Advertisement

“அபியை நம்பலைன்னா இந்த உலகத்துல வேற யாரையுமே நம்ப முடியாது மாமா. அவனுக்கு ஏதோ பிரச்சனை. அவனுக்குள்ளே போராடுறான். அவனுக்கு இந்த டைவர்ஸ் மன நிம்மதியைக் கொடுக்கும்னு தான் நான் அவனுக்கு டைவர்ஸ்க்கு சம்மதம் சொன்னேன்”

“உன் கிட்ட ஒண்ணு கேக்கட்டா? ஏற்கனவே கேட்ட கேள்வி தான்”

“என்ன மாமா?”

“அவனை லவ் பண்ணுறியா பவி?”

“தெரியலை அத்தான்”

“இதுக்கு பதில் எப்ப தெரிஞ்சிக்கப் போற? ஒரு வேளை இந்த கேள்விக்கான பதில் தெரியாம தான் இப்படி டைவர்ஸ்ல வந்து நிக்குறீங்களோ என்னவோ?”

“சே சே, அப்படி எல்லாம் இருக்காது. அவங்க வீட்ல உள்ளவங்க ஏதாவது பிரஷர் கொடுத்துருப்பாங்க”, என்ற பவித்ராவுக்கு தெரிய வில்லை அவர்கள் டைவர்ஸ்க்கு ரவி சொன்ன விஷயம் தான் காரணம் என்று.

“அதுவும் சரி தான். அவங்க வீட்ல என்ன வேணும்னாலும் செய்வாங்க. சரி என்ன வேணும்னாலும் நடக்கட்டும் டா. உனக்கு நான் இருக்கேன். நாங்க எல்லாரும் இருக்கோம்”, என்றான் ரவி உண்மையான அக்கறையோடு. அவன் சொன்ன ஆறுதல் அவளுக்கு அந்த நேரம் மிகவும் தேவையாக இருந்தது. அவனைப் பார்த்து அழகாக புன்னகைத்தாள்.

அந்த புன்னகையை கண்டு ஒரு பெருமூச்சு எழுந்தது ரவிக்குள். அதை மறைத்து கார் ஓட்டுவதில் கவனம் செலுத்தினான். அவர்கள் கோர்ட்டுக்கு போவதற்கு முன்பே அவர்களை எதிர் பார்த்த படி காருக்குள் அமர்ந்திருந்தான் அபிமன்யு.

அபிமன்யுவுக்கும் பவித்ராவுக்கும் இரண்டு வயது வித்தியாசம். அபி ஆறடிக்கும் சற்று அதிகமான உயரத்தில் இருப்பான். பறந்து விரிந்த மார்பும் இறுக்கமான தாடையும் சிரிக்க மறுக்கும் அதரங்களும் கொண்டவன். பார்த்ததும் கவர்ந்து இழுக்கும் முக அமைப்பு அவனுக்கு. அவன் சிரிப்பது பவித்ராவிடமும் அவளுடைய குடும்பத்திடமும் மட்டும் தான். இப்போது அந்த சிரிப்பும் இல்லை என்பதால் அவன் முகம் அவ்வளவு இறுக்கத்தில் இருந்தது.

டிரைவர் சீட்டில் சாய்ந்து அமர்ந்திருந்தவனின் கண்கள் தன்னவளின் வருகையை தான் எதிர் பார்த்து இருந்தது. “எப்படி இருக்காளோ தெரியலை. போன்ல பேசினாலும் அவளைப் பாத்து இருபத்தி ரெண்டு நாள் ஆச்சு?”, என்று எண்ணியவனின் மனது அவளை நினைத்ததும் ஒரு சந்தோஷம் கொண்டது.

“எப்ப டி வருவ? உனக்காக தானே சீக்கிரம் வந்து உக்காந்துருக்கேன்”, என்று எண்ணி அவன் கண்கள் சுற்றி அலசியது. கோர்ட் பரபரப்பாக இருக்க அங்கிருந்த ஜனங்கள் மத்தியில் பவித்ராவைத் தான் தேடியது அவன் கண்கள். அவளை எண்ணி மனதில் சந்தோஷம் வந்தாலும் தவறு செய்கிறோமோ என்று ஒரு சின்ன குடைச்சல் மூளைக்குள் எழுந்தது.

