிவால் அதை விட முடிய வில்லை. என்ன செய்யலாம்? எப்படி அபியை இங்கே வர வைப்பது என்ற யோசனையிலே நாட்களை கடத்தினாள்.

சரியாக ஒரு மாதம் கழித்து அபியைப் பற்றிய தகவல் வடிவுக்கு வந்தது.

காதல் தொடரும்…..

Advertisement