Advertisement

நிழல் 5

”ப்பா, ஃபைவ் ஃபோர்ஸ் ஆர் எத்தனை பா, மிஸ் கேக்குறாங்க பா, சொல்லுங்க பா, ப்பா மிஸ் அடிப்பாங்க பா, ப்ளீஸ் பா சொல்லுங்க பா, ப்பா ப்பா அடிக்குறாங்க ப்பா, எனக்கு வலிக்குதுப்பா, சொல்லுங்க பா, ஃபைவ் ஃபோர்ஸ் ஆர் எத்தனைப்பா, “ என்று தூக்கத்தில் அழுதுகொண்டிருந்தாள் மாயா.

“மாயா இங்க பாரும்மா, கண்ணு முழிச்சு பாரும்மா, மிஸ் அடிக்க மாட்டாங்க சாமி, கண்ணைத்திறந்து பாருடா, இங்க பாரு அப்பா இங்க தான் உன் கூடதான் உக்காந்திருக்கேன், பாப்பா, இங்க பாரு, அழுக கூடாது, கண்ணைத்திறந்து பாரும்மா”

மாயாவின் தந்தை என்ன கூறியும் அவள் அழுகையை நிறுத்துவதாய் இல்லை. பொறுத்துப் பொறுத்துப்பார்த்த அவள் அன்னையோ கன்னத்தில் வேகமா தட்டி அவளை எழுப்ப முற்பட்டார்.

அதற்கும், “அய்யோ அப்பா, அடிக்குறாங்கப்பா, வலிக்குதுப்பா, மிஸ் கிட்ட சொல்லுங்கப்பா” என்று அழுகத்துவங்கிவிட்டாள்”

”காலையில ஆபீஸ்க்கு வேலைக்கு போன பிள்ளை நடுராத்திரியில வாய்ப்பாடு சொல்லத்தெரியாம மிஸ்கிட்ட அடிவாங்குற மாதிரி கனவு கண்டு உளறுதுன்னு சொன்னா யாராச்சும் நம்புவாங்களா, நானும் எல்லாம் சரியாயிடுச்சுன்னு கொஞ்சம் நிம்மதியா இருந்தா, எதுவும் முடியலன்னு சொல்லாம சொல்றா பாருங்க உங்க பொண்ணு”

“அவளைப்பத்தி தெரியாத மாதிரி பேசுறியே வேணி”

“உண்மையிலயே தெரியாம தான் பேசுறேன்ங்க, எப்பயோ சின்ன வயசுல எதையோ பார்த்து பயந்திருக்கா, சரியாயிடும் சரியாயிடும்னு, பார்க்காத டாக்டர் இல்லை, இடத்தை மாத்தி சூழ்நிலையை மாத்தி பாருங்க எல்லாம் சரியாயிடும்னு சொன்னாங்க, இன்னிக்கு காலையில வரைக்கும் எல்லாம் நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு, இப்போ பழைய குருடி கதவைத் திறடின்னு திரும்பவும் தூக்கத்தில பயந்து போய் அழுகுறாளே”

“நீ ஒண்ணு கவனிச்சியா வேணி, இத்தனை நாளா நேகா நேகான்னு தான் பயப்படுவா, ஆனா இப்ப மிஸ், படிப்புன்னு, நேகாவைத்தவிர மத்தவிசயங்கள் அவளுக்கு திரும்பவும் நினைவு வந்திருக்கு”

“அடேங்கப்பா, அர்த்த ராத்திரியில மகள் வாய்ப்பாடு கேக்குறா, அதை வச்சு, அப்பா ஆராய்ச்சி பண்ணுறாரு, நல்ல குடும்பம்”

“உனக்கு எங்க அதெல்லாம் புரிய போகுது, நீ வேணும்னா பாரு இன்னும் கொஞ்ச நாள்ல, என் பொண்ணு இந்த பயத்தையெல்லாம் விட்டு ஒழிச்சிட்டு எவ்வளவு தைரியசாலியா வரப்போறான்னு”

“க்கும் பாக்கலாம், வந்தா எனக்கு மட்டும் சந்தோசம் இல்லையா என்ன, அதைத்தானே இந்த கடவுள் கிட்ட வேண்டிகிட்டு இருக்கேன்”

என்று மாயாவின் தந்தையும் தாயும் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தாள் மாயா.

