Advertisement

“சொல்லு பவி”

“அப்பா கேட்ட மாதிரி உன்னை வேற யாரும் கேட்டுறக் கூடாதுன்னு தோணுது டா”

“புரியலை”

“உங்க வீட்ல இருந்து பணம் வேணும்? ஆனா அவங்க வேணாமான்னு அப்பா கேட்டாங்கல்ல? அதை வேற யாரும் கேட்டுறக் கூடாது”

“ம்ம்”

“இப்ப வாங்கின பணத்தை நீ பேங்க் லோனுன்னு நினைச்சிக்கோ. அதை எப்படியாவது நீ திருப்பிக் கொடுத்துரு. அது கட்டாயம் இல்லை தான். ஏன்னா இது உன்னோட பணம். உனக்கு தான் முழு உரிமையும். ஆனா அவங்க உறவை வேணாம்னு நினைக்கிற நீ பணத்தையும் அப்படி தானே நினைக்கணும்? இல்லைன்னா உன் அம்மாவை மன்னிச்சு ஏத்துக்கோ”

“அவங்களை மன்னிக்கணும்னு நினைச்சாலும் என் மனசு அதுக்கு சம்மதிக்குமானு தெரியலை. ஆனா நீ சொன்ன மாதிரி நான் இந்த பணத்தை அவங்க கிட்ட கொடுத்துருவேன்”, என்று அபி சொல்ல அதற்கு மேல் பவித்ரா எதுவும் சொல்ல வில்லை.

வேறு ஏதேதோ பேசி அந்த நாளைக் கழித்தார்கள். அதற்கு பிறகும் அவர்கள் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இல்லாமல் தான் நாட்கள் சென்றது. அடுத்த நாளில் இருந்து அவன் தேர்ந்தெடுத்திருந்த ஊழியர்கள் வேலைக்கு வர கம்பெனியும் நல்ல படியாக நடந்தது.

ரிஷிக்கு தெரிந்தவர்கள், கிருஷ்ணனுக்கு தெரிந்தவர்கள் என அவனுக்கு சிறு வீடு கட்ட புராஜெக்ட் கொடுத்தார்கள். சின்ன வீடு எல்லாம் கட்ட மாட்டேன் என்று சொல்லாமல் எல்லாவற்றையும் எடுத்து செய்தான் அபி. அவனது உழைப்புக்கு ஏற்ற வருமானம் அவனுக்கு கிடைத்தது. அந்த வருமானத்தை வைத்து அவனுக்கு என்று வீடு கட்ட முடிவு எடுத்தான். அதை பற்றி கிருஷ்ணனிடம் கேட்க வேண்டும் என்று எண்ணினான்.

அன்று பவித்ராவுக்கு பிறந்த நாள். அவளுக்கு என்று ஒரு சுடிதார் வாங்கிக் கொண்டு அவளைக் காண அவளது வீட்டுக்கே கிளம்பி  விட்டான். பவித்ராவும் அவனைக் காணத் தான் கிளம்பிக் கொண்டிருந்தாள். ஆனால் அவனிடம் அந்த பொறுமை எருமை எல்லாம் இல்லாமல் காலையிலே அவளைக் காண வந்து விட்டான்.

அவனைக் கண்டு முகம் மலர்ந்தவள் “ஹாய் அபி, என்ன டா நீயே வந்துட்ட? உன்னைப் பாக்க தான் கிளம்பிட்டு இருக்கேன்”, என்றாள்.

“ஏய் அவனை வாங்க போங்கன்னு சொல்லு டி”, என்றாள் கோதை.

“ரெண்டு வயசு தானே மா?”, என்று அவளும் “பரவால்ல ஆண்ட்டி அவ அப்படி கூப்பிடுறது தான் எனக்கு பிடிச்சிருக்கு”, என்று அவனும் சொல்ல வேறு யார் என்ன சொல்வதாம்?

பவித்ரா அன்னையை கண்டு நாக்கைத் துருத்த அவளை முறைத்த படி சென்றாள் கோதை. “ஹேப்பி பேர்த் டே பவி”, என்ற படி அவளிடம் பரிசை நீட்டினான்.

