Advertisement

அத்தியாயம்

பெண் மனம் எரிந்து 

போனாலும் பீனிக்ஸாய் உயிர் 

பெறச் செய்கிறது காதல்!!!

     அபிமன்யுவின் வக்கீல் அவனை உள்ளே அழைத்ததும் ரோஹிணியை அழைத்துக் கொண்டு சென்றான். அங்கே ரவியும் பவித்ராவும் அவர்களுடைய வக்கீலுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.

     “உன் புருஷன் வரான்”, என்று ரவி பவித்ராவின் காதில் முணுமுணுக்க அந்த வார்த்தை ஏதோ ஒரு குறுகுறுப்பை அவளுக்குள் உருவாக்க “ஏன் அபி வரான்னு சொல்ல மாட்டியா மாமா? புருசன்னு தான் சொல்லணுமா?”, என்று எரிச்சலுடன் முணுமுணுத்தாள்.

     “அடியே, அவன் உன் புருஷன் தானே டி? என்னமோ உன் அண்ணான்னு சொன்ன மாதிரி சிலிர்த்துகிற?”, என்று ரவி நக்கலாக கேட்க “நீ அடி வாங்கப் போற? வாயை மூடு மாமா”, என்றாள். இருவரும் ரகசியம் பேசுவதை எரிச்சலுடன் பார்த்த படி அவர்கள் அருகே வந்தான் அபி.

     ரவியை கண்டு கொள்ளாமல் “எப்படி இருக்க பவி?”, என்று கேட்டவனின் குரலில் அக்கறை கிலோ கணக்கில் வழிந்தது. அந்த அக்கறையைக் கண்டு ரோஹினி உள்ளுக்குள் புகைந்தாள் என்றால் மற்றவர்கள் குழப்பத்தில் புருவம் உயர்த்தினார்கள்.

     டைவர்ஸ் வேண்டும் என்று கேட்ட எந்த கணவனும் மனைவியிடம் இப்படி உருக மாட்டானே? அவன் கேட்ட கேள்வியில் அவனை நிமிர்ந்து பார்த்த பவித்ரா “நல்லா இருக்கேன் அபி. நீ எப்படி இருக்க? காலைல சாப்பிடலையா? டல்லா தெரியுற? ஷேவ் கூட பண்ண முடியாத அளவுக்கு வேலையா?”, என்று கேட்டாள்.

     இப்போது எதிர் எதிர் வக்கீல் கூட ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள ரவிக்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது. “அவன் சட்டையை பிடிச்சு எதுக்கு டா டைவர்ஸ் கேக்குறேன்னு கேக்காம ஷேவ் பண்ணலையா சாப்பிடலையான்னு கேக்குறா பாரு. லூசு லூசு. இவளை எங்க அக்கா எந்த நேரத்துல பெத்தாளோ?”, என்று எண்ணிக் கொண்டான்.

     ரோஹினியோ “இதுகளை பிரிக்க முடியுமா முடியாதா?”, என்ற கவலையில் ஆழ்ந்தாள்.

     அப்போது உள்ளே இருந்து அவர்களுக்கு அழைப்பு வர இரண்டு வக்கீலும் உள்ளே சென்றார்கள். அவர்கள் பின்னே பவித்ராவும் அபியும் சென்றார்கள். ரவியும் ரோஹினியும் உள்ளே செல்ல முயலும் போது அவர்களை வெளியவே இருக்கச் சொல்லி விட்டார்கள்.

     வெளியே கிடந்த சேரில் அமர்ந்த ரவி ரோஹினியை கண்டு கொள்ளாதது போல இருந்தாலும் அவளுக்கே தெரியாமல் அவளை வேவு பார்த்தான். ஏதோ ஒன்று அவளிடம் சரியில்லாதது போலவே இருந்தது.

     ஏனென்றால் ரோஹினி அவ்வளவு சந்தோஷமாக இருந்தாள். யாருக்கோ அழைத்து நாம நினைச்சது நடக்கப் போகுது என்றெல்லாம் சந்தோஷமாக பேசினாள். ரவி குழப்பத்தில் ஆழ்ந்தான்.

