Advertisement

“சரி வேற யாரையும் லவ் பண்ண மாட்டா. ஆனா கொஞ்சம் வருஷம் கழிச்சு வேற ஒரு நல்ல பையனா பாத்து கல்யாணம் பண்ணிப்பா தானே?”

“ஆமா, அதுக்கு என்ன?”, என்று கேட்டாள். 

“அவ இன்னொரு கல்யாணம் பண்ணிக்குவான்னா என் மேல அவளுக்கு இருந்த காதலுக்கு என்ன அர்த்தம்?”

“நீ தான் மறுத்துட்டியே? அப்புறமும் உன்னையே நினைச்சிட்டு இருக்கணுமா?”

“காதல் இருந்தா இருக்க தோணும் தானே?”, என்று கேட்க அவளே குழம்பி விட்டாள். வாய் ஓயாமல் பேசும் பவித்ராவுக்கு என்ன பேச என்று தெரிய வில்லை. 

“என்ன வாயை மூடிட்ட? பதில் சொல்லு. நான் மறுத்தாலும் அவளோட காதல் உண்மைன்னா என்னையே நினைச்சிட்டு அவ இருக்கணும் தானே?”, என்று கேட்டவன் அவளையே இமைக்காமல் பார்த்தான். 

“ஏன் இருக்கணும்? நீ வேற பொண்ணைக் கல்யாணம் பண்ணிருவ தானே? அவ மட்டும் உன்னையே நினைச்சிட்டு இருக்கணுமா?”

“நான் வேற பொண்ணைக் கல்யாணம் பண்ணத் தான் செய்வேன். ஏன்னா நான் யாரையும் லவ் பண்ணலை. ஆனா அவ என்னை லவ் பண்ணினா தானே? அப்ப எப்படி வேற ஆளைக் கல்யாணம் பண்ணிக்க முடியும்? அப்படி பண்ணிக்கிட்டா அந்த காதல் எப்படி உண்மையான காதலாகும்?”

“நீ என்னைக் குழப்புற அபி?”

“எனக்கு எந்த குழப்பமும் இல்லை. பொண்ணுங்க எல்லாம் ஏமாத்துக்காரங்க. சுயநலவாதிங்க. நான் அதுல தெளிவா இருக்கேன். முதல் தடவை வந்து காதலைச் சொன்னதுனால அடியோட விட்டேன். இனி ஒரு தடவை வந்தா கொன்னு புதைச்சிருவேன். இனி நீயும் என் கிட்ட வந்து அவளுக்காக பேசாத”, என்றவன் விருவிருவென்று சென்று விட்டான். 

திகைத்து போய் நின்றது அவள் தான். அபி பேசிய விசயமே அவளுக்கு திகைப்பு தான் என்றால் அவன் இந்த அளவுக்கு பேசுவான் என்பது அதை விட திகைப்பு. இது வரை அபி இவ்வளவு நீளமாக பேசியதை அவள் பார்த்ததே இல்லை. 

என்னவோ அவன் சொல்வதிலும் நியாயம் இருப்பது போல இருந்தது. சாந்தினி இடத்தில் தான் இருந்தால் என்ன செய்வோம் என்றெல்லாம் யோசித்தாள். 

“நான் ஒருத்தனை லவ் பண்ணி அவன் காதலை அக்சப்ட் பண்ணலைன்னா நான் அவனை நினைச்சிட்டு இருப்பேனா? இல்லை வேற ஆளைக் கல்யாணம் பண்ணிக்குவேனா?”, என்ற கேள்வி எழுந்தது. ஆனால் விடை தெரிய வில்லை. 

“இந்த அரை மெண்டல் என்னையும் குழப்பிட்டானே? கடைசில சாந்தினிக்காக சண்டை போடலையே?”, என்று எண்ணி கிளாசுக்கு சென்றாள். 

“என்ன பவி ஆச்சு? அபியைப் பாத்தியா? என்ன சொன்னான்? உன்னையும் அடிச்சிட்டானா?”

“அடிக்க எல்லாம் செய்யலை. ஆனா அவனைப் பாத்து சண்டை போட்டேன். அப்புறம் சாணி எனக்கு ஒரு டவுட் டி”

“என்ன டவுட்?”

“இப்ப நீ அபியை லவ் பண்ணினதை அவன் கிட்ட சொன்னியா?”

“ஆமா, சொன்னேன் அவன் மறுத்துட்டான். இதுல என்ன டவுட்?”

“அது…. அவன் உன்னை வேண்டாம்னு சொல்லிட்டான். இப்ப நீ என்ன பண்ணப் போற?”

“நான் என்ன பண்ண? அவன் தான் மறுத்துட்டானே? ரெண்டு நாள் ஒரு மாதிரி இருக்கும். அப்புறம் பழகிரும். நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருப்பேன். இனி காதலைப் பத்தி எல்லாம் யோசிக்க மாட்டேன் டி. நல்லா படிக்கணும்”

“அதுக்கப்புறம்.. படிச்சு முடிச்சிட்டு,…”

“படிச்சு முடிச்சு நல்ல வேலைக்கு போகணும்”

“அப்புறம்?”