“தேங்க்ஸ் அபி”, என்ற படி அதை வாங்கிக் கொண்டவள் அவனை சாப்பிட அழைத்துச் சென்றாள். ரிஷியும் கல்லூரிக்கு கிளம்பி வர அவனிடம் பேசிய படி அபியும் உணவு உண்ண அமர்ந்தான்.

கோதை இட்லி, சட்னி, சாம்பார், வடை, கேசரி, வெண்பொங்கல் என்று பரிமாற அபியும் ரிஷியும் பேசிய படியே சாப்பிட்டார்கள். அப்போது குளித்து முடித்து வந்த கிருஷ்ணனும் அவர்களுடன் சாப்பிட அமர்ந்தார்.

புது வீடு கட்டுவதைப் பற்றி அவரிடம் அபி கேட்க அவரும் அவருக்கு தோன்றிய ஐடியாக்களை சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது பவித்ராவை வாழ்த்த என்று பிறந்த நாள் பரிசுடன் வந்தான் ரவி.

வந்தவன் கண்ணில் முதலில் விழுந்தது அபி தான். “இந்த காண்டாமிருகம் காலைலே அட்டண்டன்ஸ் போட்டுருச்சு போலயே?”, என்று எண்ணிக் கொண்டு அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு “ஹேப்பி பேர்த் டே பவி மா”, என்று சொல்லி அவளிடம் பரிசைக் கொடுத்தான்.

“தேங்க்ஸ் மாமா”, என்று சொல்லி சந்தோஷமாக அதை வாங்கிக் கொண்டாள் பவித்ரா. ரவி மலர்ந்த முகத்துடன் அவளைப் பார்க்க அபிக்கு ஏனோ ஒரு கோபம் உள்ளுக்குள் எழுந்தது.

“வா மாப்பிள்ளை, உக்காந்து சாப்பிடு”, என்று கிருஷ்ணன் அழைக்க ரவி மறுக்க எல்லாம் இல்லை. அபிக்கு எதிராக அமர்ந்தான். அவனுக்கு பவித்ரா பரிமாற அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த அபிக்கு கடுப்பாக இருந்தது. அது வரை கிருஷ்ணன் பேச்சில் கவனம் வைத்திருந்தவன் இப்போது அவர் சொல்வதற்கெல்லாம் ஆமா சாமி போட்டான்.

“சரி நீங்க சாப்பிடுங்க”, என்று சொல்லி விட்டு கிருஷ்ணன் எழுந்து சென்று விட்டார். “பவி யாருக்கு என்ன வேணும்னு கவனி”, என்று சொல்லி விட்டு கோதையும் சென்று விட்டாள்.

அப்போது “பவி படிப்பு முடிஞ்சிருச்சு, அடுத்து என்ன பண்ணப் போற?”, என்று ரிஷி கேட்க அபிக்கு கண்கள் ஒளிர்ந்தது.

“என்ன ரிஷி இப்படி கேக்குற? பவி நாளைக்கே வந்து நம்ம ஆஃபிஸ்ல ஜாயின் பண்ணட்டும்”, என்றான் அபிமன்யு.

“நட்பு, நண்பன்னு சும்மா பீத்திக்கிட்டா மட்டும் போதாது. பிரண்டுக்கு என்ன பிடிக்கும் என்ன ஆசைன்னு எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கணும். பவிக்கு டீச்சர் ஆகணும்னு ஆசை. அவளுக்கு எம்.ஈ படிச்சு ரிஷி மாதிரியே புரபஸர் ஆகணும்னு தான் கனவு. இது கூட தெரியலை”, என்று வாரினான் ரவி. அவன் சொன்னதைக் கேட்டு அபி முகம் சுருங்கிப் போனது. அவன் எதுவும் சொல்ல வில்லை.