     உள்ளே இருந்த அந்த அறைக்குள் ஒரு பெண் ஜட்ஜ் நடுநாயகமாக அமர்ந்திருக்க அவருக்கு சற்று தள்ளி ஒரு உதவியாளர் அமர்ந்திருந்தார். அவருக்கு நேர் முன்னே பவித்ரா மற்றும் அபி இருவரும் தங்கள் வக்கீல்களுடன் அமர்ந்திருந்தார்கள்.

     “கொஞ்ச நாள் மட்டுமே வாழப் போற இந்த உலகத்துல சந்தோஷத்தை தேடி ஓடாம என்னைத் தேடி டைவர்ஸ் வாங்க வந்துருக்கீங்க? இந்த காலத்து பிள்ளைகளுக்கு எல்லாத்துலயும் அவசரம். சரி சொல்லுங்க. உங்க டைவர்ஸ்க்கு என்ன காரணம்? சந்தேகமா? வரதட்சணையா? மாமியார் கொடுமையா? தவறான உறவா?”, என்று கேட்ட அந்த ஜட்ஜ் அவருக்கு ஒரு போன் வரவும் அவர்களிடம் “சாரி ஒரு முக்கியமான கால்”, என்று சொல்லி விட்டு பேச ஆரம்பித்தார்.

     அவர் அப்படிக் கேட்டதும் அபி என்ன சொல்லுவான் என்று எண்ணி பவி அவனைப் பார்க்க அவனோ திருதிருவென்று விழித்தான். காரணமே இல்லாமல் அவன் என்னவென்று சொல்லுவான். அவனைப் பற்றி நன்கு தெரிந்த பவித்ராவுக்கு அந்த நிலைமையிலும் அவன் முழியைக் கண்டு சிரிப்பு வந்தது.

     “சோ சுவிட் டா நீ”, என்று மனதுக்குள் அவனைக் கொஞ்சிக் கொண்டவள் அவன் பக்கமாக குனிந்து “என்ன டா முழிக்கிற காரணம் யோசிக்கலையா?”, என்று ரகசியமாக கேட்டாள்.

     “ஆமா டி, இப்ப என்ன சொல்ல?”, என்று அவன் பாவமாக கேட்க “அவங்க சொன்னதுல இருந்து ஒரு காரணத்தைச் சொல்லு. வேணும்னா தவறான உறவு எனக்கு இருக்குறதா சொல்லிரு. அது சொன்னா தான் ஈஸியா டைவர்ஸ் கிடைக்கும். எனக்கும் வேற எவனோ ஒருத்தனுக்கும் தொடர்பு இருக்குனு சொல்லு”, என்று சொன்னவளை கொலைவெறியோடு முறைத்தவன் அவளது கையில் அழுத்தமாக கிள்ளி வைத்தான்.

     “ஆ”, என்று அவள் கத்த அனைவரும் அவளைக் கண்டு குழப்பத்துடன் பார்க்க “கொசு கடிச்சிருச்சு”, என்று சொல்லி சிரித்து வைத்தாள்.

     போன் பேசி முடித்த ஜட்ஜ் “மிஸ்டர் அபிமன்யு சொல்லுங்க நீங்க தான் கேஸ் பைல் பண்ணிருக்கீங்க? என்ன கரணத்தால உங்க மனைவியை டைவர்ஸ் பண்ணுறீங்க? அதுவும் கல்யாணம் ஆகி ஒரே வருசத்துல? உங்களுக்குள்ள என்ன கருத்து வேறுபாடு? எதனால இந்த பொண்ணை உங்களுக்கு பிடிக்கலை?”, என்று கேட்டார்.

     “அது அது வந்து… எனக்கு இவளைப் பிடிக்காதுன்னு யார் சொன்னா? எனக்கு இந்த உலகத்துலே இவளை மட்டும் தான் பிடிக்கும்”, என்று சொல்ல ஜட்ஜுக்கே “பைத்தியமா இவன்?”, என்ற கேள்வி தான் எழுந்தது.

     மற்ற அனைவரும் அபியை இப்போது என்னவென்று நினைப்பார்கள் என்று எண்ணிய பவித்ராவுக்கும் சிரிப்பு வந்தது. அதை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தவளுக்கு விழுந்து விழுந்து சிரிக்க வேண்டும் போல இருந்தது.

