Advertisement

  மாயவனோ !! தூயவனோ – 29

 “மித்து…………” என்று காட்டு காத்தலாக கத்திக்கொண்டு இருந்தான் மனோகரன்.. ஆனால் அவன் அருகிலேயே அமர்ந்திருந்த மித்ராவோ இவன் கத்துவது எதுவும் காதிலேயே விழவில்லை என்பது போல அசட்டையாக அமர்ந்து இருந்தாள்..

என்ன கத்தியும், கூப்பாடு போட்டும் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று தெரிந்த பின்னே மெல்ல நகர்ந்து அவளை நெருங்கி அமர்ந்தான் மனோ.. அவன் ஒரு அடி நகர்ந்தால் மித்ரா இரண்டு அடி விலகினாள்.

ஒரு அளவுக்கு மேல் அவனால் பொறுமையை இழுத்து வைக்க முடியவில்லை.. “ டி மித்ரா… உனக்கு என்ன தான் வேண்டும் ??? ஏன் இப்படி இடுத்தம் பண்ணுற ???” என்று பொரிந்தான்..

‘ மித்ரா ‘ திருமணமான இத்தனை நாட்களில் முதல் முதலாக முழு பெயர் சொல்லி அழைக்கிறான்.. விலுக்கென்று திரும்பி முறைத்தாள் மித்ரா..

 “ இப்போ எதுக்கு இந்த ரியாக்சன் “ என்பது போல பார்த்தான் மனோ.. இவர்கள் இருவரையும் வேடிக்கை பார்த்தபடி மனோவின் தம்பிகள் மூவரும், சிரிப்பை சிரமப்பட்டு கட்டுபடுதிக்கொண்டு இருந்தனர்..

அங்கே பண்ணை வீட்டில் ஒவ்வொரு மணித்துளியும் மனோவோடு இனிமையாகவும் நிறைவாகவும் கழித்தாள்.. சில நேரம் இப்படியே இருந்துவிட கூடாதா என்றே எண்ணுவாள்.  ஆனால் அவளுக்கு மனோவின் குடும்பத்தில்  இருக்கும் பொறுப்புகள் நினைவு வந்து ஒருவழியாக மனோவையும் வீட்டிற்கு இழுத்து வந்து இருந்தாள்..

முதலில் மனோகரனுக்கு கிளம்பவே மனமில்லை “ ஏன் டி இப்படி எல்லாத்துக்கும் பிடிவாதம் பிடிக்கிற ??? திவா டெல்லி போயிருக்கான் ஒரு மீடிங்க்கு.. கிருபாவும் பிரபாவும் வர இன்னும் முழுசா இரண்டு நாள் இருக்கு.. அதுக்குள்ள ஏன் இப்போ கிளம்பனும்னு சொல்லுற “ என்று சலிப்பாக கேட்டான் அவள் கழுத்தில் முகம் புதைத்தபடி..

தன் கணவன் தன்னோடு இருக்க விரும்புகிறான் என்ற எண்ணம் அவளுக்கு மகிழ்வை தந்தாலும் ஏனோ அவளுக்கு அங்கே செல்ல வேண்டும் போல இருந்தது..

“ ம்ம் என்ன மனு இது.. வீடு ஒரு வாரமா பூட்டி இருக்கு.. தூசியா இருக்கும். இன்னைக்கு நம்ம போனா தான் எல்லாம் கிளீன் பண்ணி செட் பண்ண சரியா இருக்கும். பசங்க வீட்டுக்கு வரும் போது இப்படியா வீட்டை போட்டு வைக்கிறது. சொன்னா கேளுங்க.. நான் உங்களுக்கு பொண்டாட்டி மட்டும் இல்லை உங்க வீட்டுக்கு மூத்த மருமகளும் கூட. அந்த கடமையை எல்லாம் நான் சரியா செய்ய வேண்டாமா ??

இதை கேட்டதும் மனோவின் வாய் அவனையும் அறியாமல் “ ஆமாமா பெரிய பொறுப்பு.. போ டி.. பொறுப்பை பத்தி பேசுறவ ஏன் வீட்டை விட்டு போன ???” என்று தெரியாமல் கேட்டு விட்டான்.. வார்த்தைகளை கொட்டிய பின்னரே இவ்வார்த்தைகள் மித்ராவை எத்தனை காயப்படுத்தும் என்று அறிந்து

“ மித்து “ என் அழைத்தபடி அவள் முகம் பார்த்தான்.. அவளோ அடிப்பட்ட ஒரு பார்வை பார்த்தாள் மனோவை. அப்பார்வையை தாங்காதவன் வேகமாக அவளை இழுத்து அணைத்துக்கொண்டான்..

“ சாரி டி.. சாரி மித்து.. நான்.. நான் நிஜமா உன்னை கர்ட் செய்ய இப்படி சொல்லலை.. அது.. அது தானா.. என்னையும் அறியாமல் “ என்று இதற்குமேல் என்ன கூறுவது என தெரியாமல் விழித்தான்.

அவன் முகத்தை பார்த்தவள் என்ன நினைத்தாளோ அவனிடம் இருந்து விலகி சென்றாள்..

