Advertisement

நிழல் 8

போனில் யாரென்று புரியாமல் விழித்த வினோதனும், அது நேகாவின் குரலென்று அறிந்துகொண்ட கௌதமும் மாயாவின் கண்ணில் வழியும் குருதியைக் கண்டு அலறிவிட்டனர்.

“டாக்டர் டாக்டர் சிஸ்டர் யாராச்சும் வாங்க வாங்க ப்ளீஸ்…” என்று கத்திக் கொண்டே கௌதம் வெளியில் ஓட,

வினோதன் மொபைலை தரையில் வீசிவிட்டு மாயாவின் கண்களில் வழியும் குருதியை துடைக்க துடைக்க அது நிற்காமல் வந்து கொண்டே இருந்தது.

அதே நேரம் செவிலி அங்கே வந்திருந்தார். “என்ன சார் என்ன ஆச்சு எதுக்கு கூப்பிட்டு வந்தீங்க…” என்று கௌதமையே அவர் திரும்பி கேட்க,

வினோதனும் துடைப்பதை நிறுத்திவிட்டு அவரைப் பார்த்தான். பதற்றத்தில் இருந்த கௌதமும் வினோதனும் கோரஸாக, “கண்ணுல ரத்தம் வருது சிஸ்டர்….” என்றிட,

“யாருக்கு…”
”என்ன இப்படி கேக்குறீங்க… அங்க பாருங்க மாயாவுக்குத் தான்…” என்று வினோதன் கோபமாக சொல்ல,

“என்ன சார் கனவு காணுறீங்களா… அங்க பாருங்க, தூங்கீட்டு இருக்குறாங்க பேஸெண்ட், எப்போ எழுந்தாங்க, எப்போ ரத்தம் வந்துச்சு… போங்க சார் ரெண்டு பேரும் வெளியில போங்க, அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும்…” என்று அவர் விரட்ட, மாயாவைப் பார்த்த இருவருக்குமே அதிர்ச்சி தான், ஏனென்றால் அவள் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தாள்.

தன்னை நினைத்தே கோபம் வந்தது வினோதனுக்கு கையை ஓங்கி சுற்றில் குத்திக்கொண்டான். ஏனோ தான் கூடவே இருந்தும் மாயாவிற்கு நடப்பதை தடுக்க முடியவில்லை. அவள் ஒரு இயல்பு வாழ்க்கை வாழ தன்னால் உதவ முடியவில்லையே என குற்ற உணர்ச்சியாய் இருந்தது அவனுக்கு.

எதுவும் செய்ய இயலாதவனாய் வெளியே சென்ற வினோதன் கிளம்பியும் விட்டான். கௌதமால் விட்டுச் செல்லவும் முடியவில்லை. யாரிடமும் சொல்லவும் முடியவில்லை, சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை.

துணிந்து மாயாவின் தந்தையிடம் சொல்ல முடிவெடுத்தான். நொடித்துப்போய் அமர்ந்திருந்த அவரிடம் ஆறுதலாய் சில வார்த்தைகளுக்கு பின் நேகாவைப் பற்றி சொல்லிவிடவேண்டும் என்று மனதிற்குள் கணக்கிட்டுக் கொண்டே சென்றவனின் மொபைல் எப்போதும் இல்லாத அளவிற்கு சத்தமாக அலறியது.

”யாரு சார் அது ஹாஸ்பிடல்ல இவ்வளவு சவுண்ட்டாவா மொபைல் யூஸ் பண்ணுவீங்க… போங்க சார் வெளிய போய் பேசுங்க…” என்றிட, போனுடன் வெளியே நகர்ந்தான்.

அம்சவேணி ஓய்ந்து போய் அமர்ந்திருந்தார். மாயாவின் தந்தை தான் இருப்பு கொள்ளாமல் மகள் கண்விழித்துவிட்டாளா என்று நொடிக்கொருதரம் சென்று பார்த்தவாறே இருந்தார்.

