Advertisement

நிழல் 6

மாயாவைக் காணவில்லை என்ற செய்தி அலுவலகம் வீடு என அனைவரையும் அசைத்துப் பார்த்திருந்தது. ஒரு நாள் இரண்டு நாட்கள் இல்லை. இன்றோடு நான்கு நாட்கள் முடிந்திருந்தது. போலீஸ் புகார் கொடுக்கப்பட்ட இரண்டாவது நாளிலிருந்து அவர்களும் ஊட்டி முழுவதும் சல்லடை போட்டு தேடிக் கொண்டிருக்கின்றனர்.

அவளின் அன்னை அம்சவேணி அழுது அரற்றி உணவு உறக்கம் இன்றி தவித்திருந்ததில் அவரின் சர்க்கரை, இரத்த அழுத்தம் ஏடாகூடமாய் ஆனதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சுவாசப்பாதை பிரச்சனைகளும் இருந்தததால் ஆக்ஸிஜன் மாஸ்க் வைக்கப்பட்டு செயற்கைசுவாசமும் பொருத்தப்பட்டிருந்தது. பேசமுடியாத நிலையிலும் மகளின் நிலைமையை கேட்டுக்கொண்டே இருந்தார் சைகையில்.

கௌதம் உச்சபட்ச பதற்றத்திலும் கோபத்திலும் இருந்தான்.அலுவலகம் சென்றவள் வீடு திரும்பவில்லை என்று புகார் கொடுக்கப்பட்டிருந்ததால் போலீசார் அவனையும் அங்கு வேலை செய்பவர்களையும் விசாரணை என்ற பெயரில் இரண்டு நாட்களாய் வறுத்து எடுத்துக் கொண்டிருந்தனர்.

மாயா காணாமல் போன மறுதினம், அவள் தந்தை வந்து அலுவலகத்தில் வந்து கேட்டபோது தான் வினோதனுக்கு தெரியும். அவளின் தந்தையை அழைத்துக் கொண்டு போய் அவளின் கேபினைப் பார்த்த போது, அங்கு அவளின் கைப்பை, அணைத்து வைக்கப்பட்ட மொபைல் என அனைத்தும் இருக்க, அவரின் சந்தேகம் அலுவலகத்தில் உள்ளவர்கள் மீது வலுக்கத்துவங்கியது.

உடனே அங்கு வந்த இன்ஸ்பெக்டர் சிவா, முதலில் விசாரித்தது வினோதனைத் தான்,

“உம் பேரு என்ன மேன்…?

“ருத்ரவினோதன்…”

“நேத்து ஆபிஸ் வந்த மாயா எங்க…?

”எனக்கு தெரியாது…”

“அந்த பொண்ணு உனக்கு கீழ தான வேலை பாக்குது…”

“ஆமா…”

“நேத்து எப்ப அந்த பொண்ண பாத்த மார்னிங் வந்ததும் பாத்தேன்…”

“அதுக்கப்புறம் பாக்கலையா…”

“பாக்கலை…”

”ம்ம்ம்…”

“உங்க ஆபீஸில சிசிடிவி கேமரா இருக்குல்ல…”

“அஃகோர்ஸ்…”

“நான் பாக்கணும் அதை…”

“வாங்க…” என்று கண்ட்ரோல் ரூமிற்கு அழைத்துச் சென்றான்.

அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் ஓடத்துவங்கின. காலை அலுவலகம் வந்தது வரும் போதே வினோதனை மறித்து சண்டையிட்டது. பின் கேபின் வந்து சில நிமிடங்களுக்கு பின் மீண்டும் வினோதன் இல்லாத அவனறைக்குச் சென்று அவனிடமே சண்டையிடுவது போல் தானாகவே எதோ பேசும் மாயா அங்கிருந்து வந்து கேபினில் அமர்ந்து கொண்டாள் ஆகிய காட்சிகளைக் கண்டு இன்ஸ்பெக்டர் இவன் முகபாவனைகளையே உற்று கவனிக்க, இவனோ மிகவும் குழப்பமாக காணப்பட்டானே ஒழிய சிறிதளவு கூட பயமோ குற்றணர்ச்சியோ கள்ளத்தனமோ கூட அவன் முகத்தில் இல்லை.

