Advertisement

அத்தியாயம் 7 

என்ன செய்தாயோ மாயவா 

கனவில் கூட உந்தன் பரிசம்!!!

ஒரு வழியாக கல்லூரி கடைசி நாளும் வந்தது. அபிக்கு இன்று தான் கடைசி பரீட்சை. அதுவும் புராஜெக்ட் தான். அவன் டெமோ காட்டுவதற்கு உள்ளே செல்ல அவனுக்காக வெளியே காத்திருந்தாள் பவித்ரா.

அவள் மனம் முழுக்க அபி நினைவு தான். அவன் இனி கல்லூரிக்கு வர மாட்டான். இனி அவனைப் எப்படிக் காண்பது என்று கவலையாக இருந்தது அவளுக்கு.

அவன் இல்லாமல் அவள் இருந்து விடுவாள். ஆனால் அபிக்கு நிச்சயம் அவளது சப்போர்ட் தேவை என்று அவளுக்கு தெரியும். அவன் வாய் விட்டு எதுவும் சொல்ல மாட்டான். ஆனால் அவளுக்கு தெரியும். அதற்காகவே அவனுடன் அதிக நேரம் செலவிடுவாள்.

கல்லூரியில் இருவரையும் பற்றி நிறைய வதந்திகள் உலா வரும் தான். இருவரும் காதலர்கள், திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்றெல்லாம் பேச்சு வரும். அது இருவருக்கும் தெரியும். ஆனால் அதை பெரிதாக இருவருமே எடுத்ததில்லை. அதற்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை.

“நீயும் அபியும் லவ் பண்ணுறீங்களா?”, என்று யாராவது பவித்ராவிடம் கேட்டால் “உனக்கு அப்படி தோணுச்சுன்னா அப்படியே நினைச்சிக்கோ”, என்று சொல்லி விட்டு கடந்து விடுவாள்.

இதையே அபியிடம் கேட்டால் அவனோ முறைப்புடன் கடந்து விடுவான். அதை அவர்கள் மூளையில் எல்லாம் ஏற்றிக் கொண்டதே இல்லை.

ஆனாலும் மதியம் லஞ்ச் பீரியடில் அவனுடன் அமர்ந்து ஒரு பத்து நிமிசமாவது பேசி விடுவாள். இனி அவனை எப்படிப் பார்க்க முடியும் என்ற கவலையில் இருக்க புராஜெக்ட் டெமோ முடிந்து வெளியே வந்த அபிமன்யுவின் முகம் பவித்ராவைக் கண்டதும் மலர்ந்தது.

“பவி”, என்ற படி அவள் அருகே வந்து அமர்ந்தான்.

“எப்படி பண்ணிருக்க அபி? அவுட்புட் பாத்தாங்களா?”

“பாத்தாங்க பவி. நிறைய கொஸ்டீன் கேட்டாங்க. பதில் சொல்லிட்டேன். அதெல்லாம் புல் மார்க் தான் வரும். அது சரி நீ எதுக்கு டி இப்படி டல்லடிக்கிற?”

“போ அபி உனக்கு என் மேல பாசமே இல்லை”

“ஏன் டி?”

“இனி நான் உன்னை எப்படி பாப்பேன்?”

“அட லூசு, இது பெரிய விஷயமா? நான் சென்னைல தானே இருக்க போறேன்? அதுவும் கம்பெனி ஆரம்பிக்க  வேண்டிய வேலை எல்லாம் இருக்கு. என்னோட கம்பெனி, நான் தங்கி இருக்குற வீடு எல்லாம் உனக்கு தெரியும். அப்புறம் என்ன?”, என்று சொல்ல “இருந்தாலும் காலேஜ்ல பாக்க முடியாதே”, என்றாள்.