“அப்புறம்… அப்புறம் ஆன் என் அம்மா அப்பா பாக்குற பையனைக் கட்டிட்டு வாழனும்”, என்று எதார்த்தத்தைச் சொன்னாள் சாந்தினி. 

“அப்ப அபி மேல உள்ள உன் காதல் என்ன ஆகும்?”, என்று அவளை மீறி கேட்டிருந்தாள் பவித்ரா. 

ஒரு நிமிடம் திகைத்த சாந்தினி “அதான் அவன் என் காதலை மறுத்துட்டானே? அப்புறம் அவனை எப்படி நினைச்சிட்டே இருக்க?”, என்று கேட்டாள். 

“நீ கேக்குறது சரி தான் சாணி. ஆனா அபி மேல காதல் இருந்தா உன்னால இன்னொரு ஆளை ஏத்துக்க முடியாது தானே?”

“அதுக்குனு வேண்டாம்னு சொன்னவனை நினைச்சிட்டு இருக்க சொல்றியா? அப்படி இருந்தா இந்த உலகத்துல எல்லாரும் சிங்கிலா தான் சுத்தணும். யாருக்கும் கல்யாணமே ஆகாது”, என்றாள் சாந்தினி. அந்த நிதர்சனமும் பவித்ராவுக்கு புரிந்தது. ஆனாலும் ஏதோ அபியின் கூற்றிலும் நியாயம் இருப்பதாக பட்டது. 

பவித்ரா குழப்பத்தில் இருக்க “விடு டி, ரொம்ப யோசிக்காத. தப்பு என் மேல தான். இனி காதல்ன்னு சொல்லவே மாட்டேன் பா”, என்றவள் வேறு பேச பவித்ராவுக்கு அபி மீதான குழப்பம் அகலவே இல்லை. 

ஆனால் அன்றில் இருந்து அவள் பார்வையில் அபியைப் பற்றிய எண்ணம் மாறி இருந்தது. அவனைக் கண்டால் முன்னர் எழும் கோபம் இப்போது எழ வில்லை. 

பத்து பெண்களை சைட் அடித்து, நான்கு பேரிடம் கடலை வறுத்து, மூன்று பெண்களுடன் ஊர் சுற்றி, ஒருத்தியை காதலித்து கடைசியில் அவளையும் கை விட்டுவிட்டு வீட்டில் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்யும் சில ஆண்கள் இருக்கும் இந்த உலகத்தில் ஏனோ அபி தனித்து தெரிந்தான். அப்படி தவறு செய்யும் ஆண்களையும் பெண்களையும் அவன் வெறுப்பது சரி தான் என்று புரிந்தது. 

அப்போதில் இருந்தே அவள் அபியை திட்டுவதில்லை. ரவி கூட ஒரு நாள் “அந்த அபி காண்டாமிருகம் எப்படி இருக்கான்? அவனைப் பத்தி ஒண்ணுமே சொல்லலை? இல்லைன்னா அவன் அப்படி பண்ணினான் இப்படி பண்ணினான்னு ஏதாவது சொல்லுவ?”, என்று கேட்டான். 

“சே சே, அபி ரொம்ப நல்லவன் மாமா. இனி அவனை காண்டாமிருகம்னு எல்லாம் கூப்பிடாத. அவன் அமைதியா இருக்குறதுக்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கும் போல?”, என்று அவள் பரிந்து பேச உள்ளுக்குள் ஏதோ கருகிய உணர்வு ரவிக்கு. 

“தேவையில்லாமல் நாமலே அவனைப் பத்தி பேச்சை ஆரம்பிச்சிட்டோமோ”, என்று வருந்தினான். 

ஆனால் உண்மையிலே அவன் வருத்தப் படும் படி தான் பவித்ரா நடந்து கொண்டாள். ஏனென்றால் அபி மீது கோபம் இருக்கும் போது அனைவரிடமும் அவனை வறுத்தெடுத்தவள் இப்போது அவனைப் பற்றி நல்லதாகவே சொல்ல ஆரம்பித்தாள். 

முதல் செமஸ்டர் ரிசல்ட் வந்த போது பவித்ரா முதல் மதிப்பெண் வாங்கி இருக்க அவளுக்கு பரிசு கொடுத்து வாழ்த்தினான் ரவி. 

“அபி தான் மாமா நான் காலேஜ் பர்ஸ்ட் வரவே காரணம். அவனோட நோட்ஸ் மட்டும் தான் படிச்சேன். அவன் அப்படி ஒரு கிளவர். அவன் நோட்ஸ் பாத்தா வேற எந்த புக்கும் ரெபர் பண்ண வேண்டாம். உனக்கு ஒண்ணு தெரியுமா மாமா. எங்க டிப்பார்ட்மெண்ட் டாப்பரே அபி தானாம்? அமைதியா இருந்தாலும் அவனுக்குள்ளே அவ்வளவு திறமை இருக்கு பாரேன்?”, என்று பெருமை பேச ரவி நொந்தே போனான். 

