Advertisement

“பவி தூங்கிட்டியா? என்ன பண்ணுற? உன்னைக் கஷ்டப் படுத்திட்டேனா? சாப்பிட்டியா டி? ஏனோ நீ இல்லாத வீடு வெறுமையா இருக்கு பவி”, என்று அவன் வரிசையாக அனுப்பிக் கொண்டிருக்க அவன் இல்லாத வாழ்க்கையை நினைக்க அவளுக்கும் கஷ்டமாக இருந்தது.

அதனால் அபியின் சந்தோசத்துக்காக அவன் குடும்பத்தை சந்திக்க முடிவு எடுத்து விட்டாள் பவித்ரா. அவனை சரி செய்யா விட்டால் அவள் அபியை மொத்தமாக இழந்து விடுவாள்.

அதனால் அன்று ரவியை சந்திக்க சூப்பர் மார்க்கெட்க்கு வந்திருந்தாள் பவித்ரா.

“வா பாவி”, என்று சொன்னவனிடமும் முழுமையான உற்சாகம் இல்லை. அது தன்னைப் பற்றிய கவலை தான் என்று எண்ணிக் கொண்டவள் “மாமா உன் கிட்ட கொஞ்சம் பேசணும்”, என்றாள்.

“அதுக்கு பெர்மிசன் எல்லாம் கேட்பியா? வீட்டுக்கு வரக் சொன்னா வந்திருப்பேனே? இவ்வளவு தூரம் வரணுமா?”

“யாருக்கும் தெரியாம பேசணும். வீட்ல உள்ளவங்க கிட்ட அப்புறம் சொல்லலாம்னு நினைச்சேன்”

“ஓ, சரி உள்ள வா, ஜூஸ் சொல்லவா?”

“வேண்டாம்”, என்று சொன்னவள் அவன் அறைக்குச் சென்று ஒரு இருக்கையில் அமர அவளுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்தவன் “என்ன விஷயம் உன்னைக் குழப்புது? அந்த காண்டாமிருகம் ஏதாவது செஞ்சானா?”, என்று கேட்டான்.

“ப்ச் அபியை அப்படிச் சொல்லாத மாமா”

“சரி சரி சொல்லலை. என்ன விஸயம்னு சொல்லு”

“நான் ஒரு முடிவு எடுத்துருக்கேன் மாமா”

“என்ன?”

“அபி வீட்டுக்கு போக போறேன்”

“போ, உன் புருஷன் வீட்டுக்கு போறதுக்கு ஏன் இவ்வளவு யோசிக்கணும்?”

“நான் அவனோட அம்மா அப்பா இருக்குற வீட்டுக்கு போகணும்னு நினைக்கிறேன்”

“வாட்?”

“எனக்கு என்னமோ அவங்க ஏதோ பண்ணுறாங்கன்னு தோணுது. அதனால அவங்களுக்கு என்ன பிரச்சனைன்னு நேர்ல போய்க் கேக்க போறேன்?”

“உனக்கு என்ன பைத்தியமா? அவங்க உன்னை கொலை செய்ய முயற்சி பண்ணினவங்க”

“இருக்கட்டும். அவங்க யாரு, என்னோட சொந்தம் தானே? இவ்வளவு நாள் நான் அவங்களைப் பாக்காம இருந்ததே தப்பு மாமா”

“அவங்க ரொம்ப ஆபத்தானவங்கன்னு தான் அபியே ஒதுங்கி இருக்கான். நீ அவங்களை சந்திக்க வேண்டாம் பவி. நான் உன்னை கூட்டிட்டு போக மாட்டேன்”

‘”இப்படியே விட்டா எங்க வாழ்க்கை என்ன ஆகுறது மாமா? நான் இல்லைன்னா அவன் என்ன ஆவான்? எப்பவும் அபி நிம்மதி இல்லாம தான் இருக்கணுமா? நான் போறேன் மாமா, அந்த அம்மா கிட்ட கேக்கணும். என்ன தான் அவங்களுக்கு பிரச்சனைன்னு கேக்கப் போறேன்? அவங்க கிட்ட கேட்டா தானே எனக்கு ஒரு முடிவு தெரியும். அந்த ரோஹினி பொண்ணை கோர்ட்ல வச்சுப் பாத்ததும் எனக்கு என்னமோ தப்பா இருக்கு. முன்னாடி அக்கான்னு அவ்வளவு சந்தோஷமா பேசுவா. அன்னைக்கு என்னை கண்டுக்கவே இல்லை. அதான் தெரிஞ்சிக்கணும். நான் போறேன்”

