Advertisement

அத்தியாயம் 1 

அலைபாயும் மனதிற்கு 

தடுப்பணை உந்தன் 

கனல் பார்வையோ?!!!

கதிரவன் தன்னுடைய ஒளிக் கரங்களினால் இருள் போர்வையை விலக்கி பூமியை ஒளி மயமாக்கிக் கொண்டிருக்கும் அழகான காலைப் பொழுது. சூரியனைக் கண்ட பறவைகள் தங்களின் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாய் ஆர்ப்பரிக்க ஆரம்பித்தன.

இத்தகைய காலை வேளையில் சென்னை மாநகரம் எப்போதும் போல் பரபரப்பாகவே காட்சி அளித்தது. வளசரவாக்கத்தில் அமைந்திருந்த ஒரு வீட்டில் ‘நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய’ என்ற பாடல் டிவியில் ஒலித்துக் கொண்டிருந்தது.

நல்ல உறக்கத்தில் இருந்த பவித்ரா காதில் பாடல் சத்தம் கேட்கவும் கண்களை திறந்து பார்த்தாள். விடிந்தது தெரிந்ததும் எழுந்து அமர்ந்தவள் “ஈஸ்வரா”, என்று முணுமுணுத்துக் கொண்டாள். சிறு வயதில் இருந்தே அவளது விருப்ப தெய்வம் சிவன் தான்.

படுக்கையை விட்டு எழுந்ததும் ஜன்னல் கதவுகளைத் திறக்க சூரியக் கதிர்கள் முகத்தில் பட்டு அவள் கண்களைச் லேசாகச் கூசச் செய்தது. மாடித் தோட்டத்தில் இருந்த பூக்களும் அதில் இருந்து வரும் நறுமணமும் அவள் மனதை மயக்கியது. பூக்களைக் கண்டு அவள் மோன நிலையில் இருக்கும் போது அவளை கலைக்கவே அவளது மொபைல் அடித்தது.

யாரென்று எடுத்துப் பார்த்தாள். வக்கீல் பரந்தாமன் என்ற பெயர் ஒளிர்ந்தது. அவர் எதற்கு அழைக்கிறார் என்று புரிந்தவள் ஒரு பெருமூச்சோடு அதை எடுத்து காதில் வைத்து “குட்மார்னிங்க் சார், சொல்லுங்க”, என்றாள்.

“அம்மாடி பவித்ரா, குட் மார்னிங் மா. இன்னைக்கு நம்ம கேஸ் ஹியரிங்க்கு வருதுன்னு சொன்னது நினைவு இருக்கா மா?”

“இருக்கு சார், மறக்கலை”

“குட், பத்து மணிக்கு மேல நம்ம கேஸ் இருக்கும். நீ ஒரு ஒன்பது மணிக்கு கோர்ட்க்கு வந்துருவியா மா?”

“நான் வந்துறேன் சார். வந்து தானே ஆகணும்?”, என்று விரக்தியாக வந்தது அவள் குரல்.

“சரி மா, நேரா என்னோட கேபின்க்கு வந்துரு. வெளிய நின்னுட்டு இருக்காத”

“சரி சார்”

“அப்புறம் பவித்ரா”

“சொல்லுங்க சார்..”

“நல்லா இருக்க தானே மா? உன் மனசு இப்ப என்ன கஷ்டப் படும்ன்னு.….”

“சில விஷயங்கள் ஏன் எதுக்கு நடக்குதுன்னு தெரியாது சார். ஆனா நடந்தே தீரும். கொஞ்ச நாளாவே என் வாழ்கையில் நடக்குற எல்லாம் என்னை மீறின விஷயங்கள் தான். விடுங்க பாத்துக்கலாம். இதுவும் கடந்து போகும்”

“சரி மா, கோர்ட்ல பாப்போம்”, என்று சொல்லி போனை வைத்தார்.

