Advertisement

அன்று மாலை வரை அங்கே தான் இருந்தார்கள். “கிளம்பலாமா அபி?”, என்று கேட்டாள் பவித்ரா.

அவளுடன் அந்த வீட்டில் தனியே இருக்க தவிப்பாக இருக்க “இன்னைக்கு இங்க இருந்துட்டு நாளைக்கு போகலாமா?”, என்று அவனே கேட்டான். அவளுக்கு கசக்குமா என்ன? சந்தோஷமாக சரி என்று சொன்னாள்.

அடுத்த நாள் நேரம் போகாமல் சுற்றிக் கொண்டிருக்க ரிஷி இருவரையும் படத்துக்கு போகச் சொன்னான். அங்கே ஆரம்பித்தது அபிக்கு பிரச்சனை. எப்போதும் போல அவன் தோளில் சாய்ந்து அவள் படம் பார்க்க அவனுக்கு தான் புது வித உணர்வு எழுந்தது.

அதுவும் அவளது உடை லேசாக விலகி இருக்க முன்பு இருந்த அபியாக இருந்தால் “ஏய் டிரெஸ்சை சரி பண்ணு டி”, என்று சொல்லி இருப்பான். இப்போது அவனால் அப்படிச் சொல்ல முடிய வில்லை. வேறு யாருடைய பார்வைக்கும் தெரிந்திருந்தால் பவி நேரா உக்காரு என்றாவது சொல்லி இருப்பானோ என்னவோ? அவன்  கண்களுக்கு மட்டுமே தெரிய அவனால் மூச்சு விட முடிய வில்லை. கண்களைத் திருப்பவும் முடியாமல் பார்க்கவும் முடியாமல் ஒரு தவிப்பு எழுந்தது. இப்போது ஏதோ தவறுக்கும் சரிக்கும் இடையே ஒரு போராட்டம் அவனுக்குள்ளே.

கண்கள் அவனை மீறி அவளை மொய்க்க மனம் தவறு செய்கிறாய் என்று வாதாட மூளை அவள் உன் மனைவி தான் என்று எதிர்வாதம் செய்ய மொத்தத்தில் அபி அபியாக இல்லை.

அடுத்து வந்த நாட்களில் இருவரும் ஒரே வீட்டில் வேறு வேறு அறைகளில் தான் இருந்தார்கள். இருவருக்கும் வேலைகள் எப்போதும் போல தான் நடந்தது. ஆனால் அபியே அவளை கல்லூரிக்கு அழைத்துச் செல்வான். மீண்டும் அவனே அவளை அழைத்துக் கொண்டு அலுவலகம் செல்வான்.

“உனக்கு அலைச்சல் தானே ஸ்கூட்டில போகவா?”, என கேக்க “உன்னை அழைச்சிட்டு போறதை விட நான் பெரிய வேலை பாக்கலை”, என்று சொன்னான்.

இப்போது அவனது வீட்டினரால் அவளுக்கு ஆபத்து வராது என்று நம்பினாலும் கொஞ்சம் பயமாக தான் இருந்தது. அதிபனும் பழைய வேலைக்குச் சென்று விட அவளுக்கு துணையாக அபியே இருந்தான்.

வீட்டில் தான் வெகுவாக தவித்து போவான். வேலை நேரம் எல்லாம் ஒன்றும் தெரியாது. ஆனால் விடுமுறை நாட்களில், இரவு உணவு முடிந்து மொட்டை மாடியில் கதை பேசுகையில் எல்லாம் அபி கொஞ்சம் கொஞ்சமாக தடுமாறிக் கொண்டிருந்தான். அவளது அருகாமையை தாங்க முடியாமல். அவள் சாதாரணமாக இருக்கையில் அடுத்த நிலைக்கும் செல்ல முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாக அவளிடம் இருந்து விலக துடங்கினான்.

இரவு நேரம் கதை பேசும் போது “எனக்கு தூக்கம் வருது பவி”, என்று சொல்லி சீக்கிரமே உறங்கச் சென்று விடுவான்.

