Advertisement

மாயவனோ !! தூயவனோ !! – 30

 “நீ சொல்றது எல்லாம் பேச்சுக்கு வேணும்னா நல்லா இருக்கும் மித்து.. ஆனா இது எல்லாம் நடைமுறைக்கு சாத்தியம் இல்லை..”  என்றான் இறுகி போன குரலில் மனோகரன்..

“ ஏன்.. ஏன் சாத்தியப்பாடாது??? இதை நீங்க சொல்லும் போது என்னால கொஞ்சம் கூட சகிக்க முடியலை மனு” அதே குரலில் மித்ரா..

“ம்ம்ச் மித்து உனக்கு ஏன் புரியமாட்டேங்குது ??”

“ எனக்கு எல்லாம் புரியுது.. நீங்க தான் எல்லாம் புரிஞ்சாலும் ஒன்னும் தெரியாதா பாப்பா போல பேசுறிங்க “

இப்படி இவர்கள் மாற்றி மாற்றி ஒருவர் மீது ஒருவர் குறை கூறி கொண்டு இருக்க, இதெல்லாம் எதற்கு என்றே தெரியாமல் ஒரு மூன்று ஜீவன் அமைதியாய் குழப்பமாய், வேடிக்கை பார்த்தனர்.. சிறிது நேரத்திலேயே பொறுக்க முடியாமல்

“ அண்ணா, அண்ணி நீங்க ரெண்டு பேரும் ஏதோ முக்கியமான விசயத்திற்கு தான் இப்படி பேசுறிங்கன்னு புரியுது. ஆனா என்ன விசயம்னு கொஞ்சம் சொல்லிட்டு சண்டை போட்டா எங்களுக்கு கொஞ்சம் நல்லா இருக்குமே “ என்று பேசி முடிக்கவில்லை திவா,

“ பின்ன என்ன திவா, நான் யார் இங்க ??? உங்க அண்ணனுக்கு மனைவி, இந்த வீட்டோட மூத்த மருமகள், உங்க எல்லாருக்கும் அண்ணி, இப்போ அம்மா ஸ்தானத்தில இருக்கேன், நான் இங்க ஒரு முடிவு எடுக்க கூடாதா “ என்று பொரிய ஆரம்பித்தாள் மித்ரா.

இதை பார்த்ததும் கிருபாவிற்கும், பிரபாவிற்கும் சிரிப்பு தாங்கவில்லை. கிருபா மெல்ல “ இதுக்கு பேரு தான்டா சொந்த செலவுல சூனியம் வைக்கிறது. இவனை யாராவது இப்ப சம்மன் இல்லாம ஆஜர் ஆக சொன்னாங்களா.. “ என்று பிரபாவின் காதை கடித்தான்..

“ என்ன அங்க முனுமுனுப்பு.. எல்லார்க்கும் சேர்த்து தான் சொல்றேன்.. பதில் பேசுங்க டா மூணு பேரும்.. உங்க வாழ்க்கை மேல எனக்கு அக்கறை இல்லையா.. உங்களுக்காக நான் ஒரு விஷயம் செய்ய கூடாதா??? கூடாதுன்னா சொல்லிடுங்க உங்க அண்ணன் மாதிரியே.. நான் அமைதியா ஒரு மூளையில இருந்துட்டு போறேன் “ என்று வேண்டும் என்றே வராதா கண்ணீரை துடைத்தாள்..

“ஆகா!! இவ கூட்டத்துக்கு ஆள் சேர்க்க ஆரம்பிச்சுட்டா.. மனோ சீக்கிரம் ஒரு முடிவிற்கு வா.. இல்ல உன் தம்பிங்க எல்லாம் அவ பக்கம் போயிட்டா அவ்வளோ தான் “ என்று எண்ணியபடி

“ அட அட அட… மித்து விஷயம் என்னன்னே சொல்லாம, இப்படி மொட்டையா பேசுனா பாவம் என் தம்பிங்க என்ன செய்வாங்க.. டேய் நீங்க எதுவும் குழப்பிக்காம இருங்க டா”

“ ஆகா !!! ஏன் நீங்க வேணும்னா ஜெடை பின்னி பூ வச்சு அப்புறம் பேசுங்க. சரி நானே விசயத்திற்கு வரேன். திவா நான் உனக்கு ஒரு பொண்ணு பார்த்து இருக்கேன்.. நல்ல பொண்ணு. ஆனா உங்க அண்ணன் தான் என்னவோ குதிக்கிறாங்க.. அதெல்லாம் நமக்கு ஒத்து வராதாம். “ என்று மேலும் எதுவோ பேசிக்கொண்டு இருந்தாள் ஆனால் அதெல்லாம் திவாவின் காதுகளில் விழவில்லை.

“ உனக்கு நான் பெண் பார்த்திருக்கிறேன் “ என்றதிலேயே அவனது மனதும் மூளையும் வேலை செய்வதை நிறுத்திவிட்டது. அவன் மனம் அவனை அறியாமலே காவேரியை நினைத்தது..

“ என்ன மாதிரி பொண்ணு அவ.. பூ போல.. ஆனா அவளுக்கு ஏன் அந்த கடவுள் இத்தனை சோதனையை கொடுக்கணும்.. கடவுள.. பெத்த அப்பாவே அவளை பலி குடுக்க துணிஞ்ச பிறகு அவளுக்கு எப்படி வாழ்க்கை மேல நம்பிக்கை வரும்?? “ என்று தன் போக்கில் எண்ணி கொண்டு இருந்தவனை “ திவா “ என்ற தன் அண்ணனின் குரல் கேட்டு

“ ஹா என்ன அண்ணா !!” என்று விழித்தான்..

