Advertisement

“அதை தின்னுட்டு பேசு டி”, என்று ரவி அதட்ட அவன் சொன்ன டி சஞ்சனாவுக்கே வித்தியாசமாக இருந்தது. ஆனால் எதுவும் கேட்க வில்லை.

அதை விடுத்து “சொல்லுங்கண்ணா, நாங்க என்ன பண்ணனும்?”, என்று கேட்டாள் சஞ்சனா.

“பெருசா ஒண்ணும் இல்லை மா. பவித்ராவுக்கு உங்க அம்மா கிட்ட பேசனுமாம். அதுக்காக அவ உங்க வீட்டுக்கு வருவா. பவித்ராவா வந்தா உங்க அம்மா என்ன செய்வாங்கன்னு தெரியாது. அதனால வேற பிளான் பண்ணி அவ உங்க வீட்டுக்கு வருவா. சரியான நேரத்துல உங்க அம்மாவைப் பாத்து பேச வேண்டியதை பேசிட்டு உடனே திரும்பிருவா. அதுக்கு அவ ஒரு நாளாவது ரெண்டு நாளாவது உங்க வீட்ல தங்கி இருப்பா. நீங்க தான் அவளை உங்க பிரண்டோட அக்கா, ஒரு இண்டர்வியூக்கு வந்திருக்காங்கன்னு சொல்லி அவளை வீட்டுக்கு கூட்டிட்டு போகணும். அது மட்டுமில்லாம அவளை நல்லாவும் பாத்துக்கணும்”, என்றான்.

“சரி நாங்க பாத்துக்குறோம். என்ன இருந்தாலும் அவங்க எங்க அண்ணி”, என்று சஞ்சனா சொல்ல “நாங்க நீங்க சொல்றதை செஞ்சா நீங்க எங்களுக்கு என்ன செய்வீங்க?”, என்று கேட்டாள் ராதா.

அவளை முறைத்தவன் “இன்னும் நாலு பன்னு வேணுமா? வாங்கித் தரவா திண்ணிப் பண்டாரம்”, என்றான்.

“அது பன் இல்லை பற்கர், இது கூட தெரியலை”, என்று உதட்டைச் சுளித்தாள் ராதா.

“ஏதோ ஒண்ணு, சொல்லு என்ன வேணும்?”, என்று கேட்டான். அதற்கு அவள் அவனை ஒரு மார்கமாக பார்க்க அவள் பார்வையில் அவனுக்கே ஜெர்க் ஆனது. அவன் பவி வாழ்க்கைக்கு சஞ்சனாவைத் தேடி வந்தால் ஒரு வில்லங்கம் கூடவே இருக்கும் என்று கனவா கண்டான்?

இருவர் பேச்சும் பார்வையும் ஒரு மாதிரி இருக்க அவர்களுக்கு தனிமை கொடுத்து சஞ்சனா கை கழுவச் செல்ல “ஏய் லூசு, உண்மையைச் சொல்லு. நீ என்னை லவ் எதுவும் பண்ணலையே? இவ்வளவு நேரம் விளையாட்டுக்கு தானே பேசின? உன் பார்வை உண்மையிலே பயமா இருக்கு டி. வடிவேல் சொல்ற மாதிரி காமப் பார்வையால்ல இருக்கு”, என்று அதிர்வுடன் கேட்டான் ரவி.

“ஏன் உண்மையிலே உங்களை லவ் பண்ணினா என்னவாம்? உங்களுக்கு என்ன குறைச்சல்? உங்க அழகுக்கு, உங்க சிரிப்புக்கு, உங்க உழைப்புக்கு நான் அப்படி ஒரு அடிமை. நாங்க பவித்ரா அக்காவுக்கு ஹெல்ப் பண்ணினா நீங்க என்னை லவ் பண்ணுவீங்களா?”, என்று கேட்டாள் ராதா.

“அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் டி?”

“உங்களுக்கு என்னை பிடிக்கும் தானே?”

“இன்னைக்கு தான் நான் உன்னைய பாக்கவே செஞ்சேன்?”

“அப்ப அதுக்குள்ள எதுக்கு உரிமையா டி சொல்லிக் கூப்பிடுறீங்களாம்? என்னைப் பிடிக்க போய் தானே?”