போனை எடுத்து சார்ஜ் போட்டவள் அப்படியே அந்த படுக்கையில் அமர்ந்தாள். மனம் பாரமாக கனத்துப் போனது. அவளை அறியாமலே அவளுடைய நினைவில் வந்தான் அபிமன்யு என்ற அபி. அவளது கணவன்.

அவளது உள்ளம் கவர்ந்த காதல் கணவன் என்று சொல்ல முடியாது. ஆனால் அவளுடைய ஆருயிர் நண்பன் அவன். அவளுக்கு அவனை அவ்வளவு பிடிக்கும். அவர்கள் திருமணம் நடந்ததே பெரிய விபத்து என்றால் இப்போது நடப்பதோ அவள் முற்றிலும் எதிர் பார்க்காதது. அவர்களது விவாகரத்து வழக்கு தான் இன்று ஹியரிங்க்கு வருகிறது.

திருமணம் முடிந்து பல ஆண்டுகளை எல்லாம் அவர்கள் கடக்கவே இல்லை. அவர்களுக்கு திருமணம் முடிந்து ஒரே ஒரு வருடம் தான் ஆகிறது. அதற்குள் இவ்வளவு பெரிய முடிவை எடுத்திருந்தான் அபிமன்யு.

விவாகரத்து கிடைத்ததும் அவளுக்கு அவன் யாரோவாக ஆகி விடுவான். அதை எண்ணி அவ்வளவு வலித்தது அவளுக்கு. அவனுக்கும் அதே உணர்வு இருந்தால் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பானா? இப்போதும் விவகாரத்தை நினைத்து வரும் வலியை விட அவனை விட்டு விலக வேண்டும் என்ற வலி தான் அதிகம் இருக்கிறது.

எப்போதும் அபி ஏதாவது செய்தால் சரியாக இருக்கும் என்று நம்புபவளுக்கு இன்று அப்படி நினைக்க முடிய வில்லை.  இவர்களுக்கு இடையில் இருக்கும் இந்த பந்தம் முடிய இன்னும் சில நாட்களே இருக்கிறது என்ற கசப்பான உண்மையை அவளால் தாங்கவே முடியவில்லை.

சில மணி நேரம் கழித்து அபியை அவள் நேருக்கு நேர் சந்திக்க வேண்டும். அவன் முகத்தை, அவன் கண்களை நேருக்கு நேர் பாத்து விவகாரத்துக்கு சம்மதம் என்று சொல்ல வேண்டும்? முடியுமா அவளால்? ஆனால் செய்து தானே ஆக வேண்டும்? விவாகரத்து தர சம்மதம் என்று அவள் சொன்னதால் தானே அவன் கேஸ் பைல் செய்யவே செய்தான்.

அவனைப் பற்றி எண்ணிக் கொண்டு வெகு நேரம் அப்படியே அமர்ந்திருந்தவள் பின் நிதானமாக எழுந்து குளியல் அறைக்குச் சென்றாள். காலைக் கடன்களை முடித்து குளித்து வெளியே வந்தவள் ஒரு காட்டன் புடவையை எடுத்து அணிய ஆரம்பித்தாள்.

கிருஷ்ணன் கோதை நாச்சியாரின் செல்ல மகள் தான் பவித்ரா. வயது இருபத்தி ஏழு. ஐந்தடி உயரம், எழுமிச்சை நிறம், நீளமான தலைமுடி, நீள் வடிவ கண்கள், எப்போதும் லேசாக புன்னகை உறைந்திருக்கும் சிவந்த உதடுகள், ஆண்களை எட்டியே நிற்கச் செய்யும் தீர்க்கமான பார்வை, ஆனால் பார்ப்பவரை திரும்பிப் பார்க்கச் செய்யும் பேரழகு. சிவில் இஞ்சினியரிங்கில் போஸ்ட் கிராஜூவேசன் முடித்து அதே கல்லூரியில் உதவி பேராசிரியராக பணி புரிகிறாள்.