“ என்ன டா இங்க நாங்க ரெண்டு பேரும் உன் லைப் பத்தி பேசிட்டு இருக்கோம். நீ இப்படி என்னவோ யாருக்கு வந்த விருந்தோன்னு அமைதியா இருந்தா என்ன அர்த்தம்.” என்றான் மனோ..

“ இல்லண்ணா.. அது.. அது வந்து…” என்று இழுத்தவன் தன் வாழ்விற்காக அண்ணனும் அண்ணியும் சண்டை இடுவது பிடிக்காமல் “அண்ணி இப்போ என்ன  அண்ணி கல்யாணத்துக்கு அவசரம்.. இன்னும் ரெண்டு மூணு வருஷம் போகட்டுமே” என்றான் பரிதாபமாக..

“ நானும் உன்னை இப்பவே கல்யாணம் செய்ய சொல்லலை திவா. இவதான் பொண்ணுன்னு முடிவு பண்ணிட்டா ரெண்டு மூணு வருஷம் என்ன நாலு வருஷம் கூட லவ் பண்ணுங்க. அப்புறம் நீங்க எப்போ சொல்றிங்களோ அப்போதான் கல்யாணம் “

“ திவா.. டேய் திவா அருமையான சான்ஸ்.. சீக்கிரம் சரி சொல்லிடு டா.. எப்படியும் நீயா யார் பின்னாலையும் போக மாட்ட. அண்ணி சொல்றது தான் சரி “ என்று கிசுகிசுத்தான் கிருபா..

அவனை ஒரு முறை முறைத்து தன் அண்ணிக்கு எதுவோ பதில் கூற தொடங்கும் போது “ பொறு திவா உன் அண்ணி உனக்கு பார்த்து இருக்க பொண்ணு யாருன்னு கேட்டிட்டு அப்புறம் மொத்தமா உன் பதிலை சொல்லு “ என்றான் மனோ..

“ யாரு ணா ???” என்று கேட்டபடி மித்ராவை பார்த்தான் திவா.. அவளோ மனோவை முறைத்தபடி நின்று இருந்தாள்..

“ ஏன் டி முறைக்கிற ?? அது சரி சொல்ல வாய் வரலையோ ?? நானே சொல்றேன். எல்லாம் அந்த சுந்தரோட பொண்ணு காவேரி தான் “ என்று மனோ கூறி முடிக்கும் பொழுது அங்கே ஒரு பெரிய நிசப்தம்.

திவாவிற்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. காவேரி என்ற பெயரை கேட்டதுமே அவனுக்கு மித்ராவிற்கு கோவில் கட்டி கும்பிட வேண்டும் போல இருந்தது.. பழம் நழுவி பாலில் விழுந்து அதுவும் நழுவி வாயில் விழுந்த கதை தான். ஆனால் தன் அண்ணனிற்கு இது பிடிக்கவில்லை போலவே..

தன் காதலுக்காக, தன் அண்ணனை எதிர்த்து ஒரு முடிவு எடுப்பதா?? அதுவும் இத்தனை பிரச்சனைகள் நடந்திருக்கும் பொழுது.. ஒருவேளை தான் இதற்கு சம்மதம் தெரிவித்தால் எங்கே தன் அண்ணன் மனம் நோகுமோ என்று யோசித்தான்..

மித்ரா “ என்ன திவா இப்படி யோசிக்கிற ?? உங்க எல்லார்க்கும் இது ஆச்சரியமா இருக்கலாம். பட் சுந்தரோட மகள் அப்படிங்கிற அடையாளத்தை தவிர அவளுக்கே அவளுக்குன்னு தனி அடையாளம் இருக்கு.. அதை தான் நம்ம பார்கனும்.. அப்படி ஒரு மனுசனுக்கு மகளா பிறந்தது அவள் தப்பா.. இங்க பாரு திவா காவேரியை பார்க்கும் போது எனக்கு உன் நியாபகம் தான் வந்தது.”

“ அவளோட குணமும், உன் குணமும் நல்லா செட் ஆகும்னு நினைச்சேன். அதுவும் இல்லாம அவ இப்போ மனசளவில ரொம்ப நம்பிக்கை இல்லாத மாதிரி இருக்க. நிச்சயமா அவளுக்கு உன்னைய விட பெஸ்ட் சாய்ஸ் யாரும் இல்லை. ஆனா இதெல்லாம் உனக்கு பிடிச்சா மட்டும் தான்.. ஜஸ்ட் என் மனசில தோணுனதை உங்க அண்ணன் கிட்ட சொன்னேன். அதுக்கு தான் இப்படி தாட் பூட்ன்னு குதிக்கிறார் “ என்று பேசி முடித்தாள் மித்ரா..

மனோவோ “ இங்க பாரு மித்து நீ சொல்றது எல்லாம் சரி தான்.. அந்த பொண்ணு நல்ல பொண்ணு தான் எனக்குமே அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனா அவங்க எவ்வளோ பெரிய இடம்.  நமக்கு இதில் சரின்னாலும் மினிஸ்டர் இதுக்கு சம்மதம் சொல்வாரா ??”

“ ஏங்க.. அந்த மினிஸ்டர் பையனை தான் நீங்க கண்ணுல விரல் விட்டு ஆட்டுனிங்க. அது மறந்து போச்சா??? அந்த வீர தீரமெல்லாம் உங்களுக்கு காதல் வந்தா மட்டும் தானா ??? “ என்று கேட்டு கொண்டே திவாவை ஒரு பார்வை பார்த்தாள்..

