Advertisement

                     மாயவனோ !! தூயவனோ !! – 19

மனோகரனுக்கு மகிழ்ச்சி இன்ன அளவு என்று இல்லை.. எப்படி தேட போகிறோம்?? எவ்வாறு அவளை கண்டு பிடிக்க போகிறோம்?? எப்படி அவளை சம்மதம் கூற வைக்க போகிறோம் ??? என்றெல்லாம் தவித்த அவனுக்கு தெய்வமே நேரில் வந்து வரம் தந்து சென்றது போல உணர்ந்தான்.  

அலுவலகத்தில் தன் இருக்கையில் இருந்தாலும் அவனது மனமோ இறக்கை இல்லாமல் பறந்தது.. அவன் நினைவுகளை எல்லாம் மித்ராவே ஆக்கிரமித்து இருந்தாள்.. “ மித்ரா மித்ரா மித்ரா  “ இதை தவிர அவன் உதடும் மனமும் வேறதையும் கூறவில்லை..

“கடைசியில் நம்ம ரவி சார் பொண்ணா ?? இத்தனை நாள் தெரியாம போச்சே.. ஹ்ம்ம் லாஸ்ட் டைம் அவர் வீட்டுக்கு கூப்பிட்டப்பவே போயி இருக்கனும்.. நான் தான் முட்டாள் தனம் பண்ணிட்டேன் “ என்று தன்னை தானே மகிழ்ச்சியில் திட்டி கொண்டு இருந்தான்..

இதற்குமேல் மனோகரனால் பொறுமையுடன் இருக்க முடியவில்லை.. ஒருமுறை அலுவலகத்தை சுற்றி வந்தான்.. எப்பொழுதும் செல்வது போல சாதரணமாக அனைவரிடமும் பேசுவது போல பேசியபடி அக்கௌன்ட்ஸ் பகுதி பக்கம் சென்றான்..

அவனது பார்வை ரவிச்சந்திரனை பார்த்தது.. ஆனால் மனோவின் மனமோ பந்தயத்தில் ஓடும் குதிரையை விட வேகமாக ஓடியது.. “ எப்படி இவர் கிட்ட விஷயத்தை ஆரம்பிக்கிறது ??? என்ன நினைப்பாரோ “ என்ற தயக்கமெல்லாம் வந்து வந்து போனது..

ஆனால் காதல் பயமரியாதே.. தன்னுடையே அத்தனை தயக்கத்தையும் துடைத்து எறிந்துவிட்டு “ ரவி சார் “ என்று அழைத்தே விட்டான்..

அவர் எப்பொழுதும் மனோவை தம்பி என்றே அழைப்பார்.. முதலில் அவனை சார் என்றே அழைத்தார் ஆனால் மனோ தான் “ உங்களுக்கு என் அப்பா வயசு ஆகும், என்னைய ஏன் சார்ன்னு சொல்றிங்க??? ஒன்னு தம்பின்னு சொல்லுங்க இல்ல மனோன்னு கூப்பிடுங்க “ என்று கூறவும் தான் அவர் தம்பி என்றே அழைக்க தொடங்கினார்..

“ என்ன தம்பி ??” என்று தன் வேதனையை மறைத்த குரலில் வினவினார்.. “ இல்ல கொஞ்சம் பேசணும் அதான் ரூம்க்கு போய் பேசலாமா ?? ” என்று தன்மையாக கேட்டான் மனோ..

அவரும் சரி என்று கூறவும், இருவரும் மனோவின் அறைக்கு சென்றனர்.. “ என்ன தம்பி சொல்லுங்க ??” என்று அவரே ஆரம்பித்தார்.. எப்பொழுதும் உற்சாகமாய், சுறுசுறுப்பாய் இருப்பவர் இன்று அப்படி இல்லை என்று மனோவின் மனம் கூறியது..

அவர் முகமும் கண்களுமே இரவெல்லாம் அவர் உறங்கவில்லை என்ற உண்மையை அவனுக்கு உணர்தியது.. தான் பேச எண்ணியதை விட்டு “ என்ன சார் உடம்பு  எதுவும் சரியில்லையா ??” என்று கேட்டான்..

