Advertisement

                    மாயவனோ !! தூயவனோ – 25           

“கிளம்பு..”  ஒற்றை வார்த்தையில் முடித்துவிட்டான் மனோகரன்.

தன்னிடம் சண்டையிடுவான், கேள்வி கேட்பான், கோவப்படுவான் என்றெல்லாம் எதிர்பார்த்து காத்திருந்த மித்ராவிற்கு மனோவின் இந்த ஒற்றை வார்த்தை வியப்பை தந்தது..

திகைத்து அவனை பார்த்தாள்.

“ கிளம்புன்னு சொன்னேன் “

மனோகரனின் இந்த அழுத்தமான வார்த்தைக்கு அமைதியாக ஒத்துழைப்பதை தவிர வேறு வழியில்லை என்று தெரிந்துகொண்டாள் மித்ரா..

“ மதர், தனம் அக்காக்கிட்ட எல்லாம் சொல்லணும் “  என்று மென்று விழுங்கினாள்..

“ ம்ம் “ என்று கூறிவிட்டு எழுந்து சென்று விட்டான் மனோ குளித்து தயாராக.. மித்ராவிற்கு உறங்கி எழுந்தவுடன் இப்படி ஒரு அதிர்ச்சி காத்திருக்கும் என்று சற்றும் அவள் நினைக்கவில்லை..

“ கடவுளே என்ன இது ??? மனுவை எப்படி நான் சமாளிக்க  போகிறேன்” என்று நினைத்து கொண்டே இருவருக்கும் பருக காப்பியை கலக்கினாள்..

சிறு நேரத்திற்கு பின் உடை மாற்றி வந்தவன் “ இதில் ஒன்றும் குறைச்சல் இல்லை “ என்பது போல பார்த்து அவள் கொடுத்த காப்பியை பருகினான்..

அவனிடம் இருந்து தப்பிக்கவே வேகமாக குளியலறை நோக்கி ஓடினாள் மித்ரா.. இருவருக்கும் இடையே வேறு எந்த பேச்சு வார்த்தையும் இல்லை.. மித்ரவிற்கோ கேட்க ஆயிரம் கேள்விகள் இருந்தன.

மனோவின் முகத்தை பார்த்தப்படி அமர்ந்து இருந்தாள். ஆனால் அவனோ அவளை சிறிதும் கண்டுகொள்ளவில்லை. சாலையை மட்டுமே பார்த்தபடி காரை ஒட்டிக்கொண்டு இருந்தான்..

“ சும்மாவே இவன் ஆடுவான்.. இதுல நான் சலங்கைய வேற கட்டிவிட்டு, ஹை பிட்ச்ல சாங் வேற போட்டுவிட்டா ரொம்ப ஆடுவானே” என்று தனக்குள் புலம்பியபடி இருந்தால் மித்ரா..

மனோவையும், மித்ரவையும் ஒன்றாய் பார்த்த மதர், சந்தோசமாக இருவரையும் ஆசிர்வதித்தார்..

 “ எப்பையும் இதே ஒற்றுமையோட, சந்தோசமா இருக்கனும்.. போனது எல்லாம் போகட்டும், இனிமே உங்க எதிர்காலம் சிறப்பா இருக்க நான் கர்தரை பிரார்திக்கிறேன்.. ஆண்டவன் குடுக்கிற வாழ்கையை நல்லபடியா வாழ்ந்து முடிக்கணும் “ என்று கூறி சென்றார்..

தனத்தை பார்த்ததும் மித்ராவிற்கு அழுகை வந்துவிட்டது..

“ அக்கா “ என்று கட்டிகொண்டாள்.

தனத்திற்கும் கண்கள் கலங்கின “ இந்த அக்காவை மறந்திட மாட்டியே கண்ணு ???”

“ என்னக்கா இப்படி சொல்றிங்க ??? பேசாம நீங்களும் எங்க கூட வாங்களேன்..  “ என்று கூறியபடி தன் கணவனை பார்த்தாள்.

மனோவும் “ அக்கா, நீங்க இத்தனை நாள் மித்ராவை நல்லா பார்த்துகிட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ்.. நீங்க எங்ககூட வாங்க. இங்க தனியா இருந்து என்ன செய்ய போறீங்க ??”

“ அதில்லை தம்பி இங்க இருந்தே பழகிட்டேன்.. பிறந்து வளர்ந்த ஊரு.. ஆனா மாசம் ஒருதரமாவது மித்ராவை இங்க கூட்டிட்டு வாங்க.”

