Advertisement

அத்தியாயம் 14 

என்னை மயங்கவும் 

செய்கிறது மதி இழக்கவும் 

செய்கிறது உந்தன் காதல்!!!

     அபி நேராக சென்றது வடிவு வீட்டுக்கு தான். நடுராத்திரியில் கதவு தட்டப் பட்டதும் கதவைத் திறந்தது அவனது மாமா தேவன் தான்.

     “அபி என்ன இந்த நேரம் வந்துருக்க? உள்ள வா”, என்று சொல்ல உள்ளே சென்றவன் “உங்க பொண்டாட்டியையும் மகளையும் கூப்பிடுங்க”, என்றான்.

     வடிவு மற்றும் ரோஹினி எழுந்து வர கூடவே தேவனின் அன்னையும் அங்கே வந்தார்.

     “அபி வா பா”, என்று வடிவு நடிக்க “அங்கயே நில்லு”, என்றான்.

     அவன் கோபமும் மரியாதை இல்லாத பேச்சும் அனைவருக்கும் திகைப்பைக் கொடுக்க “நீயெல்லாம் பொம்பளையா?”, என்று கேட்டான்.

     “அது நான் ஒண்ணும் பண்ணலை அபி. எல்லாம் உன் அம்மா தான். அவ குணம்….”

     “நான் அதை பத்தி எதுவும் பேச வரலை. எல்லாமே  நீ செஞ்சதுன்னு எனக்கு தெரியும். பழியை தூக்கி எங்க அம்மா மேல போடப் பாக்காத”

     “அம்மாவா?”, என்று வடிவு அதிர்ந்து விழிக்க “நீ தான் என்னைக் கொல்லப் பாத்துருக்க? அது மட்டும் இல்லாம என் பவியை… அதையும் விட இவ…”, என்றவன் ரோகினியை நெருங்கி அவளை அடிக்க ஆரம்பித்தான்.

     தேவன் தடுக்க அதற்கு பின் தான் அவளை விட்டுவிட்டு நடந்ததை முழுக்கச் சொல்ல தாயும் மகளும் தலை குனிந்த படி நின்றார்கள். தேவன் மகளும் மனைவியும் இப்படி எல்லாம் செய்தார்களா என்று அதிர்ந்து போய் நின்றார்.

     “என்னமோ சொத்து வேணும்னு கேஸ் போட்டுருக்கீங்களாம்? யாரு சொத்தை யாரு வாங்குறது? அந்த சொத்துக்கு வாரிசு நானும் சஞ்சனாவும் தான். அதை உங்களுக்கு கொடுக்கணும்னு என்ன இருக்கு? உங்களுக்கு எல்லாம் கொடுத்து தானே கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க? அப்புறம் ஏன் அலையுறீங்க? நான் நாளைக்கு உங்க மேல கேஸ் கொடுக்கப் போறேன். நீங்க கொலை முயற்சி பண்ணினதுக்கும், உங்க மக செஞ்ச கிரிமினல் வேலைக்கும். குடும்பத்தோட கம்பி எண்ணுங்க”, என்று அபி சொல்ல தேவன் தான் மன்னிப்பு கேட்டு இனி இப்படி நடக்காது என்றார்.

     அவனும் வேறு வழி இல்லாமல் “சரி மாமா உங்களுக்காக மன்னிச்சு விடுறேன். இனி இப்படி நடந்துச்சு நான் பொறுமையா இருக்க மாட்டேன். அது மட்டுமில்லாம இனி என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எந்த தொந்தரவும் கொடுக்க கூடாது. விலகி இருந்தாலும் நான் அவங்க மகன் தான்”, என்று எச்சரித்து விட்டுச் சென்று விட்டான்.

     அவன் சென்றதும் தேவன் மகளையும் மனைவியையும் வெளுத்து வாங்க “இன்னும் நல்லா நாலு கொடு டா. எல்லாம் உன்னால தான். கல்யாணம் முடிஞ்சு மாமியார் வீட்ல போய் உக்காந்தா இப்படி தான் உன்னை மதிக்காம ஆடுவாளுங்க”, என்று ஏற்றி விட்டார் தேவனின் அன்னை.

     பெல்ட்டால் விளாசியதில் ரோஹினி மற்றும் வடிவுக்கு முதுகு தோல் பெயர்ந்து போனது. மீண்டும் வீட்டுக்கு வந்தான் அபி. அப்போதும் அருந்ததி விழித்து தான் இருந்தாள். அவளைக் கண்டு கொள்ளாமல் அறைக்குச் சென்றவன் பவித்ராவைப் பார்த்த படியே அமர்ந்து விட்டான்.

     அடுத்த நாள் காலையில் முதல் வேலையாக அவளைக் கிளம்பச் சொன்னான். அவள் தடுத்தும் அவன் கேட்கவே இல்லை. அவளும் வேறு வழி இல்லாமல் கிளம்பி விட்டாள்.

