Advertisement

அத்தியாயம் 11 

நான் கனவில் கண்ட 

ஓவியம் உன்னுருவில்!!!

ஊரில் இருந்து வந்த அபி பவித்ரா வீட்டுக்குச் செல்லவே இல்லை. அவனுக்கு அவளைக் காணவே ஒரு வித சங்கடமாக இருந்தது. ஆனால் அவள் எப்போதும் போல அவனுக்கு அழைத்தாள். அவன் தான் எடுக்கவே இல்லை.

கோதை தான் அபி வரவில்லையே? மகள் வாழ்க்கை என்ன ஆகும் என்று பயந்து புலம்ப ரிஷி அவர்களை அவர்கள் போக்கிலே விடச் சொன்னான்.

அந்த ஒரு வாரம் அப்படியே கழிய அவர்கள் திருமண நாளும் வந்தது. கிருஷ்ணன் பெரிய அளவிலே திருமணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அபிமன்யு அவரிடம் என்னோட சொந்தங்களைப் பற்றிக் கேட்டால் மாப்பிள்ளை ஒரு அநாதை என்று சொல்லுங்கள் என்று சொல்லி விட்டான். அதற்கு மேல் கிருஷ்ணன் எதுவும் சொல்ல வில்லை. அவருமே அவனின் குடும்பத்தின் மீது கோபமாக இருந்தாரே.

மனமேடையில் அபி மாப்பிள்ளைத் தோரணையுடன் அமர்ந்திருக்க பச்சை வண்ணப் பட்டுப் புடவை அணிந்து மணமேடைக்கு வந்தாள் பவித்ரா. அவளை நிமிர்ந்து பார்த்தவனுக்கு கஷ்டமாக இருந்தது. கூடவே ஒரு நிம்மதியும்.

அவன் அருகே வந்து அமர்ந்தவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவள் முகத்தில் சிரிப்பு இல்லை, அதே நேரம் வெறுப்பும் இல்லை. பின் தலை குனிந்து விட்டாள். அப்போது அபியை வெறுப்பேற்ற ஐயர் தாய்மாமாவை அழைக்க ரவி மேடைக்கு வந்தான். அவனைக் கண்டதும் சுல்லென்று எரிச்சல் வந்தது அபிக்கு.

ரவியை பவிக்கு மாலையை போடச் சொன்னவர் கிருஷ்ணனை அபிக்கு போடச் சொன்னார். முதலில் அவனுக்கு கிருஷ்ணன் போட ரவி அவன் காதருகே குனிந்து “நீ என்ன தான் பவியைக் கல்யாணம் பண்ணினாலும் அவளுக்கு சாகுற வரை தாய் மாமா நான் தான். அதை மாத்த முடியாது. இந்த உரிமையை உன்னால வாங்கவும் முடியாது”, என்று முணுமுணுத்து விட்டு அவளுக்கு மாலையை அணிவித்தான்.

முகூர்த்த நேரம் வந்ததும் ஐயர் தாலியைக் கொடுக்க அதை வாங்கிய அபி இதை கட்டவா எழுந்து சென்று விடவா என்று யோசித்தான். ஆனால் ரவி அவன் கண் முன்னால் தெரிய என்ன ஆனாலும் இவனுக்கு மட்டும் பவியைக் கொடுக்கவே மாட்டேன் என்ற எண்ணம் உள்ளுக்குள் எழ அவசரமாக அவள் கழுத்தில் தாலியைக் கட்டினான்.

மூன்று முடிச்சையும் அவனே போட இருவர் மனதிலும் அந்த அளவுக்கு சஞ்சலம். ஐயர் சொல் படி அவள் நெற்றியிலும் தாலியிலும் குங்குமம் வைத்தான். காலில் மெட்டி அணிவித்தான். ஐயர் சொன்ன சடங்குகளை எந்த உணர்வுகளையும் காட்டாமல் செய்து முடித்தார்கள் இருவரும்.

இது வரை அவளுக்கு நல்ல நண்பனாய் வழிகாட்டியாய் காவலனாய் இருந்தவன் இன்று அவளுக்கே சொந்தமான கணவனாக மாறி விட்டான். ஆனால் அதை ஏற்க தான் இருவராலும் முடிய வில்லை. தலை குனிந்து இருந்தவளின் கண்களில் இருந்து கண்ணீர்  வந்தது. அதை அபியும் பார்க்க தான் செய்தான். குற்ற உணர்வாகவும் இருந்தது. அதே நேரம் இதுவே சரி என்றும் தோன்றியது.