“ கண்டிப்பா அக்கா.. உங்களுக்கு எப்ப அங்க வரணும் தோணுதோ சொல்லுங்க நாங்களே வந்து உங்களை கூட்டி போறோம்.. “

“ அப்புறம் தம்பி, மித்ரா சின்ன பொண்ணு.. தெரிஞ்சோ தெரியாமையோ இப்படி பண்ணிடுச்சு.. ஆனா அங்க இருந்து வந்து ஒருநாள் கூட இது சந்தோசமா இல்லை.. எப்பையும் உங்களை பத்தி பேச்சு தான்.. நினைப்பு தான்.. நேத்து கூட அழுதுக்கிட்டு தான் இருந்தா.. அதுனால…..”

“ நீங்க கவலையே படவேண்டாம் கா.. என் பொண்டாட்டியை நான் நல்லவிதாமவே பார்த்துப்பேன்.”   என்று அந்த நல்லவிதத்தில் ஒரு அழுத்தம் கொடுத்து கூறினான்..

கிருபாவையும், பிரபாவையும் பார்த்து “ நீங்க வரலையா டா??” என்று மித்ரா கேட்கவும்

“ அண்ணி நாங்க கேம்பிற்கு தான் வந்தோம்.. எதார்ச்சையா உங்களை பார்க்க நேர்ந்தது.. அப்புறம் அண்ணி நேத்து நாங்க ரீனா பத்தி சொன்னது எல்லாம் சும்மா தான்.. “ என்று கிருபா கூறவும், மித்ராவிற்கு மனதில் ஒருவித நிம்மதி பரவியது..

அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு மனோவும் மித்ராவும் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.. வீடு வந்து சேரும் வரை மௌனம்… மௌனம்.. மௌனம் மட்டுமே.. மனோகரனோ எதுவும் பேசவேயில்லை. மித்ராவிற்கு எங்கே தான் பேசினால் சீரிவிடுவானோ என்ற பயம்..

மித்ராவிற்கு வீட்டை பார்க்கவும் பயங்கர ஆதிர்ச்சி, முதல் முறை வந்தபோது இருந்தது போல கட்டுக்காவல் இல்லை.. துப்பாக்கி ஏந்திய ஆட்கள் இல்லை.. எல்லாமே சாதரணமாக இருந்தது.. ஆச்சரியமாக மனோவை பார்த்தாள். அவனோ தன் தோளை குலுக்கிவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.

“ ஒருவேளை.. ஒரு வேளை.. எல்லாம்.. எல்லாம்.. எல்லா பிரச்சனையும் தீர்ந்ததோ ?? இது … இது எப்படி சாத்தியம்.. மனு.. மனு கிட்ட நான் இதை எப்படி கேட்பேன்.. சும்மாவே எதுவும் பேசாமல் இருக்கிறான்..” மித்ராவிற்கு மறுபடியும் குழப்பம் ஆரம்பித்துவிட்டது..

“ என்ன அண்ணி உள்ள வராம அங்கேயே நிக்கிறிங்க ??” என்று கேட்டபடி வாயிலுக்கே வந்தான் திவா..

“ திவா !!!” என்று அவன் கைகளை பிடித்துகொண்டாள்.. இந்த வீட்டில் அவளை புரிந்து தன்மையாய் நடந்துகொள்ளும் ஒரே ஜீவன்..

 “ அண்ணி.. எதையும் யோசிக்கவேண்டாம்.. எல்லாம் நல்லபடியா நடக்கும். உள்ள வாங்க “ என்று கை பிடித்து அழைத்து சென்றான்.

மித்ரா உள்ளே வரவும் பொன்னி வந்து “ மித்ராம்மா வந்துட்டிங்களா ?? நீங்க இல்லாம வீடே வீடு மாதிரி இல்ல.. யப்பா இப்போதான் நிம்மதியா இருக்கு.. இனிமே மறுபடியும் இங்க சிரிப்பும் கும்மாளமும் தான் “ என்று கூறி சென்றாள்.

மித்ராவிற்கு தன மீதே கோவம் வந்தது. “ எத்தனை அழகாய் தன்னை மீண்டும் உறவாய் ஏற்றுக்கொண்டனர்.. ஆனால் நான்.. நான் என்ன செய்தேன்.. இவர்களை விட்டு ஓட்டினேன்.. “ என்று தன்னை தானே கடிந்து கொண்டாள்..

“ அண்ணி பிரெஷப் ஆகிட்டு வாங்க.. சாப்பிடலாம்.. “ என்று திவா கூறவும் தங்கள் அறைக்குள் நுழைந்தாள்.. முன்பு எப்படி இருந்ததோ இப்பொழுதும் அப்படியே இருந்தது.. எந்த மாற்றமும் இல்லை..

ஆனால் மாற்றத்தை மனோ அவன் நடத்தையில் காட்டினான்.. அழைத்து வந்ததோடு சரி.. அவள் முகம் கூட பார்க்கவில்லை. மித்ரா முகம் கழுவி வந்தாள். அவள் உடைகள் எல்லாம் அப்படியே இருந்தன.. அதில் ஒன்றை எடுத்து உடுத்திக்கொண்டாள்..

அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு மனோ வெளியே சென்று திவாவோடு பேசிக்கொண்டு இருந்தான். திருமணமான புதிதில் இங்கு வந்த பொழுதில் கூட மித்ராவிற்கு இத்தனை தயக்கம் இல்லை.. சுலபமாக இந்த வீட்டில் பொருந்திவிட்டால். ஆனால் இன்றோ  மூச்சு விடுவது கூட சிரமமாய் இருந்தது..

என்ன செய்வது எப்படி நடந்துகொள்வது எதுவும் அவளுக்கு விளங்கவில்லை. “ அண்ணி சாப்பிட வாங்க..”

“ ஹா !!! இதோ வரேன் திவா “ என்று சென்று தானே பரிமாறினாள்.. ஆனால் மனோ அவனே எடுத்து வைத்து உண்டுகொண்டான்.. மித்ராவிற்கு முகத்தில் அடித்த மாதிரி இருந்தது..

இரவு உணவு முடிந்து தங்கள் அறைக்கு வந்த பின்பு “ இன்னும் ரெண்டு நாளில் உன் அப்பா அம்மா வந்திடுவாங்க.. அதுவரைக்கும் பொறுத்துக்கோ “ என்று கூறி தன்னிடத்தில் படுத்து விட்டான் மனோ.. அவளுக்கு பேரதிர்ச்சியாய் இருந்தது..

“ என்ன சொல்கிறான்  இவன் ..?? ரெண்டு நாள்.. அப்படி என்றால்.. என்ன அர்த்தம்??  என்.. என்னை போக சொல்கிறானா ??? அதெப்படி இவனால் முடியும்..”  நெஞ்சை அடைத்துக்கொண்டு அழுகை வந்தது..

“அவனை விட்டு போனவள் தான் நீ “ என்று அவளது மனமே இடித்தது.

“ மனு… மனு “ என்பதை தவிர அவள் மனம் வேறெதுவும் கூறவில்லை..  உறக்கம் வராமல் புரண்டுகொண்டு இருந்தாள்.. மனோகரனும் உறங்கவில்லை. மித்ராவை தான் கவனித்து கொண்டு இருந்தான்.

அவன் மனதில் கோவமோ இல்லை எரிச்சலோ எதுவும் இல்லை மாறாக வருத்தம், காயம் இருந்தது..

“ இவளுக்கு நான் என்ன குறை வைத்தேன் ???” என்றே எண்ணி எண்ணி தவித்தான்.. அவளிடம் கேட்கலாம் என்றாலும் அவனது ஆண் மனம் தடுத்தது..

“ வேண்டாம் மனோ.. அவளா தானே போனா.. இப்போ அவளே வந்து உன்கிட்ட பேசட்டும்.. நீயா எதுவும் பேசி. அவள் ஏதாவது தப்பா நினைச்சுகிட்டா என்ன பண்ணுறது ??” என்று அவனை போட்டு அடக்கியது..

மித்ராவோ ”பேசுறானா பாரு.. பெரிய இவன் மாதிரி வந்தான், இங்க கூட்டி வந்ததோட வேலை முடிஞ்சதுன்னு படுத்துட்டான்..” என்று புலம்பினாள்.. ஆனால் இதுவே இவர்களின் வாடிக்கை ஆனது.

பொழுதை நெட்டி தள்ள வேண்டியதாய் இருந்தது மித்ராவிற்கு.. கிருபா பிரபா எல்லாம் இருந்தாலாவது நன்றாய் இருக்கும்.. இந்த திவா ஓரிரு வார்த்தைகள் பேசுவான். அதிலும் அவன் அண்ணன் இருந்தால் அதற்கும் பஞ்சம் வந்துவிடும்..

முன்பாவது மனோவுடன் அரட்டை அடிப்பாள்.. இப்பொழுது அது துணி கொண்டு துடைத்து போலானது..     

ஒரு வார்த்தை கூட அவனிடம் இருந்து வாங்க முடியவில்லை மித்ராவால்.. “ இவனே இப்படி இருக்கானே. இதுல அப்பா அம்மா வந்தா அவ்வளோ தான்.. எல்லாரும் சேர்ந்து என்னைய உண்டு இல்லைன்னு ஆக்கிடுவாங்க.. இதுல அந்த சுந்தர் என்ன ஆனான்னு தெரியலை.. கடவுளே ஏன் எப்பையும் எனக்கு கேள்விகளை மட்டும் கொடுக்கிற ??” என்று கடவுளிடம் கேள்வி கேட்டாள் மித்ரா..