     “உங்க மனைவியை ரொம்ப பிடிக்கும்னா அப்புறம் ஏன் விவாகரத்து பண்ணுறீங்க? உங்களுக்கு கட்டாயக் கல்யாணம் பண்ணி வச்சாங்களா?”, என்று கேட்டார் ஜட்ஜ்.

     “சே சே, நானா முடிவு எடுத்து சொன்ன அப்புறம் தான் பெரியவங்க எங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க”

     “அப்படின்னா லவ் மேரேஜா?”

     “லவ்வா? சே சே பவியை எப்படி லவ் பண்ண முடியும்?”, என்று அவன் கேட்க ஜட்ஜ் முழித்த முழியைப் பார்த்து பவித்ராவுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.

     “என்ன சார் இதெல்லாம்?”, என்ற படி இரண்டு வக்கீலையும் பார்த்து ஜட்ஜ் கேள்வி கேட்க அவர்களுக்கே ஒன்றும் புரியாத நிலை தான்.

     இதற்கு மேல் பேசினால் அபி மொத்தமாக சொதப்பி விடுவான் என்று புரிந்தது பவித்ராவுக்கு. அந்த நிலையிலும் அவன் பொய் சொல்லாமல் அடுத்தவர்கள் மேல் பழி போடாமல் அவன் அவனாக இருப்பதில் அவ்வளவு சந்தோஷம் அவளுக்கு.

     இதே இடத்தில் வேறு ஒருவனாக இருந்தால் பவி மீது ஏதாவது ஒரு பழியைப் போட்டு விட்டு ஈசியாக விவாகரத்து கேட்டிருக்கலாம். ஆனால் அபியோ உண்மையை உளறிக் கொண்டிருந்தானே தவிர எந்த பொய்யும் சொல்ல வில்லை. அவனுக்கு கோபம் எக்கச்சக்கமாக வரும். யோசிக்காமல் அடுத்தவர் மேல் கை வைத்து விடுவான். ஆனால் சூது வினையம் எல்லாம் அவனிடம் சுத்தமாக கிடையாது. வஞ்சம் எல்லாம் அவனுக்கு சுட்டுப் போட்டாலும் வராது.

     “மேடம் நான் சொல்றேன். எங்க மேரேஜ் அரெஞ்ச் மேரேஜ் தான். ஒரு வருஷம் நல்ல படியா தான் போச்சு. ஆனா எனக்கு குழந்தை தங்கலை. டாக்டர் கிட்ட கேட்டோம். அதுல எனக்கு கர்ப்பபை வீக்கா இருக்குன்னும், குழந்தை தங்காதுன்னும் சொல்லிட்டாங்க. அதனால நான் தான் டைவர்ஸ் கேட்டேன். அதுக்கப்புறம் தான் அபி கேஸ் பைல் பண்ணினார். எங்களுக்கு எங்க வாழ்க்கையை தொடர விருப்பம் இல்லை. அதனால டைவர்ஸ் கொடுத்துருங்க”, என்று பவித்ரா சொல்லி முடிக்க அவளை கண் இமைக்காமல் அதிர்ந்து பார்த்தான் அபி.

     அவள் சொல்வது நூத்துக்கு நூறு பொய் என்று அவனுக்கு தெரியுமே? “மிஸ்டர் அபி அவங்க சொல்றது உண்மையா?”, என்று ஜட்ஜ் கேட்க அவன் மறுக்க போக அவன் கையை டேபிள் அடியில் பற்றியவள் அவனை ஆம் என்று சொல்லச் சொன்னாள்.

     அப்போதும் அவன் அமைதியாக இருக்க “குழந்தை இல்லைங்குறது ஒரு காரணமா? அதுவும் கல்யாணம் ஆகி ஒரு வருசத்துல? உங்களுக்கு என்ன வயசா ஆச்சு? மெடிக்கல் சயின்ஸ் எவ்வளவு முன்னேறி இருக்கு தெரியுமா? சரி உங்க மெடிக்கல் ரிப்போர்ட் எதுவும் இருக்கா?”, என்று கேட்டார் ஜட்ஜ்.

     “நானே உண்மையைச் சொல்றேன் தானே மேம்? அப்புறம் ரிப்போர்ட் பாக்கணுமா? வேணும்னா அடுத்த ஹியரிங்க்கு வரும் போது எடுத்துட்டு வரேன்”, என்றாள் பவித்ரா.

Advertisement