Advertisement

அத்தியாயம் 13 

சொர்க்கம் வரை அழைத்துச் 

செல்லும் பேரின்பம் தான் காதல்!!!

அருந்ததி மற்றும் ஜீவானந்தம் இருவரும் வீட்டுக்கு வரும் போது பவித்ரா, சஞ்சனா, ராதா மூவரும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். வீட்டினுள் நுழையும் போதே மூவரின் சிரிப்பு சத்தம் அந்த அளவுக்கு கேட்டது. ஏனோ இன்று தான் அந்த வீட்டுக்கே உயிர்ப்பு வந்தது போல இருந்தது அருந்ததிக்கு.

“நம்ம வீட்ல சிரிப்பு சத்தம் கேக்குது அத்தான். இது நிஜமா கனவா?”, என்று கண்கள் கலங்க கேட்டாள் அருந்ததி.

“ஆமா மா, நம்ம வீடு இவ்வளவு கலகலப்பா இருந்ததே இல்லை”, என்று சொன்ன ஜீவானந்தம் குரலும் நெகிழ்ந்து தான் இருந்தது.

அவர்கள் இருவரையும் கண்டதும் பவித்ரா சங்கடத்துடன் எழுந்து நிற்க “உக்காரு மா, நீங்க பேசிட்டு இருங்க. நாங்க குளிச்சிட்டு வரோம். சேந்து சாப்பிடலாம்”, என்று சொல்லி விட்டு அருந்ததி உள்ளே செல்ல ஜீவானந்தமும் சென்று விட்டார்.

“நான் ஒரு கால் பண்ணிட்டு வரேன்”, என்று ராதா மற்றும் சஞ்சனாவிடம் சொல்லி விட்டு பவித்ராவும் அறைக்குள் வந்தாள்.

அறைக்குள் வந்த பவித்ரா தாய் தந்தைக்கு அழைத்து பேசி விட்டு ரிஷியிடமும் பேசினாள். அடுத்து ரவிக்கு அழைத்து இங்கே உள்ள தகவலைச் சொல்லி விட்டு மணியம்மையிடமும் பேசினாள்.

அடுத்து அபி நினைவு வந்தது. அவனிடம் பேச வேண்டும் போலவும் இருந்தது. தயக்கமாகவும் இருந்தது. நேற்றில் இருந்து அவன் அழைக்காதது வேறு கஷ்டமாக இருந்தது.

அப்போது அபியும் அவள் நினைவில் தான் இருந்தான். அவன் முன்னால் பவித்ராவின் புகைப்படம் இருந்தது. அதையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்த ஃபோட்டோவில் சேரில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் பவித்ரா. காற்றில் பறந்து கொண்டிருந்த அவளது கூந்தல் அவள் காது மடல்களில் சில்மிசம் செய்து அவளுக்கு கூச்சத்தைக் கொடுத்தது போலும். அதனால் அதை ஒதுக்கிய படியே போஸ் கொடுத்திருந்தாள். நெற்றியில் சின்னதாக ஒரு பொட்டு, காதில் ஒரு குட்டி ஜிமிக்கி அதுவே அவளை பேரழகியாக காட்டியது.

பிறை போன்ற நெற்றியும், காந்த கண்களும், வில் போன்ற புருவமும், தாமரை இதழ்களும் என நிலவிடம் வரம் வாங்கி வந்த அழகான தேவதை போல இருந்தவளைப் பார்த்த படியே இருந்தவன்  “அழகு டி நீ”, என்று கொஞ்சிக் கொண்டான்.

கல்லூரியில் படிக்கும் போது அவளைத் தீண்டிய காற்று வந்து தங்களைத் தீண்டாதா என்று தவம் இருந்தவர்கள் பலர். அவளை ஒருதலையாக காதலித்தவர்கள் பலர் என அபிக்கே தெரியும். அப்போதெல்லாம் அவள் அழகு அவன் கண்ணில் படவே இல்லை. இன்றோ அவளை விட்டு கண்களை அகற்றவே முடிய வில்லை.

பவித்ரா பெயருக்கு ஏற்றது போல பவித்ரமானவள். பூக்களை விட மென்மையானவள். இன்று இந்த மலர்வனம் மொத்தம் தனக்கே தனக்கு தான் என்று எண்ணும் போது மழையும் மின்னலும் காற்றும் நெஞ்சுக்குள் ஒரு சேர உருவானது போல ஒரு உணர்வு எழுந்தது அபிக்கு. அவளை அள்ளி எடுத்து முகர்ந்து பார்க்க அந்த அளவுக்கு ஆசையாக இருந்தது. ஆனால் அவள் அருகே போக முடியாமல் நட்பு என்ற முகமூடி தடுக்கிறதே என்று வேதனையாக இருந்தது.