அவரை ஏமாற்றாமல் அடுத்த நிமிடத்தில் கண்விழித்திருந்தாள் மாயா. ஏற்கனவே அவள் உடலில் எந்த பிரச்சனையும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியிருந்ததால் அடுத்த அறைமணினேரத்தில் வீட்டிற்கு கிளம்பியிருந்தனர்.

இத்தனை நாட்களாக அலைந்து திரிந்த மாயவின் தந்தை வீட்டினுள் நுழைந்ததும் அங்கிருந்த ஈசி சேரில் சாய்ந்தமர்ந்து கண்களை மூடிக் கொண்டார்.

வீட்டினுள் நுழைந்த வேகத்தில் கையில் கல் உப்போடு வந்தவர் மாயாவை நிறுத்தி மூன்று முறை சுற்றிப்போட்டார். அதே வேகத்தில் அவளை குளியலறையில் தள்ளியவர் “மொதல்ல தலை முழுகிட்டு வா…” என்று துண்டை அவள் கையில் திணித்தார்.

வெதுவெதுப்பான நீர் தலை முதல் கால் வரை பரவ விட்டு பாத்டப்பில் படுத்திருந்தவள் அத்தணை சோர்வுகளும் நீங்கிய பின்னே தான் வெளியே வந்தாள்.

வெள்ளை நிற டிசர்ட்டும் அதற்கு ஏற்றாற்போல் அடர்சிவப்பு நிறத்தில் லாங் ஸ்கர்ட்டும் அணிந்து ஈரக்கூந்தலை உலர்த்தியபடி புத்துணர்ச்சியோடு வெளியே வந்திருந்தாள்.

வீட்டைச்சுற்றி மலர்ந்திருந்த மல்லிகையும், பன்னீர் ரோஜாவும் மணம் பரப்ப தோட்டத்தில் வந்து அமர்ந்தவளோடு கையில் காபி கோப்பைகளோடு அவளின் பெற்றோரும் இணைந்து கொண்டனர்.

காபியோடு கொறிக்க வறுத்த முந்திரியும் இருக்க குளிருக்கு இதமாக இருந்தது. மாயாவாக துவங்கட்டும் எதையும் கேட்டு அவளை மீண்டும் மன அழுத்தத்தில் ஆழ்த்திவிடக்கூடாது என்பதில் அவர்கள் தெளிவாக இருந்தனர்.

அவளுக்குமே அந்த சூழல் அவள் மனதை பகிர்ந்து கொள்ளத்தூண்டியது. அவளுமே தானாக ஒரு முறைகூட நேகாவிற்கு என்ன ஆனது என்பதை கேட்டு அறிந்து கொள்ளவும் இல்லை, அவளின் இறப்பிற்கு தானும் ஒரு வகையில் காரணம் என்பதை யாரிடமும் சொல்லவில்லை.

இன்று சொல்லத்தோன்றியது அவளுக்கு.

“ம்மா.. உனக்கு ஞாபகம் இருக்கா… என் கூட ஸ்கூல்ல நேகான்னு ஒரு பொண்ணு படிச்சா எனக்கு நல்ல ப்ரண்ட் உனக்கு கூட தெரியுமே…”

“தெரியும் அந்த பொண்ணு அப்போவே செத்து போயிடுச்சுல்ல…”

“ஆமா மா…” என்று ஒரு நொடி மௌனம் காத்தவள், ”அவ எப்படி இறந்து போனான்னு உனக்கு தெரியுமாம்மா…”

“இல்ல பாப்பா ஆனா அந்த நேரம் ஊரெல்லா இதே பேச்சா இருந்துச்சு, அப்போதான் உனக்கு நிறைய பிரச்சனை எதுக்கு பயப்படுறன்னே தெரியல… டாக்டர்கிட்ட தூக்கி அலைஞ்சோம்… எப்படின்னு தெரியல… ஏன் இப்ப கேட்குற…”

“அவ சாவுக்கு காரணம் நான் தா ம்மா…”

“என்னடி சொல்ற…”