“அபியை காதலிக்கிறியா பவித்ரா?”, என்ற கேள்வி அவன் தொண்டைக் குழி வரை வந்து விட்டது. ஆனால் இல்லாத ஒன்றை சொல்லி உருவாக்க கூடாது என்று அமைதி காத்தான். 

அபியைப் பற்றிய கண்ணோட்டத்தை பவித்ரா மாற்றிக் கொண்டாலும் அபி அவனாகவே தான் இருந்தான். அதே அமைதி, அதே சிடுசிடுப்பு, தன்னுடைய படிப்பு என்று அவன் அவனாகவே தான் இருந்தான். ஆனால் அவனுடைய அமைதியையும் கலைக்க வைத்தாள் பவித்ரா. 

அன்று ஞாயிறு என்பதால் அபி கல்லூரி விடுதியில் இருந்து வெளியே கடைக்கு சென்றிருந்தான். அவனுக்கு தேவையான சோப், பேஸ்ட் எல்லாம் முடிந்து விட்டதால் வாங்கச் சென்றிருந்தான். மற்ற மாணவர்கள் சினிமா மால் என்று சுற்றினால் இவன் அப்படி எல்லாம் எங்கும் செல்ல மாட்டான். 

கடையில் தேவையான அனைத்தையும் வாங்கிக் கொண்டு ஆட்டோ ஸ்டாண்ட் நோக்கி நடக்கும் போது தான் அவன் கண்கள் ஒரு இடத்தில் ஆணி அடித்தது போல நின்றது. 

அங்கே இருந்த கண்ணாடியாலான ஒரு ஐஸ்கிரீம் கடையில் கலகலவென்று சிரித்த படி ஐஸ்கிரீம் உண்டு கொண்டிருந்தாள் பவித்ரா. அவள் எதிரே அமர்ந்திருந்தான் ரவி. 

அபிக்கு ரவியை தெரியாது. அதனால் “இது யாரா இருக்கும்? ரிஷிக்கு தெரிஞ்சவங்களா இல்லை பவித்ராவுக்கு தெரிஞ்சவங்களா?”, என்று யோசித்தவனின் கண்களில் விழுந்தது ரவியின் கண்களில் இருந்த காதல். 

ஒரு ஆணின் பார்வையை அவனால் இனம் காண முடியுமே? “இவன் இவளோட லவ்வர் தான் போல?”, என்று எண்ணிக் கொண்டு அவர்களையே பார்த்த படி ஒரு ஓரமாக நின்றான். 

ஏன் நின்றான் எதற்கு நின்றான் எதற்கு அவர்களை பார்க்கிறான் என்று எதுவுமே புரிய வில்லை. ரிஷியின் தங்கை என்ற அக்கறையா என்று கூட புரிய வில்லை. 

அப்போது ரவி உண்டு கொண்டிருந்த ஐஸ்கிரிமை பிடுங்கி பவித்ரா உண்ணத் துவங்க அபியின் ரத்த அழுத்தம் எகிறியது. 

“என்னமோ அன்னைக்கு காதலிச்சா தப்பு அது இதுன்னு கதை விட்டா? இவ மட்டும் இப்படி சுத்தலாமோ? பொண்ணுங்களே ஏமாத்துக்காரங்க தான். இதுல இவ மட்டும் சரியா இருப்பான்னு நினைச்சது என் தப்பு தான். ஆனா என்ன பேச்சு பேசின உனக்கு இருக்கு டி?”, என்று எண்ணிக் கொண்டு நின்றான். 

ஐஸ்கிரீம் உண்டு முடித்தவர்கள் வெளியே வந்தார்கள். ரவி தன்னுடைய புல்லட்டைக் கிளப்ப துப்பட்டாவை வெயிலுக்காக முக்காடு போல போட்டுக் கொண்ட பவித்ரா வண்டியில் இரு புறமும் கால் போட்ட படி அமர்ந்தாள். அவளை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அபி. 

ரவி வண்டியைக் கிளப்ப அவன் இரு தோள்களிலும் கையை வைத்த பவித்ரா அவன் காதருகே குனிந்து ஏதோ ரகசியம் பேச அவர்கள் வண்டி சீறிப் பாய்ந்தது.

அபியின் கண்ணில் இருந்து அந்த வண்டி மறையும் வரை பார்த்த படி நின்றவன் அதற்கு பிறகு தான் ஆட்டோ பிடித்து ஹாஸ்டல் வந்தான். ஆனால் அவன் கோபம் மட்டும் குறையவே இல்லை. “எல்லா பொண்ணுங்க மாதிரி இருக்குறவ எதுக்கு அன்னைக்கு நல்லவ மாதிரி பேசணும்?”, என்று உள்ளுக்குள் பொருமிக் கொண்டிருந்தான். 

இப்போது அவள் மட்டும் கையில் சிக்கி இருந்தால் கசாப் போடப் படும் ஆட்டின் நிலை தான் அவளுக்கு. 

காதல் தொடரும்….

Advertisement