இப்படியே நினைவாக உறங்கியவள் மறுநாள் காலை கண் விழிக்கும் பொழுது அவளது தாய் மற்றும் தந்தையின் முகத்தில் தான் விழித்தாள்.. தூக்கத்தில் இருந்து விழித்தவளுக்கு முதலில் காண்பது கனவா இல்லை நிஜமா என்றே புரியவில்லை..

தன் பெற்றோரை கண்டு ஆறுமாதங்கள் ஆகும் அல்லவா.. “ அப்படியானால் கல்யாணம் முடிஞ்சும் ஆறு மாசம் ஆச்சா ??? அரை வருடம்.. “ இப்படி சிந்தனை செய்யும் பொழுதே நடந்த அனைத்தும் அவள் மனதில் மீண்டும் நினைவு வந்தன.. ஆனால் அதை எல்லாம் தள்ளிவிட்டு

“ அப்பா அம்மா “ என்று ஓடி சென்று கட்டிகொண்டாள்.. என்னதான் மித்ரா வீட்டை விட்டு சென்றது கோவம் தந்தாலும் இத்தனை நாள் கழித்து மகளை பார்கிறார்கள் அல்லவா பாசமே மேலோங்கியது..

“ மித்ரா குட்டி… “ என்று அவர்களும் இவளை அனைத்துகொண்டனர். இத்தனை நாள் கழித்து ஒருவரை ஒருவர் பார்கிறார்கள். பேசுவதற்கு ஆயிரம் இருக்கும் என்று நினைத்து மனோகரன் இவர்களுக்கு தனிமை தந்து வெளியேறினான்..

மூவருக்கும் பேச நிறைய விஷயங்கள் இருந்தன.. மித்ரா தான் அழுது தீர்த்தாள்.. “ ஏன் பா ??? ஏன் மா என்னைய இப்படி விட்டிட்டு போனிங்க ?? நான் எவ்வளோ தவிச்சேன் தெரியுமா ??? “ என்று மீண்டும் மீண்டும் அதையே கேட்டாள்..

“போனது எல்லாம் போகட்டும் மித்ரா குட்டி.. இப்பதான் அப்பா அம்மா வந்துட்டோமே.. எல்லாம் நல்லதுக்குதான் டா. அழ கூடாது.. “ என்று கண்களை துடைத்தார் ரவிச்சந்திரன்..

ஆனால் தாமரையோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை.. “ அம்மா “ என்று அவர் முகம் பார்த்தாள் மித்ரா.. இத்தனை நேரம் இருந்த கனிந்த முகம் மாறி கடினாமாக இருந்தது..

“ என்னம்மா ??” அவரிடம் பதில் இல்லை..

“ அம்மா என்னம்மா.. பேசுங்க.. ஏன் இப்படி இருக்க ??? என் மேல கோவம்னா அடி, திட்டு, என்னவேனா பண்ணிக்கோ ஆனா இப்படி பேசாம இருக்காத மா “

“ அதெப்படி??? நீ என் மகளா மட்டும் இருந்தா பரவாயில்ல.. இப்போ நீ இன்னொருத்தர் மனைவி.. முதல் உரிமை உன் புருசனுக்கு தான்.. நாங்க எல்லாம் அப்புறம் தான் “ என்று முகம் திருப்பிகொண்டார்.

“ அம்மா என்னம்மா இப்படி  சொல்லுற ??” என்று கேட்டபடி தன் பெற்றோர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்தாள்..

ரவிச்சந்திரன் “ என்ன தாமரை இது ??? வந்த உடனே இதை பத்தி பேச வேண்டாம்ன்னு சொன்னேனா இல்லையா ??” என்று கடிந்தார்..

“ முடியலைங்க.. என்னால முடியலை.. இவளுக்கு ஒரு நல்ல வாழ்கைய அமைச்சு குடுக்க நம்ம எப்படி துடிச்சோம்.. ஆனா இப்படி ஒரே நிமிசத்துல எல்லாத்தையும் கெடுத்து வச்சு இருக்காளே.. நான் என்ன சொல்லட்டும். இவளை தூக்கி வச்சு கொஞ்ச சொல்லுறிங்களா ??” என்று அரட்டினார்..

“ என்னம்மா என்ன சொல்றிங்க ?? நான்… நான் வீட்டை விட்டு போனது தப்பு தான்.. ஆனா அதுக்கு காரணம் கேட்காம இப்படி பேசுற ??” என்று தேம்பி தேம்பி அழுதாள் மித்ரா..

தன் மகளை பார்க்க தாமரைக்கும் பாவமாக தான் இருந்தது.. ஆனால் ஒரு தாயாக அவரால் என்ன செய்ய முடியும். மகளின் வாழ்க்கை தானே ஒவ்வொரு தாய்க்கும் பெரியது,, அதனால்

“ இங்க பாரு மித்ரா.. உன் வீட்டுக்காரரே இன்னும் உன்கிட்ட காரணம் கேட்கலை.. அதுவும் இல்லாம நீதான் எல்லாத்தையும் லெட்டர்ல தெளிவா சொல்லிட்டுதானே போன.. அதை விட என்ன வேண்டும் ??? ஏன் டி ?? ஏன் டி இப்படி பண்ண ??? உனக்கு மனோ தம்பி என்ன குறை வச்சாறு???”

