Advertisement

“என்ன மா சொல்லுங்க”

“வர பதினஞ்சாம் தேதி உனக்கும் அபிக்கும் ரிஜிஸ்டர் ஆபீஸ்ல கல்யாணம். அடுத்த பத்து நாள் கழிச்சு கொஞ்சம் கிராண்டா கல்யாணம்”, என்றார் கிருஷ்ணன்.

“என்னது?”, என்று அதிர்ந்து போனாள்.

“ஆமா டா, உனக்கும் அபிக்கும் கல்யாணம் செஞ்சி வைக்கப் போறோம்”, என்றார் மணியம்மை.

“உங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? என்ன பேசுறீங்கன்னு தெரிஞ்சு தான் பேசுறீங்களா?, என்று கடுப்புடன் கேட்டாள். அபி அவளை நிமிர்ந்து பார்க்கவே இல்லை. ஆனால் ரவி அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

தன்னுடைய தந்தையின் ஏற்பாட்டைக் கண்டு பவித்ராவுக்கு மனம் உலைகளமாக கொதித்தது. என்ன இப்படி செய்து விட்டார்கள் என்று வலியுடன் அபியைப் பார்த்தாள். அவன் முகமோ பாறை போல இறுகி இருந்தது.

“சாரி அபி, அப்பா அம்மா இப்படி பேசுவாங்கன்னு நான் எதிர் பார்க்கலை”, என்றாள் பவித்ரா.

“இதை ஆரம்பிச்சு வச்சது நான். அவங்க இல்லை. நான் கேட்டதுக்கு அவங்க சரின்னு சொல்லிருக்காங்க”, என்று எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னான் அபி.

“என்ன?”, என்று அதிர்வுடன் அவள் அவனைப் பார்க்க “ம்ம் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு கேட்டது நான்”, என்றான் அமைதியாக.

“ஏன் டா இப்படி?”, என்று அவள் கேட்க வேதனையாக அவளை நிமிர்ந்து பார்த்தான். அவன் வேதனை அவளை அதிகம் பாதிக்க அடுத்து எதுவும் கேட்க முடிய வில்லை. உடை கலைந்து உடல் தளர்ந்து முகம் முழுக்க விரக்தியில் இருந்தவனின் நிலையை அவளால் கண் கொண்டு பார்க்க முடிய வில்லை,

“உனக்கு என்ன டா ஆச்சு? எதனால இவ்வளவு கஷ்டப் படுற? என் கிட்ட சொல்லக் கூடாதா?”, என்று ஆதங்கத்துடன் கேட்க அவன் பதிலே சொல்ல வில்லை. உன்னால் தான் உனக்காக தான் உன் உயிரைக் காப்பாற்ற தான் உன் மானத்தைக் காப்பாற்ற தான் போராடுகிறேன் என்று அவன் எப்படி சொல்லுவான்? அப்படிச் சொன்னால் அவளே உன் நிம்மதிக்காக செத்து போவேன் என்று கூட சொல்வாளே?

“சாரி பவி எனக்கு வேற வழி தெரியலை. ஆனா இது நடக்கணும்”, என்று சொன்னவன் கண்கள் கண்ணீரை பொழிந்தது. ஏனோ ரவியை வென்ற கர்வம் இருந்தாலும் பவித்ராவை காயப் படுத்தும் வலி அவனைக் கொன்றது.

ஆனால் ஒரு நொடி கூட அவளால் அவனது கண்ணீரைப் பார்க்க முடிய வில்லை. “நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா நீ நிம்மதியா இருப்பியா அபி?”, என்று கேட்டாள்.

“ம்ம்”

“அப்ப பண்ணிக்கலாம்”, என்று பவித்ரா சொல்ல இப்போது அதிர்ந்து போய் அவளைப் பார்த்தான். அவன் மட்டும் அல்ல அங்கிருந்த அனைவருமே திகைத்து போனார்கள்.