மனோகரன் அப்படி கேட்கவும் திடுக்கிட்டு விழித்தார் மித்ராவின் அப்பா..  அவருக்கு ஒரு நிமிடம் வருண் அவரிடம் கேட்பது போல இருந்தது,. மனோவை பற்றி அவருக்கு நன்றாக தெரியும்.. அவனிடம் குறை என்று இதுவரை அவரது கண்களில் எதுவும் விழுந்தது இல்லை..

அவரின் மனதில் நடக்கும் பிரச்சனையை அவனிடம் கூறி உதவி கேட்கலாமா என்ற யோசனை கூட எழுந்தது.. அனைத்தையும் கூறினால் நிச்சயம் அவன் உதவி செய்வான் தான். அவனை நம்பி எதையும் கூறலாம் தான்..

 ஆனால் இதனால் மனோவிற்கு வேறு எதாவது பிரச்சனைகள் வந்து விட்டால்.    அதன் பிறகு எதற்கு மனோவையும் இதில் இழுத்து விடவேண்டும் என்று எண்ணினார்.. 

இப்படியாக சிந்தனையில் இருந்தவர் மனோவின் கேள்விக்கான பதிலை கூறாமல் இருந்தார். “ சார் உங்ககிட்ட தான் கேட்கிறேன்.. உடம்பு எதுவும் சரியில்லையா ?? லீவ் வேணும்னா போட்டிட்டு வீட்டுல போய் நல்லா ரெஸ்ட் எடுத்துகிட்டு வாங்க “ என்று தன் வருங்கால மாமனாரை கவனித்தான்..

ஆனால் அவரை அறியாமல் “ உடம்பு எல்லாம் நல்லா தான் தம்பி இருக்கு..” என்று பதில் உரைக்கவும்

“அப்போ வேற என்ன சார் சரியில்ல ??? எதுவும் பிரச்சனையா ??”

“ ஹா ஒண்ணுமில்ல தம்பி “

“ எதுவா இருந்தாலும் என்கிட்டே சொல்லுங்க சார்.. நான் என்னால என்ன முடியுமோ அதை கண்டிப்பா செய்வேன் “

“ நீ செய்வப்பா ஆனா எங்க பிரச்சனை உனக்கும் பிரச்னை ஆகிடுச்சுன்னா என்ன செய்ய ??” என்று மனதில் எண்ணிக்கொண்டவர்

“ ஒண்ணுமில்ல மனோ வீட்டுல பொண்ணுக்கு கல்யாணம் பேச்சு ஆரம்பிக்கணும்னு அவங்க அம்மா ஒரே அடம் அதான் “ என்று அரைகுறையாய் கூறினார்..

“ஆகா நம்ம ஆரம்பிக்க வேண்டிய டாபிக் அதுவாவே ஆரம்பிக்குதே “ என்று மனதில் மகிழ்ந்தவன் “ ஓ !! நல்ல விஷயம் தானே சார்.. அதுக்கு ஏன் இவ்வளோ சோகம் ??”

“ சோகம் இல்ல தம்பி எல்லாம் நல்லதே நடக்கணுமேன்னு ஒரு கவலை அவ்வளோதான் “

“ ம்ம்.. அப்புறம் சார் என்ன மாதிரி மாப்பள பாக்க போறீங்க ??”

இந்த கேள்வியை மனோ கேட்கவும் அவனை வித்தியாசமாக பார்த்தார் ரவிச்சந்திரன்.. ஏனெனில் எத்தனை தான் பழகியவராக இருந்தாலும் ஒரு அளவுக்கு மேல் மனோ அவர்களிடம் பேச்சு வைத்துகொள்ள மாட்டான்..

ஆனால் இன்றோ வேலை நேரத்தில், அவனது அறைக்கு அழைத்து வந்து சாவகாசமாக பேசிக்கொண்டு இருக்கிறான்.. அவனது வேலைகள், அதன் முக்கியவத்துவம் இதெல்லாம் அவருக்கு தெரியாததா என்ன. ஆகையால் தான் அவனை ஒருவிதமாக பார்த்தார்..

“ என்ன சார் அப்படி பாக்குறிங்க ???”