“அவ கிட்ட மனசு விட்டு பேசினா என்ன?”, என்று அவன் சரியாக யோசிக்கும் போது “அத்தான்”, என்ற குரல் அவனைத் தீண்டியது. பின் சீட்டில் அமர்ந்திருந்த அவனது அத்தை மகள் ரோஹினி தான் அவனை அழைத்தாள்.

அவள் குரலில் கலைந்தவன் மனைவியைப் பற்றி யோசிப்பதை விட்டுவிட்டு “சொல்லு ரோஹி”, என்றான்.

“இன்னைக்கே டைவர்ஸ் கிடைச்சிரும் தானே அத்தான்? பைனல் தீர்ப்பு வந்திரும் தானே?”, என்று எதிர்பார்ப்புடன் கேட்டாள்.

“இல்லை ரோஹி, இது தான் முதல் தடவை. இன்னும் எத்தனை வாய்தா வருதோ தெரியலை. அவ டைவர்ஸ்கு சரின்னு சைன் பண்ணிட்டா ஈஸியா கிடைச்சிரும். இல்லைன்னா அதுவும் இழுக்கும். என் பவி அப்படி பண்ண மாட்டா. ஆனா பாக்கலாம்”

“என் பவியாம்?”, என்று எரிச்சலுடன் எண்ணியவள் “சைன் பண்ணுவாளா அத்தான்? டைவர்ஸ்க்கு சம்மதம் இல்லைன்னு சொல்லிட்டா என்ன செய்ய?”, என்று கேட்டாள்.

“என் பவி சைன் பண்ணுவா. எனக்காக கண்டிப்பா பண்ணுவா. எனக்கு அவ மேல நம்பிக்கை இருக்கு”

“நல்லது மாமா. அதுக்கப்புறம் என்ன பண்ணப் போறீங்க?”

“அதுக்கப்புறமா? அதுக்கப்புறம் என்ன? புரியலை”, என்று அவன் சொன்னதும் திருமணம் பற்றி பேச வந்தவள் அது இப்போது பேசினால் சரியாக இருக்காது என்று எண்ணி “இல்லை ஊருக்கு வரப் போறீங்களா? இல்லை இனியும் இங்க தானா?”, என்று கேட்டாள்.

“கோர்ட்ல வேலை முடிஞ்சதும் உன்னை ஊருக்கு அனுப்பிட்டு நான் என் வீட்டுக்கு போயிருவேன் ரோஹி. இப்போதைக்கு ஊருக்கு வரணும்னு எண்ணம் இல்லை. என்னால இப்ப அங்க யாரையும் பாக்க முடியாது. பாக்கப் பிடிக்கவும் இல்லை”

“சரி அத்தான், அப்புறம் நான் ஒரு ரெண்டு நாள் உங்க கூட இருந்துட்டு போகட்டா? இன்னைக்கே போகணுமா?”

“அது சரி வராது ரோஹி. முன்னாடி நீ வந்தப்ப பவி வீட்ல இருந்தா. இப்ப அவளும் இல்லை. நீ ஊருக்கு கிளம்பு”

“சரி அத்தான்”

“அப்புறம் ரோஹி, இங்க நடந்த விஷயம் வீட்ல யாருக்கும் தெரியக் கூடாது. தெரிஞ்சா அவங்க ரொம்ப சந்தோஷப் படுவாங்க. நீ என்னோட ஃபிரண்ட். அதனால நான் உன்னை நம்புறேன்”

“மறைக்க வேண்டிய விஷயங்களை நான் எல்லார்க் கிட்டயும் சொல்லுவேனா அத்தான்?”, என்று அவனிடம் சொன்னவள் சொல்ல வேண்டிய ஆளுக்கு மட்டும் சொல்லுவேன் என்று மனதுக்குள் சந்தோஷமாக எண்ணிக் கொண்டாள்.

அப்போது அவனது பார்வை ஒரு திசையில் நிலை குத்தி நிற்க ரோஹினியும் அங்கே பார்த்தாள். பிரஷாக பறித்த ஆப்பிள் போல காரில் இருந்து இறங்கினாள் பவித்ரா. டிரைவர் இருக்கையில் இருந்து ரவியும் அவளுடன் இறங்கினான்.

