Advertisement

நிழல் 9

”மாயா மாயா… என்னடி சும்மா படுத்திருக்கன்னு நெனச்சா தூங்கீட்டியா… எழு எழு… சாப்பிட்டு தூங்கலாம் எழு பாப்பா…”

“ம்மா எனக்கு சாப்பாடு வேணாம்மா… முறுகலா ரெண்டு தோசையும் பூண்டு சட்னியும் கொடு போதும்… என்று கண்ணை மூடி அன்னையின் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டே கேட்ட மாயாவின் முதுகில் ஒரு அடியைப் போட்டார் அம்சவேணி.

”நா கூட சாப்பாடு வேணா இப்படியே தூங்குறேன்னு சொல்றியோன்னு நெனச்சேன், சாப்பாடு வேணாமாமில்ல, தோசை மாவு ஜில்லுனு இருக்கும்.  இப்போ ஃபிரிட்ஜில இருக்கு எடுத்து இப்போ உடனே சுட்டா நல்லாயிருக்காது. காலையில சுட்டுத் தாரேன், இப்ப சூடா அரிசியும் பருப்பும் சாதம் வச்சிருக்கேன், அதுக்கு தொட்டுக்க, வறுத்த கத்திரிக்காயும்,அப்பளமும் இருக்கு, நல்லாயிருக்கும் சாப்டு வந்து அப்புறம் படு… எழு எழுந்து வா…”

“ம்ம்ம் சரி…” என்று எழுந்தவள் அவளின் தந்தையும் அழைத்து வந்து உணவை பரிமாறிவிட்டு தானும் உண்டாள். அம்சவேணிக்கு கொஞ்சம் மனம் நிம்மதியாய் இருந்தது.

சாப்பிட்டு விட்டு முதல் ஆளாய் படுத்துவிடும் மாயாவின் தந்தை இன்றும் அப்படியே ஒரு அரைமணிநேரம் நடமாடிவிட்டு அவர் படுக்கைக்கு சென்று விட்டார்.

அம்சவேணி அடுப்படி வேலைகளை முடித்துவிட்டு அவளுக்கு பாதாம்பால் கொடுக்கும் வரை அவர் பின்னேயே சுற்றிக் கொண்டு சிறு சிறு உதவிகள் செய்தவள், பாலைக் கையில் வாங்கியதும், கையில் மொபைல் சகிதமாக தன் படுக்கைக்கு வந்திருந்தாள்.

வேலையெல்லாம் முடித்து விட்டு ஜன்னல் கதவுகளைப் பூட்டி, அனைத்து சரிபார்த்துவிட்டு எப்போதும் போல் ஐந்து மணிக்கு அலாரம் செட் செய்து கொண்டு அருகில் அமர்ந்திருந்தவரிடம்,

“நீயுந்தான் டெய்லி இந்த அலாரத்தை வைக்குற, ஒரு நாள் கூட அலாரம் அடிச்சு நீ எழுந்து நான் பார்த்ததில்ல…”

“அதுக்கு விடியறதுக்கு முன்ன எழுந்துக்கணும்…”

“அட அதில்ல மா…”

“பின்ன….”

“அலாரத்துக்கு முன்னாடி நீ எழுந்து ஆப் செஞ்சிருவன்னு சொன்னேன்…”

”அதெல்லாம் இருக்கட்டும்… நீ சொன்னத முழுசா சொல்லு, வினோ கிட்ட சண்டை பிடிச்ச அப்புறம்…”

“நா என்ன கதையா மா சொல்றே இவ்வளோ ஆர்வமா கேக்குற…”

“கதையல்ல நிஜம் சொல்லுடி…”

“அதுக்கப்புறம் உள்ள போய் சைன் பண்ணீட்டு என் கேபினுக்கு போனா, எனக்கு மட்டும் செய்ய வேண்டிய வேலையெல்லா ஒரு லிஸ்ட் போட்டு வச்சிருந்தான் அந்த வினோ…”

“நீ வேலைக்கு தான போற, வேலை சொன்னதுக்கு என்னவோ அலுத்துக்குற, சும்மா உக்காந்திருக்கவா சம்பளம் கொடுப்பாங்க… அதுக்கென்னமோ இப்படி சொல்ற…”