தாமரை இலைத் தண்ணீர் போல இருவர் வாழ்க்கையும் சென்று கொண்டிருந்தது. திருமணம் முடிந்து ஆறு மாதம் ஆன பிறகு தான் ரோஹினி அவர்கள் வீட்டுக்கு வந்தாள்.

அபி “வா ரோஹி”, என்று சொன்னதோடு முடித்துக் கொண்டான். ஆனால் அபியின் அத்தை மகள் என்றதும் பவி கொஞ்சம் அதிகமாகவே சந்தோஷப் பட்டாள். அவனைத் தேடி வந்த முதல் சொந்தமாயிற்றே. ரோஹினியும் பவித்ராவிடம் நல்ல படியாகவே பேசினாள்.

“நாளைக்கு ஒரு இண்டர்வியூ இருக்கு. அதுக்கு தான் வந்தேன்”, என்று சொல்லி அங்கே தங்கியவள் அவர்கள் இருவரும் தனித்தனி அறையில் இருந்ததைக் கண்டு கொண்டாள்.

அடுத்த இரண்டு நாட்கள் அங்கே டேரா போட்டவள் இருவரையும் ஈசியாக இனம் கண்டு கொண்டாள். அதனால் அபி தனியே சிக்கும் போது “என்ன அத்தான் நடக்குது இங்க?”, என்று கேட்டாள்.

“என்ன?”

“எத்தனை நாள் உங்களையே ஏமாத்திக்கப் போறீங்க? பவியை உங்களுக்கு பிடிக்கலையா?”

“அவளை மட்டும் தான் பிடிக்கும்”

“அப்புறம் ஏன் தனித்தனியா?”

“அவ என்னை நண்பனா பாக்குறா”

“அப்ப ஏன் அவ கழுத்துல தாலி கட்டினீங்க? அவ வாழ்க்கையை வீணாக்கிட்டீங்களே?”, என்று பேச ரவி சொன்னதும் அவனுக்கு நினைவில் வந்தது.

அவன் குழப்ப முகத்தைக் கண்டவள் “இந்நேரம் பவி வேற ஒரு ஆளைக் கல்யாணம் பண்ணி இருந்தா அவங்க வயித்துல குழந்தை கூட வந்திருக்கும். நீங்க அவங்களை இப்படி பொம்மை மாதிரி வச்சிருக்கவா கல்யாணம் பண்ணுனீங்க. இது தப்பு தான். இப்ப ஒண்ணும் தெரியாது. இன்னும் கொஞ்ச நாள்ல அவ சொந்தம் எல்லாம் கேப்பாங்க. அவங்களை குழந்தை இல்லைன்னு மட்டம் தட்டுவாங்க. இந்த சொஸைட்டில நீங்க இப்படி தனிதனியா வாழுறது சாத்தியமே இல்லை அத்தான்”, என்று கேட்டு அவனை குழப்பினாள்.

“என்னை என்ன பண்ணச் சொல்ற?”, என்று கடுப்புடன் கேட்டான்.

“ஒண்ணு நீங்க ரெண்டு பேரும் சேந்து வாழுங்க. இல்லைன்னா விவாகரத்து பண்ணி அவளை வாழ விடுங்க”, என்று சொல்ல இருதலைக் கொல்லி எறும்பாக தவித்தான். அதை தனக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்ட ரோஹினி பல கதைகளைச் சொல்லி அபி பவித்ரா வாழ்க்கையை கெடுப்பதாக குற்றம் சொல்லி அவன் மனதில் குற்ற உணர்வைத் தூண்டினாள்.,

அவள் ஊருக்குச் சென்றாலும் போனில் அவனை மூளைச் சலவை செய்து கொண்டு தான் இருந்தாள். முதலில் ரோஹினி பவித்ராவை தப்பாக சித்தரித்து அபியிடம் இருந்து பிரிக்க தான் நினைத்தாள். ஆனால் அது அபியிடம் நிறைவேறாது என்பதால் இந்த வழியை தேர்ந்தெடுத்து வெற்றியும் கண்டாள்.