ஆனால் புகைபோக்கியின் மேல் துவாரத்தில், முகத்தை புதைத்தபடி உள்ளே நடந்தவற்றை கேட்டுக் கொண்டிருந்த நேகா உள்ளூர சிரித்துக் கொண்டாள். அதையும் தான் பார்க்கிறேனே என்று காத்திருந்த நேகாவின் சிரிப்பு மட்டும் மாயாவிற்கு கேட்டுக் கொண்டே இருந்தது.

கண்ணைத்திறக்க மாயா எத்துணை பிரயத்தனம் செய்தும் எதுவும் பலனளிக்கவில்லை.

தன்னைச் சுற்றி சுற்றி வந்து சிரிக்கும் நேகாவை ஒருமுறையேனும் கண்டு பேசிவிடத்துடித்தாள். ஆனால் எழவோ பார்க்கவோ முடியவில்லை.

பின்பு எப்போது எப்படி தூங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை. விடிந்து எழுகையில் அவள் அம்மாவின் திட்டுகளே அவளுக்கு சுப்ரபாதமானது.

“நேத்து ஆபிஸ்க்கு போய்டு வந்து படுத்தவ தான் இன்னும் எழுந்திரிக்கலை, இவளையும் நம்பி ஒருவேலையை குடுத்திருக்காங்களே அவங்களைச் சொல்லனும். இதுக்குதான் சொன்னேன் வேலைக்கெலாம் அனுப்பவேணாம்னு, இந்த மனுசன் கேட்டாத்தானே, இந்தா அவள் இன்னும் எழுந்திரிக்கலை” வேணி அவர் போக்கில் பேசிக்கொண்டிருந்தார்.

அதை சற்றும் காதில் போட்டுக்கொள்ளாதவளாய், எழுந்து குளியல் அறை நோக்கி நடக்க, இடையில் அவளை மறித்து, “சுடுதண்ணி போட்டு வச்சிருக்கேன் கண்ணு, சீக்கிரம் குளிச்சிட்டு வந்திடு” என்றார் அவள் தந்தை.

எப்போதும் நடப்பது தான் என்றாலும், இருவரும் ஹை-பை கொடுத்துக்கொண்டனர். அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் தன்னறையில் துப்பட்டாவைத் தேடிக் கொண்டிருந்தாள் மாயா.

“ம்மா இந்த சுடிதாரோட துப்பட்டாவைப் பாத்தீங்களா”

“எல்லாத்தையும் கடைசி நேரத்துல தானே தேடுவாய், இந்தா இதுவான்னு பாரு”

“இதே தான் தான்க் யூ அம்ஸ்ஸ்ஸ்”

“அது சரி, டிபன் பேக் பண்ணிட்டேன், ரெண்டு தோசை வார்த்து வச்சிருக்கேன் இப்போ சாப்பிட, இந்தா இதை சாப்பிட்டு கிளம்பு”

“ம்மா, வேணாம் மா ப்ளீஸ் மா, ஏற்கனவே நேராமாயிடுச்சு”

“இப்படி சாப்பிடாம போய் தான் ஆபீஸ்ல மயக்கம் போட்டு விழுந்திருக்க”

“என்னது மயக்கம் போட்டு விழுந்தேனா”

“என்ன தெரியாத மாதிரி கேக்குற, நீ சொல்லலைன்னா எனக்கு தெரியாதுன்னு நெனச்சியா, நேத்தே ஆபீஸில இருந்து ஒரு பையன் போன் பண்ணி சொல்லிடுச்சு, யாரோ விநோதனாமே, அந்த பையன்”

“சரி சரி நான் பாத்துக்குறேன்” என்றவளின் நெற்றியில் யோசனை முடிச்சுகளோடு, சரிந்து விழுந்த கூந்தலை ஒதுக்கியபடி, ஓட்டமும் நடையுமாய் பேருந்து நிறுத்தம் நோக்கிச் சென்றாள்.

அதே நேரம் பேருந்து வந்துவிடவும், சரியா வந்து அதில் ஏறிக் கொண்டாள்.

