Advertisement

அத்தியாயம்

எந்தன் கனவுகள் கரை 

சேராது என்று தெரிந்தும் 

கரை தொடத் தான் நினைக்கிறது!!!

ரவி பவித்ராவை வீட்டில் விட்டுவிட்டுச் சென்றதும் தயக்கத்துடன் வீட்டுக்குள் சென்றாள். “அம்மாடி, வா டா. அங்க என்ன நடந்துச்சு மா? அபி என்ன சொன்னான்?”, என்று படபடப்பாக கேட்டார் கிருஷணன். கோதையும் ஆர்வமாக அவள் முகம் பார்த்தாள். 

வாழ வேண்டிய வயதில் மகள் விவாகரத்து செய்தால் பெற்றவர்கள் எந்த அளவுக்கு கவலைப் படுவார்கள் என்று அவளுக்கு தெரியுமே. 

அவர்களின் பயம் புரிந்தவளுக்கு என்ன சொல்லி சமாளிக்க என்று தெரிய வில்லை. வேறு வழி இல்லாமல் நடந்ததை அப்படியே சொல்லாமல் பூசி மொழுகி சொல்லி விட்டு அறைக்குள் அடைந்து கொண்டாள். மகளின் வாழ்வு என்ன ஆகுமோ என்று வேதனை கொண்டார்கள் பெரியவர்கள். 

அறைக்குள் அவள் வந்தது தான் தாமதம் “சேஃபா வீட்டுக்கு போய்ட்டியா பவி? இல்லை அந்த ஓணான் உன்னை பாதி வழில இறக்கி விட்டுட்டு போய்ட்டானா?”, என்று மேஸ்ஸேஜ் அனுப்பி வைத்தான் அபிமன்யு. 

சிறு சிரிப்புடன் அதை படித்தவள் “சேஃபா வந்துட்டேன், மாமா வீட்ல தான் விட்டுட்டு போனாங்க”, என்று மட்டும் அனுப்பி வைத்து விட்டு உடை கூட மாற்றாமல் கட்டிலில் விழுந்தாள். பல குழப்பம் மனதில். தீர்வு காண முயன்றால் வழி தெரிய வில்லை. யோசித்து யோசித்து தலை வலி தான் வந்தது. 

எப்போதும் சிரித்துக் கொண்டும் மற்றவர்களை வம்பிழுத்துக் கொண்டும் திரிபவள் எப்போது அபிமன்யுவுடன் திருமணம் என்ற பேச்சு எழுந்ததோ அப்போதில் இருந்தே சிரிப்பை தொலைத்து விட்டு திரிகிறாள். அந்த சிரிப்பை மீட்டெடுக்கவே விவாகரத்து கேட்கிறான் அவள் கணவன் என்று அவளுக்கு யார் சொல்வது? 

விவாகரத்து கொடுத்தால் அவள் பழைய படி மாறுவாள் என்று முட்டாள் தனமாக நினைக்கிறான் என்று அவனுக்குமே யார் சொல்வது என்று தெரிய வில்லை. மொத்தத்தில் திருமணம் என்ற பந்தம் இருவரையும் தங்கள் இயல்பை தொலைக்க வைத்தது. 

பவித்ராவைச் சுற்றி இருக்கும் அனைவரும் நல்லவர்கள். ஒரு பெண்ணுக்கு என்ன என்ன கிடைக்க வேண்டுமோ அத்தனையும் அவள் வசம். மடி சாய்க்கும் அன்னை, ஊக்கம் கொடுக்கும் தந்தை, வழிகாட்டும் அண்ணன், மற்றொரு தாய் போல அக்கறை காட்டும் தாய்மாமன், கவலை சோகம் கண்ணீர் எதையும் அவளை அண்ட விடாத மணியம்மை ஆச்சி, அவளை கண்ணுக்குள் வைத்து தாங்கும் அவளது அபி, நிறைவான அழகு, பிடித்த வேலை, தேவைக்கு அதிகமான பணம் என எல்லாம் இருக்கிறது அவளிடம்.

