Advertisement

அத்தியாயம்

இயற்கை கூட ரகசியமாய் 

நீரூற்றிச் செல்கிறது நம் 

காதல் செடி வளர!!!

இப்படியே நாட்கள் கடக்க அப்போது ஒரு நாள் பவித்ரா தன்னுடைய கிளாசுக்குள் வரும் போது சாந்தினி கன்னத்தில் கை வைத்த படி கலக்கமாக அமர்ந்திருந்தாள். 

“என்ன டி காலைலே கன்னத்துல கை வச்சு உக்காந்துருக்க? எத்தனை கப்பல் கவுந்துச்சு?”, என்று கேட்ட படி அவள் அருகே அமர்ந்தாள் பவித்ரா. அதற்கு சாந்தினி எந்த பதிலும் சொல்ல வில்லை. 

“ஏய் சாணி என்ன டி ஆச்சு?”, என்று பவித்ரா கேட்க அவளை முறைத்துப் பார்த்த சாந்தினி “லூசு, என் பேரை சுருக்கி கூப்பிடுறேன்னு கேவலப் படுத்தாத. சனின்னாவது கூப்பிடேன் டி. சாணின்னு உவ்வே”, என்றாள். 

“சனி சனியன்னு எல்லாம் சொல்லக் கூடாது டி. ரொம்ப தப்பு”, என்று பாவம் போல பவித்ரா சொல்ல “அப்ப சாணின்னு மட்டும் சொல்லலாமா?”, என்று கேட்டாள். 

“ஆமா சாணி புனிதமாச்சே? சரி அதை விடு. நீ ஏன் கன்னத்துல கை வச்சே பேசுற?”

“ஒண்ணும் இல்லை, சும்மா வேண்டுதல்”

“என்னன்னு சொல்லப் போறியா இல்லையா? வீட்ல ஏதாவது பிரச்சனையா டி?”

“இல்லை”

“அப்படின்னா என்னன்னு சொல்லு”

“சொன்னா திட்டுவ”

“சொல்லலைன்னா மிதிக்கவே செய்வேன்”, என்று சொல்ல வேறு வழியில்லாமல் சொல்ல ஆரம்பித்தாள் சாந்தினி. 

“நான் ஒரு பையனை லவ் பண்ணுனேனா?”, என்று அவள் ஆரம்பிக்க “என்னது லவ்வா? அறிவிருக்கா உனக்கு? லவ் பண்ணுற வயசா உனக்கு? இதுக்கு தான் உன் வீட்ல உன்னைக் கஷ்டப் பட்டு படிக்க வைக்கிறாங்களா? உனக்கு எவ்வளவு பீஸ் கட்டுறாங்க. நீ பொறுப்பு இல்லாம லவ்ன்னு சொல்ற? இரு இப்பவே உங்க அப்பா கிட்ட சொல்றேன்”, என்று படபடத்தாள் பவித்ரா. 

“கோபப் படாதே பவி. நான் சொன்னா நீ இப்படிச் சொல்லுவேன்னு தான் நான் உன் கிட்ட சொல்லவே இல்லை”

“தெரியுதுல்ல நான் திட்டுவேன்னு? படிக்கிற வயசுல லவ் எல்லாம் தப்பு டி. அம்மா அப்பாவுக்கு தெரியாதா நமக்கு எப்ப என்ன செய்யணும்னு?”

“சரி நான் இனி லவ் பண்ண மாட்டேன். போதுமா?”, என்று சாந்தினி கேட்க “நிஜமாவா? நம்ப முடியலையே?”, என்று சந்தேகமாக கேட்டாள். 

“நிஜமா பண்ண மாட்டேன் டி. போதும் போதும்னு சொல்ற அளவுக்கு வாங்கிட்டேன். இனி என் வாயில லவ் அப்படின்னு வரவே வராது”

“என்ன வாங்கிட்ட?”

“அடி தான்”

“அடியா?”

“ம்ம இங்க பாரு”, என்று கன்னத்தை லேசாக காட்ட அதுவோ பன்னு போல வீங்கி இருந்தது. அது மட்டுமல்லாமல் கன்னத்தில் மூன்று விரல்கள் அழுத்தமாக பதிந்திருந்தது. அதைக் கண்டு அதிர்ந்து போன பவித்ரா “சாந்தினி என்ன டி இது? யார் இப்படி பண்ணினா?”, என்று கோபமாக கேட்டாள். 