காலியாக இருந்த பேருந்தின் சன்னலோர இருக்கையில் அமர்ந்தவளின் தலை தன்னிச்சையாய் அந்த பூங்கொத்துகளை பார்க்கத் திரும்பியது.

எதிர்பார்த்துத் திரும்பினாளோ, யதார்த்தமாய் திரும்பினாளோ ஆனால் அந்த சிறுமியைத் தேடின அவள் கண்கள்.

பேருந்து கிளம்பும் வரை அங்கேயே பார்த்துக் கொண்டிருந்தவள், இது ஏமாற்றமா நிம்மதியா எனத்தெரியாமல் ஒரு பெருமூச்சை உதிர்த்தபடி, திரும்பினாள்.

முகத்திற்கு அத்தனை அருகில் இன்னதென்ன்று சொல்லமுடியாதபடி மோதவந்ததைப் பார்த்து சட்டென அலறிவிட்டாள்.

பேருந்தின் ஓட்டுநர் அதே வேகத்தில் ப்ரேக் போட, அந்த பயத்தோடே முன்னிருக்கை கம்பிகளில் மோதிக் கொண்டாள்.

எதிர்பாராமல் விழுந்த அடி, வலி தாளமுடியவில்லை அவளால், அதற்குள் பேருந்தில் இருந்த ஒன்றிரண்டு பேரும் அவளை சூழ்ந்து கொண்டனர்.

”என்னாச்சுமா, என்னாச்சு”

கண்ணைத்திறக்காமலே ”ஒண்ணுமில்லை ஒண்ணுமில்லை” என்று கூறிவிட்டு மெல்ல நிமிர்ந்தாள்.

நெற்றியில் எதுவோ உரச, அனிச்சை செயலாய் அதை கைகள் தடுக்க, அந்த நேரம் அவள் கைகளில் தட்டுப்பட்டதை பார்த்தாள்.

அது ஒரு பூங்கொத்து, அதை விலக்கிப் பார்த்தாள், அந்த சிறுமி மிகுந்த நெருக்கத்தில் சிரித்தாள்.

யாரோ பளார் என்று அறைந்தது போலிருந்தது மாயாவிற்கு, தலையை பின்னிலிழுத்துக் கொண்டாள்.

“பாப்பா நேரா உக்காரு விழுந்திடுவா, என்று அந்த பெண்மணி முன்னிருக்கையில் இருந்து கூற அந்த சிறுமி முன்னோக்கி திரும்பி அமர்ந்தாள்.

ஆனால் மாயாவிற்கோ இன்னும் அந்த மிரட்சி மறையாமல் இருந்தது. மனதை இயல்பு நிலைக்கு மாற்றியே ஆகவேண்டும் என்று முடிவு செய்தாள்.

சன்னல் வழியே தெரிந்த பசுமையான காடுகளையும் மலைச்சரிவையும் பார்த்துக் கொண்டே வந்தவள், நடத்துனர், “கார்மெண்ட்ஸ் ஸ்டாப்பிங்க் யாரும்மா, இறங்குங்க” என்று நான்கு முறை இரைந்த பின்னரே இறங்கினாள்.

பேருந்தில் இருந்தவர்கள் ஒருமாதிரியாகப் பார்க்க, தன் மீதே அவளுக்கு கோபமாக வந்தது. சரியாக அவள் இறங்குகையில், தன் பைக்கில் வினோதன் அவளைக் கடந்து சென்றான்.

நேற்று, “ நான் மயக்கம் போட்டது வீட்டில தெரியவேண்டாம்” என்று அத்தனை தூரம் சொல்லியும் முதல் வேலையாய் அதை செய்த அவனை இன்று ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்று துரிதமாய் நடையைக் கட்டினாள்.

பார்க்ங்கில் இருந்து அவன் வரும்போதே வழிமறித்தாள், அவன் ‘என்ன’ என்பது போல் பார்த்தான்.

“நேத்து உங்ககிட்ட என்ன சார் சொன்னேன்”

“என்ன சொன்னீங்க”

“அதைத்தான் உங்க கிட்ட கேட்குறேன்”

“சொன்ன உங்களுக்கே ஞாபகம் இல்லையா, எனக்கும் இல்லை”

”…………………………………………..”