வினோதனும் அந்த ஃபூட்டேஜை மிகவும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தான். மாயா பைலை எடுத்துக் கொண்டு அவளறைக்கு வரும் அதே நேரம் தான் கௌதமிடம் வினோதன் பேசிக் கொண்டிருந்தான். கௌதம் அறையிலிருந்த கேமரா அதன் காட்சிகளை படம் பிடித்திருக்க,

கௌதம் அறையிலிருந்து வெளியேறிய வினோதன் வெளியே சென்று தன் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பியும் விட்டான்.

அதே நேரம் மாயா அவளுக்கான ட்ரெயினிங் செல்லாமல், அங்கு புழக்கத்தில் இல்லாத ஒரு அறைக்குச் சென்றிருந்தாள், அங்கிருந்த டேபிளில் எதையோ தேடியவள், பின் அந்த டேபிளின் ட்ராயர்களை ஆராயத் துவங்கினாள். அதில் கட்டு கட்டாக பணம் அடுக்கப்பட்டிருந்தது. மீண்டு அதை பூட்டியவள் அங்கிருந்து வெளியேறினாள்.

அதன்பின் கேமரா பதிவுகள் எதுவும் பதிவாகவில்லை. எவ்வளவு முயன்றும் அதன் பின்பான பதிவுகளை எடுக்க முடியவில்லை. காரணம் கேட்ட போது அங்கிருந்தவர், கேமராக்கள அனைத்தும் ஒரே நேரத்தில் செயலிழந்திருப்பதாகத் தெரிவித்தார்.

“எப்படி ஹவ் இட் இஸ் பாஸிபிள்…”

“எங்களுக்கும் அது தான் புரியலை சார், லாஸ்ட் வீக் தான் சர்வீஸ் வந்து செஞ்சாங்க, எல்லாம் நல்ல கண்டிஷன்ல தான் இருந்துச்சு, இப்படி ஆகுறதுக்கு வாய்ப்பே இல்லை…”

அதன் பின் இன்ஸ்பெக்டரின் சகாக்கள் அங்கிருந்த அனைவரையும் விசாரணை செய்தனர் ஆனால் ஒருவருக்கும் ஒன்றும் தெரியவில்லை.

அதுவரை யோசனையில் மூழ்கியிருந்த இன்ஸ்பெக்டர்,

“உங்க எம்.டி யை பார்க்கணும்…” என்றார்.

“ஓ பாக்கலாமே…” என்ற வினோதன் கௌதமின் அறைக்கு இன்ஸ்பெக்டர் சிவாவை அழைத்துச் சென்றான்.

“வாங்க இன்ஸ்பெக்டர், உங்களுக்குத் தேவையான தகவல் கிடைச்சுதா… சீக்கிரமே மாயா கிடைச்சிடுவாளா… அவளுக்கு என்ன ஆச்சுன்னு யார் மூலமாவது தகவல் தெரிஞ்சுதா ப்ளீஸ் சார் எப்படியாச்சும் அவளை கண்டு பிடிச்சுடுங்க…”என்று அவளின் தந்தைக்கு மேல் பதற்றத்தோடு பேசிய கௌதமை சிவா வித்தியாசமாகப் பார்த்தான்.

பதில் சொல்லாமல் அவனின் நடவடிக்கைகளையே உற்று கவனித்துக் கொண்டிருந்தான்.

”சிசிடிவி கேமரா ஃபுட்டேஜெல்லாம் பாத்தீங்களா… எதுவும் க்ளூ கிடைச்சுதா…”

“இல்ல, கேமரா எல்லாம் நேத்து மார்னிங் கொஞ்ச நேரத்திலயே டிஸேபிள் ஆகியிருக்கு…”

“னோ இன்ஸ்பெக்டர் சான்ஸே இல்ல, எல்லாம் இப்போதான் ரீசண்ட்டா சர்வீஸ் செஞ்சது டிசேபிள் ஆக சான்ஸே இல்லை…”

“அதை நீங்க போய் உங்க கன்ரோல் ரூம் இன்சார்ஜ் கிட்ட தான் கேட்கணும்…”

“இப்பயே போறேன்…” என்று எழுந்து சென்ற கௌதம், அடுத்த ஐந்து நிமிடத்தில் வேறு உடையில் அப்போது தான் உள்ளே நுழைவது போல் ப்ரஸ்ஸாக நுழைந்தான்.