“இல்ல தம்பி என் குடும்ப கதைய சொல்லி உங்க நேரத்தை வீணடிக்கிறேன் போல “ என்று இழுக்கவும்

“ஐயோ அதெல்லாம் இல்ல சார்.. சொல்ல போனா நானே உங்ககிட்ட பேச தானே உங்களை கூட்டிவந்தேன் “ என்று அவன் கூறவும் முதல் நாள் சுந்தர் தன் ஆட்களை அனுப்பி இவரை கூப்பிட்டு வர சொன்னதும் அவன் பேசியதும் நினைவு வந்தது.. அவரை அறியாமலே அவர் முகம் மேலும் வேதனையை காட்டியது.

இதை எல்லாம் மனோ கவனித்து கொண்டு தான் இருந்தான்.. ஆனாலும் காதல் கொண்ட மனமல்லவா வேறு எதையும் யோசிக்கும் மனநிலையில் அவன் இல்லை..

“சார் “

“ ஹா !!! சொல்லுங்க தம்பி “ என்றார் தன் நினைவுகளில் இருந்து வெளி வந்து..

“ இல்லை ஒன்னுமில்ல.. நீங்க போங்க சார்.. நீங்க நல்ல மூட்ல இருக்கும் போது பேசலாம் “ என்றான் மெதுவாக..

தனக்கு சம்பளம் குடுக்கும் முதலாளியே தன்னை அழைத்துவந்து பேசவேண்டும் என்று கூறிய பிறகும் தான் இப்படி செய்வது சரியே இல்லை என்று அவரது மனம் எண்ணியது..

“ இல்ல பரவாயில்ல தம்பி சொல்லுங்க..

“இல்ல சார் நல்ல விஷயம் பேசும்போது நல்ல சூழ்நிலை இருக்கனும்.. அதான் சொல்றேன்என்றான்.. ஆனால் அவன் மனமோ அவர் எழுந்து செல்ல கூடாது என்றே எண்ணியது..

“இல்ல பரவாயில்ல மனோ.. எனக்கு ஒன்னும் பிரச்னை இல்லை.. “ என்று அவர் கூறவுமே மனோவிற்கு ஒருநிமிடம் மனம் நிம்மதி அடைந்தது.. தன் பெற்றோர்களை வேண்டிக்கொண்டு சிறு அமைதி காத்தான்.. பின் ஆழ்ந்த மூச்செடுத்து

“ சார் என்னைய உங்க மகள் மித்ராவுக்கு கல்யாணம் பண்ணிவைக்க சம்மதமா ??” என்று தெளிவாக கேள்வியை தலைகீழாக கேட்டான்.. முதலில் அவன் கேட்டது அவருக்கு விளங்கவில்லை..

விளங்கிய பின்னரோ வியப்பு தீர வில்லை.. “ தம்பி “ என்று திகைத்தார்..

மனோ சிரித்தபடி “ டென்சன் வேண்டாம் சார்.. நான் சொன்னது, நீங்க கேட்டது எல்லாம் உண்மை தான்.. என்னைய உங்க மருமகனா ஏத்துக்க சம்மதமா ??” என்றான் மீண்டும்..

அவரின் திகைத பார்வையை பார்த்து “ நிஜம் தான் சார்.. எங்க வீட்டுல பெரியவங்க யாருமில்ல.. இருந்தா உங்ககிட்ட வந்து பொண்ணு கேட்டு இருப்பாங்க.. இப்போ நீங்க தான் பெரியவங்க ரெண்டு குடும்பத்துக்கும் சேர்த்து.. அதான் என்னைய மாப்பிள்ளையா ஏத்துக்க சம்மதமான்னு கேட்டேன் “என்றான் மாறாத சிரிப்பினுடே.    

ரவிச்சந்திரனுக்கு முதலில் எதுவும் புரியவில்லை.. ஆனால் அவருக்கு மனோவை பற்றி நன்றாக தெரியும்.. அவன் இது போன்ற விசயங்களில் தேவை இல்லாமல் தலையிடவும் மாட்டான், பொறுப்பில்லாமல் பேசவும் மாட்டான்..