பவித்ராவைக் கண்டதும் மலர்ந்த அபியின் முகம் ரவியைக் கண்டதும் எரிச்சல் அடைந்தது. “இவன் கூட தான் வரணுமா? வீட்ல ரெண்டு ஆம்பளைங்க இருக்காங்க தானே? இந்த ரிஷிக்கு இவளைக் கூட்டிட்டு வரதை விட வேலை முக்கியமா? இந்த ஓணான் கூட போய் வந்திருக்கா பாரு”, என்று எரிச்சலுடன் எண்ணிக் கொண்டிருந்தான் அபிமன்யு.

பவித்ரா கண்களும் அபியை தேடியது. ஆனால் அவன் அவள் கண்ணில் பட வில்லை. அந்த கோர்ட்டைக் வேதனையுடன் பார்த்த படி அவள் நிற்க “உள்ள போகலாமா?”, என்று கேட்டான் ரவி. அவனைக் கண்டு வேதனையாக சிரித்தவள் சரி என்னும் விதமாய் தலையசைத்தாள்.

“நீங்க தான் அத்தான் அவளைப் பத்தி கவலைப்படுறீங்க. ஆனா அவளைப் பாருங்க. அவன் கூட ஜோடி போட்டுட்டு வரதை. அதுவும் எந்த கவலையும் இல்லாம சிரிச்சிட்டு வாரா. அப்படின்னா நீங்க டைவர்ஸ்ன்னு முடிவு எடுத்தது நல்லது தான் போல?”, என்று ரோஹினி கேட்க “ம்ம், அவ நல்லதுக்காக தானே இந்த முடிவையே எடுத்தேன்”, என்று முணுமுணுத்தான் அபி.

அவர்கள் வக்கீலைத் தேடிச் செல்ல இவர்களும் உள்ளே செல்ல வில்லை. அவனுடைய வக்கிலிடம் இருந்து அழைப்பு வந்த பிறகு போகலாம் என்று அமர்ந்திருந்தான் ரவி.

“ஏன் அத்தான் டைவர்ஸ் கிடைச்சதும் ரவிக்கும் பவித்ராவுக்கும் கல்யாணம் முடிஞ்சிரும். நீங்களும் வேற கல்யாணம் பண்ணிப்பீங்க தானே?”, என்று கேட்டாள் ரோஹினி.

“அதைப் பத்தி எல்லாம் நான் யோசிக்கவே இல்லை ரோஹி. யோசிக்கிற மன நிலையும் எனக்கு இல்லை. ஏன் ரோஹி டைவர்ஸ் கிடைச்சதும் ரவிக்கும் பவிக்கும் கல்யாணம் முடிஞ்சிரும் தானே?”, என்று தவிப்பாக கேட்டான்.

“கண்டிப்பா முடிஞ்சிரும் மாமா. ரவி பவித்ராவை லவ் பண்ணுறான் தானே? அப்புறம் எப்படி விடுவான்? கண்டிப்பா பண்ணிப்பான்”, என்று ரோஹினி சொல்ல அது அபி மனதை பெரிதும் பாதித்தது. அவன் அவர்கள் இருவரும் திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசைப் படுகிறான் தான். ஆனால் அவர்கள் இருவரும் சேர்ந்து வந்ததே அவனுக்கு அவ்வளவு மண்டைக் குடைச்சலைக் கொடுத்தது.

மனதில் இருக்கும் குழப்பங்களை வெளியே சொன்னால் பிரச்சனை சுமுகமாக முடிந்து விடும். அப்படி இல்லை என்றால் வாழ்க்கையை காலத்தின் கையில் கொடுத்திருந்தால் அதுவே ஒரு தீர்வு கொண்டு வந்திருக்கும். ஆனால் அவனுக்கு அந்த அவகாசத்தைக் கொடுக்க கூடாது என்று எண்ணி கிளம்பி வந்திருந்த ரோஹினி பேசும் விதத்தில் பேசி இந்த அளவுக்கு கொண்டு வந்து விட்டாள். இதை பவித்ரா அறிந்தால்…..

காதல் தொடரும்…..

Advertisement