“நான் வேலைக்கு தான் போறேன் ஆனா இன்னும் எனக்கு ட்ரெயினிங் முடியல மா, என்கூட வேலைக்கு சேர்ந்த எல்லாரும் ட்ரெயினிங்ல இருக்கும் போது எனக்கு மட்டும் வேலை கொடுத்தா எப்படி, அதா அதுக்கும் போய் வினோகிட்ட சண்ட பிடிச்சேன்…”

“உனக்கு சண்ட பிடிக்கிறதுக்கா ஆபீஸ் வைச்சிருக்காங்க, வேலை கொடுத்தா செய்யி… பிக்கப் பண்ண லேட்டாகுறவங்களுக்குத் தான் ட்ரெயினிங், கற்பூரம் மாதிரி இருக்குற என் பொண்ணுக்கு எதுக்கு இதெல்லாம்… ஸ்ரெயிட்டா வேலை கொடுக்கலாம்னு கொடுத்திருப்பாங்க…”

“அதே தான் அவனும் சொன்னான்… ம்மா குறுக்க பேசாத இனி நான் ஃப்ளோவா சொல்லும் போது ப்ரேக் ஆகுது…”

“சரிடியம்மா… சொல்லு…”

“அதுக்கப்புறம் அந்த லிஸ்ட்ல் முதல் வேலைய பாக்க ஃபைலை தேடிப் போனேன் அந்த ரூம்ல பைலை காணோம் அதுக்கு பதிலா கட்டுகட்டா பணம் ம்மா… அவ்ளோ பணத்தை நான் பாத்ததே இல்லம்மா… அங்கயே வச்சிட்டு நமக்கு எதுக்கு வம்புன்னு பைலை ஒரு வழியா வினோகிட்ட வாங்கீட்டு, ஸ்டாக் கோடௌன்க்கு கிளம்புனேன்.

நான் தான் ஆபீஸ்க்கு புதுசுல, கோடௌன் எங்கன்னு அங்க இருக்க ப்யூன் தாத்தாகிட்ட கேட்டேன் அவர் தா அண்டர் க்ரௌண்டுக்கு போகணும்னு சொன்னாருமா.. நானும் போனேனா, கதவு திறந்து தான் இருந்துச்சு… உள்ள போனதும் லாக் ஆயிடுச்சு… ஒரே இருட்டு, ஒண்ணுமே புரியல… உள்ள போய் கொஞ்ச நேரத்திலயே எனக்கு மயக்கம் வரது போல இருந்துச்சு… ஒரு செகண்ட் கண்ண மூடித்திறந்தா பெட்டரா இருக்கும்னு தோணுச்சு… மூடி திறந்தா… நாலு நாளா என்னைக் காணோம்னு நீங்களாம் தேடிட்டு இருந்திருக்கீங்க… எனக்கு ஒண்ணுமே புரியலம்மா….”

“என்னடி சொல்ற… நாலு நாள் உனக்கு ஒரு செகண்ட் மாதிரி இருந்துச்சா…”

“ஆமாம்மா…”

“அது சரி எங்க பாடு எங்களுக்குத் தான் தெரியும்… இனிமே நீ வேலைக்கொண்ணும் போக வேணா, நாளைக்கு மது வரா… போய் நேரத்தில படு…”

“ஹைய்யா மது நாளைக்கு வராளா, அப்ப நானும் ஆபீஸ்க்கு லீவ் சொல்லிடுறேன்…”

“லீவ்வா… ஏய் உன்ன வேலைய விட சொல்றேன்…”

“வேலைய விடவா… அதெல்லாம் முடியாது… நோ நோ நோ நோ… முடியாது ம்மா… முடியவே முடியாது…” என்றிட,

“நீ என்ன வேணா சொல்லிக்கோ உனக்கு கல்யாணம் செய்றதா நானும் உங்கப்பாவும் முடிவு செஞ்சிட்டோம் மாப்ள கூட பாத்தாச்சு… சோ போய் படு…”

“ம்மா… ப்ளீஸ் ம்மா இப்ப தான் வேலைக்கு சேர்ந்தேன் இன்னும் ட்ரெயினிங் பீரியட் கூட முடியலை ம்மா, அதுக்குள்ள விட சொன்னா எப்படிம்மா…”

“தினம் தினம் நீ வருவியா வரமாட்டியா யாராச்சும் கடத்தீட்டாங்களா, இல்ல நீயா தொலைஞ்சு போய்டியா, இல்ல ஏதாச்சும் கோடௌன் ல தூங்கி எழுந்து வந்தியான்னு எங்களால பயந்திட்டே இருக்க முடியாது… மொதல்ல ராத்திரியில கண்டதைக் கனவு கண்டு கத்தாம இருக்கணும்னா உனக்கு கல்யாணம் பண்ணா தான்….”

