Advertisement

“எனக்கு இன்னைக்கு எல்லாமே வித்தியாசமா இருக்கு டா. ஆனா சந்தோஷமா இருக்கு. சரி எனக்கு கிளாஸ்ல ஒரு முக்கியமான வேலை இருக்கு. நாளைக்கு பாக்கலாம்”, என்று சொன்ன ரிஷி தங்கையிடம் “நீ கிளாஸ்க்கு போகலையா பவி?”, என்று கேட்டான்.

“இன்னும் லன்ச் டைம் முடிய பதினேழு நிமிஷம் இருக்கு. அது வரைக்கும் அபி கூட பேசிட்டு போறேன்”, என்று சொல்ல சரி என்று சொல்லி விட்டு சென்ற ரிஷிக்கு நண்பனின் மாற்றம் அவ்வளவு நிறைவைக் கொடுத்தது. நான்கு வருடமாக மாறாதவனின் இந்த மாற்றம் போதுமே?

ரிஷி சென்றதும் “சாப்பிட்டியா அபி?”, என்று கேட்டாள் பவித்ரா.

“ஆன்”, என்றவன் என்ன சொல்ல என்று தெரியாமல் தடுமாறினான். அபி மதியம் ஹாஸ்டலுக்கு செல்லவே மாட்டான். அவன் மதிய நேரம் முழுக்க இந்த மரத்தடியில் தான் அமர்ந்திருப்பான். காலை இரவு மட்டுமே அவன் உண்பது. ஆனால் அதை அவளிடம் எப்படிச் சொல்ல?

“என்ன நான் கேட்டுட்டே இருக்கேன். நீ பதில் சொல்ல மாட்டிக்க? சாப்பிட்டியா?”

“ஆன் சாப்பிட்டேனே?”

“இன்னைக்கு என்ன சாப்பாடு உங்க ஹாஸ்டல்ல?”

“அது சாம்பார், கூட்டு, அப்பளம்”, என்று சொல்ல அவனையே இமைக்காமல் பார்த்தாள்.

“என்ன அப்படி பாக்குற?”

“நீ ரொம்ப பேச மாட்டேன்னு தெரியும். ஆனா பொய் எல்லாம் சொல்லுவியா?”

“அது….”

“இன்னைக்கு உங்க ஹாஸ்டல்ல வெஜ் பிரியாணியும் சிக்கன் பிரியாணியும் தான் இருக்கும். அப்படின்னா நீ சாப்பிடலை அப்படி தானே?”

“ம்ம்”

“ஏதாவது வாங்கிட்டு வரவா?”

“வேண்டாம் பசிக்கலை”

“உனக்கு என்ன பிரச்சனை அபி?”

“எனக்கு என்ன? எனக்கு ஒண்ணும் இல்லையே?”

“உனக்கு ஏன் பொண்ணுங்களை பிடிக்க மாட்டிக்கு? அப்படி ஒரு எண்ணம் இருக்குறது தப்பு அபி. சில பேர் தப்பு பண்ணுறாங்க தான். ஆனா எல்லாரும் பண்ணுறது இல்லை. எங்க அம்மா உங்க அம்மா எல்லாரும் இந்த உலகத்துல நல்லவங்களா தானே இருக்காங்க?”

“யார் சொன்னா?”, என்று ஆழ்ந்து வந்தது அவன் குரல். அவள் திகைப்பாக அவனைப் பார்க்க “உங்க அம்மா நல்லவங்கன்னு சொல்லு ஒத்துக்குறேன். எங்க அம்மா நல்லவங்கன்னு உனக்கு யார் சொன்னா?”, என்று கேட்டான்.

“அபி, உலகத்துல அம்மான்னா நல்லவங்க தான் அபி”

“இருக்கலாம். ஆனா ஆசை எந்த நல்லவங்களையும் கெட்டவங்களா ஆக்கிரும்”

“ஏன் உங்க அம்மா உன்னை சரியா பாத்துக்கலையா? அந்த கோபமா உனக்கு?”

“நல்லா தான் பாத்துக்குறாங்க? இப்ப வரைக்குமே தாங்க தான் நினைக்கிறாங்க. எனக்கு தான் பிடிக்கலை”

“ஏன் அபி? அவங்க என்ன செஞ்சாங்க?”

“அது….”

“என் கிட்ட சொல்ல மாட்டியா?”

