Advertisement

“வீட்ல என் மேல எல்லாரும் கோபமா இருக்காங்களா பவி?”

“உன் மேல யார் கோபப் படுவாங்களாம்? ஆனா எனக்கு ஒரு டவுட்?”

“என்ன?”

“இல்லை, யாராவது உன் கூட நான் இருந்தா என்னைக் கொன்னுருவேன்னு மிரட்டுறாங்களா? அதான் டைவர்ஸ் கேக்குறியா?”, என்று கேட்க இப்போதும் அவன் அமைதியாக இருந்தான். 

“சொல்ல மாட்டியே? சரி நீ குளிச்சிட்டு சாப்பிடு. நான் போனை வைக்கிறேன்”

“சரி டி பாய், குட் நைட்”, என்று சொல்லி போனை வைத்தவன் குளிக்க கூட செல்லாமல் கட்டிலில் படுத்த படி பழைய விஷயங்களை நினைவு கூர்ந்தான். அதே போல அவளும் அதை தான் நினைத்துக் கொண்டிருந்தாள். 

சில வருடங்களுக்கு முன்பு…. மதுரையில் ரிஷியின் குடும்பம் கொஞ்சம் பணக்கார குடும்பம் தான். ஆனால் அவனோ பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போதே சென்னைக்கு வந்து விட்டான். ஹாஸ்டலில் தங்கி தான் படித்தான். 

அந்த பள்ளியில் அவனுக்கு கிடைத்த நண்பன் தான் ரிஷி. மனதில் இருந்த இறுக்கத்தால் யாரிடமும் பேசாமல் இருந்த அபியிடம் பேசுவது ரிஷி மட்டுமே. அதற்காக அபியிடம் யாரும் பேச மாட்டார்கள் என்று இல்லை. அவர்கள் பேச வந்தாலும் அவன் தவிர்த்து விடுவான் என்பதே உண்மை. 

முதலில் ரிஷியிடமும் அப்படி தான். ஆனால் பொறுமையின் சிகரமான ரிஷி அவனிடம் பேசி பேசிய அவனது நட்பு வட்டத்துக்குள் நுழைந்து கொண்டான். 

ஆனாலும் அப்போது அபியைப் பற்றி அவன் குடும்பத்தைப் பற்றி பெரிதாக எதுவும் ரிஷிக்கு தெரியாது,. பணக்காரன், அவனது தந்தை தொழில் செய்கிறார், அவனுக்கு ஒரு தங்கை என்று மட்டும் தான் தெரியும். அதுவுமே டீச்சர் கேட்கும் போது அபி சொன்னது. அதை தவிர்த்து வேறு எதுவுமே ரிஷிக்கு தெரியாது. 

சில முறை அவனது குடும்பத்தைப் பற்றி கேட்டுப் பார்த்தான் தான். ஆனால் அவன் குடும்பத்தைப் பற்றி கேட்டாலே அமைதியாகி விடுவதால் ரிஷியும் அப்படியே விட்டுவிட்டான். அதே போல தன்னுடைய குடும்பத்தைப் பற்றியும் ரிஷி அவனிடம் சொன்னதில்லை. ஒரு வேளை அபி கேட்டிருந்தால் சொல்லி இருப்பானோ என்னவோ? அபி ஒரு நாளும் கேட்டக்தில்லை. படிப்பு சம்பந்தமாக தான் பேசுவார்கள். இது வரை அபி சிரித்து கூட ரிஷி பார்த்தது இல்லை. 

அபிக்கு தான் பவித்ரா பற்றி எதுவும் தெரியாது. ஆனால் பவித்ராவுக்கு அபியைப் பற்றி ஓரளவு தெரியும். அண்ணனின் நண்பன் கொஞ்சம் கோவக்காரன் என்ற வரை அறிந்து வைத்திருந்தாள். அதை தவிர்த்து வேறு எதுவும் யோசிக்க வில்லை. ஆனால் பவித்ரா வேறு ஒரு பெண்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்ததால் அபியை சந்திக்க வாய்ப்பு வரவில்லை. 

இப்படியே இரண்டு வருடம் கடந்தது. அவர்களின் பள்ளிப் படிப்பும் முடிந்தது. அடுத்து என்ன படிக்கப் போற? என்று கேட்ட ரிஷியிடம் அபி எதுவுமே சொல்ல வில்லை. ஆனால் முதல் முறையாக ரிஷி என்ன படிக்க போகிறான் என்று அபி கேட்டான். அதுவே ரிஷிக்கு வியப்பு தான். 

