Advertisement

     வியப்பில் விரிந்த விழிகளால் அவள் அவனைப் பார்க்க ஒரு நொடி தன்னுடைய விழிகளை அவள் விழிகளுடன் உறவாட விட்டான். எந்த பேச்சும் இல்லாமல் அவனையே நோக்கினாள் பவித்ரா. அவள் கண்களையே இமைக்காமல் பார்த்தவன் “ஐ லவ் யு பவி. முன்னாடியே நீ என்னோட உயிர். இப்ப அதுக்கும் மேல. நீ என் வாழ்க்கைல கிடைச்ச பொக்கிஷம். உண்மையிலே இப்ப நினைச்சா நம்ம கல்யாணம் நல்லதுக்கு தான் தோணுது. ஏன்னா உன்னை வேற யாருக்கும் என்னால விட்டுக் கொடுத்துருக்கவே முடியாது. உன்னை நான் தப்பா பார்த்தது இல்லை தான். ஆனா உன்னை வேற ஒரு ஆளுக்கு மனைவியா என்னால கற்பனை கூட பண்ணிப் பாக்க முடியலை. அதான் கடவுள் உன்னை எனக்கே எனக்குன்னு கொடுத்துட்டார் போல? நீ எனக்கு வேணும் டி. அதுவும் இப்பவே. என்னை பைத்தியமாக்கி அலையச் செய்ய உன்னால மட்டும் தான் முடியும். உனக்கு ஓகே தானே?”, என்று கேட்க “ம்ம்”, என்ற முனங்களுடன் அவன் தோள் சாய்ந்தாள்.

     அடுத்த நொடி அவளை கைகளில் அள்ளிக் கொண்டவன் பூ போல படுக்கையில் கிடத்த கண்களை இறுக மூடிக் கொண்டாள். அவள் மேல் படர்ந்து அவன் அவளை ஆக்ரமிக்க கண்மணிகள் தெறித்து விழிகளை பெரிதாக விழித்தாள்.

     இத்தனை நாள் இல்லாமல் இன்று அவனது நெருக்கமும் வாசமும் அவளையும் மயக்கியது. அவள் கரங்கள் உயர்ந்து அவனை வளைக்க அவள் இடையை இறுக்கிப் பிடித்தவன் முதல் முறையாக அவள் இதழ்களில் தன்னுடைய இதழ்களைப் புதைத்தான். ஏதோ போதை உண்டது போல ஜிவ்வென்று இருவருக்கும் உடல் சூடேறியது. அவன் தோளைப் இறுகப் பற்றியவள் அந்த முத்தத்தில் மூழ்கிப் போனாள். அதற்கு அடுத்து எந்த தயக்கமும் இருவருக்கும் இருக்க வில்லை.

     வெகு நேரம் கழித்து முத்தம் முடிவடைந்ததும் அவளை விட்டு லேசாக விலகி அவள் கன்னம் வருடியவன் அடுத்ததாக அவள் கழுத்தில் இதழ் பதித்தான். அவனது அடுத்தடுத்த தாக்குதல்களில் திணறித் தான் போனாள்.

     சிறு சிறு தயக்கம் இருந்தாலும் அவனுடன் இயல்பாக ஒன்றிக் கொண்டாள். வெட்கத்தையும் கூச்சத்தையும் அவன் இயல்பாக கடந்திருக்க இருவரிடமும் எந்த சங்கடமும் இல்லை.

     அவனது ஆசை ஏக்கம் தவிப்பு மோகம் என அனைத்தையும் கண்டு உண்மையிலே இவன் இந்த அளவுக்கு தன்னை தேடினானா என்று வியந்து தான் போனாள். அடுத்து வந்த நிமிடங்கள் எல்லாம் அவ்வளவு நிறைவானவை. சேர்ந்தே குளித்து சேர்ந்தே உணவு உண்டு இருவரும் ஒட்டிக் கொண்டே திரிந்த நிமிடங்கள் அற்புதமானவை. அன்று இரவு உணவைக் கூட துறந்து ஒருவர் மற்றவர் அணைப்பில் இருந்தார்கள்.