     கிளம்பி வெளிய வந்ததும் சஞ்சனா ராதா இருவரும் அபியின் திருமணத்துக்கு வாழ்த்துச் சொல்ல இருவரிடமும் சிரித்த படி பேசியவன் அருந்ததி மற்றும் ஜீவானந்தம் புறம் திரும்பவே இல்லை.

     அருந்ததி அனைவரையும் சாப்பிட அழைக்க “பவி வா கிளம்பலாம்”, என்று சொல்லி அவள் கையை பிடித்தான். அதற்கு மேல் என்ன சொல்ல என்று தெரியாமல் பவித்ராவும் விடை பெற்றாள்.

     “நீயாவது அப்ப அப்ப பேசு மா. மகன் இல்லைன்னாலும் எனக்கு மருமக வேணும். இது இந்த குடும்பத்தோட மருமகளுக்கு வர வேண்டியது”, என்று சொல்லி அவள் கையில் ஒரு நகைப் பெட்டியைக் கொடுத்தாள் அருந்ததி.

     பவித்ரா அதை வாங்கத் தயங்க “நான் இந்த வீட்டு பையன் தான். அதை வாங்கிக்கோ பவி”, என்று அபி சொன்னதும் தான் வாங்கினாள். அதற்கே அருந்ததி முகம் மலர்ந்தது. அந்த முகத்தைக் கண்டு என்ன நினைத்தானோ “எனக்கான கடமையை நான் சரியா செய்வேன். சஞ்சனா கல்யாணம் என் விருப்ப படி தான் நடக்கும். அதுல யாருமே தலையிடக் கூடாது. வா பவி போகலாம்”, என்று சொல்லி விட்டு வெளியே சென்று விட்டான்.

     “வரோம் அத்தை, வரோம் மாமா. ராதா சஞ்சு பை. டெய்லி கால் பேசலாம்”, என்று சொல்லி விட்டு அவன் பின்னேயே சென்று விட்டாள் பவித்ரா.

     அவர்கள் சென்று சிறிது நேரத்தில் ராதாவும் சஞ்சனாவும் கல்லூரிக்குச் சென்று விட அப்போது வீட்டுக்கு வந்தார்கள் வடிவு குடும்பத்தினர். முகம் வீங்கிப் போய் வந்த வடிவையும் ரோஹினியையும் கண்டு அருந்ததி மற்றும் ஜீவானந்தம் திகைத்தாலும் எதுவும் கேட்க வில்லை.

     ஆனாலும் தேவன் இது வரை நடந்ததையும் நேற்று அபி வந்து பேசியதையும் சொல்ல “அண்ணே, அபி அம்மான்னா சொன்னான்? உண்மையிலே அம்மான்னா சொன்னான்?”, என்று பூரித்துப் போய்க் கேட்டாள் அருந்ததி.

     “ஆமா மா, கடைசியா அபி மாப்பிள்ளை இனி என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எந்த தொந்தரவும் கொடுக்க கூடாது. விலகி இருந்தாலும் நான் அவங்க மகன் தான்னு சொல்லிட்டு தான் போச்சு”, என்று சொல்ல அதுவே அருந்ததி மற்றும் ஜீவானந்தத்துக்கு பெரிய சந்தோசத்தைக் கொடுத்தது.

     அபியும் பவித்ராவும் காரில் சென்று கொண்டிருக்க அங்கே மௌனம் மட்டுமே. அபி இறுக்கத்தில் இருக்க பவித்ராவும் எதுவுமே சொல்ல வில்லை.

     கார் பவித்ராவின் வீட்டை நோக்கிச் செல்லாமல் வேறு திசையில் செல்ல “என்ன அபி இப்படி போற?”, என்று கேட்டாள்.

     “இனி நீ அங்க இருக்க வேண்டாம். நம்ம வீட்டுக்கு போகலாம்”, என்று சொல்ல அவள் மறுப்பு எதுவும் சொல்ல வில்லை. ஆனால் தந்தைக்கு அழைத்து அங்கே செல்வதாக சொல்ல திகைத்த அவரோ “என்ன மா நடக்குது அங்க?”, என்று கேட்டார்.

     “அப்பா இனி எல்லாம் சரியா நடக்கும். கேஸ் வாபஸ் வாங்கியாச்சு”

     “சந்தோஷம் மா, இனி எதுனாலும் பேசித் தீத்துக்கோங்க”, என்று மட்டும் சொன்னார். ஏனென்றால் அவருக்கு தெரிந்து அபி பவித்ரா இருவர் மேலும் தவறு இருக்காது என்று தெரியும்.

     அவள் போன் பேசி விட்டு வைத்ததும் “அங்கிள் என்னை திட்டினாங்களா?”, என்று கேட்டான் அபி.

     “உன்னை அவங்க திட்டுவாங்களா?”, என்று மறு கேள்வி கேட்டாள்.

     “என் மேல கோபமா பவி?”

     “நிஜமா இல்லை டா”, என்று சொல்ல அவன் முகமும் தெளிந்தது.

     வீட்டுக்கு வந்ததும்  அவள் தயக்கத்துடன் வெளியே நிற்க “ரொம்ப பண்ணாத டி”, என்று சொன்ன அபி அவள் கை பற்றி உள்ளே அழைத்துச் சென்றான்.

