Advertisement

அத்தியாயம் 12 

உன் அழகின் முன் வீழ்ந்த 

என்னால் எழும்ப முடிய 

வில்லை என்பதே நிஜம்!!!

கல்லூரி விட்டதும் அந்த மகளிர் கல்லூரியில் இருந்து பெண்களாக வெளி வர ரவியின் கண்கள் சஞ்சனாவைத் தான் தேடியது.

பெண்கள் கல்லூரிக்கு வெளியே அவன் மட்டும் நின்றிருக்க வெளியே வரும் பெண்கள் அனைவரும் நின்று அவனை பார்த்த படி தான் சென்றார்கள். அதில் அவனுக்கே கூச்சமாக இருந்தது. ஆனால் பவித்ரா வாழ்க்கைக்காக நின்றான். அப்போது அவன் எதிர் பார்த்த சஞ்சனா ராதாவுடன் பேசிய படியே வெளிய வந்தாள்.

அவர்கள் இருவரும் அவனைக் கவனிக்க வில்லை. அவர்கள் எதிரே போய் நின்றவன் “ஹலோ ஒரு நிமிஷம்”, என்றான். இரு பெண்களும் அதிர்வாக அவனைப் பார்க்க சஞ்சனாவைப் பார்த்து “உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்”, என்றான்.

ராதா அவனையே குருகுருவென்று பார்க்க பயந்த சஞ்சனாவோ “ஏய் வாடி போயிறலாம்”, என்று சொல்லி ராதாவை இழுத்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக சென்றாள்.

“ஹலோ, ஒரு நிமிஷம், ஏமா… இந்தா பொண்ணு….”, என்று அவன் கத்த அவன் காதலை தான் சொல்ல வந்திருக்கிறான் என்று எண்ணி தான் சஞ்சனா பயந்து அங்கிருந்து சென்றாள்.

“ஏய் சஞ்சு கையை விடு டி. அவர் கிட்ட என்னன்னு கேக்கலாம்”, என்று சொன்ன ராதா சஞ்சனாவை நிறுத்தி விட்டு மீண்டும் ரவி புறம் நடந்தாள்.

“ராதா வேண்டாம் டி, போயிறலாம்”, என்று சஞ்சனா சொன்னதை அவள் கேட்கவே இல்லை. அவளை விட்டுவிட்டு செல்லவும் சஞ்சனாவுக்கு மனதில்லை. அதனால் அதே இடத்தில் நின்றாள்.

போன பெண்களில் ராதா திரும்ப வரவும் சிறு உற்சாகத்துடன் ரவியும் ராதா புறம் ஓடி வந்தான்.

இருவரும் அருகருகே வந்து நிற்க எப்படி பேச்சை ஆரம்பிக்க என்று ரவி திகைக்க “நீங்க ரவி தானே?”, என்று அவ்வளவு ஆர்வமாக கேட்டாள் ராதா.

“ஆமா, என்னை எப்படி தெரியும்? அபி சொன்னானா?”, என்று ரவி கேட்க “ஓ அபி அத்தானுக்கும் உங்களை தெரியுமா?”, என்று கேட்டாள்.

“ஆமா, அவன் என் ஃபிரண்ட் தான். உனக்கு… சாரி என்னை விட சின்ன பொண்ணா தான் இருப்ப? நீ அபியோட அத்தை பொண்ணு தானே? உனக்கு எப்படி என்னைத் தெரியும்?”

“உங்களை தெரியாதவங்க இந்த உலகத்துல இருப்பாங்களா என்ன? நீங்க உலக புகழ் பெற்றவர் ஆச்சே?”

“வாட்?”, என்று கேட்டவன் “இந்த பெண் என்னைக் கலாய்க்கிறாளா?”, என்று தான் பார்த்தான்.