 “ ச்சி மனோ என்ன மனுஷன் நீ.. கொஞ்சம் கூட உனக்கு அறிவே இல்லை. ஒரு நிமிசத்துல எல்லாத்தையும் கெடுத்து வச்சிட்ட.. பாரு மித்துக்கு எவ்வளோ கஷ்டமா இருக்கும் “ என்று தன்னை     தானே திட்டியபடி

“ மித்து “ என்று மனைவியை தேடி சென்றான். அவளோ எங்கோ பார்வையை பதித்தபடி அமர்ந்து இருந்தாள்.. முகத்தில் ஒரு உணர்வும் இல்லை..

“ சாரி டி “  என்றவாறு அவளது கைகளை பற்றினான்.. அவனது தொடுகையை உணர்ந்தவள்

“ இல்லை மனு நான் தான் சாரி சொல்லணும் “ என்று வாய் திறந்தாள்.. அவன் கேள்வியாய் நோக்கினான்.

“ ஆமாம் மனு.. நான் தான்.. நான் தான் உங்ககிட்ட சாரி சொல்லன்னும்.. நமக்குள்ள நோ சாரி நோ தேங்க்ஸ்ன்னு சொன்னது என்னவோ நான் தான்.. ஆனா கண்டிப்பா இந்த சாரி நான் கேட்டே தான் ஆகனும் மனு..”

“ ப்ளீஸ் என்னை கொஞ்சம் பேச விடுங்க..  நீங்க, அப்பா, அம்மா தம்பிங்க எல்லாரும் என்னோட மன நிம்மதியை முக்கியமா நினைச்சுதான் என்கிட்ட எதுவும் சொல்லாமல் இருந்திங்க.. எனக்கு அது நல்லாவே புரியுது.. ஆனா ஒரு வேலை சொல்லி இருந்தா இந்த பிரச்சனையோட தீவிரம் எனக்கு இன்னும் புரிந்து இருக்குமோ என்னவோ?? “

“ ஆனா மனு நான் வீட்டை விட்டு கிளம்பும் போது சத்தியமா என்னை பத்தி கொஞ்சம் கூட நினைக்கவே இல்லை மனு. என் நினைப்பு எல்லாம் உங்க பாதுகாப்பு மேல தான் இருந்தது.. ஒருவேளை நான் சுந்தர் கிட்ட மாட்டிக்கிட்டா?? அப்படிங்கிற கேள்வியே என் மனசில வரலை மனு.. உங்களுக்கு எதுவும் ஆகிட்டான்னு மட்டும் தான் நான் நினைச்சேன் “

“ அன்னைக்கு அம்மா என்கிட்டே சொன்னாங்க மனு, நீங்க அம்மாகிட்ட சத்தியம் செய்திங்கலாம், எந்த சூழ்நிலையிலும் நான் அந்த சுந்தரை மித்துகிட்ட நெருங்க விடமாட்டேனு.. இந்த நிமிஷம் வரைக்கும் நீங்க அந்த சத்தியத்தை உண்மையாக்கிருக்கிங்க மனு.. கல்யாணம் ஆன அன்னைக்கு  இருந்து உங்களோட பாதுகாப்பிலேயே இருந்துட்டேன்.”

“ அதான் எனக்கு பெருசா எதுவும் தோணாமல் இருந்திருக்கு மனு.. ஆனா நீங்க எல்லாம் எத்தனை சிரமம், எத்தனை வருத்தம், இதுக்கு நடுவில் நான் வேற எல்லாரையும் வார்த்தையால குத்திட்டு இருந்தேன்.. இதை எல்லாம் பொறுத்து, ஒவ்வொரு விசயத்தையும் சரியா பண்ணி, ஹப்ப்பா.. எவ்வளோ ஸ்ட்ரெஸ் இருக்கும் உங்களுக்கு.”

“ ஆனா அதை எல்லாம் ஒருநாள் கூட நீங்க என்கிட்டே காட்டுனது இல்லையே மனு.. நான் இன்னும் கூட உங்களை புரிஞ்சுக்காம இருந்தா தான் தப்பு மனு.. நீங்க உங்களை அறியாம சொன்னிங்கன்னு எனக்கு தெரியும் மனு.. இப்போ நான் ஒரு ப்ராமிஸ் செய்யறேன் மனு, எந்த ஒரு சூழ்நிலையிலும் நான் உங்களை தப்பா மட்டும் நினைக்கமாட்டேன் “ என்று கூறி அவன் தோள் சாய்ந்தாள் மித்ரா..

தன் மனைவியின் நீண்ட பேச்சை கேட்ட மனோவிற்கு மனம் நிறைந்தது. எங்கே தன்னை புரியாமல் மீண்டும் நடந்து விடுவாளோ என்று அஞ்சிய மனதிற்கு அவள் கூறிய வார்த்தைகள் அஞ்சனம் பூசியது போல இருந்தது.. எதுவும் கூறாமல் தன்னவளை தன்னோடு மேலும் இறுக்கிக்கொண்டான்..

“ மித்து உனக்கு இன்னும் அந்த சுந்தரை எப்படி நாங்க முதலில் பிடித்தோம்னு தெரியாதே..” என்றான்..