அவள் தன்னால் இயன்ற மட்டும் அவனை கோபமாக முறைக்க, அவனோ அதை கண்டுகொள்ளாமல், அலுவலகம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தான்.

அவனை மீண்டும் ஓடிச்சென்று வழிமறைத்தாள்.

இதைச் சரியாக காரில் வந்து கொண்டிருந்த கௌதம் கண்டுவிட்டான்.

விநோதன் நடப்பதும் செல்பவனைத் தடுத்து மாயா பேசுவதுமான இந்த காட்சியைக் கண்டவனுக்கு சொல்லவும் வேண்டுமோ, நேற்று தானாக சென்று பேசுகையில் அத்தனை முகம் சுளித்தவள், இன்று அந்த விநோதனிடத்தில் தானாகச் சென்று பேசுகிறாள்.

அதுவும் விலகிச் செல்பவனைத் தேடிச் சென்று பேசுகிறாள். பெண்களின் இயல்பே இது தானோ, வலிய வருபவனை உதாசீனப்படுத்துவது, உதாசீனப்படுத்திச் செல்பவனின் பின்னால் செல்வது என்ன குணமோ என்று மனதினுள் பொருமினான்.

ஆனால் இங்கு நிகழ்ந்ததே வேறாயிற்றே, “ஏன் சார் இப்படி திடுதிப்புன்னு போன் பண்ணி சொன்னா பயந்துடுவாங்கன்னு தானே சொல்லவேணாம்னு சொன்னேன், நான் மயக்கத்தில இருந்து தெளிஞ்சதுக்கு அப்புறம் தானே இதையே சொன்னேன், அதுக்கப்புறம் எதுக்கு சார் கால் பண்ணி சொன்னீங்க”

“அது என் கடமை அதைத்தான் செஞ்சேன், இனி எதுன்னாலும், என் ரூம்க்கு வாங்க, இந்த மாதிரி பேசுறதெல்லாம் இனிமே இருக்கக்கூடாது, ஐயாம் யுவர் ஹையர் அபீஸியல், மைண்ட் இட்”

முகத்தில் அடித்தாற் போல் இருந்தது அவளுக்கு, இதெல்லாம் வேண்டுமென்றே செய்கிறானே, இல்லை தன்னை வெறுப்பேற்றுவதற்காகவே செய்கிறானா என்று யோசித்தபடியே தன்னிடத்தை வந்தடைந்தாள். 

மேசைமேல் அவளுக்கான “ டு டூ லிஸ்ட் “ இருந்தது.

இதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இன்னும் குறைந்த பட்சம் ஒரு வாரத்திற்காவது ட்ரெயினிங்க் போடுவார்கள் என்று நினைத்திருந்தாள்.

அடுத்த நாளே இப்படி செய்ய வேண்டியதை பட்டியல் போட்டு இந்த விநோதன் வைப்பான் என்று அவளுக்குத் தெரியாதே, அவளோடு வேலைக்குச் சேர்ந்தவர்கள் அனைவரும் சாவாதானமாய் அமர்ந்திருந்தனர்.

இவளுக்கு மட்டுமே இந்த நடைமுறையெல்லாம், இதை விசாரித்து தெரிந்து கொண்டவள், மீண்டும் அவனிடம் சண்டைக்குத் தயாரானாள்.

அவன் அறைக்குச் சென்றாள், “எல்லாருக்கும் இன்னும் ட்ரெயினிங்கே முடியலை, அதுக்குள்ள எனக்கு மட்டும் என்ன சார் இப்படி  லிஸ்ட் ஸீட்டு வைச்சிருக்கீங்க, எனக்கு இது பத்தாது இன்னும் ட்ரெயினிங்க் வேணும்”

“உங்க பெர்பாமன்ஸ் நேத்தே ஓ கே ஆயிடுச்சு, உங்களை மாதிரி புத்திசாலிகளுக்கு மேலும் மேலும் அறிவை வளர்க்குறது எங்க வேலை இல்லை, அந்த அறிவை யூஸ் பண்ணிகிறது தான் எங்க வேலை சோ, நான் என் வேலையைத்தான் செஞ்சேன், மிஸ் மாயா, உங்களுக்கு புரியுதா”

மீண்டுமொருமுறை தொடுத்த அம்பு தன்னையே தைத்ததை உணர்ந்தாள், ஒன்றும் பேசாமல் வெளியேறியவளை மீண்டும் கௌதம் பார்த்தான்.

