Advertisement

“அந்த விஷயம் எனக்கு மட்டும் தான் தெரியும் ஆண்ட்டி. ஆனா நீங்க கொலை முயற்சி பண்ணுனீங்கன்னு வீட்ல நினைச்சிட்டு இருக்காங்க”

“உண்மையிலே நான் அப்படிச் செய்யலை மா”

“நம்புறேன் ஆண்ட்டி”

“அபி எப்ப வருவான் மா?”

“இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துருவான் ஆண்ட்டி”

“அவன் வந்த உடனே கிளம்ப வேண்டாம் மா. அவனை ஒரு நாளாவது இங்க இருக்க வச்சு நாளைக்கு காலைல கூட்டிட்டு போ பவித்ரா. எனக்கு ஒரு நாளாவது என் மகன் கூட இருக்கணும்னு ஆசையா இருக்கு”

“சரி ஆண்ட்டி”

“அப்புறம், இந்த குடும்பத்தோட வாரிசு அபி தான் மா. ஆனா அவன் எந்த சொத்தையும் எடுத்துக்க மாட்டிக்கான். நீயாவது சொல்லக் கூடாதா? இப்ப வடிவு வேற கேஸ் போட்டுருக்கா. அவளுக்குன்னு எவ்வளவோ செஞ்சாச்சு. ஆனாலும் அவ ஆசை அடங்கலை. அவளுக்கு கொடுக்கலைன்னு அபி கோபப் படுவானோன்னு பயமா இருக்கு. ஆனா வடிவுக்கு எவ்வளவு தான் செய்யுறதுன்னு தெரியலை. நீ கொஞ்சம் பேசேன் மா”

“சொத்து விஷயம் எல்லாம் இப்ப எதுவும் பேச வேண்டாம் ஆண்ட்டி. அதை அபி ஏத்துக்குவான்னு எனக்கு நம்பிக்கை இல்லை. அதை உங்களால முடிஞ்ச அளவுக்கு நீங்க பாருங்க. உங்க காலத்துக்கு அப்புறம் உங்க பேரப் பிள்ளைகள் பாத்துக்கட்டும். இல்லைன்னா சஞ்சு பாத்துக்குவா. அவளுக்கு நல்ல வாழ்க்கையை மட்டும் ஏற்படுத்திக் கொடுக்கணும். அப்புறம் இந்த கேஸ் விஷயம் நான் பேசுறேன்”

“சரி மா, போய்த் தூங்கு”, என்று சொல்ல சரி என்று சொல்லி விட்டு அறைக்குள் சென்றாள். ஆனால் அருந்ததி ஹாலிலே அமர்ந்து விட்டாள் மகனின் வருகைக்காக.

அடுத்த ஒரு மணி நேரத்தில் வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினான் அபி. அருந்ததி தான் கதவைத் திறந்தாள்.

“அபி வா பா”, என்றாள் அருந்ததி.

“பவி எங்க? அவளை என்ன பண்ணுனீங்க?”, என்று கேட்டவனின் குரலில் அவ்வளவு ஆக்ரோஷம்.

“அபி அமைதியா இருப்பா”

“சொல்லுங்க, அவளை என்ன பண்ணுனீங்க? சி நீயெல்லாம் ஒரு பொம்பளையா? உன் குணம் தெரிஞ்சு தானே விலகி இருக்கேன்? கடைசில எங்களை கொல்ல முயற்சி பண்ணி, தப்பான வீடியோ போட்டு…”

“நான் எதுவுமே செய்யலை அபி, என்னை நம்புப்பா”

“நம்ப மாட்டேன். உன்னை நம்பவே மாட்டேன். என் பவி எங்க? அவளை என்ன பண்ணின?”, என்று கேட்டவனால் கொஞ்சம் கூட நிதானமாக இருக்க முடிய வில்லை.

அவளை கண்ணால் காட்டினால் மட்டும் தான் அவன் அமைதியாவன் என்று புரிய “அவ உள்ள தான் இருக்கா, போய்ப் பாரு”, என்று சொல்ல வேகமாக உள்ளே சென்றான்.

அவ்வளவு நேரம் நல்ல உறக்கத்தில் இருந்த பவித்ரா அபிமன்யுவின் சத்தம் கேட்டு கட்டிலில் இருந்து இறங்கி நிற்க அந்த அறைக் கதவும் வேகமாக திறந்தது.