“ ஆகா அண்ணி !!! கண்டுபிடிச்சுட்டாங்க போலையே ???” என்று உறைந்து நின்று இருந்தான் திவா..

..“ என்ன எல்லாரும் இப்படி நிக்கிறிங்க ??? திவா நான் சொல்றது சரி தானே.. உனக்கு காவேரியை பிடிக்கலைன்னு உன் வாயால் சொல்லிடு அப்புறம் நான் இது பத்தி நினைக்க கூட மாட்டேன்.” என்று சொல்லும் போதே கிருபா, பிரபா, மனோ என அனைவரும் திவாவின் பதிலுக்காய் அவன் முகம் நோக்கினர்..

கிருபா மனதில் “ ஊமை கொட்டான் மாதிரி இருந்துகிட்டு இந்த திவா பைய என்ன வேலை பார்த்து இருக்கான்.. ஹப்பா!!! அண்ணி நீங்க இந்த வீட்டு குடும்ப குத்துவிளக்குன்னு அப்பப்ப நிறுபிக்கிரிங்க.. “ என்று புகழ்ந்து கொண்டு இருந்தான்..

திவாவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.. ஆனாலும் ஏனோ அவனுக்கு காவேரியை இழக்க மனமில்லை.. புகைபடத்தில் அவளது சிரித்த முகமும், சோர்ந்து போய் படுத்து இருந்த விதமும் அவன் மனதில் மாறி மாறி வந்து போயின..

அண்ணன் முகத்தை நோக்கினான்.. அவனோ தன் தம்பி என்ன பதில் கூற போகிறான்  என்று பார்த்து கொண்டு இருந்தான். திவாவின் காதல் கொண்ட மனமோ இந்த வாய்ப்பை இழந்து விடாதே என்று ஒரு புறம் கூப்பாடு போட்டது.. சிறிது அமைதிக்குப் பின் 

“ அண்ணி, என்.. எனக்கு.. அது.. காவேரியை பிடிச்சு தான் இருக்கு. ஆனா இதில் என் சம்மதம் மட்டும் முக்கியமில்லை அண்ணி. அண்ணா இதுக்கு முழு சம்மதம் சொன்னாதான் “ என்று தன் பதிலை பொத்தாம் பொதுவாக கூறி முடித்தான்.

“ எப்படி என் தம்பி “ என்பது போல ஒரு பெருமித பார்வை பார்த்தான் மனோ, அவனிடம் முறைத்துக்கொண்டு

 “ ம்ம்ச் திவா, நான் கேட்கிறது உனக்கு பிடிச்சு இருக்கா இல்லையான்னு தான். இதில் ஏன் உன் அண்ணனை இழுக்கிற. பாவம் என் புருசனுக்கு எதுவும் தெரியாது” என்றாள் அப்பாவியாய்..

“ இப்ப எதுக்கு இவ நம்மலை பாவம் சொல்றா. அய்யோ திவா இவ பேச்சை நம்பாதே “ என்று பாவமாக பார்த்தான் மனோ. இப்படியே மாறி மாறி கணவன் மனைவி இருவரும் பேசி பேசி, இவர்கள் அடித்துக்கொள்வதை பொறுக்காமல் திவா பொறுமை இழந்து

“ ஐயோ அண்ணா, அண்ணி ஏன் இப்படி சண்டை போடுறிங்க?? என்… எனக்கு காவேரியை பிடிச்சு தான் இருக்கு.. சொல்ல போனா அவங்க வீட்டுல அவ போட்டோ பார்த்ததுமே எனக்கு ரொம்ப பிடிச்சு தான் இருந்தது. ஆனா அதெல்லாம் நமக்கு ஒத்து வராதுன்னு நான் என் மனசை மாத்திகிட்டேன்..”

“ ஷ்ஷ்ஷ்!!! ஷப்பா…..  இந்த வார்த்தையை உன் வாயில் இருந்து வர வைக்க நாங்க ரெண்டு பெரும் எப்படி எல்லாம் நடிக்க வேண்டியது இருக்குடா சாமி.. மனு.. ஆனாலும் உங்க தம்பி உங்களை விட அழுத்தம்..” என்று கூறி தன் கணவனோடு அமர்ந்தாள்..

மனோ மெல்ல தன் தம்பியை பார்த்து புன்னகை பூத்தான். திவா மாட்டிக்கொண்டது போல திறுதிறுவென விழித்தான்.

பிரபா ” அண்ணி அப்போ எல்லாம் நடிப்பா?? இந்த திவா தான் நம்மலை ஏமாத்திட்டானா ??” என்று கேட்டான்..

“ ஆமா டா ஆமா.. அவன் அவனையே ஏமாதிக்க பார்த்தான். ஆனா நானும் உன் அண்ணனும் எதுக்கு இருக்கோம்.. இப்போ பார் அவன் வாயாலையே உண்மையை சொல்லிட்டானா.” என்று புன்னகை புரிந்தாள்..

“ அண்ணி.. அது… இது.. இதெல்லாம்.. உங்களுக்கு எப்படி தெரியும் ??”  என்று திக்கி தவித்தான் திவா..