“நான் லவ் பண்ணுறேன்னு சொன்ன பையன் தான் என்னை அடிச்சிட்டான்”

“வாட்? அவன் எதுக்கு உன்னை அடிச்சான்?”

“அவன் கிட்ட லவ் சொன்னேனா? அதான்”

“அது தப்பு தான். ஆனா அதுக்கு அடிப்பானா? என் பிரண்டை அடிக்க அவன் யாரு? என்ன தப்பு பண்ணினாலும் அது என்ன பொம்பளை பிள்ளை மேல கை வைக்கிறது? அவனுக்கு நான் பாடம் எடுக்கலை என் பேர் பவித்ரா இல்லை”, என்று சீறினாள். 

“ஏய் சும்மா இரு டி. நானே அடி வாங்கிட்டு கமுக்கமாக வந்து உக்காந்துருக்கேன். நீ தண்டோரா போட்டுறாத. மத்த பசங்க பாத்தா அசிங்கமா போய்ரும்”

“யாருக்கும் தெரியாது. ஆனா அவனை சும்மா விட மாட்டேன். சரி அது யாருன்னு சொல்லு”

“அது… அது வந்து.. அது அபி தான்”, என்று சொல்ல “வாட்?”, என்று அதிர்ந்து போனாள் பவித்ரா. 

“நீ அபி அபின்னு புலம்பியே எனக்குள்ள எனக்குள்ள….”

“மொட்டு மலர்ந்துட்டாக்கும். நானே அவனை கழுவி கழுவி தானே டி ஊத்தினேன்?”

“என்னமோ? ஆனா பேசின தானே? உடனே ஒரு கிரஷ்”

“என் அண்ணா பத்தியும் தான் பேசினேன். ரவி மாமா பத்தியும் தான் பேசினேன்”

“அவங்க எல்லாம் எனக்கு அண்ணன் டி. அபி வேற”

“கடவுளே, உனக்கு போயும் போயும் அவன் தான் கிடைச்சானா? அவனே ஒரு காட்டான். அவன் கிட்ட போய் காதலைச் சொல்லிருக்க? சரி என்ன நடந்துச்சு சொல்லு”

“லைப்ரேரில அவன் தனியா இருந்தானா? எனக்கு அவனை ரொம்ப பிடிக்கும். அதான் லவ்வைச் சொல்ல போனேன்”

“சொன்னியா? எப்படி சொன்ன?”

“ஆமா, முதல்ல ஹாய் அபின்னு சொன்னேன். நிமிந்து பாத்தவன் திருப்பியும் புக்கைப் பாத்தான். அபி உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னேன்”

“கல்லைப் பாக்குற மாதிரி ஒரு பார்வை பாத்துருப்பானே?”

“ஆமா டி, உனக்கு எப்படி தெரியும்?”

“அதுவே ஒரு சிடுமூஞ்சி. பின்ன புன்னகை அரசனாவா இருப்பான்? அப்புறம் என்ன ஆச்சு? சொல்லு”

“எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். நான் உங்களை லவ் பண்ணுறேன்னு நினைக்கிறேன். நாம படிச்சு முடிச்சதும் கல்யாணம் பண்ணிக்கலாமானு தான் கேட்டேன்”

“அப்புறம்?”, என்று சுவாரசியமாக கதை கேட்டாள் பவித்ரா. 

“என்னைப் பாத்துட்டே எந்திச்சு நின்னான். ஏதாவது பேசுவான்னு ஆவலா அவன் முகத்தையே பாத்துட்டு இருந்தேன், ஆனா அவன் ஓங்கி கன்னத்துல ஒண்ணு வச்சிட்டான். அப்படியே பூச்சி பறந்துச்சு டி. காதுல கொய்ங்குன்னு ஒரு சத்தம்”, என்றாள் இன்னும் அதே பயத்தோடு. 

“அவன் உன்னை எப்படி அடிக்கலாம்னு கோபம் வருது சாணி. ஆனா நீ பண்ணுன வேலைக்கு அந்த அடி உனக்கு தேவை தான்னு தோணுது. சரி அப்புறம் என்ன ஆச்சு?”