அவள் திகைப்பாக திரும்பிப் பார்க்க வேகமாக அவளை நெருங்கிய அபி அவள் தோள்களில் கை வைத்து “பவி உனக்கு ஒண்ணும் இல்லை தானே?”, என்று கேட்ட படி அவளை அணைத்துக் கொண்டான்.

அவன் நெஞ்சில் சாய்ந்தவள் “எனக்கு ஒண்ணும் இல்லை டா”, என்ற படியே அவன் முதுகைத் தடவிக் கொடுத்தாள். ஏனென்றால் அந்த அளவுக்கு அவன் உடல் நடுங்கியது.

அவளை விட்டு விலகியவன் “வா நாம கிளம்பலாம். இனி ஒரு நிமிஷம் கூட இங்க இருக்க கூடாது”, என்றான்.

“அபி பொறுமையா இரு டா. நாளைக்கு போகலாம். காலைல கிளம்பிறலாம் என்ன?”

“முடியாது., இங்க இருந்தா ஏதாவது பண்ணும் அந்த பொம்பளை. உனக்கு ஏதாவது ஆனா என்னால தாங்க முடியாது பவி”

“அவங்க இது வரை எதுவுமே பண்ணலை அபி. இனியும் பண்ண மாட்டாங்க. அத்தைக்கு உன்னையும் என்னையும் ரொம்ப பிடிக்கும் டா. நமக்கு கெடுதல் பண்ணது எல்லாம் உங்க அத்தை வடிவு தான்”

“என்ன?”

“ஆமா அவங்க தான். உங்க அம்மா எதுவுமே பண்ணலை அபி”

“நம்ப மாட்டேன்”

“உங்க அம்மாவை நம்ப வேண்டாம். என்னை நம்புற தானே? என்னால மனுசங்களை எடை போட முடியும்னு நம்புற தானே?”

“ம்ம்”

“அப்படின்னா என்னை நம்பு. ஆண்ட்டி எதுவும் பண்ணலை”

“சரி எதுவும் பண்ணலைன்னே வச்சிப்போம். ஆனா நாம இங்க இருக்க வேண்டாம். இனி உன்னை எங்கயும் விட மாட்டேன். நம்ம வீட்டுக்கு போகலாம்”

“சஞ்சுவும் ராதாவும் என் கிட்ட நல்லா ஒட்டிக்கிட்டாங்க டா. அவங்க கிட்ட சொல்லிட்டு காலைல போகலாம். பிளீஸ் எனக்காக”, என்று சொல்ல வேறு வழி இல்லாமல் தலையாட்டியவன் “நான் இல்லாம நீ ரூமை விட்டு வெளிய போக கூடாது. இனி இங்க எதுவும் சாப்பிடக் கூடாது. காலைல வரை இந்த ரூம்க்குள்ளே இருப்போம்”, என்றான்.

“அப்ப என்னை நம்பலை அப்படி தானே? இன்னும் அத்தையை சந்தேகப் படுற?”

“சரி சரி, நான் ஒண்ணும் சொல்லலை. ஆனா நீ என் கண்ணு முன்னாடியே இரு. இப்ப படு”

“நீயும் வா தூங்கலாம். ரொம்ப டயர்டா தெரியுற?”

“இல்லை இல்லை, நீ தூங்கு. எனக்கு இங்க தூக்கம் வராது. கொஞ்சம் வேலை இருக்கு”, என்றவன் அவளை படுக்கச் சொல்லி விட்டு அவளையே பார்த்த படி அமர்ந்து விட்டான். அவன் பயம் புரிந்தவள் சரி ஊருக்குச் சென்று ஓய்வெடுக்கட்டும் என்று எண்ணி கட்டிலில் படுத்தாள். ஆனாலும் அவனிடம் சில விஷயங்கள் பேச வேண்டியது இருந்தது.

அதனால் “அபி”, என்று அழைத்தாள்.

“சொல்லு டி”

“உனக்கு ஆண்ட்டியைப் பிடிக்காது தான். ஆனா…”

“அந்த பேச்சு வேண்டாம் பவி”

“அபி அத்தை பண்ணினது தப்பு தான். அவங்களை மன்னிச்சிக்கோயேன்”

“எப்படி உன்னால அதை நியாயப் படுத்த முடியுது பவி?”