”விநோ, என்ன போலீஸ் வந்துருக்காங்க…? என்னாச்சு எதுக்கு வந்திருக்காங்க… எதுக்கா இருந்தாலும் நான் இல்லாதப்போ ஏன் என் ரூம்ல கொண்டு வந்து உக்காரவைக்கிறீங்க… ரிச்ப்ஷன்லயே பேசி அனுப்ப வேண்டியது தானே…” என்றிட,

வினோதன், சிவா இருவரும் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை.

“இப்போதான சிசிடிவி கண்ட்ரோல் ரூமுக்கு போனீங்க பாஸ்…” என்று வினோதனும்,

“என்ன மேன் ட்ரெஸ் சேஞ்ச் செஞ்சுட்டு வந்து ஒண்ணுமே தெரியாத மாதிரி ஆக்ட் கொடுக்குறியா…” என்று இன்ஸ்பெக்டரும் கேட்க, ஒன்றும் புரியாத கௌதமோ,

“நா இப்போ தான் ஆபீஸ்குள்ள நுழையுறேன், என்னாச்சு…” என்று கேட்டான். விநோதன் நடந்த அனைத்தையும் ஒரே மூச்சில் சொல்லி முடிக்க,

“சிசிடிவி வொர்க் ஆனவரைக்கும் ரெகார்ட் ஆனதே முரணா இருக்கே…?”

“ஏன் அப்படி சொல்றீங்க…?

“90 டேஸ் ஒன்ஸ் எல்லா ஃபுட்டேஜையும் மேனுவல்லா டெலிட் செஞ்சா தான் அடுத்த நாள் ரெகார்ட் ஆகும், நேத்து மார்னிங் இதை செய்யல, நானும் விநோதனும் தான் இதை செய்வோம், அவனை வெளியில வேலைக்காக அனுப்பிட்டேன் சோ இன்னிக்கு செஞ்சுக்கலாம்னு நெனச்சேன், ஆனா அது நேத்து எப்படி…?” என்று எழுந்தவன், அவர்களையும் அழைத்துக் கொண்டு கண்ட்ரோல் ரூமை அடைந்திருந்தான்.

அங்கிருந்த இன்சார்ஜிடம், “இவங்க கிட்ட காட்டின ஃபொட்டேஜைக் காட்டுங்க…” என்றிட அவர் மீண்டுமொரு முறை காட்டினார்.

அதில் மாயா சென்ற பலவருடங்களா புழக்கத்தில் இல்லாத அறையை, அப்போது கௌதம் உற்று நோக்கினான், அது பழைய அக்கொண்டண்ட் ராஜிவ் உபயோகப்படுத்திய அறை. ஆனால் அந்த அறையை எந்த கேள்வியும் இல்லாமல் கௌதமின் அப்பாவான மூர்த்தி பூட்டச்சொல்லியிருந்தார்.

அதன்பின் அந்த அறையை யாரும் திறக்கவில்லை மாயாவிற்கு முன். மாயா ஏன் அங்கு சென்றாள் எப்படி அந்த அறையைத் திறந்தாள் என்று புரியவில்லை.

மாயாவின் தந்தையின் உதவியோடு அவளின் மொபைல் ஆன் செய்யப்பட்டு அன்லாக் செய்யப்பட்டது. அதில் அவர்களுக்கு எதாவது தகவல் கிடைக்கலாம் என்று ஆராய்ந்தனர்.

மெசேஜ், ஃபேஸ்புக், ஜிமெயில் என அனைத்தும் ஆராயப்பட்டது. அதில் வாட்ஸப்பிற்கு ஒரு புதிய எண்ணிலிருந்து ஒரு ஆடியோ பைல் பெறப்பட்டிருந்தது. அதுவும் சற்று முன்பு ஆன் செய்ததும் அனுப்பப்பட்டிருந்தது.

அந்த எண்ணை தொடர்புகொண்டால், அப்படி ஒரு எண்ணே இல்லை, சரிபார்க்கவும் என்று கணினி குரல் சொன்னது. போலிஸின் சைபர் பிரிவை தொடர்பு கொண்டு அந்த எண்ணைப் பற்றிய தகவல்களை திரட்டச் சொல்லிவிட்டு,

அந்த ஆடியோவை தரவிறக்கம் செய்த சிவா, மாயாவின் தந்தை, கௌதம், விநோதன் என அனைவரின் முன்பும் அதனை ப்ளே செய்தான்.