ஒரு கல்லூரி பெயர் சொல்லி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் சேரப் போறேன் என்று சொன்னான் ரிஷி. அதைக் குறித்துக் கொண்டவன் கடைசி வரை தான் என்ன செய்யப் போகிறேன் என்று சொல்லவே இல்லை. 

ஆனால் முதல் நாள் ரிஷி கல்லூரிக்கு சென்ற போது கல்லூரியின் மதிய உணவு நேரத்தில் அவனைத் தேடி வந்தான் அபி. 

“அபி”, என்று ஆனந்த அதிர்வாக அழைத்தான் ரிஷி. 

“ஹாய் நானும் இங்க தான் சேந்துருக்கேன். ஆனா எனக்கு மெக்கானிக்கல் பிடிக்கலை. ஷோ சிவில் எடுத்தேன்”, என்றான். 

“இவன் என் கூட படிக்கணும்னு இந்த காலேஜ் எடுத்திருப்பானோ என்று சிறு சந்தேகம் ரிஷிக்கு எழுந்தது. ஆனால் அதை வெளியே கேட்க வில்லை. கேட்டாலும் அபி உண்மையைச் சொல்வது சந்தேகமே. 

“சூப்பர் டா, உன்னை இங்க பாப்பேன்னு நான் நினைக்கவே இல்லை. ஒரே டிப்பார்ட்மெண்ட்டா இல்லாம இருந்தா என்ன? பக்கத்து பில்டிங் தானே? அடிக்கடி பாக்கலாம். எப்பவும் நீ எனக்கு ஃபிரண்ட் தான். நீ எப்படியோ கடைசி வரை நான் உன் கூட தான் இருக்க நினைப்பேன்”, என்றான் ரிஷி. 

“எனக்கும் நீ மட்டும் தான் ஃபிரண்ட்”, என்று அபியும் சொல்ல “அப்பாடி ரெண்டு வருசத்துக்கு பிறகாவது பிரண்டுன்னு சொன்னீயே”, என்று சந்தோஷப் பட்டான்.

அடுத்த இரண்டு வருடங்கள் எப்படியோ கடக்க ரிஷி அபி மூன்றாவது வருடம் படிக்கும் போது அதே கல்லூரியில் வந்து சேர்ந்தாள் பவித்ரா. முதல் நாள் கல்லூரி நாளின் போது ரிஷி அவளை அபியை பார்க்க அழைத்துச் சென்றான். 

“நான் ரொம்ப எக்ஸைட்டடா இருக்கேன் அண்ணா. நாலு வருஷமா அபி அபின்னு புலம்புற? இது வரை அவனை போட்டோல தான் காமிச்சிருக்க? என்ன நட்போ? இப்பவாது அவனைப் பாக்க வாய்ப்பு கிடைச்சதே”, என்றாள் பவித்ரா. 

“ஏய் எனக்கு தான் மரியாதை கொடுக்க மாட்டிக்கிற? அவனுக்காது கொடு பாப்பா”, என்றான் ரிஷி., 

“அது அவன் நடந்துகிறதைப் பொறுத்து”, என்று கண்ணடித்தாள். 

“அவன் தான் உனக்கு ஹெல்ப் பண்ணனும் பவி. அதனால அவன் கிட்ட உன் வால் தனத்தைக் காட்டாத. வேற யாரையும் எனக்கு உங்க டிப்பார்ட்மெண்ட்;ல தெரியாது. இவன் கிட்ட தான் நோட்ஸ் எல்லாம் உனக்கு வாங்கிக் கொடுக்கணும்”, என்று சொல்லி தான் அழைத்துச் சென்றான். 

அபிமன்யு ஒரு மரத்தடியில் அமர்ந்திருக்க அவன் அருகே சென்று நின்றார்கள். அவர்கள் வந்ததைக் கூட அறியாமல் அபியின் பார்வை எங்கோ வெறித்தது. “ஹாய் அபி”, என்று ரிஷி அழைத்த பிறகு தான் திரும்பிப் பார்த்தான். அப்போதும் அவன் உதடுகள் மலர வில்லை.  

“ஹாய்”, என்று மட்டும் பதிலுக்கு சொன்ன அபி பவித்ராவை ஏறெடுத்தும் பார்க்க வில்லை. அவளுக்கு தான் சப்பென்று போனது. 

“அபி, இவ என் தங்கச்சி பவித்ரா. இனி நம்ம காலேஜ்ல தான் படிக்கப் போறா. அதுவும் உன் டிப்பார்ட்மெண்ட் தான். அவளுக்கு நோட்ஸ் எல்லாம் நீ தான் டா கொடுக்கணும்”, என்று சந்தோஷமாக அறிமுகப் படுத்தி வைத்தான். 