அபியின் கள்ளம் கொண்ட மனதும் பவித்ரா வாழ்வை வீணாக்கி விட்டோம் என்ற குற்ற உணர்வும் சேர்ந்து அடுத்த ஒரு மாதத்தில் விவாகரத்து வாங்க வேண்டும் என்ற முடிவை எடுக்க வைத்தது.

அவளை எப்படி அவளுடைய வீட்டுக்கு அனுப்ப என்று யோசித்தான். ஆனால் அவனால் அது முடிய வில்லை. கோதை நேரடியாகவே “அபியோட வந்தா வா, தனியா வராதே நீ எப்பவும் அபி கூட தான் இருக்கணும்”, என்று அவன் முன்னேயே சொல்லி விட அவனுக்கு என்ன செய்ய என்று தெரிய வில்லை.

அவளது நினைவால் அவனது வேலையில் கவனம் சிதற அதை எல்லாம் சரியாக பார்த்துக் கொண்டது பவித்ரா தான். அவன் குழப்பம் அவன் இறுக்கம் கண்டவள் அவனிடம் விசாரித்தும் பார்த்து விட்டாள். அவன் வாயைத் திறந்தால் தானே?

அவள் முகம் பார்த்துக் கூட அவன் பேசாமல் இருக்க பவித்ராவால் தாங்க முடிய வில்லை. அவன் மனதை ஏதோ அழுத்துகிறது என்று உணர்ந்தவள் ரிஷியிடம் சொல்லி அவனிடம் பேசச் சொல்ல ரிஷியும் அவனிடம் பேசினான். அவனிடமும் அபி வாயைத் திறக்க வில்லை. அது மட்டுமல்லாமல் முதல்முறையாக பவித்ராவிடம் கோபப் பட்டான்.

“நம்ம விசயாத்தை நீ உன் அண்ணன் கிட்ட சொல்லுவியா? எனக்கு இது பிடிக்கலை பவித்ரா”, என்று சொல்ல அவனையே வியந்து பார்த்தாள். அவன் கோபம் புதிது. அவனது பவித்ரா என்ற அழைப்பு புதிது.

“சாரி அபி, இனி சொல்லலை, வா சாப்பிடலாம்”, என்று அவள் சாதாரணமாக அழைக்க அவனுக்கு தான் மீண்டும் குற்ற உணர்வு.

அவன் விலகி போனால் அவள் பிடித்து வைத்து பேசினாள். அவன் கோபப் பட்டால் அதை பொறுத்துக் கொண்டாள். ஆனால் அவளைக் கவனித்துக் கொள்வதில் அவன் சிறிது கூட விலகவில்லை. அவளுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் அவளை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்டான். அவள் உடைகளைக் கூட துவைத்து போட்டான்.

அவனை புரிந்து கொள்ள முடியாமல் போராடியவள் அவன் போக்கிற்கே விட்டுவிட்டாள்.

ஆனால் நாளுக்கு நாள் அபியின் போக்கு வித்தியாசமாக இருந்தது. அப்போது ஒரு நாள் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு ஆள் பவித்ராவை மரியாதை இல்லாமல் பேசினான். அதற்கு அவள் அவனை திருப்பி அறைந்து விட்டாள்.

அப்போது “என்ன நடக்குது இங்க?”, என்று கேட்ட படி வந்தான் அபி.

“இந்த ராஸ்கல் குணம் சரி இல்லை அபி. தப்பா பேசுறான். மத்த பொண்ணுங்களை இவன் பாக்குற பார்வையும் சரி இல்லை. அதான் இவனை வேலையை விட்டு தூக்கினேன். அதுக்கு என் கிட்டயே தப்பா பேசுறான். அதான் அடிச்சேன்”

“அவன் செஞ்சது சரின்னு சொல்ல வரல. ஆனா என் கிட்ட வந்து சொல்லிறுக்கணும் தானே? நீயா எப்படி அவனை வேலையை விட்டு அனுப்ப முடிவு எடுக்கலாம்? இங்க எம் டி நான் தான்”, என்று எங்கோ பார்த்துக் கொண்டு சொல்ல “அபி”, என்றவள் அவனையே இமைக்காமல் பார்த்தாள்.

Advertisement