“ இப்போ அவர் எங்களை இங்க வர சொன்னது உன்னைய எங்ககிட்ட ஒப்படைக்கத்தான்..” என்று ஒரு இடியை இறக்கினார் தாமரை..

“ அம்மா !!! “

“ இப்ப அழுது என்ன டி பிரயோஜனம் ??? ஒரு வார்த்தை.. ஒரு வார்த்தை என்கிட்டே போறதுக்கு முன்ன பேசியிருக்கலாமே??? அப்படி என்ன டி வெறுப்பு உனக்கு ?? இதை விட உனக்கு நல்ல மாப்பிள்ளை உலகம் முழுக்க தேடுனாலும் கிடைக்கமாட்டாங்க டி.. “ என்று தன் மகளுக்காக தான் வேதனை பட்டார் தாமரை..

மித்ராவிற்கு என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை.. “ மனுவும்  அப்படிதான் நினைத்துகொண்டு இருக்கின்றானா ??? நான்.. நான் எப்படி அவனை வெறுக்க முடியும்.. ஐயோ !! மனு ஒரு வார்த்தை என்கிட்டே கேளேன்.. நான் நான் எல்லாத்தையும் சொல்லிடுவேனே “ என்று தவித்தாள்..

ஆனால் தாமரையோ “ மித்ரா நல்லா கேட்டுக்கோ.. உனக்கு நாங்க கல்யாணம் பண்ணி குடுத்தாச்சு.. உன் வாழ்க்கைய கட்டி காப்பாத்தி வச்சுக்க வேண்டியது உன் திறமை. உனக்கும் மாப்பிள்ளைக்கும் நடுவில என்ன பிரச்னைன்னு எங்களுக்கு தெரியாது.. தெரிஞ்சுக்கவும் நாங்க விரும்பலை.. “

“ அவர் உன்னைய எங்க கூட அனுப்புற எண்ணத்துல இருக்கார்.. ஆனா நாங்க உன்னைய அங்க கூட்டிட்டு போறதா இல்லை.. ஏன்னா அந்த வீட்டுக்கு நீ வரணும்னா உன் புருசனோட தான் வரணும்.. “

“ நீ மாப்பிளை கிட்ட என்ன பேசுவியோ, ஏது பேசுவியோ எங்களுக்கு தெரியாது. ஆனா உன் வாழ்க்கைய காப்பாத்திக்க இதுதான் கடைசி வாய்ப்பு.. புரிஞ்சு நடந்துக்கோ “

“ என்ன தாமரை நீ, அவளே அழுதுகிட்டு இருக்கா நீ வேற இப்படி பேசுற ?? இப்ப என்ன கொஞ்ச நாள் வேணும்னா மித்ரா நாம் வீட்டுல வந்து இருக்கட்டும். அப்புறம் ரெண்டு பேருக்கும் நடுவில எல்லாம் சரியானதும் இங்க வரட்டும் “

“ என்னங்க பேசுறிங்க நீங்க.. இவ அங்க நம்மகூட வந்தா எப்படிங்க ரெண்டு பேருக்கும் எல்லாம் சரியாகும்.. மித்ரா இங்க தான் இருக்கனும்.. மாப்பிள்ளைகிட்ட சொல்லிட்டு நம்ம கிளம்புற வழிய பார்க்கலாம்.. “ என்று பிடிவாதமாய் முடித்துவிட்டார் தாமரை..

அவர் கூறுவதும் நன்மைக்குத்தானே.. ஆனால் மித்ரவிற்கோ தன் பெற்றோர்கள் பேசுவது எதுவும் மனதில் பதியவில்லை.. மனோ அவளை அனுப்பிவிடுவான் என்ற செய்தியிலேயே அவள் மனம் உறைந்து நின்றது..

“ இல்லை.. என்னால முடியாது.. ஒரு தடவ நான் பண்ண தப்பே போதும்.. நான்.. நான் மறுபடியும் மனுவை விட்டு போகமாட்டேன்.. நோ … “ என்று தனக்குள்ள உருப்போட்டு கொண்டு இருந்தாள்..

அவளது முகத்தை கண்ட தாமரைக்கு திருப்தி. “ அவ கொஞ்சம் யோசிக்கட்டும். நீங்க வாங்க போகலாம் “ என்று கூறி மனோகரனை பார்க்க சென்றனர்.

அவனோ இறுகிய முகத்துடன் அமர்ந்து இருந்தான்..