மனோகரனை போல ஒருவன் தன் மகளுக்கு வாழ்க்கை துணையாய் வருவது நிச்சயமாய் அவள் செய்த பாக்கியம் தான்.. அதே போல மித்ராவை போல ஒரு பெண் மனோவிற்கு மனைவியாய் அமைந்தால் நிச்சயம் மனோ தன் வாழ்வில் இழந்த சந்தோசங்களை எல்லாம் மீண்டும் அடைந்துவிடுவான் தான்.. 

ஆனால் மித்ராவின் வாழ்வில் விதி சுந்தரின் பெயரில் அல்லவா உள்ளே நுழைந்து இருக்கிறது.. என்னதான் மனோவிற்கு ஆள் பலம், பண பலம் இருந்தாலும், சுந்தரோ முழுக்க முழுக்க அயோக்கியனே..

சிறு புள்ளி கிடைத்தாலே போதுமே அவனுக்கு.. அதை அவன் விருப்படி மாற்றி கோலத்தை அலங்கோலம் ஆக்கி விடுவான்.. ஒருபக்கம் மனோ தன் மகளை கேட்டது மகிழ்வை தந்தாலும், சுந்தரை எண்ணி பயம்கொள்ள வைத்தது..

அவரது அமைதியோ மனோவை மிகவும் ஆழ்த்தியது.. “ ஒருவேல நம்ம கேட்டது பிடிக்கலையோ ??” என்று யோசித்தவன்

“ என்னைய தப்பா நினைக்கதாதிங்க.. நான் ஒரு ரெண்டு மூணு தடவ உங்க பொன்னை பார்த்தேன்.. பார்த்ததுமே பிடிச்சு இருந்தது.. அப்போ எனக்கு மித்ரா உங்க பொண்ணுன்னு தெரியாது.. வீட்டுல தம்பிங்க கிட்ட கூட இதை பத்தி பேசிட்டேன். இன்னைக்கு காலையில தான் உங்ககூட மித்ராவ பார்த்தேன்.. அதான் “  என்று அவன் விளக்கும் பொழுதே

“ நீங்க கேட்டதை பொறுத்து எந்த தப்பும் இல்லை தம்பி.. ஆனா..”

“ என்ன சார் ஆனா ?? நான்… நான் மித்ராவை விரும்பி தான் பொண்ணு கேட்கிறேன்.. இல்ல வீட்டுல பெரியவங்க யாருமில்ல அப்படி இப்படின்னு ஏதா வருத்தமா ?? நான் நல்லா பார்த்துப்பேன் சார் “ என்றான் அவனது காதலை அவருக்கு புரியவைத்து விடும் வேகத்தில்..

இதை கேட்ட ரவிச்சந்திரனிற்கு சிரிப்பே வந்தது.. என்னெனில் மனோகரனை பற்றி அவர் நன்றாய் அறிந்தவர்.. ஒரு விஷயம் தனக்கு வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் உட்கார்ந்த இடத்திலேயே அதை சாதித்து விடுவான்..

யாரிடமும் இப்படி பேசிக்கொண்டு இருக்கா மாட்டான்.. ஆனால் இன்று எத்தனை தயக்கம், பயம், குழப்பம்.. எல்லாம் காதல் படுத்தும் பாடு என்று எண்ணியவர்  தன் கவலையை மறந்து சிரித்தே விட்டார்..

அவரது சிரிப்பை கண்ட மனோ முகத்திலும் ஒரு சிறு முறுவல் வந்து ஒட்டி கொண்டது.. “ சார் நீங்க எதுக்கு சிரிக்கரிங்கனு நல்லா தெரியுது “ என்று கூறும் பொழுதே அவன் முகத்தில் லேசான ஒரு வெட்கம் வந்து போனது போல இருந்தது..

வெட்கம் பெண்களை மட்டுமில்லை சில நேரம் ஆண்களையும் அழகாய் காட்டும் என்று எங்கோ படித்து மித்ராவின் தந்தைக்கு நினைவு வந்தது.. இப்படி பட்ட ஒருவன்  தனக்கு மருமகனாய், தன் அருமை மகளுக்கு கணவனாய் வந்தால் அதை விட வேறு எதுவும் வேண்டாம்.. ஆனால் இதெல்லாம் நடக்க வேண்டுமே…