மண்டபத்தில் இருந்து நேராக அபி கட்டிய புது வீட்டுக்குச் சென்று விளக்கேற்றினார்கள். பின் மறுவீட்டுக்கு பவி வீட்டுக்குச் சென்றார்கள்.

மறுவீட்டுச் சடங்குகள் முடிந்து கிளம்ப வேண்டும் என்ற நிலையில் “பவி வேணும்னா எப்பவும் போல இங்கயே இருக்கட்டுமே”, என்றான் அபி.

ஆனால் கோதை உறுதியாக மறுத்து விட்டாள். “இங்க பாரு பவி, இனி அபி உன் புருஷன். இனி நீ அவன் கூட தான் இருக்கணும். இன்னும் நீ சின்ன குழந்தை இல்லை. பாத்து நடந்துக்கோ”, என்று சொல்ல பவித்ராவுக்குள் பெரும் சஞ்சலம். இத்தனை நாள் அவனை நண்பனாக நினைத்து விட்டு கணவனாக உடனே நினைக்க முடிய வில்லை.

அவள் முகத்தைக் கண்ட ரிஷி அவளை தனியே அழைத்து “இப்ப ஏன் இவ்வளவு யோசிக்கிற அம்மு? இத்தனை நாள் நம்ம வீட்ல இருந்து அவனைப் பத்தியே கவலைப் படுவ? இனி அவன் கூடவே இருந்து அவனைப் பாத்துக்கோ. போன்ல எவ்வளவு நேரம் பேசுவீங்க? அதை இனி நேர்ல பேசுங்க. அவனுக்கு பிடிச்சதை செஞ்சு போட்டு அவனை சந்தோஷப் படுத்து. வேற விஷயங்கள் எல்லாம் யோசிக்காத. அவன் புருசனா நண்பனான்னு யோசிக்கிறதை விட்டுட்டு அவன் உன்னோட அபி. அதை மட்டும் மனசுல வச்சு அவன் கூட போ”, என்று சொல்ல அது அவள் மனதில் தெளிவாக பதிந்தது.

“அதானே இனி அபி கூடவே இருக்கலாம். அவன் கூட இருக்க எனக்கு என்ன பயம்?”, என்று எண்ணிக் கொண்டவள் அதற்கு பின் சந்தோசமாகவே அவனுடன் சென்றாள்.

ஆனால் அவளுக்கு இருந்த தெளிவு அவனுக்கு இருக்க வேண்டுமே? இத்தனை நாள் அவள் தோழி, இனி மனைவி என்று அவனுக்கு ஆழப் பதிந்திருந்தது. இன்று அவர்களுக்கு திருமணம், அதை விட இன்று முதலிரவு. “இனி பவித்ராவுடன் எப்படி பழக வேண்டும். அவ என் கூட ஒரே ரூம்ல இருப்பாளா? இல்லை வேற ரூம்லயா?”, என்று பல சிந்தனைகள் அவனை சஞ்சலப் படுத்தியது.

பவி அவனை நண்பனாக மற்றும் மனதில் நிறுத்தி அவன் வீட்டுக்குச் சென்றாள் என்றால் அவனோ இனி பவித்ரா என் மனைவி என்ற எண்ணத்தோடு வீட்டுக்குள் அடி எடுத்து வைத்தான்.

பவித்ராவின் சொந்தங்கள் அனைவரும் கிளம்பிச் செல்லும் வரைக்கும் சாதாரணமாக தான் இருந்தது. அவர்கள் போனதும் இவர்கள் மட்டும் தனியே இருக்க ஒரு வித மௌனம் சூழ்ந்தது.

“இப்ப நீ நிம்மதியா இருக்கியா அபி?”, என்று கேட்டு அந்த மௌனத்தைக் கலைத்தாள் பவித்ரா.

“ஆமா, ஆனா உன்னைக் கஷ்டப் படுத்திட்டேனோ?”

“அதெல்லாம் இல்லை டா, சரி எனக்கு இந்த சேலை வசதியா இல்லை. நான் மாத்திக்கிறேன். அப்புறம் நான் இந்த ரூம் எடுத்துக்குறேன். இங்க தான் காத்து நல்லா வரும். உனக்கு தூக்கம் வந்தா தூங்கு டா. ரொம்ப டயர்டா தெரியுற?”, என்று சாதாரணமாக பேசியவள் அந்த அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

அபி தான் போகும் அவளையே பார்த்த படி அமர்ந்திருந்தான். அவள் இயல்பாக இருந்தாள். அவனுக்கு தான் அப்படி இருக்க முடிய வில்லை. ஏதோ ஒரு தடுமாற்றம்.