“சொன்னா நீ என் கிட்ட இனி பேச மாட்ட”

“நான் மத்தவங்க மாதிரி இல்லை”

“ஆமா, நீ கொஞ்சம் வித்தியாசமான பொண்ணு தான்”

“அப்படின்னா உனக்கு என்ன ஆச்சுன்னு சொல்லு? நான் உன் பிரண்ட் அபி. எனக்கு உன்னைப் பத்தி எல்லாம் தெரியணும். நீ சொல்லித் தான் ஆகணும்”

“சொல்லலைன்னா இனி என் கிட்ட பேச மாட்டியா?”

“சே சே அப்படி எல்லாம் இல்லை. சொல்ல இஷ்டம் இல்லைன்னா விடு அபி. நாம வேற பேசலாம்”, என்று சொல்ல “நான் ஒரு இல்லீகல் சைல்ட்”, என்றான் அபிமன்யு.

அவள் அதிர்ந்து அவனைப் பார்க்க “உண்மை தான். நான் தவறான உறவுக்கு பிறந்த குழந்தை”, என்றவன் அவளையே ஆழமாக பார்த்தான்.

“என்ன சொல்ற நீ?”, என்று அவள் அதிர்ச்சியாக கேட்க அவனும் தன்னுடைய மனக் கதவை அவளிடம் திறக்க ஆரம்பித்தான்.

“எங்க அம்மா பேர் அருந்ததி. அப்பா பேர்… முருகானந்தம். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கல்யாணம் முடிஞ்சு ஏழு வருஷம் வரைக்கும் குழந்தை இல்லை. எங்க பாட்டியோட கட்டாயத்துல ஆஸ்பத்திரில ரெண்டு பேருக்கும் பாத்துருக்காங்க. அந்த செக்கப்ல எங்க அம்மாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லைன்னும், எங்க அப்பாவுக்கு தான் குழந்தை பிறக்கவே செய்யாதுன்னும் சொல்லிருக்காங்க”

“அப்புறம் எப்படி?”

“அப்புறம் எப்படி நான் பிறந்தேன்னு கேக்க வரியா? அதை தானே சொல்ல வந்தேன்? டெஸ்ட் எடுத்துட்டு வீட்டுக்கு வந்ததும் அப்பா அம்மா கிட்ட என்னால உனக்கு எந்த சந்தோஷமும் இல்லை. அதனால நீ வேற கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லிருக்காங்க. அப்படி குழந்தை ஆசை, குடும்ப வாழ்க்கைக்கான ஆசை இருக்குறவங்க என்ன பண்ணிருக்கணும்? டீஸண்டா விவாகரத்து வாங்கிட்டு விலகிருக்கனும் தானே? ஆனா எங்க அம்மா செய்யலை. எங்க அப்பா கிட்ட எனக்கு நீ குழந்தை உனக்கு நான் குழந்தைன்னு டயலாக் அடிச்சிருக்காங்க. ஆனா அதுக்கு அடுத்த மாசமே அவங்க மாசமா ஆகிருக்காங்க”, என்று சொல்ல அதிர்ந்து அவனைப் பார்த்தவள் “அபி”, என்றாள்.

“அப்பாவுக்கு எப்படி இருந்துருக்கும்? அது மட்டுமில்லாம அந்த குழந்தைக்கு காரணம் அப்பாவோட அண்ணன் ஜீவானந்தமா இருந்தா?”, என்று கேட்டு அவளைப் பார்க்க அவளுக்கு அடுத்த அதிர்ச்சி.

“அபி”

“யெஸ். அப்படி உருவான குழந்தை நான் தான். இப்ப என் பிறப்புக்கு காரணம் என்னோட அப்பாவோட அண்ணன். ஆனா ஊர் உலகம் என்னை எங்க அப்பாவோட குழந்தையா தான் பாக்குது. இப்ப சொல்லு நான் யாரோட பையன்? நான் யாரை அப்பான்னு கூப்பிடணும்? பெரியப்பான்னு கூப்பிட வேண்டியவர் தான் என் அப்பான்னா என் அப்பாவை நான் என்னன்னு கூப்பிட? அப்பா தானே என் அம்மாவோட புருஷன்? ஆனா அவர் என் அப்பா இல்லையாம்”

“அபி”

“கதை கேவலமா இருக்குல்ல பவி?”, என்று சிரித்தான்.