நேற்று அவளிடம் கோபப் பட்டு போனை வைத்ததில் இருந்து அவள் நினைவு தான். “கால் பண்ணலாமா?”, என்று யோசித்தவன் தன்னையே கட்டுப் படுத்த முடியாமல் அவளுக்கு அழைத்தான். அதே நேரம் பவித்ராவும் அவனைப் பற்றிய யோசனையில் தான் இருந்தாள்.

“நான் ஏன் கல்யாணம் ஆன பிறகும் அபியை நண்பனா மட்டும் பாக்குறேன்? இனி அவன் தானே என்னோட ஹஸ்பண்ட்? எங்க வாழ்க்கையைப் பத்தி நான் ஏன் யோசிக்கலை. ஆனா இனியாவது யோசிக்கணும்”, என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே அவன் அழைப்பு வந்தது.

அதை கண்டு அவள் முகம் மலர்ந்தது. “என்னோட அபின்னா அபி தான்”, என்றவள் போனை எடுத்து “அபி”, என்று அவ்வளவு சந்தோஷமாக அழைக்க அவன் கோபம் எல்லாம் பறந்தது. ஆனாலும் பேசாமல் வீராப்பாக இருக்க “கோபமா அபி? சாரி டா, என்னைக் கேக்க உனக்கு எல்லா உரிமையும் இருக்கு போதுமா? என்னைக் கேக்க நீ யாருன்னு கேட்டது தப்பு தான். மன்னிச்சிக்கோ டா”, என்று சொல்ல “இல்லை நான் பண்ணினதும் தப்பு தான், டைவர்ஸ் கேட்டது”, என்றான் அவன்.

“சரி ரெண்டு பேரும் தப்பு தான் போதுமா?

“ம்ம், சரி நீ எப்ப வருவ பவி? எனக்கு ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு. தனியா இருக்குற மாதிரி இருக்கு. நீயும் என்னைப் பாக்கவே வரலை. எனக்கு உன்னைப் பாக்கணும் போல இருக்கு பவி. ஐ மிஸ் யு டி”

அவன் குரலில் உருகியவள் “நீ தானே என்னை வேண்டாம்னு ஒதுங்கிப் போற?”, என்று மனத்தாங்களுடன் கேட்டாள். அவன் கேஸை வாபஸ் வாங்கியது தெரிந்தாலும் அவனே சொல்லட்டும் என்று எண்ணினாள்.

“அது… அதை விடு. அப்புறம் பவி நான் கேஸை வாபஸ் வாங்கிட்டேன்”

“லாயர் சொன்னார், தேங்க்ஸ்”

“எனக்கும் நீ வேணும் பவி. நீ இல்லாம எல்லாம் என்னால இருக்க முடியாது”, என்று சொல்ல கிளர்ந்து போனாள் பவித்ரா. ஐ லவ் யு என்ற வார்த்தை மட்டும் தான் கிறங்கச் செய்யுமா என்ன?

“அபி…”, என்று ஆழ்ந்த குரலில் அழைக்க “என்ன  டி?”, என்றான் உரிமையாக.

“உனக்கு ஏன் டா எதுவுமே தோணலை?”

“என்ன தோணலை?”, என்று அவன் குழப்பமாக கேட்க “நம்ம வாழ்க்கையைப் பத்தி… நம்மளைப் பத்தி… ஏன் உனக்கு ஒண்ணுமே தோணலை? உன்னால ஏன் என்னை பொண்டாட்டியா நினைக்க முடியலை?”, என்று கேட்க அதிர்ந்து போனான் அபி.

“ஏய் என்ன டி சொல்ற?”

“எனக்கு தோணுது டா. உன்னைக் கட்டிப் பிடிக்கணும், முத்தம் கொடுக்கணும். அப்புறம் குழந்தைங்க… ப்ச் என்ன எல்லாமோ தோணுது டா. உனக்கு ஏன் தோணலை?”, என்று அவள் கேட்க ஏனோ இத்தனை நாள் இருந்த மன பாரம் எல்லாம் அவனை விட்டு அகன்றது போல ஒரு உணர்வு.

“எனக்கு தோணலைன்னு நீ கண்ட?”, என்று எரிச்சலுடன் கேட்க “என்ன டா சொல்ற?”, என்று கேட்டாள்.

“உனக்கு தான் எதுவுமே தோணலை டி? எனக்கு தப்பு தப்பா நிறைய தோணுது. அது தான் இங்க பிரச்சனையே”, என்று அவன் சொல்ல “என்ன?”, என்று அதிர்வுடன் கேட்டாள்.

