Advertisement

நிழல் 7

“ஸ்ருதி ஸ்ருதி… நீயா… நீ நீ உயிரோட இருக்கியா… ஸ்ருதி… எங்கயிருக்க ஸ்ருதி… நான் பேசுறது கேட்குதா… ஸ்ருதி…” என்ற சிவாவின் குரலுக்கு போனிலிருந்து மட்டுமல்ல, அந்த அறையே அதிர்ந்தது.

“இங்க தான் உன் முன்னாடி தான் இருக்கேன் சிவா என்னைத் தெரியலையா…” என்று அதுவரை திரும்பி நின்றிருந்த பெண் இப்போது திரும்பினாள்.

அவள் அவனின் ஸ்ருதி, அவனின் உயிர் காதலி, நான்கு ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவள். தன் முன் உடலற்ற ஆத்மாவாய் நின்றுகொண்டிருக்கிறாள்.

“ஸ்ஸ்ஸ்ஸ்ருதிதிதி………..” என்று உச்ச ஸ்ததியில் கத்தி மண்டியிட்டு கதறுபவனை அவளால் தடுக்க முடியவில்லை.

அனுபவித்து தீர்க்கவேண்டிய வலிகளை தள்ளிப் போட்டால் மட்டும் ஆறிவிடுமா என்ன…?

அவனாக அழுது தீர்த்து தெளிந்து நிமிரட்டும் என்று காத்திருந்தாள். அவனாக நிமிர்கையில் அழுகை தீர்ந்து கோபமும் ஆத்திரமும் குடிகொண்டிருந்தது.

“என்ன நடந்துச்சுன்னு சொல்லு ஸ்ருதி…”

“சொன்னா மட்டும் சொன்னா மட்டும் என்ன பண்ணிடுவ சிவா…?”

“உன்னோட மரணத்துக்கு காரணமானவங்களை நான் கொல்றேன்…”

“கொன்னுட்டா…”

“கொன்னுட்டான்னா….”

“கொன்னுட்டா மட்டும் வலி போய்டுமா, இப்ப வரைக்கும் என் உயிருக்குள்ள வலிக்கிற வலி போயிடுமா… உன் கூட சந்தோசமா வாழமுடியலையேன்ற வலி போய்டுமா, வாழவேண்டிய வயசுல வாழ்கைய தொலைச்சிட்டு, வாழவும் முடியாம, செத்தும் போய் சேரவும் முடியாம, ரெண்டுக்கும் நடுவுல ஆன்மாவா சுத்துறேனே அந்த வலி போகுமா….”

“வலியை போக்க முடியாது ஸ்ருதி, நான் என்ன செய்யட்டும்… என்ன செஞ்சா நீ சாந்தி அடைவ… சந்தோசமா வாழ முடியாத உனக்கு ஆத்ம சாந்திக்கு என்ன பரிகாரம்னு சொல்லு, அதையாவது நான் செய்றேன்…”

“மொதல்ல, அந்த ராஜிவ், இந்த கார்மெண்ட்ஸ் ஓனர் மூர்த்தி எல்லாரையும் தேடிக் கண்டுபிடி…”

“கண்டுபிடிச்சிட்டா…”

“கண்டுபிடி, மீதியெல்லா உனக்கே புரியும்…”

“சரி…” என்று திரும்பியவனுக்கு, நேரே லிப்ட் இருந்தது.

சட்டென்று வெளிச்சம் பட்டு கண்கள் கூச,மீண்டும் திரும்பி அந்த கோடௌனை தேடியவனுக்கு பூட்டிய கதவுகளே காட்சியளிக்க, ஆம்பலன்ஸின் சைரன் சத்தம் நில்லாமல் ஒலித்துக் கொண்டிருந்தது.

திரும்பியவனுக்கு மாயா ஆம்புலன்ஸில் ஏற்றப்படுவது தெரிந்தது. அருகில் அவனைத் தவிர மற்றவர்கள் அனைவரும் இருந்தனர்.

நேரே லிப்டை அடைந்து பத்தாவது மாடியில் இருந்த அலுவலகத்தை அடைந்தவன், அங்கிருந்தவர்களிடம் அவர்களின் பெரிய எம்டி மூர்த்தியைப் பற்றியும், அங்கு நான்கு வருடங்களுக்கு முன் பணிபுரிந்த அக்கௌண்டண்ட் ராஜீவ் பற்றியும் கேட்டுக் கொண்டிருந்தான்.