“ ம்ம்ச் வேண்டாம் மனு.. செத்து போனவனை பத்தி பேசி இனி என்ன ஆகபோறது. “

“ இல்லை மித்து இது தான் முதலும் கடைசியும் நம்ம அவனை பத்தி, இந்த விஷயம் பத்தி பேசுறது.. ப்ளீஸ் “

“ம்ம் சொல்லுங்க மனு “     

“அன்னைக்கு மினிஸ்டரை பார்த்திட்டு வரவும் தான் நீ இங்க இல்லைன்னு தெரியும் மித்து, நிர்மலா ஆன்ட்டி, ரீனாவை என்ன கேட்டும் அவங்க தெரியாதுன்னு சொல்லிட்டாங்க. ஒருவழியா நீ எங்க போயிருப்பன்னு யோசிச்சு உனக்கு எல்லா ஏற்பாடும் செய்து, நீ பாதுகாப்பா இருக்கன்னு கொஞ்சம் நிம்மதியா இருக்கும் போது தான் இந்த சுந்தர் நாங்க எதிர் பார்க்காத ஒரு வேலையை செய்தான்”

“ அவனை நாங்க பிடிக்க சரியா இரண்டு நாள் இருக்கும் போதே அவன், அவன் பொண்ணை கூட்டிக்கிட்டு வெளிநாட்டுக்கு போக போறதா தகவல் வரவும், முதல்ல எங்களுக்கு என்ன செய்றதுன்னே தெரியலை  மித்து. அவனையும் பிடிக்கணும், அவன் பொண்ணையும் காப்பாத்தனும்..”

“ ஆனா இந்த விசயத்தில மினிஸ்டருக்கு தான் ரொம்ப நன்றி சொல்லனும் மித்து, தன் மகன்னு கூட பார்க்காம, எது சரியோ அதை மட்டுமே செய்தாறு. சுந்தருக்கு தெரியாம மாணிக்கத்தை வச்சு அவனை பத்தின எல்லா உண்மைகளையும் நளினாக்கு சொல்ல வைத்தோம்.”

 “ஆனா நாளினா இதை எல்லாம் தன் மகள் கிட்ட சொல்லி அவளை எச்சரிக்கிறதுகுள்ள அவனோ அப்பாங்கிற பாசத்தை பயன்படுத்தி அந்த பொண்ணை இழுத்துக்கிட்டு போயிட்டான்.. இராட்சசன்..  “  

“ அந்த பொண்ணுக்கு முதலில் எதுவும் எதுவுமே புரியலை.. நாங்க அவனை துறத்திட்டு போறதுக்குள்ள அவன் வண்டியை எடுத்துகிட்டு வேகமா போயிட்டான்..”

“ அவனை பிடிக்க முடியலைனாலும் அந்த பொண்ணையாவது காப்பாத்திடனும்னு ஒரு வேகம்.. எப்படியோ அவன் திட்டத்தை எல்லாம் கண்டுபிடிச்சு அவனை சேஸ் பண்ணா எங்க கண்ணுல மண்ணை தூவிட்டு போயிட்டான்..”

“ அந்த சுந்தரை எங்க போய் பிடிக்கிறது?? அந்த பொண்ணை எப்படி அவன்கிட்ட இருந்து தப்பிக்க வைக்கிறதுன்னு நான் திகைச்சு நின்னப்ப தான் எங்களுக்கு ஒரு தகவல் வந்தது. ஒரு பொண்ணு அடிப்பட்டு விழுந்து கிடக்கு, அங்க இருந்து கொஞ்ச தூரத்தில ஒரு வண்டி மரத்தில் மோதி முக்காவாசி எரிஞ்சு போனதுன்னு..”

“ அடித்து பிடித்து வேகமா போனா, அந்த பொண்ணு காவேரி அவங்கப்பா கிட்ட இருந்து தப்பிக்க காரில் இருந்து உருண்டு விழுந்திருப்பா போல, நல்ல வேலை காயம் அதிகம் இல்லை, அதிர்ச்சியில் மயக்கமா கிடந்தா. ஆனா அவன் சுந்தர் எங்கயும் காணோம்.. அவன் வந்த காரையும் காணோம்”

“ இன்னும் கொஞ்சதூரம் போய் தேடி பார்த்தா அங்க அவன் போன கார் மரத்தில் மோதி எரிஞ்சுக்கிட்டு இருந்தது. உள்ள இருந்தது அவன் தான்னு நினைச்சோம். செத்துட்டான்னு நிம்மதியா இருந்தது.. ஆனா இப்போதான் மித்து தெரியுது அவன் ஒரு பிளான் இல்லை நிறைய பிளான் போட்டு இருக்கான்னு “

“ காவேரிக்கு கொஞ்சம் மயக்கம் தெளியவும் அவகிட்ட விசாரிச்சோம் என்ன நடந்ததுன்னு. ஏதோ தப்பா நடக்கிதுன்னு புரிஞ்சுகிட்ட அந்த பொண்ணு அவங்க அப்பகிட்ட கெஞ்சி பார்த்திருக்கா..”

