Advertisement

“அபி ஒரு மாதிரி மனசுக்கு கஷ்டமா இருக்கு டா”

“எனக்கு பழகிருச்சு”

“அப்புறம் என்ன அச்சு?”

“என்ன ஆகும்? என்னை பாத்து தலை குனிஞ்சு அவங்க ரூமுக்கு போயிட்டாங்க. நானும் அவங்க கிட்ட பேசலை. அவங்களும் என் கிட்ட பேசலை. அப்படியே அமைதியாகிட்டேன்”

“உங்க அப்பாவுக்கு தெரியுமா? உங்க அப்பா இப்ப எப்படி இருக்காங்க?”

“ம்ம், அப்பா இப்ப உயிரோட இல்லை பவி”

“ஐயோ என்ன அச்சு?”

“ஒரு ஆக்ஸிடெண்ட். நான் அன்னைக்கு அம்மாவைப் பாத்த பிறகு எனக்குள்ளே தனிச்சு இருக்க ஆரம்பிச்சேன். யார் கூடவும் பேசவோ யாரையும் பாக்கவோ பிடிக்கலை. அம்மாவா இப்படின்னு ஒரு எண்ணம் எனக்குள்ள அப்படியே உறைஞ்சிருச்சு. அவங்களைப் பாத்தாலே ஒரு அருவருப்பான எண்ணம் எனக்குள்ள உருவாச்சு. என்னைப் பொறுத்த வரை அது சரியா தப்பான்னு ஆராய தோணலை. அது தப்பு தான்னு முடிவா என் மனசு சொல்லுச்சு. அப்படி இருக்கும் போது ஒரு நாள் எங்க அத்தை எங்க அப்பா கிட்ட பேசிக்கிட்டு இருந்ததை நான் கதவு பக்கத்துல நின்னு கேட்டேன்“

“என்ன பேசினாங்க”, என்று கேட்க அந்த நிகழ்வை அவளிடம் சொல்ல ஆரம்பித்தான்.

“அண்ணா, இந்த வீட்ல என்ன நடக்குது? எல்லாம் பாத்துட்டு பாக்காம இருக்கியா? இல்லை பல்லைக் கடிச்சிட்டு இருக்கியா?, என்று கேட்டாள் வடிவு.

“என்ன மா? எதுக்கு இவ்வளவு கோபம்?”, என்று மென்மையாக கேட்டார் முருகானந்தம். அந்த அளவுக்கு சாந்தமானவர்.

“அண்ணா அது வந்து…. அண்ணியும் நம்ம அண்ணனும்…. ஒரே ரூம்ல அன்னைக்கு… நான் பாத்தேன் அண்ணா. என்னால அதை ஜீரணிக்க முடியலை. உன் கிட்ட சொல்லவா வேண்டாமானு குழப்பம். அவங்க கிட்டயும் கேக்க முடியலை. உனக்கு தெரியுமா?”

“எனக்கு தெரியும் வடிவு”

“அண்ணா…”

“எனக்கு டெஸ்ட் எடுத்து குழந்தை பிறக்காதுன்னு சொன்னதுல இருந்து எனக்கும் உன் அண்ணிக்கும் எந்த தொடர்பும் இல்லை”

“அண்ணா…. அப்ப பிள்ளைங்க?”

“அண்ணனுக்கு பிறந்தவங்க தான்”

“கடவுளே அருவருப்பா இருக்கு”

“என்ன அருவருப்பு? வாழ வேண்டியவங்க வாழுறாங்க. அதுக்கு என்ன?”

“என்ன அண்ணா இப்படிச் சொல்ற? இது எல்லாம் உன் சம்மதத்தோடவா ஆரம்பிச்சது?”

“இல்லை, அபி வயித்துல உருவானதும் நானே கண்டு பிடிச்சேன்”

“அண்ணி இவ்வளவு கேவலமா இருப்பாங்கன்னு நான் நினைக்கலை. அதுவும் நம்ம அண்ணனும். சே. நான் இப்பவே அவங்களை உண்டு இல்லைன்னு ஆக்குறேன்”

“கேளு, நல்லா கேளு. தெருவுல வச்சு கேளு. அப்ப தான் எல்லாரும் என்னை ஆம்பளை இல்லைன்னு சொல்ல வசதியா இருக்கும்”, என்று கோபத்துடன் சொன்னார் முருகானந்தம்.

