Advertisement

     “அந்த கிழவியை நானே சாகடிக்கப் போறேன் பாரு. யூட்டியூப்ல வீடியோ போட சொல்லிக் கொடுத்தாலும் கொடுத்த? அது பண்ணுற அலப்பறை என்னால தங்க முடியலை. ஹோம் டூர்ன்னு வீடியோ போட்டுச்சு. சரி, எல்லாரும் போடுறது தான்னு விட்டேன். ஆனா இது என்னோட மகன் ரூம் டூர்ன்னு ஒரு வீடியோ எடுக்குது. என்னோட ரூமையே வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்து வக்சிருக்கு. நான் என்ன எல்லாம் வச்சிருக்கேன்னு அவ்வளவையும் அந்த வீடியோல காட்டுது. கபோர்ட்ல இருந்த உள்ளாடை வரைக்கும். நான் போட்டுருக்குறதை தான் உன் ஆச்சி வீடியோ எடுக்கலை”, என்று சொல்ல அடக்க மாட்டாமல் சிரித்தாள்.

     அவள் சிரிப்பை நெகிழ்வுடன் பார்த்த ரவி “பவி எப்பவும் சந்தோஸ்மா இருக்கணும்”, என்று எண்ணிக் கொண்டு அவளை வீட்டில் விட்டுவிட்டு கிளம்பி விட்டான்.

     அவளை விட்டுவிட்டு நேராக அவன் வீட்டை நோக்கிச் சென்றான் ரவி. அவன் வீட்டுக்கு போன போது “ஹலோ பிரண்ட்ஸ் இதுக்கு பேர் தான் துளசி, நீங்க எல்லாம் பாத்துருக்கீங்களானு தெரியாது. உடம்புக்கு ரொம்ப நல்லதுங்க. அம்மாச்சி பொய் சொல்ல மாட்டேன். உங்களுக்கு தெரியும் தானே? இதை வெண்ணி தண்ணில போட்டு குடிச்சா அப்படி ஒரு அமைதி கிடைக்கும்”, என்று பேசிய படி வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார் மணியம்மை.

     அதைக் கண்டு ஆத்திரத்தில் பல்லைக் கடித்தவன் “ஏய் கிழவி உச்சி வெயில் மண்டையை பிழக்குது. நீ நிலவு அடிக்கிறது மாதிரி  வீடியோ எடுத்துட்டு இருக்க? அதுவும் ஒரு துளசிக்கு”, என்று கத்தினான்.

     “ஒரு வேலையை உருப்படியா செய்ய விடுறியா? காலம் தப்பி பிறந்தவனே, இதெல்லாம் ஒரு சமூக சேவை டா”

     “இது சமூக சேவையா? து”

     “துப்புறியா துப்பு கேட்டவனே? என்னோட யூட்டியூப் பேமண்ட் வந்ததும் நைசா பேசி துட்டு கரக்க வருவல்ல? அப்ப உன்னை பாத்துக்குறேன்”

     “சரி சரி சயங்கலாமா வீடியோ எடு. இப்ப வந்து சோத்தைப் போடு, காலைலயும் சாப்பிடலை பசிக்குது”, என்று சொல்லி அன்னையை உள்ளே தள்ளிக் கொண்டு போனான்.

     அவன் உடை மாற்றி வந்து அமர்ந்ததும் அவனை ஒரு மார்கமாக பார்த்தார் மணியம்மை.

     “என்ன மா?”

     “என்ன டா வெறும் லுங்கியோட வந்துருக்க?”

     “சாப்பிட்டு மாத்தணும்”, என்று அவன் சொல்ல ஒரு தோள் குளுக்களோடு அவன் முன் இலை போட்டு சூடான சாதத்தை வைத்து அதில் பொறித்த மீன் துண்டங்களை வைத்து மீன் குழம்பையும் ஊற்ற காலையில் சாப்பிடாத வயிறு சாப்பிடச் சொல்லி ஓலமிட்டது

     “அம்மான்னா அம்மா தான்”, என்ற படி அவன் இலையில் கையை வைக்க “டேய் பொறு டா, உடனே பிசைஞ்சு தள்ளிறாத. ஒரு ஷார்ட் வீடியோ எடுத்துக்குறேன். பெரிய வீடியோவை விட சார்ட்க்கு தான் மதிப்பு அதிகம்”, என்று சொல்லி விட்டு  “இன்னைக்கு எங்க வீட்ல என்ன சமையல் தெரியூமா பிரண்ட்ஸ்? சூடான சாதம், மீன் குழம்பு, பொரிச்ச மீன்”, என்று பேச தலையில் அடித்துக் கொண்ட ரவி “போடி கிழவி எனக்கு சோறே வேணாம், நீயே தின்னு”, என்று எழுந்து கொண்டான்.

