Advertisement

அத்தியாயம்

வாதங்களும் பிரதிவாதங்களும் 

இல்லாத அழகான மௌனமே 

காதலின் மொழியோ!!!

அபிமன்யுவின் வாழ்வில் நடந்த விசயங்களைக் கேட்ட பவித்ராவுக்கு கஷ்டமாக இருந்தது. ஆனால் அவனுக்கு எந்த ஆறுதலும் சொல்ல வில்லை. ஆறுதல் சொல்லி மறக்க கூடிய விஷயம் இல்லையே இது. 

அவன் கையை இருக்கமாகப் பற்றி இருந்தாள். அவனும் அவள் கையை விலக்கிக் கொள்ள வில்லை. மதியம் முதல் பீரியட்க்கான பெல் அடிக்க “பெல் அடிச்சிருச்சு. கிளாஸ்க்கு போகலாம் அபி”, என்றாள்.

“சரி”, என்ற படி அவனும் எழுந்து கொண்டான். இருவரும் அவரவர் கிளாசுக்கு சென்றாலும் மனம் மட்டும் அமைதியாக இல்லை. 

அவனுக்கோ இத்தனை நாள் மனதுக்குள் பதுங்கி இருந்த வேதனையை தனக்கு தானே கீறிக் கொண்ட உணர்வு. ஒரு மாதிரி அலைப்புறுதலுடன் இருந்தான். அவனால் கிளாஸ் கவனிக்க கூட முடிய வில்லை. 

அவளுக்கோ அவள் கேள்வி பட்ட விஷயம் ஆங்காங்கே நடப்பது தான் என்றாலும் அதை அபி எவ்வாறு தாங்கி இருப்பான் என்றே பெரிய கவலையாகிப் போனது. அந்த சிறு வயதில் இதை யாரிடமும் சொல்லாமல் மனதுக்குள் பூட்டி அவர்களுடன் ஒரே வீட்டில் வாழ்வது என்பது கொடுமையான விஷயம் ஆகிற்றே. 

இருவருமே தங்கள் கவலையில் உழன்றார்களே தவிர வீட்டின் அரசியலை உணரவில்லை. ஜீவானந்தம் முருகானந்தம் என்ற இரண்டு உடன் பிறந்தவர்களின் பங்குகள் மொத்தமும் அபிமன்யுவுக்கு சென்றதில் இருந்து வடிவு மனதில் பெரும் மாற்றம்.

  எல்லா சொத்தும் அபிக்கு செல்வதில் வடிவுக்கு விருப்பம் இல்லை. அபி அவளுடைய அண்ணனின் மகன் தான் என்றாலும் அவளுக்கு அருந்ததியை சுத்தமாக பிடிக்க வில்லை. அதை வெளியே காண்பித்துக் கொள்ள வில்லை என்றாலும் உள்ளுக்குள் வெறுப்பு மண்டிக் கிடந்தது. 

அதனால் சொத்தைக் கைப்பற்ற பிளான் போட்டாள். ஒன்று அபிக்கு தன்னுடைய மகளை திருமணம் முடித்து சொத்தை அமுக்குவது, மற்றொன்று அபியை குடும்பத்தில் இருந்து ஒதுக்கி வைத்து சொத்துக்களை கை பற்றுவது என்று. 

முதல் முயற்சி அவளை செய்ய விடாமல் பதினோராம் வகுப்பிலே அபி தனியாக வந்து விட்டான். ரோஹினி ஷாலினியை கண்டால் ஓரிரு வார்த்தைகள் பேசுவான் அவ்வளவே. அபி ரோஹினியிடம் நன்றாக பேசினால் அவர்களை சேர்த்து வைக்க வேண்டும் என்று எண்ணிய வடிவுக்கு ஏமாற்றம் தான். 

