Advertisement

அத்தியாயம் 10 

புது அகராதி படைக்க 

வேண்டும் உந்தன் விழிமொழி

புரிந்து கொள்ள!!!

தூக்க கலக்கத்தில் கதவை திறந்த அபி அங்கே நின்ற ரிஷியைக் கண்டு திகைத்துப் போனான். அதுவும் அவன் முகம் ஒரு மாதிரி இருக்க “ரிஷி, என்ன டா இவ்வளவு காலைலே இங்க வந்திருக்க? அதுவும் முகம் ஒரு மாதிரி இருக்குது? என்ன ஆச்சு?”, என்று கேட்டான்.

“உள்ள போய் பேசலாம்”, என்று சொன்னவன் உள்ளே செல்ல அபியும் அவன் பின்னே சென்றான். இருவரும் சோபாவில் அமர்ந்தார்கள். ரிஷி முகம் கலங்கிப் போய் இருக்க “என்ன ஆச்சு ரிஷி, ஏதாவது பிரச்சனையா?”, என்று கேட்டான் அபிமன்யு.

“ம்ம்‌ம்‌”

“என்ன ஆச்சு டா? யாருக்கும் உடம்பு சரி இல்லையா? பவி ஓகே தானே?”

“பவிக்கு தான் பிரச்சனை”

“பவிக்கா? என்ன சொல்ற?”, என்று பதட்டமாக கேட்டான்.

“இதைப் பாரு”, என்று சொன்னவன் தன்னுடைய போனை அவனிடம் நீட்டினான்.

குழப்பத்துடன் அதைப் பார்த்தவன் அதிர்ந்து தான் போனான். தவறான இணையதளத்தில் அபி மற்றும் பவித்ராவின் முகம் போல மார்பிங் செய்யப் பட்ட வீடியோ அதில் ஓடிக் கொண்டிருந்தது. அதைக் கண்டு அதிர்ந்து போனை கீழே போட்ட அபி கலங்கிய கண்களுடன் அவனை ஏறிட்டான்.

`“எந்த பொறுக்கி நாயோ மார்பிங் பண்ணி இருக்கு அபி. என் ஃபிரண்ட் தான் இதை எனக்கு சொன்னான். அப்லோட் ஆகி ரெண்டு மணி நேரம் தான் ஆகி இருக்கு. எனக்கு என்ன செய்யன்னு தெரியலை டா. வீட்ல யாருக்கும் தெரியாது. என்ன டா பண்ண?”, என்று கேட்டான் ரிஷி.

“ஒரு நிமிஷம் இரு”, என்றவன் உடனே அழைத்தது ஏ.சி.பி அகத்தியனை தான். சென்னைக்கு வந்த புதிதில் ஒரு பார்க்கில் வைத்து அவரை ஒருவன் கொல்ல வர அவரைக் காப்பாற்றியது அபி தான். அந்த பழக்கத்தில் தான் அவர் போன் நம்பர் கொடுத்திருந்தார். அவரை வைத்து தான் பவித்ராவுக்கு இருக்கும் ஆபத்தைச் சொல்லி அதிபனை வேலைக்கு வைத்தான். இப்போதும் வேறு வழி இல்லாமல் அவருக்கு அழைத்து விட்டான்.

“சொல்லு பா அபி, எதுவும் பிரச்சனையா?”

“ஆமா சார்”, என்றவன் நடந்ததைச் சொல்ல “வெப்சைட் லிங்க் அனுப்பு பா. நான் சைபர் கிரைம்ல சொல்லி அந்த வீடியோவை டெலீட் பண்ணச் சொல்லிட்டு யார் பண்ணுனான்னு கண்டு பிடிக்கிறேன்”, என்றதும் “சரி சார்”, என்று சொல்லி போனை வைத்தான்.

“யார் பண்ணினா அபி?”, என்று கேட்டான் ரிஷி.

“தெரியலை கண்டு பிடிக்கிறேன்னு சொல்லிருக்காங்க. ஆனா எங்க வீட்ல உள்ளவங்களா தான் இருக்கும்”, என்று பல்லைக் கடித்துக் கொண்டுச் சொன்னான்.