     அவன் கையை பிடித்து அமர வைத்த மணியம்மை “கோச்சிக்காத ராசா, சாப்பிடு”, என்று சொல்ல “ரொம்ப கெஞ்சுற அதனால சாப்பிடுறேன்”, என்று சொல்லிக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தான்.

     வயிறு நிறைய அவனை சாப்பிட வைத்தவர் அவன் கை கழுவி வந்ததும் “என் தங்கம் எப்படி இருக்கா டா? அழுதாளா?”, என்று கவலையாக கேட்டார்.

     “உன் பேத்தியாச்சே அழுவாளா என்ன? கஷ்டமா இருக்குன்னு சொன்னா? ஆனா உண்மையிலே அவ என்ன நினைக்கான்னு தெரியலை? அதுலயும் அந்த காண்டா மிருகம் இருக்கானே?”

     “டேய் அபி என் பேராண்டி. அவனையே நீ திட்டுவியா ? என் மகனா போயிட்ட? இல்லைன்னா உன்னை உன்னை…. அவனையே நீ காண்டாமிருகம்னு சொல்லுவியா? நீ தான் டா தவளை வாயன் ஓணான்”, என்று சரமாரியாக திட்டினார் மணியம்மை.

     “நீ தான் கிழவி பேய், காட்டேரி, என்னை உயிர் எடுக்க வந்த ராட்சசி. நான் உன்னை அம்மா பதவியில இருந்து டைவர்ஸ் பண்ணப் போறேன் பாரு”

     “சந்தோஸமா பண்ணு டா. நான் என் மாப்பிள்ளை வீட்டுக்கு போறேன். என்னை அம்மாவா தாங்கிக்குவார். காலாகாலத்துல ஒரு பொண்ணைக் கட்டி பிள்ளையை பெத்துக் கொடுத்தமான்னு இல்லாம என்னையா பேய்ன்னு சொல்ற?”

     “ஏது? கல்யாணமா?”

     “பின்ன? வாழ்க்கை முழுக்க தனியாவா டா இருக்க போற?”

     “அப்படி இல்லை… ஆனா”

     “சில நேரத்துல மனசுல பதிஞ்சதை மாத்தி தான் எழுதணும் கண்ணு”

     “புரியுது மா. கொஞ்ச நாள் டைம் கொடு. சரி நான் கடைக்கு போறேன். இன்னைக்கு மீன் குழம்பு நல்லா இருக்கு. காரை எடுத்துட்டு போய் அக்கா வீட்ல கொடுத்துட்டு உன் தங்கத்தையும் கொஞ்சம் சிரிக்க வச்சிட்டு வா. நா  படுற கஷ்டம் அவங்களும் படட்டும்”, என்று சொன்னவன் தாயின் முறைப்பை கண்டு கொள்ளாமல் கிளம்பி விட்டான்.

     வீட்டிலிலிருந்து கடைக்கு கிளம்பிச் சென்றவன் வேலையை மேற்பார்வை பார்த்து விட்டு ஸ்டாக் பற்றி மேனேஜரிடம் கேட்டு விட்டு தனி அறைக்கு வந்தவன் ரிஷியை தான் அழைத்தான்.

     “சொல்லு மாமா, என்ன இந்த நேரத்துல?”

     “கிளாஸ்ல இருக்கியா மாப்பிள்ளை?”

     “இந்த பீரியட் கிளாஸ் இல்லை. சொல்லு மாமா”

     “பவி கிட்ட பேசுனியா?”

     “இல்லை மாமா, வீட்ல போய் பேசிக்கலாம்னு விட்டுட்டேன். இங்க பக்கத்துல ஆள் இருக்காங்க அதான், நீ கேட்டியா கோர்ட்ல என்ன நடந்துச்சுன்னு?”

     “ம்ம்”

     “என்ன ஆச்சாம்? அந்த லூசு பய என்ன சொன்னான்?”

     “பவி கூட நான் தான் கோர்ட்டுக்கு போனேன் மாப்பிள்ளை?”

     “அப்படியா? ரொம்ப சந்தோஷம் மாமா. அப்பா இன்னும் பீல் பன்னிருப்பாங்க. நான் போறேன்னு சன்நாதுக்கும் அப்பா விடலை. சரி என்ன நடந்துச்சு. என் தங்கச்சி அழுதாளா?”

     “இல்லையே? அந்த பய அழவே விடலையே? எனக்கு இருக்குற கடுப்புக்கு அந்த ஓனானை தலையை திருவ போறேன் பாரு. ஏன் தான் அவன் இப்படிப் பண்ணுறானோ?”