“அடிச்சிட்டு இந்த உலகத்துல நான் வெறுக்குற விஷயங்கள் பொம்பளைங்க, காதல், கல்யாணம் இது எல்லாம் தான். இன்னொரு தடவை என் கண்ணு முன்னாடி வந்த அடுத்த நிமிஷம் உயிரோட இருக்க மாட்ட. பிராடு கூட்டம்னு சொல்லிட்டு அங்கிருந்து போய்ட்டான் டி”

“எதுக்கு அப்படிச் சொன்னான்? ஒரு வேளை லவ் பெயிலியரா இருக்குமோ. சரி அவனுக்கு என்னவா வேணா இருக்கட்டும். எனக்கு லவ் பிடிக்காது, விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டு போக வேண்டியது தானே? அதுக்கு அடிக்கணுமா? அவனை நான் பாத்துக்குறேன். வா போகலாம். இன்னும் கிளாஸ் ஆரம்பிக்க டைம் இருக்கு. என்னனு கேட்டுட்டு வருவோம்”

“ஏய் வேண்டாம்டி நான் வரலை. அடிப்பான்”

“வரப் போறியா இல்லையா சாணி?”

“நான் வந்தா பெரிய இஸ்ஸு ஆகும் டி. என் கன்னத்தை யாரும் பாத்தா பிரச்சனை தான். நானே தலையை விரிச்சு போட்டு கையை வச்சு சமாளிக்கிறேன். ஆனாலும் யாரெல்லாம் பாக்கப் போறாங்களோ தெரியலை. என்னை விட்டுடு தாயே?”

“ப்ச் என்ன டி? அடி நீ தானே வாங்கின? நீ இருந்தா தானே சண்டை போட முடியும்?”

“அதனால தானே வர மாட்டேன்னு சொல்றேன்? இதுக்கு மேலயும் கட்டாயப் படுத்தினா நான் உன் கூட வரேன். ஆனா நீ அபி கிட்ட என் லவ்க்காக பேசணும்”, என்றாள் சாந்தினி. 

“பிச்சிருவேன் பிச்சி. நீ பேசினதே தப்பு. இதுல நான் உனக்கு தூது போகனுமா?”

“அப்படின்னா இதை இப்படியே விடு”

“முடியாது. அவன் கிட்ட சண்டை போட்டே தீருவேன்”

“உன்னையும் அடிப்பான் டி”

“அடிப்பானா? ஹா ஹா, இந்த பவித்ரா மேல கை வைக்க முடியுமா? அவனை உண்டு இல்லைன்னு ஆக்கிருவேன்”, என்று சொல்லி விட்டு அவனைக் காணச் சென்றாள். அதே மரத்தடியில் தான் வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்தான் அபி. 

“டேய் அரை மெண்டல்”, என்ற சத்தத்தில் கலைந்தவன் அவளைத் திரும்பி பார்த்தான். அவனை முறைத்த படி பவித்ரா நிற்க அடுத்து எதுவும் பேசாமல் வேறு பக்கம் திரும்பிக் கொண்டான். 

“பாரேன் பல்ப் கொடுக்குறான்”, என்று எண்ணிக் கொண்டு “உன் மனசுல நீ என்ன தான்டா நினைச்சிட்டு இருக்க? உனக்கு லவ் பெயிலியர்ன்னா அது உன்னோட? ஒரு பொண்ணு காதல்னு வந்து சொன்னா அவளை அடிப்பியா?”, என்று கேட்டாள். 

“ஓ அந்த லூசு இந்த லூசோட பிரண்டா”, என்று எண்ணிக் கொண்டு அமைதியாக இருந்தான். 

“உன் கிட்ட தான் பேசுறேன் மிஸ்டர் அபி. உன் திமிரை எல்லாம் என் கிட்ட காட்டாத. எதுக்கு அவளை அடிச்ச?”, என்று கேட்க அவன் பொறுமை பறந்தது. 

“இங்க பாரு நீ ரிஷியோட தங்கச்சி. அதனால அமைதியா இருக்கேன். தேவையில்லாம என் கிட்ட எந்த பேச்சும் வச்சிக்காத. போ இங்க இருந்து”, என்று முதல் முறையாக அவளிடம் வாயைத் திறந்து பேசினான். 

“நான் பேசக் கூடாதுன்னா நீ அவ மேல கை வைக்காம இருந்துருக்கணும்? எதுக்கு அவளை அடிச்ச?”