“ மாப்பிள்ளை..”

“ என்ன மாமா ?? என்ன அத்தை. இப்போ உங்களுக்கு நிம்மதியா??? எல்லா பிரச்னையும் முடிஞ்சது.. மித்ராக்கு இருந்த ஆபத்து எல்லாம் காணாம போயிடுச்சு. அவளும் திரும்பி வந்துட்டா..  இப்போ உங்களுக்கு சந்தோசம் தானே “ என்றான் தன் கவலையை மறைத்த குரலில்..

ரவிச்சந்திரன் “ உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுறதுன்னே எங்களுக்கு தெரியல மனோ தம்பி.. ஆனா.. பொண்ணை பெத்த எனக்கு தான் தெரியும், இத்தனை நாளா நானும் தாமரையும் எப்படி மனசளவில வேதனை பட்டோம்னு..”

“ இப்போ எல்லா பிரச்சனையும் சரி ஆயிடுச்சுதான்.. ஆனா எங்களுக்கு என்னவோ மனசுக்கு ரொம்ப சங்கடமா இருக்கே மனோ “

“ ஏன் ?? ஏன் மாமா இப்படி சொல்றிங்க ??? இங்கே எதுவும் யாரும் ஏதாவது சொன்னாங்களா என்ன ?? ஏன் உங்களுக்கு என்ன சங்கடம்.. மித்.. மித்ரா எதாவது சொன்னாளா ???” என்று படபடத்தான்..

“ அவ எதுவுமே சொல்லல அதான் சங்கடமே.. ஏன் வீட்டை விட்டு போனான்னு ஒரு வார்த்தை சொல்லல.. நீங்களும் கேட்கிற மாதிரி தெரியல.. உங்க வாழ்கைய கேடுதுட்டோமோன்னு இருக்கு.. “

“ மாமா … அதெல்லாம் இல்லை.. நானா தானே வந்து உங்ககிட்ட மித்ராவை பொண்ணு கேட்டேன். மித்ரா என்னோட பொறுப்பு.. என்கூட இருந்தாலும் சரி, இல்ல உங்ககூட வந்தாலும் சரி, மித்ரா தான் என் மனைவி. அதில் எந்த மாற்றமும் இல்லை. சோ நீங்க கவலையே படவேண்டாம்..

“ அதெப்படி மாப்பிள்ளை கவலையே இல்லாம இருக்க முடியும்.. கல்யாணம் தான் எப்படி எப்படியோ நடந்திடுச்சு.. பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்தாலும் உங்க வாழ்க்கை இன்னும் சீராகலையே “ என்று கண் கலங்கினார் தாமரை..

“ ம்ம் அத்தை.. ப்ளீஸ் இது.. இது பத்தி பேசவேண்டாம்.. மித்ரா மனசுல என்ன இருக்குன்னு யாருக்கும் தெரியாது.. ஆனா நிச்சயமா வீட்டை விட்டு போனதுக்கு ஒரு காரணம் இருக்கனும். அவளுக்கு அது எப்போ நம்மகிட்ட சொல்லணுமோ அப்போ சொல்லட்டும்..”

“ அதுவும் இல்லாம, அவள்… அவளுக்கு இங்க இருக்க பிடிக்கலைன்னு நினைக்கிறேன். சோ நீங்க மித்ராவை கூட்டி போங்க “ என்றான் ஒரு மாதிரி குரலில்..

இவை அனைத்தும் மித்ராவின் காதுகளில் விழுந்தபடிதான் இருந்தன.. அவள் மனமோ சொல்ல முடியாத வேதனையில் இருந்தது.. தன் நிலையை எண்ணி எண்ணி வருந்தினாள்.. அத்தனை பிரச்சனைகள் நடந்த போது கூட தன்னை வெளியே அனுப்பாதவன், இன்று அனைத்தும் முடிந்து போது போக சொல்கிறான்..

தாலி கட்டியவன் போ என்று கூறுவதும், பெற்ற தாயவள் வராதே என்று கூறுவதும் யார் வாழ்க்கையிலும் நடக்காத ஒன்றாக இருக்கும் என்றே எண்ணினாள் மித்ரா.. அவளுக்கு மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்றே புரியவில்லை..

நடந்த அனைத்தையும் அவள் மனம் மீண்டும் ஒரு முறை அசைபோட்டது.. ஒன்று மட்டும் அவளுக்கு தெளிவாய் விளங்கியது, இனி ஒரு நொடி கூட மனோ இல்லாமல் அவளால் இருக்க முடியாது.. இதற்கு முன் எப்படியோ, ஆனால் இப்பொழுது மீண்டும் மனோவோடு சேர்ந்து வாழ வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.