“ஏன் உங்க மூர்த்தி சார் இப்போ ஆபீஸ் வரதில்ல…”

“அவர் வந்து நாலு வருசமாச்சு, ரெண்டு வருசம் வீட்டில இருந்தே மேனேஜ் செய்தார், இப்ப ரெண்டு வருசமா, அவங்க பையன் கௌதம் சார் மேனேஜ் செய்றார்… ஆனா ஏன் வரலைன்னு எனக்கில்ல, இங்க இருக்க யாருக்குமே தெரியாது…” என்றார் அங்கு வேலை பார்க்கு கிளார்க் சுமதி.

“நீங்க கடைசியா அவரை எப்போ பாத்தீங்க…”

“எப்போ பாத்திருந்த உங்களுக்கு என்ன இன்ஸ்பெக்டர்… நீங்க இதுக்குத் தான் வந்தீங்களா, நீங்க மாயா காணாம போனத விசாரிக்க வந்ததாக ஞாபகம்… ஆனா நீங்க த தவிர வேற வேலையெல்லாம் பாக்குறீங்க…” என்ர பதிலுடன் கௌதம் தன் பின்னால் வந்து நிற்பான் என்று சிவா எதிர்பார்க்கவில்லை.

திகிலுற்ற சிவா, “அது அது ஒண்ணுமில்ல, ஒரு விசாரனைக்குத் தான்…” என உளறிவைத்தான்.

“நீங்க தேடி வந்தது மாயாவை, மாயா கிடைச்சாச்சு… அவ எப்படி இருக்கா என்னன்னு பாக்காம இங்க என்ன செய்றீங்க…”

சிவாவால் அங்கு நடந்ததை ஸ்ருதியிடம் பேசியதை சொல்லவும் முடியவில்லை. சொல்லாமல் அங்கு மேற்கொண்டு விசாரித்து தகவல்களைப்பெறவும் முடியவில்லை. அதே நேரம் மாயா எப்படி கிடைத்தாள் தான் அங்கு அவளைப் பார்க்கவில்லை. இதற்கு மேலும் மாயாவைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் இங்கு இருப்பது சரியல்ல என்ரு உணர்ந்தவன், அதற்கு மேல் அங்கிருக்கவில்லை.

கௌதமிற்கு நடந்தவையெல்லாம் தான் விசித்திரம் என்றால், இறுதியில் அந்த இன்ஸ்பெக்டர் தன் தந்தையைப் பற்றிக் கேட்கவும், அதிகப்படியான சிக்கலில் மாட்டிக் கொண்டது போலொரு உணர்வு.

துளிர்த்த இன்பத் துளிகளை சுகிக்க முடியாமல் இதென்ன அவஸ்தையான உணர்வு. மாயா அந்த கோடௌனுக்கு வெளியில் கிடந்த நிலையை கண்டவனுக்கு இதயம் கசங்கியிருந்தது.

எப்போதும் சிவந்த ரோஜா இதழ்களைப் போல் புத்தம் புதிதாய் காணப்படும் மாயா, இன்று வாடிய மலராய் துவண்டு சுண்டிருந்திருந்தாள்.

மயக்கத்தில் இருந்தவளைக் கண்டது கௌதமும் வினோதனும் தான்.

இன்ஸ்பெக்டரோடு இறங்கி வந்தவர்கள் மீண்டும் எப்படி அலுவலத்தினுள் சென்றார்கள் என்பது கௌதமிற்கும் தெரியவில்லை. நடப்பதெல்லாம் கண்ணால் கண்டாலும் எதுவும் விளங்கவில்லை அவனுக்கு.

அப்போதுதான் அலுவலகத்தினுள் வந்தது போலிருந்தது. அதற்குள் கம்யூட்டரின் நாட்கள் கூட நான்கு நாட்களைக் கடந்திருந்தது அவனுக்கு விஞ்ஞானத்தைக் கூட ஏமாற்றமுடியுமா என்று சந்தேகிக்க வைத்தது.

அதன் பின் அந்த இன்ஸ்பெக்டரைக் காணவில்லை. எங்கு சென்றான் என்று தெரியவில்லை என்று அவனின் உயர் அதிகாரிகள் ஆபீஸிற்கே அழைத்துக் கேட்டது அதிலும் விசித்திரம்.

