Advertisement

அந்த கவலையில் அவன் இருக்க “விடு டா இது இல்லைன்னா இன்னொரு புராஜெக்ட் வரும்”, என்று சமாதானம் சொன்னாள்.

“தேங்க்ஸ் பவி நீயில்லைன்னா என்னால இதுல இருந்து மீண்டு இருக்க முடியாது”

“எனக்கு நீ நன்றி சொல்லுவியா டா? எனக்கு என்ன ஆனாலும் என் பக்கம் நீ நிக்கும் போது என்னால எப்படி உன்னை தனியா விட முடியும்? அது மட்டுமில்லாம நான் மட்டும் எதுவும் செய்யலை. அண்ணா தான் என் கூடவே இருந்து எனக்கு நிறைய உதவி பண்ணினான்”, என்று உரிமையுடன் மிரட்ட நெகிழ்ந்து போனான் அவளது அன்பில்.

இது வரை அவள் கொடுத்த தைரியமும் நம்பிக்கையும் தான் அவனை இந்த நிலைக்கு உயர்த்தியது. அவன் தயங்கி தடுமாறும் போதெல்லாம் உன்னால முடியும், நான் உன் கூட இருக்கிறேன் என்று சொல்லி சொல்லியே அவனை ஊக்கப் படுத்தினாள். இப்போதும் அதையே சொல்ல அவள் அன்பில் பிரமித்து தான் போனான்.

அவன் தளர்வாக இருக்கையில் அமர அவன் அருகே வந்தவள் அவன் தலை கோதியவாறே “ஏன் அபி இப்படி எல்லாம் நடக்குது?”, என்று கேட்டாள்.

“எல்லாம் எங்க அம்மா தான்”

“அவங்க ஏன் இப்படி பண்ணுறாங்க? நான் வேணும்னா உங்க அம்மா கிட்ட பேசவா?”

“இதை விடு பவி, நான் பாத்துக்குறேன்”, என்றவன் அவளை அவன் வாழ்வை விட்டு விரட்ட தான் அருந்ததி அப்படி செய்கிறாள் என்று சொல்ல வில்லை. அப்படிச் சொன்னால் பவித்ராவே அவனை விட்டு விலகி விடுவாளோ என்ற பயம் அவனுக்கு. என்ன ஆனாலும் அவனால் அவளை விட்டு விலகி இருக்க முடியாது என்பதால் தானே இந்த திருமண முடிவுக்கே சம்மதம் சொன்னான். அதற்கு பிறகும் இது தவறோ என்று யோசித்து கிருஷ்ணனிடம் கேட்டான். அவர் உறுதியாக திருமணம் நடந்தே ஆக வேண்டும் என்று சொன்ன பிறகு தான் சரி என்றான்.

அவருக்கு அபியால் மட்டுமே பவித்ராவை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை. அதனால் தான் பிடிவாதமாக சொன்னார்.

ஒரு வழியாக திருமண நாளும் வந்தது. ரிஜிஸ்டர் ஆபீஸில் இருவரின் திருமணமும் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்தது. மாலை மட்டும் மாற்றினார்கள். தாலி கட்ட வில்லை. அங்கு ரவி வெறும் பார்வையாளன் மட்டுமே. பவித்ரா மற்றும் அபி இருவரும் அமைதியாக இருந்தார்களே தவிர அவர்கள் முகத்தில் எந்த மகிழ்ச்சியும் இல்லை.

திருமணம் முடிந்ததும் அவளை அவளது வீட்டில் விட்டுவிட்டு உடனடியாக ஊருக்கு கிளம்பினான். வீட்டுக்குச் சென்ற அபிமன்யுவைக் கண்டதும் “அபிண்ணா”, என்றாள் சஞ்சனா.

“எப்படி இருக்க சஞ்சு?”

“நல்லா இருக்கேண்ணா”

“உன் அம்மா அப்பாவைக் கூப்பிடு. கொஞ்சம் பேசணும்”

“அண்ணா”

“கூப்பிடு சஞ்சு”, என்று சொல்ல அருந்ததியும் ஜீவானந்தமும் அங்கே வந்தார்கள். சஞ்சனா உள்ளே செல்ல அவன் பெற்றவர்களைப் பார்த்தான். வடிவு குடும்பம் வெளியே சென்றிருந்தது.

“அபி, வாப்பா”, என்ற படி அருந்ததி அவன் அருகில் வர “அங்கேயே நில்லுங்க”, என்றான்.

“அபி”, என்று அருந்ததி அழைக்க ஜீவானந்தம் பார்வையாளர் மட்டுமே.

“மூச், நான் மட்டும் தான் பேசுவேன். உங்களுக்கு நான் என்ன பாவம் பண்ணுனேன்? ஏன் என்னை இப்படி சுத்தி சுத்தி அடிக்கிறீங்க? நான் உண்டு என் வேலை உண்டுன்னு நிம்மதியா தானே இருந்தேன், ஆனா நீங்க என்னை வாழ விட மாட்டீங்க அப்படி தானே?”

“அபி நாங்க”

“பேசாதீங்க. எங்கயாவது பெத்த பையனை வேவு பாக்க ஆள் வைப்பாங்களா? அதையும் செஞ்சீங்க? அதை விட பவித்ரா. அவ உங்களுக்கு என்ன பண்ணினா? அவளை அத்தனை தடவை கொல்ல ஆள் அனுப்புறீங்க? அதை விட எங்க மானத்தை…”

“அபி நாங்க சொல்றதை கேளு”

“உங்க கதையை கேக்க நான் இங்க வரலை. நான் என் முடிவைச் சொல்ல தான் வந்தேன். இது வரை நீங்க பண்ணினதை நான் பொறுத்துகிட்டேன். இனி பொறுக்க மாட்டேன். ஏன்னா பவித்ரா என்னோட மனைவி”

“என்னது?”