     அடுத்த நாள் காலையில் அவர்களை எழுப்பியதே அபியின் மொபைல் அடிக்கும் சத்தத்தில் தான். தன்னுடைய கைக்குள் சுருண்டிருந்த பவியை சிறு சிரிப்புடன் பார்த்தவன் அவளை இன்னும் இறுக அணைத்த படியே போனைப் பார்த்தான்.

     அதில் ரவி என்று வர “இந்த ஓணான் எதுக்கு நம்மளைக் கூப்பிடுது?”, என்று எண்ணி அதை எடுத்து “சொல்லு”, என்றான்.

     “அவ வீட்டை விட்டு ஓடி வந்துட்டா டா. நான் வீட்டுக்கு கூட்டிட்டு போய்க்கிட்டு இருக்கேன்”, என்றான் ரவி கடுப்புடன்.

     “நீ என்ன லூசா? யார் வீட்டை விட்டு ஓடி வந்துட்டா? யாரை கூட்டிட்டு போற?”

     “என்ன யாரைன்னு கேக்குற? உனக்கு ஒண்ணும் தெரியாதா?”

     “என்ன தெரியாதா?”

     “என் லவ் விஷயம்?”

     “என்னது நீ லவ் பண்ணுறியா?”, என்று அபி அதிர்ச்சியாக கேட்க “கடவுளே, காந்தி செத்துட்டாரான்னு கேக்குறானே?”, என்று எண்ணிக் கொண்டு “ஐயோ, ஆமா டா. லவ் பண்ணுறேன். நான் லவ் பண்ணுற பொண்ணு என்னை தேடி ஓடி வந்துட்டா. நீ பவியைக் கூட்டிட்டு வா வீட்டுக்கு. அக்கா மாமா எல்லாம் வந்துட்டு இருக்காங்க”, என்றான்.

     “உன் லவ்வர் உன் கூட ஓடி வந்தா நான் எதுக்கு அங்க வரணும்?”, என்று அபி கேட்க “நான் உன் கல்யாணத்துக்கு வந்தேன்ல? அப்ப நீயும் வா”, என்றான்.

     “நீ உன் அக்கா மக கல்யாணத்துக்கு வந்த? நான் ஏன் வரணும்?”

     “நான் கூட்டிட்டு வந்ததே உன் அத்தை மக ராதாவைத் தான்”

     “என்னது?”

     “வந்து சேரு டா, காண்டா மிருகம். சைக்கோ மாதிரியே பேசுவான்”, என்று புலம்பிய படியே போனை வைத்தான் ரவி.

     “ஏய் பவி எந்திரி டி”

     “என்ன டா? நைட் முழுக்க நீ என்னைத் தூங்கவே விடலை”

     “இந்த ஓணான் ஏதோ சொல்றான் டி. ராதாவை தூக்கிட்டானாம்?”

     “லவ் பண்ணினா அப்படி தான், தூங்க விடு டா”

     “ஏது லவ் பண்ணினானா? அது எனக்கு தெரியாதே? உனக்கு தெரியுமா?”

     “ஆமா எல்லாருக்கும் தெரியுமே? ராதா இங்க வந்துருக்காளா? அப்ப ஏதாவது பிரச்சனையா தான் இருக்கும். சரி வா குளிச்சு கிளம்பி போகலாம்”, என்று குளிக்கச் செல்ல ஒரு மாதிரி திகைத்துப் போனாலும் ரவிக்கு ராதா கிடைத்தது கொஞ்சம் சந்தோஷம் தான் அபிக்கு.

     “இந்த ஓணான் அவ கிட்ட சிக்கி சின்னா பின்னமாக போறான்”, என்று எண்ணிய அபியின் முகம் மலர்ந்து போனது.