மித்ரா நன்றாக யோசித்தாள்.. தெளிவாக ஒரு முடிவும் எடுத்தாள்.. கண்களை துடைத்துக்கொண்டு குளித்து முடித்து வெளியே வந்தாள்.. நேராக பூஜை அறைக்கு சென்று, விளக்கேற்றி மனமுறுக வேண்டி நின்றாள்..

அங்கே அவள் வைத்துப்போன இடத்தில் சாவி கொத்து அப்படியே இருந்தது.. ஒரு புன்னகையோடு அதை தன் கையில் எடுத்து பார்த்தவள், இடுப்பில் சொருகி கொண்டாள்..

பின் “ பொன்னி அக்கா.. என்ன டிபன் பண்ணி இருக்கீங்க ?? மதியம் சமையலுக்கு காய்கறி எல்லாம் இருக்கா ??” என்று நொடியில் அவ்வீட்டு மனுசியாய் மாறிவிட்டாள் மித்ரா..

திவாவிற்க்கும், தன் பெற்றோருக்கும் பார்த்து பார்த்து பரிமாறினாள். மனோ அமைதியாக இதை எல்லாம் பார்த்தபடி தான் உண்டுகொண்டு இருந்தான்.  அவன் முகமோ யோசனையை வெளிகாட்டியது.. மித்ராவும் அவனை பார்த்தவண்ணம் தான் இருந்தாள்..

சிறிது நேரம் இருந்துவிட்டு தாமரையும் ரவிச்சந்திரனும் அவர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர்.. செல்வதற்கு முன் மனோகரனிடம் சிறிது நேரம் பேசினர். ஒரு வார்த்தை கூட மித்ராவை வா என்று அழைக்கவில்லை. மித்ராவும் அவர்களோடு கிளம்பும் எண்ணத்தில் இல்லை. அவளுக்கு மனோகரனோடு பேசி தீர்க்கவேண்டியது நிறைய இருந்தது..

“ இவன் தாலி கட்டி வான்னு கூப்பிட்டா உடனே வரணும்.. இப்போ போயிடுன்னு சொன்னா உடனே இடத்தை காலி செய்யனுமா ?? என்ன நினைச்சுகிட்டு இருக்கான்.. “ என்று சரியான சந்தர்ப்பம் பார்த்து காத்துகொண்டு இருந்தாள்..

மழை கொட்டி தீர்த்துக்கொண்டு இருந்தது.. இடி மின்னல் மழை… ஆனால் இடியும் மின்னலும் மித்ராவின் மனதிலும் மாறி மாறி போட்டி போட்டுகொண்டு இருந்தன.. மித்ராவின் பெற்றோர்கள் சென்றபின்னும் மனோகரன் அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.. ஏன் போகவில்லை என்று கூட கேட்கவில்லை.. ஏன் இருக்கிறாய் என்றும் கேட்கவில்லை..

இதற்குமேல் மித்ராவிற்கு பொறுமை இல்லை.. மனோகரனை தேடி சென்றாள்.. மாடியில் பால்கனியில் சாய்விருக்கையில் சாய்ந்து அமர்ந்து இருந்தான்.. அவன் கண்களோ மழையை வெறித்தபடி இருந்தது.. மெல்ல நகர்ந்து சென்று அவனிடம் அமர்ந்தாள்..

“ மனு…”

இது.. இது மட்டும் தான் மித்ரா அறிந்தது.. கண் இமைக்கும் நேரத்தில் மனோ அவளை இழுத்து தன் மீது சரித்திருந்தான்.. அவனது கைகளோ அவளை இறுக வளைத்திருந்தன..

“ இவ்வளோ நாளா டி உனக்கு என்கிட்டே வந்து பேச ?? ” என்று கேட்டபடி மேலும் மேலும் இறுக அணைத்தான்.. திகைத்து போய் அவனது அணைப்பிற்குள் இருந்தாள் மித்ரா..

“ சொல்லு டி …”

“ ஏன் போன??? உனக்கு இங்க டி என்ன குறை ?? ”

“ நீ சொல்லற படி எல்லாம் தானே ஆடுனோம்.. சொல்லு டி.. உனக்கு எப்படி என்னைய விட்டு போக மனசு வந்தது ??? பதில் சொல்லு டி ??

“ உனக்கு என் மேல கொஞ்சம் கூட காதல் இல்லையா ?? “

“ஏன் டி போன?? “              

மனோவின் ஒவ்வொரு கேள்விக்கும் அவனது அணைப்பு இறுகிக்கொண்டே போனது.. முத்தங்கள் முழுதாய் ஆக்கிரமித்தன இருவரையும்.. முதலில் திகைத்த மித்ரா அவனின் முரட்டு காதலை கண்டு ஆனந்தம் அடைந்தாள்.. அவனோடு இன்னும் இன்னும் ஒன்றிக்கொண்டாள்..