“ அதுவா நான் அவங்க கிட்ட பேசிட்டு ரூம் விட்டு வெளிய வரும்போது தான் பார்த்தேன் நீ காவேரி போட்டோ பார்த்து மெய் மறந்து நின்னுட்டு இருந்த. சரி உன் மோன நிலையை தடுக்க வேண்டாம்னு நான் மறுபடியும் உள்ள போயிட்டேன். அப்புறம் நீ என்னை கூப்பிட வந்த, ஆனா பார்வை எல்லாம் காவேரி மேல தான் இருந்தது. ஆனாலும் உன் முகத்துல ஏதோ ஒரு சோகம், ஒரு தவிப்பு. “

“ இதை எல்லாம் சாயங்காலமே உன் அண்ணன் கிட்ட சொல்லிட்டேன். அவர் தான் நீ இப்படி தான் முடிவு எடுத்து இருபன்னு சொன்னார். எப்படியும் நாங்க வேற பொண்ணு பார்த்தாலும் நீ இப்போ முடியாதுன்னு சொல்வ. காவேரி மேல இருக்க எண்ணத்தையும் வெளிய சொல்ல மாட்ட. அதான் நானும் உன் அண்ணனும் சின்ன ஆக்டிங் குடுத்தோம் “ என்று மித்ரா கூறவுமே

கிருபா “ தெய்வமே !!!” என்று கை கூப்பினான் சிரித்தபடி

“ கவலை படாதே பக்தா.. உனக்கும் எனது அருள் தக்க நேரத்தில் கிடைக்கும் “ என்றாள் பதிலுக்கு மித்ரா..

அத்தனை நேரம் அங்கே நிலவிய ஒரு இறுக்கமான சூழல் மாறி சிரிப்பொலி சிதறியது..

திவாவிற்கு மனம் இப்பொழுது தான் தெளிவாக இருந்தது.. எங்கே தன் அண்ணன் மனம் நோகும் படி தான் நடந்து விடுவேனோ என்று இருந்தவனுக்கு மித்ராவின் வார்த்தைகள் மிக பெரிய நிம்மதியை கொடுத்தது.

“தேங்க்ஸ் அண்ணா, தேங்க்ஸ் அண்ணி “ என்றான் நெகிழ்ந்து போய்.

“ ஹேய் திவா எங்களுக்கு எல்லாம் நோ தேங்க்ஸ்.. லூசு எனக்கு தெரியும் டா நீ இப்படி தான் ஒரு முடிவு எடுத்து இருப்பன்னு., காதலோட வேதனையும் வலியும் நான் அனுபவிச்சவன் டா. சோ எக்காரணம் கொண்டும் அதை என் தம்பி அனுபவிக்க விடமாட்டேன் “ என்று கூறி மனோ அணைத்துகொண்டான்.

இவ்விருவர்களையும் பார்த்து மற்றவர்கள் புன்னகைத்து நின்றனர்.. ஆனால் கிருபா தான் மீண்டும் ஆரம்பித்தான்

“ அண்ணி , நமக்கு சரிதான், ஆனா அவங்க வீட்டில சரி சொல்லணுமே.. முக்கியமா அந்த பொண்ணு காவேரி… “ என்று சந்தேகமாய் கேட்டான்.

“ இதை எப்படி தான் மறந்தேன் “ என்று குழப்பமாய் நோக்கினான் திவா.

“ ஹா ஹா அதுவா. அதெல்லாம் எனக்கு தெரியாதுப்பா.. அதெல்லாம் திவாவோட திறமை.. “ என்று மழுப்பினாள் மித்ரா..

திவா திரும்பி தன் அண்ணன் முகம் நோக்கினான்..

“ என்னடா இப்படி முழிக்கிற.. முதல்ல தைரியமா இரு.. எல்லாம் நல்லதே நடக்கும்.. இந்த விசயத்துல என்னைய விட உங்க அண்ணி தான் ரொம்ப ஸ்பீட் டா.. அவள் ஏதோ ஒரு ஏற்பாடு செய்து இருக்கா.. அதை என்னானு கேளு.. இப்போ எனக்கு ஒரு ஆன்லைன் கிளைன்ட் மீட்டிங் இருக்கு “ என்று கழண்டு கொண்டான்..

“ என்ன அண்ணி.. என்னனு சொல்லுங்க ப்ளீஸ் “ என்று பரிதாபமாக முழித்தான் திவா.. கிருபா அவனை பார்த்து

“ ஹ்ம்ம் நீ தேற மாட்ட டா.. இப்படியா பரிதாபமா முகத்தை வைப்ப.. ஆனாலும் இப்படி ஒன்னும் தெரியாதவன் போல இருந்தே நீ எல்லாம் நடத்திக்கிற டா “ என்று மீண்டும் சீண்டினான்..

“ ம்ம்ச் கிருபா நீ சும்மா இரு.. திவா காவேரி பேஷன் டிசைன் படிச்ச பொண்ணு.. அவளுக்கு இப்ப ஒரு மாற்றம் வேணும்னு நளினாம்மா கிட்ட நான் தான் பேசிக்கிட்டு இருந்தேன். அவங்களுக்கு இவளை வெளி இடத்துல அனுப்பவே பயம்.”

“ நான் எதார்ச்சையா தான் சொன்னேன் எங்க டெக்ஸ்டைல் கம்பனிக்கே அனுப்புங்க, அங்க என் கொழுந்தன் நல்லா பார்த்துப்பான்னு.. அப்போ எனக்கு தெரியாது உன் மனசில என்ன இருக்குன்னு. பட் இப்போ இதை நீ நல்லா வாய்ப்பா எடுத்து முயற்சி பண்ணு.”

“ அவளுக்கும் உன் மேல அன்பு, காதல் முக்கியமா நம்பிக்கை வர மாதிரி நடந்துக்கோ. எந்த காரணம் கொண்டும் அவளை போர்ஸ் பண்ணிடாத திவா. ரெண்டு மூணு வருஷம் போகட்டும். அவ மனசும் உன்னை விரும்பினா கண்டிப்பா உங்க கல்யாணத்தை நானும் உன் அண்ணனும் அவங்க வீட்டில பேசி நடத்தி வைப்போம்.. “ என்று அவள் பேசி முடிக்கவும் திவா மித்ராவின் கைகளை பிடித்து கொண்டான்..