“ஏன்மா இதுக்கெல்லாமா கல்யாணம் பண்ணுவாங்க…”

“இதுக்குத் தான் கல்யாணம் பண்ணுவாங்க போய் தூங்கு நானும் தூங்கீட்டேன்…” என்று அவள் அன்னை கண்ணை மூடிக்கொள்ள, ‘நீ தூங்கினால் என்ன என் பிரம்மாஸ்திரம் எங்கப்பா இருக்கார்ல…’ என்று, எண்ணியவள் உறங்கியும் போனாள்.

“அப்பா உங்க கூட கொஞ்சம் பேசனும்…” என்று பக்கவாதத்தால் படுத்தபடி மனைவி கொடுத்த மாத்திரையை விழுங்கிக் கொண்டிருந்த மூர்த்தியிடம் வந்து நின்றிருந்தான் கௌதம்.

“சொல்லு கௌதம் என் கூட பேச உனக்கு அனுமதி வேணுமா என்ன…” என்று கம்பீரமாகவே வந்தது மூர்த்தியின் குரல்.

தயங்கி தயங்கி நின்றபடி இருந்தவன், “ராஜிவ் ஏன் ரிசைன் பண்ணார் அதுக்கப்புறம் அவர் கேபினை யாரும் திறக்க வேணாம்னு ஏன் சொன்னீங்க… நாலு வருசத்துக்கு முன்ன உள்ள கணக்கு வழக்குல லட்சக்கணக்கில பணம் குறையுது, எதுவும் சரியா இல்ல, இதெல்லா எதனால எனக்கு தெரிஞ்சாகனும்…”

“இதெல்லாம் உனக்கு சொல்லணும்னு எந்த அவசியமும் இல்ல…”

“அவசியம் இல்லையா… இப்ப நான் தான் கம்பெனியோட எம்டி எனக்கு இதெல்லா தெரிஞ்சாகணும்…”

“உன் எம் டி பதவி நான் உனக்கு போட்ட பிச்சை, என் மகன்கிற கிரீடம் உன் தலையில ஏறிடுச்சுன்னு கர்வத்தில பேசாத, எல்லா சொத்தும் நானே சம்பாதிச்சது… என் உழைப்பு, உன்னை தத்தெடுத்து வளர்க்க வேணாம்னு இவகிட்ட சொன்னப்ப என் பேச்ச கேட்காம விட்ட இவளால வந்தது இன்னிக்கு இவ்வளவும், அன்னிக்கே தூக்கிப் போட்டிருந்தா கண்டா நாயெல்லாம் வந்து இன்னிக்கு என்னை கேள்வி கேக்குமா…” என்று மனைவியை நோக்கி திட்ட,

பல்லை இறுக கடித்தபடி அவரின் மனைவி அங்கிருந்து சென்றுவிட, கௌதம் இன்னும் அங்கேயே நின்றிருந்தான்.

“என்ன… எதுக்கு என் முன்னாடி நின்னு உன் மூஞ்சிய காமிச்சு இன்னும் டென்சன் படுத்துற போய்த் தொலையேன்….”

”எனக்கு நான் கேட்ட கேள்விக்கு பதில் வேணும்…”

“பதிலும் ஒண்ணும் இல்ல பே பே…” என்று அவரின் ஒரு பக்கம் கோணியவாயால் சொல்ல,

“நீங்க சொல்லலைன்னா என்னால கண்டுபிடிக்க முடியாதா….”