“ அப்பா.. வேண்டாம் பா.. நாம வீட்டுக்கே போயிடலாம் பா.. என்.. எனக்கு இப்போ வெளிநாடு எல்லாம் போக ஆசையில்லை பா.. ப்ளீஸ் “

“ ஹா ஹா ஹா என்ன காவேரி.. என்ன திடீர்ன்னு வீட்டுக்கு போகணும் சொல்லற?? என்ன உங்க அம்மா ஏதாவது சொல்லி அனுப்பினாளா ??”

“ அதெல்லாம் இல்லைப்பா. அம்மா நீங்க நினைக்கிறது மாதிரி எல்லாம் இல்லைப்பா. அம்மா ரொம்ப நல்லவங்க பா.. அப்பா அப்பா ப்ளீஸ் பா.. நம்ம இங்கயே இருக்கலாம் பா.. “ என்று சுந்தரின் கைகளை பற்றினாள்.

“ ச்சி கையை விடு.. அறிவில்லை உனக்கு ??? இப்படியா தொன தொனன்னு பேசிக்கிட்டே இருப்ப.. உன் அம்மாவிற்கு தான் பொழைக்க தெரியலை. உனக்கு நான் வாழ்க்கையே வேற மாதிரி காட்டுறேன்.. நீ கடைசி வரைக்கும் இதே அழகோட, இன்னும் வசதியா இருக்கலாம் “

“ அய்யோ அப்பா அதெல்லாம் எதுவுமே வேண்டாம் பா.. ப்ளீஸ் பா.. நம்ம வீட்டுக்கே போயிடலாம் பா.. ஏன் பா இப்படி எல்லாம் பண்றீங்க ?? கொஞ்சம் அம்மா, தாத்தா எல்லாரையும் நினைச்சு பாருங்க பா.. ப்ளீஸ்.. நம்ம கிட்ட எல்லாமே இருக்கே பா..” என்று கண்ணீர் மல்க தன் கண் முன்னே தான் பெற்ற மகள் கதறினாலும் அந்த அரக்கனின் மனம் சிறிதும் இலகவில்லை..

“ ஏய் ச்சி கழுதை.. என்ன விட்டா பேசிக்கிட்டே போற.. இங்க பார் உன் அம்மா இங்க உயிரோட இருக்கனும்னு நீ நினைச்சா அமைதியா வாயை திறக்காம நான் சொல்ற மாதிரி நடந்துக்கோ.. இல்லை நடக்கிறதே வேற” என்று கர்ஜித்தான்.

“ அப்பா….!!!!!!”

“ என்ன டி அப்பா அப்பான்னு.. ச்சி பேசாமல் வா.. அங்க போய் நம்ம இறங்கிற வரைக்கும் வாய் திறக்க கூடாது.. மீறி ஏதாவது பண்ண, பெத்த பொண்ணுன்னு கூட பார்க்க மாட்டேன்.. இன்னும் இருபது நிமிஷம் தான் “ என்று அவன் கூறிக்கொண்டு இருக்கும் போதே காவேரி கண் இமைக்கும் நேரத்தில் காரின் கதவினை திறந்து வெளியே உருண்டுவிட்டாள்.. இப்படி பட்ட தகப்பனுக்கு மகளாய் இருப்பதை விட சாவதே மேல்..

புறநகர் வழியாக சென்றதால் இரு பக்கமும் காட்டு செடிகளே இருந்தன.. அச்செடிகளுக்கு நடுவில் விழிந்து கிடந்தாள் மயக்கமுடன்..

இதை சிறிதும் எதிர் பார்க்காத சுந்தர் பின் சுதாரித்து மயக்கமுடன் இருந்த மகளை இழுத்து கொண்டு காருக்கு செல்ல முயன்றான்.. பதற்றம் காரணமாகவோ என்னவோ அவனால் அதை செய்ய முடியவில்லை.

 “ ச்சே என்ன இது கடைசி நேரத்தில் இப்படி பண்ணிட்டா.. இவளை தூக்கி காருக்கு போடுறதுக்குள்ள எல்லாம் வந்திடுவானுங்களே.. என்ன நடந்தாலும் சரி நான் மாட்டிக்க கூடாது. அப்போதான் எல்லாருக்கும் ஒரு பாடம் கத்துக்குடுக்க முடியும் “ என்றி எண்ணியவன் காவேரியை அப்படியே விட்டுவிட்டு தன் காரில் பறந்தான்..

மனோ மற்றும் அனைவரும் வந்து பார்க்கும் பொழுது சுந்தரின் கார் முற்றிலுமாக எரிந்து கிடந்தது.. உள்ளே ஒரு ஆள் எரிந்து போய் இறந்ததற்கான எல்லா அம்சங்களும் அப்படியே இருந்தன..  அதை கண்ட அனைவரும் சுந்தர் மரனித்துவிட்டான் என்றே எண்ணினார்..   

ஆனால் அவனோ இவர்கள் எண்ணம் எல்லாம் பொய் என்பதை நிரூபணம் செய்து, மனோ மித்ரா வாழ்வில் மறுபடியும் குறுக்கிட்டு இதோ, கண் இமைக்கும் நேரத்தில், அவனே எதிர் பார்க்காத ஒரு தருணத்தில் உயிரை விட்டான்..      