     ஹாலில் சென்று நின்றவள் அடுத்து என்ன என்று யோசிக்க அவனும் எதுவும் சொல்ல வில்லை. புது வித மௌனம் இருவரையும் ஆட்கொண்டது.

     அந்த அமைதியையும் தனிமையையும் தாங்க முடியாமல் அவள் அவளுடைய அறைக்குள் செல்ல போக “அங்க எங்க போற? இனி ஒரே ரூம்லே இருக்கலாம்”, என்றான் அபி. அவள் அவனைத் திரும்பிப் பார்க்க அவனும் அவளையே பார்த்தான்.

     அவன் பார்வையில் முதல் முறையாக மூச்சடைக்கும் உணர்வை அனுபவித்தவள் “சரி, ஆனா இப்ப என்னோட திங்க்ஸ் இங்க தான் இருக்கு. நான் குளிச்சிட்டு வரேன்”, என்று முணுமுணுத்து விட்டு உள்ளே சென்று விட்டாள்.

     குளித்து முடித்து வெளியே வந்தவள் அவன் அவனுடைய அறையில் இருப்பதை உணர்ந்து இரவு உணவை தயார் செய்ய சென்றாள்.

     வீட்டில் எதுவும் இல்லாததால் அவசரத்துக்கு கோதுமை தோசையும் பூண்டு சட்னியும் செய்ய ஆரம்பித்தாள். திடீரென்று அவள் பின்னே வந்து நின்றவன் அவளை இறுக்கி அணைத்தான்.

     அவன் செய்கையை நம்ப முடியாமல் அவளுக்கு இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. இது வரை இல்லாத மாற்றம் அவளுக்குள். அவள் உடல் நடுங்கியது.

     கைகால்கள் எல்லாம் விரைத்தது போல மூச்சுக் காற்றுக்கு திணறுவது போல இதயம் வேகமாக துடிப்பது போல இருந்தது. அவளது இடையைப் பற்றி திருப்பி தனக்கு வெகு அருகில் அவளை இழுத்துக் கொண்டு அவளது நாடியிலிருந்து ஆரம்பித்து அவள் கன்னம் முழுவதும் முத்ததால் ஊர்வலம் நடத்தினான். அவன் தொடுகையில் தன்னை மறந்து நின்றாள் பவித்ரா. அவன் அளித்த முதல் முத்தம் சிலிர்க்க செய்தது.

     “ஏய் பவி தோசை கருகுது பாரு”, என்ற அபியின் குரல் கேட்டதும் தான் இது வரை நடந்தது கனவு என்றே புரிந்தது. அவனைக் கண்டு அசடு வழிந்தவள் அவனை சாப்பிட அழைத்தாள்.

     “தூங்க போகலாமா?”, என்று கேட்டான் அபி.

     “ம்ம், கதவைப் பூட்டிட்டு வரேன்”, என்று அவள் சொல்ல அவன் முதல் ஆளாக அறைக்குள் சென்று விட்டான்.

     கதவைப் பூட்டியவளுக்கு அவனது அறைக்குள் செல்ல தயக்கமாக இருந்தது. இருந்தாலும் ஒன்றாக வாழ முடிவெடுத்த பிறகு தனி அறை சரி வராது என்பதால் அவனது அறைக்குச் சென்றாள். ஆனாலும் படபடப்பாக இருந்தது. அதுவும் அப்போது நடந்த கனவின் தாக்கம் வேறு அவளை அலைகளித்தது. அவனது வலிய கரங்களுக்குள் புகுந்த போது அடிவயிற்றில் ஏற்பட்ட மின்னல்களை இப்போதும் அனுபவித்தாள்.

     அவள் தயங்கிய படியே அறைக்குள் வர அபி அவளையே பார்த்தான். ஏனோ தனது அறைக்குள் தனது மனைவியாக வெட்கத்துடன் வந்து நின்றவளைக் கண்டதும் அவன் முகம் சிரிப்பால் மலர்ந்தது.

     ஆனாலும் அவள் அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் இருக்க அவள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தவன் “இப்ப நீ ரொம்ப படபடப்பா இருக்க பவி. இன்னைக்கே எல்லாம் ஆரம்பிக்கணும்னு இல்லை. அதெல்லாம் தன்னால நடக்கட்டும். இப்ப தூங்கு”, என்று சொல்லி கட்டிலைக் காட்ட அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

     அவனது முகத்தில் இருந்த கனிவும் அக்கறையும் அவளுக்கும் நிம்மதியைக் கொடுத்தது. சரி என்று தலையாட்டி விட்டு கட்டிலின் ஒரு ஓரம் அமர்ந்தவள் “நீ தூங்கலையா?”, என்று கேட்டாள்.

     “எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நீ படுத்துக்கோ”, என்று சொன்னவன் லேப்டாப்பைத் தூக்கிக் கொண்டு பால்கனிக்குச் சென்று விட்டான்.

Advertisement