“ அண்ணி தேங்க்ஸ் எ லாட் அண்ணி.. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல அண்ணி.. என்.. எனக்கு இப்போ எவ்வளோ சந்தோசமா இருக்கு தெரியுமா ??? கண்டிப்பா அண்ணி கவி மனசை நான் மாத்திடுவேன். எப்பயும் அவ கஷ்டபடுற மாதிரி நடந்துக்க மாட்டேன் அண்ணி..” என்று உணர்ச்சியாய் பேசிக்கொண்டு இருந்தான்.. 

“ டேய் டேய் போதும்டா.. ரொம்ப டேம் ஓபன் பண்ணாத.. அப்புறம் அதென்ன பார்த்து ஒரு நாள் கூட ஆகலை உனக்கு காவேரி கவி யா?? ஹ்ம்ம் நீ நடத்து..   “ என்று கிருபாவும் பிரபாவும் திவாவை வறுத்து எடுத்தனர்.

இவர்களுடன் மித்ராவும் சேர்ந்து கொண்டாள்.. அங்கே ஒரே சிரிப்பும் கும்மாளமும் தான்.. இவர்களின் சத்தம் கேட்டு தன் அறையில் இருந்து  வெளியே வந்த மனோ அங்கே நிலவும் மகிழ்ச்சியை அமைதியாய் ரசித்தான்..

எப்படிப்பட்ட ஒரு பெண் தனக்கு வாழ்கை துணையாய் வரவேண்டும் என்று விரும்பினானோ, எந்த மாதிரி ஒரு பெண் இந்த வீட்டிற்கு மருமகளாக வரவேண்டும் என்று கனவு கண்டானோ அதற்கெல்லாம் மேலாய், மித்ரா இருப்பதாய் தோன்றியது மனோவிற்கு..

இதை தனிமையில் மித்ராவிடமே கூறினான்..

“ ஏன் மனு.. இது என் குடும்பம் தானே.. நான் இது கூட செய்ய மாட்டேனா.. உங்களுக்கு தெரியுமா மனு, திவா முகத்தை காரில் வரும் போதே பார்த்தேன். ஒரு நாள், ஒரு நிமிஷம் கூட அவன் காவேரி கூட பழக்கம் இல்லை. ஆனா காதல்ன்னு வந்திட்டா ஒரு நாள் என்ன ஒரு ஜென்மம் என்ன ?? பார்த்த ஒரு பார்வை போதாதா ?? “

“ அவன் முகத்தில் இருந்த சொல்ல முடியாத ஒரு உணர்வை நான் நிறைய தடவை உங்க முகத்தில் பார்த்து இருக்கேன் மனு. அதுனால தான் பாவம் அவன் இதுக்கு மேல எதுவும் கவலை படகூடாதுன்னு உங்ககிட்ட பேசி இப்போ அவன் மனசிலையும் என்ன இருக்குன்னு தெரிஞ்சுகிட்டோம்” என்று கூறிக்கொண்டு இருந்தவளை பின்னால் இருந்து அணைத்தான்..

“ எல்லார் மனசிலையும் என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கிற. ஆனா என்னைய மட்டும் கண்டுக்கவே மாட்டேங்கிற மித்து “ என்று கூறியபடி அவளது கூந்தலில் முகம் புதைத்தான்..

தன் கணவனின் எண்ணம் புரிந்தாலும், அவனது அருகாமையில் மனம் மயங்கினாலும் மித்ரா அவனிடம் சிறிது விளையாட நினைத்தாள்..

“ ம்ம்ச் என்ன மனு இது.. தள்ளுங்க.. உங்க கிட்ட சொல்ல மறந்துட்டேன். இன்னைக்கு இருந்து நாற்பத்தி எட்டு நாளுக்கு நான் விரதம் மனு.. சோ நோ ரொமான்ஸ் “ என்று கூறியவளை பார்த்தவனின் முகம் அஷ்ட கோணலாது..

“ என்ன விரதமா ??? என்ன விரதம் ?? எதுக்கு விரதம் ??” என்று பொரிந்தான்..

உள்ளே சிரித்துகொண்டே “ அது மனு இவ்வளோ பிரச்சனை நடந்ததுள்ள, அதான் எல்லாம் நல்ல படியா முடிஞ்சுட்டா நாற்பத்தி எட்டு நாளுக்கு விரதம் இருக்கிறேன்னு வேண்டி இருந்தேன் “ என்றாள் அப்பாவியாய் முகம் வைத்து..

அவனுக்கோ இத்தனை நாள் கழித்து, எல்லா பிரச்னையும் முடிந்து நிம்மதியாய் இனிமேலாவது தன் காதல் மனைவியோடு வாழ்க்கை நடத்தலாம் என்று இருந்தால், இவள் இப்படி கூறவும் உள்ளே பற்றி கொண்டு எரிந்தது..

அவனது முக மாறுதலை கண்டு மித்ராவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.. “ என்ன மனு டென்சன் ஆகிட்டிங்களா… ஹா ஹா ஹா “ என்று சிரித்தவளை கோவமாக பார்த்தவன் அவளின் விளையாட்டு புரிந்து

“ ஏய் என்கிட்டையே உன் விளையாட்டா.. இரு டி ..” என்று கூறிக்கொண்டே தன்னவளை தன்னோடு சேர்த்துகொண்டான்.. அவளும் வாகாய் சாய்ந்து கொண்டாள்..