தன்னிடம் இருந்து விலகுவாள், திமிருவாள், கோவப்படுவாள் என்றெல்லாம் எதிர்பார்த்தே மனோ அணைப்பை இறுக்கியது, ஆனால் அவன் மனைவியோ மாறாக இழைந்து கொடுத்தாள்..

“ மித்து !!!!” திகைத்து அவள் முகம் நோக்கினான்..

“ மனு “ என்ற கதறலோடு அவனது மார்பில் மேலும் முகம் புதைத்தாள்.. “

“மித்து… மித்து.. என் மித்து “ என்று கூறி மேலும் முன்னேறினான்..

“ சொல்லு டி ஏன் போன ?? ”

“ எனக்கு தெரியும் உன்னால் என்னைய வெறுக்க முடியாதுன்னு.. அப்புறம் ஏன் அப்படி ஒரு லெட்டர் வச்சிட்டு போன ??”

இதை கேட்டு மித்ரா விலுக்கென்று நிமிர்ந்து அவனை பார்த்தாள்..

“என்ன டி பாக்குற ?? எல்லாரும் அதில் இருந்த உன் எழுத்தை தான் பார்த்தாங்க.. ஆனா நான் அதில் இருந்த உன் கண்ணீரை பார்த்தேன், அந்த கண்ணீருக்கு பின்னால இருக்கிற காதலை பார்த்தேன்,,”

“ நிச்சயம் இதுக்கு வேற காரணம் இருக்கும்னு எனக்கு தெரியும்.. சொல்லு டி மித்ரா “

“ என்னைய மிருகமா மாத்திடாத..” என்று அவளது இடையை தன்னோடு சேர்த்து மேலும் இறுக்கினான்.. 

மித்ராவிற்கு அனைத்தையும் இப்பொழுதே கூறிவிட வேண்டும் போல் இருந்தது.. ஆனால்

அவளுக்கோ இப்போதிருக்கும் இந்த மோன நிலையை இழக்க விரும்பவில்லை. அதை எல்லாம் விட எப்படி ஒன்றுமே தெரியாமல் அவனை காதலிக்க தொடங்கினாலோ அதே போல வேறு எதை பற்றியும் தெரிந்துகொள்ள விரும்பாமலே அவனோடு கலந்துவிட எண்ணினாள்..

அதாவது அவனை அவனது காதலுக்காக மட்டுமே காதலித்தவள் இன்று அதே காதலுக்காக மட்டுமே தன் கணவனோ இனைய எண்ணம் கொண்டாள்.. 

“ ஷ்ஷ்!!! மனு… இப்போதான் நான் வந்துட்டேனே..  “

“உங்களுக்கும் எனக்கும் கேட்க ஆயிரம் கேள்விகள் இருக்கு.. ஆனா அதெல்லாம் இப்போ நமக்குள்ள வேண்டாம்.. இப்போ மனு.. மித்து மட்டும் தான்.. நான் உங்களை உங்களுக்காக மட்டும் தான் லவ் பண்ணேன்.. “

“ அதே போல நமக்கான உறவு நாம காதலுக்காக மட்டும் தான் இருக்கணுமே ஒழிய.. நீ இது பண்ண, நான் உனக்கு அது பண்ணேன்னு கணக்கு வழக்கு பார்க்க கூடாது..” என்று தன் கணவனின் விழிகள் பார்த்தாள்..

“ மித்து !!!!”

“ எஸ் மனு.. ஐ லவ் யு… அண்ட் ஐ நீட் யு நொவ்.. ” இதற்குமேல் மனோவிற்கு பேச நினைத்தது எல்லாம் நியாபகம் இருக்குமா என்ன ?? அவனுடைய காதல் இன்று எந்த காரணத்திற்காகவும் அல்லாமல் அவனுக்காகவே அவனது கரங்களில் வந்திருக்கிறதே.. இது ஒன்று போதாதா ??

“ மித்து!!!! ஐ லவ் யு டூ ” என்று அவள் இதழ் அணைத்தான்..

இன்னும் பலத்த இடியுடன் மழை பொழிந்தது.. மனோவும் மித்ராவும் தங்கள் காதல் மழையில் நினைந்து கொண்டு இருந்தனர்..          

                               

ஓர் நாள் மழை இரவு

நினைந்தது இரு மனது..

குளிரடிக்க, கரம் பிடிக்க

உடல் சிலிர்க்க, உள்ளமணைக்க

மேகம் பூ மழை தூறலாம்

நீ என் தேகம் நினைத்திட..

மின்னல் எட்டி பார்க்கலாம்

என் விழி உன்காதல் பருகிட..

இடியோ முரசு கொட்டலாம்

காதல் இசையில் மகிழ்ந்திட..                                     

 

                     மாயம் – தொடரும்                     

                    

                  

            

                  

              

        

Advertisement