Advertisement

“எல்லாரும் போய் வேலைப் பாருங்க”, என்று அபி சொன்னதும் மற்றவர்கள் அங்கிருந்து செல்ல அந்த ஆளை அபி அவனது அறைக்குள் அழைத்துச் சென்று அடி பின்னி விட்டான். ஆனால் அதைக் காண பவித்ரா அங்கே இருக்க வில்லை. வீட்டுக்குச் சென்று விட்டாள். அவளுக்கும் கோபம் வரும் தானே?

ஆனால் அவள் அறியாதது. முன்பிருந்த பவித்ராவாக இருந்திருந்தால் அபி அப்படிச் சொல்லியதற்கு அங்கேயே அவனை ஒரு வாங்கு வாங்கி விட்டு வந்திருப்பாள். ஆனால் இப்போது ஏதோ சொல்ல முடியாத உரிமை உணர்வும் கோபமும் ஒரு வலியும் அவளை ஆட்கொண்டது.

அன்று இரவு அவனிடம் சண்டை போட அவள் வீட்டில் காத்திருக்க அவனோ தூக்கம் வருகிறது என்று சொல்லி உணவைக் கூட தவிர்த்து விட்டு அறைக்குள் சென்று விட்டான்.

அடுத்த நாள் காலையில் அபி அலுவலம் கிளம்பி விட்டு அவளுக்காக காத்திருக்க அவளோ சேலை கட்டி தயாராகி இருவருக்கும் காலை உணவை பரிமாறினாள்.

எந்த பேச்சு வார்த்தையும் இல்லை. உணவு உண்டு முடிந்ததும்  “போகலாமா?”, என்று கேட்டான் அபி.

“நீ போ அபி. நான் போய்க்கிறேன்”

“நான் போயிட்டா நீ எப்படி காலேஜ் போவ? ஒழுங்கா என் கூட கார்ல வா”

“கார்ல வந்தா உன் கார்ன்னு சொல்லிக் காட்டுவ அபி. அது ரொம்ப கஷ்டமா இருக்கு டா. அது மட்டுமில்லாம நான் இனி அந்த ஆஃபிஸ்க்கு வரவும் மாட்டேன்”, என்று கலங்கிய குரலில் சொல்ல அவனுக்கு அவ்வளவு வலித்தது. அவளை அப்படி காயப் படுத்தியதற்கு தன்னையே வெறுத்த அபி “பவி”, என்று பாவமாக அழைத்தான்.

“நீ ஏன் செஞ்ச எதுக்கு செஞ்சனு தெரியலை டா. ஆனா அங்க வச்சு நீ பேசினது ஒரு மாதிரி அவமானமா இருந்துச்சு டா. இனி நான் அங்க வர மாட்டேன். என்னால ஸ்டாஃபை பேஸ் பண்ண முடியாது. என்னை கட்டாயப் படுத்தாத. ஆனா நீ எது செஞ்சாலும் சரியா இருக்கும்னு இப்பவும் தோணுது. நான் ஏதாவது தப்பு பண்ணிட்டேனா அபி?“

“சாரி பவி”, என்று குற்ற உணர்வுடன் சொன்னான்.

“நீ சாரி கேக்க கூடாது டா. அதுவும் கஷ்டமா இருக்கு. நான் காலேஜ்க்கு கிளம்புறேன். கவலைப் படாதே பத்திரமா பஸ்ல போயிருவேன். சாயங்காலம் ரிஷி என் வண்டியை எடுத்துட்டு வந்துருவான்”, என்று சொல்லி விட்டு வாசல் வரை சென்றாள்.

பின் திரும்பி “அபி”, என்று அழைத்தாள்.

“ஆன்”, என்ற படி அவன் அவளைப் பார்க்க “இந்த வீடு உன் வீடுன்னு சொல்லிற மாட்ட தானே? அப்படிச் சொன்னா அதுக்கப்புறம் என்னால இங்க இருக்க முடியும்னு தோணலை டா”, என்று சொல்ல வேதனையாக அவளைப் பார்த்து “கண்டிப்பா சொல்ல மாட்டேன்”, என்றான்.