     அபி எண்ணியது போல உண்மையிலே எரிச்சலில் தான் கார் ஒட்டிக் கொண்டிருந்தான் ரவி. அவன் அருகே அமர்ந்து சிப்ஸை அந்த அதிகாலை வேளையில் தின்று கொண்டு வந்தாள் ராதா.

     அவன் அவளை முறைத்துப் பார்க்க “என்ன அப்படி பாக்குறீங்க? கண்ணு போடாதீங்க”, என்றாள் அசால்ட்டாக.

     “அதான் டி இப்ப ரொம்ப முக்கியம். என் உயிரை வாங்குறதுக்குன்னே வந்துருக்கியா? காலைல மூணு மணிக்கு கால் பண்ணி நான் சென்னை வந்துட்டேன், வந்து கூட்டிட்டு போன்னு சொல்ற?”

     “என்னை என்ன பண்ணச் சொல்றீங்க? எங்க அக்காவுக்கு ஒரு வரன் வந்திருக்கு. ஆனா அவங்க குடும்பம் என்னையும் சேத்து கேக்குது. அவங்க அண்ணன் தம்பியாம் எங்க வீட்க அக்கா தங்கையாம். இன்னைக்கு பொண்ணு பாக்க வராங்க. அதான் ஓடி வந்துட்டேன். எனக்கு நீங்க இல்லாம வாழ முடியாது”, என்றவள் கண்ணைக் கசக்க “சரி சரி அழாத”, என்றான் ரவி.

     “நான் எங்க அழுதேன். சிப்ஸ்ல இருந்த தூள் கண்ணுல பட்டுருச்சு போல?”, என்று சொல்ல இவளை என்று பல்லைக் கடித்த படி காரை ஓட்டினான்.

     இவர்கள் வீட்டுக்கு செல்ல அதற்கு முன்னே அங்கே இருந்தார்கள் அனைவரும். அபியின் குடும்பம், ராதாவின் குடும்பம், பவித்ராவின் குடும்பம், அது போக அபியும் பவித்ராவும் கூட வந்து விட்டார்கள். மொத்த குடும்பத்தைக் கண்டு திகைத்து விழித்த ரவி “உங்க வீட்ல உள்ளவங்களும் வந்துருக்காங்க. எப்படி டி அவங்களுக்கு தெரியும்?”, என்று கேட்டான்.

     “துரோகி”, என்றாள் ராதா.

     “யாரை டி திட்டுற?”, என்று அவன் கோபத்துடன் கேட்க “ஆன்லைன்ல ஒருத்தி கிட்ட தான் சொன்னேன் உங்க கூட போகப் போறேன்னு”, என்று சொல்ல அவளை வெட்டவா குத்தவா என்பது போல பார்த்தான்.

     “எவ்வளவு திமிர் இருந்தா இப்படி ஒரு காரியம் செஞ்சிருப்ப?”, என்று கேட்ட வடிவு மகளை அடிக்க வர அவள் கையை மடக்கி பிடித்த அபி தேவன் புறம் திரும்பி “மாமா, நம்ம பொண்ணுக்கு ரவியை விட பொருத்தமா ஒரு மாப்பிள்ளை கிடைக்க மாட்டான். கல்யாணத்துக்கு சரின்னு சொல்லுங்க”, என்றான்.

     அதில் ரவி அவனைத் திகைத்துப் பார்க்க “எனக்கு ஓகே தான் மாப்பிள்ளை. ஆனா இந்த கழுதை படிப்பை முடிக்கணும்”, என்றார்.

     “சரி மாமா”, என்று சொன்ன அபி கிருஷ்ணன் புறம் திரும்பி திருமானத்துக்கு நல்ல நாள் பார்க்கச் சொல்ல அவரும் சரி என்று சொன்னார்.

