Advertisement

அவளது நண்பன் முதல் முதலில் வீட்டுக்கு வரப் போகிறான் என்று அவ்வளவு ஆரவாரம் செய்தாள். மணியம்மையை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்த ரவிக்கு அவளது சந்தோஷம் வியப்பைக் கொடுத்தது. 

“பாத்தியா டா என் பேத்தியை, உன் பிறந்த நாளைக் கொண்டாட எவ்வளவு சந்தோஷமா வெயிட் பண்ணிட்டு இருக்கா பாரு”, என்று ரவியின் காதில் கேட்டார் மணியம்மை.  

எனக்காகவா என்று எண்ணி ரவி சிரிக்க அங்கே வந்த பவித்ரா “ஹேப்பி பேர்த் டே மாமா”, என்று ரவியை வாழ்த்தி அவனுக்கான பரிசையும் கொடுத்தாள். 

சந்தோஷமாக அதை வாங்கிக் கொண்டவன் அவளுக்காக வாங்கி வந்த பொருள்கள் அடங்கிய கவரை அவளிடம் கொடுத்தவாறே “ஏமா உன் பேத்தி முகத்துல கொஞ்சம் சந்தோஷம் எக்ஸ்ட்ராவா தெரியுது? என் பிறந்தநாளுக்கு இந்த சந்தோஷம் கொஞ்சம் ஓவரா இருக்குற மாதிரி இருக்குதே”, என்று கேட்டு பவித்ராவை வம்பிழுத்தான். 

அதற்கு பவித்ரா அவனை முறைக்க “அபி வீட்டுக்கு வரானாம் டா. அதான் மேடத்துக்கு இந்த சந்தோஷம். அப்ப இருந்து அவ இந்த அக்கப்போரு தான் பண்ணிட்டு இருக்கா”, என்ற படி வந்தாள் கோதை. 

“அபி வாரானா? அந்த பையனை இன்னைக்காவது பாத்துறனும். எவ்வளவு நாளா அவனைப் பாக்கணும்னு நினைச்சிட்டு இருக்கேன்”, என்று மணியம்மை சொல்ல “அந்த காண்டாமிருகம் வரதுக்கு தான் எல்லாரும் இந்த சீன் போடுறீங்களா? நான் கூட எனக்காக தான் இந்த அமர்க்களம்னு நினைச்சேன். அவன் என்ன அமெரிக்க அதிபரா?”, என்று எரிச்சலுடன் கேட்டான் ரவி. 

“மாமா, அபியை அப்படிச் சொன்ன பாத்துக்கோ? உன்னை அபி ஓனான்னு சொன்னதுல தப்பே இல்லை. எங்களைப் பொறுத்த வரை அவன் அதிபர் தான்”, என்றாள் பவித்ரா. அவள் சாதாரணமாக தான் சொன்னாள். ஆனால் ரவிக்கு தான் ஏதோ மனதை பிசைந்தது. 

எல்லா வருடப் பிறந்த நாள் போல இந்த வருடம் இல்லை என்று அவனுக்கே தெரிந்தது. பவித்ரா அவனை விட்டு கொஞ்சம் தள்ளிச் சென்ற உணர்வா? இல்லை இருவருக்கும் இடையே அபிமன்யு வந்து விட்டான் என்ற உணர்வா ஏதோ ஒன்று ரவியை அதிகம் பாதித்தது. இத்தனைக்கும் பவித்ரா அபியுடன் நட்பாக தான் பழகுகிறாள் என்று தெரியும். இருந்தும் அவன் மனது சரியாக இல்லை. 

இப்படியே மாறி மாறி பேசிக் கொண்டே நேரம் கழிந்தது. கிருஷ்ணன் எல்லாம் வாங்கி வர அதை சுத்தம் செய்ய, சமையல் செய்ய என நேரம் நிமிடமாய் கரைந்தது. 

பன்னிரெண்டு மணிக்கு தான் ரிஷி அபியை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தான். தயக்கத்துடன் தான் அவர்கள் வீட்டுக்கு வந்தான் அபிமன்யு. ஆனால் தயக்கம் எல்லாம் தேவையே இல்லை என்பது போல அனைவரும் அவனிடம் நடந்து கொண்டார்கள். 

கோதை கிருஷ்ணன் இருவரும் பெற்ற பிள்ளையை வரவேற்பது போல அவனை வரவேற்றார்கள். மணியம்மையோ அவனிடம் அவ்வளவு சந்தோஷமாக பேசினார். 