ஆனால் அவன் அவனுடைய பெற்றவளிடம் இருந்தும் வீட்டில் இருந்தும் எல்லா உறவுகளிடம் இருந்தும் ஒதுங்கிப் போனது இன்னும் வசதியே. அவன் அருந்ததி மற்றும் ஜீவானந்தம் மீது இருந்த கோபத்தில் ஹாஸ்டலைத் தேர்ந்தெடுக்க அந்த கோபத்தை அணைய விடாமல் பார்த்துக் கொண்டது வடிவு தான். அருந்ததியைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக தவறாக அவனிடம் பேச ஆரம்பித்தாள். 

அபியால் பழைய விஷயங்களை மறக்க முடிய வில்லை. அருந்ததியாலும் குற்ற உணர்வில் மகனிடம் நெருங்க முடிய வில்லை. அப்படியும் அவர் பேச வந்தால் முகத்தில் அடிப்பது போல அந்த இடத்தில் இருந்து கடந்து விடுவான். அவனுக்கு பிடிக்க வில்லை என்று எண்ணி அருந்ததியும் அவனிடம் பேசாமல் போனது வடிவுக்கு வசதியாக போனது. 

அருந்ததி என்ன சொன்னாலும் அதை மாற்றி தான் சொல்லுவாள். அபி நன்றாக மதிப்பெண் எடுத்ததைச் சொன்னால் அருந்ததி அந்த அளவுக்கு பூரித்துப் போவாள். ஆனால் வடிவோ “உங்க அம்மா கிட்ட உன் மார்க்கை சொன்னேன் அபி, அதுக்கு அவ இதெல்லாம் ஒரு மார்க்கா? படிக்கிறானா மாடு மேய்க்கப் போறானான்னு கேக்க சொல்றா”, என்று சொல்லிக் கொடுப்பாள். அன்னையின் மீது கோபம் இன்னும் ஏறும் அபிக்கு. 

அபி பணம் கேட்கிறான் என்று சொல்லி வடிவு அருந்ததியிடம் இருந்து வாங்குவாள். அபி நான்காயிரம் கேட்டால் வடிவு பன்னிரெண்டாயிரம் என்று சொல்லி அந்த பணத்தை வாங்குவாள். அருந்ததியும் மகன் தான் கேட்கிறான் என்று எண்ணி பணம் கொடுப்பாள். அதுவும் ஒரு முறை சந்தேகம் வந்து அபிக்கு அழைத்து “அபி பணம் கேட்டியா?”, என்று கேட்டாள் அருந்ததி. 

“ஏன் கேக்க கூடாதா? அப்ப நான் பீஸ் கட்ட பிச்சை எடுக்கவா? பெத்தீங்க தானே? அதுக்கான கடமையைக் கூடவா செய்ய முடியாது?”, என்று கோபமாக பொரிந்தான். 

“இல்லை அபி… அது வடிவு செலவு”, என்று சொல்ல வர அதை அவன் கேட்கவே இல்லை. 

“பணம் கொடுக்க முடிஞ்சா அத்தை கிட்ட கொடுங்க. இல்லையா இந்த உலகத்துல அபின்னு ஒருத்தன் இருக்குறதையே மறந்துருங்க. ஆனா இன்னொரு தடவை என் கிட்ட பேசுற வேலை வச்சிக்காதீங்க”, என்று சொல்லி விட்டு வைத்து விட்டான். 

அவன் பேசியதைக் கேட்டதில் வடிவுக்கு அவ்வளவு சந்தோஷம். அன்றில் இருந்து அவள் ஆட்டம் தான். ஜீவானந்தமும் இந்த விஷயத்தில் தலையிட விரும்ப வில்லை. 

அபி படித்து முடித்து பொறுப்பை எடுக்கும் வரை ஆக்டிங் டேரெக்டர் அருந்ததி என்பதால் அவள் கையெழுத்து இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. அதனால் தான் வடிவு அபியை பயன் படுத்திக் கொண்டாள். 

அபி பெயரைச் சொல்லி சுரண்டி சுரண்டியே மகள்களுக்கு என பல சொத்துக்களை வாங்கிக் குவித்து விட்டாள். இதை அபி அறிய வில்லை. 