அவன், அந்த சுந்தர் கோடி கோடியாய் சம்பாரித்து என்ன கண்டான் ?? மனைவி மகளை பாடாய் படுத்தி தான் என்ன சந்தோசம் அனுபவித்தான்?? அத்தனை திட்டம் தீட்டி எதுவும் பலிக்கவில்லையே. அவன் வாழ்வை அவனே சற்று திரும்பி பார்த்திருந்தால் பூஜ்ஜியம் என்று அவனுக்கு புரிந்திருக்குமோ என்னவோ ?? ஆனால் மனோ மற்றும் மித்ராவிற்கு நன்றாகவே புரிந்தது.

“ஹ்ம்ம் என்ன வாழ்கை இது மனோ.. பணம் பணம்னு அதுக்கு பின்னாடியே ஓடி, உண்மையான சந்தோசம் என்னன்னு கூட தெரியாமல் வாழ்கை என்னன்னு புரியுறதுக்கு முன்னமே உயிர் போயிடுது.. “ என்றாள் மித்ரா ஒரு வெற்று குரலில்.

“ உண்மை தான் மித்து.. வாழ்கையில ஒவ்வொரு நிமிசமும் நமக்கு என்ன இருக்குன்னு நமக்கே தெரியாது. ஆனா என்னை பொறுத்த வரைக்கும் இந்த நிமிஷம் நான் எப்படி இருக்கேனோ, என்னவா இருக்கேனோ, அதற்கு உண்மையா இருக்கனும், முடிஞ்ச அளவிற்கு அடுத்தவங்களுக்கு உபயோகமா இருக்கனும். இப்படி இருந்தாலே அன்பு பாசம் எல்லாம் தன்னால வந்திடும் மித்து “

“இப்போ நீங்க சொன்ன வார்த்தை நூற்றுக்கு நூறு உண்மை மனு.. அதுக்கான சிறந்த எக்ஸாம்பில் நீங்களும் நானும் தான் “ என்றாள்.. மனோவிற்கு இவள் என்ன கூறுகிறாள் என்று புரியவில்லை..

“ நிஜம் தான் மனு, நீங்க என் கிட்ட உண்மையான அன்போட இருந்திங்க. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு.. அதே நேரம் உங்களுக்கான பொறுப்புகளை எப்பையுமே தட்டி கழிக்காம, கொஞ்சம் கூட முகம் சுளிக்காம எல்லாத்தையும் நிறைந்த மனசோட செய்திங்க.. அது தான் மனு உங்களை என்னை நேசிக்க வைச்சது.. “ என்று கூறி அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள்..

அவளது பேச்சை கேட்ட மனோவும் சிறிது நேரம் அமைதியாய் இருந்தான்.. அவன் மனமோ “ ஹப்பா அந்த சுந்தரை பத்தி பேசி இவ வீட்டுக்கு போகணும்கிற எண்ணத்தை மாத்திட்டோம் என்று நினைத்த வேளையில்

“ என்னங்க “ என்றாள் மித்ரா..

“ என்னடா இது புதுசா மரியாதை எல்லாம் குடுக்கிறா ??” என்று எண்ணியவனாய் “ என்ன மித்து “ என்றான்

“ நா.. நாம் வீட்டுக்கு போனதும், தம்பிங்க எல்லாம் வந்த பிறகு ஒரு தடவை போய் அங்க.. அவங்க அவங்க… நளினா காவேரியை எல்லாம் பார்த்திட்டு வந்திடலாமா ??”                              

இதை கேட்டு மனோ அதிர்ந்து விழித்தான்.. “ என்ன மித்து சொல்ற ?? அதெல்லாம் வேண்டாம்.. “ என்றான் பட்டென்று..

“ ஏன்.. ஏன் வேண்டாம்.. நீங்க மட்டும் அது இதுன்னு ஏதாவது செய்து நல்ல பேர் வாங்குவிங்க. நான் மட்டும் அமைதியா இருக்கணுமா ?? அதெல்லாம் முடியாது. “ என்று வேகமாய் ஆரம்பித்தவள் தன் கணவன் முகம் நோக்கி

“ ப்ளீஸ் மனு.. என்ன இருந்தாலும் இந்நேரம் நம்ம அங்க போகணும் மனு.. அவன் நல்லவனோ கெட்டவனோ, ஆனாலும் ஒரு உயிர் மனோ, நமக்கு வேணா அவனோட உயிர் முக்கியமில்லாம இருக்கலாம். ஆனா அவன் குடும்பத்திற்கு, அதுவும் இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் கண்டிப்பா நம்ம போய் ஆறுதலா பேசிட்டு தான் வரணும் மனு.. எனக்காக ப்ளீஸ் “ என்று கேட்டவளிடம் மனோவால் மறுப்பை கூற முடியவில்லை.

இப்படியே இருவரும் மாற்றி மாற்றி பேசியபடி நேரத்தை போக்கினர்.. ஆனால் மனோ என்ன பிடிவாதம் பிடித்தும் மித்ரா அவனை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டாள்..  அவர்கள் வந்த இரு நாட்களிலேயே திவா, கிருபா, பிரபா என அனைவரும் வந்து சேர்ந்துவிட்டனர்..