முதலில் மாயா மர்மமாய் தொலைந்து போனது. பின் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது அவள் தன்னைப்போல் பேசிக்கொண்டு புழங்காத பழைய அறைக்குச் செல்வது.

ஆபீஸிலேயே இல்லாத கௌதமிடம் பேசி சண்டயிடுவது போன்ற அவளின் தனியான பேச்சு, சேமிக்க இடமில்லாத கணினியில் இவ்வளவும் பதிந்து பின் சிசிடிவியே பழுதாகிப் போனது.

அதன் பின் வந்த இன்ஸ்பெக்டரிமும், வினோதனிடமும் தன்னைப்போல் பேசியது யார்…?

மாயாவின் அழைப்பேசிக்கு அந்த ஆடியோவை அனுப்பியது யார்…? இதையெல்லாம் இங்கு செய்பவர்கள் யார்…? அப்படி செய்பவர்களுக்கு என்னதான் வேண்டும்…?

இது எல்லாவற்றிற்கும் மேலாக மாயாவிற்கு நடப்பவைக்கும் என்ன சம்பந்தம்…? அனைத்தையும் யோசித்தவனுக்கு ஏனோ மனதில் சிறு பய உணர்வு கூட தோன்றியது.

அந்த பயம் அந்தபயம் நேகாவிற்கு மிகவும் பிடித்திருந்தது. அவனறையில் அமர்ந்து அனைத்தையும் யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு, ஒரு குரல் கேட்டது.

“என்ன கௌதம் ரொம்ப யோசிக்கிற போல… மாயாவைக் காப்பாத்தனுமா… அவ்வளோ லவ்வா அவ மேல…?” என்று சிரித்த சிறுமியின் குரல் கேட்டு ’ஆவியாவது பேயாவது அதெல்லாம் ஒண்ணுமில்ல.. சும்மா கட்டுக்கதை…’ என்று எண்ணியிருந்த கௌதமிற்கு வியர்த்துவிட்டது.

அவனின் வியர்வைத்துளிகள் செந்நிறச்சாயம் பூசிக்கொண்டு தரையில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது. வெள்ளைக் கர்சீப்பில் அறியாமல் துடைத்தவன் இரத்தத்தைக்கண்டதும் அலறிவிட,

“என்ன கௌதம் பயமா இருக்கா… உன் இரத்தம் தான்… ஆனா மாயாவை லவ் பண்ற உன்னோட இரத்தம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கே… இப்பயே குடிச்சிடவா…” என்று இதுவரை தூரமாய் கேட்ட குரல் இப்போது அவன் காதருகே கேட்டது.

கழுத்தில் பற்கள் பதியத் துவங்குகையில் அலறித்துடித்து பின் வாங்கிய கௌதமின் முகத்திற்கு மிக நெருக்கத்தில் நின்றிருந்த நேகா,

”உன்னோட மாயா மட்டும் அன்னிக்கு எனக்கு ஹெல்ப் பண்ணியிருந்த இந்நேரம் நானும் சந்தோசமா வாழ்ந்திருக்க மாட்டேனா…” என்று கண்ணீர் துளிர்க்க கேட்டாள்.

’அப்படி என்ன கொடுமை நடந்ததோ மாயா எவ்வகையில் காரணமானாள், எதுவாயிருந்தாலும் இவ்வளவு கொடூர பகை வளர்க்கும் அளவிற்கு என்னவாயிருக்கும்… இவ்வளவு பகை உள்ளவள் மாயாவை நான்கு நாட்கள் வைத்து என்ன செய்திருப்பாள், அவள் வேறு பேச்சு மூச்சில்லாமல் கிடந்தாளே, என்னாச்சோ…’ என்று அவன் யோசித்திருக்கையில்,

“ரொம்ப கவலைப்படாத கௌதம் மாயாவை அவ்வளோ சீக்கிரம் கொல்லமாட்டேன், அவளை வச்சு எனக்கு கொஞ்சம் வேலை முடிக்கவேண்டியிருக்கு… “

”எ எ என்ன் வேலை, எதுவாயிருந்தாலும் வேணாம் விட்ரு அவ பாவம் கொஞ்சம் நிம்மதியா வாழவிடு அவளை…”

”அப்போ அவளுக்கு பதிலா அந்த வேலையெல்லாம் நீ செய்றியா… பாரபட்சம் பாக்கமா செஞ்சு முடிப்பேன்னு எனக்கு வாக்கு கொடு அவளை கொஞ்ச நாளைக்கு விடுறேன்…”