“ஆமா, எனக்கும் எல்லாம் தோணும். அதுவும் இப்ப இல்லை, நம்ம கல்யாணம் முடிஞ்ச நாள்ல இருந்து”

“அபி”

“ஆமா, எக்க சக்க ஆசை எனக்குள்ள. உன்னை நினைச்சாலே என் நெஞ்சுக்குள்ள மழையும் மின்னலும் ஒண்ணா அடிக்கும் டி லூசு. எப்பவும் உன்னை என் கைக்குள்ளே வச்சிருக்கணும், இறுக்கமா கட்டிப் பிடிச்சிக்கணும், மூச்சு முட்டுற அளவுக்கு முத்தம் கொடுக்கணும், உன் லிப்ஸை கடிச்சு வைக்கணும்னு இன்னும் நிறைய தோணும். உன் கையை பிடிச்சாலே ஏதேதோ எண்ணங்கள் வந்து அலை மோதுதுடி. நீ என் மேல சாஞ்சிக்கும் போது, என்னை உரசிக்கிட்டு உக்காரும் போது நான் நானா இல்லை தெரியுமா? என்னை ஒவ்வொரு நிமிசமும் ஆட்டிப் படைச்சிட்டு இப்ப இப்படிக் கேக்குற?”

….

“உனக்கு ஒண்ணு தெரியுமா பவி? முன்னாடி மாதிரி உன் கூட சாதாரணமா பேச முடியலை டி. சண்டை போட வம்பிழுக்க கூட என்னால முடியல. என் மனசு ரொம்ப தப்பா மாறிருச்சு பவி. நமக்குள்ள இருந்த நட்பையும் தாண்டி நான் உன்னை லவ் பண்ணுறேன் பவி. யெஸ் ஐ லவ் யு. இது சரியா தப்பானு எனக்கு தெரியலை. ஆனா உனக்கு துரோகம் செய்யுறேனோன்னு எனக்கு தோணிக்கிட்டே இருக்கு. இவ்வளவு நாள் மாதிரி என்னால சாதாரணமா பழக முடியலை. இவ்வளவு நாள் நீ என்னை நெருங்கினாலும் எனக்கு ஒண்ணுமே தோணாது. ஆனா இப்ப நீ தள்ளி நின்னாலும் உன்னை என் கைக்குள்ள வச்சிக்கணும்னு தோணுது. இவ்வளவு நாள் எனக்கு நல்ல பிரண்டா ஒரு அம்மாவா இருந்த. நீ இனி எனக்கு பொண்டாட்டியாவும் என் காதலியாவும் வேணும் டி. எனக்குள்ள வாழுற ஆசையை விதைச்ச என்னோட தேவதை பவி நீ. ஆனா உன்னைக் கஷ்டப் படுத்திருவேனோன்னு பயத்துல தான் விலகி போனேன். அதுக்கு தான் டைவர்ஸ் பண்ணணும்னு நினைச்சேன். ஆனா உன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்க கூடாதுன்னு வெறியே வருது டி”, என்று தன்னுடைய ஆசையை அவன் உளறிக் கொட்ட அப்படியே அதிர்ந்து போய் அமர்ந்திருந்தாள்.

“ஏய் லூசு அப்படின்னா… நீ எனக்காக தான் என்னைப் பிரிய நினைச்சியா அபி? அதுக்கு தான் இப்படி எல்லாம் நடந்துகிட்டியா?”

“ம்ம்”

“ஏன் டா நீ என்ன லூசா? நீ எனக்கு டைவர்ஸ் கொடுத்தாலும் நான் வேற ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்குவேணா? கல்யாணம் முன்னாடி நீ என்னோட நண்பன் தான். உன்னை கல்யாணம் பண்ண அவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தான். ஆனா தாலி கட்டின பிறகு நீ தான் என்னோட புருஷன். உன்னை விட்டுட்டு வேற யாரையும் எப்படி கல்யாணம் பண்ணுவேன். அப்புறம் என் வாழ்க்கை ஏன் வீணா போக போகுது?  நாம இப்படியேவா இருப்போம்? கண்டிப்பா நாம வாழத் தான் போறோம். அதுக்குன்னு டைவர்ஸ் கேப்பியா? டைவர்ஸ் கொடுத்தாலும் ரெண்டு பேரும் வேற யாரையும் கல்யாணம் பண்ணப் போறது இல்லை. அப்புறம் என்ன?”

“இப்ப இவ்வளவு பேசுறவ ஏன் டி தனி ரூம் போன? முதல் நாளே ஒரே ரூம்ல இருந்திருந்தா இதுக்குள்ள நம்ம வாழ்க்கை சரியாகி இருக்கும்”, என்றான் கடுப்புடன்.

Advertisement