“உங்களைப் பத்தி எனக்கு எல்லாம் தெரியும். உங்களுக்கு பிரியாணி பிடிக்கும். சின்ன வயசுல உங்க கால்ல அடி பட்டுருச்சு. சின்ன பிள்ளைல ஜட்டி போட அவ்வளவு அழுவீங்களாம்? உங்க சூப்பர் மார்கெட் பத்தி கூட தெரியும். உங்க ரூம் கூட பாத்துருக்கேன். கொஞ்சம் மாத்தி வச்சா நல்லா இருக்கும். உங்களுக்கு வேஷ்டி கட்டத் தெரியாது, ரொம்ப கோபம் வரும், நான்வெஜ் வெழுத்து வாங்குவீங்க. ஆனா இறால் பிடிக்காது. அதிகமா குப்புற படுத்து தான் தூங்குவீங்க. உங்க வீட்ல உங்க ரூம்ல உங்க சின்ன வயசு போட்டோ இருக்கு தானே? கிரீன் கலர் ஜட்டி. அது வரைக்கும் எனக்கு தெரியும்”.

“ஏய் நிறுத்து நிறுத்து… ஒரு பையன் கிட்ட என்ன எல்லாம் பேசணும்னு தெரியாதா? என்னை பத்தி இவ்வளவு விஷயம் தெரிஞ்சு வச்சிருக்க? உன் குடும்பத்துக்கே எங்களை வேவு பாக்குறது தான் வேலையா? உங்க அத்தை பவியை வேவு பார்த்தாங்க. இப்ப நீயா?”

“ஹலோ உங்களை வேவு பார்க்க நீங்க அந்நிய நாட்டு அதிபர் பாருங்க? உங்களை வேவு பார்த்து எங்களுக்கு என்ன கிடைக்கப் போகுது?”

“அப்புறம் எப்படி இவ்வளவு தகவல் தெரியுமாம்?”

“உங்களை பற்றிய தகவல்களை அம்மாச்சி சேனல் அம்மாச்சி  அள்ளிக் கொடுக்கும் போது நாங்க வேவு வேற பாக்கணுமா?”, என்று கேட்க திகைத்து போனவன் “கிழவி”, என்று பல்லைக் கடித்தான்.

“நானும் அந்த சேனல் சப்ஸ்கிரைபர் தான். அது மட்டுமில்லை உங்களை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்”, என்று அவள் புன்னகையுடன் சொல்ல அவனுக்கு தான் அவள் பேச்சும் பார்வையும் ஒரு மாதிரி சங்கடத்தை கொடுத்தது. ஏனென்றால் அவள் அவனை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்னது உங்களுக்கா?”, என்று ரவி குழப்பமாக கேட்க “ஆமா உங்க பேன்ஸ் நிறைய பேர் இருக்கோம். ரவி வெறியன்னு ஒரு குருப் கூட ஃபார்ம் பண்ணிருக்கோம்”, என்றாள் ரசனையாக.

“ஐயோ நிறுத்து, எனக்கு கேக்க சகிக்கலை”, என்று அவன் அலற “சரி விடுங்க. நீங்க என்ன விஷயமா எங்களைப் பாக்க வந்தீங்க? ஒரு வேளை என்னோட கமெண்ட்ஸ் எல்லாம் பாத்து இம்ப்ரஸ் ஆகி என் கிட்ட புரோபோஸ் பண்ண வந்தீங்களா? அப்படி மட்டும் பண்ணினா இப்பவே உங்க கூட வந்துருவேன். கல்யாணம் பண்ணிக்கலாமா? நான் மட்டும் உங்களைக் கல்யாணம் பண்ணினா எல்லாவளும் பொறாமைல பொங்கியே செத்துருவாளுங்க. சொல்லுங்க சொல்லுங்க கல்யாணம் பண்ணிக்கலாமா?”, என்று கேட்டாள் அவள்.

“ஏய் லூசா டி நீ? பாக்காமலே என்னை லவ் எதுவும் பண்ணி தொலையுறியா?”, அவன் விளையாட்டாக கேட்க “ஆமா, உங்களுக்கு எப்படி தெரியும்? எனக்கு உங்களை அவ்வளவு பிடிக்கும். உங்களை மாதிரி ஒரு புருஷன் வந்தா….”, என்று கனவில் மிதந்த படியே சொன்னாள்.