எல்லாமே அவளிடம் இருந்தும் அவள் வாழ்க்கை மட்டும் சிதைந்து கிடப்பது போல ஒரு தோற்றம் அவளுக்கு. அதை சரி செய்ய முடியாத நிலையில் அவள் நிலை. இதற்கு எப்போது தான் விடிவு காலம் வருமோ? அபியை சந்தித்த பிறகு பவித்ராவின் வாழ்க்கை இரு மடங்கு சுவாரசியமாக மாறி விட்டது என்று சொன்னால் மிகையில்லை. அவனை சந்தித்த பிறகு அவன் நினைப்பு இல்லாமல் அவளது நாள் முடிந்ததில்லை. 

பவித்ரா பழைய விஷயங்களை மனதில் அசை போட ஆரம்பிக்கும் போதே “தங்கம்”, என்ற மணியம்மையின் குரல் கேட்க நினைவுகளில் இருந்து கலைந்த அவள் முகம் மலர்ந்து போனது. 

“ஆச்சி”, என்ற படி கீழே இறங்கிச் சென்றாள். அவளது சிரித்த முகம் பெரியவர்களுக்கு கொஞ்சம் நிம்மதியைக் கொடுத்தது. 

“எப்படி இருக்க டா தங்கம்?”, என்று கேட்டவர் அவள் கன்னத்தை பிடித்து கொஞ்சினார். 

“எனக்கு என்ன ஆச்சி நீங்க எல்லாம் இருக்கும் போது? சரி என்ன கொண்டு வந்த? வெறும் கையோட வர மாட்டியே?”, என்று புன்னகையுடன் கேட்டாள். 

“மீன் குழம்புதேன். சாப்பிடுறியா?”, என்று எதிர்பார்ப்புடன் கேட்டார். 

ஆச்சியின் ஆசை புரிந்தவள் “ம்‌ம்”, என்று சொல்ல “இதோ எடுத்துட்டு வரேன்”, என்றாள் கோதை. 

“ஆச்சி ஊட்டி விடுறியா?”,. என்று சிணுங்களாக கேட்க “என் தங்கத்துக்கு இதைச் செய்ய மாட்டேனா?”, என்று சொன்ன மணியம்மை ரவியின் வீடியோவை அவளிடம் காட்டி அதில் வந்திருந்த கருத்துக்களை அவளை படிக்கச் சொல்லி சிரிக்க வைத்த படி அவளை நிறைவாக சாப்பிட வைத்தே விட்டார். அதைக் கண்ட கோதைக்கு மகள் சாப்பிட்டதே போதுமானதாக இருந்தது. 

தோட்டத்தில் இருந்து மதிய உணவு உண்ண என்று வந்த கிருஷ்ணன் மகளின் சிரிப்பு சத்தத்தில் முகம் மலர்ந்தார். 

“வாங்க அத்தை”, என்ற படி அவர் மணியம்மையை வரவேற்க “மீன் குழம்பு வச்சேன் மாப்பிள்ளை. அதான் எடுத்து வந்தேன். சாப்பிடுங்க. கோதை மாப்பிள்ளைக்கு சாப்பாடு எடுத்து வை”, என்றார் மணியம்மை. 

“நீங்க சாப்பிட்டீங்களா அத்தை? நீங்களும் வாங்களேன். குட்டிமா நீயும் வா டா”, என்று அவர் அழைக்க அதற்கு பவித்ரா பதில் சொல்லும் முன் “நான் வீட்ல சாப்பிட்டேன். பவியும் இப்ப சாப்பிட்டா மாப்பிள்ளை. நீங்களும் கோதையும் சாப்பிடுங்க”, என்றார் மணியம்மை. 

சரி என்ற படி கிருஷ்ணன் செல்ல பேத்தியும் பாட்டியும் அரட்டையில் ஆழ்ந்தார்கள். ரவியை கலாய்த்து தள்ளியதை அவன் இருந்து கேட்டிருந்தால் இருவரையும் ஒரு வழி ஆக்கியிருப்பான். 

மாலை வரை அங்கேயே இருந்து பேத்தியை சிரிக்க வைத்த மணியம்மை அங்கிருந்து கிளம்பினார். போகும் போது காய்கறி பழங்கள் என அவரது காரில் அடுக்கி வைத்தார் கிருஷ்ணன்,. 