அவளுக்கு ஒரு அண்ணன் இருக்கிறான். அவன் பெயர் ரிஷி நந்தன். அவளுக்கு அவன் தான் ரோல் மாடல். அவனும் அதே கல்லூரியில் தான் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் துறையில் பேராசிரியராக பணி புரிகிறான். அவனைப் பார்த்து தான் பவித்ராவும் அந்த பதவியைத் தேர்ந்தெடுத்தது.

பவித்ரா மற்றும் ரிஷி நந்தனைப் பெற்றவர்கள் இருவருமே பள்ளி ஆசிரியர்களாக பணி புரிந்து ரிட்டயர்ட் ஆனவர்கள். அதனால் பிள்ளைகளுக்கும் டீச்சர் வேலை பிரியமாக இருந்தது. ஆக மொத்தத்தில் அவர்கள் குடும்பமே ஆசிரியர்கள் தான்.

பிள்ளைகள் இருவரும் கல்லூரியில் பேராசிரியர்களாக பணி புரிந்தாலும் இப்போது அவர்கள் குடும்பமாக தங்கள் வீட்டிலே விவசாயம் செய்து வருகிறார்கள்.

வீடு என்னமோ சின்ன வீடு தான். கீழே இரண்டு அறை அதனுடன் ஒரு ஹால், சமையல் அறை, சாமி ரூம், மாடியில் இரண்டு அறைகள். இது தான் அவர்களது வீடு.

வீடு சின்னதாக இருந்தாலும் வீட்டுக்கு பின் பக்கம் தோட்டம் பறந்து விரிந்து இருந்தது. அங்கே பல வித மரங்களும் பயிர்களும் செழித்து வளர்ந்திருக்கின்றன. கிட்டத்தட்ட பத்து ஏக்கர் நிலம் அவர்களுடையது. வீட்டின் முன் பக்கம் எல்லாம் அலங்காரத்துக்கு என மரங்களும் செடிகளும் பூக்களும் இருந்தாலும் வீட்டின் பின் பக்கம் முழுவதும் மிகப் பெரிய தோட்டம் தான். தோட்டம் என்று சொல்வதை விட தோப்பு என்று சொல்லலாம்.

நெல்லிக்காய், மாமரம், கொய்யா என மரங்கள் ஒரு பக்கம் என்றால் வெண்டைக்காய், கத்தரிக்காய், மிளகாய், முருங்கைக்காய் என ஒரு பக்கமும் போட்டிருந்தார்கள். மற்றொரு பக்கம் பூக்களும் வளர்ந்து செழித்திருந்தது. பாத்தி பாத்தியாக வித விதமான கீரைகளும் அங்கே இருந்தது. தினமும் பத்து பேர் அந்த தோப்புக்கு உள்ளூரில் இருந்து வேலைக்கு வருகிறார்கள்

அவர்கள் பழம் மற்றும் பூக்களை பறித்து எடுத்து வந்து வீட்டின் முன் வைப்பார்கள். அங்கே இருந்து காண்ட்ராக்டர் எடுத்துக் கொண்டு சென்று விடுவார். அடுத்த நாளே கிருஷ்ணனின் அக்கவுண்டில் பணம் ஏறி விடும். பிள்ளைகள் இருவரும் கல்லூரிக்கு சென்று விட்டாலும் கிருஷ்ணன் கோதை இருவரும் தோட்டத்தை கவனிப்பார்கள். அதே போல லீவ் நாளில் ரிஷியும் பவித்ராவும் விவசாயிகள் தான்.

பிள்ளைகளின் வருமானம், பெற்றோரின் பென்சன் பணம், தோட்டத்தில் இருந்து வரும் பணம் என பணம் செழித்து தான் இருந்தது. ஒரு வருடத்திற்கு முன்பு மகளுக்கு நல்ல படியாக திருமணம் செய்து வைத்தார்கள். ஆனால் இப்போது அவள் விவாகரத்து என்று வந்து நிற்கிறாள். ரிஷிக்கும் பெண் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இது தான் பவித்ராவின் குடும்பம்.

Advertisement