“பவி“, என்று அபிமன்யு அதிர்வுடன் அழைக்க “எதுவும் பேச வேண்டாம் அபி. நீ இப்படி யோசிச்சிருக்கேன்னா அதுக்கு ஒரு காரணம் இருக்கணும். கல்யாணம் பண்ணிக்கலாம். ஆனா வேற எதையும் பேச வேண்டாம். எனக்கு கொஞ்சம் அமைதி தேவை என் மனசுக்கு மட்டும் இல்லை. உனக்கும். ரொம்ப ரெஸ்ட்லெசா தெரியுற. போய் தூங்கு”, என்று அவனிடம் சொன்னவள் “அப்பா, எல்லா ஏற்பாடும் பண்ணுங்க. அம்மா அபியை சாப்பிட வச்சு அனுப்புங்க. அண்ணா எனக்கு காலேஜ்க்கு லீவ் சொல்லிரு”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டாள்.

அவளது பதிலையும் தெளிவான பேச்சையும் யாருமே எதிர் பார்க்க வில்லை. அனைவரும் ஒரு மாதிரி அசைவற்று நிற்க “அம்மா வா போகலாம். எனக்கு வேலை இருக்கு. வரோம் மாமா வரோம் அக்கா”, என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டான் ரவி. அதற்கு மேல் அவனால் அங்கே நிற்க முடிய வில்லை., அவனுக்கு தனிமை தேவை பட்டது.

காரில் போகும் போது “ரவி”, என்று அழைத்தார் மணியம்மை.

“வேண்டாம் மா, இப்ப எதுவுமே பேச வேண்டாம். யாருக்கு யாருன்னு கடவுள் முடிச்சு போட்டு வச்சிருப்பார். நானே என்னை தேத்திப்பேன்”, என்று சொன்ன மகனை வேதனையாக பார்க்க மட்டுமே மணியம்மையால் முடிந்தது. ஆனாலும் அவருக்கு அபிக்கும் பவித்ராவுக்கும் திருமணம் செய்து வைப்பதில் சந்தோஷம் தான்.  ஏனென்றால் அந்த அளவுக்கு அபிமன்யு நல்லவன் என்று அவருக்கு தெரியுமே.

இங்கே பவித்ரா வீட்டில் அவள் உள்ளே சென்றதும் அபி வேதனையில் அமர்ந்திருக்க “இப்ப எதுக்கு எல்லாரும் டல்லா உக்காந்துருக்கீங்க? நல்ல விஷயம் தானே பேசிருக்கோம்? பவிக்கு அபியை விட நல்ல பையன் கிடைப்பானா?”, என்று கேட்டான் ரிஷி.

“அபியை விட நல்ல பையன் கிடைக்காது தான். ஆனா அவ ரொம்ப கவலையா போறாளே டா. அபியும் இப்படி உக்காந்துருக்கான். இவங்களுக்குள்ள எப்படி ஒத்துப் போகும்?”, என்று கேட்டாள் கோதை.

“அவங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சி வச்சிருக்காங்க. அந்த புரிதல் அவங்களை ஒண்ணு சேக்கும். பவி கிட்ட இப்ப வேற மாப்பிள்ளை சொல்லி இருந்தாலும் அவ அப்படி தான் மா இருப்பா. சரியாகிருவா”, என்ற ரிஷி அனைவரையும் சாப்பிட அழைத்துச் சென்றான்.

வேண்டா வெறுப்பாக உணவை உண்ட அபிக்கு அவளை பார்க்காமல் கிளம்ப மனதில்லை. “பவி கிட்ட சொல்லிட்டு கிளம்புறேன் ஆண்ட்டி”, என்று சொல்லி விட்டு அவள் அறைக்கு சென்றான்.