“நியாயப் படுத்தலை, அவங்களை மன்னிக்க சொல்றேன்”

“முடியாது. அது தப்பு பவி. நாம இந்த நாட்டுல இருக்கோம்னா அதுக்கு ஏத்தாப்ல தான் இருக்கணும். அந்த எல்லையை மீறினா யார் பண்ணினாலும் தப்பு தான் பவி”

“குழந்தை ஆசைல இப்படி பண்ணிட்டாங்க. அவங்களே குற்ற உணர்ச்சில தான் இருக்காங்க”

“நீ என்ன வேணும்னா சொல்லு. ஆனா என்னால அதை மன்னிக்க முடியாது. தப்பு பண்ணுறவங்க ஆயிரம் காரணம் சொல்லுவாங்க. ஆனா தப்பு தப்பு மட்டும் தான். அதுல நல்ல தப்பு, கெட்ட தப்புன்னு எதுவும் இல்லை. விட்டுரு. அதுவும் எங்க அப்பாவுக்கு அவங்க ரெண்டு பேரும் பண்ணினது துரோகம். அந்த துரோகத்தோட உருவம் தான் நானும் சஞ்சனாவும். கண்ணாடில என்னைப் பாக்கும் போதெல்லாம் எனக்கு அது தோணும். இந்த உலகத்துல குழந்தை இல்லாதவங்க எல்லாம் வாழலையா? இல்லை தத்து எடுக்க வேண்டியது தானே? இது எல்லாம் அசிங்கமா இல்லை?”

“இதையே சயின்ஸ்ல பண்ணினா ஏத்துகிட்டுருப்ப தானே?”

“கண்டிப்பா, ஏன்னா அந்த இடத்துல துரோகம் இல்லை பவி. அங்க சயின்ஸ் மட்டும் தான் இருக்கு. ஆனா இது முருகானந்தம் அப்படிங்குற மனுசனுக்கு நடந்த அப்பட்டமான துரோகம். இந்த ஜென்மத்துல அவங்களை நான் மன்னிக்கவே மாட்டேன். இனி இது பத்தி பேசாத. பேச பேச இன்னும் தான் வெறுப்பாகுது”

“சரி விடு. இன்னொரு விஷயம் சொல்லணும்”

“என்ன பவி?”

“நீ இந்த வீட்டுப் பையன் தானே? உனக்கும் அந்த கடமை இருக்கு தானே?”

“ஆமா இருக்கு. அதுக்கு என்ன?”

“அப்படின்னா உங்க அத்தை போட்டுருக்க கேஸ் விஷயத்தை ஹேண்டில் பண்ணிக் கொடு”, என்று சொல்லி அந்த விவரம் சொல்லியவள்  “அது மட்டுமில்லாம அவங்க நம்மளைக் கொல்லப் பாத்துருக்காங்க. அதுக்கும் என்ன பண்ணனுமோ பண்ணு”, என்று சொல்லி விட்டு படுத்து விட்டாள்.

அபி யோசனையில் இருக்க அப்போது அகத்தியன் அவனை அழைத்தார்.

“சொல்லுங்க சார்”

“அந்த வீடியோ லீக் பண்ணின நம்பரைக் கண்டு பிடிச்சாச்சு அபி. உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். அவங்க மேல கேஸ் கொடுக்கணும்னா சொல்லுங்க. பண்ணிறலாம்”

“சரி சார், நான் இப்ப ஊர்ல இருக்கேன். சென்னை வந்துட்டு உங்களை மீட் பண்ணுறேன்”, என்று சொல்லி வைத்தவன் அந்த தகவலைப் பார்க்க அதை செய்தது ரோஹினி தான் என்று காட்டியது.

அடுத்த நொடி பவித்ராவை ஒரு பார்வை பார்த்து விட்டு கிளம்பி விட்டான். வெளியே அருந்ததி அவனைக் கண்டதும் எழுந்து நிற்க அன்னையை கண்டு கொள்ளாமல் வெளியே சென்று விட்டான். அப்போதும் பவித்ரா இருந்த அறையை சாற்றி விட்டு தான் சென்றான். அருந்ததியும் பவித்ராவை காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி அங்கேயே படுத்து விட்டாள். ஆனாலும் மகன் இந்நேரம் எங்கே போகிறான், இங்கே தங்க பிடிக்காமல் செல்கிறானோ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

காதல் தொடரும்…..

Advertisement