“எதுக்கு மாப்பிள்ளை இவ்வளவு? நானும் உங்க மருமகனும் இவ்வளவா திங்க போறோம்? எல்லாம் பக்கத்து வீட்டுக்கு தான் அள்ளிக் கொடுக்குறேன்“

“பரவால்ல அத்தை என் மருமகனுக்கு வச்சிக் கொடுங்க. அக்கம் பக்கம் கொடுத்தாலும் தப்பில்லை. உங்களுக்கு கொடுத்து விட்டா எங்களுக்கும் நிறைவா இருக்கும்”, என்று சொன்ன கிருஷ்ணனனை நெகிழ்ந்து பார்த்தார் மணியம்மை. 

கிருஷ்ணன் கோதை இருவரும் ஒரே பள்ளியில் தான் பணியாற்றினார்கள். இருவருக்கும் காதல் என்று இல்லை. ஆனால் திருமண பந்தத்தில் இணைந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்ற இரு வீட்டு பெரியவர்களிடம் பேசினார்கள். கிருஷ்ணன் கோதையை பெண் பார்க்க வரும் போது ரவி சிறுவன். பெண்ணுக்கு தம்பி என்று அவனைச் சொல்லுவது மணியம்மைக்கு சங்கடமாக தான் இருந்தது.

“காலம் போன கடைசில கிழவன் துள்ளி விளையாடிட்டு என்னை இப்படி இக்கட்டுல நிப்பாட்டிட்டு போய்ச் சேந்துட்டானே”, என்று மணியம்மை கணவனை திட்டாத நாள் இல்லை. 

ஆனால் கிருஷ்ணன் ரவியை மணியம்மையை எதுவும் தவறாக நினைக்க வில்லை. அவர்களையும் தங்கள் குடும்பமாக தான் நினைத்தார். ரவிக்கு டியூஷன் சொல்லிக் கொடுப்தில் கூட கிருஷ்ணன் அவனுக்காக நின்றார். தந்தை இல்லையே என்று ரவி ஒரு நாளும் வருந்தியதில்லை. அவன் என்ன படிக்க வேண்டும் அவனுக்கு என்ன விருப்பம் என்று எல்லாம் கேட்டு நிறைவேற்றி வைப்பார். அதனால் மணியம்மைக்கு கிருஷ்ணன் மேல் அவ்வளவு மரியாதை உண்டு. 

பிள்ளைகளைப் பற்றிச் சொல்பவர்களிடம் எல்லாம் என் மாப்பிள்ளைக்கு ஈடாகுமா என்று பெருமை பேசுவார். இன்றும் “டிரைவர் அத்தைக்கு பி.பி இருக்கு. அதனால அதிகம் வேகம் வேண்டாம். நிதானமாகவே போங்க”, என்று சொல்லிக் கொண்டிருந்த கிருஷ்ணனை நெகிழ்வுடன் பார்த்தவர் கிளம்பி விட்டார்.  

அன்று மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வந்த ரிஷி தங்கையிடம் பேச ஆரம்பித்தான். அவள் சாதாரணமாக நடந்ததைச் சொல்ல அவனுக்கு கஷ்டமாக இருந்தது. தங்கை வெளியே சிரித்து பேசினாலும் அவளுக்குள் பல குழப்பம் இருப்பது புரிந்தது அவனுக்கு. 

நண்பன் என்ற பெயரில் தங்களின் உயிரை எடுக்கும் அபியை எண்ணி கடுப்பாக இருந்தது. ஆனால் அந்த எருமையை அவனுக்கும் பிடித்து தொலைக்குமே? ஏனென்றால் அபி அந்த அளவுக்கு நல்லவன். ஒரு தங்கைக்கு ஒரு அண்ணன் எப்படி மாப்பிள்ளை பார்ப்பானோ அதற்கு ஏற்ற படி இருப்பவன் அபி. பவித்ரா அபி திருமணத்தில் ரிஷி அவ்வளவு சந்தோஷப் பட்டானே? இப்போது பிரிவு என்று வந்து நிற்கிறார்களே என்று வேதனையாக இருந்தது. 

ரிஷி தனியாக அபியிடம் விவகாரத்துக்கு காரணமும் கேட்டு விட்டான். ஆனால் அவன் சொல்ல மறுத்ததோடு அவளை ரவிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் சொல்ல அன்றில் இருந்து அபியிடம் பேசுவதை நிறுத்தி விட்டான். அபியைப் பற்றி நினைத்தாலே லூசு பய என்று தான் சிந்தனை ஓடும் ரிஷிக்கு. 