“அண்ணா”

“எனக்கு எல்லாம் தெரிஞ்சும் அந்த ஒரு விசயத்துக்காக தான் பொறுத்துகிட்டேன். முதல்ல குழந்தை விஷயம் தெரிஞ்சு அதிர்ச்சி தான். காரணம் யாருன்னு கேட்டேன். அண்ணனு தெரிஞ்சு உடைஞ்சு போயிட்டேன். என்னால நம்பவே முடியலை. அந்த அளவுக்கு ஏமாற்றம். அருந்ததியும் அண்ணனுமா இப்படின்னு. அப்புறம் அவ கிட்ட இருந்து விலகிட்டேன். அதுக்காக அவங்க சந்தோஷத்தை கெடுக்க எனக்கு விருப்பம் இல்லை. நாள் ஆக ஆக அவங்க மேல கோபமும் வரலை. ஒரு பற்றற்ற நிலை எனக்கு வந்துருச்சு மா. அதுவும் அபி பிறந்ததும் எனக்குள்ள அப்படி ஒரு பூரிப்பு. என்னோட குழந்தையா தானே அறிமுகமானான். அப்புறம் சஞ்சனா… பிள்ளைகளைப் பாக்கும் போதெல்லாம் நம்ம குறை தானே இதுக்கெல்லாம் காரணம்னு வலிக்கும். ஆனால் அபியும் சஞ்சுவும் அப்பான்னு கூப்பிடும் போது எல்லா மறந்துரும். குழந்தை இல்லைன்னா ஐ.வி.எஃப் எல்லாம் பண்ணுறாங்க தானே? அப்படி நினைச்சிக்கிட்டேன்”

“இது எல்லாம் தப்புண்ணா, நம்ம குடும்பத்துல நடக்க கூடாது”

“நடக்க கூடாது தான். தப்பு தான். ஆனா நடந்ததுக்கு அப்புறம் எப்படி மாத்த முடியும் வடிவு?”

“மாத்த முடியாது தான். ஆனா என்னால ஏத்துக்க முடியலையே?”

“பாதிக்கப் பட்ட நானே ஏத்துக்கலையா? உனக்கு என்ன? அது மட்டும் இல்லாம ஒரு பொண்ணா அருந்ததி நிலையையும் கொஞ்சம் யோசிச்சு பாரு. உனக்கும் ரெண்டு பெண் குழந்தைங்க இருக்கு. உனக்கும் நல்லது கெட்டது தெரியும். அப்படி இருக்க என்னால அவ வாழ்க்கை வீணா போகனுமா? இது எல்லாம் நான் ஏத்துகிட்டேன். அது மட்டுமில்லாம அண்ணனும் அருந்ததியும் இப்ப வரைக்கும் குற்ற உணர்வுல தான் இருக்காங்க. என்னைப் பாக்கும் போது அது எனக்கு தெரியும்”

“எல்லாம் தெரிஞ்சும் எப்படின்னா ஒரே வீட்ல ஒரே ரூம்ல?”

“எனக்கும் அவளுக்கும் நடுவுல அபி இருப்பான். அப்புறம் சஞ்சு வந்தா. அதுவே பழக்கமா போச்சு மா. இந்த விஷயம் இனி வேற யாருக்கும் தெரியக் கூடாது வடிவு. தெரிஞ்சா நான் உயிரோட இருக்க மாட்டேன். இது என் மேல சத்தியம்”

“நான் சொல்ல மாட்டேன் அண்ணா”

“நம்புறேன்”, என்றார் முருகானந்தம்.

“இது தான் அவங்க பேசினது பவித்ரா. நான் கேட்டதை அவங்க கவனிக்கலை. அப்பா கிட்ட நான் எதையுமே கேக்கலை. கேட்டா அவருக்கு வலிக்கும். ஆனா அம்மா கிட்ட பெரியப்பா கிட்ட இருந்து விலகிட்டேன். அடுத்த பத்து நாளுக்கு அப்புறம் அப்பாவுக்கு ஒரு ஆக்ஸிடெண்ட். சீரியசா இருந்தார். சாகப் போறதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நாங்க எல்லாரும் அவர் பக்கத்துல தான் இருந்தோம். அம்மா அவர் காலைப் பிடிச்சு அழுதுட்டே இருந்தாங்க. பாவ மன்னிப்பு கேட்டாங்க போல? பெரியப்பா ஒரு ஓரமா குறுகிப் போய் நின்னார்”

“ஓ”

“ம்ம். அப்ப அப்பா அம்மாவை பக்கத்துல கூப்பிட்டார். அம்மா அப்பா பக்கத்துல போனப்ப அவங்க கழுத்துல கிடந்த தாலிச் செயினை படக்குன்னு கழட்டிட்டார். எல்லாரும் அதிர்ச்சியா பாத்துட்டு இருக்கும் போது அதை ஜீவாப்பா கையில கொடுத்து அம்மா கழுத்துல போடச் சொன்னவர் இனி என் மனைவிக்கும் என் பிள்ளைகளுக்கும் நீ தான் துணைன்னு சொல்லிட்டு கண்ணை மூடிட்டார் பவி”

“அபி”

“அவங்க தவறான உறவை சரியான உறவாக்கிட்டு போய் சேந்துட்டார் பவி. இப்ப வரைக்கும் இந்த உண்மை எனக்கும் அத்தைக்கும் தான் தெரியும். அவங்களும் சொல்லலை. நானும் சொல்லலை. இப்ப சொல்லு என்னால எப்படி பொண்ணுங்களை நம்ப முடியும்? அம்மா எங்கயாவது தப்பு பண்ணுவாங்களா? என்னால இப்ப வரைக்கும் அவங்களை மன்னிக்க முடியலை”, என்றான்.

