Advertisement

குளித்து கிளம்பி ஹேண்ட்பேகை எடுத்துக் கொண்டு பவித்ரா கீழே வரும் போது ரிஷி நந்தன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். கோதை அவனுக்கு பரிமாறிக் கொண்டிருந்தாள். கிருஷ்ணன் ஒரு பேண்ட் சட்டை அணிந்து கிளம்பி சோபாவில் அமர்ந்திருந்தார். அவர் முகம் இறுக்கமாக இருந்தது.

புது மலர் போல கிளம்பி வந்த மகளைக் கண்ட கோதை கலங்கிய மனதை அடக்கி “கிளம்பிட்டியா பாப்பா, வா சாப்பிடு”, என்றாள். ரிஷியும் வாய்க்கு கொண்டு சென்ற உணவை அப்படியே நிறுத்தி தங்கையைப் பார்த்தான். நேராக அண்ணன் அருகில் இருந்த சேரில் சென்று அமர்ந்தவள் “பசிக்கலை மா. ஒரு காபி மட்டும் போட்டுத் தாங்க”, என்றாள்.

மற்ற நேரமாக இருந்தால் அவள் சாப்பாடு வேண்டாம் என்று சொல்வதற்கு அதட்டி ஆர்ப்பாட்டம் பண்ணி அவளை சாப்பிட வைத்திருப்பார்கள். இப்போது அவள் மன நிலை உணர்ந்து எதுவும் சொல்ல வில்லை. காபி போடச் சென்ற அன்னையை ஒரு பார்வை பார்த்தவள் தந்தையைப் பார்த்தாள். அவரைக் கண்டதும் கண்கள் கலங்க தயாராக அதை மறைத்து அண்ணனைப் பார்த்தாள்.

அவன் அவளையே பார்க்க “சாப்பிடுண்ணா”, என்றாள். “நான் சாப்பிட்டேன் டா”, என்று சொன்ன ரிஷி கடைசியாக ஒரு இட்லியை தட்டில் எடுத்து வைத்து தக்காளி சட்னியில் தொட்டு அவள் வாயருகே நீட்டினான்.

அன்போடு ஊட்டி விடுபவனை எப்படி உதாசீனப் படுத்துவாளாம்? உடனே வாங்கிக் கொண்டாள். ஒரு இட்லியை ஊட்டி முடித்தவன் மேலும் அவளைக் கஷ்ட படுத்தாமல் எழுந்து கை கழுவச் சென்றான். அவள் அதைச் சாப்பிட்டதே அவனுக்கு போதுமானதாக இருந்தது.

அவன் கை கழுவி விட்டு வரும் போது கோதை கொடுத்த காபியை வாங்கி அருந்திக் கொண்டிருந்தாள் பவித்ரா. அவள் அருகே வந்த ரிஷி “நானும் வரட்டா அம்மு?”, என்று கேட்டான்.

“வேண்டாம் அண்ணா, நீ காலேஜ் போ. அதான் அப்பா வராங்களே. நாங்க பாத்துக்குறோம்”, என்றாள்.

“சரி டா. பாத்துக்கோ. தைரியமா இரு”, என்று சொன்னவன் அன்னை தந்தையிடம் சொல்லி விட்டு வேலைக்கு கிளம்பி விட்டான். போகும் அண்ணனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவனை எண்ணியும் கவலையாக இருந்தது.

ரிஷி நந்தனுக்கு வயது இருபத்தி ஒன்பது. அவனுக்கு பெண் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பவித்ராவின் விவகாரத்துக்கு பிறகு அவனது திருமணம் கேள்விக் குறி தான் என்று அவளுக்கு தெரியும். கூடப் பிறந்த தங்கை வாழாவெட்டியாக வீட்டில் அமர்ந்திருக்க அவனுக்கு எப்படி எளிதில் பெண் கிடைக்கும் என்று வேதனையாக இருந்தது.

அவள் காபி அருந்திக் கொண்டிருக்க அவளை வேதனையாக பார்த்தார் கிருஷ்ணன். அவரல்லவா செல்ல மகளின் இந்த நிலைக்கு காரணம்?