“அதெல்லாம் பாத்துக்கலாம். உனக்கும் இன்னும் பத்து நாள்ல எக்ஸாம் ஆரம்பிச்சிரும். அப்படியே நேரம் ஓடிரும். உனக்கு எப்படியோ தெரியாது. எனக்கு தினமும் உன்னைப் பாக்காம உன் கிட்ட பேசாம எல்லாம் இருக்க முடியாது. யார் என்ன சொன்னாலும் நீ இல்லாம என்னோட உலகம் இயங்காது”, என்று அவன் சொல்ல அவனை நெகிழ்வுடன் பார்த்தாள்.

அபிமன்யு படிப்பும் முடிந்தது. படித்து முடித்த அடுத்த வாரத்தில் கம்பெனி திறப்பு விழாவை வைக்க முடிவு எடுத்தான். அதற்கான நல்ல நாள், நல்ல நேரம் எல்லாம் பார்த்துக் கொடுத்தது மணியம்மை தான்.

மணியம்மையையும் ரவியையும் அவர்களின் வீட்டுக்கே பவித்ராவுடன் சென்று அழைத்திருந்தான். விழா நாளில் பவித்ரா குடும்பமும் கிளம்பிச் சென்றது. மணியம்மையும் சென்றார். அன்னைக்காக வேண்டா வெறுப்பாக ரவியும் சென்றான். ஆனால் அங்கே போனதும் அனைவரும் திகைத்தார்கள். ஏனென்றால் இவர்கள் மட்டும் தான் அங்கே இருந்தார்கள். அவனது சொந்தம் என்று சொல்ல ஒருவர் கூட அங்கு வரவில்லை. சில அலுவலக ஊழியர்கள் கூட அதற்கு பிறகு தான் வந்தார்கள்.

“என்ன அபி இது? யாரையும் காணும்?”, என்று ரிஷி கேட்க “அதான் நீங்க எல்லாரும் இருக்கீங்கல்ல?”, என்று கேட்டான்.

“இது தப்பு பா. அவங்க பணம் வேணும். ஆனா அவங்க வேண்டாமா? எனக்கு உங்க வீட்ல என்ன பிரச்சனைன்னு தெரியாது. ஆனா என்ன தான் கோபம் இருந்தாலும் பெத்தவங்களை கஷ்டப் படுத்தக் கூடாது. அவங்களைக் கூப்பிட்டுருக்கணும் தானே?”, என்று கிருஷ்ணன் சொல்ல அபி முகம் கூம்பிப் போனது.

அதை பவித்ராவால் தாங்க முடிய வில்லை. அபி இப்போது என்ன நினைப்பான் என்று அவளுக்கு தெரியுமே? அவளுக்குமே அவனது வீட்டினர் யாரும் வராதது வருத்தம் தான். ஆனால் அவள் இப்போது அவனுக்காக பேச வேண்டும்.

அதனால் “அப்பா அபி ஒரு விஷயம் செஞ்சா அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும். அவங்களை கூப்பிடாததற்கும் ஏதாவது காரணம் இருக்கும் பா. அதான் நாம எல்லாரும் இருக்கோம் தானே? அபி இன்னைக்கு ஹேப்பியா இருக்கணும். வேற எதுவும் பேச வேண்டாம்”, என்று சொன்னாள். அதில் அபி முகம் மலர்ந்தது.

பவித்ரா அப்படி பேசிய பிறகு கிருஷ்ணன் எதுவும் சொல்ல வில்லை. அபி மணியம்மையை ஆஃபிசை திறந்து வைக்கச் சொல்ல சந்தோஷமாக திறந்து வைத்தார். ரவி மனதில் கூட இவன் நல்லவன் தானோ என்ற எண்ணத்தை விதைத்தான் அபிமன்யு. ஏனென்றால் அவனது உழைப்பை கண் முன்னால் கண்டவன் ஆயிற்றே.