“சரி போ, ஆனா இது அபிக்கு தெரியணும்”

“அவனுக்கு தெரிஞ்சா விட மாட்டான் மாமா. யாருக்கும் தெரியாம போகணும். அதான் உன் கிட்ட கேக்குறேன். நீ வர வேண்டாம். நாம ரெண்டு பேரும் போனா எல்லாருக்கும் சந்தேகம் வரும். எனக்கு ஒரு கார் ஏற்பாடு பண்ணிக் கொடு. வீட்ல என்ன சொல்லிட்டு போகன்னு ஒரு ஐடியா கொடு”

“எனக்கும் நீ போறதுல விருப்பம் இல்லை பவி மா”

“ஒரு மனைவியா ஒரு மருமகளா எனக்கும் சில கடமை இருக்கு மாமா. அதுல இருந்து நான் விலகி இருக்க முடியாது”

“போறேன்னு முடிவு பண்ணிட்டியா பவி?”

“ஆமா”

‘அப்படின்னா எனக்கு ஒரு நாள் டைம் கொடு. அப்புறம் போ”

“என்ன பண்ணப் போற? அபி கிட்ட பேசப் போறியா?”

“அவன் கிட்ட என்னால பொறுமையா பேச முடியாது. அவன் மண்டையை உடைக்க தான் தோணும். அப்படி செஞ்சா நீ விடுவியா? அதனால அவன் கிட்ட பேச போறது இல்லை. அதுவும் அவன் கிட்ட சொல்லக் கூடாதுன்னு வேற நீ சொல்லிட்ட? ஆனா உன்னை தகுந்த பாதுகாப்பு இல்லாம என்னால அனுப்ப முடியாது,. எனக்கு நாளைக்கு ஒரு நாள் மட்டும் டைம் கொடு”

“அது”

“என்னை நம்புறேன்னா டைம் கொடு”

“சரி மாமா, நீ ஏதோ முடிவு பண்ணிட்ட? ஆனா என்ன ஆனாலும் நாளான்னைக்கு நான் போய்த் தான் ஆவேன். எனக்கு அபி நல்லா இருக்கணும்”

“ஒரு சந்தேகம் கேக்கவா பவி”

“என்ன மாமா?”

அபி அபின்னு சொல்ற? அப்புறம் விவாகரத்து நடந்தா என்ன ஆகும்?”

“என்ன ஆகும்? புரியலை”

“விவாகரத்து நடந்தா நீங்க பிரிஞ்சிருவீங்க? அபி வேற கல்யாணம் பண்ணிப்பான். உனக்கும்….”

“அப்படி நடக்க வாய்ப்பு இல்லை மாமா. நான் செத்தாலும் வேற கல்யாணம் பண்ண மாட்டேன். கல்யாணம் ஒரு தடவை தான். அது எனக்கு அபி கூட முடிஞ்சிருச்சு. அப்புறம் இன்னொரு விஷயம் அபியும் வேற கல்யாணம் பண்ண மாட்டான். செத்தாலும் பண்ண மாட்டான்”, என்று அவ்வளவு கர்வமாகவே சொன்னாள்.

“போங்க டி லூசுங்களா? உங்க ரெண்டு பேரை நினைச்சா எங்களுக்கு தான் லூசு பிடிக்கும். ஒண்ணாவும் வாழ மாட்டாங்களாம். பிரியவும் மாட்டாங்களாம். டைவர்ஸ் பண்ணிட்டு தனித் தனியா இருந்து நட்பை வளருங்க. சீக்கிரம் பிள்ளை குட்டியை பெத்து படிக்க வைக்காம?”, என்று கடுப்புடன் முனங்க அவன் சொன்ன வார்த்தைகளை கேட்டு அதிர்வுடன் நின்றாள்.

“மாமா நீ சொன்ன?”, என்று படபடப்பாக கேட்டாள் பவித்ரா.