“ஏய் கௌரி எங்கடி தொலைஞ்ச இந்த சனியனை மொதல்ல தொரத்திரியா இல்ல, என் நாய விட்டு கடிக்க விடவா…”

“ஏன் அவன் என்ன நாயா… நீங்க பெத்த புள்ளை தானா அவனை பாக்கும் போதெல்லாம் உங்க உள்னெஞ்சு குத்துதோ, அவனை இப்படி நோகடிக்கிறீங்க, எவ்வளோ பாவம் பண்ணீங்களோ இங்க இப்படி கெடக்குரீங்க,  இன்னும் மிச்ச காலாமாவது நல்ல படியா உயிர் போகணும், நாறி நாத்தமெடுக்காம போய் சேரணும்னு வேண்டிக்கோங்க… நானெல்லா மனசார உங்கள திட்டுனாலே போதும்… உங்க கதி எப்படி ஆகும்னு சொல்ல முடியாது, வீணா என்வாய கெளறாம தின்னமா தூங்குனோமான்னு இருங்க… நீ வாடா அவரெல்லா ஒரு ஆளுன்னு நின்னு பேசிட்டு இருக்க….” என்ற கௌரி கௌதமை இழுத்துக்கொண்டு வெளியே சென்றிருந்தார்.

ஆத்திரம் ஆயிரம் மடங்கு வந்தாலும்,வாய் கோணி, கையும் காலும் இழுத்து பக்கவாத்தத்தில் படுத்திருக்கும் தன்னால் ஒன்றும் செய்ய இயலவில்லையே என எண்ணி சுவற்றில் முட்டிக் கொள்ள, அந்த அவலி பொறுக்க முடியாமல் அவசரமாய் தேய்த்துக் கொண்டார் மூர்த்தி.

“ஏங்கண்ணு இப்ப தான் எல்லா கண்ரோலும் உன் கையில் வந்திடுச்சுல்ல, நீயே கண்டுபுடிக்க வேண்டியதுதானே, அவனெல்லா ஒரு ஆளுன்னு மதிச்சு கேட்டுட்டு இருக்க…” என்று கௌரி சொல்ல,

“ம்மா நான் கொடுக்குற மரியாதைய கொடுத்தேன் அவருக்கு வேணாம்னா நான் என்ன செய்ய, இனி என் வேலைய நான் பாத்துக்குறேன்…”

“அதான் சரி… அந்த புள்ள கெடைச்சிட்டாளா…”

“யாரும்மா…?” என்ற கௌதம், மூர்த்தியின் பேச்சில் மாயாவை முற்றிலும் மறந்திருந்தான்.

“மாயோ பேயோ எதோ பேர் சொன்னியே…”

“ம்மா அவ மாயா ம்மா என் ஏஞ்சல் மா அவ….”

“டேய் மாயா வா ஏஞ்சலா சரியா சொல்லு…” என்று கௌரி கேட்டதில், ’உன் கிட்ட அவள வர்ணிச்சது தப்புதான் ஆத்தா…’ என்று மனதினுள் எண்ணியவன்.

“மாயா…” என்று மட்டும் சொன்னான்.

அதே நேரம் உறங்கிக் கொண்டிருந்த மாயாவின் அருகில் வந்த நேகா, “மாயா எப்ப தான் என்கிட்ட பேசப்போற, உன் பக்கத்திலயே இருக்க என்கிட்ட கேக்காம, ஊர்ல போய் யார விசாரிக்க போற மாயா…” என்றிருந்தாள்.

“நீ பேசக்கூடாது நேகா… போயிடு போதும்…” என்றார் அம்சவேணி.

அம்சவேணி பதில் கேட்டு அதிர்ச்சி அடைந்தது மாயா தான்.

நேகா பேசும் குரல் கேட்டும் கண்களைத் திறவாமல், தூங்குவது போல நடித்துக் கொண்டிருந்த மாயா உண்மையில் அம்சவேணி பதில் சொல்லுவார் என்று எதிர்பார்க்கவில்லை.

ஏன் நேகாவின் குரல் தன்னைத் தவிர மற்றவர்களுக்கும் கேட்கும் என்பதே அவளுக்கு புதிய தகவலாய் இருந்தது.

“ஏன் நானும் உங்க பொண்ணு மாதிரி தான எனக்கு ஒரு நியாயம் கேட்க மாயாவை ஏன் விடமாட்றீங்க… அவகிட்ட நான் எதுக்காக அவள சுத்தி சுத்தி வரேன்னு சொல்லணும்…”

“போதும் உனக்காக நியாயம் கேட்கணும்னா என் பொண்ணு நிம்மதியா வாழவே முடியாது… நீ தான் வாழல அவளையாச்சும் வாழ விடு….” என்ற அம்சவேniyin கடுமையான கெஞ்சுதலில் நேகா நகர்ந்திருக்க, மாயா விழித்திருந்தாள்.               

 

 

 

 

Advertisement