Advertisement

     “தேவையில்லை மா, உன் புருஷன் உன் மேல பழி போட்டா நான் வெரிபை பண்ணலாம். ஆனா நீயே ஒத்துகிட்ட பிறகு தேவை இல்லை. ஆனாலும் ரிப்போர்ட் கைல வச்சிக்கோங்க. வேற ஜட்ஜ் வந்தா கேப்பாங்க. அப்புறம் உங்களுக்கு உடனே எல்லாம் டைவர்ஸ் கிடைக்காது. நம்ம இந்திய அரசாங்கம் கணவன் மனைவியை சேர்க்க அவகாசம் எடுத்துக்கும். நீங்க ரெண்டு பேரும் சம்மதத்தோட பிரியுறதுனால ஒண்ணு ரெண்டு கவுன்சிலிங்க் இருக்கும். ஒரு பத்து நாள் கழிச்சு முதல் கவுன்சிலிங்க் வைக்க சொல்றேன். அது வரைக்கும் நீங்களும் கொஞ்சம் யோசிங்க”, என்று அவளிடம் சொன்ன ஜட்ஜ் “மிஸ்டர் அபி, குழந்தை முக்கியம் தான். ஆனால் குழந்தை மட்டுமே வாழ்க்கை இல்லை. குழந்தை இல்லாம லவ்வோட வாழ்றவங்களும் இருக்காங்க. இல்லை குழந்தையை அடாப்ட் பண்ணிக்கிறாங்க. அதுவும் இல்லைன்னா மெடிக்கல் ரீதியா ஐ.வி.எஃப் போறாங்க. இதை எல்லாம் கவுன்சிலிங்க்ல சொல்லுவோம். ஆனாலும் நீங்க படிச்சவங்க. நல்லா யோசிங்க”, என்றார்.

     சரி என்னும் விதமாய் தலையசைத்த அபி பவித்ராவைப் அவள் சிறு சிரிப்புடன் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது புன்னகை மயிலிறகு வருடுவது போன்ற ஒரு உணர்வைக் கொடுக்க அவனும் புன்னகைத்தான்.

     இரண்டு வக்கீல்களைப் பார்த்த ஜட்ஜ் “நீங்க ரெண்டு பேரும் கவுன்சிலிங் ஷெடியுலை உங்க கிளைண்ட்ஸ் கிட்ட இன்பார்ம் பண்ணிருங்க. இப்ப நீங்க போகலாம். அடுத்த கேஸ் வரச் சொல்லுங்க”, என்று சொன்னதும் அனைவரும் எழுந்து வெளியே வந்தார்கள்.

     வெளியே வந்ததும் “கவுன்சிலிங்க் ஷெடியுல் வந்ததும் தகவல் சொல்றோம்”, என்று சொல்லி விட்டு வக்கீல் இருவரும் கிளம்பிச் செல்ல அபியும் பவித்ராவும் நின்றார்கள். அவர்கள் அருகே ரோஹிணியும் ரவியும் வந்து நின்று அவர்கள் முகத்தைப் பார்த்தார்கள்.

     அபி அவர்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் பவித்ராவையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க அதை கண்டு எரிச்சல் அடைந்த ரோஹினி “மாமா என்ன ஆச்சு, வாங்க காருக்கு போய் பேசலாம்”, என்றாள்.

     “நீ போய்க் கார்ல உக்காரு ரோஹி, நான் வரேன்”, என்று அபி சொன்னதும் வேண்டா வெறுப்பாக அவள் செல்ல அவர்களுக்கு தனிமை கொடுக்க எண்ணிய ரவியும் “பேசிட்டு காருக்கு வா பவி”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான்.

     அபிமன்யுவின் பார்வை அவளை உறுத்து விழிக்க “என்ன அபி முறைக்கிற?”, என்று கேட்டாள்.

     “ஏன் டி அப்படிச் சொன்ன?”

     “ப்ச் இப்ப அதுக்கு என்ன? நீ கேட்ட டைவர்ஸ் கிடைக்க வேண்டாமா?”

     “அதுக்கு இப்படிச் சொல்லுவியா?”

     “இதுல என்ன இருக்கு?”

     “என்ன இருக்கா? உனக்கு குழந்தை பிறக்காதுன்னு சொல்ற? கர்ப்ப பை வீக்குன்னு சொல்ற? என்ன டி இதெல்லாம்?”