“ மனோ தம்பி நீங்க கேட்டதை பொறுத்து எனக்கு எந்த வருத்தமும் இல்ல. சொல்ல போனா சந்தோசம் தான்.. என் பொண்ணு யாரு என்னனு கூட தெரியாம விரும்பி இருக்கீங்க.. ஆனா.. இதெல்லாம் நடக்குமான்னு தான் எனக்கு தெரியல” என்று கூறவும்

மனோ “ ஏன் சார், ஏன் நடக்காது ??? உங்களுக்கு தான் என்னைய பத்தி நல்லா தெரியுமே.. அப்புறம் என்ன ??? ஒரு வேலை மித்ரா.. “ என்று இழுக்கவும்

“ அய்யோ அப்படி எல்லாம் இல்ல மனோ.. இது கொஞ்சம் வேற பிரச்சனை அதான் “

“ என்ன பிரச்சனையா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க.. நான்.. நான் ஹெல்ப் பண்ணமாட்டேனா ??” என்றான் தன் காதல் கை கூட வேண்டுமே என்ற ஆதங்கத்தில்.

ஒருநிமிடம் யோசித்தவர் “ நான் வீட்டுல மித்ரா அம்மா கிட்ட கலந்து பேசிகிட்டு வந்து சொல்றேன்மனோ “ என்று கூறவும் அவனுக்கு சரி என்று கூறுவதை தவிர வேறு வழி இருக்கவில்லை..

சுந்தர் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தான்.. அவன் முகமே தீவிர யோசனையில் இருப்பது போல காட்டியது.. சிறிது நேரம் யோசனையில் இருந்தவன் பின் யார் யாருக்கோ அலைபேசியில் அழைத்து பேசினான்..

அதன் பின் “ டேய் மாணிக்கம் “ என்று அவனது அழைப்பு கேட்கவும்

“ என்ன அண்ணே “ என்று அடித்து பிடித்து வந்து நின்றான் மாணிக்கம்.

“ நான் ஒரு விசயம் சொன்னேனே என்னாச்சுனு விசாரிச்சயா ??”

“ ஆமாண்ணே.. நல்ல விசாரிச்சு பார்த்துட்டேன்.. அதுல நமக்கு எந்த ஆபத்தும் இல்லை. அதுவும் இல்லாம அந்த இடத்துல அவ்வளோ ஆள் நடமாட்டம் இருக்காதுன்னு தான் சொல்றாங்க..”

“ம்ம்ம்.. அப்ப நம்ம நாளைக்கு அந்த இடத்துலேயே ஆட்களை சப்பளை பண்ணிடலாமா ?? “

“  தாராளமா பண்ணலாம்.. ஆனா அண்ணே எது பண்ணுறது இருந்தாலும் ராத்திரி ரெண்டு மணிக்குள்ள பண்ணனும். ஏன்னா மூணு மணிக்கு மில் வேலை முடிஞ்சு ஆளுங்க எல்லாம் வெளிய வருவாங்க.. அந்நேரம் நம்ம அங்க இருந்ததுக்கு எந்த அடையாளமும் இருக்க கூடாது பாருங்க “

“ ஹா ஹா !!! உன்னைய மாதிரி இன்னும் ரெண்டு பேர் என்கூட இருந்தா போதும்டா.. நம்ம இன்னும் நல்லா சம்பாதிக்கலாம்.. சரி சரி எல்லா பேப்பெர்சும் ரெடி பண்ணனும்.. நேரம் இல்லை.. சரியான நேரத்துக்கு வண்டி வர சொல்லணும்.. பாய் கிட்ட சொல்லிடு “

“ அண்ணே “ என்று தலையை சொரிந்தான் மாணிக்கம்..

“ என்ன டா ??”                  

“ இல்லைண்ணே அந்த பாய் கொஞ்சம் கமிசன் ஜாஸ்தியா எதிர் பாக்குற மாதிரி இருக்கு”

“ ஓ !! அவ்வளோ பேராசை வந்திடுச்சா அவனுக்கு.. என்ன நம்ம கூட சேர்ந்து தொழில் செய்யனும்னு நினைக்கிறானா.. இல்ல “ என்று சுந்தர பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே

“ அண்ணே “ என்று அவ்விடம் வந்தான் பாய்..