அடுத்து வந்த நாட்களில் பவித்ரா அபியைப் பற்றிய விவரங்களை யாரிடமும் சொல்ல வில்லை. ஆனால் அபிக்கு யாரும் இல்லை. அவன் மனதில் பல அடிகளை வாங்கி இருக்கிறான். அவனை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மட்டும் தோன்றிக் கொண்டே இருந்தது,. 

அன்றில் இருந்து தனியாக அவனைக் கவனம் எடுத்துப் பார்த்துக் கொண்டாள். அவனுக்கு என்று தனி டப்பாவில் உணவு எடுத்துச் சென்றாள். 

“என்ன பவி இது?”, என்று கோபப் பட்டான் அபி. 

“நான் கொடுத்தா சாப்பிட மாட்டியா? இப்ப சாப்பிடுறியா இல்லைன்னா ஊட்டி விடவா?”, என்று முறைத்த படி கேட்டு அவனை சாப்பிட வைத்தாள். 

விடுமுறை நாட்களில் “எனக்கு கொஞ்சம் திங்க்ஸ் வாங்க வேண்டியது இருக்கு. எனக்கு துணைக்கு வாயேன்”, என்று சொல்லி அவனை அவனது கூட்டில் இருந்து வெளியே அழைத்து வந்தாள். அவனும் அவளுக்காக என்று வருவான். படத்துக்கே செல்ல மாட்டான். ஆனால் இப்போது அவளுடன் செல்வான். 

ரிஷியிடம் பேசுவதைக் காட்டிலும் பவித்ராவுடன் அதிகம் பேசினான். அவள் அவனை அவ்வளவு பேச வைத்தாள் என்று சொன்னால் சரியாக இருக்கும். 

ஒரு முறை பவித்ரா அவன் குடும்பத்தைப் பற்றிய பேச்சை எடுக்க அவன் முகம் கூம்பிப் போனது. அதற்கு பிறகு அவள் அதைப் பற்றி பேசுவதே இல்லை. 

அவனுக்குமே பவித்ரா வாழ்க்கையில் வந்த பிறகு ஒவ்வொரு நாளும் சுவாரசியமாக தான் கழிந்தது. இத்தனை வருடம் அவன் வாழ்வில் இல்லாத உயிர்ப்பு இப்போது வந்தது போல இருந்தது. 

அன்று ஞாயிற்றுக் கிழமை. காலை ஆறு மணிக்கே எழுந்தவள் ரிஷியுடன் சேர்ந்து தோட்டத்துக்கு சென்று விட்டாள். எட்டரை மணிக்கு தான் வேர்த்து விருவிருத்து வீட்டுக்கு வந்தாள். 

வந்ததும் போனைத் தூக்க “ஏய் சேரும் சகதியுமா இருக்க டி. குளிச்சிட்டு வந்து போனை எடுத்துட்டு உக்காரு. இப்ப தூக்கினா எந்திக்கவே மாட்ட?”, என்று சொன்னாள் கோதை. 

“இருங்கம்மா போறேன். ஒரு நிமிஷம்”, என்றவள் போனை எடுக்க அதில் மூன்று மிஸ்ட் கால் அபியிடம் இருந்து வந்திருந்தது. 

எப்போதும் அவள் தான் அவனுக்கு அழைப்பாள். அவனும் உடனே எடுத்து பேசுவான். ஆனால் அவனாக அழைத்து பேசுவது அபூர்வம் என்பதால் புருவச் சுளிப்போடு அவனுக்கு அழைத்தாள். ஒரு ரிங்கிலே அதை எடுத்த அபி “பவி”, என்றான். 

“சொல்லு அபி மூணு தடவை கூப்பிட்டுருக்க? அண்ணா கூட தோட்டத்துல வேலை செஞ்சிட்டு இருந்தேன்”

“இல்லை சும்மா தான். என்ன செய்யுறேன்னு கேக்க தான்”

“நேரம் போகலையா அபி?”, என்று கேட்டவளுக்கு அவனது தனிமை உணர்வு புரிந்தது. 