அவர்கள் வரவேற்பில் அவன் திகைத்து விழிக்க “ரொம்ப நாளா இந்த வீட்ல அபிங்குற பேர் மட்டும் தான் பா ஒலிச்சிட்டு இருக்கு. உன்னை இன்னைக்கு தான் பாக்குறோம். ஆனா உன்னை எங்களுக்கு நல்லா தெரியும்”, என்றார் மணியம்மை.

ரவியும் அபியும் எதுவும் பேச வில்லை. இருவரும் சிறு புன்னகைக்கு பஞ்சம் என்பது போல சிறு முறைப்போடு நகர்ந்து கொண்டார்கள். ரவிக்கோ பவித்ராவை தன்னிடம் இருந்து பிரித்து விடுவானோ என்ற பயம். அபிக்கோ காரணமே இல்லாமல் அவன் மேல் ஒரு கோபம். இவர்கள் இருவருக்கும் இடையே ரிஷி மற்றும் பவித்ரா தான் பேசிய படியே இருந்தார்கள். 

பவித்ரா அவ்வளவு சந்தோஷமாக இருந்தாள். அபியை வரவேற்பது ஆகட்டும், அவனுக்கு வீட்டையும் அவளது அறையையும் சுற்றிக் காட்டுவது ஆகட்டும், தோட்டத்துக்கு அழைத்துச் செல்வது, அவனுக்கு பிடித்த பழங்களை அவன் கையாலே பறிக்கச் சொல்வது, உணவு உண்ணும் போது அவனை விழுந்து விழுந்து கவனிப்பது, அவன் மறுக்க மறுக்க உணவு பரிமாறுவது என அவனை அக்கறையாக கவனித்தாள். 

இது ரவி மனதில் சிறு நெருடலை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது. ரவி மணியம்மையை முறைக்க “என்ன டா அம்மாவை பாசமா பாக்குற? ஏதாவது வேணுமா?”, என்று கேட்டார் மணியம்மை. 

“என்னமோ சொன்ன உன் பேத்தி எனக்காக தான் இவ்வளவு சந்தோஷமா இருக்குறான்னு….”

“ஆமா உண்மையை தான் சொன்னேன். உன் பிறந்த நாளுக்காக தான் பவி இவ்வளவு சந்தோஷமா இருக்கா” 

“எப்படி மா உன்னால இப்படி அபாண்டமா பொய் சொல்ல முடியுது? அவ அந்த காண்டாமிருகம் வந்ததுனால தான் சந்தோஷமா இருக்கா”

“தெரியுதுள்ள? அப்புறம் எதுக்கு என் கிட்ட கேட்டுட்டு இருக்க? ஒரு நல்லி எலும்பைக் கடிக்க விடுறானா பாரு”, என்று சொல்லி விட்டு அவர் உணவில் கவனம் செலுத்த ரவியால் அன்னையை முறைக்க மட்டுமே முடிந்தது. 

அவன் அறிந்த வரை பவித்ரா இப்படி எல்லாம் இருந்ததில்லை. அன்பானவள், ஆர்ப்பாட்டமானவள். அதே நேரம் வீட்டினரைத் தவிர மற்றவர்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் எல்லாம் கொடுக்க மாட்டாள். மற்றவர்களிடம் என்ன என்றால் என்ன என்று கேட்டு விட்டு கடந்து விடுவாள். ஆனால் அபியிடம் முற்றிலும் மாறாக இருந்தாள். 

ஆனால் அபிமன்யு பவித்ரா இருவர் பார்வையிலும் நட்பைத் தவிர எந்த சலனமும் ரவிக்கு தெரிய வில்லை என்பது மட்டுமே அவனுக்கு சிறு ஆறுதல். 

அபி அந்த வீட்டில் அவ்வளவு சந்தோஷமாக இருந்தான். அவனை அந்த அளவுக்கு சந்தோஷமாக வைத்திருந்தாள் பவித்ரா. மதிய உணவு முடிந்ததும் சீட்டு விளையாட்டு, கேரம் என நேரம் கடந்தது. ரவியை ஜெயிக்க வேண்டும் என்று அபியும் அபியை ஜெயிக்க விடக் கூடாது என்று ரவியும் போட்டி போட்டு விளையாடியதில் விளையாட்டு நேரம் ரிஷிக்கும் பவித்ராவுக்கும் சுவாரசியமாகவே கழிந்தது. 