“ஹாய் அபி, ரொம்ப நாளா அண்ணன் உங்களைப் பத்தி சொல்லிருக்கான். ஆனா இன்னைக்கு தான் மீட் பண்ண முடிஞ்சது”, என்று சொன்ன பவித்ரா அவனைக் கண்டு புன்னகைக்க அவனோ ஒரு சின்ன சிரிப்பு கூட சிரிக்காமல் ரிஷி புறம் திரும்பி “நோட்ஸ் நாளைக்கு எடுத்துட்டு வரேன் டா”, என்றான். 

பவித்ராவுக்கு அவமானமாக இருந்தது அவனது ஊதாசீனம். ரிஷிக்கும் ஒரு மாதிரி தான் இருந்தது. அவனை பற்றி தெரிந்தாலும் “இவன் ஒரு ஹாய் சொல்லிருக்கலாம்”, என்று எண்ணியவன் உக்கிர தேவியாக அபியை முறைத்துக் கொண்டிருக்கும் தங்கையை கெஞ்சுதலாக பார்த்தான். 

அண்ணனின் பார்வையை எல்லாம் கண்டு கொள்ளாமல் “அண்ணா எனக்கு எவன் நோட்ஸும் வேணாம். அதெல்லாம் நான் ஸ்டாப் கிட்ட கேட்டுக்குறேன். உன் நண்பனை அறிமுகப் படுத்துவேன்னு பாத்தா இந்த லூசை அறிமுகப் படுத்துற? இவனும் இவன் ஆட்டிடியுடும்”, என்று எரிச்சலுடன் சொன்னாள். 

அப்போதும் அபி அமைதியாக இருக்க “போடா வேஸ்ட் பீஸ்”, என்றவளை நிமிர்ந்து பார்த்த அபி அப்போதும் எதுவும் பேசாமல் திரும்பிக் கொண்டான். 

ஏதாவது சண்டை போடுவான் கோபமாவது படுவான் என்று எதிர் பார்த்த பவித்ராவுக்கு சப்பென்று போனது. “போங்கடா லூசு பயலுகளா”, என்று அண்ணனையும் சேர்த்து சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விட்டாள். 

அவள் சென்ற பிறகாவது ரிஷியிடம் அபி ஏதாவது பேசுவான் என்று எதிர்பார்க்க “சரி டா கிளாஸ்க்கு நேரம் ஆச்சு, நாளைக்கு பாக்கலாம்”, என்று சொன்ன அபி அங்கிருந்து சென்று விட்டான். 

தங்கை போன பாதையையும் நண்பன் போன பாதையையும் பார்த்த படி நின்றவன் “இப்ப நான் தான் லூசா?”, என்று எண்ணிக் கொண்டு கிளாசுக்கு சென்றான். 

தன்னுடைய கிளாசுக்கு வந்த பவித்ராவுக்கு அவமானப் பட்ட மாதிரி எரிச்சலாக வந்தது. முதல் நாள் கல்லூரி என்று ஆர்வமாக இருந்தவளுக்கு இப்போது இருந்த உற்சாகம் எல்லாம் குறைந்தது போல இருந்தது. 

அவன் ஒரு சிரிப்பு சிரித்திருந்தாலாவது ஆறுதலாக இருந்திருக்குமோ என்று எண்ணியவளுக்கு அந்த நாளே பிடிக்க வில்லை. அவ்வளவு கோபம் அபியின் மீதும் அவனை அறிமுகப் படுத்திய அண்ணனின் மீதும். 

அவள் அருகில் அமர்ந்திருந்த சாந்தினி என்னவென்று கேட்க “ஒரு வெங்காயம் என்னை கடுப்படிச்சிருச்சு டி”, என்று சொன்னாள் பவித்ரா. அவள் என்னவென்று கேட்க நடந்ததைச் சொன்னாள். அப்போதே இருவரும் தோழிகளாகி விட்டனர். 

அன்று வீட்டுக்கு வந்து அபியை வறுத்துக் கொண்டே இருந்தாள் பவித்ரா. ரிஷி வாயை மூடி கேட்க வேண்டிய நிலை. நண்பனுக்காக பேசி தங்கையிடம் வாங்கிக் கட்டிக் கொள்ள தயாராக இல்லை. அது மட்டுமல்லாமல் அவனுக்கே அபி ஏன் இப்படி இருக்கிறான் என்று தெரியாத போது தங்கைக்கு எப்படி விளக்குவான்?