“என்னத்த சொல்ல? உங்களை நினைச்சு தான் பைத்தியம் பிடிக்குது. அவனை உனக்கு பிடிச்சிருக்கு. அவனுக்கும் உன்னைப் பிடிச்சிருக்கு. கல்யாணமும் ஆகிருச்சு. பிரியவும் மனசு இல்லை. வேற கல்யாணம் பண்ண மாட்டோம்னு அவ்வளவு அடிச்சு சொல்ற? நீ வேற கல்யாணம் பண்ண மாட்டேன்னு அவனுக்கும் தெரிஞ்சிருக்கணும். அப்படின்னா ஒண்ணா வாழ வேண்டியது தானே? கடைசி வரை நட்பா இருக்கணும்னு முடிவு பண்ணிட்டியா? இந்த உலகத்துல அது சாத்தியமா பவி? பிடிச்சவன் கூட வாழுறதுக்கு என்ன?”

“நான் இதை யோசிக்கவே இல்லையே மாமா”, என்று சொல்ல அவளை அதிர்வாக பார்த்தான்.

“ஏது? யோசிக்கவே இல்லையா? என்ன சொல்ற நீ?”

“ஆமா, சேந்து வாழுறது, பிள்ளை குட்டி இதெல்லாம் நான் யோசிக்கவே இல்லையே?”

“என்ன நீ இப்படிச் சொல்ற? கல்யாணம் முடிச்சு அவ்வளவு மாசம் ஒரே வீட்ல ஒண்ணா தானே இருந்தீங்க? ஒரு நிமிஷம் கூடவா அவனை கணவனா நினைக்கலை நீ?”

“இல்லையே? ஆனா யோசிச்சிருக்கணும்னு இப்ப தான் புரியுது தேங்க்ஸ் மாமா. முதல்ல அவன் குடும்பத்தை பாத்துட்டு அப்புறம் அவன் கிட்ட இதைப் பத்தி பேசுறேன். இப்ப கிளம்புறேன்”

“சந்தோஷம், சீக்கிரம் சரி பண்ணி வாழப் பாருங்க”, என்றவன் “உன்னை வீட்ல விடவா?”. என்று கேட்டான்.

“என் வண்டில தான் வந்தேன். நீ எனக்கு எல்லா ஏற்படும் பண்ணிட்டு கால் பண்ணு”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.

“கடவுளே என் அக்கா மக எந்த பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமா இருக்கணும்”, என்று எண்ணிக் கொண்டவன் அவசரமாக காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான் அபியின் ஊருக்கு. போகும் போதே அன்னைக்கு அழைத்து வேலை விஷயமாக கேரளா செல்கிறேன், நாளை தான் வருவேன் என்று பொய் சொன்னான்.

“நீ எங்கயும் போ. ஆனா என் நம்பருக்கு ரீசார்ஜ் மட்டும் பண்ணி விட்டுரு டா. நிறைய வீடியோ போடாம பெண்டிங்க்ல இருக்கு. என்னோட பேன்ஸ் எல்லாம் வெயிட் பண்ணுவாங்க”, என்று மணியம்மை சொல்ல “கிழவி ஊர்ல இருந்து வந்ததும் உன் போன் லேப்டாப் எல்லாம் உடைக்கிறது தான் என் முதல் வேலை”, என்று கத்தி விட்டு போனை வைத்தான்.

ரீசார்ஜ் செய்ய வில்லை என்றால் மணியம்மை ஃபோன் செய்து உயிரை வாங்கி விடுவார் என்பதால் உடனடியாக ரீசார்ஜ் செய்து விட்டான்.

பின் பவித்ராவுக்கு அழைத்து அபியின் குடும்பத்தைப் பற்றி அவளுக்கு தெரிந்ததைக் கேட்டான். அபியின் பிறப்பை பற்றிய விஷயத்தை மட்டும் விட்டுவிட்டு மற்ற தகவல்களைச் சொன்னாள். அதில் ஒன்று தான் சஞ்சனா படிக்கும் கல்லூரியைப் பற்றிய தகவல்.

மாலை நான்கு மணிக்கு சஞ்சனா படிக்கும் கல்லூரிக்கு வெளியே பவித்ரா அனுப்பிய அவளது புகைப்படத்துடன் நின்றிருந்தான் ரவி.

காதல் தொடரும்….

Advertisement