“சரி சரி நான் முடிக்கிறேன், அவளை ஒண்ணு செய்யாத…”

”ஹா ஹா ஹா ஹா… அவளைக் காப்பாத்துறேன்னு நீயா வந்து மாட்டிகிட்டியே கௌதம்… இனி உன்ன யார் காப்பாத்துவாங்க…” என்று கோரமாய் சிரித்த நேகாவின் அகோர பிம்பம் அங்கிருந்த கண்ணாடி சுற்றுச் சுவர்களில் அவனை சுற்றி வளைத்திருந்தது.

நடந்த அனைத்தும் நேகாவின் செயல்கள் என்று அறியாத கௌதம் மாயாவைக் காப்பாற்ற தன்னை பலியாக்கியிருந்தான்.

ஹாஸ்பிடலில் மாயா ஐசியூ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தாள்.

அவளின் கேஸ் அங்குள்ள மருத்துவர்களுக்கு வினோதமாய் இருந்தது. அவள் உடலி எந்த காயமோ அடியோ படவில்லை.

முழு உடல் பரிசோதனை கூட செய்யப்பட்டுவிட்டது. எந்த பிரச்சனையுமில்லை. பட்டினி கிடந்தார் போல் அறிகுறி கூட இல்லை. ஆரோக்கியமாகவே இருந்தாள். நல்ல சுவாசம் நல்ல இருதயத் துடிப்பு என அனைத்தும் இயல்பாய் இருந்தும் மாயா கண்ணை மட்டும் திறக்கவேயில்லை. அவளின் நிலை அங்கிருந்த மருத்துவர்களுக்கு அனைத்தும் சரியாயிருந்தும் ஆட்டோ போகாத கதையாக இருந்தது.

என்ன செய்தும் அவள் கண் திறக்கவில்லை. வினோதனுக்கு நடப்பதையெல்லாம் பார்த்து தலையைக் கொண்டு போய் சுற்றில் முட்டிக் கொள்ளலாம் போல் இருந்தது.

பள்ளி நாட்களில் நடந்த இதுபோன்ர சம்பவங்களும் மாயாவின் வாழ்வை தலைகீழாய் புரட்டிப் போட்டதையும் கண்முன் பார்த்தவனால் மீண்டும் அவற்றை சகித்துக் கொள்ள முடியவில்லை.

இதற்கு காரணமானவர்கள் கையில் சிக்கினால், கடித்து துப்பிவிடும் அளவிற்கு கோபமிருந்தது அவனுக்கு. அவள் தந்தையின் நிலையை நினைத்து பார்த்தவனால் கோபத்தை முன்னிலைப்படுத்த முடியவில்லை. அதற்கான காரணகர்த்தாவை கண்டுபிடிக்கும் வரை மாயாவின் பெற்றோருக்கும் ஆதரவாக ஆறுதலாய் தெம்பாய் இருப்பதென முடிவிற்கு வந்திருந்தான்.

”நீ என்ன வேணா முடிவு செய்யலாம் ருத்ரவினோதா அதையெல்லா நிறைவேத்தனும்னா அதுக்கு என் அனுமதி வேணும்னு உனக்கு தெரியாம போயிடுச்சு… ரொம்ப பாவம் நீ…” என்று பேசுவதும் அதன் பின் சிரிப்பதும் கண் திறக்காமல் படுத்திருந்த மாயாவிற்கு அப்போது தான் மாயாவின் அறையினுள் நுழைந்த கௌதமிற்கும் நன்றாகவே கேட்டது.

மற்றவர்கள் யாருக்கும் கேட்டது போல் தெரியவில்லை. ஏனையவர்கள் கண்ணில் மிரட்சியில்லை, அதுபோக கவலையே அதிகம் தெரிந்தது.

அதே நேரம் வினோதனின் மொபைல் அலறியது.கோரமாய் சிரித்த பெண்ணின் குரலை அடையாளம் காணமுடியவில்லை அவனால். ஆனால் தானாக ஆன் ஆன ஒலிப்பெருக்கியால் அதுவரை கந்திறக்காத மாயா, பட்டென்று கண்விழித்தாள் கண்ணிலிருந்து வந்த செங்குருதியை அவளறியாமல் துடைத்து முகமெல்laaம் சிவப்பாய்

Advertisement