“யெஸ் எங்களுக்கு இன்னைக்கு கல்யாணம் ஆகிருச்சு. இனி அவ மேல ஒரு துரும்பு பட்டுச்சு என்னை வேற அபியா தான் பாப்பீங்க. நான் கமிஷ்னர் கிட்ட மதியமே கம்ப்லைண்ட் பண்ணிட்டேன். என்னோட மனைவிக்கு என் குடும்பத்தால ஆபத்து இருக்கு. அவளுக்கு ஏதாவது ஆனா அதுக்கு என் குடும்பம் தான் காரணம்னு எழுதி கொடுத்துட்டேன். இனியாவது என்னை நிம்மதியா வாழ விடுவீங்கன்னு நம்புறேன்”, என்று சொல்லி விட்டு அவன் நிற்காமல் செல்ல தளர்ந்து போய் அமர்ந்தாள் அருந்ததி.

அவள் தோள் மேல் கை வைத்த ஜீவானந்தம் “என்னால தானே இதெல்லாம்?”, என்று கவலையாக கேட்டார்.

“உங்களை மட்டும் பழி சொன்னா அது தப்பு அத்தான். என் மேலயும் தப்பு இருக்கு. நாம செஞ்ச தப்பு நாம சாகுற வரைக்கும் துரத்தும் போல? நான் ஆபியை வேவு பாக்க ஆள் அனுப்பினது உண்மை தான். ஆனா கொலை எல்லாம் பண்ணச் சொல்லலை. அதுக்காக என் கிட்ட சொல்லாம கூட கல்யாணம் பண்ணிப்பானா?”

“அபி நம்ம கையை விட்டுப் போய் ரொம்ப நாள் ஆச்சு அருந்ததி. உன் பேரைச் சொல்லி யாரோ உங்க ரெண்டு பேருக்குள்ள விளையாடுறாங்க. அவங்களை கண்டு பிடிச்சு இதை சரி பண்ணு. இனி அபியை அப்படியே விட்டுரு. அவன் வாழ்க்கையை அவன் வாழட்டும். நீ இறுக்கி பிடிக்க நினைக்க நினைக்க அவன் உன்னை விட்டு விலகித் தான் போவான்”

“எங்க ரெண்டு பேருக்குள்ள விளையாடுறது யாரா இருக்கும்?”, என்று எண்ணியவள் “ஒரு நிமிஷம் இருங்க”, என்று சொல்லிவிட்டு வடிவை போனில் அழைத்தாள்.

“என்னங்க அண்ணி? இங்க இன்னும் விழா முடியலை. நாங்க எல்லாரும் நைட் எங்க மாமியார் வீட்டுக்கு போயிட்டு நாளைக்கு தான் வருவோம்”

“நான் அதைப் பத்தி கேக்க கூப்பிடலை வடிவு. அபி கூட இருக்குற பொண்ணைக் கொல்ல ஆள் அனுப்பினியா? அதுவும் என் பேரைச் சொல்லி”

“அது… ஆன்…. இல்லையே?”

“எனக்கு தேவை உண்மை வடிவு”

“அந்த பொண்ணு தப்பான பொண்ணுன்னு…”

“உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? ஒரு பொண்ணை கொல்லுற அளவுக்கு போவியா. நீ செஞ்ச வேலையால இப்ப என்ன நடந்துருக்கு தெரியுமா? அபி அந்த பொண்ணைக் கல்யாணமே பண்ணிக்கிட்டான்”

“என்னது”

“ஆமா, அது மட்டுமில்லாம அந்த பொண்ணுக்கு இனி ஏதாவது கீறல் விழுந்தா கூட நம்ம எல்லாரும் தான் காரணம்னு எழுதி கமிஸ்னர் கிட்ட கொடுத்துட்டான். இனி நீ ஏதாவது பண்ணின நீ தான் செஞ்சன்னு நான் சொல்லிருவேன். அதுக்கப்புறம் வரதை நீயே அனுபவிச்சிக்கோ”

“அண்ணி இனி செய்ய மாட்டேன்”

“இனி அபி நமக்கு இல்லை. அவன் அவனோட பொண்டாட்டி கூட நிம்மதியா இருக்கட்டும். நாம இடையில எந்த குழப்பமும் பண்ண வேண்டாம். அப்புறம் நீ இனி இங்க வர வேண்டாம்”

“அண்ணி”

“உன் மாமியார் அங்க தனியா இருக்காங்க. உன் புருஷன் அங்கயும் இங்கயும் அலஞ்சு அல்லல் படுறார். இப்ப நீ அங்க இருக்கணும். அது மட்டுமில்லாம ரோஹினிக்கு கல்யாண வயசு வந்துருச்சு. பொண்ணு பாக்க வரவங்க உங்க வீட்டுக்கு வந்தா தான் மரியாதையா இருக்கும். அண்ணன் வீட்ல இருந்தா அது மரியாதையா இருக்காது. ராதாவுக்கு காலேஜ் போக இங்க இருந்து தான் வசதி. அவ எப்பவும் போல சஞ்சு கூட போயிட்டு வரட்டும். அவளை மட்டும் இங்க கொண்டு வந்து விட்டுட்டு உங்க திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு போயிருங்க”, என்று சொல்ல வேறு வழி இல்லாமல் பொருமலோடு சரி என்று சொன்னாள்.

காதல் தொடரும்….

Advertisement