“ஆமா”, என்றவன் அமைதியாக இருக்க “வெளிய போகலாமா?”, என்று கேட்டாள். 

“வரியா?”, என்று அவனும் ஆர்வமாக கேட்க “இரு அம்மா கிட்ட கேட்டு சொல்றேன்”, என்று சொல்லி போனை வைத்தவள் “அம்மா அபி கூட வெளிய போகட்டா?”, என்று கேட்டாள். 

“அடி பிச்சிருவேன் டி. இன்னைக்கு ரவியோட பிறந்த நாள்னு நீ தானே அப்பா கிட்ட விருந்து சமைக்க சொன்ன? அப்பா மீன் கறி எல்லாம் வாங்கப் போயிட்டாங்க. நான் பிரியாணிக்கு ரெடி பண்ணிட்டு இருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்துல அம்மாவும் ரவியும் வந்துருவாங்க. இன்னைக்கு ஊர் சுத்தனுமா? அந்த பையனை ஒரு நாளாவது ஓய்வெடுக்க விடு”, என்றாள் கோதை.

“நான் ரவி மாமா பிறந்த நாள் பிளானை மறந்துட்டேன் மா. ஆனா அபி ஏதோ கவலையில் இருக்கான். இப்ப நான் அவன் பக்கத்துல இருக்கணும். என்ன பண்ண? அம்மா அபியை வீட்டுக்கு கூப்பிடவா?”

“அவன் வந்துட்டு தான் மறுவேலை பாப்பான். ரிஷி கூப்பிட்டு கூப்பிட்டு சளிச்சு போய்ட்டான். வந்தா கூப்பிடு”, என்று சொல்லிச் செல்ல உடனே அபிக்கு அழைத்தாள். 

“சொல்லு பவி கிளம்பிட்டியா? எங்க வரட்டும்?”

“நீ எங்கயும் வர வேண்டாம். நான் இன்னைக்கு எங்கயும் வர முடியாது. இங்க அம்மாச்சியும் மாமாவும் வாராங்கலாம். அம்மா விடலை அபி”

“ஓ”

“அபி”

“சொல்லு பவி”

“எத்தனை நாள் கூப்பிடுறேன். இன்னைக்காவது எங்க வீட்டுக்கு வரக் கூடாதா?”

“அது….”

“பிளீஸ் வாயேன். அம்மா அப்பா அம்மாச்சி எல்லாரும் உன்னைப் பாக்கணும்னு சொன்னாங்க வாயேன். உனக்கும் போர் அடிக்குது தானே?”

“இல்லை பவி நான் யார் வீட்டுக்கும் போனதில்லை”

“நம்ம வீட்டுக்கு வரலாம். நீ எனக்காக வருவ தானே?”

‘”சரி வரேன்”

“நிஜமா?”

“நீ கேட்டா மறுக்கவே தோண மாட்டிக்கு”

“புழுவினி மூட்டை. உன்னை எத்தனை நாள் கூப்பிட்டுருக்கேன் டா? அப்ப எல்லாம் என் பேச்சைக் கேட்டுட்ட பாரு?”

“விடு டி, சண்டை இழுக்காத”

“ஆமா நான் தான் சண்டை போடுறேன். நீ ஒண்ணுமே பண்ணுறது இல்லை. சரி சரி கிளம்பி இரு. ரிஷி கூப்பிட வருவான்”

“ரிஷி கிட்ட நானே பேசிக்கிறேன்”, என்று சொல்ல அவளும் சரி என்று சொல்லி போனை வைத்தாள். 

“அம்மா அபி வறேன்னு சொல்லிட்டான் மா. அப்பா கடைக்கு எப்ப போனாங்க? இறால் வாங்கிட்டு வரச் சொல்லணும். அபிக்கு இறால் ரொம்ப பிடிக்கும்”, என்றவள் கிருஷ்ணனுக்கு அழைத்து இறாலும் வாங்கச் சொன்னாள். 

Advertisement