இதில் மணியம்மை, பவித்ரா இருவரும் சேர்ந்து வீடியோ எடுக்கிறோம் என்று செய்த அலப்பறைகளை ரவி எரிச்சலுடன் பார்த்தான் என்றால் அபியோ அவ்வளவு சந்தோஷமாக அவர்களுடன் கலந்து கொண்டான். அவர்கள் செய்வதைப் பார்த்து அபி விழுந்து விழுந்து சிரிக்க “நீங்க பண்ணுறது எல்லாம் ஒரு காமெடியா? இதை காமெடின்னு நினைச்சு சில பேர் ரொம்ப தான் விழுந்து விழுந்து சிரிக்காங்க. எல்லாமே மொக்கை”, என்றான் ரவி. 

அபி அவனை முறைத்துப் பார்க்க “ஓனானுக்கு எல்லாம் நகைச்சுவை உணர்வு கொஞ்சம் கம்மி தான் பேராண்டி. அதுவும் இவனுக்கு சுட்டுப் போட்டாலும் சிரிப்பு வராது. இவனை எல்லாம் கண்டுக்காத. நீ வா. நாம அந்த பக்கம் போகலாம்”, என்று சொல்லி விட்டு அபியையும் பவித்ராவையும் அழைத்துச் சென்றார் மணியம்மை. 

“என்னையா ஓனான்னு சொல்ற? கிழவி வீட்டுக்கு வா உனக்கு இருக்கு”, என்று ரவி புலம்ப அவன் புலம்பலைக் கேட்க யாரும் அங்கே இல்லை. 

மாலை ஐந்து மணிக்கு ரவி மணியம்மையை அழைத்துக் கொண்டு கிளம்பினான். போகும் போது அபியின் கன்னம் தடவிய மணியம்மை “நீயும் எனக்கு பேரன் தான்யா. அடிக்கடி வீட்டுக்கு வரணும். அங்க நம்ம வீட்டுக்கும் வரணும்”, என்று சொல்ல சந்தோஷமாக “சரி பாட்டி”, என்றான். 

ரவி அவனிடம் எதுவும் சொல்லாமலே கிளம்ப “மாமா என்ன அபி கிட்ட சொல்லாமலே போற?”, என்று கேட்டாள் பவித்ரா. 

“இவ ஒருத்தி”, என்று எரிச்சலுடன் எண்ணியவன் வேறு வழியில்லாமல் “நான் கிளம்புறேன்”, என்று வேண்டா வெறுப்பாக ரவி சொல்ல “சரி சரி”, என்று சந்தோஷமாக சொன்னான் அபி. 

இவர்கள் பேச்சைக் கேட்ட ரிஷிக்கு இவங்க பேசிக்காமலே இருந்துருக்கலாம் என்று தான் தோன்றியது. அதற்கு பிறகு ஈவினிங் டீ ஸ்நாக்ஸ் எல்லாம் முடிந்து ஆறு மணிக்கு தான் அபி கிளம்பினான். அதுவும் போகும் போது இரவு உணவையும் கொடுத்து விட்டாள் கோதை. 

அன்றைய நாள் அவன் வாழ்வில் மறக்க முடியாததாக இருந்தது. அவன் ஹாஸ்டல் சென்று சேர்ந்ததும் கட்டிலில் அமர்ந்தவன் அன்றைய நாளை மனதுக்குள் ஓட்டிப் பார்த்தான். ஏனோ அவன் வாழ்நாளிலே இன்று மட்டும் தான் இவ்வளவு சந்தோஷமாக இருந்ததாக தோன்றியது. 

பவித்ரா நினைவு அவன் மனதை ஆக்ரமிக்க அதே நேரம் அவளே அவனை அழைத்தாள். அதை எடுத்து “பவி”, என்று ஆர்பாட்டமாக அழைக்க “என்ன டா முகத்துல சந்தோஷம் ஓவரா தெரியுது?”, என்று கேட்டாள். 

“நான் இங்க இருக்கேன்? உனக்கு அங்க தெரியுதாக்கும்?”, என்று அவன் சிரிக்க “நீ சிரிக்கிறியா அழுறியான்னு உன் குரல்லே எனக்கு தெரிஞ்சிரும்”, என்றாள். 

“உண்மையாவே நான் ஹேப்பியா இருக்கேன் பவி தேங்க்ஸ்”

“எதுக்கு?”