அவனுக்கு வந்ததும் விநோதன் மீதிருந்த சந்தேகம், சிசிடிவி காட்சிகளைக் கண்டதும் மறைந்து விட்டது. கௌதம் மீதான சந்தேகம், அவனைப் போன்றே உருவம் கொண்டு தங்கள் முன் பேசிச்சென்றவனைக் கண்டதும் மறைந்துவிட்டது.

சமீபகாலமாக அவன் கையாண்டு கொண்டிருக்கும் இதே போன்ற நான்கு வழக்குகளிலும் இப்படித் தான் நடக்கிறது.

மற்றவ்ர்கள் திகிலடைந்திருப்பது நன்றாகவே புரிந்திருந்தாலும், இதற்கான விடை கிடைக்கும் வரை, இதற்கெல்லாம் பயந்துகொண்டிருந்தால் காரியம் நடக்காது என்று அவனுக்கு புரிந்திருந்தது.

அனைவரும் அந்த ஆடியோவை உற்று கேட்கத் துவங்கினர். முதலில் சற்று கொரகொரப்பான சப்தம் கேட்டு பின் ஆடியோ வந்தது. அது மாயாவின் குரல்,

“எல்லாத்துக்கும் இன்னிக்கு வரைக்கும் ட்ரெயினிங் தான போயிட்டு இருக்கு, எனக்கு மட்டும் என்ன, டு டூ லிஸ்ட்(to do list) வைச்சிருக்காங்க, அதுக்குள்ள இவ்ளோ வேலையும் நான் பாக்கனுமா…”

அடுத்தது கரப்பான ஒரு சிறுமியின் குரல்,

“ஆமா மாயா நீயே தான் பாக்கணும்…”

“ஸ்டாக் கோடௌன் போய் பர்சேஸ் லிஸ்ட்ல இருக்குறதெல்லாம் டெலிவர் ஆகி லிஸ்ட்ல சேர்ந்திருக்கான்னு பாக்கனுமாம்…”

அந்த கோடௌன் புழக்கத்திலேயே இல்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக அதை பயன்படுத்துவதே இல்லை. காரணம் நான்கு ஆண்டுகளுக்கு முன் அந்த கார்மெண்ட்ஸ் தொழிலாளியின் பதின் வயது மகள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு எரிந்தும் எரியாமலும் கருகிய நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டாள்.

அதன் பிறகு என்னதான் பூஜை செய்தாலும், அங்கிருந்து வரும் விநோதமான ஒலிகளையும், அடிக்கடி ஏற்படும் தீவிபத்துகளையும் தடுக்க முடியவில்லை.

அதன் காரணமாக அந்த கோடௌன் பூட்டப்பட்டது.புழக்கமில்க்லாத அந்த கோடௌனை இடித்து தரைமட்டமாக்குவதற்கு வழியின்றி பத்துமாடி கார்மெண்ட்ஸ் அலுவலகக் கட்டிடத்தில் தரைக்கும் கீழ்தளத்தில் அமைந்திருந்தது அந்த கோடௌன்.

நொடிக்கும் குறைவான நேரத்தில் கண்முன் வந்து மறைந்த அத்துணையும், அடுத்து பேசிய மாயாவின் குரலில் மீண்டு நிகழ்காலத்திற்கு வந்திருந்தது கௌதமின் மனம்.

“இந்த விநோவைப் போய் இப்ப என்ன பண்றேன் பாரு…”

“போ போ நானும் அங்க தான் வரேன்…” என்று அகோரமாய் சிரித்தது நேகாவின் குரல். பின் ஒரு நீண்ட அமைதி,

அடுத்த வந்த சிறுமியின் குரலிடம் வினோதனிடம் பேசுவதைப் போல் மாயா பேசிக் கொண்டிருந்தாள்.

”சார் ஸ்டாக் பைல் அக்கௌண்ட் செக்‌ஷனில் இல்லை எனக்கு வேணும்” 

“அது என்கிட்ட தான் இருக்கு இந்தாங்க” என்றது சிறுமியின் குரல்.

”இதை இங்க வச்சிகிட்டு என்னை அக்கௌண்ட் செக்சன்ல சுத்தவா விடுற…, அங்க வேற கத்தை கத்தையா பணம் இருக்கு, இத சொல்லலாமா வேணாமா…”

“நீ சொல்லாத மாயா…” என்ற அந்த சிறுமியின் குரல்,

“போ மாயா அந்த அண்டர்க்ரொண்டு கோடௌன்க்கு போ….” என்றது.

அத்தோடு நின்று போனது ஆடியோ.