“ ஹேய் மித்து ஒரு நிமிஷம் பயந்தே போயிட்டேன் டி.. “ என்று அவள் காதுகளில் கிசுகிசுத்தான்..

“ ஹா ஹா !! வெளிய சொல்லிடாதிங்க மனு.. உங்களுக்கு தான் வெட்க கேடு “ என்று கேலி பேசியவளின் இதழ்களை தன் இதழ்களால் பூட்டினான்..

மித்ரா மனோவின் மார்பில் சாய்ந்து படுத்து தன் விரல்களால் அவன் மார்பில் படம் வரைந்து கொண்டு இருந்தாள்.. இரவரின் முகம் இன்னதென்று கூற முடியாத ஒரு மகிழ்ச்சியில் திளைத்தது..

“ என்ன டி அமைதியா இருக்க ??”

“ வேற என்ன செய்ய ???” என்றவளுக்கு இன்னும் குரலே வெளி வரவில்லை..

“ ஹோய் !!! இதென்ன என் பொண்டாட்டிக்கு புதுசா வெட்கம் எல்லாம் வருது.. இதை உன்கிட்ட கொஞ்சம் கூட நான் எதிர் பார்க்கலை டி “ என்று மேலும் இறுக்கினான்..

“ ம்ம்ச் போங்க மனு.. ஏன் எனக்கு வெட்கம் வர கூடாதா ??”

“ வரலாம்.. ஆனா முதல் அன்னிக்கு தானா வந்து என்னைய லிப் லாக் பண்ணவ இப்படி வெட்க படுறது தான் எனக்கு நம்ப முடியலை “ என்று மீண்டும் சீண்டினான்..

“போதுமே.. எப்ப பாரு இதையே சொல்லி என்னைய சீண்ட வேண்டியது..” என்று அவன் மார்பில் குத்தினாள்..

ஆரம்பத்தில் மித்ரா தான் இதை கூறி மனோவை கேலி செய்வாள். ஆனால் மனோ எப்பொழுது அவன் கூறி கிண்டல் செய்ய ஆரம்பித்தானோ மித்ராவிற்கு வெட்கம் பிடுங்கி தின்னும்..

“ ஏங்க மனு.. உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்… “

“ இந்த நேரத்தில் என்ன டி கேள்வி உனக்கு ??” என்று முகத்தில் தன் இதழ்களால் கோலம் போட்டான்..

“ ஒன்னே ஒன்னு தான் மனு.. ப்ளீஸ்.. பேசி முடிச்சிட்டு அப்புறம் உங்க இஷ்டம் தான் “ என்று தள்ளினாள்..

“ ஷோ!!!! சொல்லு என்ன ??”

“ இல்ல நிர்மலா ஆன்ட்டி, ரீனாகிட்ட நான் சாரி கேட்க வேண்டாமா ?? என்ன இருந்தாலும் நான் பண்ணதும் தப்பு தானே..” என்றாள் நிஜமான வருத்தம் நிறைந்த குரலில்..

அவள் கூறுவதும் உண்மை தானே.. மனோ அமைதியாய் இருந்தான்..

“ என்ன மனு அமைதியா இருக்கீங்க ?? நான் … இல்ல நம்ம நாளைக்கு அங்க போகலாமா..?? “

“ ஹ்ம்ம் மித்து அவங்க இங்க இல்லை டி.. நீ இங்க இருந்து போகவுமே ரீனா மறுபடியும் தன் வேலையை ஆரம்பிச்சா.. ஒரு நாள் அவ ரொம்ப லிமிட் கிராஸ் பண்ணவும் அவளை திட்டிட்டேன்..  ஏதோ அவங்களை நான் மரியாதையை இல்லாம நடத்தின மாதிரி உங்க உறவே வேண்டாம்னு நிர்மலா ஆன்ட்டி ஓட சொந்த ஊருக்கு போயிட்டாங்க.. அங்கே ரீனாவிற்கு ஏதோ மாப்பிள்ளை பார்த்து இருக்காங்களாம்.. தகவல் வந்தது..  ”

“ ஓ !!! சரிங்க.. ஆனா அவங்ககிட்ட சாரி கேட்கலைன்னா எனக்கு மனசு உறுத்திகிட்டே இருக்குமே..”

“ விடு மித்து.. சில விசயங்களை அப்படியே விடுறது தான் நல்லது. இப்போ நம்ம மறுபடியும் பேச போய், இதையே வாய்பா எடுத்து மேலும் ஏதாவது குழப்பம் செய்வாங்க.. விடு டா.. நீ எதுவும் நினைக்காத “ என்று கூறியவன் மேற்கொண்டு அவளை வேறு எதுவும் பேசவோ, நினைக்கவோ விடவில்லை..                                      

                           JJJJJJJJ

 

ஒரு வருடம் கழித்து….

 

“ என்னங்க… மனு… ம்ம்ச் ஏங்க இப்படி உம்ம்னு இருக்கீங்க ??”  என்று நிறை மாத கர்ப்பிணியாய் தன் வயிற்றில் ஒரு கை வைத்து தன் மனம் நிறைந்தவனை கேள்வி கேட்டு கொண்டு இருந்தாள்..

அவனோ முகத்தை இஞ்சி தின்ற எதுவோ போல வைத்துகொண்டு இருந்தான்.. அவன் தோள்களில் பட்டென்று அடித்து “ ம்ம்ச் இப்போ என்னனு சொல்றிங்கலா இல்லையா ??? நான் போய் பசங்களை கவனிக்கணும் “ என்று நகர போனவளை மிக மென்மையாக கை பிடித்து நிறுத்தினான்..