  கட்டிலில் சாய்ந்து கண்களை மூடி அவள் அமர்ந்திருக்க அவளை நெருங்கியவன் “பவி”, என்ற படியே அவள் அருகே அமர்ந்தான். கண்களை திறந்தவள் உடைந்த மனதுடன் அவன் தோள் மீது சாய்ந்தாள்.

“கஷ்டமா இருக்கா பவி?”, என்று கேட்டவனின் கைகள் ஆறுதலாக அவளை அணைத்துக் கொண்டது.

“குழப்பமா இருக்கு டா”

“நான் வேற ஐடியா யோசிக்கவா?”

“யோசிக்காம நீ இந்த முடிவுக்கு வந்திருக்க மாட்ட. ஆனா அக்சப்ட் பண்ணிக்க கஷ்டமா இருக்கு”

“என் மேல நம்பிக்கை இல்லையா பவி?

“உன்னை நம்பாம நான் யாரை நம்ப போறேன் அபி? ஆனா ஏன்?”

“இப்போதைக்கு சொல்ல முடியாது டி”

“சரி விடு”

“நான் கிளம்பட்டுமா?”

“ம்‌ம்”

“பவி, நான் ஒண்ணு கேக்கட்டுமா?”

“என்ன டா?”

“ஏன் டா இவன் நம்ம வாழ்க்கைல வந்தான்? ஏன் டா இவன் நட்பை ஏத்துகிட்டோம்னு இருக்கா?”, என்று கவலையாக கேட்டான்.

“அப்படி நினைச்சா அடுத்த செகண்ட் என்னோட உயிர் என் உடம்புல இருக்காது”, என்று சொல்ல அவசரமாக அவளை நெருங்கி அமர்ந்தவன் “இப்படியா பேசுவ லூசு”, என்று கேட்டு கொண்டே அவள் வாயை மூடினான்.

“நான் பேசுறது கஷ்டமா இருந்தா நீயும் இப்படி பேசாத அபி”, என்று  சொல்ல தலையசைத்து விட்டு சென்று விட்டான்.

அனைவரும் திருமண வேலைகளில் மூழ்கி இருக்க பவித்ரா அரை மனதாக திருமணத்துக்கு தயாரானாள். அபியும் குழப்பத்திலே இருந்தான். ஆனால் திருமண விவரத்தை சீக்ரட்டாக வைத்திருந்தான். இந்த திருமணம் சரியா தவறா என்ற குழப்பம் அவனுக்கு இருந்தாலும் ரவியை மட்டும் மிதப்பான பார்வையே பார்த்தான்.

அப்போது அடுத்த பிரச்சனையாக அவனுக்கு கிடைத்த ஒரு கவர்ன்மெண்ட் காண்ட்ராக்டில் ஒரு தடங்கல் வந்தது. அவன் பயன் படுத்தும் பொருள்கள் தரமற்றவை என கம்ப்லைண்ட் போயிருக்க உடனடியாக அதை விசாரிக்க வந்த அதிகாரிகள் அவன் இனி பில்டிங்கே கட்ட கூடாது என்று சொல்ல அதிர்ந்து தான் போனான்.

அதுவும் அந்த கம்ப்லைண்ட் அருந்ததி பெயரில் போயிருக்க அவனுக்கு என்ன செய்ய என்று கூட தெரிய வில்லை

.

அவனைக் காண வந்த பவித்ரா அவனுக்காக அலைந்து திரிந்து அவன் மேல் தவறு இல்லை என்று நிரூபித்து அவன் இது வரை காட்டிய எல்லா பில்டிங்கையும் சர்வே எடுத்து அந்த கவர்ன்மெண்ட் ஆபீசருக்கு இரண்டு நாளில் தகவல் கொடுத்தாள். அதற்கு பிறகு தான் அவனால் அதில் மூச்சு விட முடிந்தது. அப்படி இருந்தும் அந்த புராஜெக்ட் அவன் கையை விட்டுச் சென்று விட்டது.

Advertisement