     அபி அருந்ததி மற்றும் ஜீவானந்தம் உடன் பேச வில்லை என்றாலும் பவித்ராவின் குடும்பத்தில் உள்ள அனைவரும் நன்றாக பேசினார்கள். முதல் சந்திப்பு என்பதால் அனைவருக்கும் பேச்சு சுவாரசியமாகவே இருந்தது.

     அபி ரிஷியுடன் ஒதுங்கிக் கொண்டான். வேறு எதிலுமே அவன் கலந்து கொள்ள வில்லை. கோதையும் மணியம்மையும் உணவு செய்யப் போக தேவன் வடிவு மற்றும் ரோகினியை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டார். ராதா அத்தை மாமாவுடன் வருகிறேன் என்று சொன்னதால் விட்டுவிட்டுச் சென்றனர்.

     ராதா, சஞ்சனா, பவித்ரா மூவரும் அந்த வீட்டையே கலகலப்பாக்கிக் கொண்டிருந்தனர். அப்போது தான் அபிக்கு ரிஷிக்கு தங்கையைக் கொடுத்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. ராதா திருமணம் முடிந்ததும் அதைப் பற்றி வீட்டில் பேச வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான்.

     மணியம்மையும் கோதையும் மதியம் வெஜிட்டேரியன் உணவைப் பரிமாற அனைவரும் சந்தோஷமாக உண்டார்கள். அதற்கு பின் அருந்ததி மற்றும் ஜீவானந்தம் ராதா மற்றும் சஞ்சனாவை அழைத்துக் கொண்டு கிளம்ப பவித்ராவின் குடும்பமும் கிளம்பியது.

     பவித்ரா வீட்டுக்குச் சென்றதும் கிருஷ்ணன் மகளுக்கு காய்கறி எல்லாம் எடுத்து வைக்க அபியை ஒரு பார்வை பார்த்தான் ரிஷி. அபிமன்யுவின் கண்கள் ஏக்கமாக தங்கையை வருடுவதை புரிந்து கொண்டவன் அவனை வம்பிழுக்க எண்ணி “எதுக்கு பா இன்னைக்கே காய் எல்லாம் எடுத்து வைக்கிறீங்க? பாப்பாவும் அபியும் இன்னைக்கு இங்க இருந்துட்டு நாளைக்கு தான் போவாங்க”, என்றான்.

     அவனை அட துரோகி என்பது போல பார்த்தான் அபி. கிருஷ்ணனும் சரி என்று சொல்லி விட “ஏய் நம்ம வீட்டுக்கு போகலாம் டி, பிளீஸ்”, என்று பவித்ராவின் காதில் முணுமுணுத்தான்.

     “ஏன் இங்க இருந்தா என்னவாம்?”, என்று அவள் சொல்ல “அதெல்லாம் தெரியாது. எனக்கு நம்ம வீட்ல நம்ம ரூம்ல தூங்கணும்”, என்று சொன்னவனின் கண்களில் இருந்த அழைப்பு அவளுக்கு புரிய சிறு வெட்கத்துடன் “இல்லைப்பா இப்பவே கிளம்புறோம். காலைல காலேஜ் போக அங்க தான் வசதியா இருக்கும்”, என்றாள் பவித்ரா.

     இப்போது அபி நண்பனை மிதப்பான ஒரு பார்வை பார்க்க ரிஷியும் சிறு சிரிப்புடன் நண்பனை அணைத்துக் கொண்டான்.  கிருஷ்ணன் மீண்டும் எல்லாவற்றையும் எடுத்து வைக்க அபி பவித்ராவை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பினான். வீட்டுக்குச் சென்றது தான் தாமதம் அவளை இறுக அணைத்துக் கொண்டவன் “காலைல இருந்து உன் கூட ஒண்ணா இருக்கவே முடியலை”, என்று சொல்லிக் கொண்டே அவள் இதழ்களைக் கவ்விக் கொண்டான். அவள் கரங்களும் அவனை இறுக அணைத்துக் கொண்டது.

…..முற்றும்…..

Advertisement