“ யப்பா இப்பதான் வீடே நிறைஞ்ச மாதிரி இருக்கு… “ என்று மகிழ்ச்சியாய் எண்ணினாள் மித்ரா,..

“ அண்ணி வயலூர் சூப்பர் ஊரு அண்ணி.. இப்போ புரியுது நீங்க ஏன் அங்க இருந்து வர பிடிக்காமல் இருந்திங்கன்னு. அதிலும் தனம் அக்கா சமையல் சும்மா சொல்ல கூடாது அண்ணி சூப்பரோ சூப்பர்… “ என்றனர் கிருபாவும் பிரபாவும்..

திவா தன் அண்ணனிடம் தான் சென்று வந்த வேலையை பற்றி பேசிக்கொண்டு இருந்தான். 

இப்படியாக அனைவரும் ஒன்றாய் அமர்ந்து வெகு நாட்கள் கழித்து பேசிக்கொண்டு இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.. அப்பொழுது தான் நினைவு வந்தவளாக

“ ஹேய் சொல்ல மறந்துட்டேன், நம்ம எல்லாம் நாளைக்கு மினிஸ்டர் வீட்டுக்கு போலாம்.. என்னங்க நாளைக்கு வரவான்னு கேட்டு சொல்லுங்க “ என்று கூறவும், இளையவர்கள் அனைவரும் மனோவின் முகம் நோக்கினர்..

மனோவிற்கு ஏனோ மித்ராவை அங்கே அழைத்து போவதில் விருப்பம் இல்லை.. சுந்தரின் விசுவாசி என்று எவனாவது இவளை பார்த்தால் மறுபடியும் பிரச்னை கிளம்பும் என்று எண்ணினான்..

ஆனால் மித்ராவிடம் கூறினால் பிடிவாதம் செய்வாள் என்று எண்ணி “ மித்து இப்போதானே வந்திருக்காங்க.. இவனுங்க எல்லாம் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்.. ஒரு மூணு நாள் போகட்டும் நானும் அவங்ககிட்ட பேசிட்டு சொல்றேன் “ எனவும் மித்ரா முதலில் ஒப்புக்கொண்டாள்.

ஆனால் மனோ கூறிய மூன்று நாட்கள் ஒரு வாரம் ஆகவும் தான் மித்ரா இப்பொழுது மலையேறி அமர்ந்திருப்பதற்கு காரணம்.. என்ன சமாதானம் கூறியும் மித்ரா அதை எல்லாம் கேட்பதாய் இல்லை..

அதுவும் மனோ “ மித்ரா “ என்று முழு பெயரில் அழைக்கவும் அவ்வளோ தான் 

“என்ன என்ன மித்ராவா ?? ஓ !! என் பேர் சொல்லி கூப்பிட கூட  உங்களுக்கு பிடிக்காமல் போனதா?? பாரு கிருபா உன் அண்ணனை ?? “ என்று கிருபாவை இழுத்தாள் மித்ரா..

“ ஆத்தி!!! இத்தனை பேர் இருக்கும் போது அண்ணி ஏன் என்னைய இழுக்கணும்.. நோ நோ கிருபா மாட்டிக்காத.. “ என்று எண்ணியவன்

“ என்ன அண்ணி இப்படி சொல்லிட்டிங்க.. உங்க தளபதி நான் இருக்கேன்.. அண்ணா நீங்க செய்றது எதுவும் சரியில்லை. அண்ணி சொல்ற படி கேளுங்க “ என்று அதட்டலாய் பேசியவன் கண்களின் தன் அண்ணனை கெஞ்சினான்

“ அண்ணா ப்ளீஸ்  அண்ணி சொல்றதுக்கு சரி சொல்லிடுண்ணா “ என்று.

தன் தம்பியின் முகம் பார்த்து சிரித்தவன் “ அம்மா தாயே.. தெரியாம மித்ரான்னு சொல்லிட்டேன்.. போதுமா “ என்று கேட்கவும்

“ என்ன நான் அம்மாவா ?? என்னை பார்த்தா கிழவி மாதிரி இருக்கா ?? திவா இதெல்லாம் கொஞ்சம் கூட சரியே இல்லை உன் அண்ணன் “ என்று தற்பொழுது திவாவை இழுத்தாள்..

“ யப்பாடி கம்பனிக்கு ஆள் வந்திடுச்சு “ என்று கிருபா திவாவை பார்த்து இளித்தான். அவனை முறைத்த திவா

 “ அண்ணி உங்களுக்கு என்ன அண்ணி வந்தது.. அண்ணன்கு போய் கண் செக் பண்ணலாம் “ என்று கூறி அவனும் சரணடைந்தான்..

இதை எல்லாம் பார்த்த பிரபா “ அண்ணி நான் எப்பையும் உங்க பக்கம் தான்..” என்று அவனும்  மித்ராவின் கட்சியில் சேர்ந்தான். இப்படியாக மித்ரா மனோவின் தம்பிகளை வைத்தே அவனை தன் வழிக்கு கொண்டுவந்தாள்..