     “வேற என்னை என்ன பண்ணச் சொல்ற? நீ டைவர்ஸ் கேக்குற? அதுக்கு ஸ்ட்ராங்க் காரணம் வேணும்னு ஜட்ஜ் சொல்லுவாங்க. அப்ப என்ன காரணம் சொல்ல முடியும்? மாமியாரையே இது வரை பாக்கலை, அப்பா எப்படி மாமியார் கொடுமைன்னு சொல்றது? இல்லை தப்பான உறவு இருக்குனு சொல்லச் சொல்லுறியா? இல்லை எனக்கு எத்தனை லட்சம் வேணும்னாலும் தூக்கி கொடுக்குற உன்னை வரதட்சணை கொடுமை செய்யுறான்னு சொல்லச் சொல்லுறியா? பொய்ன்னாலும் ஒரு நியாயம் வேண்டாமா?”

     “அதுக்கு இப்படிச் சொல்லுவியா? ஏன் எனக்கு இன்னொரு பொண்ணு கூட தொடர்பு இருக்குனு சொல்ல வேண்டியது தானே?”

     “பிச்சிருவேன் டா. என்னோட அபி ஸ்ரீராமன். ஏன் நீ அந்த காரணத்தை சொல்லலை? என்னைப் பத்தி தப்பா சொல்லிருக்க வேண்டியது தானே? நான் தான் சொல்லச் சொன்னேன்ல?”

     “உன்னைப் பத்தி தப்பா சொன்னா என் நாக்கு அழுகிரும் டி”

     “அப்படின்னா நான் சொன்ன காரணம் தான் சரியா இருக்கும். டைவர்ஸ் கிடைக்கிற வரைக்கு இதையே மெயிண்டேயின் பண்ணனும். அப்புறம் ஏதாவது பணம் கொடுத்து எனக்கு போலி செர்டிபிகேட் வாங்கிக் கொடு”

     “சாரி டி”

     “இது எதுக்கு டா?”

     “உன்னை எப்பவும் கஷ்டப் படுத்துறேன்ல?”

     “என்னைக் கஷ்டப் படுத்துறேன்னா அதை விட பெரிய கஷ்டத்தை நீ அனுபவிக்கிறன்னு அர்த்தம். நீ இப்படிச் செய்யுறதுக்கு ஒரு காரணம் இருக்கும். அப்படியே நான் கஷ்டப் பட்டாலும் உனக்கு கொஞ்சம் நிம்மதி கிடைச்சா எனக்கு போதும் டா”, என்று அவள் சொல்ல உருகிப் போனான்.

     “எனக்கு உன்னைக் கட்டிப் பிடிக்கணும் போல இருக்கு பவி”

     “நான் வேண்டாம்னு சொல்லலையே?”, என்று சொன்ன அடுத்த நிமிடம் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். அவளும் அவன் மார்பில் சாய்ந்திருந்தாள்.

     இன்னும் அவர்கள் வரவில்லையே என்று தேடி வந்த ரவி இந்த காட்சியைக் கண்டு அதிர்ந்து வந்த வழியே திரும்பிச் சென்று விட்டான். ரவிக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி.

     அவர்கள் கட்டிடத்தின் மறைவில் நின்றதால் யாருடைய கண்ணுக்கும் தெரிய வில்லை. ஆனாலும் யாராவது வந்தால் என்ன ஆகும் என்று எண்ணி அபியின் அணைப்பில் இருந்து சில நொடிகளில் பிரிந்தவள் “சரி எனக்கு நேரம் ஆச்சு அபி. மாமா வெயிட் பண்ணுறான். நான் கிளம்புறேன்”, என்றாள்.

     “ஆபீஸ் வாயேன் டி, நீ வராம.,…”, என்று அவன் இழுக்க அவனை முறைத்துப் பார்த்தாள். அவள் கோபம் புரிந்தவன் வாயை மூடிக் கொண்டான். “அதை மட்டும் சொல்லாத அபி. நிச்சயம் அங்க வர மாட்டேன். என்ன பேச்சு பேசின? போடா தடியா?”, என்று சொன்னவள் விருவிருவென்று நடந்து விட்டாள். அவனும் வேதனையாக அவளைப் பார்த்த படி அவள் பின்னே நடந்தான்.