“நீ ஓகே வா குட்டிமா?”, என்று கேட்டான் ரிஷி. 

“ஓகே தான் அண்ணா. ஆனா மூளையும் மனசும் போராடுது. பாக்கலாம் அதுக்கும் தீர்வு வரும்”

“கஷ்டமா இருக்கா டா?”

“கஷ்டப் பட என்ன இருக்கு? அபி என்னை கஷ்டப் பட எல்லாம் விட மாட்டான். ஆனா என்ன யோசிக்கிறான்னு தெரியலையே? அது தான் கடுப்பா வருது. நீ வொரி பண்ணிக்காத. பாக்கலாம்”

“சரி டா”

“நீ அவன் கிட்ட பேசுண்ணா. அவன் பாவம்”

“உன்  பிரச்சனை முடியட்டும். பேசுறேன். அவன் கிட்ட பேசாம என்னால மட்டும் இருக்க முடியுமா?”, என்று கேட்க அதற்கு மேல் அவளும் ஒன்றும் சொல்ல வில்லை. 

அன்று இரவு உணவு முடிந்ததும் தன்னுடைய அறையில் போனை பார்த்த படி படுத்திருந்தாள் பவித்ரா. தனிமையில் அபியின் நினைவு தான் வந்தது. 

முன்பெல்லாம் அவன் நினைவு வந்தால் எந்த தயக்கமும் இல்லாமல் எந்த நேரமாக இருந்தாலும் அவனை அழைத்து விடுவாள். ஆனால் இன்று அழைக்க அவளுக்கு தயக்கமாக இருந்தது. விவாகரத்து என்ற வார்த்தை அவனை அவளை விட்டு தள்ளி வைத்தது போல ஒரு உணர்வு எழுந்தது. 

ஆனால் அவனுக்கு எந்த தயக்கமும் இல்லையே. உடனே அவளை அழைத்து விட்டான். முன்பும் பல முறை இப்படி நடக்கும். அவள் நினைக்கும் போது சரியாக அழைத்து விடுவான். 

சிறு சிரிப்புடன் அதை எடுத்து காதில் வைத்தவள் “சொல்லுங்க எம்.டி சார். உங்க கடையை பூட்டிட்டு வீட்டுக்கு வந்துட்டீங்களா?”, என்று சிரிப்புடன் கேட்டாள். 

“என்னது கடையா? ஏய் அது கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி டி. அது மட்டுமில்லாம அது என் கடை இல்லை. நம்ம கடை”

“ஏதோ ஒண்ணு, வீட்டுக்கு வந்துட்டியா?”

“இப்ப தான் வந்தேன்”

“உடனே கூப்பிட்டுட்டியாக்கும். குளிச்சிருக்க கூட மாட்ட. கப்படிக்கும். குளிச்சிட்டு சாப்பிட்டு பேசலாம்ல?”

“நீ தூங்கிருவியோனு நினைச்சேன். அதான்”

“தூக்கம் வரலை டா, நான் அங்க வரட்டா?”, என்று கேட்டே விட்டாள். அதற்கு அவன் பதிலே சொல்ல வில்லை. அவனிடத்தில் ஆழ்ந்த மௌனம் மட்டுமே பதிலாய். 

அவன் பதில் சொல்ல மாட்டான் என்று புரிந்தவள் “சரி சரி நான் எதுவும் கேக்கலை. உடனே வாயை பெவிக்கால் போட்டு ஒட்டிறாத”, என்றாள். 

“ம்ம் நீ சாப்பிட்டியா?”

“சாப்டாச்சு”

“அத்தை என்ன செஞ்சாங்க?”

“சப்பாத்தி தான்”

“சைட் டிஷ் என்ன?”

“நம்ம தோட்டத்துல உள்ள மேட்டுல காளான் இருந்துச்சு. அம்மா அதை கிரேவி பண்ணிருக்காங்க. உனக்கு எடுத்துட்டு வரட்டா?”

“வேண்டாம் பவி. வேலைக்காரனும் சப்பாத்தி தான் செஞ்சு வச்சிட்டு போனான்”, என்று அவன் சொல்ல அடுத்து அவளுக்கு என்ன சொல்ல என்று தெரிய வில்லை. 

Advertisement