“என்ன டா சொல்ற?”, என்று ரிஷி கேட்க இது வரை நடந்த அத்தனையும் சொன்னான் அபி. அதைக் கேட்டு ரிஷி பயந்து போனான்.

“இதெல்லாம் நிஜமா அபி? இப்படி எல்லாம் நடந்திருக்கும்னு நான் யோசிக்கவே இல்லை. பவி பாவம் டா. இப்ப என்ன பண்ண?”

“எனக்கும் தெரியலை ரிஷி, என்னால பவித்ராவுக்கு தான் நிறைய பிராப்ளம். என்னால அவளை பாதுகாக்க முடியாதோன்னு பயமா இருக்கு ரிஷி”

“நடக்குறதைப் பாத்தா எனக்கும் என்ன பண்ணன்னு தெரியலை. இதை விட பெரிய விஷயம் ஏதாவது நடந்தா என் குடும்பம் தாங்காது அபி. பவியைக் காப்பாத்தணும்”

“அதுக்கு நான் பவியை விட்டு விலகணும். பேசாம பவிக்கு.,. ர….”, ரவியை என்று சொல்ல வந்தவன் “வேற மாப்பிள்ளை பாத்து கல்யாணம் பண்ணி வச்சிறலாமா?”, என்றான். ஏனோ ரவிக்கு என்று அவனாலே சொல்ல முடிய வில்லை.

“கல்யாணம் ஈசியான விஷயம் இல்லை அபி. அப்படி பண்ணி வச்சாலும் வர மாப்பிள்ளை இந்த வீடியோவை பாக்காதவனா இருப்பான்னு என்ன கேரண்டீ?”

“அப்படின்னா என்ன பண்ண?”, என்று அபி கேட்க ஒரு நொடி யோசித்த ரிஷி “நீ பவியைக் கல்யாணம் பண்ணிக்கோ அபி“, என்றான் தீர்க்கமாக.

“ரிஷி”, என்று அவன் அதிர்வாக அழைக்க “தெரியும் நீங்க ரெண்டு பேரும் பிரண்ட்ஸ்ன்னு. ஆனா நடக்குற விஷயம் நாம எதிர் பார்க்குற மாதிரி சின்ன விஷயம் இல்லை. அவளை பாதுகாத்து பிரச்சனைல இருந்து விலக்கணும்னா அது உன்னால மட்டும் தான் முடியும். வேற யார் மாப்பிள்ளையா வந்தாலும் அவனால இந்த பிரச்சனையை சரி பண்ண முடியாது. உங்க நட்பை புரிஞ்சிக்கவும் முடியாது”, என்றான்.

“இது தப்பு டா”

“தப்பு சரி பாக்குற நிலைமைல நாம ஒண்ணும் இல்லை அபி. நிலைமை கை மீறி போய்க்கிட்டு இருக்கு. நாளைக்கும் ஒரு வீடியோ வராதுன்னு யாரால சொல்ல முடியும்? உன் குடும்பத்தை அடக்கணும்னா அது உன்னால தான் முடியும். அதை விட பவி உன் பொண்டாட்டியா இருந்தா தான் அவங்க எதுவும் செய்ய மாட்டாங்க. வா அப்பா கிட்ட வந்து பேசு”

“அங்கிள் என்னை தப்பா நினைப்பாங்க”

“நினைக்க மாட்டாங்க. நடந்த எல்லாத்தையும் சொல்லலாம். நான் உன் கூட இருக்கேன்”

“பவி என்னை என்ன நினைப்பா?”

“அவ உன்னைப் புரிஞ்சிக்குவா”, என்று சொல்ல அபிக்கும் வேற வழி தெரிய வில்லை.

வீட்டுக்குச் சென்றதும் கிருஷ்ணனிடம் பேசவே அவனுக்கு வார்த்தை வரவில்லை. அவன் தயக்கத்துடன் அவரைப் பார்க்க “என்னப்பா அபி வேலை எல்லாம் எப்படி போகுது?”, என்று கேட்டார்.