அதீதமாய் அவன் மூளை வேலை செய்தது, இத்தனை நாளாய் அவனுக்கு நண்பனாக இருந்த விநோதன் மாயாவைக் கண்டதும் பரம சத்ருவாய் தெரிந்தான்.

அங்கே என்ன நடந்தது என்று தானாகவும் விசாரிக்காமல், அதுவாகவே தெரியவரும் செய்தியையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் தவிர்த்தான்.

நண்பனை விட எதிரியே நம் பலத்தையும் பலவீனத்தையும் அதிகம் தெரிந்து கொள்ள விழைவான், அப்படி தெரிந்து வைத்திருந்த மாயாவின் திறமைகளை நேரில் காண்கையில், அதுவும் இத்தனை வருடங்கள் கழித்து நேரில் காண்பதில் பிரமிப்பு சற்றும் குறையாதவனாய் இருந்தான் விநோதன். பள்ளி நாட்களில் தன்னுடன் எப்போதும் மல்லுக்கு நிற்கும் மாயா கொஞ்சமும் மாறாமல் இருப்பதில் வியப்பாய் இருந்தது விநோதனுக்கு.

அவன் கண்டு கொண்டதைப் போல் தன்னை அவள் யாரென்றும் தெரிந்து கொள்ள முயலவில்லை என்பது மிகவும் ஏமாற்றமாக இருந்தாலும், அதற்கான காரணமும் அவனுக்கு புரியாமலில்லை.

ஏனென்றால், நேகாவின் இறப்பிற்கு முன் இருந்த மாயா, அதன்பின் தன்னையே தொலைத்துவிட்ட மாயா என அவளை இருவிதமாகவும் அவன் கண்டிருக்கிறான்.

தன் இளம் வயதில் மனதை மிகவும் பாதித்த இந்த சம்பவமும், மாயாவும், அவன் இதயத்தில் பசுமரத்தாணிபோல் பதிந்திருந்ததில் அவனால் இப்பொழுதும் மாயாவைக் கண்டதும் அடையாளம் காண முடிந்தது.

அவளின் செய்கைகளில் இப்போது வரை தெரியும் பதற்றமும் நடுக்கமும், அதிக்கப்படியான உணர்ச்சி வசப்படுதலும், அவள் நேகாவை இன்னும் மறக்கவில்லை என்பதற்கான சாட்சிகள் என்று அவன் நம்பினான்.

அவனின் நம்பிகையை ஒவ்வொரு செயலிலும், அவள் நிரூபித்துக் கொண்டிருந்தாள்.

தான் செய்ய வேண்டிய பணியாகக் குறிப்பிட்டிருந்த அந்த லிஸ்டில், முதல் பணி அக்கௌண்ட் செக்‌ஷனின் இந்த மாத கணக்குகளில் பர்சேஸ் லிஸ்ட்டும், கோடௌனில் உள்ள ஸ்டாக் லிஸ்டும் சரியாக உள்ளதா என சரிபார்க்க வேண்டும்.

அவளும் அதற்காக அக்கௌட் செக்‌ஷன் சென்றாள். அங்கு பணியில் இருந்த பெண்மணி விடுப்பில் சென்றிருப்பதாக தகவல் கிடைத்தது.

அவரின் கேபினில் இருந்த பைலில் தான் சரிபார்க்க வேண்டிய இரு பைல்களை தேடத்துவங்கினாள்.

பர்சேஸ் பைல் எளிதாக கிடைத்ததைப் போல ஸ்டாக் பைல் கிடைக்கவில்லை.

அங்கிருந்த அனைத்து அலமாரிகளையும், அலசிப்பார்த்தவளுக்கு அந்த பைல் மட்டும் கண்ணில் சிக்கவே இல்லை.

கடைசியாக அங்கிருந்த டேபிளில் தேடத்துவங்கினாள். அங்கு ஒரு சாவி கையில் சிக்கியது.