“தேங்க்ஸ்”, என்று வேதனையுடன் முணுமுணுத்து விட்டுச் சென்று விட்டாள். அதற்கு அடுத்து இருவரும் எதுவும் பேசிக் கொள்ள வில்லை. சாப்பிடும் நேரம் மட்டுமே பார்த்துக் கொள்வது. அவளும் எதுவும் கேட்க வில்லை.

அப்போது ஒரு நாள் அவள் முன்பு அவளிடம் ஒரு பேப்பரை நீட்டினான் அபி.

“என்ன அபி இது?”

“படிச்சு பாரு”, என்று சொல்லி அவன் இறுக்கமாக அமர்ந்திருக்க அதைப் படித்தவளுக்கு விவாகரத்து பத்திரம் என்று தெரிந்தது.

“அபி”, என்று அவள் அதிர்வாக அழைக்க “எனக்கு மூச்சு முட்டுது பவி. நிம்மதியா என்னால சுவாசிக்க கூட முடியலை”, என்றான்.

“நான் கையெழுத்து போட்டா நீ நிம்மதியா இருப்பியா அபி?”

“ம்‌ம்”

“சரி நான் எங்க கையெழுத்து போகணும்?”, என்று அவள் கேட்க அவன் தான் வியந்து தான் போனான்.

அவன் வேதனையுடன் இடத்தைக் காட்ட அதில் கையெழுத்திட்டவள் அறைக்குள் சென்றாள். கல்லூரிக்குச் செல்ல ஹேன்ட் பேக் எடுத்துக் கொண்டு வருவாள் என்று பார்த்தால் அவளோ ஒரு பெட்டியுடன் வந்தாள்.

அதை எதிர்பாராதவன் அதிர்ச்சியில் “பவி எங்க கிளம்பிட்ட?”, என்று கேட்டான்.

“என்னோட வீட்டுக்கு”, என்று சொன்னவளின் குரலில் அவ்வளவு விரக்தி.

“பவி, நான் உன்னைப் போகச் சொல்லலையே? இது உன் வீடு தான்”

அந்த விவாகரத்து பத்திரத்தை ஒரு பார்வை பார்த்தவள் “இந்த அளவுக்கு வந்த அப்புறம் ஒரே வீட்ல இருக்குறது சரியா இருக்காது டா. நீயும் ஹேப்பியா இல்லை. உன்னை என்னால இப்படி பாக்க முடியலை. மனசு விட்டு எதுவும் பேசவும் மாட்டிக்க. உன்னோட சோகத்தைப் பாக்க பாக்க அதை விரட்ட முடியலைன்னு என் மேலயே எனக்கு கோபம் வருது. முன்னாடின்னா ஏதாவது செஞ்சு உன்னை சரி செஞ்சிருவேன். இப்ப என்னால உன்னை நெருங்க கூட முடியலை. ஏதோ நீ என்னை விட்டு ரொம்ப தூரமா போன மாதிரி எனக்கு தோணுது. டைவர்ஸ் கிடைச்ச அப்புறம் எப்படியும் நாம தனியா தானே இருக்கணும்? இப்பவே பழக்கிக்கலாம். ஆனா நீ எப்பவும் என்னோட அபி தான்”, என்று சொன்னவள் கிளம்பி விட்டாள்.

“நான் கொண்டு வந்து விடவா?”, என்று கேட்க அப்போதும் அவன் அக்கறையை கண்டு உள்ளுக்குள் நெகிழ்ந்தவள் “ம்‌ம்”, என்று சொன்னாள். அவளை அவளது வீட்டு வாசலில் இறக்கியவன் உடனே காரைக் கிளப்ப “உள்ள வந்துட்டு போ அபி”, என்றாள்.

“இல்லை என்னால யாரையும் பேஸ் பண்ண முடியலை”, என்று சொல்லி விட்டு சென்றே விட்டான்.