“நல்லா போகுது அங்கிள்”, என்று அவன் சொல்ல “அப்பா அவன் முக்கியமான விஷயமா பேச வந்துருக்கான்”, என்றான் ரிஷி.

“என்ன அபி? என் கிட்ட என்ன தயக்கம்?”

“எனக்கு பவித்ராவைக் கல்யாணம் செஞ்சு கொடுப்பீங்களா அங்கிள்?”, என்று கேட்க அதிர்ந்து போனார். அவர் அதிர்ச்சியில் விழிக்க “நமக்கு அதை விட்டா வேற வழி இல்லை பா. நிலைமை கையை மீறி போய்க்கிட்டு இருக்கு”, என்று ஆரம்பித்த ரிஷி நடந்ததைச் சொல்ல மேலும் அதிர்ந்து போனார்.

எல்லாவற்றையும் கேட்டு மனதில் அலசி ஆராய்ந்து “உடனே கல்யாணம் வச்சிக்கலாம்”, என்று சொன்னவர் கோதையிடம் சொல்ல அவரும் அதிர்ந்து தான் போனார். அதற்கு பின் இருவரும் மணியம்மையையும் ரவியையும் வரச் சொல்ல இருவரும் உடனே வந்து விட்டார்கள்.

அவர்கள் வந்ததும் அபி பவி திருமண விஷயத்தைப் பற்றிச் சொல்ல மணியம்மை அதிர்ந்து மகனைப் பார்த்தார். அவன் எதுவும் சொல்ல வேண்டாம் என்னும் விதமாய் தலையசைக்க அவரும் ஊமையாகிப் போனார். ஆனால் ரவி அபியை எரிப்பது போல பார்த்தான். அதற்கு திமிரான பார்வையையே அபி பார்த்து வைத்தான். இருவருக்கும் இடையே ஒரு மௌன யுத்தம் நடந்தது.

“அபி நல்ல பையன். அவனுக்கு பவித்ராவைக் கொடுக்க எனக்கு சம்மதம்”, என்று மணியம்மை சொல்ல அதற்கு பின் யாருக்கும் எந்த நெருடலும் இல்லை.

ஆனால் பவித்ராவிடம் எப்படிச் சொல்ல என்று தான் யோசனையாக இருந்தது. ரவிக்கு கூட ஒரு சின்ன எதிர் பார்ப்பு இருந்தது. “அபி எனக்கு நண்பன் தான். அவனுடன் திருமணம் வேண்டாம்”, என்று சொல்லுவாள் என்று எதிர் பார்த்தான்.

அப்போது அபியை அழைத்த அகத்தியன் அந்த வீடியோ இணைய தளத்தில் இருந்து நீக்கப் பட்ட தகவலைச் சொன்னார். அபி அதை மற்றவர்களிடம் சொன்னதும் அனைவருக்கும் நிம்மதியே. அந்த விஷயம் பவித்ராவுக்கு தெரியவே கூடாது என்று அபி சொல்ல அனைவரும் சரி என்று கேட்டுக் கொண்டார்கள்.

அப்போது தூங்கி எழுந்து வந்த பவி காலையிலே அனைவரும் அங்கே இருக்கவும் திகைத்துப் போனாள். “என்ன எல்லாரும் இந்நேரம் இங்க இருக்கீங்க? இன்னைக்கு லீவ் நாள் கூட கிடையாதே”, என்று கேட்டாள்.

“பவி உக்காரு, உன் கிட்ட கொஞ்சம் பேசணும்”, என்றான் ரிஷி.

“என்ன அண்ணா?”, என்று கேட்ட படி அபி அருகே அமர்ந்தவள் “அம்மா அபிக்கு காபி கொடுத்தீங்களா?”, என்று கேட்டாள்.

“பவி அது இப்ப முக்கியம் இல்லை. பேச போறது பெரிய விஷயம்”, என்றாள் கோதை.

Advertisement