கொஞ்சம் பொறுமையாக இருந்திருந்தால் இப்படி அவஸ்தை பட வேண்டியது இல்லையே? அவசர அவசரமாக திருமணம் செய்து வைத்து முடிவில் அவள் வாழ்வையே கேள்விக்குறி ஆக்கிய தன்னையே நொந்து கொண்டார்.

“குட்டி மா”, என்று அழைத்தார் கிருஷ்ணன்.

“பா”

“போகலாமா டா?”

“சரி பா”, என்று சொன்னவள் அன்னையிடம் கண்களால் விடை பெற்றுக் கிளம்பினாள்.

வண்டிச் சாவியை கையில் எடுத்துக் கொண்டு கிருஷணன் முதலில் வெளியே செல்ல அப்போது கீறிச் என்ற சத்தத்துடன் வந்து நின்றது ஒரு சிவப்பு நிற கார்.

அதில் இருந்து வாட்டசாட்டமாக இறங்கினான் ரவி. அவனைக் கண்டதும் பவித்ரா முகம் மலர்ந்தது. “மாமா”, என்றாள் மலர்ந்த சிரிப்புடன்.

ரவி கோதையின் உடன் பிறந்த தம்பி தான். கோதைக்கு பதினேழு வயது இருக்கும் போது தான் ரவி பிறந்தான். அதனால் கோதைக்கு அவனும் ஒரு மகனே. அதே போல ரிஷிக்கும் பவித்ராவுக்கும் தாய் மாமாவான ரவி இன்னொரு தாய் தான்.

ரவியின் தந்தை பல வருடங்களுக்கு முன்பே காலமாகி இருக்க இப்போது அவனது அன்னை மணியம்மையுடன் அதே சென்னையில் மற்றொரு இடத்தில் வசிக்கிறான். ரிஷியை விட ரவிக்கு இரண்டு வயது அதிகம்.

ஒரு டிகிரி முடித்து விட்டு சின்னதாக டிப்பார்ட்மெண்ட்டல் ஸ்டோர் ஆரம்பித்தவன் அதை இப்போது பெரிய அளவில் நடத்தி வருகிறான். அவன் கடையில் எல்லா பொருள்களும் உண்டு. காய்கறி கீரைகள் கூட பவித்ரா வீட்டு தோட்டத்தில் இருந்து தினமும் இறங்கி விடும். மருந்தடிக்காத அந்த காய்களுக்கு அவனது கடையிலும் டிமாண்ட் அதிகம்.

ஆனால் அவன் வாங்கும் காய்கறிக்கு சரியாக பணத்தை கிருஷ்ணன் அக்கவுண்டுக்கு அனுப்பி விடுவான். சொந்தம் வேறு தொழில் வேறு என்று நினைப்பவன்.

மாமனைக் கண்டதும் பவித்ரா முகம் மலர அவன் முகமும் மலர்ந்தது. அவள் அருகே வந்து நின்றவன் அவளையே கூர்மையாக பார்த்தான்.

என்ன தான் அவள் முகத்தில் புன்னகை இருந்தாலும் அதில் இருந்த வெறுமை மட்டுமே அவன் கண்ணில் பட்டது. அவன் கவலையும் தன்னைப் பற்றி தான் என்று அவளுக்கும் புரிந்தது. அனைவரின் கவலைக்கும் தான் ஒருத்தி மட்டுமே காரணம் என்று வேதனையாக இருந்தது பவித்ராவுக்கு.

“சாப்பிட்டியா ரவி?”, என்று கேட்டார் கிருஷ்ணன்.

“சாப்பிட்டேன் மாமா, கிளம்பிட்டீங்களா?”

“ஆமா டா”, என்றவர் அவனைக் கண்டு வாஞ்சையாக புன்னகைத்தார். கோதையை திருமணம் செய்த தினத்தில் இருந்து ரவியையும் ஒரு மகனாக தான் எண்ணினார் கிருஷ்ணன். அவனுக்கும் மாமா என்றால் மரியாதையும் அன்பும் கலந்த ஒரு உணர்வு எழும்.

“மாமா, கோர்ட்டுக்கு நான் பவியைக் கூட்டிட்டு போகட்டா? நீங்க அலைய வேண்டாமே?”, என்று அவன் கேட்க கிருஷ்ணன் திரும்பி மகளைப் பார்த்தார்.