“ ம்ம்.. ஆயுசு நூறு தான் பாய்.. என்ன என்னெனவோ கேள்வி பட்டேன் “ என்றான் ஒருமாதிரி குரலில்..

“ இல்லண்ணே.. அது.. அது வந்து.. கொஞ்சம் வீட்டுல சிரமம் “

“ ஹா ஹா!!! வீட்டுல சிரமமா ?? உனக்கா ?? என்ன காது குத்துரியா ?? யாருகிட்ட உன் கதை எல்லாம் சொல்லுற??” என்று கர்ஜித்தான் சுந்தர்..

ஆனால் அந்த பாயோ மெல்ல “அண்ணே இந்த விசயம் எல்லாம் பிறகு பேசலாம்.. இப்போ ஒரு முக்கியமான விஷயம் பேசத்தான் நேராவே வந்தேன் “ என்று ரகசியம் பேசும் குரலில்..

“ என்ன விஷயம் ??”

சுந்தரின் கேள்விக்கு பாய் பதில் கூறாமல் மாணிக்கத்தை திரும்பி பார்த்தான். அடுத்த நொடி சுந்தரின் கண்ணசைவில் மணிக்கம் வெளியே சென்றுவிட்டான்..

“ ஹ்ம்ம் இப்போ சொல்லு..”

“ அண்ணே நாளைக்கு சரக்கு அனுப்ப எல்லா ஏற்பாடும் நானே பண்ணிட்டேன் “ என்று கூறவும் சந்தேகமாய் பார்த்தான் சுந்தர்..

“ நெஜமா தான் அண்ணே சொல்றேன்.. இந்த தடவ நமக்கு ஒரு அதிர்ஷ்டம் காத்து கிடக்கு அண்ணே “ என்று வில்லத்தனமாய் சிரித்தான் அவன்..

“ என்ன சொல்ற ??”

“ ஆமாண்ணே நம்ம இதுநாள் வரைக்கும் ஆள் அனுப்புனோமே அந்த ஸ்டீபன் கம்பனிக்கு..”

“ ஆமா “

“ அவனோட பிரன்ட் ஒருதான் புதுசா அறிமுகம் ஆகி இருக்கான்.. அவனுக்கு இது மாதிரி வருசத்துக்கு பத்து ஆளுங்க இருபது ஆளுங்க எல்லாம் தேவை இல்ல.. “

“ பின்ன ??”

“ மாசம் ஒருத்தர் அனுப்புனா போதும். ஆனா இந்த ஸ்டீபன் குடுக்குறதை விட பலமடங்கு ஜாஸ்தியா குடுப்பானாம் “

“ ஏன் ?? அப்படி என்ன அவன் செய்யுறான் ?? அதுசரி மாசா மாசம் ஒருத்தர் அனுபனும்னா கொஞ்சம் ரிஸ்க்ல.. இதுனா மொத்தமா அனுப்பிடலாம்..”

“ இல்லண்ணே.. அவன் கேட்கும் போது அனுப்புனா போதுமாம்.. அதுவும் இல்லாம, நம்ம யாரை அனுப்புறோமோ அவங்களுக்கே தெரியாம தான் அவன் மருந்து உள்ள செலுத்துவானாம்.. அப்புறம் ஒரு மாசத்துல அவங்களை வெளிய வேற வேலைக்கு அவனே அனுப்பி வச்சிடுவானம்”

“ஓ !! இது கொஞ்சம் ஈஸியா தான் தோணுது.. ஹ்ம்ம் சரி ஆனா இதுல நமக்கு என்ன லாபம்.. மொத்தமா அனுப்புனா கோடி கணக்குல வருமானம்.. இப்படி ஒன்னு ரெண்டு அனுப்புன நமக்கு என்ன கிடைக்க போகுது “

“ அது தான் விசயமே.. பார்ட்டி பக்கா காசுக்காரன்.. ஆளு மட்டும் அவன் கேட்கிற மாதிரி அனுப்பிட்டா நம்மலை நல்லா கவனிப்பான்னே  “

“ சரி இவன் எதுக்கு ஆள் கேட்கிறான்??”

“ அவனும் ஸ்டீபன் மாதிரி தான் மருந்து கம்பனி வச்சு இருக்கான்.. ஆனா இது கொஞ்சம் வேற மாதிரி ஆராய்ச்சி செய்யுற வேலை..”