“கடவுளே, அது நீ செய்யுற கிறுக்குத் தனத்தால தான்”

“அதெல்லாம் கிடையாது. நீங்க என் லவ்வை அக்சப்ட் பண்ணிக்கணும். இல்லைனா நான் இப்பவே எங்க அருந்ததி அத்தைக் கிட்ட போய் எல்லாம் சொல்லிருவேன்”

“ஐயோ,  சரிம்மா தாயே, நீ முதல்ல பவிக்கு ஹெல்ப் பண்ணு. அப்புறம் உன் லவ்வை கண்சிடர் பண்ணுறேன்”, என்று இறங்கி வந்தான்.

  “தேங்க்ஸ்”, என்று கண்களை உருட்டிச் சொல்ல “இது எதுக்கு?”, என்றான்.

“என் லவ்வை ஏத்துக்கிட்டதுக்கு தான்”

“ஏய் நான் எங்கடி அப்படிச் சொன்னேன்?”

“அதெல்லாம் அப்படி தான்”, என்று அவள் சொல்லும் போதே சஞ்சனா அங்கே வர “சஞ்சனா உன்னோட நம்பர் கொடு மா. நான் பவி கிட்ட கொடுக்குறேன். நானும் இங்க என்ன நடக்குதுன்னு கேட்டுக்குவேன்”, என்றான்.

அவள் நம்பரைச் சொல்ல அவன் போனில் பதிந்தான். அப்போது ராதாவும் அவள் நம்பரைச் சொல்ல “இது எதுக்கு? சஞ்சனா நம்பர் மட்டும் போதும்”, என்றான்.

“அது எப்படி? எனக்கு உங்க கிட்ட பேச வேண்டாமா?”, என்று ஏக்கத்துடன் கேட்க அவளை திரும்பிப் பார்த்தவனுக்கு ஏனோ அந்த சிறு பெண் தன் மீது வைத்திருக்கும் அன்பு ஒரு மாதிரி உணர்வைக் கொடுத்தது. அடுத்து எதுவும் பேசாமல் அவள் நம்பரையும் வாங்கிக் கொண்டு இருவருக்கும் தன்னுடைய எண்ணைக் கொடுத்து விட்டுச் சென்றான். போகும் அவனையே ராதா இமைக்காமல் பார்க்க எதற்கோ திரும்பிப் பார்த்தவனுக்கு அவள் கண்களை விட்டு பார்வையை எடுக்க முடியாமல் தான் போனது.

“என்னை இந்த பொண்ணு என்னவோ பண்ணுது?”, என்று தனக்கு தானே முணுமுணுத்துக் கொண்டே காரை எடுத்தான்.

அவன் அங்கிருந்து கிளம்பிய அடுத்த பத்து நிமிடத்தில் அவனுக்கு அழைத்தாள் பவித்ரா.

“சொல்லு பவி”

“நீ ஏன் மாமா அபி ஊருக்கு போன?”, என்று அவள் எடுத்ததும் கேட்க அடுத்த நொடி சடன் பிரேக் போட்டுக் காரை நிறுத்தியவன் “நான் அங்க போனது உனக்கு எப்படி தெரியும்? கிழவிக்கு கூட தெரியாதே”, என்று கேட்டான்.

“ஆச்சி சொல்லலை. ஆனா உன் ஆள் சொல்லிருச்சு. லவ்க்கு எல்லாம் ஓகே சொல்லிருக்க? என் கிட்ட சொல்லலைப் பாத்தியா? பாத்ததும் அவளை உனக்கு பிடிச்சிருச்சா? அவளுக்கு இன்னும் மூணு மாசம் காலேஜ் இருக்கு. முடிச்சதும் ஆச்சி கிட்ட சொல்லி கல்யாணம் பண்ணி வைக்கிறேன். சரி நீ வா. வந்ததும் நான் அபி வீட்டுக்கு கிளம்புறேன். யூடியூப்ல டிரெண்டே இன்னைக்கு நீ தான்”, என்று சொல்லி விட்டு போனை வைக்க உடனடியாக யூடியூபை எடுத்து பார்த்தான்.

அதில் ரவியைப் பற்றி பெருமையாக பேசி, அவன் தன்னைத் தேடி வந்ததாகவும், தன்னிடம் காதலைச் சொன்னதாகவும் ராதா அடித்து விட்டுக் கொண்டிருக்க மற்றவர்கள் அவளிடம் பொறாமையில் பேசிக் கொண்டிருந்தார்கள். அதைக் கண்டு ஒரு நிமிடம் ஜெர்க் ஆனாலும் அவளது சின்னப் பிள்ளைத் தனமான விஷயங்கள் கண்டு அவனுக்குமே சிரிப்பு தான் வந்தது.