அன்று அவனது வீட்டில் இருந்து வந்தவள் தான். அதற்கு பிறகு அவள் அவனை பார்க்க வில்லை. ஆனால் அவ்வப்போது போனில் பேசுவான். அதுவும் என்ன பண்ணுற சாப்பிட்டியா என்பதோடு நிறுத்திக் கொண்டான். அதற்கு பின் இதோ இன்று கோர்ட்டில் வைத்து தான் அவனைப் பார்த்தாள். அங்கேயும் அவளிடம் அக்கறையாக தான் இருந்தான். ஆனால் அவனுக்கு என்ன பிரச்சனை என்று தெரிய வில்லை.

முன்பும் கலகலப்பாக இருக்க மாட்டான் தான். ஆனால் பவியைக் கண்டால் அவன் முகம் மலர்ந்தே இருக்கும். இன்றும் அவளைக் கண்டு அவன் சந்தோஷப் பட்டன் தான். ஆனால் அது முழுமையான சந்தோஷம் இல்லை என்று அவளால் சொல்ல முடியும். அவன் மனதை ஏதோ ஒரு விஷயம் குழப்புகிறது என்று அவளுக்கு புரிகிறது. ஆனால் அது என்னவென்று அவளால் புரிந்து கொள்ள முடிய வில்லை. அதை அபியும் வாய் விட்டு சொல்ல மாட்டான் என்று புரிந்து கொண்டவள் அடுத்து என்ன என்று யோசித்தாள்.

இது தான்  அபிமன்யு மற்றும் பவித்ரா வாழ்வில் நடந்தது. உன் வாழ்க்கை முழுக்க உன் கூட இருப்பேன் என்று சொன்னவன் இப்போது விவகாரத்தில் வந்து நிற்கிறான். இத்தனைக்கும் அவளுக்கு ஏனென்று காரணம் தெரியாது. அது தான் அவளுக்கு அவ்வளவு கஷ்டமாக இருந்தது.

பவித்ரா ஏன் என்று காரணம் கேட்க வில்லை என்றாலும் ரிஷி ஆயிரம் முறை கேட்டு விட்டான். ஆனால் அவன் வாயைத் திறக்க தயாராக இல்லை. ரவி கூட வந்து சண்டை போட்டான். அவனிடம் மட்டும் “எனக்கும் என்னோட பவிக்கும் இடையில நீ வராத”, என்று கத்தினான்.

அவனை வெறுபெற்ற என்றே ரவியும் “நீ விவாகரத்து பண்ணினா என்ன இப்ப? சீக்கிரம் பண்ணு. பவியை நான் வாழ வச்சிக்குவேன் டா. உனக்கு விவாகரத்து கிடைச்ச அடுத்த நாள் நான் பவியைக் கல்யாணம் பண்ணுவேன்”, என்றான்.

அதைக் கேட்டு எரிச்சல் வந்தாலும் “நடந்தால் பாக்கலாம். இப்ப போ”, என்று திமிராக அவனை யோசனையாக பார்த்த படி சென்ற ரவிக்கு எதுவுமே புரிய வில்லை. அதுவும் கோர்ட்டில் வைத்து இருவரும் கட்டிப் பிடித்த படி நின்றதும் புரிய வில்லை. இப்போது வரை அவனும் குழப்பத்தில் தான் இருக்கிறான்.

அன்று முழுவதும் யோசித்த பவித்ரா அடுத்த நாள் தெளிந்து விட்டாள். கோர்ட்டில் வைத்து அவன் தன்னைப் பார்த்த பார்வையில் வெறுப்பு என்பது துளி கூட இல்லை. நிச்சயம் அவன் தன்னை விவாகரத்து பண்ண காரணம் எனக்கு ஏதோ நல்லது செய்ய என்று எண்ணி தான்.

  ஒரு வேளை அவனது அம்மா மிரட்டியிருப்பார்களோ என்று எண்ணியவள் ஆம் அப்படி தான் இருக்க வேண்டும் என்று நம்பினாள்.  தன்னை விட்டு பிரிந்தால் அபி நிச்சயம் நன்றாக இருக்க மாட்டான் என்பதற்கு சான்று அவனிடம் இருந்து வந்து கொண்டிருக்கும் குறுந்தகவல்கள்.

Advertisement