“ என்ன ஆராய்ச்சியா ??? என்ன ஆராய்ச்சி ??” என்று வியப்பாய் கேட்டான் சுந்தர்..

“ஆமாண்ணே.. அவன் இப்ப பண்ணுற ஆராய்ச்சி எப்படி இளமைய நீடிக்க வைக்கிறதுன்னு.. அதுக்கு தான் ஒரு கல்யாணம் ஆகாத, அழகான ஆரோக்கியமான கன்னி பொண்ணு வேணுமாம்.. “

இதை கேட்கவும் முதலில் சுந்தருக்கு படக்கென்றது.. “ என்ன இளமைய நீடிக்கிற ஆராய்ச்சியா ?? “

“ ஆமாண்ணே.. அதுக்கு தான் ஒரு அழகான பொண்ணு தேவை.. “ என்று கூறியதும் சுந்தரின் மனதில் ஒரு நொடி மித்ராவின் முகம் வந்து போனது..

“ யப்பா இவ தான் எவ்வளோ அழகு.. ச்சே பிரம்மன் நல்ல மூட்ல இருக்கும் போது அவளை படைச்சு இருப்பான் போல.. இவளுக்கு மட்டும் இந்த அழகு கடைசி வரைக்கும் நீடிச்சு இருந்தா, அதுவும் எனக்கே எனக்குன்னு சொந்தமா இருந்தா… ஆகா…” என்று நினைக்க நினைக்க சுந்தருக்கு போதை ஏறியது..

அவனுள் பல திட்டங்கள் உருவாகின.. ஆனால் இப்பொழுதே எதையும் வெளியில் கூறக்கூடாது என்றெண்ணி “ சரி சரி பாய்.. நான் ஏற்பாடு பண்ணுறேன்.. ஆனா விஷயம் எதுவும் வெளிய தெரிய கூடாது.. அப்புறம் இந்த தடவ பணம் என் கைக்கு வந்த பிறகு தான் உனக்கு தரவேண்டிய பணம் வரும் “

“ சரிங்கண்ணே… நீங்க எது சொன்னாலும் சரிதான்,.. உங்க தயவுல நான் பொழைக்கிறேன்” என்று அவனுக்கு சலாம் அடித்து சென்றான்..

அவன் சென்ற அடுத்த நிமிடமே “ மாணிக்கம் “ என்று குரல் கொடுத்தான் சுந்தர்..

“ வண்டிய எடு நம்ம அந்த ரவிச்சந்திரனை பார்த்துட்டு வருவோம் “ என்று கிளம்பினான்..

வண்டியில் சென்று கொண்டு இருக்கும் பொழுதே அவர்க்கு அலைபேசியில் அழைத்தான்..

“ அப்புறம் மாமா.. என்ன சௌக்கியமா ??” என்ற குரலிலேயே மித்ராவின் தந்தைக்கு சர்வமும் ஆடியது..

இப்பொழுதான் மனோவிடம் பேசிவிட்டு தன் இருக்கையில் வந்து அமர்ந்து இருந்தார்.. மகளின் வாழ்வில் ஏதோ ஒரு மூலையில் வெளிச்சம் வருவது போல உணர்த்தார்.. அவர் மனம் சற்றே அமைதி அடைந்தது..

ஆனால் அந்த நிம்மதியை நிலைக்கவிடாது அடுத்த நிமிடமே சுந்தரின் குரல் கேட்கவும் மனிதர் மிகவும் நொந்து தான் போய் விட்டார்..

“ என்ன மாமா நான் தான் பேசுறேன்.. காலையில தான் அத்தை கிட்ட பேசுனேன்” என்று அவன் கூறும்பொழுதே மித்ராவின் தந்தைக்கு மிகவும் நாராசமாய், அருவெருப்பாய் இருந்தது அவன் தன்னை மாமா என்றும் தாமரையை அத்தை என்றும் கூறியது..

“ ச்சே.. இந்த பொறுக்கிக்கு நான் மாமாவா ??? என் பொண்டாட்டி அத்தையா?? என்ன கன்றாவி “ என்று எண்ணினார்..