அந்த டேபிளின் கீழே உள்ள ட்ராயர் சாவி அது. ஒரு வேளை அங்கிருந்தால், என்று ட்ராயரைத் திறக்க, அங்கே கத்தை கத்தையாய் சலவை நோட்டுகள், அவ்வளவு பணத்தை அவள் அதற்கு முன்பு, நேரில் பார்த்ததில்லை.

சட்டென அலமாரியை மூடியவள், தன் கையில் இருந்த சாவியை எடுத்த இடத்தில் வைத்துவிட்டு பர்சேஸ் பைலை மட்டும் எடுத்துக் கொண்டு, நேரே விநோதன் அறைக்குச் சென்றாள்.

”சார் ஸ்டாக் பைல் அக்கௌண்ட் செக்‌ஷனில் இல்லை எனக்கு வேணும்” 

“அது என்கிட்ட தான் இருக்கு இந்தாங்க” என்றபடி எடுத்துக்கொடுத்தான், இது தெரியாமல் அங்கு எல்லாவற்றையும் தேடிக் கொண்டிருந்தோமே, என்று யோசித்தவள், அங்கு தான் பார்த்ததை இவனிடம் சொல்லலாமா, வேண்டாமா என்று தீவிரமாய் ஆலோசனை செய்தாள்.

பின் இதனால் நமக்கென்ன, அங்கு பார்த்ததை இவனிடம் ஏன் சொல்ல வேண்டும் என்று கருதியவள், சொல்லமலே தன் வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டாள்.

சொல்லியிருக்கலாமோ என்று அவள் எண்ணும் நாள் வெகு தொலைவில் இல்லை. நேரே கோடௌனுக்குச் சென்றாள் லிப்ட் மூலமாக.

அங்கு யாருமே இல்லை. பகலிலேயே அத்தனை இருட்டாக இருந்தது. யாரையாவது உதவிக்கு அழைத்து வந்திருக்கலாமோ என்று அவளுக்குத் தோன்றியது.

என்ன நடந்துவிடப்போகிறது, பார்த்துவிடலாம் என்று இரண்டு அடி தான் எடுத்து வைத்திருப்பாள். டமால் என்ற பெருஞ்சத்தம்.

எதோ பெரிய பொருளாக விழுந்திருக்க வேண்டும், என்னவென்று அவளுக்குத் தெரியவில்லை.

இரண்டடி முன்வைத்தவள் நான்கடி பின் வைத்து வெளியேறிய எத்தனித்தாள்.

ஆனால் வேகமாக எதிலோ இடித்துக் கொண்டாள். கீழே தடுக்கி விழுந்தாள், கையில் இருந்த கோப்புகளை மீண்டும் எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு நிமிர எந்த பக்கம் வந்தோம் என்று புரியவில்லை.

சுற்றிலும் ஒரே இருட்டு. வாயில் அருகே இருந்த வெளிச்சமும் இப்போது இல்லை. மீண்டும் சத்தம் இப்போது மிக அருகில்..

“யாராச்சும் இருக்கீங்களா”

மீண்டும் சத்தம், எப்படி முழித்துப்பார்த்தாலும் அந்த இருளுக்கு கண்கள் பழக மறுத்தது.

நடுங்கிய குரலில், “யாராச்சும் இருக்கீங்களா, யாரது, பயமுறுத்தாதீங்க, ப்ளீஸ் லைட்ட போடுங்க, எனக்கு பயமா இருக்கு, ப்ளீஸ்” என்று கண்ணை இறுக மூடிக் கொண்டு சொன்னாள்.

சட்டென அவள் காதுகளில் லிப்ட் இயங்கும் சப்தம், யாராக இருந்தாலும் கண்ணைத்திறக்கவே கூடாது என்ற வைராக்கியத்தோடு இருந்தாள்.

மீண்டுமொரு முறை மயங்கி விழுந்தாள் தனக்கு அவமானம் என்று சிந்தித்தவளுக்கு பயம் முற்றிலும் போகாதது அவளின் துரதிஷ்டம்.

காலடிச்சத்தம் அவளை நோக்கி வந்தது.

“மாயா………………………………………………………..”

அந்த ஒற்றை அழைப்பின் பின்னணியில் நிசப்த எதிரொலிகள் நிறைந்திருந்தது.

Advertisement