ரிஷியும் பவித்ராவும் அவனுக்கு சந்தோஷமாக வாழ்த்துச் சொல்ல “வாழ்த்துக்கள்”, என்று மட்டும் சொல்லி முடித்துக் கொண்டான் ரவி. ஹோட்டலில் இருந்து அனைவருக்கும் சாப்பாடு ஆர்டர் செய்திருந்தான். அபி ரவியிடம் “சாப்பிடுங்க”, என்று மட்டும் சொன்னான். என்ன இருந்தாலும் ரவி அவனுக்கு கெஸ்ட். அதனால் அவன் தானே அவனைக் கவனிக்க வேண்டும்?

அனைவரும் கலகலப்பாக பேசிய படி உண்டார்கள். உணவு முடிந்ததும் பவித்ரா வீட்டினர் கிளம்ப அபியும் சந்தோஷமாக விடை கொடுத்தான்.

வெளியே வந்து அவர்கள் காரில் ஏற பவித்ரா அவனைத் திரும்பிப் பார்த்தாள். ஏனோ அந்த பெரிய கட்டிடத்தின் முன்னால் அவன் மட்டும் நிற்பது அவளுக்கு என்னவோ போல இருந்தது. அவனை தனிமையில் விட்டுச் செல்கிறோம் என்பது போல தெரிய “அப்பா நான் சாயங்காலம் வரட்டுமா? அபி மட்டும் தனியா இருக்கான் பா”, என்றாள்.

அதைக் கேட்டு ரவி முகம் கருக்க “சரி பவி. சாயங்காலம் அண்ணா கூப்பிட வருவான். அவன் கூட வந்துரு”, என்று சொன்னார் கிருஷ்ணன்.

சந்தோஷமாக அவள் மட்டும் இறங்கிச் செல்ல அபி அவளைக் கண்டு திகைத்தான். “என்ன பவி எதையாவது மறந்து வச்சிட்டு போய்ட்டியா? ஏய் அவங்க கிளம்புறாங்க”, என்று போகும் காரைப் பார்த்த படி கேட்டான்.

“நான் சாயங்காலம் வீட்டுக்கு போறேன் அபி. வீட்ல சரி போர். உன் கூட உன் ஆஃபிசை நல்லா சுத்திப் பாக்கப் போறேன்”, என்றாள்.

“உங்க வீட்ல உனக்கு போர் அடிக்குமா? தோட்டத்துக்கு போய்ட்டேன்னா உனக்கு வெளிய வரவே மனசு வராதுன்னு எனக்கு தெரியும் பவி. அது மட்டுமில்லாம இந்த ஆஃபிசை கட்ட ஆரம்பிச்சதுல இருந்து எல்லாமே நீ தான் பாத்துட்டு இருக்க? இதுல புதுசா சுத்திப் பாக்கப் போறியா?”, என்று சிரிப்புடன் கேட்டவன் “எனக்காக தானே?”, என்று ஆழ்ந்த குரலில் கேட்டான்.

“நாங்க எல்லாரும் போயிட்டா நீ தனியா பீல் பண்ணுவியோன்னு தோணுச்சு டா. அதான். சரி வா அப்படி உக்காந்து பேசலாம்”, என்று சொன்னவள் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தாள்.

அவள் அருகே சற்று இடைவெளி விட்டு அமர்ந்தவன் அமைதியாக இருக்க “என்ன அபி? என்ன யோசிக்கிற?”, என்று கேட்டாள்.

“நான் செஞ்சது தப்பா பவி?”

“எது?”

“என் வீட்ல இருக்குறவங்க கிட்ட சொல்லாதது. அங்கிள் சொன்னாரே? நிஜமாவே எனக்கு அவங்களைக் கூப்பிடணும்னு தோணலை. சொல்லனும்னு கூடத் தோணலை பவி”

“விடு டா, இன்னைக்கு ஒரு நாளாவது சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சிருப்ப. அவங்க யார் வந்திருந்தாலும் உன்னோட சந்தோஷம் முழுமையா இருந்திருக்காது. ஆனா ஒரே ஒரு விஷயம் சொல்லவா?”, என்று புரிதலுடன் கேட்டாள்.

Advertisement