“ ஹலோ!!௧ ஹலோ!! என்ன மாமா அமைதியா இருக்கீங்க ?? அப்புறம் இன்னும் உங்க வீட்டமா உங்ககிட்ட நான் பேசுனதை பத்தி சொல்லலையா ?? “

“ என்ன இவன் தாமரைக்கிட்ட வேற பேசி இருக்கானா??? என்னத்தை பேசி தொலைச்சானோ” என்று நினைத்துகொண்டு “ இல்ல “ என்று பதில் கூறினார்..

“ ஓ !! என்ன இது என் மாமியாருக்கு கொஞ்சம் கூட பொருப்பே இல்லை.. வருங்கால மருமகன் போன் போட்டு பேசி இருக்காரு, அதை கட்டுன புருஷன் உங்ககிட்ட சொல்லவேண்டாமா.. சரி அதெல்லாம் போகட்டும்.. எப்படி இருக்கா என் பொண்டாட்டி.. அதான் உங்க மக ??” என்று வினவினான் ஒரு உல்லாச சிரிப்போடு..

தன்னையும் தன் மனைவியையும் மாமா அத்தை என்று கூறியதையே பொறுக்காதவர் தன் மகளை மனைவி என்று கூறினால் பொறுப்பாரா ?? ஆனால் இருக்கும் இடத்தை உணர்ந்து மெல்ல

“உங்களுக்கு என்னதான் வேணும்?? ஏன் இப்படி எங்களை தொல்லை பண்றீங்க ??” என்று இறைஞ்சினார்..

“ அட என்ன மாமா நீங்க?? எனக்கு என்ன வேணும்னு நான் தெளிவா உங்ககிட்ட பேசிட்டேனே அப்புறமும் உங்களுக்கு என்ன சந்தேகம்.. நான் வேணா வீட்டுக்கு வந்து நேரா பேசவா ??”

“ வேண்டாம் வேண்டாம்.. வீட்டுக்கெல்லாம் வரவேண்டாம்.. நான் நானே.. உங்களை ஒரு ரெண்டு மூணு நாளுல கூப்பிட்டு பேசுறேன்.. வீ.. வீட்டுக்கு எல்லாம் வேண்டாம் “ என்று பதறினார்..

“ம்ம்.. அது அந்த பயம் இருக்கட்டும்.. நான் பொறுமையா போறது ரெண்டு பேருக்கும் நல்லது நடக்கனும்னு தான்.. உங்க கிட்ட நான் முடிவு கேட்கலை.. எப்ப கல்யாணத்தை வச்சுக்கலாம்னு நாள் குறிக்க தான் கேட்கிறேன்.. புரியுதா.. அப்புறம் வேற மாதிரி நடந்தா நான் பொறுப்பில்ல “ என்று மிரட்டலுடன் தன் பேச்சை முடித்தான்..

இப்படி ஒரு பெண்ணை பெற்ற தந்தையிடம் பேசினால், அவர் என்னதான் செய்வார்.. வியர்த்து விறுவிறுத்து போயிருந்த தன் முகத்தை வேகமாய் கைகுட்டையில் துடைத்தார்..

என்ன செய்வது ?? யாரை அணுகுவது ?? யாரை நம்பி, யாரிடம் இதை பற்றி பேசுவது ?? என்று பல கேள்விகள் அவர் முன்னே நர்த்தனம் ஆடியது.. செய்வது அறியாமல் திகைத்து அமர்ந்து இருந்தவர் முன்

“ இப்பயாவது சொல்லுங்க என்ன பிரச்சனை??” என்ற கேட்டபடி அமர்ந்தான் மனோ..

 

 

 

 

 

 

 

 

 

காத்திருந்த காலமெல்லாம்

கனவாய் போகட்டும் – காதல்

கைக்கூடும் நேரம் மட்டும்

நெஞ்சில் நிற்கட்டும்- உனக்கென

நானும்  எனக்கென நீயும்

ஒரு வாழ்வை உருவாக்க

தடையென யார் வந்தாலும்

தகர்த்தெறிவேன் தடம் பதிப்பேன்

உந்தன் நெஞ்சில்…

 

                     மாயம்  –  தொடரும்    

                                                                                                         

                   

           

                               

                                                  

               

     

 

         

     

 

Advertisement