“ இன்னும் சரியா பத்து நாள் இருக்கே மித்து.. உனக்கு கொஞ்சம் கூட டென்சன்னே இல்லையா ??? டெலிவரி டேட் நெருங்க நெருங்க எனக்கு பயமா இருக்கு டி “ என்று மேடிட்ட அவள் வயிறில் முத்தம் வைத்தான்..

“ ம்ம் ஆரம்பிச்சாச்சா.. எப்ப பாரு வயித்துல இருக்க உங்க பையனை கொஞ்சுறது. அப்புறம் அவன் வெளிய வரவேண்டாமா ??”

“ ஹ்ம்ம் போ டி உள்ள இருக்கிறது பையன் இல்லை பொண்ணு.. இங்க நாங்க இத்தனை பசங்க இருக்கோம் போதாதா.. எனக்கு என் பொண்டாட்டி மாதிரியே பொண்ணு வேணும் “ என்று கூறி மீண்டும் முத்தங்கள் பதித்தான்..

“ ம்ம் போங்க மனு.. எனக்கு உங்களை போலவே குட்டி மனு வேணும் “ என்று சிணுங்கினாள்..

இதுவே இவர்களின் தினசரி வழக்கம் ஆனது..              

ஆம் என்று மித்ரா கருவுற்று இருக்கிறாள் என்று அறிந்தானோ அன்றிலிருந்தே இப்படிதான் மென்மையை தன் குணமாக மாற்றி கொண்டான்.. மித்ரா கூட திட்டி பார்த்துவிட்டாள்.

“ என்ன மனு இது.. எனக்கு என் முரட்டு மனு தான் பிடிச்சு இருக்கு.. நீங்க ஏன் இப்படி பழம் மாதிரி நடந்துகிறிங்க ??” என்று சீண்டுவாள்..

இவள் இப்படி சீண்டினாள் மட்டும் எங்கு இருந்துதான் அவனுக்கு வேகம் வருமோ, அவள் எதிர்பார்த்த முரட்டு தனத்தில் தன் காதலைகலந்து காட்டிவிடுவான்..

செய்வதை எல்லாம் செய்துவிட்டு “ ஆச்சோ மித்து.. இவ்வளோ இறுக்கி கட்டி புடிச்சா பாப்பாக்கு வலிக்குமா ??” என்பான் அப்பாவியாய்..

அவனது இந்த கேள்வியை கேட்கும் போதெல்லாம் இவன் தான் என் முதல் குழந்தை என்ற எண்ணம் தோன்றும்.. அதற்காகவே அடிக்கடி அவனை சீண்டுவாள். ஆனால் நாட்கள் ஆக, ஆக, மதங்கள் உருண்டோட மனோ இன்னும் மாறிவிட்டான்..

கிருபா கூட “ அண்ணி வர வர இந்த அண்ணன் செய்றது சரியே இல்ல.. நீங்க வேகமா நடக்க கூடாது சரி.. நாங்க ஏன் அண்ணி வேகமா நடக்க கூடாது.. வயித்துல இருக்க பாப்பாக்கு அதிர்ந்திடுமாம்.. சோ !!! முடியலை “ என்று புலம்புவான்..

திவாவின் கம்பனியில் காவேரி வேலைக்கு சேர்ந்தும் ஒருவருடம் முடிய போகிறது.. அவர்களுக்குள் ஒரு நல்ல நட்பும், நட்பை தாண்டியும் சொல்ல முடியாத ஒரு பந்தம் உருவாகியிருந்தது.. திவா அறிவான் அது காதல் என்று..

ஆனால் காவேரி தானாய் புரிந்துகொள்ள வேண்டும் என்று பொறுமை காத்தான்.  மித்ராவை காணவென்று அடிக்கடி வீட்டிற்கும் வருவாள் காவேரி..

அப்பொழுது எல்லாம் கிருபா திவாவையும், காவேரியையும் கேலி செய்வான். இவன் ஏன் இப்படி பேசுகிறான் என்றே தெரியாமல் சிரித்து வைப்பாள் காவேரி..

காவேரியை திவா கவி என்று அழைக்க, அவள் திவாகரனை கரன் என்று அழைத்தாள்.

“ ஓ !!! நீங்க கரன், இவங்க கவி யா… நடத்துங்க நடத்துங்க…” அதற்கும் கிண்டல் செய்தான் கிருபா.. மனதிற்குள் மகிழச்சியாய் இருந்தாலும் வெளியே திவா முறைப்பான் எங்கே காவேரி தப்பாக எண்ணிவிடுவாளோ என்று..

ஆனால் அவளோ “ ஸ்ஸ்!! என்ன கரன் இது.. ஏன் இப்படி எப்ப பாரு கிருபாவை முறைச்சு பாக்கறிங்க?? ஜாலியா தானே சொல்றாங்க..” என்று திவாவை கடிவாள்..

“எல்லாம் என் நேரம் டி “ என்று அமைதியாய் இளித்து வைப்பான்..

இப்படியாக காவேரி திவாவின் உறவு மெல்ல மெல்ல வளர்ந்து பௌர்ணமி நிலவு போல ஜொலித்தது.. மனோவும் மித்ராவும் அமைச்சரிடமும், நளினாவிடமும் இதை பற்றி பேசினர்..