“உங்க வீட்டுக்கு வந்ததுல தான் இவ்வளவு சந்தோஷமா இருக்கேன். அதான்”

“இதுக்கு தானே முன்னாடி இருந்தே உன்னைக் கூப்பிட்டுட்டு இருக்கோம். நீ தான் ரொம்ப சீன் போட்ட?”

“எப்பவாது தான் வர முடியும்? எப்பவும் வந்து தின்னுட்டு வர முடியுமா? இன்னைக்கே ஸ்நாக்ஸ் எதுவும் வாங்கிட்டு வரலை. இந்த ரிஷி என்னை வாங்க விடலை”

“உன்னை சாப்பிட மட்டும் யார் கூப்பிட்டா? தோட்ட வேலை செய்ய ஆள் இல்லைன்னு தானே கூப்பிடுறோம்”, என்று சொல்லி வம்பிழுக்க அவனோ கோபப் படாமல் சிரிக்க தான் செய்தான். 

அன்றில் இருந்து விடுமுறை வந்து விட்டால் அபி பவித்ரா வீட்டுக்கு வந்து விடுவான். அபி வருவது தெரிந்தால் மணியம்மை ரவியை ஒரு வழி செய்து இங்கே வந்து விடுவார். மொத்தத்தில் அபி அந்த வீட்டில் ஒருவனாகிப் போனான். ஆனால் ரவிக்கும் அவனுக்கும் தான் எப்போதும் முட்டிக் கொள்ளும். இருவரும் அதிகம் எதுவும் பேச மாட்டார்கள். ஆனால் முறைத்துக் கொண்டே திரிவார்கள். 

ஒரு வழியாக ரிஷி மற்றும் அபி இருவரின் படிப்பும் முடிந்தது. அடுத்து என்ன செய்ய என்ற பேச்சு வார்த்தையில் ரிஷி எம். ஈ படிப்பை அதை கல்லூரியில் தேர்ந்தெடுக்க போகிறேன் என்று சொல்ல அபியோ கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி ஆரம்பிக்கப் போகிறேன் என்றான் . 

அதைக் கேட்ட கிருஷ்ணனோ “அபி இங்க வாப்பா”, என்று அழைத்தார். 

“என்ன அங்கிள்?”

“சொந்தமா கம்பெனி ஆரம்பிக்கிறது நல்ல விஷயம் தான். ஆனா எதையுமே யோசிச்சு செய்யனும். நான் சொல்லலாமானு தெரியலை”

“நீங்க எங்க அப்பாவுக்கும் மேல அங்கிள்? என்னனாலும் சொல்லுங்க. எனக்கு பெரியவங்க கைடன்ஸ் தேவைப் படுது. நானே கம்பெனி விஷயமா உங்க கிட்ட பேச தான் நினைச்சேன்”

“முதல்ல எம்.பி.ஏ அப்ளிகேஷன் போடு பா. இன்னும் ரெண்டு வருஷம் இருக்கு. அந்த டைம்ல பிஸ்னஸ்க்கான எல்லா ஏற்பாடும் செய். இடம் பாரு, டிசைன் பண்ணு. வேலைக்கு நல்ல ஆட்களா தேடு. ஆனா அந்த கம்பெனி ஆரம்பிக்கிறது மட்டும் நீ படிச்சு முடிச்சு அப்புறமா இருக்கட்டும். உனக்கும் அதுல இன்னும் ஒரு தெளிவு கிடைக்கும்”, என்று சொல்ல சரி என்று கேட்டுக் கொண்டான். 

அதே போல அதே கல்லூரியில் எம்.பி.ஏ போட்டான். இதற்கிடையில் அவ்வப்போது அவனுடைய வீட்டுக்குச் சென்றாலும் அருந்ததி மற்றும் ஜீவானந்தத்துடன் மட்டும் பேசவே இல்லை. 

அந்த இரண்டு வருடம் படிப்பு ஒரு பக்கம் போனாலும் தீவிரமாக மூளையை செலவழித்தான் என்று சொல்ல வேண்டும். அவனுக்கு பணம் பெரிய விஷயமாக இல்லை. 