“ ராங்கி பிடிச்சவ.. எல்லாரையும் வழிக்கு கொண்டு வந்திட்டா.. “ என்று எண்ணியவன் “ ஹ்ம்ம் இப்போ என்ன அங்க மினிஸ்டர் வீட்டுக்கு போகணும் அவ்வளோதானே, சரி நாளைக்கு போகலாம் “ என்றான் மனோ வேறு வழியில்லாமல்.

அவன் மனமோ “ ஹ்ம்ம் மனோ உனக்கு வீட்டில் கூட டிபாசிட் இல்லை டா.. உன் நிலைமை இப்படியா போகணும் ” என்று எண்ணினான்.. மித்ராவிற்கு அவனை பார்த்ததும் சிரிப்பு தான் வந்தது..

இரவின் தனிமையில் தன் கணவனிடம் “ மனு நான் எப்பையும் உங்க கட்சி தான் சரியா.. இந்த மித்ரா எப்பவுமே மனோக்கு தான்.. ஆனா அதுக்காக நீங்க சொல்றதுக்கு எல்லாம் தலையை உருட்டுவேன்னு நினைக்கவேண்டாம்.. “ என்று கூறவும் மனோவிற்கு சிரிப்பு வந்து விட்டது

“ போக்கிரி எப்படியோ எல்லாரையும் நீ உன் பக்கம் வலைச்சிடுற”  என்று கூறியபடி அவளை அவன் வளைத்துக்கொண்டான்..    

அமைச்சர் தர்மதுரையின் இல்லம் ஒரு கனமான அமைதியோடு அனைவரையும் வரவேற்றது.. மித்ரா என்னவோ பிடிவாதமாக கிளம்பிவிட்டாள். ஆனால் அங்கே சென்று யாரிடம் என்ன பேசுவது என தெரியவில்லை..

இவர்கள் வந்த விஷயம் அறிந்து முதலில் வெளி வந்தது நளினா தான்.. மித்ராவிற்கு முதலில் நளினாவிடம் என்ன பேசுவது என்பது தெரியவில்லை.. ஆனாலும் அவள் அருகில் சென்று கைகளை பிடித்துக்கொண்டாள்..

நளினா தான் முதலில் ஆரம்பித்தாள் “ இத்தனை நடந்த பிறகும் நீங்க எல்லாம் எங்க வீட்டுக்கு வந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்.. உங்க நல்ல மனசை காட்டுது.. “ என்றாள்..

“ நாங்க எல்லாம் அன்னைக்கே வந்திருக்கணும், ஆனா ஆளுக்கு ஒவ்வொரு ஊருக்கு போயிட்டாங்க,.. எல்லாரும் வந்தா தான் நல்லா இருக்கும், அதான் இத்தனை நாள் ஆயிட்டது “ என்றாள் மித்ரா..

“ ம்ம் உட்காருங்க. எல்லாரும் ஏன் நின்னுட்டே இருக்கீங்க ??? உட்காருங்க.. மனோ தம்பி உட்காருங்க..” என்று நல்லவிதமாகவே வரவேற்றாள் நளினா.. மனோவோ என்ன சொல்லி இவர்களுக்கு ஆறுதல் கூறுவது என யோசனையில் இருந்தான்..

“ சார் இல்லையா ??” என்று அமைச்சரை பற்றி கேட்டான்..

“ இல்ல தம்பி மாமா ஊருக்கு போயிட்டாங்க.. இங்கயே எத்தனை நாள் தான் இருக்கிறது?? அதுவும் இல்லாம அவருக்கு இங்க இருந்தா, எல்லாம் நியாபகம் வந்து ரொம்ப கவலை படுறார். அதான் நானே ஊருக்கு அனுப்பி வைத்தேன் “

“ அம்மா….  ம்ம் உங்களை அம்மான்னு கூப்பிடலாமா ??” என்று நளினாவின் முகம் நோக்கினாள் மித்ரா..

“ அதுகென்னமா.. தாராளமா கூப்பிடு.. “

“ இல்லை.. அது.. வந்து காவேரி.. காவேரியை நான் பார்க்கலமா??” மித்ரா இப்படி கேட்கவும் முதலில் நளினா தயங்கினார் பிறகு அவளை அழைத்துக்கொண்டு காவேரியின் அறைக்கு சென்றார்.

பெண்கள் இப்படி ஒதுங்கிவிட ஆண்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி அமர்ந்து இருந்தனர்..

“ இதுக்கு தான் வேண்டாம்னு சொன்னேன் கேட்டாளா ??” என்று மனதில் புலம்பியபடி அமர்ந்து இருந்தான் மனோ.. இவர்களோடு திவா மட்டுமே வந்திருந்தான். கிருபாவும் பிரபாவும் “ நாங்கள வந்து என்ன செய்ய போகிறோம் என்று கூறிவிட்டனர் “

மனோவிற்கு எதோ போன் கால் வரவும் தன் அலைபேசியுடன் வெளியில் சென்று விட்டான். திவாவோ திருவிழாவில் காணமல் போனவன் போல முழித்துக்கொண்டு இருந்தான்.. என்ன செய்வது என்று தெரியாமல் சுற்றி முற்றி பார்த்தபடி அமர்ந்து இருந்தான்.