ரவி பேசியதைக் கேட்டு பவித்ரா அபியைத் தான் பார்த்தாள். ஏனோ அவன் முக மாற்றம் அவளுக்கு கவலையைக் கொடுக்க “நீ சொல்றது சரி தான் மாமா. எனக்கு அண்ணா மாதிரியே புரபஸர் ஆகணும்னு தான் ஆசை. எம்.ஈ தான் எங்க காலேஜ்ல போடப் போறேன். ஆனா அபி ஆஃபிஸ்லயும் வேலைக்கு சேரப் போறேன். எனக்கு எப்ப எல்லாம் நேரம் கிடைக்கோ அப்ப எல்லாம் எனக்கு ஆபி ஆபீஸ்ல தான் வேலை. அபி எனக்கு பார்ட் டைம் வேலை போட்டுக் கொடுப்பான். அதுக்கு சம்பளமும் கொடுக்கணும். அப்படி தானே அபி?”, என்று கேட்க அபி முகம் சிறிது மலர்ந்தது.

“கண்டிப்பா, அது உன்னோட ஆபீஸ் பவி. நீ எப்ப வேணும்னாலும் வரலாம். நீ வந்தா எனக்கு சந்தோஷமா இருக்கும். உன்னோட எக்ஸாம் ரிசல்ட் வந்து நீ எம்.ஈ அப்ளிகேஷன் போட்டு காலேஜ் அட்மிசன் வர வரைக்கும் சும்மா தானே இருப்ப? இன்னைக்கே நம்ம ஆஃபிஸ்க்கு வா”, என்ற அபி ரவியை மிதப்பாக பார்த்தான்.

பவித்ராவுக்கு இன்றே அபி அலுவலகம் செல்வதில் விருப்பம் இல்லை தான். இத்தனை நாள் பரிட்சைக்கு படித்ததால் ஒரு இரண்டு நாளாவது ஓய்வெடுக்க நினைத்தாள். ஆனால் இப்போது மறுத்து பேசினால் அபி வருத்தப் படுவான் என்பதால் “அப்பாடி நீயா எப்ப கூப்பிடுவேன்னு பாத்தேன். எனக்கும் வீட்ல சரி போர் அடிக்கும். நீ கிளம்பும் போது என்னையும் கூட்டிட்டு போ அபி. காலேஜ் ஆரம்பிக்கிற வரைக்கும் நான் வேலைக்கு வரேன்”, என்றவள் அபியின் மலர்ந்த முகத்தைக் கண்டு சந்தோஷப் பட்டாள். அதற்கு பிறகு ரவி எதுவும் சொல்ல வில்லை. இப்போது அவன் மனது பாரமானது.

அபி அன்றே அவளை அலுவலகம் அழைத்துச் சென்று விட்டான். போகும் போது அபி ஏதோ யோசனையில் இருக்க “என்ன ஆச்சு அபி? ஏன் டல்லா இருக்க?”, என்று கேட்டாள்.

“நான் உனக்கு நல்ல பிரண்டா இல்லையோன்னு தோணுது பவி”

“ஏன் அப்படி?”

“இல்லை இத்தனை நாள் நீ என்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்க? ஆனா நான் உன்னைப் பத்தி உன்னோட ஆசையைப் பத்தி எல்லாம் கேட்டதே இல்லை. உனக்கு புரபஸர் ஆகணும்னு ஆசை. அது கூட எனக்கு தெரியலை பாரேன்”

“இதுல என்ன இருக்கு அபி? எனக்கும் உன்னைப் பத்தி எல்லாம் தெரியாது. இது சாதாரண விஷயம். இதுக்கு இவ்வளவு பீல் பண்ணுவியா நீ?”

“ஆனா அந்த ஓனானுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கே?”

“மாமாவுக்கு என்னைப் பத்தி தெரியாத விஷயம் எல்லாம் உனக்கு தெரியும் அபி. இது பெரிய விஷயமே இல்லை. இதுக்கு இவ்வளவு யோசிப்பியா? அதை விடு. எனக்கு எவ்வளவு சம்பளம் கொடுப்ப?”

“எவ்வளவு வேணும்? ஆஃபிஸே உன்னோடது தானே?”

“அடேயப்பா? உன் ஆபீஸ் எப்படி என்னோடதாகும்? சும்மா பேருக்கு எல்லாம் சொல்லக் கூடாது”, என்று அவள் சிரிக்க அது அவன் மனதில் ஆழமாக பதிந்து போனது.

Advertisement