இரண்டு குடும்பங்களுக்குமே நிறைவான மகிழ்ச்சி நளினா மித்ராவின் கைகளை பிடித்துகொண்டு “ மித்ரா, காவேரி அப்பா பண்ணி வைச்ச நாசத்துல எங்க என் பொண்ணு வாழ்க்கை வீணா போயிடுமோன்னு பயந்தேன் மா.. ஆனா நல்ல வேலை அவ உங்க குடும்பத்தில் வாழ்க்கை பட போறா.. இனி நிம்மதியா நான் இருப்பேன்” என்று கண் கலங்கினர்..

“ அம்மா நீங்க கவலையே படவேண்டாம். காவேரி எனக்கு தங்கச்சி.. நாங்க எல்லாம் நல்லா பார்த்துப்போம்..” என்று ஆறுதல் படுத்தினாள் மித்ரா..

பத்து நாட்கள் விரைந்து ஓடியது… மித்ராவிற்கு பிரசவ வலியும் வந்தது.. அவளை விட மனோ தான் துடித்தான்.. அவனது துடிப்பை கண்ட மித்ராவின் பெற்றோருக்கு இப்படிபட்ட ஒரு மருமகன் கிடைக்க தங்கள் மகள் என்ன தவம் செய்தாளோ என்று எண்ணினார்..

தன் தாய் தந்தையின் துடிப்பை அந்த சிறு சிசு புரிந்துகொண்டதோ என்னவோ இருவரையும் சிரம படுத்த கூடாது என்று எண்ணி குறித்த நேரத்தில் வெளியே எட்டி இப்பூவுலகில் தன் வரவை பதிவு செய்தது..

“ Mr.. மனோகரன்.. கன்க்ராட்ஸ்.. உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு “ என்று மருத்துவர் வந்து கூறவுமே மனோவிற்கு என்ன கூறுவது என்று தெரியவில்லை.. கண்களில் நீர் முட்டியது அவனுக்கு..

“ தேங்க்ஸ்.. தேங்க்ஸ்  டாக்டர்” என்று வேகமாய் அவருக்கு கை குலுக்கிவிட்டு தன் மனைவியையும் மகளையும் காண சென்றான்..

தாயும் சேயும் அழகாய் அருகே படுத்து இருந்தனர். குழந்தை அமைதியாய் உறங்கி கொண்டு இருந்தது..

“ மனு !!!” என்று அழைத்த மித்ராவிற்கு அதற்கு மேல் என்ன பேச என்று தெரியவில்லை..

அவளது அருகில் மெல்ல அமர்ந்து “ மித்து.. தேங்க்ஸ் டி.. நான் என்ன மாதிரி என்னைய உணர வைக்கிற தெரியுமா?? தேங்க்ஸ் டி.. அத்தனை சொத்து இருந்தும் சொந்தம் யாருமே இல்லாம இருந்த எங்களுக்கு நீ ஒரு ராஜ குமாரியை குடுத்து இருக்க டி “ என்று தன் மனைவியின் நெற்றியில் இதழ் பதித்தான்..

“ ம்ம் உங்க ஆசைக்கு இப்போ ஒரு இளவரசி.. பட் அடுத்தது கண்டிப்பா எனக்கு குட்டி மனு தான்” என்று இப்பொழுதே அவனிடம் அச்சாரம் போட்டாள்..

“ தங்கள் உத்தரவு மகாராணி” என்று கூறி சிரித்தபடி குழந்தையின் பாதங்களை மெல்ல தொட்டான் மனு.

தன் தந்தையின் தீண்டலை அந்த குட்டி இளவரசி உணர்ந்தாலோ என்னவோ உறக்கத்தில் மெல்ல புன்னகைத்தாள்..

இதை கண்ட மித்ராவின் பெற்றோர்கள் மனம் நிறைந்தது.. தன் மகள் வாழ்வு எப்படி இருக்க போகிறதோ என்று பயந்த அந்த தம்பதி இக்காட்சியை காணவும், மனம் நிறைந்தனர்..

மித்ராவோ தன் மனதில் என்ன உணர்வு என்றே கூற முடியவில்லை.. தங்கள் திருமண நாள் அன்று உலகிலேயே யாரை நீ வெறுக்கிறாய் என்று கேட்டால் தயங்காமல் மனோவை நோக்கி விரல் நீட்டி இருப்பாள்.

ஆனால் இன்று அவனோ தன் அன்பிலும், காதலிலும் அவளை மூழ்கடித்து, ஒரு பெண்ணுக்கான அடுத்த பரிணாமத்தை கொடுத்து விட்டான்.

தன் கணவனையும் குழந்தையையும் விழி வழியாக இதயத்தில் நிரம்பிக்கொண்டு இருந்தாள் மித்ரா..

அவளின் பார்வையை உணர்ந்த மனோ “ என்ன டா…” என்று ஆதுரமாய் கேட்டு அவளை தன் மீது சாய்த்துக்கொண்டான்..

 

விழி வழியே நுழைந்தாய்

இதயத்தில் குடிகொண்டாய்

உனக்கானவன் நானே என்றாய்

நானே உணராத என் காதலை

என்னை உணர்வைதாய்..

பெண்ணாய் இருந்த என்னை

காதலியாய் மாற்றினாய்..

காதெலெனும் சோலையில்

நான் நடக்க, மனைவி என்னும்

மேடை போட்டாய்.. என் தாய்மையை

எனக்கே உணர்த்தினாய் – என்

வாழ்வில் ஒவ்வொரு தருணத்திலும்

என்னை உணரவைத்த நீ

மாயவனோ !! தூயவனோ…!!

                              நன்றி!!!!!!        

             

                                

              

         

                  

                                             

          

 

            

                                     

 

Advertisement