அப்படி பார்க்கும் பொழுது அங்கே சுவரில் மாற்றியிருந்த ஒரு புகைப்படம் அவனை ஈர்த்தது, ஈர்த்தது மட்டுமில்லாமல் அவனை இழுத்தது என்றே சொல்ல வேண்டும்..

எழுந்து அதனருகில் சென்று பார்த்தவன் திகைத்து நின்றான்.. அழகாய், அம்சமாய் தேவதையை போல காவேரி புன்னகைத்து கொண்டு இருந்தாள்.. இளமையும் அழகும், அமைதியும் போட்டி போட்டு கொண்டு சிரித்தன அவள் முகத்தில்.. திவாவிற்கு பார்த்த மாத்திரத்தில் அவளை பிடித்துவிட்டது..

பிடித்துவிட்டது என்று கூறுவதை விட அவளிடம் இவன் காதல் கொண்டான் என்றே சொல்ல வேண்டும்.. திவாவிற்கு தன்னை எண்ணும் போது ஆச்சரியமாக இருந்தது. எப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை இங்கே நிகழ்கிறது, என்னமாதிரி பிரச்சனை நடந்து முடிந்து இருக்கிறது, அந்த பிரச்சனையின் முக்கிய காரண கர்த்தாவின் மகள் மீதே காதல்.. அதிலும் கண்டதும் காதல்..

நேரில் கூட காணவில்லை, புகைபடத்தில் பார்த்ததும் காதல்.. இதை வெளியே சொன்னால் யாராவது இதை ஏற்பார்களா ??? முதலில் தன் அண்ணன் அண்ணி தான் இதை ஒப்புவார்களா?? அவர்கள் வாழ்கையில் நடந்த அத்தனை சூறாவளிக்கு காரணமானவனின் மகளை தான் காதலிப்பதா ???

அப்படியே காதலித்தாலும் அது சாத்தியமாகுமா?? காதல் வந்த மறுநிமிடமே இப்படி பல கேள்விகள் தோன்றி அவனை கலங்கடித்தது. ஏனோ காவேரியை நேரில் காண வேண்டும் போல துடித்த மனதை மிகவும் சிரமப்பட்டு அடக்கினான்..

“ டேய் திவா இன்னும் உன் அண்ணி வெளிய வரலையா ?? பேச ஆள் கிடைச்சா போதுமே.. போ டா திவா அவளை கூப்பிடு.. எனக்கும் வேலை இருக்கு “ என்று மனோ கூற “சரின்னா” என்றபடி காவேரியின் அரை கதவை தட்டினான்..  அவன் மனதில் ஒரு நப்பாசை நேரில் ஒரு பார்வை அவளை காண முடியுமா என்ன ??

நளினா தான் வந்து கதவை திறந்தார்.. மித்ரா உள்ளே காவேரியின் அருகில் அமர்ந்து இருந்தாள். “ என்ன திவா ??”

“ அது அண்ணி அண்ணன் வர சொன்னாங்க… நேரம் ஆகிறதாம் “ என்று பேச்சு மட்டுமே மித்ராவிடம் இருந்தது.. பார்வை அனைத்தும் காவேரியிடம் இருந்தது..

“ எத்தனை அழகாய் சிரித்து கொண்டு இருந்தாள்.. பாவி பாவி நீயெல்லாம் ஒரு அப்பனா டா.. கிராதக… இப்படி அவளை கஷ்டபடுத்த உனக்கு எப்படி டா மனசு வந்தது “ என்று இறந்து போன சுந்தரை திட்டினான் திவா.. திவா அறையின் வெளியே நிற்கவும் காவேரியும் யாரென்பது போல திரும்பி பார்த்தாள் தான்..

அவளது அந்த பார்வையை திவா மனதில் பதித்து கொண்டான்.. அவனையும் அறியாமல் அவன் மனம் “ உன்னை நான் ரொம்ப சந்தோசமா, பாதுகாப்பா பார்த்துப்பேன் கவி… நீ எதுக்கும் கவலை படாதே, “ என்று கூறி கொண்டது..

“ என்னது கவியா ???” என்று திகைத்து நின்றவனை, மித்ரா “ என்ன திவா போலாமா ?? அப்படியே நின்னுட்ட.. வா வா “ என்று அழைத்துக்கொண்டு கிளம்பினாள்..  நாளினா வாசல் வரை வந்து வழியனுப்பினாள்..  

காரில் “ என்னங்க ராத்திரி கொஞ்சம் சீக்கிரமா வந்திடுங்க. ஒரு முக்கியமான விசயம் பேசணும் “ என்று கூறியவளை புரியாது பார்த்தனர் அண்ணன் தம்பி இருவரும்..

 

ஏழேழு ஜென்மத்திற்கும் உன்னோடு

வாழ எண்ணம் கொண்டேன்…

உன்னை காணவே நான் செய்த

தவம் வரமாய் மாரியதின்று…

காத்திரு பெண்ணே உன்னை

கரம் பிடிக்கும் நாள்

வெகு தூரம் இல்லை                   

                                               

      

                                 

                           மாயம் – தொடரும்

                                  

                                                                                               

Advertisement