வடிவு மூலம் அருந்ததியிடம் பணம் கேட்டான். அருந்ததி அதிக பணம் என்று யோசிக்க தான் செய்தாள். ஆனால் மகன் என்று வருகையில் வேறு எதுவும் கேட்க முடிய வில்லை, 

வடிவு அதில் இருந்தும் தனக்கென கொஞ்சம் பணத்தைக் எடுத்துக் கொண்டு தான் அவன் கேட்டதைக் கொடுத்தாள். அந்த பணத்தை வைத்து சென்னையின் முக்கியமான இடத்தில் இருந்த நிலத்தை வாங்கினான். அதில் அவனே டிசைன் செய்து ஒரு பில்டிங்கை எழுப்ப ஆரம்பித்தான். 

அவன் வேலை விஸயமாக நிறைய அலைய வேண்டி இருந்ததால் அவனுக்கு ஹாஸ்டல் செட்டாக வில்லை. அவன் வாடகைக்கு வீடு தேடிக் கொண்டிருக்க மணியம்மையும் சரி கிருஷ்ணனும் சரி தங்களின் வீட்டுக்கு அவனை அழைத்தார்கள். 

அதை மறுத்தவன் ஒரு சின்ன வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினான். வடிவுக்கு கூட அவன் என்ன செய்கிறான் என்று தெரிய வில்லை. ஒரு நாள் வடிவு கேட்டதற்கு “நான் என்னமும் செஞ்சிட்டு போறேன். அதை ஏன் கேக்குறீங்க?”, என்று கேட்டான். 

அப்போது தான் வடிவுக்கு அபி அவளுடைய கைக்குள் இல்லை என்று புரிந்தது. ஆனால் அவனை அப்படியே விட்டு விட மனதில்லாமல் தன்னுடைய ஆட்களை அனுப்பி வேவு பார்த்தாள். 

இரண்டாவது நாளே ஒரு ஆள் அபியைப் பற்றி விசாரிக்கும் போது பார்த்து விட்டான். அவனை அடித்து துவைத்து கேட்க அவனோ அருந்ததி தான் அவனை அனுப்பியதாக பொய்ச் சொன்னான். வடிவு அருந்ததி பெயரைத் தான் சொல்லச் சொன்னாள். 

அபிக்கு அன்னையின் மீது கோபம் எகிறியது. நேராக ஊருக்குச் சென்றவன் அருந்ததி முன்னால் நின்று “என்னை வேவு பார்க்க ஆள் அனுப்புறீங்களா?”, என்று கேட்டான். 

“வேவு பார்க்கவா?”, என்று குழம்பிய அருந்ததி “அப்படியே பார்த்தா தான் என்ன அபி? நீ என்ன செய்ற? ஏது செய்றன்னு எங்களுக்கு தெரிய வேண்டாமா?”, என்று கேட்டாள். 

“அதை தெரிஞ்சு என்ன பண்ணப் போறீங்க? என்னைப் பத்தி விசாரிக்கிறது இது தான் கடைசி தடவையா இருக்கணும். இனி இப்படி நடந்தா நான் என்னையே அழிச்சிக்குவேன். எனக்கு வாழணும்னு ஆசை போய் ரொம்ப வருசமாச்சு”, என்று சொல்லிச் செல்ல அருந்ததிக்கு கண்ணீர் விடுவதை தவிர வேறு வழி தெரிய வில்லை. 

அந்த இரண்டு வருடத்தில் அந்த கட்டிடம் உயர்ந்தது. அவன் படிப்பும் தொடர்ந்தது. நிறைய படித்தான். அவனுக்கு தெரிந்த ஆட்களிடம் இருந்து நிறைய அறிவை வளர்த்துக் கொண்டான். அவனுக்கு பக்க பலமாக இருந்தது பவித்ராவின் குடும்பம் தான். அவன் அலுவலகம் எழுப்புவதில் ரிஷியும் பவித்ராவும் அவனுக்கு சப்போர்ட்டாக இருந்தார்கள். 

அடுத்த மாதம் ஆபீஸ் திறப்பு விழா வைக்க வேண்டும் என்று முடிவு எடுத்த நாளில் இருந்து வேலைக்கு என்று ஆட்களை எடுக்க ஆரம்பித்தான். இன்ஜினியர் வேலைக்கு பேப்பரில் ஆன்லைனில் விளம்பரம் கொடுத்தான் என்றால் சில்லறை வேலைகளைப் பார்க்க கிருஷ்ணனே தெரிந்தவர்களை வேலைக்கு எடுத்துக் கொடுத்தார். பவித்ரா அவனின் வளர்ச்சிக்காக அவ்வளவு சந்தோஷப் பட்டாள். 

காதல் தொடரும்…. 

Advertisement