அந்நொடி கேட்டுக் கொண்டிருந்த அனைவருக்கும் பதற்றம் தொற்றிக் கொண்டது.

இன்ஸ்பெக்டர் சிவா, கௌதம், விநோதன், மாயாவின் தந்தை என அனைவரும் லிப்ட்டை நோக்கி ஓட, லிப்ட் செயல்படமாட்டேன் என்று பிடிவாதமாய் நின்றது.

வெளியேறி இவர்கள் படிகளில் கீழே இறங்க, லிப்ட் அவர்கள் கீழ இறங்கத் துவங்கியது, தானும் வேலை செய்து தரைதளத்திற்கு வந்திருந்தது.

முதலில் தரைதளத்தை அடைந்த வினோதன் இதை கவனித்தாலும், இப்போது கோடௌன் செல்வதுதான் முக்கியம் என்று அதற்கும் கீழ் தளத்திற்கு இறங்கிக் கொண்டிருந்தான் படிகளில்.

அங்கு பெரிய பூட்டு போடப்பட்டிருந்த கோடௌனின் இரும்பு கதவுகளில் கைவைக்கும் முன் இன்ஸ்பெக்டரின் போன் அலறியது.

எடுத்த சிவா, சார் இன்னிக்கு மார்னிங் தான் இன்வஸ்டிகேஷன் ஸ்டார்ட் பண்ணோம், ஈவ்னிங்குள்ள கண்டுபிடிச்சிடுவோம் சார்…”

“யோவ் நாலு நாளா போனை எடுக்காம என்னயா செய்ற…”

நாலு நாளா நேத்து ஈவினிங் கம்ப்ளெண்ட் ரெஜிஸ்டர் ஆனுச்சு சார் இன்னிக்கு மார்னிங் விசாரணை ஸ்டார்ட் பண்ணி, இதோ முடிக்கப் போறோம் சார்…”

“ஓ அப்படியா… அப்ப நேத்து டேட் என்ன…”

“நவம்பர் பனிரெண்டு சார் 2019…”

“ம்ம்ம்ம்… இன்னிக்கு என்ன தேதின்னு உன் மொபைலை பார்த்திட்டு சொல்லு…”

அவர் அப்படி சொன்னதும், தன் மொபலைப் பார்த்தவன் மிரண்டு இரண்டடி பின்னே சென்றிருந்தான்.

“சா சார் நவம்பர் பதினாறு சார்…”

“என்னய்யா நாலு நாளா என்னய்யா செஞ்சிட்டு இருக்க,அந்த பொண்ணோடு அப்பாவுக்கு பதில் சொல்ல முடியலை…”

“பத்தாததுக்கு அந்த ஆபீசை பூட்டி வச்சிட்டு போயிருக்க, உள்ள எல்லாம் மயக்கமாகி இருக்காங்க, சீக்கிரம் வாயா…”

“இல்ல சார் நான் பூட்டலயே… எம் டி, மேனேஜர், ஏன் அந்த பொண்ணோடு அப்பா கூட என் கூட தான் இருக்கார் சார்…” என்று திரும்பிப் பார்க்க, அங்கு யாருமே இல்லை.

மாறாக எதோ ஒரு கட்டிடத்தின் இருண்ட பகுதியில் தன்னந்தனியே நின்றிருந்தான் சிவா.

இப்போது முன்னாடி திரும்பிப் பார்க்க, ஒரு பெண் நின்றிருந்தாள். அந்த இருட்டு கண்ணுக்கு பழகமறுக்க, அந்த பெண் மட்டும் தெளிவாய் தெரிந்தாள்.

திரும்பி நின்றிருந்த அவள் தான் மாயா என நினைத்த சிவா, “ மாயா…… மாயா….” என்று அழைக்க,

அந்தப் பெண் திரும்பவே இல்லை. மீண்டும் போன் ஒலிக்க, நிசப்தமான அமைதியில் இருளில் அந்த போனின் ஒலியே பீதியை கிளப்பியது அவனுக்கு.

ஊட்டி குளிரில் வியர்த்துவிட்டது. அட்டெண்ட் செய்தால் அந்தப் பக்கம், “மாயாவை தேடி வந்தியா சிவா, அப்போ என்னை நீ இப்படி தேடவே இல்லயே சிவா…”என்றபடி அழுதது ஒரு இளம்பெண்ணின் குரல்.

Advertisement