     இருவரும் தனித் தனிக் காரில் ஏறினாலும் ஏனோ அவர்கள் இருவரின் மனமும் ஒரே நேர்கோட்டில் பயணித்தது போல இருந்தது.

     காரில் ஏறி அபி காரைக் கிளப்பியதும் “இவ்வளவு நேரம் என்ன அத்தான் பேசுனீங்க?”, என்று கேட்டாள் ரோஹினி.

     “ஒண்ணும் இல்லை சும்மா தான்”

     “டைவர்ஸ் எப்ப கிடைக்கும்”

     “பத்து நாள்ல கவுன்சிலிங்க் சொல்லிருக்காங்க. அதே போல இன்னொரு கவுன்சிலிங்க் முடிஞ்சதும் தீர்ப்பு வரும்னு நினைக்கிறேன். சரி நான் உன்னை பஸ் ஏத்தி விட்டுறேன்”

     “வீட்ல என் பேக் இருக்கு அத்தான்”

     “வீட்டுக்கு போயிட்டு பஸ் ஸ்டாண்ட் போறது கஷ்டம். அதான் போன் பர்ஸ் கைல தானே இருக்கு? உன் பேக் வீட்லயே இருக்கட்டும்”

     “அழுக்கு துணி எல்லாம் இருக்கு அத்தான்”

     “வேலைக்கார அம்மா துவைச்சு மடிச்சு உன் பேக்ல வச்சிருவாங்க”, என்று அவன் சொன்னதும் “விரட்டுறதுலே குறியா இருக்கானே?”, என்று எண்ணிக் கொண்டு அமைதியாகி விட்டாள்.

     ரவியின் காரிலோ “உள்ள என்ன நடந்துச்சு பவி மா?”, என்று கேட்டான் ரவி.

     அவள் நடந்ததைச் சொல்ல “என்னது உனக்கு பிரச்சனையா? இதை நீ ஏன் நீ முன்னாடியே என் கிட்ட சொல்லலை? இந்த அக்காவும் ஒரு வார்த்தை கூட சொல்லலை பாரேன். வா இப்ப உடனே ஆஸ்பத்திரிக்கு போவோம். எவ்வளவு செலவானாலும் பரவால்ல. உனக்கு சரி பண்ணுறோம். அப்புறம் நீ அபி கூட சேந்து வாழணும்”, என்று சொல்ல அவன் அக்கறையில் மனம் நெகிழ்ந்தவள் “எனக்கு அப்படி ஒரு பிரச்சனையே இல்லை மாமா நான் நல்லா தான் இருக்கேன். அவங்க காரணம் கேட்டாங்க. அதான் சொன்னேன்”, என்றாள்.

     “ஏன் டா இப்படி? அவனுக்காக உன்னை நீயே தப்பா பேசுவியா?”

     “அபி பாவம் மாமா. ஜட்ஜ் கேட்டப்ப ரொம்ப திணறினான். அவன் நினைச்சிருந்தா என்னை தப்பா சொல்லிருந்தா கூட போதும். ஆனா அவன் சொல்லவே இல்லை. அவனுக்காக தான் நான் பொய்ச் சொன்னேன்”

     “என்னால உன்னையும் அவனையும் இப்ப வரை புரிஞ்சிக்க முடியலை பவி. என் அக்கா பொண்ணை இந்த அளவுக்கு மாத்தி வச்சிருக்கான் ராஸ்கல். டர்டி பெல்லோ காண்டா மிருகம்”

     “ஆமா நீ அவனை டர்டி பெல்லோ காண்டா மிருகம்னு சொல்லு. அவன் உன்னை ஓனான்னு சொல்லட்டும். போங்கடா அங்குட்டு”

     “சரி விடு பவி, நீ ஓகே தானே?”

     “நான் ஓகே தான் மாமா. அம்மா அப்பா கிட்ட நான் பேசிக்கிறேன். நீ எதுவும் சொல்ல வேண்டாம்”

     “சரி, அப்படின்னா நான் உன்னை வாசல்ல விட்டுட்டு கிளம்பிறேன். உள்ள வந்தா அக்கா கிட்ட உளறிருவேன்”

     “சரி மாமா, ஆச்சி எப்படி இருக்காங்க?”, என்று கேட்க தன்னுடைய அன்னையை எண்ணி பல்லைக் கடித்தான்.

Advertisement