அவன் வேதனையும் அவனது எண்ணமும் அவளுக்கு புரிந்தது. ஆனால் பெண்களே தவறானவர்கள் என்ற எண்ணம் இருப்பது தவறே. அதனால் “ஏன் உங்க அத்தை நல்லவங்க தானே? அவங்களை நம்புற தானே? என்னை நம்புற தானே?”, என்று கேட்டாள்.

“உங்களை எல்லாம் நம்புறேன்னு நான் எங்க சொன்னேன்?”, என்று அசால்ட்டாக கேட்டு அவளுக்கே அதிர்ச்சி கொடுத்தான்.

“அபி”, என்ற படி அவள் அவனை முறைக்க “முறைக்காத, நான் இப்படி தான். என்னால யாரையும் நம்ப முடியாது. சந்தர்ப்பம் கிடைக்கிற வரைக்கும் தான் எல்லாரும் நல்லவங்க. கிடைச்சா எல்லாரும் கெட்டவங்க தான். எங்க அத்தைக்கு சந்தர்ப்பம் வரலை. ஷோ அவங்க நல்லவங்க. இல்லைன்னா அவங்களும்….”, என்றான்.

“போதும் அபி, நல்ல பொண்ணுங்க இருக்க தான் செய்யுறாங்க. எத்தனை குடும்பத்துல புருஷன் பாரினுக்கோ மிலிட்டரிக்கோ வேலைக்கு போறாங்க. அவங்களோட மனைவி எல்லாரும் இங்க அவங்களையே நினைச்சிட்டு வாழலையா?”

“இருக்கலாம். ஆனா நிறைய ஊர்ல புருஷன் ஊர்ல இல்லாத அந்த பொண்ணுங்க தான் தப்பான வழில போறாங்கன்னு பேசுறாங்க. உண்மை இல்லாம ஊர் பேசாது தானே?”

“என்னையும் உன்னால நம்ப முடியலையா அபி?”

“முடியலை. உன்னை பிரண்டா பாக்குறேன். அதை கடந்து நான் எதுவும் யோசிக்கலை. அப்படி யோசிச்சா உன்னையும் நம்பலைன்னு தான் சொல்லுவேன்”

“நான் அப்படி எல்லாம் கிடையாது அபி”

“இருக்கலாம். சரி அதை விடு. அப்புறம் இந்த விஷயம் யாருக்கும் தெரியாது. ரிஷிக்கு கூட தெரியாது. உன் கிட்டயும் ஏன் சொன்னேன் எப்படி சொன்னேன்னு புரியலை. நீ அடுத்தவங்க கிட்ட என்னைப் பத்தி சொல்ல மாட்டேனு எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனா உங்க வீட்ல உள்ளவங்க கிட்ட சொல்லுவியான்னு தெரியலை. ஆனா இந்த விஷயம் உன்னைக் கடந்து வெளிய போக கூடாதுன்னு நான் ஆசைப் படுறேன் பவி”, என்றான்.

“வெளிய சொல்லி டிஸ்கஸ் பண்ணுற விஸயம் இது கிடையாது அபி. அப்புறம் நீ உங்க அம்மா கிட்ட பேசலையா?”

“இல்லை, லீவுக்கு போவேன். பாசமா ஏக்கமா கண்ணீரோட என்னைப் பாப்பாங்க. ஆனா என் கிட்ட வந்து பேச அவங்களுக்கு தைரியம் இல்லை. ஏதாவது சொல்லணும்னா அத்தையை விட்டு சொல்லுவாங்க. இல்லைன்னா தங்கச்சியை வச்சி சொல்லுவாங்க. இப்ப வரைக்கும் நான் ஜீவாப்பா கிட்டயும் அம்மா கிட்டயும் பேசலை. பேச முடியும்னு தோணலை. அப்புறம் உனக்கு ஒண்ணும் தெரியுமா? அந்த குடும்பத்தோட மொத்த சொத்தும் இப்ப என் பேர்ல தான். ஏன்னா ஜீவானந்தம் முருகானந்தம் ரெண்டு பேரோட ஒரே வாரிசு நான் தான். ஆனா அந்த கசப்பான உண்மையை தான் தாங்க முடியலை”, என்று சொல்ல அவன் கையை பற்றிக் கொண்டாள் பவித்ரா.

காதல் தொடரும்…..

Advertisement