இப்படியே கிட்டத்தட்ட இரண்டு மாதம் சென்று விட்டது. இடைப்பட்ட நாளில் அவள் அபியைப் பார்த்தாலும் ஒரு முறைப்புடன் கடக்க அவனோ அப்படி ஒருத்தி எதிரில் வருகிறாள் என்று கூட தெரியாமல் சென்று விடுவான். அதற்கே அவளுக்கு கடுப்பு ஏறும். மொத்தத்தில் எப்போதும் சிரிப்புடன் சுற்றிக் கொண்டிருப்பவளை அவனை அறியாமலே கடுப்பேற்றுவான் அபி. 

இடையில் நல்ல பிள்ளையாக தன்னுடைய நோட்சை ரிஷியிடம் கொடுத்தான். அதை கொண்டு சென்று தங்கையிடம் நீட்ட அவளோ கொலை வெறியோடு அவனை முறைத்தவள் வேண்டாம் என்றாள். பின் அபியின் அழகான கையெழுத்து மற்றும் தெளிவான விளக்கம் கண்டு வைத்துக் கொண்டாள். 

இப்படியே நாட்கள் நகர்ந்தது. அவ்வப்போது அவர்களை காண வரும் ரவியிடமும் மணியம்மையிடமும் அபியைப் பற்றி அப்படி புலம்புவாள். ரவி இப்போது பி.ஜி படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு பவித்ரா என்றால் அவ்வளவு பிடிக்கும். அவளும் ஏய் மாமா டேய் மாமா என்று அவ்வளவு உரிமையாக அவனிடம் பேசுவாள். 

அவள் மேல் அவன் மனதில் காதல் எல்லாம் இல்லை. ஆனால் மணியம்மை தான் ஏதேதோ சொல்லி அவனுக்குள் ஒரு உணர்வை உருவாக்கி இருந்தார். மணியம்மை மகனிடம் மட்டும் அதைச் சொல்ல வில்லை. பேத்தியிடமும் அவ்வப்போது “என் வீட்டுக்கு மருமகளா வந்துரு பட்டுக் குட்டி”, என்று சொல்லிக் கொண்டே தான் இருப்பாள். 

“வந்துட்டா போச்சு”, என்று தான் பவித்ராவும் சொல்லுவாள். ரவி மனதில் அவள் மேல் நேசம் பூத்திருக்க பவித்ராவுக்கு ரவி மீது காதல் எல்லாம் இல்லை. ஆனால் பெரியவர்கள் திருமணம் செய்து வைத்தால் சந்தோஷமாக பண்ணிக் கொள்வாள். அப்படி ஒரு மனநிலை தான். திருமண விசயத்தில் பெரியவர்கள் சரியாக முடிவு எடுப்பார்கள் என்று நம்பினாள். பெரியவர்களுக்கும் ரவி மற்றும் பவித்ராவுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இருந்தது. 

ஆனால் ரவி பவியிடம் அவ்வளவு உரிமையாக பேசுவான். உடை சரி இல்லை என்றால் வேறு மாற்று என்று கோபப் படுவான். அவள் என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுப்பான். ஆனால் காதல் பற்றியும் நெருக்கமாகவும் அவளிடம் பேச மாட்டான். தள்ளி இருந்தே அவளை நேசித்தான். இடையில் அபி என்ற ஒருவன் வருவான் என்று அவன் அறியாதது. 

“அபின்னு ஒரு லூசு இருக்கு மாமா. திமிர் பிடிச்சவன்”, என்றெல்லாம் அவ்வப்போது அவள் வறுத்தெடுக்க அவள் வெறுப்புக்கு காரணமான அந்த அபியின் மீது ரவிக்கும் நல்ல அபிப்பிராயாம் எல்லாம் வரவில்லை. “அவன் எல்லாம் ஒரு ஆளா? அவனை பத்தி ஏன் யோசிக்கிற?”, என்று தான் கேட்பான். 

ஆனால் அவன் நேசத்துக்கு உலை வைத்து பவித்ராவை அபி தூக்கிச் செல்வான் என்று ரவிக்கு முன்பே தெரிந்திருந்தால் பவித்ராவிடம் காதலையாவது சொல்லி இருப்பான். பெரியவர்கள் சுதந்திரம் கொடுத்திருக்க அதை கெடுக்க கூடாது என்று தான் மனதில் ஆசையை புதைத்து வைத்திருந்தான். கடைசி வரை அந்த நேசம் அவளுக்கு தெரியாமலே போகும் என்று அவன் கனவா கண்டான்? 

காதல் தொடரும்…

Advertisement