உடனே அவளை அழைத்தவன் அவள் எடுக்க காத்திருந்தான். அதை எடுத்து “ரவி”, என்று அவள் ஏக்கமாக அழைக்க ஒரு நொடி அவள் குரலில் புல்லரித்து தான் போனான்.

அதை மறைத்து “ஏய் என்ன டி பண்ணிட்டு இருக்க? நான் எங்க உன் கிட்ட லவ் சொன்னேன்? எதுக்கு இப்படி அள்ளி விட்டுக்கிட்டு இருக்க? நான் உன்னைத் தேடியா வந்தேன்?”, என்று கேட்டான்.

“அதெல்லாம் என் கற்பனை தான். ஆனா எனக்கு ரொம்ப நல்லா இருக்கு இந்த கற்பனை. உண்மையிலே காலேஜ்க்கு வெளிய உங்களைப் பாத்ததும் என்னால நம்பவே முடியலை. அடிக்கடி உங்களைப் பத்தி நினைக்கிறதுனால எனக்கு உங்க உருவம் தெரியுதோன்னு நினைச்சு தான் நிக்காம போனேன். அப்புறம் என்னைத் தேடி வந்துட்டீங்களோன்னு ஒரு சந்தோஷம். அதை தான் பிரண்ட்ஸ் கிட்ட சொன்னேன். என் கற்பனை எனக்கு சந்தோஷத்தை தருது. அதைக் கெடுக்காதீங்களேன்”, என்று சொல்ல அவன் என்ன சொல்வானாம்?

அவன் அமைதி அவளை எதுவோ செய்ய “அப்ப உண்மையாவே என்னைப் பிடிக்கலையா உங்களுக்கு?”, என்று கேட்டாள் ராதா.

“அப்படின்னு இல்லை…. ஆனா எனக்கு கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் ஒரு பொண்ணு மேல கொஞ்சம் விருப்பம் இருந்துச்சு. ஆனா அவளுக்கு கல்யாணம் ஆகிருச்சு”, என்றான்.

“இதெல்லா பெரிய விஷயமா? சின்னப் பிள்ளைல நான் கூட தான் அபி அத்தானை கல்யாணம் பண்ண நினைச்சிருக்கேன். அதெல்லாம் சரியா போகும். நான் உங்களை கண் கலங்காம வச்சிக்கிறேன். நாம லவ் பண்ணலாமா?”

“இதெல்லாம் சாதாரண விஷயம் இல்லை ராதா. இப்பவே ரொம்ப யோசிக்காத. முதல்ல படிக்கிற வேலையைப் பாரு. நான் அப்புறம் பேசுறேன்”, என்று சொல்லி போனை வைத்தான். ஆனால் மனம் மட்டும் சிறிது உல்லாசமாகவே இருந்தது.

வீட்டுக்கு வந்ததும் மணியம்மை கோபத்துடன் அமர்ந்திருக்க “என்ன கிழவி, இன்னைக்கு வீடியோ போடுற வேலை இல்லையா? அதிசயமா வெட்டியா உக்காந்துருக்க?”, என்று கேட்டான்.

“போடா, என் கிட்ட பேசாத. கடைசில என் கிட்ட கூட சொல்லல பாத்தியா?”

“எதை?”

“உன் லவ் மேட்டர் தான்”

“ஏது? நான் லவ் பண்ணுறேன், நீ பாத்த?”

“ஆமா, உன் மேல எனக்கு கோபம் தான். ஆனா மருமக சூப்பர். இப்ப தான் அவ கிட்ட வீடியோ கால் பேசினேன். மூணு மாசத்துக்கு அப்புறம் உனக்கும் அவளுக்கும் கல்யாணம் தான்”, என்று சொல்ல ரவிக்கே செல்லும் வேகம் அதிர்ச்சியாக தான் இருந்தது.

“அம்மா அவ படிக்கிற பொண்ணு மா”

“படிக்கட்டும், கல்யாணமும் நடக்கட்டும். எனக்கு என் மருமகளை ரொம்ப பிடிச்சிருக்கு. எப்படி சிரிக்க சிரிக்க பேசுறா தெரியுமா? சரி இரு காபி கொண்டு வரேன்”, என்று சொல்லிச் செல்ல அப்படியே அமர்ந்து விட்டான் ரவி.

Advertisement