     “உண்மையிலே அவன் ஒரு அரை மெண்டல் தான் மாமா. எனக்குன்னு வந்து சேந்துருக்கான் பாரு நண்பன்னு”

     “உன் கிட்ட எதவாது சொன்னானா மாப்பிள்ளை?”

     “எதுவும் சொல்லலை. ஆனா ஒரு விஷயம் மட்டும் சொன்னான்”

     “என்ன?”

     “டைவர்ஸ் கிடைச்சதும்…”

     “கிடைச்சதும்… என்ன டா?”

     “உனக்கும் பவிக்கும் நாங்க கல்யாணம் பண்ணி வைக்கணுமாம்”

     “வாட்?”

     “அப்படி தான் உளறினான்”

     “இவனை என்ன தான் டா செய்ய?”

     “ஒண்ணும் செய்ய முடியாது. பவி அவனை ஒண்ணும் செய்ய விட மாட்டா. அவனை ஏதாவது சும்மா கேள்வி கேட்டாலே நானும் நீயும் தான் பவி கிட்ட வாங்கிக் காட்டிக்கணும். அப்படி என் தங்கச்சியை மயக்கி வச்சிருக்கான். உண்மையிலே ரெண்டும் லவ் பண்ணுதுகலா மாமா? எனக்கு ஒண்ணுமே புரியலை”

     “எனக்கும் தான் டா புரியலை. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா டா? அதைப் பாத்து நானே ஷாக் ஆகிட்டேன்”

     “என்ன மாமா?”

     “கோர்ட்ல வச்சு ரெண்டும் கட்டிப் பிடிச்சிக்கிட்டு நிக்குதுக்க”

     “என்னது?”

     “ஆமா, ஆனா உன் தங்கச்சி கிட்ட அவனை லவ் பண்ணுறியான்னு கேட்டா தெரியலைன்னு சொல்றா. இதை எங்க கொண்டு போய்ச் சொல்ல?”

     “அவங்க எல்லாம் பிரிய மாட்டாங்க மாமா. அதுகளே அடிச்சிக்கிட்டு அதுகளே தெளிஞ்சு வரட்டும். இடைல வக்கீல் பீஸ் தான் வேஸ்ட்டா போகப் போகுது. எனக்கு கஷ்டம்ன்னா அது அவங்க ரெண்டு பேரும் முடிவுக்கு வர வரைக்கும் மன வேதனைப் படுவாங்கன்னு தான்”

     “அவங்களா இழுத்துகிட்டா நாம என்ன செய்ய முடியும்? சரி நீ வேலையைப் பாரு, நான் அப்புறம் பேசுறேன்”

     “வச்சிறாத மாமா, ஒண்ணு கேக்கணும்”

     “என்ன டா?”

     “மீன் குழம்பு எப்படி இருந்துச்சு?”

     “நான் மீன் குழம்பு சாப்பிட்டது உனக்கு எப்படி டா தெரியும்? கிழவி கிட்ட பேசுனியா?”

     “பேசினா தான் தெரியுமாகும்? இன்னைக்கு டிரண்டே நீ தான்”

     “என்ன டா சொல்ற?”

     “ஆச்சி யூடியூப்ல வீடியோ போட்டுருக்கு. இப்ப தான் பாத்தேன். லூசு மாமா, சாப்பிட உக்காந்தியே சட்டையை போட்டுட்டு உக்காந்துருக்க கூடாது? உள் பனியனோட வீடியோல இருக்க? அந்த வீடியோவுக்கு கீழே பொண்ணுங்க கமென்ட்ஸ் பாக்கணுமே? நீ கட்டழகனாம், ஜிம் பாடியாம். ஒரே ஜொல்லா ஊத்துதுங்க”, என்று சொல்லி நமட்டுச் சிரிப்பு சிரிக்க “கிழவி என்று பல்லைக் கடித்தவன் “நீ வை டா நான் வீட்டுக்கு போறேன்”, என்றான்.

     “ஆச்சியை ஒண்ணும் சொல்லாத. சும்மா பன் தானே மாமா? வேலையைப் பாரு “,என்று சொல்லி போனை வைத்தான் ரிஷி.

     அவன் வைத்ததும் கோபத்துடன் மணியம்மையை அழைத்தான் ரவி. மகன் நிச்சயம் திட்டுவான் என்று புரிந்த மணியம்மை அவன் போனை எடுக்கவே இல்லை. “உன்னை நைட் வந்து வச்சிக்குறேன் கிழவி”, என்ற படியே அந்த வீடியோவை எடுத்துப் பார்த்தான். பார்த்தவனுக்கு அன்னையை எண்ணி சிரிப்பு தான் வந்தது. சிறிது நேரத்தில் வேலையைப் பார்க்கச் சென்றான்.

காதல் தொடரும்…..

Advertisement