“அடிக்காம வேற என்ன பண்ணிருக்கணும்? அவ காதலை ஏத்துகிட்டு ஜோடிப் புறாவா ரெண்டு பேரும் பறக்கணும்னு சொல்ல வரியா?”, என்று கேட்டான். உண்மையிலே அவளுடைய காதலை ஏற்கச் சொல்லி இவள் கேட்க வந்திருக்கிறாள் என்று தான் நினைத்தான்.

அவளோ “நோ நெவர். நீ காதலுக்கு சரினு சொல்லிருந்தாலும் நான் உங்க ரெண்டு பேரையும் ஏதாவது செஞ்சு பிரிச்சு விட்டுருப்பேன். படிக்கிற வயசுல காதலாம் காதல். ஆனா அவளை திட்ட மட்டும் செஞ்சிருக்க வேண்டியது தானே? பொம்பளை பிள்ளையை கை நீட்டி அடிப்பியா?”, என்று கேட்க அவனுக்கு சுவாரசியம் பிறந்தது. 

“என்னோட நியாயத்துல பொம்பளை பிள்ளைக்கு தான் அதிகம் அடி விழும். பேசாம போய்ரு”, என்றான். 

“என்ன பொண்ணுங்கன்னா அடிப்பியா? பொண்ணுங்கன்னா உனக்கு கிள்ளுக் கீரையா? நாங்க என்ன செஞ்சோம்? எவளோ ஒருத்தி காதல்ன்னு சொல்லி உன்னை ஏமாத்திட்டா எல்லாரையும் திட்டுவியா?”, என்று கேட்க புருவம் நெறித்தவன் “நான் காதலிச்சேன்னு உனக்கு எந்த அறிவாளி சொன்னது? பொண்ணுங்களே பேஃக்(பொய்யானவங்க). இதுல அவங்களை லவ் வேற பண்ணனுமா?”, என்று கேட்டான். 

“அப்படின்னா உலகத்துல ஆம்பளைங்க எல்லாம் நல்லவங்க, பொண்ணுங்க எல்லாம் கெட்டவங்கன்னு சொல்ல வரியா?”, என்று எதையோ கேட்க வந்தவள் எதையோ கேட்டுக் கொண்டிருந்தாள். 

“இல்லை ரெண்டு பேரும் மோசமானவங்க தான். ஆனா பொம்பளைங்க கொஞ்சம் அதிகம்”

“எதுக்கு பொம்பளைங்க மேல உனக்கு இவ்வளவு வெறுப்பு?”

“அதை உன் கிட்ட எதுக்கு சொல்லணும்?”

“நீ சொல்லித் தான் ஆகணும்”

“அப்படியா சரி சொல்றேன். முதல்ல நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லு. லவ் பண்ணா எப்படி இருக்கணும்?”

“எப்படின்னா? எனக்கு தெரியாதே? வண்டில முக்காடு போட்டு போகணும். ஒரே ஜூசை ரொம்ப நேரமா ரெண்டு பேரும் உறியனும். கூட்டமே இல்லாத படத்துக்கு போகணும்… அப்புறம்”, என்று அவள் திணறுதலாக இழுக்க “லூசு, நான் அதைக் கேக்கலை. காதல்னா லாயலா அதாவது உண்மையா இருக்கணும்னு சொல்ல வந்தேன்”, என்றான். 

“ஆமா அதுக்கு என்ன?”

“பொம்பளைங்க உண்மையா இருக்கீங்களா?”

“நான் லவ் பண்ணலையே”

“நான் மத்தவங்களை கேட்டேன் மெண்டல் ”

“ஆன் இருக்காங்களே. என் ஃபிரண்ட் எல்லாம் உண்மையா தான் இருப்பா”

“அப்படியா? எப்படிச் சொல்ற?”

“நீ மட்டும் அவ லவ்வை ஏத்துகிட்டிருந்தா கடைசி வரை உன் கூடவே இருந்திருப்பா”

“ஓஹோ, இப்ப நான் அவ காதலை ஏத்துக்காம போயிட்டேன். உடனே அடுத்த ஆளைப் பிடிச்சிருவா அப்படி தானே?”

“அது?”

“என்ன அது? சொல்லு, அவ என்னையே நினைச்சிட்டு இருப்பாளா? இல்லை தானே? அப்ப அவ காதல் உண்மையா?”, என்று கேட்டதும் அவனை குழப்பமாக பார்த்தவள் “இனி காதல்னு யாரையும் பாக்க மாட்டா. அவளோட ஒரே லவ் நீ தானாம்”, என்றாள். 

Advertisement