“போதும் போதும் நிப்பாட்டு. முதல்ல இப்படி பாக்குறதை நிப்பாட்டு. இனி கல்யாணம் காதல்ன்னு பேசின அடிச்சு பல்லைக் கழட்டிருவேன். படிக்கிற வயசுல காதலாம் காதல்”

“ஏன் இப்ப காதல் பண்ணாம வேற எப்ப பண்ணவாம்? நான் பைனல் இயர் முடிக்கப் போறேன். உங்களை விட ஒரு எட்டு வயசு தான் கம்மியா இருப்பேன்”, என்று அவள் சொல்ல அட லூசே என்று தான் அவன் அவளைப் பார்த்திருந்தான்.

ரவியும் ராதாவும் வெகு நேரம் பேசவும் தன்னுடைய தயக்கம் நீங்கி அங்கே வந்தாள் சஞ்சனா. அவளைக் கண்டதும் “சஞ்சனா நான் உன் கிட்ட பேசணும். அதுவும் அபியோட வாழ்க்கையைப் பத்தி”, என்றான் ரவி.

“ஓ அண்ணாவை உங்களுக்கு தெரியுமா?”, என்று சஞ்சனா தயக்கமாக கேட்க இப்போதும் அவனை ரசனையாக தான் ராதா பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதைக் கண்டு பல்லைக் கடித்தவன் அவள் புறம் திரும்பாமல் “சஞ்சனா உங்க அண்ணனுக்கும் என்னோட அக்கா மக பவித்ராவுக்கும் கல்யாணம் முடிஞ்சுருச்சு. இப்ப ரெண்டு பேரும் டைவர்ஸ்ல வந்து நிக்குறாங்க. அதைப் பத்தி பேசணும்”, என்றான் பொறுமையாக.

ஏனோ ராதாவின் பார்வை அவனை ஒரு மாதிரி சங்கடப் படுத்தி இருந்தது. சீக்கிரம் பேசி விட்டுச் செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தான்.

“என்னது அபி அத்தானுக்கு கல்யாணம் ஆகிருச்சா?”, என்று ராதா கேட்க சஞ்சனாவுக்கும் அதே அதிர்ச்சி தான்.

இருவர் அதிர்ச்சியையும் பார்த்தவன் “கொஞ்சம் எங்கயாவது உக்காந்து பேசலாமா? எல்லாரும் பாக்குறாங்க. பக்கத்துல உள்ள பார்க்க்கு போகலாமா?”, என்று கேட்டான்.

“பார்க் வேண்டாம், பக்கத்துல உள்ள ரெஸ்டாரண்ட் போகலாம். கொஞ்சம் பசிக்குது”, என்று சொன்ன ராதாவை அவன் வெட்டவா குத்தவா என்று பார்க்க “சாரி அண்ணா, அவ கொஞ்சமும் பசி தாங்க மாட்டா”, என்று சொன்னாள் சஞ்சனா..

வேறு வழி இல்லாமல் அவனும் அவர்கள் இருவரையும் ரெஸ்டாரண்ட் அழைத்துச் செல்ல அவர்கள் கேட்டதை வாங்கிக் கொடுத்து அபி பவித்ரா வாழ்க்கையில் நடந்த எல்லாவற்றையும் சொன்னான்.

“எங்க அண்ணா வாழ்க்கைல இவ்வளவு நடந்துருச்சா? எங்களுக்கு எதுவுமே தெரியாது அண்ணா. எங்க அம்மா அண்ணனையும் அண்ணியையும் இவ்வளவு கஷ்டப் படுத்திருப்பாங்கன்னு என்னால நம்பவே முடியலை. ஏதோ அம்மாவுக்கும் அண்ணனுக்கும் கோபம், பேசிக்க மாட்டாங்கன்னு மட்டும் தான் தெரியும். சரி நாங்க இப்ப என்ன பண்ணனும்? எங்க அண்ணா வாழ்க்கைக்காக நாங்க என்ன வேணும்னாலும் செய்வோம்”, என்று கேட்டாள் சஞ்சனா. ராதா இப்போதும் அவனை ஆர்வமாக பார்த்த படியே “ஆமா ஆமா நானும் என்ன வேணும்னாலும் செய்வேன்”, என்று வாயில் பப்ஸை வைத்த படியே பேசினாள்.

Advertisement