“நான் மாமா கூடவே போறேன் பா”, என்றாள் பவித்ரா. ஏனென்றால் அங்கே வந்தால் தன்னைக் கண்டு தந்தை கலங்கி நிற்பார் என்று அவளுக்கு தெரியுமே. அது மட்டுமில்லாமல் அவளுக்கே ரவியின் துணை இப்போதைக்கு தேவையாக இருந்தது.

“சரிப்பா நீ கூட்டிட்டு போ”, என்று வேதனையாக சொன்னார்.

“கவலைப்படாதீங்க மாமா, எல்லாமே நல்லதுக்குன்னு நினைச்சிக்குவோம். வேற எதுவும் யோசிச்சு நாமளே நம்மளை புண்ணாக்கிக்க கூடாது”, என்று அவருக்கு மட்டும் அல்லாமல் பவித்ராவுக்கும் சேர்த்தே சொன்னான். அவர் சரி என்று தலையசைக்க கோதையிடம் சொல்லி விட்டு இருவரும் கிளம்பிச் சென்றார்கள்.

அவர்கள் சென்றதும் “ஏங்க இப்படி நடக்குது? அபி கிட்ட பேசுனீங்களா?”, என்று கேட்டாள் கோதை.

“பேச வேண்டாம்னு பவி சொல்றா கோதை. ஆனாலும் மனசு கேக்காம நேத்து சாயங்காலம் அபியைப் பாக்க போனேன். ஆனா அவன் ஆஃபிஸ்ல இல்லைன்னு சொன்னாங்க”

“வீட்டுக்கு போய் பாத்துருக்கலாம்ல?”

“போகத் தொணலை”

“ஏங்க?”

“அவன் ஆஃபிஸ்ல தான் இருந்தான். அவன் கார் அங்க தான் இருந்துச்சு. பியூனும் சொன்னான். உள்ள இருந்துட்டே இல்லைன்னு சொல்லி அனுப்புறான். அதுக்கு மேல அவன் கிட்ட என்ன பேச?”

“ஏங்க அவன் இப்படி பண்ணுறான்?”

“எல்லாம் விதி, என்ன செய்ய? கடவுள் இவங்க ரெண்டு பேரையும் ஒண்ணு சேத்துருக்க வேண்டாம். சரி எனக்கு கொஞ்சம் தலை வலிக்குது. நான் படுக்குறேன்”, என்று சொல்லி விட்டு கிருஷ்ணன் செல்ல கோதையும் வயலில் வேலை பார்ப்பவர்களுக்கு டீ போடச் சென்றாள். ஆனாலும் மனம் முழுக்க மகளின் நினைவு தான்.

பவித்ரா அமர்ந்திருந்த காரை அமைதியாக நிதானமாக ஓட்டிக் கொண்டிருந்தான் ரவி. இருவரும் எதுவும் பேச வில்லை. அந்த அமைதி என்னவோ செய்ததோ? சிறிது தூரம் சென்றதும் “கஷ்டமா இருக்கா பவி? நான் வேணும்னா அவன் கிட்ட பேசவா டா?”, என்று கேட்டான்.

“வேணாம் மாமா. என்ன பேசினாலும் அவன் காரணம் சொல்லத் தயாரா இல்லை. அது மட்டுமில்லாம வாழ்க்கையை யார்க் கிட்டயும் கெஞ்சிக்கிட்டு இருக்க முடியாதே மாமா? அபி ஒரு விஷயம் செஞ்சா சரியா தான் இருக்கும்னு மூளை சொல்லுது. ஆனா மனசுக்கு தான் கஷ்டமா இருக்கு”

“ஆமா நீ இப்படியே அவன் மேல நம்பிக்கை இருக்குன்னு சொல்லிக்கிட்டே திரி. அவன் திமிர் பிடிச்சு ஆடட்டும். ஏன் நீ இப்படி இருக்க? நான் அப்பவே அவனை நம்பாதேன்னு சொன்னேன் தானே?”, என்று எரிச்சலுடன் கேட்டான்.

Advertisement