Advertisement

அத்தியாயம் 5 

கனவுகள் மறந்து விடும் என்று 

யார் சொன்னது உன் உருவில் 

காண்கிறேன் பல வண்ணக் கனவுகளை!!!

அடுத்த நாள் கல்லூரிக்கு சென்ற பிறகுமே அபிமன்யுவின் கோபம் குறையவே இல்லை. அதற்காக அவனே நேரில் சென்று அவளை சந்திக்கும் பழக்கம் எல்லாம் இல்லாததால் எரிச்சலுடன் சுற்றிக் கொண்டிருந்தான். இப்போது அவனது உச்சக் கோபம் அவள் மீது தான் திரும்பி இருந்தது.

அன்று பிரேக் டைமில் சாந்தினியை அழைத்துக் கொண்டு கேண்டீன் சென்று கொண்டிருந்தாள் பவித்ரா. அபி அமர்ந்திருப்பதைக் கண்ட சாந்தினி “இப்படி போக வேண்டாம் டி, வாஸ்த்து சரி இல்லை. அப்படி போகலாம்”, என்றாள்.

“வாஸ்து சரி இல்லையா?”, என்று குழம்பி போனவள் அவள் பார்வை போன திக்கில் பார்த்து அங்கே அபி அமர்ந்திருப்பதைக் கண்டு “வாஸ்த்து சரியா தான் இருக்கு. உன் வாய் தான் சரி இல்லை. அதை சரியா வச்சிருந்தா இப்படி அவனுக்கு பயப்பட வேண்டாம். சரி வா அபி கிட்ட ரெண்டு வார்த்தை பேசிட்டு போகலாம்”, என்றாள்.

“ஆத்தி, எனக்கு ரொம்ப நாள் உயிர் வாழணும் பா. நீ பேசிட்டு வா. நான் கேண்டீன் போய் உனக்கு பப்ஸும் டீயும் வாங்கி வைக்கிறேன். சீக்கிரம் வா”, என்று சொல்லி விட்டு வேறு வழியில் சென்று விட்டாள்.

சிறு சிரிப்புடன் அபியை நோக்கிச் சென்ற பவித்ரா “ஹாய் அபி”, என்றாள்.

அவளை நிமிர்ந்து பார்த்தவன் கொலை வெறியுடன் முறைத்தான். அவன் பார்வையைக் கண்டு திகைத்து போனாள். முன்பெல்லாம் அவளைக் கண்டதும் அவன் முகம் எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்தாது. அன்று அவளிடம் பேசும் போது கூட அவன் முகம் இவ்வளவு வெறுப்புடன் அவளை நோக்க வில்லை. இன்றோ கொலை வெறியுடன் அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.

“என்ன ஆச்சு அபி? எதுக்கு முறைக்கிற?”, என்று கேட்ட படி அவன் அருகே அமர்ந்தாள்.

“ஒழுங்கு மரியாதையா இங்க இருந்து போயிரு. ஆள் நடமாட்டம் இருக்கேன்னு பாக்குறேன். நீ மட்டும் தனியா சிக்கிருந்தா உன் கன்னம் பழுத்துருக்கும். போடி இங்க இருந்து”, என்று அடிக்குரலில் சீறினான் அபி.

“டி யா?”, என்று அதிர்ந்து போனவள் “சரி அதை விடு. எதுக்கு என் மேல இவ்வளவு கோபம்? நான் என்ன செஞ்சேன்?”, என்று கேட்டாள்.

“உன்னை போகச் சொன்னேன் பவித்ரா. என் வாயைக் கிளறாத. போ இங்க இருந்து”

“ஏன் அபி கோபப் படுற? கொஞ்சம் ஃபிரண்ட்லியா பேசலாம் தானே? எப்பவும் சுள்ளுன்னு எரிஞ்சு விழணுமா?”

“ஃபிரண்ட்லியாவா? உன் கிட்ட நான் எதுக்கு பேசணும்? எனக்கு உன்னைப் பாக்க கூட விருப்பம் இல்லை. போ இங்க இருந்து”

“மத்த பொண்ணுங்க மேல உனக்கு கோபம்னு புரியுது. என்னையும் அப்படி தான் நினைக்கிறியா? என்னைப் பாத்தா ஏமாத்துக்காரி மாதிரியா இருக்கு?”