“அன்னிக்கு அவங்க வீட்டுக்கு தான் விளையாட போனேன், அவ ஸ்கிப்பிங் கயிறு தேடிட்டு இருந்தா, அந்த நேரம் ஒரு தாடிக்காரன் அழுக்கு லுங்கியோட, பாக்கவே பயமா இருக்கும் அவன, அவன் அங்க வந்துட்டான் மா, என்னைத் துரத்தினான், நான் அவன் கைக்கு சிக்காம வந்துட்டேன் ஆனா நேகா மாட்டிக்கிட்டா, அவன் என்ன செஞ்சான்னு தெரியல, அவன் தான் நேகாவை கொன்னிருக்கனும், அங்கிருந்து ஓடி வந்த நான் யார்கிட்டயும் இதை பத்தி சொல்லாம நா தப்பிச்சிட்டேன்னு நிம்மதியாயிட்டேன். நேகாவை பத்தி யார்கிட்டயும் சொல்லி அவள காப்பாத்தாம விட்டுட்டுடேன், நான் மட்டும் பெரியவங்க யார்கிட்டயாச்சும் சொல்லி அவளயும் காப்பாத்தியிருந்தா அவளும் இப்ப என்னை மாதிரி உயிரோடு இருந்திருப்பாம்மா… நேகா சாவுக்கு நானே காரணமாயிட்டேன் மா… என்னால தான் அவ செத்துப் போயிட்டா…. அன்னியிலிருந்து என்னைய சுத்தி சுத்தி வரா மா…” என்றவள் அதற்கு மேல சொல்ல முடியாமல் முகத்தை மூடிக் கொண்டு கதறி அழுகத்துவங்கினாள்.

”ஏய் லூசா நீ… அவன் தான் அவளை ஏதாச்சும் செஞ்சு சாகடிச்சானா, எப்படி நேகா செத்தான்னே உனக்கு தெரியலை, இதுல நீ எப்படி காரணமா இருக்க முடியும்…” என்ற அம்சவேணியின் பதிலையே அவளின் தந்தையும் ஆமோதித்தார்.

“ஆமா பாப்பா வீணா மனச போட்டு குழப்பிக்காதா நாம வேணும்னா அங்கயே போய் அந்த பொண்ணோட சொந்தக்காரங்க கிட்ட விசாரிச்சிட்டு வரலாம் நாளைக்கு…”

“அப்பா ஆனா அவ என்னயே சுத்தி சுத்தி வராப்பா… அவ சாவுக்கு நான் தான் காரணம்னு சொல்றாப்பா…”

“அப்படியெல்லா இல்ல கண்ணு… அந்த பொண்ணு உன்ன ஒண்ணும் செய்யாது மா, நீ எதுக்கும் கவலப்படாத மா… உண்மை தெரிஞ்சிட்டா இது உனக்கே புரியும்…”

“இல்லப்பா உங்களுக்குப் புரியல…அவளா சொல்லாம நான் நம்ப மாட்டேன் பா…”

“வேணி டிபன் எடுத்து வை… வா கண்ணு சாப்பிட்டு தூங்கலாம்…”

“அப்பா… ஒரு நிமிஷம்…”

“நாலு நாளா என்னைக் காணோம்னு தேடி அலைஞ்சிருக்கீங்க… அம்மாவ ஹாஸ்பிடல்ல டேர்க்குர அளவுக்கு போயிருக்கு… நான் கிடைச்ச அப்புறம் எப்படி என்ன ஆச்சுன்னு ஒரு வார்த்தை கூட இதுவரிக்கும் என்கிட்ட கேக்காம இருக்கீங்க….”