“கதையா அபி? நான் கூட உண்மையோன்னு பயந்துட்டேன்”

“கதை தான் பவி. இந்த அபியோட கதை”

“அபி”

“யெஸ், இந்த விஷயம் எல்லாம் எனக்கு பத்து படிக்கிற வரைக்கு தெரியாது. அப்புறம் தான் தெரியும். நான் பிறந்தது ஒரு ஆக்ஸிடெண்ட்ன்னு வச்சிக்கோ. அதைக் கூட மன்னிச்சு விட்டுறலாம். ஆனா எனக்கு அப்புறம் மூணு வருஷம் கழிச்சு ஒரு தங்கச்சியும் பிறந்திருக்கா. அவளுக்கும் எங்க பெரியப்பா தான் அப்பா. இப்ப சொல்லு எங்க அம்மாவை நான் எப்படி மதிப்பேன்?”

“அபி இதெல்லாம் உண்மையா கூட இல்லாம இருந்திருக்கலாம். உங்க அம்மாவை பத்தி யாரோ தப்பா சொல்லிருக்காங்க. உங்க அப்பாவுக்கு குணமாகி இருக்கலாம் தானே?”

“அம்மாவும் பெரியப்பாவும் ஒரே ரூமுக்குள்ள கதவை பூட்டிட்டு இருந்ததை நான் பாத்தேன்னு சொன்னா நீ நம்புவியா?”

“அபி?”

“எங்க குடும்பம் கொஞ்சம் பெரிய குடும்பம். எங்க பெரியப்பா ஜீவானந்தம் கல்யாணம் பண்ணிக்கலை. பிஸ்னஸ் பாத்துட்டு இருந்துட்டார். அடுத்து எங்க அப்பா, எங்க அம்மா, என் தங்கச்சி சஞ்சனா நான். அது போக எங்க அத்தை வடிவுக்கரசி, மாமா தேவன், ரோஹினி ஷாலினின்னு ரெண்டு அத்தை பொண்ணுங்க. எல்லாரும் ஒரே வீட்ல ஒண்ணா தான் இருந்தோம். ஊர்ல மதிப்பும் மரியாதையும் கொண்ட குடும்பம் எங்களோடது. ஆனா வீட்டுக்குள்ள இருக்குற அசிங்கம் யாருக்கும் தெரியாது. எனக்கு பதினஞ்சு வயசு வரைக்கும் எல்லாமே நல்லா தான் போச்சு. பெரியப்பாவை ஜீவாப்பான்னு தான் சொல்லுவேன். அவரும் என் மேலயும் என் தங்கச்சி மேலயும் பாசமா இருப்பார். அப்படி இருக்கும் போது ஒரு நாள் நான் டென்த் படிச்சிட்டு இருந்தேன். அன்னைக்கு…..”, என்று அவன் திணற “சொல்ல கஷ்டமா இருந்தா சொல்ல வேண்டாம் அபி”, என்றாள்.

“ஆரம்பிச்சிட்டேன் தானே? சொல்லி முடிச்சிறேன். அன்னைக்கு ஸ்கூல் ஹெச். எம் இறந்துட்டாங்கன்னு சொல்லி மதியமே ஸ்கூல் விட்டுட்டாங்க. நான் பிரண்ட்ஸ் கூட வீட்டுக்கு வந்தேன். நல்லதா போச்சு, பிரண்ட்ஸ் வேலை இருக்குனு போயிட்டாங்க. அவங்களும் உள்ள வந்திருந்தா அவ்வளவு தான். நான் வீட்டுக்கு வரப்ப செக்யூரிட்டி மட்டும் தான் இருந்தார். ஆனா கதவு திறந்து தான் இருந்துச்சு. என்ன வீட்ல யாருமே இல்லைன்னு நினைச்சு அம்மாவை தேடினேன். அப்ப என்னோட பெரியப்பா ரூம் திறந்துச்சு. உள்ள இருந்து என் அம்மா வந்தாங்க. அவங்களுக்கு பின்னாடியே எங்க ஜீவாப்பா. அதுவும் அவங்க ரெண்டு பேரும் இருந்த கோலம். எனக்கு அப்ப விவரம் தெரியும் தானே? அதுவும் என்னைப் பாத்ததும் அவங்க அதிர்ச்சியானதை இப்பவும் என்னால மறக்க முடியாது. ஊர் உலகத்துக்காக போலியான வாழ்க்கை வாழ்ந்துருக்காங்க பவி”, என்று வேதனையுடன் சொல்லி முடித்தான்.

Advertisement