“அஃப்கோர்ஸ், நீ மட்டும் என்ன விதிவிலக்கு. நீயும் அப்படி தான் இருப்ப”

“நான் அப்படி எல்லாம் கிடையாது அபி. என்னை நம்பு”

“நம்பிட்டேன். அதான் நேத்து பாத்தேனே’? வண்டில கட்டி பிடிச்சிட்டு போறது என்ன? ஒரே ஐஸ்கிரிமை எச்சின்னு பாக்காம திங்குறது என்ன? தலைல முக்காடு போட்டு முகத்தை மறைக்கிறது என்ன? நீ என்ன கருமத்தையும் செஞ்சிட்டு போ. ஆனா அன்னைக்கு எதுக்கு நல்லவ மாதிரி பேசணும்?”, என்று கேட்டவனை அதிர்வுடன் பார்த்தாள்.

“அபி நீ ஏதோ தப்பா புரிஞ்சிக்கிட்ட போல? நீ நேத்து என்னைப் பாத்தியா?”

“உன்னை போகச் சொன்னேன் பவித்ரா. பொது இடத்துல இருக்கோம்னு ரொம்ப பொறுமையா இருக்கேன். ஒழுங்கா போ இங்க இருந்து”

“அபி”

“சீ போடி”

“சீயா? நீ அருவருப்பா சொல்ற அளவுக்கு நான் எந்த தப்பும் செய்யலை அபி? நீ வீணா பழி போடுறதுக்கு எல்லாம் நான் பலி ஆக முடியாது. நேத்து நான் என் மாமா கூட தான் வெளிய போனேன். என் மாமா எனக்கு அம்மா அப்பா மாதிரி. அம்மாவோட ஐஸ்கிரிமை பிடுங்கி சாப்பிடுறது மாதிரி தான் அதுவும். அப்பா தோள்ல உரிமையா கை போட்டுக்குறது மாதிரி தான் அதுவும். அப்புறம் துப்பட்டா போட்டது வெயிலுக்காக”, என்று சொல்ல அவளை சந்தேகமாக பார்த்தான். ஆனாலும் ஒரு அமைதி அவனுக்குள் வந்தது. பவித்ரா மற்ற பெண்களைப் போல இல்லை என்று ஒரு சின்ன நிம்மதி அவனுக்கு.

“உண்மை தான் அபி. அது ரவி மாமா. என்னோட அம்மாவோட தம்பி. என் தாய் மாமா. ஆனா உனக்கு தேங்க்ஸ் சொல்லணும் அபி”

“எதுக்கு?”

“இல்லை மாமா கூட அப்படி போறது உனக்கே தப்பா தெரிஞ்சிருந்தா பாக்குற அத்தனை பேரும் அப்படி தானே நினைச்சிருப்பாங்க. கொஞ்சம் பொது இடத்துல எப்படி நடந்துக்கணும்னு நானும் படிக்கணும்”, என்று சொல்ல அவள் மேல் சிறிது நல்ல அபிப்பிராயம் எழுந்தது.

ஆனாலும் ரவியின் கண்களில் இருந்த நேசம் அவன் மனதை உறுத்த “நீ அவனை… உன் மாமாவை லவ் பண்ணுறியா?”, என்று கேட்டான்.

“சே சே, அப்படி எல்லாம் இல்லை”

“ஓ”

“என்ன ஓ? இப்ப உன் சந்தேகம் தீந்துச்சா?”

“ம்ம்”

“அதை கொஞ்சம் சிரிச்சிக்கிட்டே சொல்லக் கூடாதா?”

“எதுக்கு சிரிக்கணும்?”

“உலகத்துல சிரிக்கிறதுக்கு காரணம் கேக்குறது நீயா தான் இருப்ப?  சரி அதை விடு. இனி நீயும் நானும் பிரண்ட்ஸ்”, என்று கையை நீட்டியவள் “என்னோட ஃபிரண்ட் ரெகுஸ்ட்டை அக்சப்ட் பண்ணிக்கோ”, என்றாள்.

அவன் தயங்கிய படி அமர்ந்திருக்க “கையைக் கொடுப்பா”, என்று சொல்லி அவளே அவன் கையைப் பற்றி குலுக்கி “இனி நானும் உனக்கு ஃபிரண்ட் சரியா? சரி நான் கேண்டீன் போறேன் வரியா?”, என்று கேட்டவள் அவன் மறுப்பாக தலையசைக்கவும் அங்கிருந்து சென்று விட்டாள்.