“உன்னைக் காணாம நாங்க எவ்வளோ தவிச்சிருப்போம்னு உனக்கு புரியும் போது, எங்களைப் பிரிஞ்சு நீ எவ்வளோ கஷ்டப்பட்டிருப்பன்னு எங்களுக்குப் புரியாதா… என்னைப் பொருத்தவரைக்கும் நீ எங்களுக்கு நல்ல படியா கிடைச்சிட்ட… அதுக்காக கடவுளுக்கு ஒவ்வொரு நிமிஷமும் நன்றி சொல்றேன்… உன்னோட வாழ்க்கை நல்லபடியா நிம்மதியா சந்தோஷமா இருக்கும்… அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு மா…” என்று கூறியவர் அதற்கு அங்கிருக்கவில்லை, எழுந்து சென்றுவிட்டார்.

மாயாவிற்கு ஒன்றும் விளங்கவில்லை. “ம்மா நான் என்ன கேக்குறேன் அப்பா என்ன சொல்லுறாங்க…?”

“நானாச்சும் வாய்விட்டு கத்திட்டேன் அழுது உன்னைக் காணோம்னு நான் அனுபவிச்ச வலிய வெளியில சொல்லிட்டேன், ஆனா மனசுக்குள்ளயே வச்சு மருகுறார் உங்கப்பா… நீ இருந்ததாக சொல்ற கோடௌன்ல நாலு வருசமா புழக்கமே இல்லாம இருந்துச்சாமே… அதுல நீ எப்படிப் போன என்ன நடந்திருக்கும் யார் இதயெல்லா செஞ்சிருப்பாங்கன்னு எனக்கோ உங்கப்பாக்கோ தெரியாது ஆனா அவங்கள கடவுள் பாத்துக்கட்டும் நல்லாயிருக்கட்டும்… இப்ப சொல்லு நீ எப்படிப் போன அங்க…”

“ம்மா நீயாச்சும் கேட்டியே… அன்னிக்கு நான் வேலைக்கு போனதும் உன்கிட்ட நான் மயங்கிட்டேனு கால் பண்ணி சொன்னானே அந்த ருத்ரன் அவன்கிட்ட செம சண்டை பிடிச்சேன்…”

“ஏண்டி பாவம் நல்ல பிள்ளை, எவ்வளவு பொறுப்பா இருக்கு அந்த தம்பி…”

“ஹான் தம்பி தொம்பி அவன் யாருன்னு உனக்கு தெரியிலையா மா…”

“யாருடி எனக்கென்ன தெரியும்…”

“ம்மா அவன் தான் என் க்ளாஸ்மேட் ருத்ரவினோதன் மா… எப்போ பார் என்கிட்ட போட்டி சண்டை போட்டுட்டே இருப்பான்னு சொல்வேனே, அவன் தான் மா… ராஸ்கல் இத்தனை வருஷம் கழிச்சு பாக்குறோம் ஒரு வார்த்தைக்கூட தெரிஞ்சமாதிரி காட்டிக்கல மா அவன், என்கிட்டயே கெத்து காட்டுறான்… எனக்கு மேல ஹையர் பொஷிஷன்ல வேற இருக்கானா செம சீன் போடுறான் மா…”

“அப்படி இல்ல பாப்பா… அந்த பையனுக்கு உன்னை அடையாளம் தெரிஞ்சா கூட நீ அவனை நியாபகம் வச்சிருக்கியான்னு தெரியாதில்லையா… அவன் தெரிஞ்ச மாதிரி பேசி நீ அவன தப்பா எடுத்துக்கிட்டா, ஏற்கனவே ரெண்டுபேரும் சண்டகோழி, இப்பயும் அப்படியே ஆகீட்டா, அதுக்காக கூட பேசாம இருந்திருக்கலாம் இல்லையா…”

“அப்படியா இதெல்லா உனக்கெப்படி தெரியும் என்னமோ அவன் கூட ரொம்ப பழகின மாதிரி சொல்ற…”

“ஆமா பழகி தான் சொல்றேன்…”

“என்னது பழகுனியா… இது எப்ப மா…”