அறைக்குள் சென்றவள் குளித்து உடைமாற்றி தூங்கி விட அவன் தான் தூங்க முடியாமல் தவித்தான். அடுத்த நாள் அவன் எழுந்து கிளம்பி வரும் போது பவித்ரா காலை உணவை முடித்திருந்தாள்.

“குட்மார்னிங்க் அபி, நானும் லேட்டா தான் டா எந்திச்சேன். அதனால உனக்கு பிடிச்ச சேமியா மட்டும் தான் செஞ்சேன். வா சாப்பிடலாம்”, என்று இயல்பாக அழைக்க தயக்கத்துடனே வந்து அமர்ந்தான். அவள் பேசிய படியே உண்ண அவன் தான் அவள் முகம் பார்க்காமலே உண்டு முடித்தான்.

ஏதோ ஒரு தடுமாற்றம், ஏதோ ஒரு குற்ற உணர்வு அவனை ஆட்கொண்டது.  உணவு உண்டு முடிந்ததும் “கிளம்பலாமா டா?”, என்று கேட்டாள்.

“எங்க?”

“எங்க வீட்டுக்கு தான். இன்னைக்கு நான்வெஜ் விருந்து”, என்று நாக்கை சப்பு கொட்டினாள். அவளுடன் தனியே இந்த நாளைக் கழிக்க தெம்பில்லாதவன் உடனே சரி என்று சொன்னான்.

இருவரும் கிளம்பி அவள் வீட்டுக்குச் செல்ல ரிஷியும் ரவியும் அவர்களை வாசலிலே வரவேற்றார்கள். பவித்ரா ஆர்வமாக உள்ளே செல்ல ரிஷி அவளிடம் பேசிய படியே உள்ளே சென்றான் அபி. ஏனோ இது வரை இல்லாத தயக்கமும் குற்ற உணர்வும் அவனை ஆட்கொண்டது. அபி தயக்கத்துடன் உள்ளே வர “வாங்க மாப்பிள்ளை”, என்று நக்கலாக வரவேற்றான் ரவி.

“இனி இது என் வீடு. நீ வரவேற்கணும்னு அவசியம் இல்லை. ஆமா உனக்கு எல்லாம் வீடுன்னு ஒண்ணு கிடையவே கிடையாதா? எப்பவும் இங்கயே இருக்க?”, என்று எரிச்சலுடன் கேட்டான் அபி.

“ஆகான்,  நான் இருக்குறதுல உனக்கு எங்க எரியுதாம்? ஆமா உன் முகத்துல மாப்பிள்ளை களையே இல்லையே? ஏன்? என்ன டா தப்பு பண்ணிட்டோமேன்னு தோனுதா?”

“நான் ஒரு தப்பும் பண்ணலை. எனக்கு ஏன் அப்படித் தோணனும்?”

“அப்படியா? அப்படின்னா பவித்ராவை உன்னால சந்தோஷமா வச்சிக்க முடியுமா?”

“முடியுமே”

“கண்டிப்பா முடியாது. உன்னால அவளை நெருங்க கூட முடியாது. அவ வாழ்க்கையை கெடுத்துட்டன்னு மட்டும் என்னால தெளிவா சொல்ல முடியும். ஒரு கணவனா உன்னால அவளை நெருங்கவே முடியாது. சீக்கிரம் உன் வாழ்க்கையை சரி பண்ணப் பாரு”, என்று அவனுக்கு உண்மையிலே அறிவுரை தான் சொன்னான் ரவி.

ஆனால் அதை அபிமன்யு புரிந்து கொண்டது தன்னால் பவி வாழ்க்கை வீணாகி விட்டது என்று தான். வேறு யாரையும் திருமணம் செய்திருந்தால் பவித்ரா தனியறையில் தங்கி இருக்க மாட்டாளே, அவள் கணவனுடன் முதலிரவு கொண்டாடிவிட்டு சந்தோஷமாக பிறந்த வீட்டுக்கு வந்திருப்பாளே? உண்மையிலே ரவி சொன்னது போல ஒரு கணவனாக எப்படி அபியால் அவளை நெருங்க முடியும்? என்று தான் அவன் எண்ணம் ஓடியது.

Advertisement