போகும் அவளையே பார்த்தவன் அப்படியே அமர்ந்து விட்டான். அவன் பார்த்த பெண்களில் இருந்து பவித்ரா மாறுபட்ட பெண்ணாக தான் தெரிந்தாள். ஆனாலும் சூடு கண்ட பூனை போன்றவன் பெண்களை நம்ப தயாராக இல்லை.

அடுத்த நாள் அபியும் ரிஷியும் ஒரு மரத்தடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க அப்போது அங்கே வந்தாள் பவித்ரா. தங்கையைக் கண்டதும் ரிஷிக்கு திக்கென்று இருந்தது. அவள் ஏதாவது பேசி அபி ஏதாவது நோஸ் கட் கொடுத்தால் அதற்கு அவள் ரிஷியை தானே ஒரு வழி பண்ணுவாள்?

அதனால் அவசரமாக “என்ன பவி? என்ன ஆச்சு? ஏதாவது வேணுமா?”, என்று கேட்டான்.

“எனக்கு என்ன வேணும்? ஒண்ணும் வேண்டாமே?”

“அப்ப எதுக்கு என்னைத் தேடி வந்த?”

“உன்னை யாரு தேடி வந்தா? நான் அபியை தேடி வந்தேன்”, என்றவள் “ஹாய் அபி”, என்றாள்.

அவள் சொன்னதற்கே ரிஷி அதிர்ந்து விழிக்க “ஹாய் பவித்ரா”, என்று அபி சொன்னது ரிஷிக்கு நெஞ்சு வலியையே வர வைத்தது.

“என்ன பவித்ரான்னு நீட்டி சொல்லிட்டு இருக்க? சார்ட்டா பவின்னு சொல்லு”, என்று பவித்ரா சொல்ல “சரி பவி”, என்றான் அபி.

“அடப்பாவிங்களா, என்ன டா நடக்குது இங்க? நீங்க எப்ப பேசுனீங்க?”, என்று கேட்டான் ரிஷி.

“நாங்க பிறந்து கொஞ்ச வருசத்துல பேசிட்டோமே? உனக்கு தெரியாதா அண்ணா?”, என்று கேட்டாள் பவித்ரா. அதற்கு ரிஷி நே என்று விழிக்க இருவரையும் முதல் முறையாக சிரிப்புடன் பார்த்தான் அபிமன்யு. அவனது சிரிப்பு ரிஷிக்கு திகைப்பையும் சந்தோசத்தையும் ஒருங்கே கொடுத்தது.

“அபி நீ சிரிக்கிற டா”, என்று ரிஷி சொல்ல அபியின் சிரிப்பு அப்படியே மறைந்து போனது.

“போச்சு போச்சு அவனே அதிசயமா சிரிச்சான். நீ சொல்லிட்டியா? இன்னும் உராங்கோட்டான் மாதிரி தான் இருப்பான்”, என்றாள் பவித்ரா. இப்போது மீண்டும் அபி சிரிக்க ரிஷிக்கு சந்தோஷமாக இருந்தது.

”டேய் அவ உன்னை உராங்கோட்டான்னு சொல்றா? நீ அதுக்கு சிரிக்கிற?”, என்று கேட்டான் ரிஷி.

அதற்கும் அபி சிரிக்க “அவனே சும்மா இருக்கான். நீ என்ன ஏத்தி விடுற? அவனுக்கு நான் நிறைய பேர் வச்சிருக்கேன். உராங்கோட்டான், சிடு மூஞ்சு, காட்டெருமை. அப்புறம் ரவி மாமா கூட இவனுக்கு காண்டாமிருகம்னு பேர் வச்சிருக்காங்க”, என்று சொல்ல இப்போது அபியின் சிரிப்பு மறைந்தது.

“அவனே ஓணான் மாதிரி இருக்கான். அவன் எனக்கு பேர் வைக்கிறானா? அவன் இனி எனக்கு அப்படி பேர் வச்சா நான் அவனை இனி ஓனான்னு கூப்பிடுவேன்னு சொல்லு”, என்று சொன்ன அபியை இருவரும் வியப்பாக பார்த்தார்கள். அபிக்கே அவன் இப்படி எல்லாம் பேசுவது வியப்பு தான்.

Advertisement