“உன்னைப் பாத்த மொதல் நாளே உன் ரெஸ்யும் ல இருந்து அப்பா நம்பர்க்கு கால் பண்ணுச்சு அந்த தம்பி, உன்னோட ஸ்கூல் ப்ரெண்ட்டுன்னு சொன்னுச்சு, உன்னை பத்தி விசாரிச்சிட்டு, அவளுக்கா என்னை அடையாளம் தெரிஞ்சா தான் நான் அவகிட்ட என்னை அறிமுகப்படுத்திக்குவேன் அதுவரைக்கும் நீங்களும் அவகிட்ட சொல்லாதீங்க ஆண்ட்டின்னு சொல்லிருச்சு…”

“அடப்பாவி…. அவ்வளவு நல்லவனா நீ…”

“இல்ல இல்ல நல்லவன் இல்ல நல்லவர்கள்…”

“நல்லவர்களா… ஏன் இன்னும் லிஸ்ட் ல ஆள் இருக்காங்களா…”

“ஆமா…”

“என்னம்மா சொல்ற… ஸ்கூல் ல இவன் கிட்ட மட்டும் தான் சண்டைபிடிச்சிருக்கேன் வேற யார்கூடயும் சண்டை பிடிக்கலையே…”

“ஏண்டி உன்னைப் பத்தி விசாரிச்சு கேர் எடுக்குறவங்க நீ சண்டை போட்டவங்களா மட்டும் தான் இருக்கணுமா என்ன…? உனக்கு சம்பளம் குடுக்குற முதலாளியா இருக்கக்கூடாதா….”

“யாரு கௌதம் சாரா…”

“ஆமா கௌதம் தம்பிக்கும் உன்மேல எவ்வளவு அக்கறை தெரியுமா… நாலு நாளும் இந்த ரெண்டு பசங்களுக்கும் உனக்காக எவ்வளாவு பதறுனாங்க எனக்குத் தான் தெரியும், நானும் உங்கப்பாவும் உன்னைப் பெத்தவங்க எங்களுக்கு அந்த பயமும் பதட்டமும் இருக்குறதுல நியாயம் இருக்கு, அவங்களுக்கு இருக்கனும்னு என்ன இருக்கு சொல்லு…”

“ஆனா வினோ வாச்சும் எனக்கு தெரிஞ்ச ஆளு, ஆனா கௌதம் சாரை எனக்கு தெரியாதே மா… அவர் எப்படி என் மேல இவ்வளவு கேர்…”

“உனக்குதான் தெரியாது அவருக்கு உன்னைத்தெரியும் எங்களுக்கும் முன்னாடியே தெரியும்…”

“அவருக்கு எப்படி என்னைத் தெரியும்…”

“உன் காலேஜ் சீனியர் டி…”

“என்னம்மா என் சீனியரை எனக்கே தெரியல, உனக்கெப்படி…”

“கடிவாளம் கட்டின குதிரை மாதிரி நேரா போய்ட்டு நேரா வந்தா சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியாது, நாமாளா ஒரு உலகத்தை கட்டமைச்சிகிட்டி அதுக்குள்ள இருந்தா எப்படித் தெரியும்… நல்லவங்க யாருன்னு எப்படித் தெரியும்…”

“ம்மா என்ன குதிரைன்னு சொல்றியா…”

“இல்ல உனக்கு நீ போட்டிருக்குற கடிவாளத்தைக் கழட்டிட்டு உலகத்தை பாரு, உன் பயம் உன் எண்ணம் அந்த நேகா எல்லாத்தையும் தூக்கிப் போடு, இந்த உலகத்தில உன் மேல அன்பு வைக்க நெறைய பேர் இருக்காங்க, நீ ரசிக்க இந்த உலகமே காத்திட்டு இருக்க, உன் சந்தோசமான வாழ்க்கைய ரசிக்க நாங்களும் காத்திட்டு இருக்கோம், மறந்திடாத…”

“ம்மா…” என்றவள் என்ன நினைத்தாளோ அன்னையின் மடியில் தலைவைத்துக் கொண்டாள். அந்தநொடியில் நேகா எங்கோ தூரத்தில் ஒரு புள்ளியாய் தெரிந்தாள்.

 

Advertisement